ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

செய்முறை (Chapter 8)

Contents

அத்தியாயம்-8.
செய்முறை

‘இது பிரம்மானுபவத்தைத் தரக்கூடிய ஆத்ம விசார சாதனை’ என்றுகூட முன்கூட்டி யாதொன்றும் அறிந்திராத இளம் பிராயத்திலேயே பகவான் ஸ்ரீ ரமணர் இவ்வரிய சாதனையில் தாமாகவே ஓர் நாள் ஈடுபட நேர்ந்தது! அன்று தாம் இறக்கப்போவது போன்ற மரண பயம் அவருக்குத் திடீரெனத் தோன்றிற்று. அதனால் மரணத்தைப் பற்றிய ஆராய்ச்சியும் தாமாகவே உதிக்கலாயிற்று. வந்துகொண்டிருக்கும் மரணத்தைக் கண்டு அவர் கலக்கமடையவில்லை! பிறரிடம் கூறவும் கிளம்பவில்லை! அதை அமைதியாக வரவேற்றுத் தனக்குத்தானே முடிவு காணத் துணிந்தார். உடலைப் பிணமாகவே காணப்படும்படிக் கைகால்களை நீட்டிப் படுத்துக்கொண்டு மரணத்தை நேருக்கு நேரே அனுபவத்தில் ஆராயலானார். ஆத்ம விசாரச் செய்முறையை சற்குரு மூர்த்தியின் அனுபவப்படியே வாசகர்கள் அறிய வேண்டியதே முதன்மையானதாகையால், இவ்வனுபவத்தைப் பற்றி பகவானே பிற்காலத்திற் கூறியதை அவரது அருள்வாக்கின்படியே கீழே காண்போம்.

சரி; மரணம் வந்துவிட்டது! ‘சாவு’ என்றால் என்ன? சாவது எது? இவ்வுடல் சாகப் போகிறது; சாகட்டும் என்று தீர்மானித்து, உதடுகளை இறுக மூடிக்கொண்டு, பேச்சு மூச்சற்றப் பிணம்போல் இருந்துகொண்டு கவனித்த போது, உள்ளே கீழ்க்கண்டவாறு தோன்றிற்று: ‘இவ்வுடல் செத்துவிட்டது. இனி இதை மயானத்திற்கு எடுத்துச்சென்று எரித்துவிடுவர்; இது சாம்பலாகி விடும்; சரி; இவ்வுடலின் அழிவோடு நானும் அழிந்து விட்டேனா? இவ்வுடல்தான் நானா? இவ்வுடல் பேச்சு மூச்சற்றுப் பிணமாய்க் கிடக்கிறது எனினும், இம்மரணத்தால் சிறிதும் தடைபடாமல் “நான்” இருக்கிறேனே! எனது இருப்பு தடையின்றி நன்றாய் விளங்கிக் கொண்டிருக்கிறதே! ஆகவே, மரிக்கும் இவ்வுடலல்ல நான்! நான் அழிவற்ற நானே(ஆன்மாவே)!! நான் ஒன்றே அனைத்தினும் உண்மையான பொருள்! இவ்வுடலோ சாவுக்குரியது; இவ்வுடலைக் கடந்த நான் நித்திய வாழ்வினன்! வந்த இதன் மரணமும் என்னைத் தீண்ட முடியவில்லை!’ என்று நிதரிசனமாக விளங்கிற்று. முதலில் எழுந்த மரண பயமும் அதோடு என்றென்றும் திரும்பாமல் மறைந்தொழிந்தது! இவை யாவும் வெறும் சிந்தனையாக இல்லாமல் நேருணர்வாகவே (பிரத்தியட்சமாகவே) அனுபவமாயிற்று! அப்போதிலிருந்து உடல் கடந்த என் இருப்புணர்வு (சத்-சித்) என்றும் ஒரே தன்மையாய் இருந்து வரலாயிற்று.

என்றருளினர்.

இவ்வளவும் பிற்காலத்தில் பகவான் மேற்கண்டபடி பல வாக்கியங்களாக நம்மிடையே கூறினாலும், ‘இவ்வளவும் ஒரே நொடிப் போதில் வாக்கு மனங்களின் செயலின்றிப் பிரத்தியட்ச அனுபவமாக நடந்து முடிந்துவிட்டது’ என்பதை வலியுறுத்திக் கூறினர்.

