ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

உலகின் நோக்கம் ஒழியா வின்பமே (Chapter 1)

Contents

அத்தியாயம்-1.
உலகின் நோக்கம் ஒழியா வின்பமே

உலகம் அறிவால் முன்னேறுகிறது. அறிவின் விளக்கமே உலகிற் காணப்படும் சிறப்புக்கள். உலகம் எதை நோக்கி முன்னேறுகிறது? உலகத்திற்கு என்ன வேண்டும்? ஊன்றிக் கவனித்தால், உலக ஜீவர்கள் அனைவரும் சுகத்தை அடையவே பாடுபடுகிறார்கள் என்பது தெரிய வரும். எறும்பு முதல் ஏகாதிபத்தியக்காரர்களாகிய சக்கரவர்த்திகள் வரை அனைவரும் உழைக்கின்றனர். எதற்காக? சுகத்திற்காகவே. ஒவ்வொருவருக்கும் தற்போது தனக்குள்ள நிலையைவிட சுககரமான ஒரு நிலை வேண்டுமென்ற ஆவல் இருக்கிறது. அவ் வாவலே இவ் வுழைப்புக்குக் காரணம். இது தப்பல்ல; நல்லதே! மனிதனுக்கு மேன்மேலும் சுகமாயிருக்க விருப்பமுண்டாவதால், அவனுக்குத் தற்போது சுகமானது முழுவதும் கிடைக்கவில்லையென்றே தெரிகிறது. ஒருவன் மிகப் பாடுபட்டு உழைத்து, வாழ்வுக்கு வேண்டிய, உணவு, வீடு, மனைவி, மக்கள், உத்தியோகம் போன்ற பல சுக சாதனங்களை விருத்தி செய்கிறான். ஏனெனில், அவைகளிலிருந்து தனக்குச் சுகமுண்டாகும் என்பதற்காகவே அப்படிச் செய்கிறான்.

இவ்வாறு மனிதன் தேடும் சுகமானது அவனால் அனுபவிக்கப்படுகிறது. ஆனால். அது நீடித்து நிற்பதில்லை. கொஞ்ச நேரமே சுகம்போல் தோன்றி, பிறகு அது விலகிவிடுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்வில் சுகம் அனுபவிக்கும் பற்பல வழிகளையும் ஆராய்ந்தால், பொதுவாக ஒரு முடிவுக்கு வரலாம். அதாவது, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவ் வைந்து கருவிகளால் அனுபவிக்கப்படுவதே இப்போது மனிதன் கண்டுள்ள சுகம். இவ் வைம்பொறிகளுக்கும் வேண்டியவற்றைத் தேடுவதே, இன்றுவரை மனித சமூகத்தின் பேருழைப்பாக இருந்து வருகிறது.

கண்ணுக்கு இனியதைப் பார்க்கும்போது மனிதன் ஆனந்தமடைகிறான். அக் காட்சி நீங்கினால் துக்கமடைகிறான். காதுக்கு இனிய ஓசையையோ, பேச்சையோ கேட்கும்போது ஆனந்தத்தையும், அது நீங்குவதால் துக்கத்தையும் அடைகிறான். காட்சி, கேள்வி இவைகளைப் போலவே ஸ்பரிசம் (தொட்டுணர்வது), ருசி, மணம்(வாசனை) ஆகியவைகளையும் சுக வடிவாகவும் துக்க வடிவாகவும் மனிதன் அனுபவிக்கிறான். பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படும் இக் கருவிகள் ஐந்தும் மனிதனுக்குச் சுகத்தைக் கூட்டி வைப்பதாகத் தோன்றினாலும், அவைகள் எப்போதும் இடைவிடாமல் சுகம் தருவதில்லை.

