ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

தன்னை ஆராய்வதே சுகமடையும் வழி (Chapter 3)

Contents

அத்தியாயம்-3.

தன்னை ஆராய்வதே சுகமடையும் வழி.

அங்ஙனமாயின் ‘சுகம் நானே’ என்று முடிவாகிறது. சரி; அந்தச் சுகத்தை எப்படி யடைவது? அதிலும் நிரந்தரமாக அதை யடைவதெப்படி என்று பார்ப்போம். எண்ணமற்ற விடம் சுகம் என்பதே சுகத்தின் இலக்கணம். போக்கிய வெளிப்பொருள்களின் அனுபவத்தாலும் எண்ணமற்ற நிலை சிறிது பொழுது எய்தப் பெற்றுச் சுகம் அனுபவிக்கப் படுகிறதென்றாலும், வெளிப்பொருள்களின் சம்பந்தத்தாற் கிடைக்கும் எண்ணமற்ற நிலை நீடித்திராது. ஆகையால், பஞ்சேந்திரியங்களின் உதவியால் எண்ணமற்ற இன்ப நிலையைச் சாசுவதமாக எய்த முடியாது என்று தெரிகிறது.

மற்றும், தூக்கம் ஒரு சுகானுபவமென்று கண்டோமல்லவா? அந்தத் தூக்கமே மனித லட்சியமாவென்றால் அதுவுமல்ல. ஏனெனில், அதுவும் தாற்காலிகமானதே; தூக்க சுகமானது விழிப்பால் தடைபடுகிறது; நீங்குகிறது. ஒருவன் எப்போதும் தூங்கிக்கொண்டேயிருக்க முடிவதில்லை. அவனது பூர்வ வாசனைகள் (எண்ணங்கள்) எழும்பி அவனை விழிக்க வைத்துவிடும். மனமானது பகல் முழுவதும் தேகத்தைச் சேர்த்துக்கொண்டு ஓயாமல் உழைக்கின்றது. உழைப்பின் முடிவில் அதற்கு ஓய்வு வேண்டியிருக்கிறது. ஏனெனில், மறுபடியும் தீவிரமாக உழைப்பதற்கே அவ்வோய்வு வேண்டியிருக்கிறது. அதனால்தான் எண்ணங்களாகிய மனம் தூக்கத்தில் தானே அடங்கி விடுகிறது. தாற்காலிகமாக வந்து ஓய்வெடுத்துக்கொள்ளும் மனம் மீண்டும் ஊக்கத்தோடு கிளம்பும்; கிளம்பாமலிருக்க முடியாது. மழையில் நனைவதற்கு ஆற்றாமல் வழியிற் போகும் ஒருவன் ஏதோ ஓர் வீட்டின் தாழ்வாரத்திற் சற்று ஒதுங்கி நிற்கிறான். அதனால் அவன் அங்கேயே யிருந்துவிடுபவனல்ல. பிறகு, வெளிப்பட்டு நடந்து செல்வான். அது போன்றே மனமும் சற்று லயமடைகிறது, தூங்குகிறது. பிறகு, அது கிளம்பித் தொழில் புரிகிற நிலையை ‘விழிப்பு’ என்றோ அல்லது ‘கனவு’ என்றோ பெயரிடலாம். ஆகவே, தூக்கத்தில் எவனும் சாசுவதமாக இருக்க முடியாது. எனில், தூக்கமும் அநித்திய சுகமேயாகும். இரண்டு விருத்திகள் அல்லது விழிப்பு நிலைகளுக்கிடைப்பட்டதாயும்9 தூக்கம் என்ற பெயரால் அழைக்கப் படுவதாயுமுள்ள இந்நிலையில் மற்றொரு குறைபாடும் இருக்கிறது. அதாவது, தூக்கத்தில் மனமாகிய அறிவு தனதுண்மை விளக்கத்தைப் பெறாமல் (தன் ஒளியுரு ஓராமல்) இருளில் ஒடுங்குகிறது. தன் அறிவின்10 விளக்கத்துக்குக் கேடில்லாமல் அது அடங்குமாறு செய்ய வேண்டும். ஆகையால், ஒரு குறையும் அற்ற பூரண சுகமாகாது தூக்கம். பின்னர் அதை எப்படித்தான் அடைவது என்று கேட்கலாம். அதற்கு ஸ்ரீ பகவான் அருளும் விடை வருமாறு:

