ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

முன்னுரை (Preface)

Contents

ஓம்
நமோ பகவதே ஸ்ரீ அருணாசலரமணாய

முன்னுரை

உள்ள பொருளாம் உள்ளத்தை உள்ளலாவது உள்ளபடி உள்ளமாய் உள்ளதே என்று உலகத்தா ருய்ய நேர்வழிகாட்டி யருளியவர் உள்ளலற உள்ளத்தே உள்ளவரான பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளேயாவர். அத்துவித சித்தாந்தம் வலியுறுத்தும் ‘முக்தி’ என்பது, செத்தபின் சிவலோகம் சேர்தலோ வைகுண்டம் புகுதலோ அல்ல; அது, இப்பொழுதே இங்கேயே நம் இயல்புநிலையான ஆனந்த, பரிபூரண இருப்புணர்வில் திளைத்தலே என்பதும், அதை அடைவதற்கு ‘நான்’ என்னும் சொல்லின் உண்மைப் பொருள் எது – ‘நான் யார்?’ – என்ற விசாரணையில்தான் ஈடுபடவேண்டும் என்பதும் பகவான் ஸ்ரீ ரமணரின் நேருபதேசமாகும். ஆயினும், ஆன்ம விசாரத்தின் செய்முறை என்னவென்பதைச் சரிவர அறியாததால் பலர்தம் முயற்சியும் வீணாவதால், அதைத் தவிர்க்கும் வழியையும், ஆன்ம விசாரம் எவ்வாறு இயற்ற வேண்டும் என்னும் சரியான வழியையும் இந்நூல் மிகத் தெளிவாக விளக்குகின்றது.

1950-ஆம் ஆண்டில் பகவான் ஸ்ரீ ரமணரது திருமேனி மறைவுக்குப் பின், ஆன்ம ஞான தாகங்கொண்டவர்களாய், ஸ்ரீ பகவானது உபதேசங்களை ஐயந்திரிபறச் செவ்வனே அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் அருணாசலரமண சந்நிதிக்கு வந்த அன்பர்கள் பலராவர். பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமன்றி உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் வந்த உண்மை முமுக்ஷுக்களான பலரும் அதில் அடங்குவர். அத்தகையோருள் ஸ்ரீ ரமணோபதேசங்களை ஆங்கிலம் போன்ற பிற மொழிபெயர்ப்பினின்றல்லாமல், ஸ்ரீ பகவானருளிய தமிழ் மூலத்தினின்றும் நேரே அறிந்துகொள்ள விரும்பிச் சிலர் இந் நூலாசிரியரான ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகளைச் சந்தித்து தமது ஆன்ம சாதனையில் உதவக் கூடியதும், ஸ்ரீ பகவானது உபதேசங்களை அனுஷ்டிக்க மிகவும் சகாயமானதுமான – அனுபவ சாத்தியமான – அப்பியாச முறைகளைப் பற்றிப் பல்வேறு கோணங்களினின்றும் அநேக வினாக்களை எழுப்பி வந்தனர். அவ்வினாக்களுக்கெல்லாம் பிற சாத்திரங்களின் மேற்கோள் உதவியின்றி ஸ்ரீ ரமணோபதேசங்களைக் கொண்டே விளக்கி, சம்பாஷணை முறையிலேயே விடையளித்து, அவ்வன்பர்களின் சந்தேக விபரீதங்களையெல்லாம் ஸ்ரீ ஸ்வாமிகள் நீக்கி வந்தனர். அவ்விடைகளையெல்லாம் அவ்வப்போதே குறிப்பெடுத்துச் சென்றவர் பலர்; இந்நூலாசிரியரிடமிருந்து விடையாகக் கிடைக்கப்பெற்ற செய்யுட்கள் பலவற்றை எழுதிச் சென்றவர்களும் உண்டு;

மேலும் தத்தம் ஊர்களிலிருந்து சந்தேகங்களைக் கடிதமூலம் இந் நூலாசிரியருக்கு எழுதி அற்புதமான விடைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெற்றிருந்தவர்களும் பலராவர்; இவ்வாறே பதினேழு வருடங்கள் (1950-1967) நடந்து வந்தது. பின் 1967-ல் டாக்டர் R. சந்தானம் என்னும் அன்பரொருவர் பெருமுயற்சி எடுத்து, இப்பதினேழாண்டுகளில் ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகள் மூலம் பல அன்பர்கள் சேமித்து வைத்திருந்த விடைகளாகிய ரமணோபதேச விளக்கங்களையெல்லாம் சேகரித்துத் திரட்டி ஸ்ரீ ஸ்வாமிகளிடமே கொண்டுவந்து, ‘இவைகளைக் கருத்தொழுங்கு பெறத் தொகுத்துத்தர வேண்டும்; அதை ஓர் நூலாக்கி வெளியிட விரும்புகிறேன்’ என்று கூறினார். ‘தங்களுக்கு ஏன் இவ்வாறு புத்தகம் வெளியிடும் நோக்கம் எழுந்தது? இவைகளெல்லாம் யாரோ சிலருக்கு அவ்வச்சமய அவசியத்திற்காகக் கூறப்பட்ட விடைகள் தானே’ என்று ஸ்ரீ ஸ்வாமிகள் கேட்கவே, டாக்டர் சந்தானம், ‘தங்களைப் பற்றி திரு C.P.நாதன்3 வெகு காலமாகக் கொண்டிருந்த அபிப்பிராயம் இது! “ஸ்வாமிகளது எழுத்தும் சொல்லும் எவ்வளவு விலையுயர்ந்த செல்வங்கள் என்பது எனக்குத் தெரியும்; அவைகளை வீண்போக விடாதீர்கள்” என்று என்னிடம் அவர் பலமுறை கூறியுள்ளார். அதனால் எனது இம் முயற்சிக்கு உதவுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். ஆனால், இவையெல்லாம் ஓர் நூல் வடிவாகும் என்று அதுவரை ஸ்ரீ ஸ்வாமிகள் கருதியதேயில்லை!

