ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)
முகவுரை: குறிக்கோளும் வழியும் (Introduction)
எல்லை யிலாதபே ரின்ப வெழில்வடிவு
தொல்லமரர் காணாத் துரீயச் சுடர்வடிவு
நல்ல சிவமா நடந்த குருவடிவு,
சொல்ல வொணாத சொரூபமாத் தொக்கதே.
(ஸ்ரீ முருகனார்)
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாசலரமணாய
ஸ்ரீ ரமண வழி
காப்பு
ஆண்டா னளித்த வருளுபதே சப்பொருளை
யீண்டே விளக்கி யெழுதவருள் – வேண்டும்
வரைமேன் மறைமுனி வாக்கை வரையைங்
கரநின் கழலுதவிக் கா.
முகவுரை: குறிக்கோளும் வழியும் குறிக்கோள்
பரிபூரண சுகத்தையடைவதையே பகவான் ஸ்ரீ ரமணர் மனித சமூகத்தின் குறிக்கோளாகக் காட்டி கொடுக்கின்றனர். சுகத்தை விரும்பாத ஜீவர் யாருமில்லை. சகல ஜீவர்களும் தத்தம் சகலவித முயற்சிகளாலும் நாடுவது சுகத்தையேயல்லவா? ஆகையால், ஸ்ரீ பகவானது குறிக்கோளை மறுப்போர் யாருமிலர். இக் காரணத்தாலேயே ஸ்ரீ ரமணோபதேசங்கள் யாதொரு தனிப்பட்ட மதக் கொள்கையுமாகாமல், சகல உயிர்கட்கும் புகலளிக்கும் பொதுப் பெருநெறியாக விளங்குகின்றது. அதனால்தான் உலகின் எந்நாட்டினரும் எம்மதத்தினரும் ஸ்ரீ ரமணோபதேசங்களை மிக்க விருப்பமுடன் ஏற்றுப் பின்பற்றுகின்றனர்.
சுகம் என்பது யாது? இதைச் சரியாக அறிந்து கொள்ளாததால்தான் மக்கள் சுகத்திற்காகப் பற்பல துறைகளிலும் தம் முயற்சியைச் செலுத்தி வருகின்றனர். சுகம் என்பது ஆன்மாவே. ஆன்மாவின் இயல்பே சுகம். உண்மையில் நாம் ஆன்மாவே. நம் இயல்பு சுகமே. ஆயினும் தாம் ஆன்மாவே என்றறியாமல் தம்மை உடலாகக் கருதியிருப்பதால்தான் மக்கள் சுகத்தையிழந்தவர்களாகவும் துன்புறுபவர்களாகவும் அவசியமின்றிக் கவலைப்படுகிறார்கள். இழந்ததாகத் தோன்றும் நம் சுகத்தை மீண்டும் அடைவதற்கு, மறந்ததாகத் தோன்றும் நம் உண்மையியல்பை – ஆன்மாவை – அறிவதொன்றே போதும்.
‘நாம் சுகமடைய முயல்வது சுயநலமல்லவா?’ என்று சிலர் கேட்பதுண்டு. ‘சுயம்’ என்ற பதத்தின் சரியான பொருளைத் தெரிந்து கொள்ளாததால்தான் இக்கேள்வி நன்மக்களிடமும் எழுகின்றது. ‘சுயம்’ என்பது ஆன்மாவே. தன்னை அகண்ட ஆன்மா என்றறியாமல், தன்னைக் குறுக்கி நோக்கி, ‘இவ்வுடலே நான்’ என்று கருதுவதால்தான் ‘சுயநலம்’ என்ற சொல் ஓர் கீழ்மைக் குணத்தைக் குறிக்கும் சொல்லாக நம்மிடையே வழங்கி வருகின்றது. ‘சகல உயிர்களிலும் ஏகமாய் ஒத்து விளங்கும் ஆன்மாவே நான்’ என்றறியும் ஆன்ம ஞானி ஒருவனின் அனுபவத்தில் ‘சுயநலம்’ என்பது சகல உயிர்களின் நலமுமே யாகிறதல்லவா? ஆன்ம ஞானம் உண்டானால்தான் சகல உயிர்களின் உண்மையும் தானே என்பது விளங்கும். இவ்வாறு தன்னை ஆன்மாவாக உணர்ந்தால்தான் அனைத்துயிர்க்கும் அனைத்துலகிற்கும் உண்மையான நன்மையுண்டாக்க முடியும். ‘தன்னைப் போன்று பிறரை நினை’ என்று வாய்ப் பேச்சால் மட்டும் பிரசாரம் செய்வதால், உலக உயிர்களிடம் உண்மையான அன்பு நமக்கு உதிக்காது. ஆன்ம ஞானத்தால் உயிர்கள் அனைத்தையும் தன்மையொருமையாய் அனுபவித்துணரும் பொழுதுதான் சகல உயிர்களிடத்தும் நமக்கு அனன்னிய அன்பு சித்திக்கும். இவ்வான்ம சித்தியே உலகில் சாந்தி, சமாதானம், சுகம் இவை நின்று நிலவ ஆணிவேர். ஆகையால் அகங்கார தோஷத்தை நசிப்பிக்கும் ஆன்ம விசார நெறியே தற்போது உலகின் முக்கியத் தேவையாகும். உண்மையான ஆன்ம ஞானியே உலகிற்கு உண்மையான உபகாரியுமாவான்! தன்னை அறிந்த மெய்ஞ்ஞானி ஒருவரின் இருப்பே இவ்வுலகத்திற்குப் போதியதான பேருபகாரமுமாகும். எனவே உலகமெலாம் சுகமடையவேண்டும் என்றால், மனித சமூகத்தின் சரியான குறிக்கோள் ஆன்மாவை அறிவதாகவே அமைய வேண்டும் என்பது விளங்குகின்றதல்லவா?
