ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

எது சுகம்? (Chapter 2)

Contents

அத்தியாயம்-2.
எது சுகம்?

மனிதா! நீ சுகத்தையடைய விரும்புகிறாயா? நீ அதற்காக முயற்சிக்கிறாயா? அல்லது நீ அதற்கு முயற்சி செய்யத் தகுந்ததொரு வழி வேண்டுமென்றாவது ஆசைப்படுகின்றாயா? அப்படியாயின், நீயே பாக்கியவான்! நீ வாழ்வாய்! வா, வா! இந்த வழியை ஆராய்ந்து பார். இதன் முடிவில் பூரண சுகமடைய முடியுமென்று உனக்கு நம்பிக்கை பிறக்கிறதாவென்று பார். உனக்குச் சரியென்று தோன்றினால் கடைப்பிடி; விடாது உழை: பயனைப் பூரணமாக அடை. பல்வேறு மத நூல்களினால் தோற்றுவிக்கப்படும் சகல சந்தேகங்களையும் அறவே நீக்கக்கூடியதாகிய – பூரண சுக வழியாகிய – இதைக் கேள். உலகுக்கு இன்று ஸ்ரீ ரமணபிரானறைந்த ஞான முரசின் முழக்கத்தைக் கேள்:

அண்ணா மலைநின் றறிவு முரசொலியை
    விண்ணே யதிர, விழியார் விழித்துண்மைக்
    கண்ணே திறக்கக் கருணையால் தானறைந்திம்
    மண்ணே ரமண மகாவடிவில் வந்தருளித்
    தண்ணார் விழியால் தடுத்தாளும் சற்குருவைப்
    பெண்ணே யறிந்துநீ பேரின்ப முற்றுயர்வான்
    பண்ணால் எழுப்பினோம் பாராய்; பகவனருள்
    உண்ணாய்; இனியும் உறங்கேலோ ரெம்பாவாய்.

(ஸ்ரீ ரமண வெம்பாவை 6)

‘சுகம், சுகம்! சுகம் வேண்டும், வேண்டும்! என்று அலைகிறாயே! உழைக்கிறாயே! உனக்குச் ‘சுகம்’ என்றால் என்னவென்று தெரியுமா? சொல்! எது சுகம்? எவ்வளவோ காலமாக நீ எத்தனையோ விதமான சுகங்களை அனுபவித்திருக்கின்றாயல்லவா? இப்போது சொல் சுகம் என்றால் என்னவென்று! பஞ்சேந்திரியங்களின் மூலம் உனக்கு அனுகூலமாகக் கிடைக்கும் அனுபவங்களையே ‘சுகம்’ என்கிறாய். பஞ்சேந்திரியங்களின் மூலம் உனக்கு பிரதிகூலமாகக் (பிடிக்காததாகக்) கிடைக்கும் அனுபவங்களையே ‘துக்கம்’ என்கிறாய்! அல்லவா? இவ்வாறு நீ சுகதுக்கத்தைப் பற்றி மேற்கொண்டிருக்கும் கொள்கை – கருத்து – தவறானது! ஆகையால்தான் அந்தச் சுகத்தை அடையவும், துக்கத்தை விலக்கவும் – உன் கொள்கையின்படி – நீ முயற்சித்த வழிகளெல்லாம் தவறாகிவிட்டன. வழி தவறாகையால்தான், சுகமும் துக்கக் கலப்பின்றி உன்னால் அடையப்படவில்லை. ‘சுகம் துக்கம்’ என்பதைப் பற்றிய உன் கருத்து தவறு என்று சொன்னால், ‘ஏன் தவறு?’ என்று காரணம் காட்டி விளக்க வேண்டாமா? பிறகு ‘எதுதான் சுகம்?’ என்று தீர்மானிக்க வேண்டாமா? அதைக் கேள்!

உன் கருத்துப்படி, ஐம்புலன்(பொறி)களின் அனுபவத்திற்கு வேண்டிய பொருள்கள் கிடைத்திருக்கும்போது சுகமும், அவை இல்லாத போது துக்கமுமல்லவா இருக்க வேண்டும்? பார்? நீ தூங்கும்போது சுகமனுபவிக்கிறாய். அங்கு ஐம்புலன்களின் அனுபவம் ஒன்றுகூட இல்லையே! ஆனால், தூக்கம் (கனவற்ற தூக்கம்) எல்லோருக்கும் சுகமாகவேதான் இருக்கிறது; ஐம்புலன்கள் வேலை செய்யாத போது (உன் கொள்கைப்படி) துக்கமல்லவா இருக்க வேண்டும்? அப்படியில்லையே! அதற்கு மாறாக உடலுணர்வு (அல்லது ஐம்புல அனுபவம்) இல்லாத போது சுகமாகவல்லவா இருக்கிறது! இதற்கு என்ன சொல்வாய்! ஆகவே, பஞ்சேந்திரியங்களின் உதவி இல்லாமலேயே சுகம் அனுபவிக்க முடியும் என்பதை நீ ஒத்துக்கொண்டே யாகவேண்டும்.