‘சினிமா’ போன்ற காட்சிகளை அளவுக்கு மீறிப் பார்த்தால், கண் கெட்டுப்போய் நோயுண்டாகிறது. மற்றவிதக் கண்காட்சிகளும் எப்போதும் கண்டுகொண்டே யிருக்க முடியாமல், ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றன. காதின் இனிமையும் இவ்விதமே. எவ்வளவு நேரந்தான் ஒருவன் சங்கீதம் கேட்க முடியும்? சங்கீதம் முடிந்துவிடும்; அல்லது இம்மனிதன் வேறு காரணங்களால் அதைவிட்டுப் போகவேண்டி வரும். ஆகவே, காதால் அனுபவிக்கப்படும் சுகத்திற்கும் முடிவுண்டாகிறது. மூக்கின் வாசனையும் இப்படியே. அதிகமான வாசனைகளை நுகர்ந்தால் தலை வலியோ அல்லது மூக்கில் இரத்தமோ வந்துவிடும். அன்றியும் அவ் வாசனை தரும் பொருள்கள் சீக்கிரம் அதை இழந்தும் விடும். ருசியும் அப்படியே. நாக்கால் எவ்வளவுதான் ருசியாகப் புசிக்க முடியும்? வயிறு நிரம்பி விட்டால் பிறகு முடியாது; அல்லது அதிக ருசியானால் நாவிலேயே ஒரு தெவிட்டுதல் ஏற்பட்டுவிடும். ஆகவே, ருசியும் நீடித்த சுகம் தருவதில்லை. ஸ்பரிசத்தால் சுகமடைவதும் இப்படியே. ஒரு மிருதுவான புஷ்பம் தன்மீது படும்போது ஆனந்தமுண்டாகிறது. ஆனால் அது வாடிப்போகும்; அல்லது கொஞ்ச நேரத்தில் அவ் வுணர்ச்சி சகஜமாகி விட்டால் சுகமில்லாமற் போகும். தென்றல் முதலியவைகளும் இப்படியே. ஆகவே, ஸ்பரிச சுகமும் நீடித்து நில்லாது. பஞ்சேந்திரிய சுகங்களில் எவ்வொன்றையும் நாம் நீடித்து அனுபவிக்க இயலாது. அளவுக்கு மீறினால், சுகத்திற்குப் பதிலாக அவை துக்கத்தையும் தந்துவிடும். எனவே, மனிதன் தேடும் சுகமானது ஐம்பொறிகளால் பூரணமாக (நிறைய) சாசுவதமாக அவனுக்குக் கிடைப்பதில்லை என்பதே இவ் வாராய்ச்சியின் பயன்.

கொஞ்சங்கூடத் துக்கம் கலக்காத முழுச் சுகத்தையே மனிதன் எவனும் விரும்புகிறான் என்பது திண்ணம். இதை மறுக்க முடியாது. ஆனால், அவ்வித சுகத்தை இதுவரை எந்த மனிதனும் அடையவில்லை. அதாவது, பஞ்சேந்திரியங்களைத் திருப்தி செய்யும் முறையால் அதை எவனும் அடையவில்லை. அம்முறையில் இதுவரை உலகம் உழைத்து முன்னேறியதால் முழுச்சுகம் அடையப்படவில்லையென்பது நன்கு விளங்கி விட்டது. ஆனால், அப்படிப்பட்ட சுகத்தை அடைய முடியாதா? முடியும்! துக்கக் கலப்பற்றதும், எப்போதும் நீங்காததுமாகிய (முழுச் சுகமாகிய) பெரிய இன்பமொன்றை அடைய வேண்டுமென்று உயிர்கள் விரும்புவது தப்பல்ல! சுக இச்சை தப்பல்ல! அது அடையப்பட வேண்டியதே!! அதுவே புருஷார்த்தம்!!! ஆனால் அதற்கு இந்நாள் வரையில் மனிதர்கள் நிருமாணித்து நடத்திவரும் திட்டந்தான் தப்பாகவிருக்கிறது. அதனால்தான் மனிதன் எவ்வளவுதான் உழைத்தும் அந்தப் பூரண சுகத்தை அடையவில்லை.

இவ்விதம் சகல ஜீவர்களும் விரும்பும் பரிபூரண சுகத்திற்கு அழைத்துச்செல்லும் மார்க்கங்களே உலகில் தோன்றியுள்ள மதங்களாகும். ‘மதம்’ என்றால் (மதிக்கப்பட்ட) கொள்கைகள் அல்லது வழிகள் என்று பொருள்படும். ‘மதியுள்ள காறு மதமுண்டாம்’ என்பது குருவாசகக் கோவை பாடல் 943. எந்த வழியில் முயன்றால் பூரண சுகத்தையடையலாம் என்பதைக் காட்டிக் கொடுப்பதே மதங்களின் வேலை. ஆனால், தற்காலத்தில் பற்பல மதங்கள் தத்தம் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி வந்துங்கூட, மனிதன் மதாபிமானம் என்ற ஒரு வெறி மயக்கத்தாலும், மதங்களின் உண்மையைச் சரியாகப் புரிந்துகொள்ளவியலாத அறியாமையாலும், எம்மதத்தை அனுஷ்டிப்பவனாயிருந்தாலும், அவன் அந்தப் பரிபூரண சுகநிலையைப் போய் அடையாமல், இடைவழியிலேயே தடுக்கப்பட்டு விடுகிறான்.

எந்தமத மீதி லிருக்கினுநம் பிக்கையுனக்

கந்தமத மெய்யன்போ டாசரித்தி — சொந்தமத

மீதபிமா னத்தால் வெளியிற் பிறமதமேல்

வாதமிடா துள்ளே மறிந்து.