பக்தி, ஞானம், விசாரம், யோகம், கர்மம், உலகம், கடவுள், ஜீவன், பிறவி, மரணம், மோக்ஷம் முதலிய பற்பல விஷயங்களையும் பற்றி, பல்வேறு காலங்களில், பலதரப்பட்ட மனநிலையுடைய அன்பர்கள் பலருக்கும் கூறிய அவ்விடைகள் யாவற்றையும் கதம்பமாக ஒரு நூலாக்குவது பொருத்தமற்றதாகவும், சிரம சாத்தியமானதாகவும் உள்ளதாக ஸ்ரீ ஸ்வாமிகள் கருதினார். அதனால் அவற்றுள் பலவற்றை ஒதுக்கிவிட்டு, ஸ்ரீ பகவானது நேர் மார்க்கமான ‘நான் யார்?’ என்னும் ஆன்ம விசாரம் ஒன்றைச் சம்பந்தித்த விடைகளை மட்டுமே தேர்ந்து, கருத்துத் தொடர்ச்சி பொருந்துமாறு தொகுத்துத் தரவே அப் பகுதியே 1967-ல் டாக்டர் R.சந்தானம் அவர்களால் ‘ஸ்ரீ ரமண வழி - முதற் பாக’மாகத் தமிழில் பிரசுரிக்கப்பட்டு வெளிவந்தது. பின்னர் 1971ல் ஸ்ரீ ரமண வழி ‘The Path of Sri Ramana’ என்ற பெயருடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுப் பிரசுரமாயிற்று.

இவ்விரு மொழிகளிலும் ஸ்ரீ ரமண வழி உலகின் பல பாகங்களிலும் உள்ள ரமண பக்தர்களிடம் பரவவே, அவர்களுட் சிலர், ‘ஸ்ரீ ரமண பகவான் சிறந்த அருணாசல பக்த சிகாமணியாயிற்றே; உண்மையான பக்தியின் நுட்பங்களையெல்லாம் என்பு நெக்கு நெக்குருகப் பாடியருளி, பல சமயங்களிலும் அன்பர்களுக்குப் பக்திச் சுவையமுதைப் பரிமாறிய அருள் வள்ளலன்றோ? மேலும் அவர் உலகம்-உயிர்-இறை இவற்றின் மெய்யியல்பு இன்னதுதான் என்பதையும் விளக்கமாக உபதேசித்த ஞானப்பிழம்பன்றோ? அப்படியிருக்க, ஸ்ரீ ரமண வழியோ (அதாவது இந்நூலின் முதற் பாகமோ) ‘நான் யார்?’ என்னும் விசார நேர் மார்க்கம் ஒன்றையே பற்றிக் கொண்டு, நம்மை முடிவான பரமான்ம நிலை வரை இட்டுச் செல்வதாயிருப்பினும், இறைவன்-உலகம்-சிருஷ்டி-கர்மம்-பக்தி ஆகியவற்றைப் பற்றிய ரமண கருத்துக்களுள் யாதொன்றுமே இடம் பெறாமல் முடிந்திருக்கின்றதே!’ என்று இந்நூலாசிரியரிடம் வினவவே, முன்பே அச்சுக்குத் தராமல் ஒதுக்கி வைக்கப்பட்ட விடைக் குறிப்புக்கள் பலவற்றையும் ஸ்ரீ ஸ்வாமிகள் மீண்டும் திரட்டி ‘ஸ்ரீ ரமண வழி-இரண்டாம் பாக’மாகத் தொகுத்துத் தந்தனர். அதனால், 1979-ல் மலேசியாவிலுள்ள ஸ்ரீ ரமண சன்மார்க்க சங்கத்தார் இதன் இரண்டாம் பதிப்பை வெளியிடும்போது ஸ்ரீ ரமண வழியின் இரு பாகங்களையும் ஒரே புத்தகமாகத் தொகுத்ததோடு, ஸ்ரீ ரமண பகவானது சரித்திரச் சுருக்கம் ஒன்றையும் இந்நூலின் முதலிற் சேர்த்து ஸ்ரீ ரமண வழி (இரு பாகங்களும்) என்ற பெயருடன் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டனர். இவ்விரு பாகங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்த பிறகு வாசகர்கள் பலர் இந் நூலின் பல விஷயங்களைப் பற்றி இந் நூலாசிரியரிடம் மேலும் பல விளக்கங்களைக் கேட்கவே, மூன்றாம் பதிப்பில் நூல் முழுவதிலுமே பல விளக்கங்கள் இந் நூலாசிரியராற் சேர்க்கப்பட்டு வெளிவந்தது.

ஸ்ரீ ரமண பக்தர்கள் பலர் பற்பல சமயங்களிலும் வினவிய பல வினாக்களுக்கும் இந் நூலாசிரியர் விடைகளாக எழுதித் தந்த செய்யுள்களும் பாடல்களும் ‘சாதனை சாரம்’ என்ற தலைப்பில் ஸ்ரீ ரமண வழியிற் சேரத் தகுதி பெற்றிருந்ததால், அன்பர் பலர் அவற்றையும் தொகுத்துத் தரும்படி கேட்டுக் கொள்ளவே அவை அவ்வாறே தொகுக்கப்பெற்று (பாடல்களுக்கு உரையுடன்) ‘ஸ்ரீ ரமண வழி--மூன்றாம் பாகம்-சாதனை சாரம்’ என்ற தலைப்புடன் ஒரு தனி நூலாக 1983-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

இப்போது ஸ்ரீ ரமண வழியின் மூன்று பாகங்களும் மேற்கூறிய விதத்தில் வெளிவந்து விட்டாலும், ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. அதாவது இந்நூலாசிரியரின் நோக்கமும் போக்கும் ஏனைய வேதாந்த அல்லது ஆன்மிக நூல்களை எழுதும் எழுத்தாளர்களின் போக்கிற்கு (அதாவது தாமாகவே முன்வந்து தமது கருத்துக்களை உலகத்தாருடன் பகிர்ந்து கொள்ள விரும்பிப் புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களின் போக்கிற்கு) முற்றிலும் மாறுபட்டது என்பதை நாம் இங்கு நம் கவனத்திற் கொள்ள வேண்டும். ‘தட்டினாலன்றித் திறக்கப்படாது’ என்ற தன்னடக்கச் சுபாவமுடைய ஸ்ரீ ஸ்வாமிகளிடமிருந்து நாம் உண்மையான வேட்கையோடு கேட்டாலன்றி யாதொரு விஷயமும் பெற முடிவதில்லை. உலகத்தாருக்கு உபதேசிக்கக் கிளம்புவதோ, மேடைகளில் ஏறி உபந்நியாசங்கள் செய்வதோ, உலகத்துக்கு நூல்களை எழுதிக் குவிப்பதோ, ஆசிரமங்கள்-மடங்கள் ஏற்படுத்துவதோ, பத்திரிகை எழுதிக் கொள்கைகளைப் பரப்புவதோ, இவை யாவற்றையும் ஸ்வாமிகள் அடியோடு விலக்கி வந்தார்! இது பகவான் ரமணர் வாழ்ந்து காட்டிய வழியே. ஸ்ரீ ஸ்வாமிகள் அடிக்கடி, ‘உலகத்தை நோக்கக் கூடாது; உள்ளத்தை நோக்க வேண்டும். உலகை நோக்கி ஓடும் சந்நியாசிகளுக்கு உலகம் கிடைப்பதில்லை; உள்ளமும் கிடைப்பதில்லை! நிழலைப் பிடிக்க விரைந்தால் அது கிட்டாது. சூரியனை நோக்கி விரைந்தால் நிழல் நம் பின்னேயே ஓடி வரும். உபதேசித்து உலகத்தை உயர்த்தப் போகிறேன் என்று உலக மக்களையே நாடி நிற்கும் சந்நியாசிகள் முடிவில் வீணாகின்றனர். இதுவரையில் உலகில் தோன்றிய எந்த ஞானியும் எந்த ஒரு ஆசிரமத்திலோ – மடத்திலோ பயிற்சி பெற்று உண்டானவர்களல்லர். தனியே நின்று தத்துவமுணர்ந்தவர்களே. மத நிறுவனங்களிற் சேர்ந்துதான் மனிதன் ஞானமடைய வேண்டும் என்ற நியதியில்லை. உலக சேவை என்ற பெயரால் கூட்டம், கோஷம், மடம், பத்திரிகை, பிரசங்கம் என்றெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றித் தன் முன்னேற்றத்தைத் தானே தடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்றே கூறுவதுண்டு.