ஆன்ம ஞானத்தால் மட்டுமே உண்மையான பூரணமான சுகத்தை மக்கள் அடைய முடியும். இதை விடுத்துப் பஞ்சேந்திரியங்கள் வழியே உலகப் பொருள்களை அனுபவித்துச் சுகமடைய முயல்வது சரியானதல்ல. ஏனெனில், சுகம் அப்பொருள்களிலிருந்து வருவதில்லை. இவ்வற்ப சுகானுபவங்களுங்கூட அனுபவிக்கப்படும்போது, மனம் தன் விருத்திகளடங்கி ஆன்மாவில் மூழ்குவதால்தான் அனுபவிக்கப்படுகின்றன. நாம் விரும்பிய பொருள்கள் கிடைக்கும்போதும், நாம் வெறுத்த பொருள்களுக்குக் கேடுண்டாகும் போதும் மனம் உண்முகப்பட்டு ஆன்மாவில் மூழ்கி ஒன்றுவதால் ஆன்ம சுகத்தையே அனுபவிக்கின்றது. இந்த உண்மையை அறியாததால் மக்கள் பொருள்களிலிருந்து தமக்குச் சுகம் கிடைக்கப்பதாகத் தவறாகக் கருதி, அந்தப் பொருள்களைத் தேடுவதையே தம் வாழ்வின் குறிக்கோளாக்கி நாள் முழுவதும் அதற்காகவே பாடுபடுகின்றனர். இதுவே அறியாமை அல்லது மாயை.
உலகப் பொருள்களைத் தேடிக் குவித்துப் பஞ்சேந்திரியங்களின் மூலம் அவற்றை அனுபவித்தடையும் சுகம் மிக அற்பமும் அநித்தியமுமாகின்றதல்லவா? இவ்வாறு அற்ப சுகானுபவியாக நாம் ஆகாமல், பரிபூரண சுகானுபவியாவதே நமக்கு ஸ்ரீ ரமண பகவான் காட்டித்தரும் குறிக்கோள்.
வழி
இக் குறிக்கோளை அடைய ஸ்ரீ பகவான் வகுத்தளித்துள்ள வழிகள் இரண்டு. (1) தன்னை ‘நான் யார்?’ என்று விசாரித்தறியும் ஆன்ம . (2) இறைவனிடம் தன்னை முழுவதும் ஒப்புவித்துவிடும் ஆன்ம சமர்ப்பணம். முந்தியது அறிவு நெறி (ஞான மார்க்கம்), பிந்தியது அன்பு நெறி (பக்தி மார்க்கம்).
ஆன்ம விசாரம்: நாம் எதையறிய விரும்புகிறோமோ அதை நாடுகிறோம். அவ்வாறே தன்னையறிய விரும்பினால் தன்னையே நாட வேண்டும்.
