ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

நூன்முகம் (Forward)

Contents

நூன்முகம்

ஸ்ரீ ரமண வழி என்னும் இச் சீரிய நூல் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் உலகுக்குக் காட்டிய நேரிய ஆன்மீக மார்க்கத்தைத் தெளிவாக உணர்த்துவதாக அமைந்துள்ளது. அக்ஷரமண மாலை, உபதேச வுந்தியார், உள்ளது நாற்பது முதலிய ரமணோபதேசங்களுக்கு ஏற்கனவே வெளிவந்துள்ள உரைகளிற் சில பகவானது வாக்கியார்த்தத்தை உள்ளபடி பிரதிபலிக்காமல் – ‘த’ என்னும் ஒரே மந்திராக்ஷரத்துக்குத் தேவர்-அரக்கர்-நரர் ஆகியோர் அவரவர் மனப்பான்மைக்கேற்ப வெவ்வேறு பொருள் கொண்டதாகக் கூறும் ஓர் உபநிடதக் கதையைப்போல – மாறுபடக் கூறியிருப்பதைக் கண்ட இந்நூலாசிரியர் அம் மாற்றுக் கருத்துக்களைத் தக்க ஆதாரத்துடன் கண்டித்து, தன் ஞானாசிரியரான பகவானுக்கு உடன்பாடான கருத்துக்களைப் புலப்படுத்தும் பெருநோக்குடன் இந்த நூலைப் படைக்க அரும்பாடு மேற்கொண்டுள்ளார். பிறர் உரைகளில் இவர் கண்ட மாற்றுப் பொருட்கு ஓரிரு உதாரணங்கள் பிற்பால் 5, 8 ஆவன. எனவே, ஸ்ரீ ரமண போதம் பற்றிய இவ்வரிய ஆராய்ச்சி நூலானது ஆன்மார்த்த பொக்கிஷமாகவும், ஞானக் களஞ்சியமாகவும், ஸ்ரீ ரமண போத ஸத்யார்த்த தீபிகையாகவும் உள்ளதால், பகவானது அருள்வாக்கின் அந்தரார்த்தங்களைக் கலப்பின்றி உணர்ந்து உருப்பட வேண்டுமென்பதில் பேரார்வமுள்ள தலைமாணாக்கர்களின் மனோபீஷ்டத்தைப் பூரணமாக நிறைவேற்றுமென்பதில் ஐயமில்லை. எங்ஙனமெனின், இந்நூலில் வரும் விளக்கங்களைப் பன்னாட்கள் தொடர்ந்து ஆசிரியர்பாற் சிரவணம் செய்துவந்து மனநிறைவுற்ற சில அன்பர்களே தாமடைந்த அருட்பேற்றைப் பிறர்க்கும் பகிர்ந்தளிக்கும் நன்னோக்குடன் பெரும் பொருட்செலவில் இதனை அச்சியற்ற முற்பட்டதே அதற்குச் சான்றாகும். இதனாற் பயன்பெறும் நல்லன்பர்கள் பகவானது அருட் கொடையாக இதனைப் பக்தி விசுவாசத்துடன் போற்றுவரென்பது உறுதி.

தாம் காட்டியருளிய நேரிய மெய்ஞ்ஞான மார்க்கத்தில், சென்ற சிலகாலமாகப் படர்ந்துள்ள போலிப் பொருட்களான காளான்களைக் களைந்து, சுத்தப்படுத்தத் திருவுளங் கூர்ந்து பகவானே இவ்வாசிரியரின் வாக்கில் நின்று இத்தெய்வ நூலைப் படைத்திருத்தல் கூடும் என்ற சில தூய பக்தர்களின் கருத்தை அறிஞருலகம் ஏற்பது திண்ணம். ‘ஈசன் சில நல்லடியார் வாக்கில் நின்று மெய்யுபதேசங்கள் செய்கிறான்’ என்று பகவானே ஓர்கால் கூறியுள்ளமையால், ஈசனுக்கு வேறில்லாத பகவான் ரமணர் தாமே தக்க தருணத்தில் தம் கூற்றை அம்முறையைப் பின்பற்றி ஏன் மெய்ப்பித்திருக்கக் கூடாது? பகவான் தோன்றாத் துணையாக உள்ளிருந்து தூண்டியிராவிடில், மற்றையோர் கருத்துக்களிலுள்ள பொருந்தா விளக்கங்களைச் செவ்வனே எடுத்துக்காட்டித் தக்க நியாயத்தாற் பகவானது கருத்துக்களை நிலைநாட்டும் தீரம் இவ்வாசிரியருக்கு ஏற்பட்டிராதன்றோ!

ஸ்ரீ பகவானது பக்தருலகம் இந் நூலாசிரியரின் மேற்கண்ட செயற்கரிய செயற்குப் பெரிதுங் கடமைப்பட்டுள்ளது.

(வெண்பா)

1. நேதிகளை வாற்கண்டு நில்லென்ற சீரமணன்

போதனையைப் போற்றுப் புகன்றொருநூல் – சாதுஓம்

பார்க்குரம ணாற்றுப் படையா வழங்கியெல்

லார்க்கும் வழிகாட்டி னான்.


2. இந்நூல் ரமணவழி யீதுநடு வாய்நின்று

தொன்னூல் வழியையெலாஞ் சோதித்துத் – தன்னைத்தான்

ஓர்வழிவிட் டோர்வரிதென் றோர்ந்து முமுட்சுவையந்

நேர்வழியி னிற்பிப்ப தாம்.


3. சும்மா விருப்பே சுகவழியா மென்றநம

தம்மான் வழியகன் றாற்றும்பல் – கன்மாக்கள்

வாதனைக்கு வித்தென்று வாதித்துத் தற்கவன

போதனைசெய் விந்நூற் பொருள்.


4. இந்தநூற் றோன்றற் கிதுவே முகாந்தரம்வே

றெந்தவுண் ணோக்கு மிதற்கின்று – சொந்த

விருப்புவெறுப் பின்றி விளம்புமிதைப் பார்ப்பா

ருருப்படுவர் தம்மெய் யுணர்ந்து.


5. சோதனைக ளற்றூன் றொடர்வற்றுப் பல்யோக

சாதனைக ளற்றீறில் சங்கையற்றுப் – போதச்

சுமையற்றுச் சும்மா சுபாவத்தெஞ் ஞான்று

மமைவே ரமணவழி யாம்.


6. குருவா சகநூ லெனவுண்மை யைக்கோண்

மருவா ரமணவழி நூலு – முரைசெயலான்

முன்னூலோற் கன்றைய னீந்த முதன்மையைப்

பின்னூலோ னும்பெறுவ னின்று1.


7. சீரமண மெய்வழிநூல் செப்பும் பரஞானப்

பேருரைகொள் ளுஞ்செவிகள் பின்னர்வேற் – றாருரையுங்

கொள்ளுமோ? கோவாக்கின்2 கூடார்த்த சாரமெலாம்

விள்ளலா லிந்நூல் விரித்து.

அருணாசல ரமணன் அருளடி வாழ்க

ஸ்ரீ நடனானந்த சுவாமிகள்,
திருவருணை

1 குறிப்பு: ‘குருவாசகக் கோவை வெளிவந்த போதே அதன் ஆசிரியர் முன்னணித் தொண்டர் வரிசையிற் சேர்ந்து விட்டார்’ என்று அன்று கூறிய பகவான் இன்று ஜீவ தசையிலிருந்தால் ரமண வழியார்க்கும் அப்பரிசை வழங்குவாரென்பர் நல்லோர்.

2 கூடார்த்தம்: இரகசியப் பொருள்.

 

Contents