இம் மரண பயத்தைக் காரணமாகக் கொண்டு அவரது கவனம் ‘தன் இருப்பு எது? மரணம் அடைவது எது?’ என்று காணும் தன்மை நாட்டத்தில் ஆழ்ந்து ஊன்றியது. ஸ்ரீ பகவான் மேற்கொண்டதான கவனம் தன்னுள் ஆழ்ந்து ஊன்றும் இதையே ‘விசாரம்’ என்று நாம் மேலே கூறிவந்த கருத்தையே பகவான் ‘நான் யார்?’ என்ற நூலில்,

சதாகாலமும் மனத்தை ஆத்மாவில் [தன்மையுணர்வில்] வைத்திருப்பதற்குத்தான் ஆத்ம விசாரம் என்று பெயர். என்றும், ஆன்மசிந்தனையைத் தவிர [தற்கவனத்தைத் தவிர], [முன்னிலை- படர்க்கைகளாகிய] வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றும் இடங்கொடாமல் ஆத்ம நிஷ்டாபரனாயிருப்பதே தன்னை ஈசனுக்களிப்பதாம் [தன்னை ஈசனுக்களிக்கும் 51பரபக்தி என்று பெயர்].

என்றும் கூறினர். சதாகாலமும் இவ்வாறு தன்னுணர்வைப் பற்றுவதற்கு உபாயமான செய்முறை என்னவென்று கேட்கப்பட்டபோது, பகவான் இளமையில் தாம் மேற்கொண்ட, முன் சொல்லப்பட்ட ஆத்ம விசாரச் செய்முறையையே சற்று விளக்கமாகக் கீழ்க்கண்டவாறு தமது உபதேச நூல்களில் அருள்கின்றார்:

ஆன்மா தானே தானாய் ‘இருக்கிறேன்’ என்ற வடிவில் விளங்கிக்கொண்டிருக்கும் சுயம் பிரகாசம். அதை (ஜோதி, நாதம்) இப்படி, அப்படி என்று ஒன்றும் பாவிக்க வேண்டாம். பாவிக்கும் நினைப்பே பந்தம். ஆன்மா இருட்டோ, பிரகாசமோ அல்லாத (பிரக்ஞை வடிவான) தேஜஸ் ஆனபடியாலே, அதை எவ்விதப் பிரகாசமென்றும் பாவிக்க வேண்டாம். அந்நினைப்பே ஒரு பந்தமாய் முடியும். (முதல் நினைவு வடிவான) அகந்தை உருவழிதலே முக்தி; ‘தேகம் நான்’ என்ற உணர்வில் பஞ்சகோச ரூபமான மூன்று தேகங்களும் அடங்கிவிட்டன; ஆகையால் ‘இந்த நான் யா’ரென்ற (தன்னாட்டத்தால்) விசாரத்தால் இது ஒன்று நீக்கப்பட்டாலே எல்லாம் தாமே நீங்கிவிடும். இதைப் பற்றியே மற்ற (சூட்சும, காரண) தேகங்களிலும் அபிமானம் ஜீவித்திருப்பதால், தனித்தனியே நீக்கத் தேவையில்லை.

விசாரிப்பது எப்படி என்றால், கட்டை முதலிய போலும் ஜடமான இச்சரீரம் ‘நான்’ என்று ஸ்புரித்து வழங்கிவருமா? வராதே.

நானென்றித் தேகம் நவிலாது.....

(உள்ளது நாற்பது- 23)

ஆதலால், பிணமான இத்தேகத்தைப் பிணம் போலவே இருத்தி, வாக்காலும் நானென்று சொல்லாமல் இருந்து,

...பிணம்போல் – தீர்ந்துடலம்

நானென்று வாயால் நவிலாதுள் ளாழ்மனத்தால்

நானென்றெங் குந்துமென நாடுதலே – ஞானநெறி

(உள்ளது நாற்பது 29)

இப்போது நான் என விளங்கும் உணர்வு எது எனக் கூர்மையாகக் கவனித்தால், அப்போது இதயத்தில் ‘நான் நான்’ என்று சப்தமில்லாமல், தனக்குத் தானே ஒருவித ஸ்புரிப்பு மாத்திரம் தோன்றும் (அதாவது: எல்லைக்குட்பட்ட ‘நான்’ என்னும் உடலுணர்வாக அல்லாமல், எல்லையற்றதும் புதிய தெளிவோடு கூடினதுமான ஓர் தன்னிருப்பின் பிரக்ஞை)’

நானார் எனமனமுள் நாடியுளம் நண்ணவே

நானாம் அவன்தலை நாணமுற – நான்நானாத்

தோன்று மொன்று தானாக...