ஆனால் உலகிற் காணப்படும் ஆராய்ச்சிகள் முழுவதும் தன்னை விட்டுவிட்டு முன்னிலை-படர்க்கைப் பொருள்களாகிய உலகையும் கடவுளையும் ஆராய்வதே ஆகுமல்லவா? உலகம், கடவுள் இவைகளை ஆராயும் அறிவாகிய மனிதன் தன்னை யாரென்று சரியாக இன்னும் அறியவில்லை. ‘நான் மனிதன்’ என்கிறோம். இது அறியாமையே தவிர, தன்மையின் உண்மையான அறிவல்ல. ஏனெனில், நமது உடமையாகிய உடம்பையே நாம் என்று தவறாக எண்ணுவதால்தான் ‘நான் மனிதன்’ என்கிறோம். உடையவனாகிய நான் யாரென்று உடம்பினின்றும் நம்மைப் பகுத்து அறியும் அறிவே சரியான பகுத்தறிவு. தேகமே நானென்றுணரும் அறிவு (அகங்காரம்) போலித் தன்மையுணர்வே. அகண்ட ஆன்மாவாகத் தன்னையறிவதே மெய்யான தன்மையறிவு அல்லது ஆன்ம ஞானம்.
உறக்கத்திலிருந்து உணர்வு எழும்போது ‘நான் இவ்வுடல்’ என்ற வடிவில் நம்மை உணர்கிறோம். ஆனால் உறக்கத்தில் உடல், உலக உணர்வுகள் இல்லை. ‘நான் இருக்கிறேன்’ என்ற சுத்தவுணர்வு உறக்கத்தில் உள்ளது. விழிப்பில் இத் தன்னுணர்வு ‘நான் உடலாக இருக்கிறேன்’; ‘நான் மனிதனாக இருக்கிறேன்’; ‘நான் இன்னாராக இருக்கிறேன்’ என்றவாறு ஓர் உபாதியைச் சேர்த்துக்கொண்டு எழுகின்றது. இதுவே அகந்தை, ஜீவபோதம்; இதுவே பந்தம். இதுவே முதல் எண்ணம். இந்த முதல் எண்ணமாகிய மனிதனுக்கே முன்னிலை, படர்க்கைகளின் உணர்வாகிய பிற எண்ணங்கள் உண்டாகின்றன. முன்னிலை-படர்க்கைகளை நாடநாட, மேலும் எண்ணங்கள் விருத்தியாகிக்கொண்டே போகும். தன்மையுணர்வாகிய ‘நான் இன்னாராக இருக்கிறேன்’ என்ற அகந்தை வடிவத்தை, இதன் இருப்பு எத்தகையது என்று நாடவேண்டும்.
‘முன்னிலை-படர்க்கைகளாகிய பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றைப் பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனிக்காமல், “அவை யாருக்குண்டாயின?” என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்களெழினுமென்ன? எண்ணங்களின் மேற் செல்லும் கவனத்தைத் தன் மீதே திருப்ப வேண்டும். திருப்புவது எப்படியெனின், ஒவ்வோரெண்ணமுங் கிளம்பும்போதே ஜாக்கிரதையாக, “இது யாருக்குண்டாயிற்று?” என்று விசாரித்தால், “எனக்”கென்று தோன்றும். உடனே “நானார்?” என்று விசாரித்தால், மனம் – நம் கவனசக்தி எண்ணங்களை விட்டுத் தன் பிறப்பிடத்திற்குத் (ஆன்மாவிற்குத்) திரும்பிவிடும். அதனால் எழுந்த பிற எண்ணங்களும் கவனிப்பாரற்றதால் அடங்கிவிடும். இப்படிப் பழகப்பழக, மனத்திற்குத் தன் பிறப்பிடத்திற் றங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது. “நான் யார்?” என்ற ஆராய்ச்சியினாலேயே மனம் அடங்கும். மனமடங்குவதற்கு விசாரணையைத் தவிர வேறு தகுந்த உபாயங்களில்லை. பிராணாயாமம், மூர்த்தித் தியானம், மந்திர ஜபம் முதலிய மற்ற உபாயங்களினால் அடக்கினால், மனம் அடங்கினாற் போலிருந்து மறுபடியும் கிளம்பிவிடும். மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைகளிருக்கின் றனவோ அதுவரையில் “நான் யார்?” என்னும் விசாரணையும் வேண்டும். சொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப, வாசனைகள் யாவுமழிந்துவிடும். ஒருவன் தான் சொரூபத்தை அடையும் வரையில் நிரந்தர சொரூப ஸ்மரணையைக் கைப்பற்றுவானாயின் அதுவொன்றே போதும். “நான், நான்” என்று கருதிக்கொண்டிருந்தாலுங் கூட அவ்விடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். சதாகாலமும் மனத்தை [நாட்டத்தை] ஆத்மாவில் [தன்மையுணர்வின் மேல்] வைத்திருப்பதற்குத்தான் “ஆத்மவிசாரம்” என்று பெயர். பந்தத்திலிருக்கும் தான் யார் என்று விசாரித்து, தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்து கொள்வதே முக்தி’ என்கிறார் ஸ்ரீ பகவான்.6
‘நான்’ என்னும் தன்மையுணர்வு எது என்று நாடுவதற்கு எழுந்த அகம் விருத்தி, மற்ற நினைவுகளையெல்லாம் அழித்து, பிணஞ்சுடு தடிபோல் முடிவில் தானும் அழியும். அதாவது, எல்லா நினைவுகளுக்கும் மூல எண்ண வடிவமான ‘நான் இன்னாராக இருக்கிறேன்’ என்ற கலப்புணர்வில் உள்ள ‘இன்னாராக’ என்ற உபாதியுணர்வு மட்டும் (அது பொய்யிருப்பேயாகையால்) கழன்று போய், நான் இருக்கிறேன் என்ற தன்னிருப்பின் மெய்யுணர்வான ஆன்மாவே மிஞ்சி விளங்கும்.