(குருவாசகக் கோவை-991)

இந்த நிலையில் மனித சமூகத்துக்கு ஓர் தக்க வழிகாட்டி தேவையாயிருக்கின்றது. அத்தகைய வழிகாட்டிகளான பெரியோர்கள் பொதுவாக அவதார புருஷர்கள் என்று மக்களாற் போற்றப்படுகின்றனர். அவர்கள் புருஷார்த்தமாகிய (மனிதனாகப் பிறந்தவன் அடைய வேண்டியதான) அந்தப் பரிபூரண சுகத்தை அடைந்து தெளிந்தவர்கள். மேலும் அச் சுகத்திலேயே என்றுமியல்பாயிருப்பவர்கள். அதையடையப் பிறருக்கும் உதவுபவர்கள். அப்படிப்பட்ட குருமார்களில் ஸ்ரீ அருணாசலத்தின் தென்சாரலில் எழுந்தருளி ஜகத் குருவாய் விளங்கிய பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளே நமக்கு வெகு சமீப காலத்திய ஞான குருவாவர். ஸ்ரீ ரமண பகவானால் உலக மக்களுக்குப் போதிக்கப்பட்டது என்ன? அவரிடமிருந்து உலகம் அடையத்தக்க உயர் நலன் யாது? ஆராய்வோம்.

யுகயுகமாக மக்கள் அறிவால் பல்வேறு துறைகளிலும் முயலும் முயற்சி எதற்காக? சுகத்திற்காகவன்றோ? அந்தச் சுகத்திற்கு, இதுவரை தோன்றிய பெரியோர்கள் வகுத்த வழிகள் எல்லாவற்றின் சாராம்சமாகவும், தாமாகவே கண்டுபிடித்ததாகவுமுள்ள ஓர் நேர்மார்க்கத்தை பகவான் நமக்குக் காட்டுகிறார். அது ஒரு நேர்க்கோண முக்கோணத்திற் குறுக்குக்கோடு போல (hypotenuse of a right-angled triangle) நேர் மார்க்கமாகவும், அனுஷ்டிப்பதற்குச் சுலபமாகவும் இருப்பதை நாம் இவ் வாராய்ச்சியின் முடிவாக அறிய முடியும். அதைக் கவனிப்போம்.

பகவான் ஸ்ரீ ரமணர் காட்டுகின்ற இச் சுகவழியை யார் கடைப்பிடிக்கத் தகுந்தவர்கள். பிராம்மணர்கள்தான் அனுஷ்டிக்கலாமா? அல்லது இந்துக்கள் மட்டுந்தான் கடைப்பிடிக்கலாமா? பகவான் ஸ்ரீ ரமணர் ஓர் இந்துமத குருவா? அல்லது அவர் உலகில் இதற்குமுன் தோன்றியுள்ள எந்த ஒரு தனிப்பட்ட மதத்தின் கொள்கையையாவது உபதேசிப்பவரா? இவ்வாறெல்லாம் மக்களுக்குக் கேள்வியெழுவதுண்டு. விடையாவது:

சுகத்தை விரும்புகின்றவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்கள் ஸ்ரீ ரமண வழியைப் பின்பற்றலாம். மனிதர்களுள் சுகத்தை விரும்பாதவர்கள் யாராவதுண்டா? மதங்களிற் கூறப்பட்டுள்ள உயர்ந்த குறிக்கோள் கடவுள் எனப்படுவது. அந்தக் கடவுளை ‘இல்லை’ என்று கூறுவோர் கூட, தமக்குச் சுகம் வேண்டாமென்று கூற மாட்டார்கள். ஆகவே நிரீசுவர வாதிகளுங்கூட ஸ்ரீ ரமண வழியால் பரிபூரண சுகமாகிய பயனை யடையலாம். மனித தேகம் பெற்ற எவனும் இதற்கு விலக்கல்ல. ஸ்ரீ ரமணர் ஓர் மதகுருவல்ல. உலகப் பொது நோக்கமாகிய பூரண சுகமடையும் வழியைப் போதிப்பதால் அவர் உலக குரு. உலகிலுள்ள எம்மதச் சம்பிரதாயங்களாலும் தாம் கட்டுப்பாடுறாமல் சகல மனிதர்களுக்கும் பூரண சுகமடையும் வழியைப் போதிப்பதால் அவரே உலக மஹா குரு. அவரிடம் எல்லா மதத்தினரும் வந்து பயனடைந்திருக்கின்றனர். ஒவ்வொரு மதத்தினரும் அவரை ‘எங்கள் மதகுரு இவரே!’ என்று அந்தரங்கத்தில் உணர்ந்து பக்தி செய்கின்றனர். எனவே, ஸ்ரீ ரமண மார்க்கம் அல்லது ஸ்ரீ ரமண வழியை யாதெனக் கவனிப்போம்.

 

Contents