இலயமு நாச மிரண்டா மொடுக்கம்

இலயித் துளதெழும் உந்தீபற

எழாதுரு மாய்ந்ததேல் உந்தீபற.

(உபதேச வுந்தியார் 13)

மனம் இரண்டு விதமாக ஒடுங்கும். அது தாற்காலிகமாக ஒடுங்கும் நிலைக்கு ‘மனோலயம்’ என்ற பெயர். லயமானால் அது மறுபடியும் தக்க காலத்தில் வெளிக்கிளம்பும். இரண்டாவது விதமாவது ‘மனோ நாசம்’ என்பது. இந்த வகையில் மனம் நசித்துவிடும்: பிறகு எக்காரணத்தை முன்னிட்டும் திரும்பாது. அது இறந்துவிட்டது. அதனால் மீண்டும் துக்கவுற்பத்தியே கிடையாது. எனவே, இரண்டாவது முறையாகிய மனோ நாசத்தால் எய்தப்பெறும் சுகத்திற்கு அழிவில்லை. இதுவே குலையாத சுகம் அல்லது பேரின்பம்.

விழிப்புக் காலத்தில், பஞ்சேந்திரியங்களின் அனுபவத்தில் மனம் மிகமிகச் சொற்ப காலமே லயப்படுகிறது. தூக்கத்தில் அதைவிடச் சற்று அதிகமாக 11 (அதிக நேரம்) லயமாகிறது. மரணத்திலும் மனம் இப்படி லயத்தை மட்டுமே பெறுகிறது. இவை யாவும் மனோலயமே; மனோ நாசமல்ல. துக்கமானது (மனமானது) லயித்தால் மட்டும் போதாது; துக்கம் நாசமாக்கப்பட வேண்டும். அதுதான் மனித லக்ஷியம். மனதின் லயம் துக்கத்தின் லயம்; மனதின் நாசமே துக்கத்தின் நாசம்; அதாவது மனமே துக்க ரூபம்! ஆகவே, மனதின் நாசத்திற்குச் செய்யவேண்டிய காரியமென்னவென்று கவனிப்போம்.

மனம் என்பது என்னவென்று கேட்குமிடத்து ‘எண்ணங்களே மனம்’ என்று பகவான் தீர்ப்பளிக்கின்றார். எண்ணங்களையெல்லாம் நீக்கிவிட்டு மனம் எப்படி யிருக்கிறதென்று கவனித்தால், அங்கு ‘மனம்’ என்று ஒரு பொருளுமில்லையென்பது தெரியவரும்.

மனத்தி னுருவை மறவா துசாவ

மனமென வொன்றிலை யுந்தீபற

மார்க்கம்நேர் ஆர்க்குமி துந்தீபற.

(உபதேச வுந்தியார் 17)