(உள்ளது நாற்பது 30)

நானென் றெழுமிடம் ஏதென நாடவுள்

நான் தலை சாய்ந்திடும் உந்தீபற

ஞான விசாரம்ஈ துந்தீபற.

(உபதேச வுந்தியார் 19)

நானொன்று தானத்து நான்

நான் என் றொன்றது

தானாகத் தோன்றுமே யுந்தீபற

தானது பூன்றமாம் உந்தீபற.

(உபதேச வுந்தியார் 20)

அதனையே விடாதுபற்றிச் சும்மாவிருந்தால் (இருக்க இருக்க) ‘தேகம் நான்’ என்னும் அகங்கார ஜீவபோதத்தை அது முற்றிலும் நாசமாக்கி, முடிவில் கற்பூரத்திற் பற்றிய நெருப்புப் போல, தானும் (அந்த ஸ்புரிப்பும்) சாந்தமாகி (அடங்கி) விடும். இதுவே மோக்ஷமென்று பெரியோர்களாலும் சுருதிகளாலும் கூறப்படுகின்றது.

தொன்றுதொட்டு வருகிற விஷய வாசனைகளால் நினைவுகள் ஆரம்பத்தில் கடலலைகள் போல் அளவற்றனவாகத் தோன்றினாலும், அவை யாவும் மேற்கூறிய சொரூப நாட்டம் (தன்னாட்டம்) கிளம்பக் கிளம்ப அழிந்துவிடும். இவை யாவும் அழிந்து, சொரூப மாத்திரமாக இருக்க முடியுமா என்ற சந்தேகமுங்கூட ஒரு நினைப்பேயாகையால், அந்த நினைவுக்கும் இடங்கொடுக்காமல் தன்னாட்டத்தை விடாப்பிடியாகப் பிடிக்க வேண்டும். ஒருவன் எவ்வளவு பாபியாக இருந்தாலும் ‘நான் பாபியாயிருக்கிறேனே, எப்படிக் கடைத்தேறப் போகிறேன்!’ என்று ஏங்கி அழுதுகொண்டிராமல், தான் பாபி என்னும் எண்ணத்தையும் அறவேயொழித்து சொரூப நாட்டத்தில் ஊக்கமுள்ளவனாயிருந்தால் அவன் நிச்சயமாக 52உருப்படுவான். ஆகையால் ஒவ்வொருவரும் வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து ஆத்ம முத்தை அடையலாம்.

மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைகள் இருக்கின்றனவோ அதுவரை ஏதாவது சூட்சும-தூல உலகத் தோற்றங்களை உண்டாக்கிக் கொண்டேயிருக்கும். ஆகையால் அதுவரை நானார் விசாரணையும் வேண்டும். நினைவுகள் தாமாகத் தோன்றத் தோன்ற அப்போதைக்கப்போதே அவைகளையெல்லாம் அவைகளின் உற்பத்தி ஸ்தானத்திலேயே விசாரணையால் நசிப்பிக்க வேண்டும். நசிப்பிக்கும் உபாயம் யாதென்றால், தன்மையின் நாட்டத்தைக் கலைக்கின்றதாகப் பிறவெண்ணங்கள் எழுந்தால் அவற்றைப் பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல், ‘அவை யாருக்கு உண்டாயின?’ என்று விசாரிக்க வேண்டும். ‘எனக்கு’ என்று தோன்றும்; உடனே ‘எண்ணுகிற இந்த நான் யார்?’ என்று கவனித்தால் (இதுவரை முன்னிலை-படர்க்கைகளைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்த நம் கவன சக்தி) மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பிவிடும். அதனால் எழுந்த பிறவெண்ணங்களும் (கவனிப்பாரற்று) அடங்கிவிடும். இப்படிப் பழகப் பழக, மனத்திற்குத் தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது. இவ்விதமாக மனம் இதயத்தில் தங்கவே, எல்லா பிற நினைவுகளுக்கும் மூலமான நான் (தேகமே நான்) என்னும் (எழுச்சியுணர்வாகிய) முதல் நினைவும் போய், எப்பொழுதுமுள்ள (இருப்புணர்வாகிய) தான் மாத்திரம் விளங்கும். நான் (இது – அது – தேகம் – பிரம்மம்) என்னும் நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே ஆன்ம சொரூபமாகும். இதுவே மௌனம் எனப்படும்.