இவ்வாறு ஜீவோபாதியினின்றும் விடுபட்டு நாம் சுயமே பிரகாசிப்பதே ஜீவன்முக்தி, மோக்ஷம், பரநிர்வாணம், பரமபதம், கடவுள் நிலை என்றெல்லாம் பற்பல மதங்களிலும் கோஷிக்கப்படுகின்றது. ஜீவபோத ரூப அகந்தை அழியும் இந்நிலையே மரணமற்ற அமரநிலை. அகந்தையை வேரறுக்கும் இந் நிகழ்ச்சியே பக்தி மார்க்கமாகிய ஆன்ம சமர்ப்பணத்திலும் எவ்வாறு நிகழ்கின்றதென்று பார்ப்போம்.
ஆன்ம சமர்ப்பணம்: ஆன்ம சமர்ப்பணம் என்பது அகங்காரத்தை ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதே என்று தெரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் ஆன்ம விசாரமும் ஆன்ம சமர்ப்பணமும் (அகந்தையை நசிப்பிப்பதாகிய முடிவு நிலையிலும் சரி, செய்முறையிலும் சரி) இரண்டல்ல; ஒன்றே! கடவுளை நம்புவோர்க்குப் பக்தி மார்க்கமாகிய ஆன்ம சமர்ப்பணம். இந்த ‘நான்’ என்ற ஜீவனும் உலகமும் உண்மையில் கடவுளுக்கே உடைமையானவையாயிருக்க, தேகத்தை ‘நான்-எனது’ என்று உரிமை பாராட்டித் திரிவது ஆண்டவனுடைய பொருளை அபகரித்த அபசாரச் செயலேயாகும். தேகாபிமானத்தை ஆண்டவனுக்குச் சமர்ப்பித்து விட்டால் நானற்ற நிலை சித்திக்கும். அகங்கார மமகாரமற்ற இந்நிலையே ஆன்ம நிலை.
மேலெழுந்தவாரியாக நோக்குவார்க்கு, ‘ஆன்ம விசாரியோ தன்னை நாடுகிறான்; பக்தனோ கடவுளை நாடுகிறானே’ என்றவாறு செய்முறையில் ஆன்ம விசாரத்திற்கும் ஆன்ம சமர்ப்பணத்திற்கும் ஓர் வேற்றுமை இருப்பது போலக் காணப்படினும், உண்மையாகவே சாதனையில் ஈடுபடும் சாதகன் ஒருவனுக்கு, அகந்தை அழிந்து ஆன்மாவாக நிலைபெறுவதாகிய முடிவு நிலையில் மட்டுமன்றிச் செய்முறையிலும் இரண்டும் ஒன்றேயாவது தெற்றென விளங்கும். எவ்வாறெனின், தன்னைக் கடவுளுக்குச் சமர்ப்பிக்கும் சாதனையைத் தொடங்கும் பக்தன் பிறகு தேகத்தை ‘நான்’ என்றோ ‘எனது’ என்றோ மீண்டும் பற்றிக்கொள்ளும் அபிமானத்தை ஏற்கவே கூடாது.
கடவுளுக்குக் கொடுத்ததை மீண்டும் எடுத்துக்கொள்ளும் தத்தாபகாரச் செயலே இது. ஆகையால், மீண்டும் அவைகளை அபகரிக்காமல் இருக்கமுயல்வதே சரணாகதியின் சரியான சாதனை முறை. அப்போது அவன் என்ன செய்கிறான்? ‘தேகமே நான்’ என்னும் போலித் தன்மையுணர்வு கிளம்பி விடாமலிருப்பதற்காக, அத் தன்மையெழுச்சியின் மேல் சர்வ ஜாக்கிரதையான கவனத்துடன் இருக்க முயல்கிறானல்லவா? ஆன்மவிசாரி கவனம் செலுத்தும் தன்னாட்டமே இவ்வாறு உண்மையான பக்தனொருவனிடமும் நிகழ்கின்றது!