மனதையொழிப்பதற்கு எண்ணங்களைக் களைவதே போதுமாகையால், எண்ணங்களைச் சற்று ஆராய்வோம். இவ்வாராய்ச்சி வீண் பொழுதுபோக்கல்ல. உலகமே சுகத்திற்காகத்தான் பாடுபடுகிறதல்லவா? இவ்வாராய்ச்சியும் அந்தச் சுகத்திற்காகத்தான் செய்கிறோம். பின்னர் உலகத்தாரின் முயற்சிக்கும், ஆன்ம சாதகன் ஒருவனது இவ்வாராய்ச்சிக்கும் வித்தியாசமென்னவென்றால், உலக மக்களின் முயற்சியோ (ஆராய்ச்சியோ) அற்ப சுகத்துக்கே வழியாகிறது; இவ்வாராய்ச்சியோ அபரிமிதமானதும் சம்பூரணமானதுமான மகா சுகத்திற்கு வழியாகிறது. ஆகையால் இவ்வாராய்ச்சி உலகத்தாரின் முயற்சி யாவற்றிலும் அதிக முக்கியமானது! இவ்வாராய்ச்சியில் முழு முயற்சியுடனும் அதிகக் கவனத்துடனு மிருக்கவேண்டும். அப்படி யிருப்போமாயின், ஆராய்ச்சியின் பயன் – வாழ்வின் பெரும் பயனாகிய புருஷார்த்தம் – அக்கணமே கைமேற் பலனாகக் கிடைத்துவிடும். இது ஸ்ரீ ரமண பகவானது அனுபவவுண்மை!

‘எண்ணங்களை ஆராய்வோ’மென ஆரம்பித்தோமல்லவா? ஏன் ஆராய்கிறோம்? எண்ணங்களையொழித்து அதனாற் சுகத்தையடைவதற்காகவே ஆராய்கிறோம். நமக்கு எண்ணங்கள் பலகோடி எழுகின்றன. ஆனால், அவற்றுள் எல்லா வெண்ணங்களுக்கும் மூலமான முதல் எண்ணம் எதுவென்று ஆராய்ந்து காண வேண்டும். ஆராயுமிடத்து, தூக்கத்திலிருந்து முதலிலெழுந்து ‘நான் இத்தேகம்’ என்ற வடிவிலுள்ள தன்மை யெண்ணமே முதலெண்ணம் என்றறிய வரும். ‘நான்’ என்னும் இவ்வெண்ணமே எல்லா வெண்ணங்களுக்கும் ஆணி வேர்.

எண்ணங்க ளேமனம் யாவினு நானெனு

மெண்ணமே மூலமா முந்தீபற

யானா மனமென லுந்தீபற.

(உபதேச வுந்தியார் 18)

தன்மை (first person), முன்னிலை (second person), படர்க்கை (third person) என்னும் இட வேற்றுமை மூன்றினுள் தன்மையிடமே, ‘நான்’ என்பதே முதலானது. தன்மை யெழாதபோது முன்னிலை-படர்க்கைகள் இரா. ‘நான்’ என்ற எண்ணமே தன்மை, இதுவே மனம். இது எழுந்த பிறகுதான் நீ, அது, அவன், அவள் ஆகிய முன்னிலை-படர்க்கைகள் எழுகின்றன. உலகம் என்பது முன்னிலை-படர்க்கைகளாகிய இவ்விரண்டுதான். தூக்கத்தில் ‘நான் தேகம்’ என்ற இத்தன்மை யுணர்வில்லை; அதனால்தான் முன்னிலை-படர்க்கைகளாகிய உலகமும் அங்கில்லை.

தன்மையுண்டேல் முன்னிலை படர்க்கைகள் தாமுளவாம்

(உள்ளது நாற்பது 14)

இன்றக மெனுநினை வெனில்பிற வொன்று மின்று

(அருணாசல அஷ்டகம் 7)

எல்லா எண்ணங்களுக்கும் மூலமான ‘நான்’ என்னும் இவ்வெண்ணத்தை எழாமல் தடுத்தால், மற்ற எல்லா எண்ணங்களும் தடுக்கப்பட்டனவேயாகும். ஒரு மரத்திலுள்ள நூற்றுக்கணக்கான சிறு கிளைகளை, இலைகளையெல்லாம் வெட்டித்தள்ள விரும்பும் ஒருவன், அதன் அடிமரத்தை வெட்டினாற் போதும்; கிளை, இலைகளெல்லாம் வீழ்த்தப்பட்டனவேயாகுமல்லவா? அது போன்றே, கோடிக்கணக்கான எண்ணங்கள் யாவற்றையும் அழிக்க முயலும் ஒருவன் அவற்றிற்கு மூலமான ‘நான்’ என்னும் எண்ணத்தை அழித்தால் எல்லா எண்ணங்களையும் அழித்தவனாவான். ‘எண்ணங்களை ஆராய்வோம்’ என்று ஆரம்பித்தோமல்லவா? மேற்கண்ட தீர்மானத்தால், இனியும் ஒவ்வொரு எண்ணமாக ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டியதில்லை என்றறிகிறோம். எல்லா எண்ணங்களுக்கும் மூலமான ‘நான்’ என்ற ஓரெண்ணத்தை மட்டும் ஆராய்ந்தாலே போதும்.