ஒருமுறை மேனாட்டிலிருந்து, ‘தாங்கள் மேனாட்டிற்கு (U.S.A.க்கு) வந்து எங்களுக்கெல்லாம் வழிகாட்டக் கூடாதா?’ என்று ஓர் அழைப்பு ஸ்வாமிகளுக்கு வந்தது. அதற்கு அவர் எழுதிய விடை அவரது உள்ளப் பாங்கைத் தெற்றெனக் காட்டுவதாகும். அது வருமாறு: ‘...எனவே நான் உலகை நோக்கி ஓட வேண்டியதில்லை. மேலும், அரசியல்வாதிகள், சமூக சீர்த்திருத்தக்காரர்கள், மேடை மேடையாக வேதாந்த வாள் வீசும் பிரசங்க வீரர்கள் ஆகிய இவர்களையெல்லாம் விட, மெய்யான ஆன்மீக வாழ்வில் அடக்கமாக வாழ்ந்து, வெளியுலகிற்குச் சிறிதும் தெரியாமலேயே இருந்து மறைந்து போகும் உத்தம மனிதன் ஒருவன் உலகிற்கு உண்மையிலேயே அளவற்ற நன்மையைச் செய்து விடுகிறான் என்பது ஸ்ரீ ரமண பகவான் கண்ட பேருண்மையாகும். மெய்யுணர்வு பெற்ற ஒருவனது வாழ்வு, உலகில் எந்நாட்டின் மூலைமுடுக்குகளில் வாழும் உத்தம சாதகர்கட்கும், உடற் சந்திப்போ, கடிதப் போக்குவரத்தோ, பத்திரிகையாதி எழுத்துத் தொடர்போகூட இல்லாமல் அவர்களது ஞான விழிப்புக்குத் தாமாகவே பயன்படுவது உறுதி. இதுவே ஸ்ரீ ரமண பகவான் உரைகடந்த பெருவலியாகிய பரமோனத்தால் உலகிற்கு அறிவு புகட்டிவந்த நெறியாகும். அவரது அடிச்சுவட்டைப் பின்பற்ற விரும்பும் நாம் அந்நெறி நிற்க வேண்டாமா? ... ஆகவே நான் எங்கு செல்ல நினைக்க வேண்டும்? ஏன் செல்ல வேண்டும்? தன் மெய் வீட்டிற்கு என்னை நடத்திவந்த என் ஞானத் தந்தையும் சகல உயிர்களின் இறைவனும் ஆத்ம சொரூபமுமான ஸ்ரீ பகவானுக்கு உண்மையான ஏனைய சாதகர்களையும் நடத்திச்செல்லத் தெரியாதா? “நான் இவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்” என்ற ரூபத்திலாவது ஓர் அகந்தை ஏன் எழ வேண்டும்? அவ்வாறு ஓர் நான் எழுந்தால் அது ஏகனாகிய இறைவன் ரமணன் அருளுக்கு இழுக்கைத் தேடிவைக்கும் இறுமாப்புச் செயலன்றோ? எனவே, மேனாட்டுக்கோ கீழ்நாட்டுக்கோ, இங்கோ, அங்கோ, எங்கோ செல்லும் எண்ணமெல்லாம் எனக்கு எழுவதேயில்லை; எழப் போவதுமில்லை!’

இவ்வாற்றால் ஸ்ரீ பகவான் ரமணரைப் பின்பற்ற விரும்புவோர் தம் வாழ்வின் நோக்கத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்நூலாசிரியர் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கினார். தன் மறுப்பு அல்லது அகந்தையடக்கத்தின் காரணத்தால் இவர் இந் நூலின் தமிழ், ஆங்கில வெளீயீடுகள் யாதொன்றிலும் சிரத்தையற்றவராகவே இருந்து வந்தார். இக் கருத்துக்களெல்லாம் ‘ஸ்ரீ ரமண வழி’ என்ற ஒரு நூல் ஆகப்போவதை அவர் எதிர்பார்த்ததேயில்லை. எந்த நூலும் எழுத வேண்டும் என்ற சங்கற்பம் அவருக்கிருந்ததில்லை. இந்த நூலும் அவரது அத்தகைய சங்கற்பத்தால் எழுதப்பட்டு உண்டானதுமில்லை!

தேசத் தவர்க்குப தேசிக் கவல்ல, திரண்டநிதி

நேசித் துமல்ல ‘நிருவிகற் பத்தி னிலைத்தமகான்

பூசிக் க’வென்னும் புகழுக் குமல்ல புலையகந்தை

நாசத்திற் குன்னரு ணாடுகின் றேனருள் நாயகனே

(ஸ்ரீ ரமண குருவருளந்தாதி 68)

என்பது ஸ்ரீ பகவானிடம் இந் நூலாசிரியர் செய்த பிரார்த்தனையாகும்.