இவ்விதம் மனோ நாசமடைவதே முக்தி என்பதுதான் சகல சாஸ்திரங்களின் முடிவான கருத்து என்று அறிந்துகொண்ட பின்னும், நூல்களை அளவின்றிப் படிப்பதாற் பயனில்லை. பிறகு மனத்தை அழிக்கத் தன்னை யார் என்று விசாரிக்க வேண்டுமே தவிர, நூல்களில் எப்படி விசாரிப்பது? இராமன் தன்னை இராமன் என்று அறிவதற்குக் கண்ணாடி வேண்டுமோ? (தன்னாட்டத்தால் தன்னைத்தான் ‘நானே’ என்றறிவதற்கு நூல்கள் வேண்டுமோ என்றவாறு). ‘தான்’ - பஞ்சகோசங்களுக்குள் இருப்பது; நூல்களோ அவற்றிற்கு வெளியில் இருப்பவை. பஞ்ச கோசங்களையும் நீக்கி உள்ளே நாடவேண்டிய தன்னை நூல்களில் எப்படிக் காண்பது? அது வீணேயாதலால் உடனே நூலாராய்ச்சியை விட்டுத் தன்னாராய்ச்சியையே மேற்கொள்ள வேண்டும்

என்று பகவான் கூறியிருக்கின்றார்.53

பகவான் காட்டிய மேற்கண்ட செய் முறைப்படி தன்மேல் மட்டுமே கவனத்தை நாட்டும் இச் சாதனையை ஓர் உதாரணத்தின் மூலம் சற்றுத் தெளிவாகக் காண்போம். ஆனால், ஆன்மாவோ சமான ரகிதம்; உவமையற்றது; ஆகையால் அதை எந்த உதாரணத்தாலும் முற்றும் சரியாக விளக்கிவிட எவராலும் இயலாது. அவ்வக்கால மக்களின் அறிவு நிலை, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, கொடுத்து விளக்கப்படும் உதாரணங்கள் பெரும்பாலும் கடைசிவரை ஒத்துவரக்கூடியதாகவே தரப்படுமேயன்றி, இஜ் ஜடவுபமானங்களே உபமேயமாகிய ஞானமய ஆன்மாவை முற்றும் விளக்கிவிடா. பகவான் அடிக்கடிக் கூறிய திரைப்பட யந்திர (cinema machine) உதாரணமும், இங்கு கீழே தரப்படுகிற கண்ணாடிப் பிரதிபலன ஒளி உதாரணமும் வாசகர்களுக்கு வெகுதூரம் சந்தேக நிவர்த்தி செய்து தெளிவுண்டாக்கும் என்பதற்காகவே தரப்படுகின்றன. தவிர, ‘பால் வெள்ளை நிறம் என்றால், குழந்தை கொக்கையா விழுங்கிற்று!’ என்ற குருடன் 54 கதையாகப் பொருள் கொள்ளக் கூடாது.