‘எண்ணங்களையெல்லாம் ஒழித்தாலல்லவா சுகம் கிடைக்கும்? அப்படியிருக்க, எண்ணங்களை ஆராய்வானேன்? அது வீண் வேலையல்லவா?’ என்று சிலர் கேட்பதுண்டு. ‘குப்பையைக் கூட்டித் தள்ளவேண்டிய ஒருவன், அவற்றை ஆராய்வதாற் பயனில்லை’ என்ற பகவானது ஓர் அருள்வாக்கையுங் காட்டிக் கேட்பதுண்டு! இது பகவானது உபதேசங்களைச் சரிவர விளங்கிக்கொள்ளாத குறையேயாகும். எவ்வாறெனில். முன்னிலை-படர்க்கையால் எண்ணங்களை எவ்வளவு ஆராயினும் பெருகுமே தவிர குறையாது. ‘தன்னை மறைத்துக் கொண்டிருக்கும்12 தத்துவங்களைப் (தானல்லாத முன்னிலை--படர்க்கைகளைப்) பற்றிய பல்வேறு சுபாவங்களை ஆராய்வது வீண்’ என்றே பகவான் கூறினாரே தவிர, தன்னை ஆராய்வதை (தன்மையை ஆராய்வதை) வீணென்று தள்ளிவிடச் சொல்லவில்லை! மேலும் இந்த ‘நான்’ என்ற தன்மை எண்ணத்திற்கு ஒரு தனியான குணமுண்டு. அதாவது, அது எதுவென்று அதன்மேல் நாட்டம் திரும்பினால் அது பதுங்கும் குணமுடையது. முன்னிலை-படர்க்கை எண்ணங்களின் மேல் நாட்டம் செல்லச் செல்ல அவை விரியும் குணமுடையன. ஓர் சினிமாப் படத்திரையை யந்திரத்தி(projector) னின்றும் முன்னே தள்ளத் தள்ள படங்களின் உருவம் விரிந்துகொண்டே போவதும், ஒளி மூலமாகிய யந்திரத்திற்கு அருகில் தள்ளத் தள்ள படங்களின் உருவம் ஒரு புள்ளியளவாக ஒடுங்கி விடுவதும் போலவே மனத்தின் நாட்டம் முன்னிலை-படர்க்கைகளின் மேற் செல்லச் செல்ல உலகச் சித்திரங்கள் (எண்ணங்கள்) விரிகின்றன. மனத்தின் ஒளி மூலத்திற்கு (தன்னை நோக்கி) நாட்டம் திரும்பினால். முதலெண்ணமாகிய மனமே ஒடுங்குகிறது. இதன் விளக்கத்தைப் பின்வரும் ஆன்ம விசாரச் செய்முறை அத்தியாயங்களிற் காண்போம்.

ஊனா ருடலிதுவே நானாம் எனும் நினைவே

நானா நினைவுகள் சேர் ஓர்நார் எனும் அதனால்

நானா ரிடம் எதென்றுட் போனால் நினைவுகள் போய்

நானான் எனக்குகையுள் தானாய்த் திகழுமான்மா....