ஆன்மீக விஷயங்களைப் பற்றி அன்பர்கள் ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகளிடம் வினாக்களை எழுப்பும்போது, தம் மனப்போக்கை விளக்கும் வகையில் அவர் சில சமயம் கூறுவதாவது: ‘நீங்கள் என்னைக் கேட்பதால் நான் ஸ்ரீ பகவானது உபதேசங்களையொட்டியே விடை கூற முடியும். உங்கள் மனத் திருப்திக்கு ஏற்ற முறையில் நான் பதில் கூறுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஸ்ரீ பகவானிடம் நான் என்ன அறிந்துகொண்டேனோ அதைப் பொருத்து அப்படியேதான் நான் விடைகூற முடியும். ஸ்ரீ பகவானது ஆன்ம விசார மார்க்கத்தைத் தவிர மற்ற மார்க்கங்களைப் பற்றி நீங்கள் கேட்டாலும், ஸ்ரீ ரமண சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் நான் ஏனைய மார்க்கங்களையும் பற்றி விளக்கம் தருவேன். ஸ்ரீ ரமணோபதேசங்கள் மட்டுமே எனக்கு அதிகாரபூர்வமான சாஸ்திரங்களாகும். உலகம் என் விடைகளை ஏற்க மறுத்தால் பரவாயில்லை. உலகம் என் கருத்துக்களைத் தூர எறிந்து விடட்டும்.’ ஸ்ரீ ஸ்வாமிகள் தன் கருத்துக்களைப் பற்றி யார் எது நினைத்தாலும் – உலகம் அதை மதிக்காவிட்டாலும் – அதைப்பற்றி கவலைப்படுவதேயில்லை! தற்போது அவர் பெயரால் வெளிவந்துள்ள இந்நூல்களைப் பற்றியும் அவர் ஒருமுறை, ‘என்னைக் கேட்டவர்களுக்காக ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அவர்கள் இக் கருத்துக்களைப் புத்தக வாயிலாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நான் தடுக்கவில்லை. ஆனால், உலகத்திற்கு நூல் எழுதுவதற்காக நான் வரவில்லை. நான் ஒரு எழுத்தாளனுமல்ல. எழுத்தாளன் ஆவது என் இஷ்டமுமல்ல. இக் கருத்துக்களை உலகம் “தனக்கு வேண்டும்” என்று விரும்புமாயின் அவற்றை அச்சிடுவதோ, பகிர்ந்து கொள்வதோ அதன் பொறுப்பு’ என்று ஸ்ரீ ஸ்வாமிகள் கூறினார். எனவே, இந் நூலானது, ஸ்ரீ பகவானது தெளிவான நேர்மார்க்கத்திலிருந்து சிறிதும் விட்டுக்கொடுத்து விலகாத ஸ்ரீ ஸ்வாமிகளின் போக்கை விரும்புவோரால், அவ்விதம் விரும்புவோர்க்கு மட்டுமே பயன்படுவதாய் வெளியிடப்படுகிறது!

இந்நூலாசிரியரான ஸ்ரீ சாது ஓம், தமிழகத்தில் தமிழின் சிறப்பு தலைசிறந்து விளங்கும் தஞ்சை நகரைச் சேர்ந்தவர். அவர் துன்மதி வருஷம் மார்கழி மாதம் 29 ஆம் தேதி (1922-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி), பூர்வ பக்ஷம், சதுர்த்தசி திதி, வியாழக்கிழமை, புனித திருவாதிரை நாளன்று இரவு 9-30 மணிக்கு ஜனித்தார். பாலப் பருவத்திலேயே பரமனருளை நாடி நின்றதால், தமது பதினான்கு வயதிலேயே திருவருளால் உள்ளத்திற் கவியூற்று திறக்கப்பெற்ற பாலகவி! சிறு வயதிலேயே பகவான் ஸ்ரீ ரமணரை சற்குருவாக வந்தடைந்ததும் பகவானது மோனவருட் சந்நிதி மகிமையாலும், இடையிடையே பகவான் ரமணரே இவரது தமிழ்க் கவித்துவத்திற்குச் சிறப்பூட்டும் இலக்கண நுணுக்கங்களைத் திருவாய் மலர்ந்து போதித்து வந்ததாலும், ஸ்ரீ பகவானது உத்தமோத்தம பக்த சிரேஷ்டரும் சீரிய செந்தமிழ்ப் புலவருமான ஸ்ரீ முருகனாருடன் நெடுங்காலம் தமிழிலக்கியத் தொடர்பு கொண்டிருந்ததாலும், இவரது கவித்திறன் முழுமலர்ச்சி பெற்றோங்கியது.

நரத்துதியே பாடுந்தன் னாப்புன்மை யெண்ணிக்

கருத்தறவே மாழ்கிக் கரைந்து – பரத்திறமே

பாடுவேன் ஊத்தைநரம் பாடேன்மற் றென்றுறுதிப்

பீடுபெற வாழ்க கவி.

(குருவாசகக் கோவை 138)

ஆண்டா னருளா லடைந்தகவி வாணியையவ்

வாண்டா னடிக்குரிமை யாக்காது – தீண்டா

நரத்தைப் புகழ்வார்தந் நாமகளை யந்தோ

பரத்தைத் தொழிற்படுப் பார்.

(குருவாசகக் கோவை-139)

என்றபடி, தம் கவிவாணியைத் தம் சற்குரு ரமணரின் அருள் மகிமையைப் புகழ்ந்து பாடுவதிலும், சற்குருவின் உபதேசங்களையே விளக்கும் கருத்துப் பாடல்களாக அதை வார்ப்பதிலும் மட்டுமே பிரயோகித்து நம் ஸ்வாமிகள் ‘பொய்ம்மை யாளரைப் பாடாதே யெந்தைப் புகலூர் பாடுமின் புலவீர்காள்...’ என்ற ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அருள்வாக்கிற்கு இலக்கியமாக நிற்பவரானார். நரத் துதியோ நாட்டுத்துதியோ அவரது நாவில் இடம் பெற்றதில்லை! தேசாபிமானம், பாஷாபிமானம், லோகாபிமானம் எல்லாம் - அசத்திய தேகாபிமானத்தையே மூலமாய்க் கொண்டு முளைத்திருப்பதால், தேகாபிமானமாம் அகந்தையை வேரறுக்குந் திருவருளை வேண்டித் துதிக்கும் வரத் துதியையே அவரது வாய் வற்றாது வார்த்து நிரப்பியது! இவ்வாறு பகவான் ரமணரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகள் இதுகாறும் இனிய எளிய செந்தமிழ் நடையில் பொருட் செறிவுகொண்ட பல்லாயிரக்கணக்கான செய்யுட்களைத் துதிகளாகவும், ரமணோபதேச விளக்கங்களாகவும் பாடியிருக்கின்றார். மேலும், சந்தங்களாகவும், வர்ணங்கள்-கீர்த்தனங்கள்-கீதங்களாகவும், கண்ணிகள்-சிந்துகளாகவும் அவர் இசைத் தமிழிற் கீந்துள்ள பாடல்களிலுங்கூட பகவான் ரமணரின் பரமோபதேசங்களே நன்கு பதிக்கப்பெற்றுள்ளதை அவற்றை ஓதுவோர் உணர்வர்.