சூரியன் பிரகாசிக்கும் வெட்ட வெளியில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டு கிடக்கிறது. சூரியவொளி அதன்மேல் பட்டுப் பிரதிபலித்து, அருகிலிருக்கும் ஓர் இருட்டறைக்குள் சென்று சுவற்றில் படுகிறது. கண்ணாடியிலிருந்து இருட்டறையின் உட்சுவற்றில் படும்வரையில் உள்ளது சூரியனது பிரதிபலன ஒளிக் கிரணம். இப் பிரதிபலன ஒளியின் உதவியால் அவ்விருட்டறையினுள் உள்ள பொருள்களை ஒருவன் காண முடிகிறது. இப்பிரதிபலன ஒளி அறையின் சுவற்றில் படும்போது கண்ணாடித் துண்டின் உருவம் எதுவோ, (முக்கோணமோ, சதுரமோ, வட்டமோ) அவ்வுருவமுடையதாகவேதான் காணப்படுகிறது. ஆனால் வெட்ட வெளியிற் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியனது நேர் ஒளியோ (மூல ஒளியோ) அகண்டமாய், எங்குமாய், ஏகமாய், உருவ எல்லை ஏதுமற்றுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. வெட்டவெளிச் சூரியவொளி போன்றதே நம் இருப்புணர்வான ஆன்மவுணர்வு. கண்ணாடியிலிருந்து அறையின் உட்சுவர் வரையிலும் நீண்டுள்ள பிரதிபலன ஒளிக்கிரணம் போன்றதே மன அறிவு அல்லது தேகாத்மபுத்தியாகிய அகந்தையுணர்வு. சூரியனது பரந்த நேர் ஒளிபோல் எல்லை குறிப்பிட முடியாததால் ஆன்மவுணர்விற்கு உருவ உபாதியில்லை. கண்ணாடியின் அளவையும் வடிவத்தையும் போல், தேக அளவாகவும், வடிவாகவும் ‘நான்’ என்று உணரப்படுவதால் அகந்தைக்கு ஓர் எல்லையும் வடிவமும் உண்டாகி விடுகிறது. இப் பிரதிபலன ஒளியை உபயோகித்து அறையினுள் உள்ள பொருள்களை அறிவது போல, இம் மன அறிவை உபயோகித்தே உடல்-உலகம் அறியப்படுகின்றது.

உலகறிவும் ஒன்றாய் உதித்தொடுங்கு மேனும்

உலகுஅறிவு தன்னால் ஒளிரும்.

(உள்ளது நாற்பது 7)

பொருள்: உலகமும் மனமும் ஏக காலத்தில் ஒன்றாயுதித்து ஒடுங்குவனவே எனினும், உலகமானது மன அறிவால்தான் விளங்கும்.

இருட்டறையில் இருக்கும் ஒருவன் அப் பிரதிபலன ஒளியால் அங்குள்ள இதர பொருள்களைப் பார்ப்பதைச் சற்று நிறுத்திவிட்டு ‘இவ்வொளி எங்கிருந்து வருகிறது?’ என்று அவ்வொளி மூலத்தைக் காண விரும்புகிறான் என்று வைத்துக்கொள்வோம். அதைக் காண விரும்பினால், அவ்வொளி சுவற்றில் எப்பாகத்திற் படுகிறதோ அதில் தன் கண்களை வைத்துப் பார்க்க வேண்டும். அப்போது அவன் காண்பதென்ன? சூரியன்! ஆனால், இப்போது அவனாற் காணப்படுவது உண்மையான சூரியனல்ல! அது சூரியனது பிரதிபிம்பமே! அது மட்டுமன்றி, அச்சூரியன் அறைக்கு வெளியில் எங்கோ தரையில் ஓரிடத்திற் கிடப்பதாகவே அவனுக்குத் தோன்றும்! அவ்விதம் சூரியன் வெளியே கிடக்கும் ஓரிடமானது, அறைக்கு இத்தனை அடி வலது புறம் அல்லது இடது புறம் என்று கூட (‘இருவிரல் வலத்தே இருப்பதும் இதயம்’ என்றது போல்) சொல்லிவிட முடியும். ஆனால், உண்மையில் சூரியன் அப்படியா தரையில் கிடக்கிறது? அப்படிப்பட்ட ஓரிடத்திலிருந்து இப் பிரதிபலன ஒளிக் கிரணந்தான் கிளம்பி வருகிறது! உண்மையான சூரியனைக் கண்டுணர அவன் விரும்புவானாயின் என்ன செய்ய வேண்டும்? பிரதிபலனக் கிரணம் வரும் நேர்க்கோட்டிலேயே, புறம் போகாமல் தன் கண்களை வைத்துப் பார்த்துக்கொண்டே, தனக்கு அப்போது உணர்வாகிற பிரதிபிம்ப சூரியனை நோக்கி நகர வேண்டும்.