மேலும் உன் கொள்கைப்படி பார்த்தால், ‘சுக சாதனங்கள்’ என்று நீ கூறுகின்ற பொருட் செல்வம், மனை, உறவு, உடை, பெண், ஆண், புத்திரன், உறவினர், பண்டங்கள் முதலிய பஞ்சேந்திரியங்களால் அனுபவிக்கப்படுகிற பொருள்களை நிறையச் சேர்த்துக் குவித்த ஒருவன் துக்கமற்றல்லவா இருக்க வேண்டும்? அவைகளைக் கொஞ்சமாகப் பெற்றவனோ, அல்லது அறவே இல்லாதவனோ துக்கமல்லவா அடைய வேண்டும்? ஆனால் உலகிற் பார்க்குமிடத்து அவ்விதமில்லையே! எவ்வளவு பெரிய பணக்காரனுக்கும் துக்கம் அதிகமாகவே இருக்கிறது! சில சமயம் அவனுக்குச் சுகமாகத் தூக்கம்கூட வருவதில்லை. விரல் பெரிதாகவுள்ள அளவிற்கு வீக்கமும் பெரிதாகத்தான் ஆகிறது! சொத்தின்றி, நாள் முழுவதும் உழைத்துவிட்டு, இரவில் உண்டு, தெருத் திண்ணையில் உருண்டு கிடக்கும் ஏழையொருவன் கவலையற்றுத் தூங்குகிறானே! இவைகளையெல்லாம்விட முக்கியமாக நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. தூக்கம் வரும்போது அந்தப் பணக்காரன்கூட, தன் சுகசாதனப்பொருள்களை விட்டுவிட்டே தூக்கத்தில் லயித்து விடுகிறானல்லவா? அவைகளை விட்டுவிட்டும் அவன் சுகமாகத்தானே இருக்கிறான்! ஆகவே, ‘சுகம் பஞ்சேந்திரிய அனுபவங்கள் இல்லாமலேயே பிரகாசிக்கக்கூடிய ஒன்று’ என்பதை நீ ஒத்துக்கொள்ள வேண்டியவனாகிறாய். அது மட்டுமல்ல; வெளியுலக உணர்வற்று நீ தூங்கும்போது சுகம் அனுபவிக்கப்படுவதால், ‘சுகம் உன்னுள்ளேயே இருக்கிறது’ என்றுதான் கூறவேண்டி வருகிறது. அதை வெளிப் பொருள்களிலிருந்து வருவதாக நீ இத்தனை காலமாக எண்ணியிருந்தது தவறு என்று தெரிகிறது. இவ்வுடல் உள்பட யாவும் உனக்கு வேறாக வெளியிலிருக்கும் உலகப்பொருள்களே. தூக்கத்தில் உடல் உள்பட யாவும் மறைந்துபோக, அப்போது சுகம் யாருக்கும் அனுபவமாவதால், உள்ளேதான் சுகம் உள்ளதென்று முடிவாகிறது. உண்மை என்னவென்றால், நீயே சுகமயம்! சுகமே உன் வடிவம்! உன் உடல் வடிவம் நீயல்ல! பரிபூரண சுகமே நீ!

இந்த முடிவுக்கு வேறோரு வழியாகவும் வந்து சேரலாம். இதைக் கவனி!