(ஆன்ம வித்தைக் கீர்த்தனம் 2)

நூலை அறுத்து விட்டால் அதில் கோர்க்கப்பட்டிருந்த மணிகளெல்லாம் உதிர்ந்து போவதைப் போல, எண்ணங்களையெல்லாம் ஒடுக்குவதற்கு விரும்பும் நாம், முன்னிலை- படர்க்கைகளாகிய அவ்விதர எண்ணங்கள் ஒவ்வொன்றினுள்ளும் மணிகளிற் சரடுபோல ஊடுருவி நின்று அவ் வெண்ணங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் ‘நான்’ என்னும் தன்மை எண்ணத்தை ஆராய்ந்தால் (ஒடுக்கும் வழியில் முயன்றால்). முன்னிலை-படர்க்கைகள் முயற்சியின்றியே முடிவுற்றொழியும்.

தன்மையின் உண்மையைத் தானாய்ந்து — தன்மையறின்

முன்னிலை படர்க்கை முடிவுற்று...

(உள்ளது நாற்பது 14)

இவ்வாறு தன்மை எண்ணத்தை அழிக்கும் வழியே இதர எண்ண ஒழிப்பு முறையுமாகிறது. ஆகவே. தன்மையை ஒழிப்பதே முக்கியம். அதை ஒழிக்க அதை ஆய்வது ஒன்றே வழி! வேறு வழியேயில்லை!!

நானுதிக்குந் தானமதை நாடாம – னானுதியாத்

தன்னிழப்பைச் சார்வதெவன்...

(உள்ளது நாற்பது 27)

சரணாகதியான பக்தி மார்க்கத்திலும், தன்மையின் பயனில்லாத் தன்மையை (ஆய்ந்து) உணர்ந்தே இறைவனிடம் சரணடைவதால் (அதாவது அகந்தைத் தன்மையின் இன்மையைத் தானாய்ந்தோ அல்லது ஆன்மத் தன்மையின் உண்மையைத் தானாய்ந்தோ) தன்மை யறுக்கப்படுகிறது; இறைவனிடம் ஒப்படைக்கப்படுகிறது! எனவே, இந்த ‘நான்’ என்னும் தன்மை எண்ணத்தை மட்டுமே விசாரிப்பது அவசியமாகிறது. இது விசாரத்தால் எப்படி நீங்குகிறதென்பதைப் பின்வரும் ஆன்ம விசார அத்தியாயத்திற் கவனிப்போம்.

9 ‘தூக்கம்’ என்று இழிவாக அனைவராலும் கருதப்படும் இந்நிலையின் உண்மை இயல்பைப் பற்றி மஹானுபவியான பகவான் அருளும் விளக்கம் இதற்கு முற்றிலும் மாறானது. அது, பிறகு எட்டாவது அத்தியாயத்தில் தரப்படும். அதுவரை இத்தூக்கம் சாமானியர்களின் கருத்துப்படியே குறைபாடுள்ளதோர் தாழ்ந்த நிலையாகவே கொள்ளப்படட்டும்.

10 தூக்கத்தில் அறிவின் விளக்கமென்றது தன் இருப்புணர்வின் விளக்கம்.

11 அதிக நேரம் என்று இப்போது கொள்வோம். நேரம் என்பதும் மனக் கற்பனையேயாதலின் அதன் தீர்க்கம் க்ஷணிகமென்ற அளவும் ஆராயுங்கால் நிற்காது.

வினாவிடுகேள் விக்கு விடையிறுக்கு மாற்றாற்

கனாநொடியாத் தோன்றிக் கழிய – நனாநெடிதா

மன்னலாக் கூறுமறு மாற்ற மனமாயைத்

துன்னலாற் போந்தவினைச் சூது.

(குருவாசகக் கோவை 560)

12 ‘ராமகிருஷ்ண அமுதமொழிகள்’ என்ற நூலின், இரண்டாம் பாகம், 63, 75 முதலிய பக்கங்களில் ராமகிருஷ்ணர் ‘விசாரம்’ என்ற பதத்தாற் குறிப்பிடுவது இந்த அநாத்ம தத்துவ ஆராய்ச்சியையேயாகும்.

 

Contents