அறைக்குள் வந்த பிரதிபலனக் கிரணத்தால் அறையிலுள்ள இதர பொருள்களைக் கண்டு ஆராய்ந்து கொண்டிருப்பதில் உள்ள ஆசையை விட்டு, இவ்வொளி மூலத்தைப் பார்க்கக் கிளம்புபவனைப் போலவே, மன அறிவால் விளங்கும் பற்பல உலகங்களையும் ஐம்புலன்களாற் கண்டு, மோகித்து, அவைகளைப் பெற விரும்பியோ அல்லது (நம் விஞ்ஞானிகளைப் போல) அவைகளை ஆராய்ந்து கொண்டோ இருப்பவன் உண்மையொளியை (ஆத்மாவை) உணர முடியாதாகையால், அவ்விதப் புறமுக முயற்சியை விட்டுவிட வேண்டும். இவ்வெளி விடயங்களை நாடுவதை விடலே வைராக்கியம் அல்லது மனத்துறவு. அறைக்குள் விளங்கும் ஒளிக்கிரணம் எங்கிருந்து வருகிறது என்று காண விரும்புவதைப் போன்றதே, எழுந்துள்ள இம் மன அறிவாகிய ‘அகந்தை--நான்’ எங்கிருந்து வருகிறது என்று காண விரும்புவதாகும்! இவ்விருப்பமே ஸ்வாத்மபக்தி. ஒளிக்கிரணத்தின் நேர்க்கோட்டிலிருந்து தன் கண்களை விலக்காமல் வைப்பது போன்றதே, ‘நான்’ என்ற உணர்வினின்றும் விலகாமல் தன் கவனத்தை நிறுத்தும் ஏகாக்கிரதை. அப்பிரதிபலன ஒளிக்கிரணக் கோட்டிலேயே நகர்ந்து அம்மனிதன் வெளியிற் கிடக்கும் கண்ணாடித் துண்டை நோக்கிச் செல்கிறானன்றோ? இதுவே இதயத்தை நோக்கி உள் ஆழ்தல்.

எழும்பும் அகந்தை எழுமிடத்தை நீரில்

விழுந்த பொருள்காண வேண்டி – முழுகுதல்போல்

கூர்ந்தமதி யால்பேச்சு மூச்சடக்கிக் கொண்டுள்ளே

ஆழ்ந்தறிய வேண்டும் அறி.

(உள்ளது நாற்பது 28)

‘பேச்சு மூச்சடக்கிக் கொண்டு உள்ளே ஆழ்ந்து’ என்ற வாசகத்தை எடுத்துக்கொண்டு சிலர், ‘மூச்சடக்கிக் கொள்வதற்காகப் பிராணாயாமம் செய்கிறேன்’ என்று ஆரம்பிப்பதுண்டு. விசாரத்தில் மூச்சு நின்றிருப்பது உண்மையேயெனினும் அதற்கு இச்சுற்றுவழி அவசியமல்ல. மனமானது தனக்கு ஒளி தரும் மூலத்தைக் காணவேண்டுமென்று தீவிர இச்சையுடன் உண்முகப்படுமேயானால் மூச்சு தானே நின்று விடுகிறது!

ஆதலினா லறிவுமய மாஞ்சுத்த

விதயத்தே யகத்தைச் சேர்க்குஞ்

சாதனையால் வாதனைக ளொடுவாயு

வொடுக்கமுமே சாருந் தானே.

(உள்ளது நாற்பது அனுபந்தம் 24)