நீ பல்வேறு பொருள்களைப் பிரியப்படுகிறாயல்லவா? உனக்கு எதனெதன்மேல் பிரியம் உண்டாகிறதோ அதையெல்லாம் சற்று ஆராய்ந்து பார். பார்த்தால், எதிலிருந்தெல்லாம் உனக்குச் சுகம் வருகிறதாகக் கருதுகிறாயோ அதிலெல்லாம்தான் பிரியம் உண்டாகிறது என்று தெரிய வரும். இது பொது விதி; விலக்கற்ற விதி! எங்கே சுகமோ அங்கேதான் பிரியம்!! இதன்படி, உனக்கு எதன் மேல் அதிகப் பிரியம் என்று ஆராய்ந்து சொல். உன் பந்துக்கள், நண்பர், மனைவி, புருஷன், மகன், தாய், தந்தை, வீடு, செல்வம் எல்லாவற்றையும் விட, உண்மையில் உனக்கு உன் மேல்தான் அதிகப் பிரியம் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், இவர்களாலெல்லாம் உண்டாகும் அனுகூலம் அல்லது சுகம் உனக்கே இருப்பதால்தான் உனக்கு அவர்கள் மேல் பிரியமுண்டாகிறது. இவர்களால் (அல்லது இவைகளால்) மற்றவர்களுக்குத்தான் அநுகூலம் என்றும், உனக்கு ஒன்றுமில்லையென்றும் ஏதாவது உணர நேர்ந்தால் உடனே அவைகளின் மேல் இருந்த பிரியம் போய்விடும்! ஆகவே உன் மீது உனக்குள்ள பிரியமே, நீ அவைகளிடம் அன்பு கொள்ளக் காரணம் என்று தெரிகிறது!

சிலர் ‘எனக்கு என்மீது பிரியமில்லை: நான் உலகில் உழைப்பது என் சுகத்திற்காகவல்ல; பர நலத்திற்காகவே உழைக்கிறேன்; வாழ்கின்றேன்; நான் சுகமடைவது சுயநலம்; ஆனால் அதுவல்ல என் நோக்கம். பிறர் சுகமடைவதே என் குறிக்கோள்’ என்று கூறுவதை நீ கேட்டிருக்கலாம். இவர்கள் போதிய ஆராய்ச்சி யற்றவர்க ளாவர்! இவர்கள் செய்யும் பரோபகாரச் செயல்களால் சுகம் இவர்களுக்கே என்பதை இவர்கள் ஆராய்வதில்லை. மேலெழுந்தவாரியான பேச்சு இது! ஆராய்வோம்: ஒருவன் தன் குழந்தையின் பராமரிப்புக்காக, (கல்வி முதலியவற்றிற்காகத்) தன் வாழ்வு முழுவதும் சிரமங்களை ஏற்க முன்வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்படிச் செய்வதால், தன் மகன் அடையும் நலத்தைக் காண்பதால் அவன் திருப்தியடைகிறான். இந்தத் திருப்திக்காகவே அவன் பாடுபட்டான். இந்தத் திருப்தி இவனுக்கேயல்லவா? இதில் ஏற்படும் தன் திருப்தியே அவனது பரோபகாரக் காரணமல்லவா?

அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ஆபிரகாம் லிங்கன் ஒரு முறை, சேற்றில் விழுந்து உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த பன்றி ஒன்றைத் தூக்கியெடுத்துக் காப்பாற்றினார். அப்போது அவரது உடை, உடல் முழுவதும் சேறாகிவிட்டன. அதைக் கண்ட சிலர், ‘ஜனாதிபதியான நீங்கள் இந்த அற்பப் பன்றியைக் காப்பாற்றுவதற்காகச் சேற்றைப் பூசிக் கொண்டீர்களே?’ என்று கேட்கவே, அவர் ‘அந்தப் பன்றியின் துயரம் நீங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும்; அதற்காகக்கூட அல்ல நான் இச்செயலில் ஈடுபட்டது! பின்னர் ஏனென்றால், அது படும் கஷ்டத்தைப் பார்க்க என் மனம் சகிக்க முடியாத வேதனையடைந்தது. என் வேதனையினின்றும் விடுபட்டு, என் மனம் சாந்தி பெறவே நான் இப்படிச் செய்தேன்!’ என்றார். அவர் கூறியதே அனுபவ உண்மை. சகலவிதமான பரநல சேவைகளிலும் மறைவாகப் பொதிந்து கிடப்பது இந்தத் தன் திருப்தியே! தனது சுகமே! இதை மறுக்க வழியில்லை!