தமது குரு தேவரான ஸ்ரீ ரமண பகவானுடன் மிகக்குறைவான ஐந்தாண்டு காலமே தொடர்புற்றிருந்தாராயினும் ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகள்,

ஈர விறகில் எரிபற் றாது;

நேரஞ் செல்லு(ம்) நெருப்பிற் குலர்ந்தவை;

கரியிற் பற்றுங் காலஞ் சிறிதே

திரியிற் பற்ற லெளிதே; வெடிமருந்

ததிலுங்கற் பூர மதிலு மொருக்கணம்

பதியி லுடனே பற்றும் எரியே.4

என்றபடி, தமது பணிவடக்கத்தாலும், ஸ்ரீ பகவானிடம் கொண்ட ஏக குருபக்திச் சிறப்பாலும் மிகவும் தகுதி பெற்றிருந்த காரணத்தால், குருவருளுக்குத் தக்க சற்பாத்திரமாகி,

விளக்கடிக்கே நின்று விலகா விருள்போல்

அளக்கருஞா னாசா னடிக்கே – துளக்கமறக்

காத்துமகங் காரமயற் காரிருள்போ காதுடலம்

மூத்துவிளிந் தாலூழ்5 முறை!

என்னும் குருவாசகக் கோவையின் 152-ஆவது பாடலின்படி குரு சந்நிதியிற் காலம் போக்கும் கூட்டத்தொருவராகாமல் குரு சந்நிதி வாசத்தின் பூரண பயனைப் பெற்றவரானார். புதிதாக வந்த அன்பரொருவர் ஸ்ரீ ஸ்வாமிகளிடம், ‘நீங்கள் ஐந்து வருடத்திற்கும் குறைவாகத்தானே ஸ்ரீ ரமணருடன் இருந்திருக்கிறீர்கள்; உங்களைவிடப் பல்லாண்டுகள் பகவானுடன் இருந்தவர்கள் பலர் இருக்கின்றனரே!’ என்று சற்று ஏளனமாக வினவினார். அதற்கு ஸ்ரீ சுவாமிகள், ‘ஆம், நான் வெட்கமடைகின்றேன். ஏனெனில் ஆன்ம சக்தி வீறிட்டொளிரும் ஸ்ரீ ரமண சற்குரு சந்நிதியானது பக்குவிகளின் ஆன்ம தாகத்தை ஐந்தே நொடிகளில் தணித்தருளத்தக்கதாயிருக்க, என் விஷயத்தில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தேவைப்பட்டது என்றால் அது என் அபக்குவ நிலையையே காட்டுகின்றதன்றோ? அதை எண்ணித்தான் வெட்கமடைகின்றேன்!’ என்று கூறினர். இக் கூற்றிலுள்ள சிறந்த தன்னடக்கம் பெரிதும் சிந்தித்தற் குரியது.

ஸ்ரீ சாது ஓம் சுவாமிகள் சனிக்கிழமை 6-7-1946 அன்று ஸ்ரீ ரமண பகவானை வந்தடைந்ததிலிருந்து முழுமையான குருபக்திக்கும் பரிபூரண ஆன்ம சமர்ப்பணத்திற்கும் ஒரு சிறந்த உதாரணமான தூய பொலிவுமிக்க வாழ்க்கையை நாற்பதாண்டு காலம் வாழ்ந்து வந்தார். அவர் ரக்தாக்ஷி ஆண்டு பங்குனி மாதம் நான்காம் நாள் (1985 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் பதினேழாம் நாள்), ஏகாதசி திதி, ஞாயிற்றுக்கிழமை. திருவோண நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் காலை 9-05 மணிக்கு விதேக கைவல்யம் எய்தி, தமது சற்குரு நாதராம் ஸ்ரீ ரமண பகவனின் திவ்விய பாதார விந்தங்களில் என்றென்றும் அகண்ட பரிபூரண ஐக்கியமானார்.

இரத்தாக்ஷி பங்குனிநான் கேகா தசியா

மிரவிநா ளோணத்தி லீங்கே – நரவுருநீத்

தத்தன் ரமணனோ டைக்கியமா னான்ஞான

வுத்தமனாம் நம்சாது ஓம்.

ஸ்ரீ சாது ஓம் அவர்களின் திருமேனியை அவர் வாழ்ந்திருந்த வீட்டிற்கு மிக அருகில் சமாதி செய்விக்கப்பட்டது. ஸ்ரீ ரமண திருவருளால் அதன்மேல் எளியதோர் கற்கோயில் நிர்மாணிக்கப்பட்டு, நித்திய பூஜை நைவேத்தியங்களும், விசேஷகால பூஜைகளும் நடந்து வருகின்றன.

ஸ்ரீ ரமண பகவான் தமது தாய்மொழியாகிய தமிழிலேயே தமது எல்லா உபதேசங்களையும் தெளிவாகக் கூறி வந்தனர். ஆனால் உள்ளது நாற்பது, உபதேச வுந்தியார், குருவாசகக் கோவை, அருணாசல ஸ்துதி பஞ்சகம், ஏகான்ம பஞ்சகம் போன்ற செய்யுள் நூல்களெல்லாம் சிறந்த, அரிய, செய்யுள் நடையிலேயே அமைந்துள்ள காரணத்தால், தமிழறிந்தோருள்ளும் பலர்க்கு அவற்றின் சரியான பொருள் விளங்குவதில்லை. இதுவே அவற்றின் பிறமொழி பெயர்ப்புக்கள், பிறமொழி விரிவுரைகள் பலவிலும் பற்பல பிழைகள் மலிந்திருப்பதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்றாகும். ஆகையால், ஸ்ரீ பகவானது தமிழ் மூல நூல்களை மொழி பெயர்க்கவும், அவைகட்கு விரிவுரை எழுதவும், விளக்கங்கள் கொடுக்கவும் அத் தமிழ் நூல்களில் மிகச்சிறந்த பயிற்சியும் தமிழறிவும் ஒருவர் பெற்றிருக்க வேண்டியது அவசியம்; இவ் வகையில் ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகள் பரிபூரணத் தகுதி பெற்றுள்ளவர்; ஏனெனில், ஸ்ரீ ஸ்வாமிகளும் சிறந்ததோர் தமிழ்க் கவி என்பது மட்டுமன்றி ஸ்ரீ பகவானுடன் நேரே தாம் கொண்ட அணுக்கத் தொடர்பாலும், ஸ்ரீ பகவானாலேயே ஸ்ரீ முருகனாருடன் கூட்டுவிக்கப்பெற்று அவருடன் நெடுங்காலமாக இந் நூலாசிரியர் கொண்டிருந்த இலக்கியத் தொடர்பாலும் இவர் அப்பூரணத் தகுதியுடையவரானார்.