மேலும் ஒருவன் தன்னைக் கடவுளுக்குச் சமர்ப்பிக்க விரும்பினால் சமர்ப்பிக்கப்படவேண்டிய பொருளாகிய ‘நான்’ என்பது யாது என்று அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், இந்த ‘நான்’ என்று அவனால் உணரப்படுவது எதுவென்று சரியாக அறிந்துகொள்ளப் படாவிடில், அவன் அதை எப்படிச் சமர்ப்பிக்க முடியும்?
உதாரணமாக, தோல்வியுற்ற போர்வீரனொருவனைக் கைதுசெய்த பின், ‘உன்னிடமுள்ள ஆயுதத்தைக் கீழே போடு’ என்று கட்டளையிடும் போது, அவன் ‘ஆயுதம்’ என்று தமிழிற் குறிப்பிடப்படுவது எதுவென்றறியாத ஓர் பிற மொழியினனாயின், ஆயுதத்திற்குப் பதில் ஒரு காகிதத்தையே கீழே போடுவானல்லவா? அது போலவே, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு ஆன்மசமர்ப்பணம் செய்ய விரும்பும் சாதகர் பலரிடமும் இத்தகைய பிழையே காணப்படுகின்றது! அவர்கள் எல்லோரும் தம்மைக் கடவுளுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றறிந்திருந்தாலுங்கூட, தான் யார் என்றும், தன்னை அர்ப்பணிப்பது என்றால் என்ன, எப்படி என்றும் அறியாதவர்களாகவே யிருப்பதால், சம்பூரண சரணாகதி செய்வதெப்படி என்றறியாது திகைக்கின்றனர். ‘நான்’ என்பது என்ன என்று சரியாக விசாரித்தறியாதோராகையால், அவர்கள் ‘எனது’ என்ற வடிவில் உணரப்படுகிற உடைமைப் பொருள்களை மட்டும் கடவுளுக்குச் சமர்ப்பிக்கின்றனர்.
அதாவது, உடையவனாகிய தன் இயல்பு யாது என்று அறியாததால், உடைமையை மட்டுமே அர்ப்பணிக்கின்றனர். ஆகையால், தன் சரணாகதியைச் சம்பூர்ணமாக்க வேண்டுமாயின், அவர்கள் தன்னை யார் என்று விசாரித்தறிய, கொஞ்சங் கொஞ்சமாகவாவது முற்பட வேண்டும். பிறகுதான் தன்னைச் சம்பூரணமாகச் சமர்ப்பித்துவிட முடியும்.
சமர்ப்பிக்கப்படவேண்டிய ‘நான்’ என்னும் அகந்தையோ, நாட்டம் தன்மீது செலுத்தப்படுமாயின் பதுங்கி உருமறையுஞ் சுபாவமுடையதாகையால், ஒருவன் சரியானபடி தன்னை விசாரிப்பானாயின், அவன் சமர்ப்பிக்க விரும்பும் ‘நான்’ என்னும் அகந்தை இருப்பற்றொழிவதால், இத் தன்னிழப்பால், ஆன்ம சமர்ப்பணமாகிய சரணாகதியும் அவனிடம் சம்பூர்ணமாகி விடுகின்றது7.
இவ்வாறு முன்னிலை-படர்க்கைகளை நாடுவதை விட்டு, மனம் தன் மூலத்தை நாடும் விசாரமே சரியான ஆன்ம சமர்ப்பணமும் ஆகின்றது!
ஆன்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றுமிடங் கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனாய் இருப்பதே தன்னை ஈசனுக்களிப்ப தாகும்
என்பது ஸ்ரீ ரமண வாக்கு. கடவுளை பக்தன் வெளியில் தேடுவதும் முன்னிலை நாட்டமே. தன்மையின் உண்மையாய்க் கடவுள் விளங்குவதால் தன்மையை நாடுவதே சரியான கடவுள் நாட்டமான பக்திமார்க்கமுமாகும்.
6 ‘நான் யார்’ என்ற நூலிற் காண்க.
7 பகவானது இக்கருத்தை ‘ஸ்ரீ மஹர்ஷி வாய்மொழி’ என்னும் நூலின் முதற் பாகத்தில், நான்காம் அத்தியாயத்தில், (பன்னிரண்டாம் பதிப்பு, 2008, பக்கம் 26-ல்) கடைசிப் பாராவிற் காண்க.