‘என்னுடைய மகன், என துறவினர்’ என்ற அபிமானத்தால் அவர்களுக்குச் செய்யும் பரநல சேவை, தன் மீதுள்ள அபிமான காரணத்தால் எப்படித் தன்னலமாகிறதோ அப்படியே, ‘எனது நாடு சுகமடைய வேண்டும்!’ என்னும் தேசாபிமானமும், ‘எனது மொழி’ என்ற பாஷாபிமானமும், மூல காரணமான தேகாபிமானத்தால் மறைமுகமாகத் தனது நலமேயாகும். ‘எனது’ என்ற அபிமானக் கலப்பிலுள்ள ‘தான்’ என்பதே இங்கு கவனிக்க வேண்டியதொன்றாகும். ‘என் மொழி விருத்தியடைய என் உயிரைக் கொடுக்கிறேன்’ என்று எழும்புபவன் தன்மீதுள்ள பிரியத்தாலேயே அப்படிச் செய்கிறான். ‘என் நாடு உய்யவேண்டும்’ என்று வாழ்வைத் தியாகம் பண்ணுகிறவன், அக்காரியத்தால் ஏற்படும் தனது திருப்தியையே விரும்புவதால், அவனும் தன்மீதுள்ள பரமப் பிரியத்தினால்தான் அவ்வாறு செய்கிறான்! இன்னும் சிலர் ‘என் நாடு, என் வீடு என்றில்லை; இவ்வுலகம் முழுவதும் சாந்தி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; தனிப்பட்டதோர் வீடு, நாடல்ல என் குறிக்கோள்; இது பரநல மல்லவா?’ என்று கேட்கலாம். அதுவும் அப்படியேதான்! இவ்வுலகம் முழுவதும் நன்மை பெற்றால்தான் அம் மனிதன் நிம்மதி – சாந்தி – அமைதி பெறுகிறான்! இப்படி அவன் விரும்புவது தன் திருப்தியே – சுகத்தையேதான்! அதனால் பரநல வீரனுக்குங்கூட தன்னிடத்திலேயே தான் அபிமானம் என்பது விளங்குகிறது! இது தன்மீதுள்ள பிரியமே8 ஆகையால், தன்மேல்தான் எவனுக்கும் பரமப்பிரியம் என்ற விதி மறுக்கமுடியாத பெரும் விதி! ஆகவே, உனக்கு மிகமிகப் பிரியமான பொருள் நீயே என்பது துணிபு. உன் மேல்தான் உனக்குப் பரமப் பிரியம் என்ற தீர்மானத்திலிருந்து பார்த்தால், ‘சுகமில்லாதவிடத்துப் பிரியம் தோன்றாது’, என்ற நியதிப்படி, ‘நீயே பரம சுகம் ஆவாய்’ என்று முடிவாகிறது. சுகம் எங்கேயோ அங்கேதான் பிரியம்; உன்னிடத்தில்தான் பரமப் பிரியம் என்றால், நீயேதான் பரம சுகம் என்பது முடிவு. இந்த வழியாக ஆராய்ந்தாலும் நீ சுக வடிவினனேயாகும் என்ற முடிவு வருகிறதல்லவா?

நாம் எப்போதும் எவ்வித விசேஷமுமற்ற நமது இயல்பான சுபாவ நிலையையே விரும்புகிறோம். ஏனெனில் நம் சுபாவ நிலையே சுக நிலை என்பதால்தான். உதாரணமாக, தலைவலி முதலிய நோய்கள் வந்தால் அது நமது இயல்புநிலையல்லவாகையால் அவற்றை நீக்கிவிட்டு எப்போதும் போல் சுகமாயிருக்க விரும்புகிறோம். எனவே, சுகத்துக்கு விசேஷ நிலை காரணமல்ல. இயல்பு நிலையே காரணம். பஞ்சேந்திரியங்களின் மூலம் நுகரப்படும் எவ்வித விசேஷ சுகானுபவ நிலையையும் விட யாதொரு விசேஷமுமில்லாத தூக்கத்தையே எல்லோரும் உண்மையில் விரும்புகின்றனர். பஞ்சேந்திரிய விசேஷங்கள் எப்போதும் ஒருவனுக்குச் சுகத்தைக் கொடுப்பதில்லை. ஓரளவுக்கு மேற்பட்டால் பஞ்சேந்திரியப் போகானுபவங்களின் மேல் விருப்பம் குன்றி எப்போதுமிருந்த நிர்விசேஷாநுபவமான தூக்கத்தைப் பெற விருப்பமுறுவது பலர்க்கும் அநுபவமேயன்றோ?

இந்த உன் சொந்த இயல்பான சொரூபத்தைத்தான் – சுகத்தைத்தான் – உனது தூக்கத்தில் அனுபவித்தாய்! உன் மனமும் அதன் கருவிகளாகிய பஞ்சேந்திரியங்களின் சகாயமும் இல்லாமலேயே நீ தூக்கத்திற் சுகமாயிருந்ததற்குக் காரணம், ‘நீயே சுகம்; உன் நிஜ சொரூப இயல்பே சுகம்’ என்பதுதான்!