எனினும், தமிழ் மொழியின் வல்லமை மட்டுமே ஸ்ரீ பகவானது உபதேசங்களை அறிந்து கொள்ளவோ, பிறருக்குச் சரிவர விளக்கவோ போதுமானதல்ல! ஸ்ரீ பகவானது மூல நூல்களை உண்மைக்குப் புறம் போகாமல் மொழி பெயர்க்கவோ, விளக்கம் செய்யவோ வேண்டுமாயின் அவற்றின் உட்கிடக்கையை ஆழ்ந்து தெளிந்து அறியும் சக்தியும், அவ்வுபதேச நெறியையே அப்பியாசிப்பதால் பெறும் அனுபவ அறிவும் முக்கியமாக இருக்க வேண்டும். இத் தகுதி இந் நூலாசிரியருக்கு எவ்வளவு இருந்திருக்கிறது என்பதையும், ஆன்மீகத்தின் எல்லாத் துறைகளிலும் எவ்வளவு ஆழ்ந்து பரந்த உண்ணோக்கும் இவருக்கு இருந்திருக்கிறது என்பதையும் இந் நூலை வாசிப்போர் செவ்வனே கண்டறியலாகும். இதிலிருந்து, ஸ்ரீ ரமணோபதேசங்களைச் சிரவணம்-மனனம் செய்ததால் மட்டும் இந் நூல் உண்டாகியிருக்க முடியாது என்பதும், நிதித்தியாசனத்தால் பெற்ற அனுபவத்தால்தான் இந் நூல் அமைந்திருக்க முடியும் என்பதையும் வாசகர்கள் தெற்றென அறியலாகும்.

இந் நூலிற் காணக் கிடைக்கும் பல சிறந்த நூதனக் கருத்துக்கட்கும் பிரமாணம் (authority) ஸ்ரீ பகவானது தமிழ் மூல நூல்களிலும், ஸ்ரீ பகவான் வாய்மொழியாகக் கூறி மற்ற ரமண பக்தர்களாற் குறிப்பெடுக்கப்பட்டு உருவான புத்தகங்களிலுமே காணப்படுகின்றன. ஆயினும் இந் நூல் மற்ற எந்த நூல்களிலும் உள்ளவற்றை அப்படியே எடுத்துத் தொகுத்துக் கொடுக்கப்பட்ட ஒன்றல்ல. ஸ்ரீ பகவானது பரந்த உபதேசக் கருத்துக்களையெல்லாம் ஒன்று விடாமல் திரட்டப்பட்டும், அப்பியாசத்துக்கேற்ற வரிசைக் கிரமமாக ஒழுங்கு படுத்தப்பட்டும், அவ்வுபதேசங்களின் உட்கருத்தை உள்ளாழ்ந்து கண்டு சுயமாகவே (originalityயுடன்) விளக்கும் புதுமைப் போக்கும் உடையதாகவே இந் நூல் அமைந்துள்ளது. ஸ்ரீ பகவானைப் பற்றிய மற்ற நூல்களில் மிக நுண்ணிய விதை வடிவில் போதிய விளக்கமற்று ஒடுங்கிக் கிடந்த பல கருத்துக்கள் இந் நூலில் நன்கு விளக்கப்பட்டு மிளிர்வதை வாசகர்கள் அறியலாம். ஸ்ரீ பகவானது உபதேசங்களை நன்கறிந்து அனுபவப்படுத்திக் கொண்டதாலேயே இந் நூலாசிரியரால் இவ்வளவு தெளிவாக அவைகளை எடுத்து விளக்க முடிந்திருக்கின்றது!

இந் நூலிற் கூறப்படும், சுகம், ஆன்ம விசாரம், பக்தி, உலகம். கடவுள் இவைகளின் இயல்பு, கர்மங்களின் தன்மை என்ற பல விஷயங்கள் நமக்கு முன்பே பரிச்சயமுள்ளவைகளேயாயினும், ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகள் இவைகளைப் பற்றிக் கூற அணுகும் முறையும் விளக்கமும் அவருக்கே உரியதொரு அலாதியான நூதன முறையாக இந் நூலில் அமைந்துள்ளது! உதாரணமாக ஒன்று மட்டும் காண்போம்:

சாதாரணமாக வேதாந்த நூல்களில், ‘ஆசைகளை விட்டொழி; சுகங்களை நாடாதே; துன்பத்தைத் தடுக்காதே’ என்ற வடிவில் வைராக்கியம் வலியுறுத்திப் போதிக்கப்படுகின்றது. ஆனால் இந் நூலிலோ, ‘சுகம் உன் உரிமை; அதைப் பெற விடாது உழை; அற்ப காமனா யிராதே; பூரண காமன் ஆவாயாக!’ என்றதோர் புத்தம்புது முறையில் (படிப்போரைப் பயமுறுத்தாமல்) சிலாகித்துக் கூறுவது போலவே கொண்டுபோய், ‘முன்னிலை-படர்க்கைகளை நாடாதே; தன்னை நாடு’ என்று இதமான மொழியில் பரிபூரண வைராக்கியமாகிற மலையையே விழுங்க வைத்துவிடுகிறார் ஸ்வாமிகள்! மண், பொன், பெண்ணைத் திட்டாமல் பூரண வைராக்கியத்தை லாவகமாகப் புகட்டும் ஓர் அதிசயிக்கத்தக்க புதுமுறையானது, கேவல சுத்த அத்வைத நூலாகிய இதில் நன்கு பொதிந்து கிடப்பது ஊன்றிக் கவனிப்பார்க்கு நன்கு விளங்கும்.