அவ்விதம் வெளி விடயங்களை விட்டு மனம் தன் ஒளியுரு நாடித் திரும்பும் தருணத்தில் விசாரியின் தேகத்தில் மூச்சு வெளிவிடப் பட்டிருந்தால், அது மீண்டும் உள்ளிழுக்கப்படாமல் அப்படியே, வெளியிலேயே, தானாகவே நின்று விடுகிறது! அல்லது அத்தருணத்தில் மூச்சு உள்ளே இழுக்கப்பட்டிருந்தால் அது மீண்டும் வெளிச் செல்லாமல் உள்ளேயே நின்றுவிடுகிறது! இவை முறையே பாஹிய கும்பகம் என்றும் ஆந்தர கும்பகம் என்றும் கொள்க. தற்கவனத்திற் சோர்வு (பிரமாதம்) ஏற்பட்டு, மீண்டும் வேறெதாவது ஓர் எண்ண உற்பத்தி உண்டாகும் வரையில் விசாரிகளுக்கு இக்கும்பகம் முயல்வின்றி இயல்பாக நிலைத்து நின்று விடுகிறது. சாமானிய தினசரி அனுபவங்களின்படி பார்த்தாலுங்கூட, யாராவது திடீரென்று ஓர் அதிசயச் செய்தியைக் கொண்டுவந்த சமயத்திலும் சரி, அல்லது நாம் மறந்துபோன ஒரு பொருளை மனமூன்றிய கவனத்துடன் ஞாபகப்படுத்திப் பார்க்கும் போதானாலும் சரி, மதியின் கூர்தல் ஏற்படுவதால் மூச்சோட்டம் தானே நின்றிருப்பது சற்றுக் கவனித்தால் யாருக்கும் விளங்கக் கூடியதேயல்லவா? அதுபோலவே மனம் ‘தன் ஒளி மூலத்தைக் காணவேண்டும்’ என்ற விருப்பத்தின் மிகுதியாலும், சிரத்தையோடு கூடிய ஏகாக்கிரத்தாலும் உண்முகமாய்க் கூர்ந்து நிற்க ஆரம்பித்ததும், உடனே மூச்சும் தானாகவே கும்பகமுற்று நின்றுவிடும். இக்கும்பக நிலையில் நேரம் எவ்வளவு அதிகமானாலும் ‘மூச்சு இழுக்கவோ அல்லது விடவோ வேண்டுமே’ என்ற ஓர் திணறல் போன்ற சிரமம் ஏற்படுவதில்லை. ஆனால் பிராணாயாம வழியில், மாத்திரையளவு உயர்ந்த கும்பகத்தில் இச்சிரமம் சாதகர்களால் உணரப்படுவதுண்டு. ‘மூச்சு நின்றதா, சென்றதா’ என்றுகூட கவனிக்க முனையாமற் கவனம் தன்னுணர்வில் ஊன்றப்படுமாயின், அப்போது விசாரியின் கும்பகநிலை ஓர் சிரமமுமற்ற இயல்பு நிகழ்ச்சியாகி விடுகிறது. அவ்வாறின்றி சிலர் அச்சமயம் மூச்சு நின்றதா, சென்றதா என்று பார்க்க நினைப்பதுண்டு. அது தவறு; மூச்சின்மேற் கவனம் ஏற்படுவதனால், தற்கவனம் நழுவும்; அதனால் உடனே எண்ணங்கள் பற்பல தோன்றிவிடும்; சாதனையின் தாரை கெட்டுப்போகும். அதனால்தான், ‘கூர்ந்த மதியால் பேச்சு மூச்சடக்கிக் கொண்டு’ என்றனர் பகவான். ‘கூர்ந்த மதியால் மூச்சடக்கிக் கொண்டு, கூர்ந்த மதியால் உள் ஆழ்ந்து, கூர்ந்த மதியால் அறிய வேண்டும்’ என்று மூவிடத்தும் ‘கூர்ந்த மதியால்’ என்ற பதத்தைக் கூட்டிப் பொருள் கொள்ளுவதே மிகவும் நல்லது.

பிரதிபலனக் கிரணத்தோடே கண்களை வைத்து நகர்ந்து செல்லும் ஒருவன், தனது செலவால் (நகர்வால்) அப்பிரதிபலனக் கிரணத்தின் நீளத்தைக் குறைத்துவிடச் செய்கிறானல்லவா? அவனது முன்னேற்றத்தைப் பொருத்து, கிரண நீளம் நசிப்பது போல, சிரத்தையோடு தன் உதிப்பிடத்தை நாடும் சாதகனின் மனம் தன் விரிவொடுங்கிக் கொண்டே வருகிறது.

நானென்னுங் கிரணத் தோடே நாட்டமுள் செல்லச்செல்ல

நானென்னுங் கிரணநீளம் நசித்துநான் ஞான மாமே.