‘அப்படியானால் விழிப்புக் காலத்திற் பஞ்சேந்திரிய உதவியாற் கிடைக்கும் அனுபவங்கள் சுகமில்லையா?’ என்றும் நீ கேட்கலாம். சற்றுக் கூர்ந்து ஆராய்க; ஒவ்வொரு இன்பானுபவத்தையும் நீ நல்ல கவனத்தோடு ஆராய வேண்டும். அச்சுகம் உணரப்படும்போது உன்னுள் என்னென்ன மாறுதல்கள் தோன்றுகின்றன, அங்கு என்னென்ன காரியங்கள் நடக்கின்றன என்பதைக் கூர்மையான புத்தியோடு விசாரித்தறிய வேண்டும். ஓர் உதாரணத்துடன் ஆராய்வோம்.

நீ ஒரு லட்டு சாப்பிட எண்ணங் கொள்கிறாய் என்று வைத்துக் கொள். அவ்வெண்ணம் உதித்தவுடன் அதற்கான பொருளைச் சேகரிக்க உழைக்கிறாய். அவைகளைக் கொண்டு லட்டு தயாரித்தடைகிறாய். அதனை இலையிலிட்டு உண்ண ஆரம்பிக்கிறாய். அப்போது சுகமாயிருக்கிறது. இந்தச் சுகம் எப்படி வருகிறதென்று ஆராய்ச்சி செய்தாயானால், அதாவது உண்ணும்போதே தோன்றும் சுகவுணர்வை உள்ளே கவனித்தாயானால் அந்தக் கணத்தில், இத்தனை நேரமாக ‘லட்டு சாப்பிட வேண்டும், வேண்டும்’ என்று எழுந்து அலைவீசிக் கொண்டிருந்த எண்ணம் அடங்கி ஓய்வு பெறுவதைக் காண்பாய்! என்ணம் தாற்காலிகமாகச் சிறிது ஓய்கிறது. லட்டு முடிந்ததும் எண்ணம் மீண்டும் கிளம்பி விடுகிறது. ஆகவே, சுகமும் விலகி விடுகிறது.

சிலர், ‘லட்டு இனிக்கிறது; அதனால்தான் சுகம் உண்டாகிறது; எண்ணம் அடங்குவதாலல்ல; இனிப்பு லட்டுவில் இருப்பதே சுகத்திற்குக் காரணம்’ என்று கூறுவதுண்டு. ஆனால், அது தவறு; தக்க ஆராய்ச்சியற்ற முடிவு. பார்ப்போம்:

‘லட்டு இனிக்கும்; வேம்பு கசக்கும்; புளி புளிக்கும்; உப்பு கரிக்கும்’ என்று இவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் என்னென்ன ருசியுள்ளது என்பதை மட்டுமே நாக்கு என்ற கருவி தெரிவிக்குமே தவிர, அந்த ஓர் சுவை தனக்கு வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ தீர்மானிக்கும் விருப்பு வெறுப்புக்கள் மனதின் தொழில். அச்சுவை கசப்பாயினும், மனம் ‘வேண்டும்’ என்று விரும்பினால், அந்தக் கசப்பிலும் சுகம் தோன்றும். இனிப்பை வெறுப்பவர்களும், கசப்பிற் (பாகற்காயைச் சமைத்துண்பதிற்) சுகம் காண்பவர்களும் உண்டன்றோ? அவ்வாறே, உலர்ந்த மீனை உவந்து உண்போரும், அந் நாற்றத்திற் காற்றாது நான்கு காதம் ஓடுவோரும் உண்டல்லவா?

நேர்த்தியானதோர் அறுசுவையுணவை உண்ணும் போதுங்கூட, சில சமயம் சிலர் மனத்தை வேறெங்கோ செலுத்திக் கொண்டிருந்தால், அப்போது மனம் அவ்வுணவில் விருப்பெண்ண வடிவில் தொழிற் படாதபடி நேர்ந்து விடுகிறது. அப்போது தாம் உண்ட உணவின் சுவையோ, சுகமோ ஒன்றும் உணர முடியாமற் போகிறார்களல்லவா? அவ்வாறே, ருசியற்ற உணவைக் கூட மேற்கூறியவாறு உண்பதால் துக்கமுறாமலும் போகிறார்களல்லவா? மேலும், பசியின் மிகுதியால் உண்டாக்கப்பட்டுள்ள உணவு விருப்பத்தால் உண்ணும்போது, அதே ருசியற்ற உணவும் மிக மிக ருசியாக, அதாவது சுகந்தருவதாகத் தோன்றுகிறதல்லவா? இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், ‘மனத்தின் (விருப்பு வெறுப்பாகிய) எண்ணங்களே சுகத்திற்குக் காரணமே தவிர ருசிகளல்ல’ என்பதே.