இந்நூலிற் காணப்படும் மற்றொரு முக்கியமான விஷயம் யாதெனின் பக்தி, உலகம், கடவுள், கர்மா போன்ற மற்ற எந்தவொன்றைப் பற்றிக் கூறப் புகும்போதும்கூட ஸ்ரீ ஸ்வாமிகள் முடிவில் ஸ்ரீ பகவானது முக்கிய போதனையாகிய ஆன்ம விசாரமே செய்யத்தக்க ஒரே சாதனை என்ற முடிவிற்கே வாசகர்கள் வந்து சேரும்படியே அவ் விஷயங்களை முடிவில் விளக்கி நிரூபிக்கின்றார். ஆதலால் வாசகர்கள் இந்நூலின் அனுபந்தத்தை வாசித்து முடித்த பின் மறுபடியும் முக்கிய பாகத்தை வாசிப்பரேல் மிகுந்த பயனுண்டாகும்.

இந்நூல் ஆன்மீக சாதனையை – ஆன்மவிசாரத்தை – அப்பியாசித்து அனுபவப் படுத்துவதற்குரிய விஷயங்களைக் கூறுவதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டு அமைந்திருப்பதாலும், ஆன்மக் கலையின் எல்லா நுட்பங்களையும் பற்றிக் கூறுவதாலும் இதிற் காணப்படும் அதி நுட்பமான கருத்துக்களும் உளவுகளும் பரந்த ஆன்மீக விஷயங்களுள் ஒவ்வொன்றையும் நுட்பமாக சம்பந்தித்திருப்பதாலும் இந் நூலை ஒரு முறை மட்டும் படித்து முடிப்பதால் முழுப் பயனும் எய்த முடியாது. ஒரு முறை இந்நூல் முழுதும் படித்து முடித்தபின் மறுபடியும் முதலிலிருந்து படிக்க ஆரம்பித்தால் முதன் முறை வாசித்த போது புரிந்ததை விட அதிக நுட்பமான விஷயங்கள் இப்போது மிகவும் புதுத் தெளிவுடன் புலனாவது பலரது அனுபவம். எனவே இந்நூலின் பூரணப் பயனையும் அடைய விரும்புவோர் இதைத் திரும்பவும் திரும்பவும் பல முறை வாசிப்பது நல்லது. மேலும் இந் நூலில் வாசித்தறிந்த விஷயங்களை ஆழ்ந்து சிந்திப்பது (மனனம் செய்வது) அதனினும் அவசியம். பிறகு, உண்மையான சிரத்தையுடன் செயல்முறைக்குக் கொண்டு வருவதும் (நிதித்தியாசனம்) அதனினும் அவசியமாகும். அப்போதுதான் இந்நூலின் பூரணப் பயனை நாம் அடைய முடியும்.

ஐந்தாம் பதிப்பு மாற்றங்கள்

ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகள் இந்நூலின் பின் வரவிருக்கும் பதிப்புக்களைச் சீரமைக்கவும், புதிதாகச் சில விஷயங்களைச் சேர்க்கவும் திட்டமிட்டிருந்தனர். 1985-ஆம் ஆண்டு வெளியான இந்நூலின் மூன்றாம் பதிப்பில் ஸ்ரீ ஸ்வாமிகளால் பல மாற்றங்கள் செய்யப்பட்டனவெனினும், அவர் 1985-ல் தமது குருநாதரான பகவான் ஸ்ரீ ரமணர் திருவடிகளைச் சென்றடைந்தமையால், அவர் சேர்க்கத் திட்டமிட்டிருந்த எல்லா மாற்றங்களையும் அவரது மேற்பார்வையுடன் செய்து முடிக்க இயலவில்லை. 1985-ஆம் ஆண்டிற்குப் பிறகு வெளிவந்த பதிப்பிலும் சிற்சில காரணங்களால் இந்த மாற்றங்கள் செய்ய முடியாமல் போயிற்று. ஸ்ரீ ஸ்வாமிகள் செய்ய உத்தேசித்திருந்த மாற்றங்கள் இப் பதிப்பில் செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதைப் பார்ப்பதற்கு முன் இந் நூலைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்:

உண்மை ஒன்றையே தீவிரமாக அறிய விரும்பும் சாதகர்களுக்கு இந்நூலின் முதல் பாகம் ஒன்றே போதுமானது என்று ஸ்ரீ ஸ்வாமிகள் கூறுவதுண்டு. திட வைராக்யத்துடனும் ஸ்வாத்ம பக்தியுடனும் தன்னாட்டப் பயிற்சியில் ஈடுபட முடியாமல் உலகம், கடவுள், கர்மம் ஆகியவற்றைப் பற்றி ஆராயக் கிளம்பும் உள்ளங்களுக்கு இரண்டாம் பாகம் மீண்டும் தன்னை நோக்கித் திரும்ப உதவும் விதமாக ஸ்ரீ ஸ்வாமிகளால் அமைக்கப்பட்டது. இரண்டாம் பாகம் சாதகனுக்குக் கூறும் முடிவான அறிவுரை பற்றி ஸ்ரீ ஸ்வாமிகள் ஒரு முறை ஓரன்பரிடம் கூறியது, இதை நன்கு விளக்கிக் கொள்ள உதவும்:

நீயே உலகத்தையும் கடவுளையும் படைக்கிறாய். நீ தனி மனிதனாக எழும்போது தோன்றி, அவ்வாறு எழாது அடங்கும் போது மறையும் உலகமும் கடவுளும் நிலையற்ற பொருள்களே. ஆகவே அவைகளை ஆராய்வதை விட்டு நீ அடங்கும் மூலத்தை ஆராய்ந்து அமர வாழ்வு வாழ்க. அதற்கு வழி முதல் பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மற்றொரு முறை வேறொரு வெளிநாட்டு பக்தர் ஸ்ரீ ஸ்வாமிகளைச் சந்திக்க வந்திருந்த பொழுது, தம்முடன் வந்தவர்களிடம், ஸ்ரீ சாது ஓம், ஸ்ரீ ரமண வழி என்னும் நூல் எழுதி இருப்பதையும், அதில் முதல் பாகம் ஆத்ம விசாரத்தை விளக்குவதாகவும், இரண்டாம் பாகம் ஆத்ம சமர்ப்பணத்தை விளக்குவதாகவும் உள்ளன என்று கூறினார். அதற்கு ஸ்ரீ ஸ்வாமிகள்:

That is not actually correct. The true practice of self-surrender is only the practice of self-enquiry, which is the subject of the first part. Whereas the first part is only about why and how we should attend only to self, the second part is about why we should not attend to any other thing. Therefore the practice taught in both parts is the same, because that is the only practice that Bhagavan recommended. He recommended this one practice because all our problems are caused only by not knowing who we really are, so they will be solved only by our investigating and knowing ourself.