கல்லும் உதரக் கடும்பசிக்குக் கஞ்சியொடு

புல்லரிசிக் கூழுமரும் போனகமாம் – தொல்லுலகில்

வேட்கும் விடயவியல் மேற்றன் றதனிடத்து

வேட்கையே யின்ப விளைவு.

(குருவாசகக் கோவை 583)

அவ்வாறு மனத்தில் எழும் எண்ணம் வெறுப்பு எண்ணமாயின் அப் பொருளினது ருசியின் நீக்கத்தால் அவ்வெண்ண அலை குறைகிறது; மனம் அடங்குகிறது. அதனால் சுகம் உண்டாகிறது! அது விருப்பெண்ண மாயின் அது கிடைப்பதால் எண்ண அலை குறைகிறது; அதனால் சுகம் உண்டாகிறது. ஆகவே, எழுந்த எண்ணங்களை ஓய்வுபெற வைப்பதாலேதான் சுகம் உணர்வாகிறது என்பது நன்கு ஆராய்வோர்க்கு விளங்கும். அதனால் அது லட்டோ, வேம்போ எதுவாயினும் பொருட்டல்ல. அதன் மீதுள்ள விருப்பு வெறுப்பாகிய எண்ணத் தோற்றமே துக்கம்; எண்ண ஒடுக்கமே சுகம். அவ்வளவுதான்!

லட்டு சாப்பிடுதல் ருசி என்ற புலனை மட்டும் சம்பந்தித்தது. இவ்வாறே மெய், கண், மூக்கு, செவியாகிய மற்ற நான்கு பொறிகளின் விஷயத்திலும் நடக்கின்றது. தூக்கத்தில் தற்காலிகமாக எண்ணங்கள் அடங்குகின்றன; அதனால் சுகம் அனுபவிக்கப்படுகிறது. ‘விழிப்பு’ என்பது எண்ணங்களின் உற்பத்தி; அதாவது, ‘நான் இத் தேகம்’ என்ற வடிவிலுள்ள முதல் எண்ணத்தின் உற்பத்தி. விழிப்பு வந்தவுடன் தூக்கத்தின் சுகானுபாவம் விட்டுப் போகின்றது. இதிலிருந்து நீ தெரிந்துகொள்ள வேண்டியதென்ன? எண்ணங்களே சுகத்தின் சத்துரு! எண்ணங்கள் ஓயும்போதுதான் சுகம் அனுபவமாகும்! சுகத்தின் மேல் மூடிக் கவிழ்க்கப்பட்ட ஒரு திரையே எண்ணங்கள். எண்ணமாகிய திரை விலகும்போது சுகம் வெளிப்படும். நீயே சுகமயமாவதால், உன் இயல்பாகிய சுகத்தை நீ அனுபவிக்க, உன் எண்ணங்களை விலக்குவது ஒன்று மட்டுமே போதும். இந்த முடிவை (அதாவது, எண்ணமற்ற தூக்க நிலையில் அடையும் சுகத்தை, எண்ணமற்ற விழிப்பு நிலையிலும் அடையலாம் என்ற உண்மையை) நீ உணர்ந்து கொள்.

சுகம் வெளிப் பொருள்களிலிருந்து வருகிறதாக அறியும் அறியாமையால்தான், மனம் வெளிப்பொருள்களையே நோக்கி ஓடுகின்றது. அது உள்ளேதான் இருக்கிறதென்றும், தானே தான் சுகம் என்றும், மேற்கூறியவாறு தக்க ஆராய்ச்சியால் நிரூபிக்கப்பட்டு அத்தீர்மானத்தில் உரம்பட்டு விடுமாயின் பிறகு மனம் வெளியிற் செல்லாமல் தன்னையே நோக்கி ஓடும்; அதாவது, தன்னில் நிற்கும். மனமடங்குவதற்கு இவ் வறிவே முக்கியமானது.

நீ லட்டு புசிக்கும் போது அதன் விருப்பு வடிவ எண்ணம் ஓய, அதனால் உன்னுள்ளேயுள்ள சுகத்தையே நீ அனுபவிக்கிறாயல்லவா? அப்படிச் சுகம் உன்னுள்ளிருந்து (அனுபவத்துக்கு) வருவதை அறியாமல், அது உனக்கு லட்டுவிலிருந்து வருவதாக மயங்கித் தீர்மானிக்கிறாய்! ஆகையால் மீண்டும் மீண்டும் லட்டு தயாரிக்கவும், புசிக்கவும் பாடுபடுகிறாய்! ஆனால், அதுவோ அளவுக்கு மீறினால் விஷமாகி விடுகிறது; உன் உடலைக் கெடுத்து நோயுண்டாக்குகிறது. இவ்வாறே மற்ற நான்கு புலனின்பங்களும் செய்கின்றன. ஓர் கதை கேள்:

ஓர் நாய் சுடுகாட்டிற்குப் போயிற்று. சதைப்பற்று முழுவதும் எரிந்துபோய் மிஞ்சிக் கிடக்கும் கூரிய எலும்பு ஒன்றை அது கவ்விக்கொண்டு வந்தது. அதை வாயிலிட்டுப் பற்களாற் பல முறை கடித்துப் பார்த்தது. எலும்பு நாயின் வாயிற் குத்தி இரத்தம் வடிய ஆரம்பித்தது. இரத்தந் தோய்ந்த அவ்வெலும்பை நாய் கீழே போட்டுப் பார்த்தது. எலும்பின் மேற்புறம் இரத்தம் காணப்படுவதைக் கொண்டு, ‘ஓகோ! கடிக்கக் கடிக்க எலும்பினுள்ளிருந்தே இரத்தம் வருகிறது’ என்று நினைத்து, அவ்விரத்தத்தை நக்கிக் குடித்தது. மறுபடியும் வாயிலிட்டு முன்னிலும் பன்மடங்கு அதிகப் பிரயாசையோடு கடித்தது. அதன் வாயில் மேலும் புண்கள் உண்டாகி இரத்தம் எலும்பின் மேற் பெருகிற்று. கீழே போட்டு இரத்தத்தைக் குடிப்பதும், கடிப்பதுமாக அந்த நாய் வேலை செய்துகொண்டிருந்தது! உண்மையில் இரத்தம் எலும்பிலிருந்து வரவில்லை; தன் வாயினின்றே வருகிறது என்பதை அந்த நாய் உணரவில்லை!!

வறட்டெலும்பு கவ்வித்தன் வாய்நனிபுண் ணாகப்

பறட்டுப் பறட்டெனத்தன் பல்லாற் — கறித்துமகிழ்ந்

தென்புபோ லின்சுவைவே றின்றெனவப் புண்ணீராற்

புன்புலநாய் போற்றும் புகழ்ந்து.

(குருவாசகக் கோவை 585)

இது போலவே, மனிதன் வெளிப்பொருள்களை அனுபவிக்கும்போது தன்னுளுள்ள சுகத்தையே சிறிது பெறுகிறான். ஆனால் அறியாமையால், அப் பொருள்களிலிருந்தே சுகம் வருவதாகக் கருதுகிறான்! கதையிற் கண்ட நாயைப் போல நடந்து கொள்கிறான்!! அதனால், மீண்டும் மீண்டும் எலும்பையே கடித்த நாயைப் போல, மீண்டும் மீண்டும் வெளிப்பொருள்களைத் தேடுவதிலேயே, அதற்காக உழைப்பதிலேயே வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறான்! அந்தோ! அதன் பயனாக என்ன விளைகிறது? கணக்கற்ற துன்பக் குவியலும், அதனிடையிடையே ஏதோ சிறு சிறு துளியளவு சுகவுணர்வுகளுமே மிச்சம்! இதுவே அறியாமை அல்லது மாயை!!

உலக சரித்திரம் கூறுகின்ற கற்கால மனிதர்களிலிருந்து, தற்கால அணுவாராய்ச்சியாளர்கள் வரை உண்டான மனித சமூகம், அறிவுத் துறையில் ஆராய்ந்தாராய்ந்து உழைத்த பாடுகளெல்லாம், திரும்பத் திரும்ப எலும்பைக் கடித்த நாயின் முயற்சியே யாயிற்றல்லவா? இப்படிச் சொல்வதால் வருந்தாதே; ஒளிக்காமற் சொல்லப்பட்டால் உண்மை யிதுவே! ஏனெனில், வெளிப்பொருள்களாகின்ற பஞ்சேந்திரிய சுக சாதனங்களைத் திரட்டுவதைத் தவிர, இன்று உலகிற் காணப்படும் முன்னேற்றம் வேறென்ன நிகழ்ந்திருக்கிறது? சொல்! உலகின் இத்தனை வித முயற்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தாவது, ‘சுகம் வெளிப்பொருள்களிருந்து வருகிறது’ என்ற தப்புக் கொள்கையேதான்! வேறொன்றுமில்லை!! ‘எலும்பிலிருந்துதான் இரத்தம் வருகிறது’ என்று எண்ணிய நாய்க்கும், இகத்தின் பாக்கியங்களாகிய வெளிப்பொருள்களைப் பெருக்கிக் குவிக்கும் நவீன பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சி முன்னேற்றத்தால்தான் உலகம் சுகமடையும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? சொல்! ஒன்றுமேயில்லையன்றோ!