என்று ஆங்கிலத்தில் பதில் கூறினர். இதே கருத்து இந்நூலின் உபதேசமும் குறிக்கோளும் என்ற பகுதியில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டிருப்பது காண்க.

இதனாலேயே ஸ்ரீ ரமண வழியின் இரண்டாம் பாகம் ஒரு தனி நூலாக வெளியிடப்பட வேண்டும் என்று ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகள் ஒருபோதும் உத்தேசிக்கவில்லை. ஸ்ரீ ரமண வழியைத் தனித்தனியாக வெளியிடுவதென்றால் முதற் பாகம் ஒன்றே தனியாக வெளியிடத்தக்கது என்றும் கூறியிருந்தனர். மேற்சொன்ன காரணங்களுக்காக இரண்டாம் பாகம் என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த பாகம் அனுபந்தம் என்று மாற்றி அழைப்பது என்று ஸ்ரீ ஸ்வாமிகள் தீர்மானித்திருந்தனர்.

இரண்டாம் பாகத்தை ‘அனுபந்தம்’ என்று மாற்றி பெயரிட்டதோடு, ஸ்ரீ ஸ்வாமிகள் விட்டுச்சென்ற குறிப்புக்களின் உதவியோடு இப்பதிப்பில் செய்யப்பட்டுள்ள வேறு சில மாற்றங்கள்:

1. ஸ்ரீ ரமண சரிதச் சுருக்கப் பகுதி ‘உபதேசமும் குறிக்கோளும்‘ நீங்கலாக இந்நூலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ரமண சரிதச் சுருக்கம் 1983-ஆம் ஆண்டு ஸ்ரீ ரமணாஸ்ரமத்தால் ஒரு தனி நூலாக வெளியிடப்பட்டது. ஸ்ரீ ரமண பகவான் அருளிஷ்டம் உண்டேல் அது மீண்டும் ஒரு தனிப் புத்தகமாக வெளியிடப்படும்.

2. இதற்கு முன் இரண்டாம் பாகத்தின் ஒரு அத்தியாயமாக இருந்த வினை-கர்மம் அத்தியாயத்துடன் பிற்பால் பகுதிகளான ‘தன் முயற்சி’, ‘விட்டகுறை-தொட்டகுறை’ இணைக்கப்பட்டு, தக்க பகுதித் தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

3. 1985-ஆம் ஆண்டு பதிப்பின் பிற்பாலில் இடம் பெற்றிருந்த அனைத்து பிற்பால்களும் மீண்டும் சேர்க்கப்பட்டதோடு சாதனை சாரம் என்ற நூலிலுள்ள சாதனையும்-தொழிலும், நனவு-கனவு-துயில், வினா-விடை ஆகிய பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இந் நூலை மாற்றி வடிவமைக்கத் தேவையான குறிப்புக்களுடன், ஸ்ரீ ஸ்வாமிகள் இதில் சேர்க்கவேண்டிய சில விஷயங்களையும் கூறியிருந்தனர். அவை யாவும் ஆங்கிலத்தில் திரு மைக்கேல் ஜேம்ஸ் அவர்கள் குறிப்பெடுத்து வைத்திருந்தனர். அக் குறிப்புகள் யாவும் தேவையான இடங்களில் ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டு இப் பதிப்பில் சேர்க்கப் பட்டுள்ளன. இக் குறிப்புக்கள் யாவும் ஸ்ரீ ஸ்வாமிகள் பார்த்து சரி செய்தவையேயாயினும், இம் மொழிபெயர்ப்பில் பிழைகள் ஏதாவது இருந்தால் அதன் முழுப் பொறுப்பும் இப்பணியில் ஈடுபட்டிருந்த அன்பர்களையே சாரும். மேலும் அக்குறிப்புகள் என்னென்னவென்பதையும் அவை எங்கெங்கு இப்பதிப்பில் சேர்க்கபட்டுள்ளன என்பதன் விவரங்களையும் அருணாசலரமண புக் டிரஸ்டின் website(இணைய தளத்தில்)ல் வெளியிடவுள்ளோம்.

இதைத் தவிர சாதனை சாரம் என்னும் நூல் ஸ்ரீ ரமண வழியின் மூன்றாம் பாகமாக வெளியிடுவதற்குப் பதிலாக ஒரு தனி நூலாக வெளியிட வேண்டும் என்று ஸ்ரீ ஸ்வாமிகள் உத்தேசித்திருந்தனர்.. சாதகர்களுக்குப் பல உபயோகமான உளவுகளைக் கூறும் இந்நூல் தனித்து விளங்கக்கூடிய நூல் என்பதே ஸ்ரீ ஸ்வாமிகளின் கருத்து. இந்நூலையும் மாற்றி வடிவமைக்க சில குறிப்புகளை ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகள் விட்டுச் சென்றுள்ளனர். ஸ்ரீ பகவான் அருளிஷ்டம் உண்டேல் சாதனை சாரம் அம்மாற்றங்களுடன் வெளிவரும்.

அருணாசலரமண புக் டிரஸ்ட் திருவண்ணாமலை

3 திரு C. பழமலை நாதன் என்ற இவ்வுத்தம ரமண பக்தரே முதன் முதலில் ஸ்ரீ சாது ஓம் சுவாமிகளின் அருமையறிந்து, அவரது எங்கும் சுற்றித் திரியும் பரிவிராஜகப் போக்கைத் தடுத்து ஸ்ரீ ரமண நகரில் தனது வாசஸ்தலத்திலேயே ஓர் இருப்பிடம் அமைத்துக் கொடுத்து உபசரித்தவர். இவரது முயற்சியினாலேயே ஸ்ரீ சாது ஓம் ஸ்வாமிகளையும், ஸ்ரீ ரமண பக்தருட் சிறந்தவரும் ‘ஸ்ரீ திண்ணை ஸ்வாமிகள்’ என்று அன்பர் பலராலும் அன்புடன் போற்றப்படுபவருமான மகாத்மாவையும் திரு C. .பழமலை நாதன் அவர்களது இல்லத்திலேயே ஒரே இடத்திலே இருவரும் எப்போதும் தங்கியிருக்கப்பெற்று நாமெல்லாம் சென்று கண்டு தரிசிக்கும் பேறு கிடைத்தது எனலாம்.

4 ஸ்ரீ பகவான் கூறிய இக்கருத்து Talks with Sri Ramana Maharshi பக்கம் 135-ல் காண்க.

5 ஊழ் – அபக்குவம்.

 

Contents



Last updated: 7th November 2024