ஆகையால் மனித சமூகம் வழிதவறி, சுகத்தையடைவதற்கு எவ்வழியில் முயற்சிக்க வேண்டுமென்று தெரியாமல், தவறான வழிகளில் மிக விரைந்து வெகுதூரம் சென்று விட்டது; சென்றுகொண்டே யிருக்கிறது! உலக மக்கள் சுக நாட்டம் உடையவர்களாயிருப்பது தவறல்ல. அது மனிதனின் உரிமை. சுக விருப்பம் என்பது ஜீவவுரிமை; அது அடையப்பட்டேயாக வேண்டும்! அதைத் தடுக்காதே! ஆனால், சுகத்தின் ஒரு திவலையை மட்டும் அனுபவிக்கின்றதாகிய சிற்றின்ப போக்கியப் பொருள்களைத் தேடியுழைக்காதே. சுகத்தை முழுவதும் அனுபவிக்கவே பாடுபடு. அற்பப் பொருள்களை விரும்புவதால் நீடித்திராத, அளவிற் குறைந்த சுகத்தையே யடைகிறாய். ஆகவே, அற்ப காமனாய் இராதே! பூரண காமனாவாயாக! அதாவது, பரிபூரண சுகத்தைப் பெற்றாலொழிய முயற்சியை விடாதே. உன்னுள்ளே, உனது இயல்பாகவே இருந்து (ஸத்) விளங்கிக்கொண்டிருக்கும் (சித்) நீயாகிய சுகத்தை(ஆனந்தத்தை)த் தடையில்லாமல் எப்போதும் அனுபவிக்கும் வழியைக் கற்றுக்கொள்; இதுவே புருஷார்த்தம் – பிறவிப் பயன்!

8 இவ்வாறு முடிவு கூறுவதால், ‘சுயநலம்’ என்ற கீழ்க்குணத்தை ஆதரிப்பதாக வாசகர்கள் தவறான முடிவுக்கு வரவேண்டியதில்லை. ‘சுயநலம்’ என்ற பதம் இன்று வரையிலும் ஓர் தப்பான, கீழ்க்குணத்தையே குறிக்கும் சொல்லாக மக்களால் கையாளப்பட்டு வந்திருக்கிறது. ஏனெனில், ‘சுயம்’ என்ற சொல்லுக்கு உடம்பையே பொருளாகக் கொள்ளப்பட்ட தவறால்தான், ‘சுயநலம்’ ஒர் கீழ்மைக் குணமாயிற்று. ஞானி ஒருவனுக்கோ சுயம் (ஸ்வ) என்ற சொல்லின் உண்மையானது அகில சராசரமும் தானேயாகிய அனுபவமாதலால், அவனது அனுபவத்தையே தீர்ப்பாகக் கொண்டு பார்த்தால், ‘சுய நலம்’ என்பது ஓர் கீழ்க் குணமல்லவென்று விளங்கும். அதாவது அனைத்தும் தானேயாக விளங்கும். ஞானியினது சுயநலமே, இதுகாறும் மக்கள் போற்றி வருகிற உண்மையான பரநலத்தின் லக்ஷணமாகும் என்று விளங்கும். ஆன்ம ஞானி ஒருவனே சரியான பரநலன்! நமது நிஜ ஸ்வரூபமான அஸ்தி, பாதி, பிரியம் (ஸத்-சித்-ஆனந்தம்) என்ற மூன்றினுள் ஒன்றாகிய ‘பிரிய’ ரூபமே மேற்கூறியவாறு ஒவ்வொருவருள்ளும் விளங்குவதால் தற்பிரியத்தில் ஆச்சரியம் ஒன்றுமில்லை; இது தப்புமல்ல. ஆனால், நமது இந்த அகண்ட பிரிய ரூபத்தை அற்ப உடலளவாகக் குறுக்கி உணர்வதுதான் பெருந்தவறு. அதனால்தான் ‘சுய நலம்’ என்பது ஓர் கீழ்மைக் குணமாகக் கருதப்பட்டு விட்டது. ‘ஸ்வாத்மப் பிரியமே’ பரம சத்தியம் என்று நிரூபிக்கவே இவ்வாறு ஆராயப்பட்டது.

 

Contents