(சாதனை சாரம் 247)

பின்பு அம்மனிதன் கண்ணாடித் துண்டின் வெகு அருகாமையுற்றதும், சூரியப் பிரதிபிம்ப உற்பத்தி ஸ்தானத்தையே சேர்ந்தவனாகிறான். அதுபோலவே சாதகனும் உள் ஆழ்ந்து தான் கிளம்பிய மூல ஸ்தானத்தைச் (இதயத்தைச்) சேர்கிறான். கண்ணாடித் துண்டைச் சார்ந்ததும் பிரதிபலனக் கிரணநீளம் முழுவதும் அழிக்கப்பட்டு அவனாலேயே மறைக்கப்பட்டுப் பிரதிபலனமற்ற – சூரியப் பிரதி பிம்பத்தையே காணாத – ஓர் நிலையை அவன் அடைகிறானல்லவா? அது போலவே சாதகன் மேன்மேலும் தன்னுள் நாடி மூழ்கும் தன்னாட்டத்தின் தீவிர முயற்சியால், அகந்தையெழுச்சி அணுமாத்திரங் கூட எழமுடியாத நெருக்க மிகுதியில், தான் இதுகாறும் தனது லக்ஷியமாகக் கண்டுவந்த ‘நான்’ என்ற தேகாத்ம புத்தியின் பேரொழிவில் ஒடுங்கி நிற்கிறான். இதையே ‘நான் தலை சாய்ந்திடும் உந்தீபற’ என்று பகவான் உபதேச வுந்தியார்-19ல் கூறினர்.

தான் தேடி வந்ததனாலேயே சூரியப் பிரதிபிம்பம் இல்லாமற் சூனியமாக்கப்பட்ட இந்நிலையில் அம்மனிதன் இருட்டறையை விட்டு வெட்டவெளியிலன்றோ வந்து நிற்கின்றான்! இதுவே, தன்னாட்டத்தினாலேயே நானில்லாமல் ஆக்கப்பட்ட மகா சூன்ய ஸ்திதியில் சாதகன் இதய (ஆகாசத்தை) வெளியை அடைந்துள்ள நிலை. அறை மறைப்பற்று வெட்டவெளிக்கு வந்துள்ள அம்மனிதன் ‘அந்தோ! எனக்கு இதுவரை வழி காட்டிவந்த சூரியன் (பிரதிபிம்ப சூரியன்) இப்போது இல்லாமற் போயிற்றே’ என்று மயங்குகிறான். அவ் வெட்ட வெளியில் நிற்கும் அவனது நண்பன் ஒருவன் குறுக்கிட்டு, ‘நீ இதுகாறும் இருந்தது எங்கே? (இருட்டறையில்!) இப்போது இருப்பது எங்கே? (வெட்ட வெளியில்!). இருட்டறையில் இருந்தபோது நீ அதைவிட்டு வெளியே வருவதற்கு ஓர் மெல்லிய கிரண அளவேயான ஒளி வழிகாட்டிற்று; ஆனால், இங்கு (வெட்ட வெளியில்) உள்ளதோ கணக்கற்ற, எல்லையற்ற ஒளிக்கற்றைகளின் திரளல்லவா? நீ முன்பு கண்டது நேர் சூரியவொளிகூட அல்ல; பிரதிபலனக் கிரணமே! ஆனால், இப்போது நீ அனுபவிப்பதோ (சாக்ஷாத்) நேர் ஒளி. அகண்ட ஒளிவெளியே உன் இருப்பிடமாகிவிட்ட இப்போது, மறைந்துபோன பிரதிபலனக் கிரணத்தின் சூன்யத்தால் ஒரு இருள் உண்டாகி விடுமா? அதன் மறைவு ஒரு நஷ்டமா? அதன் மறைவே ஒளியாகும்; இருளன்று; அறி’ என்றுணர்த்துகிறான்.

அதுபோலவே சாதகனும், ‘அந்தோ! இதுகாறும் என் சாதனையில் கலங்கரை விளக்காகக் கண்டு நாடிவந்த “நான்” என்ற (அகந்தை) உணர்வும் இப்போது ஒழிந்து விட்டதே! “ஆன்மா” என்று எப்பொருளும் உண்மையில் இல்லவே இல்லையோ!’ என்று அகந்தையின் அழிவாகிய இம் மகாசூன்ய உணர்வாற் சிறிது திடுக்கிடுகிறான்! அப்போது அவனது இதயமாகவே விளங்கும் சற்குரு, ‘அற்பப் பிரதிபலன அறிவாகிய அகந்தையின் அழிவு ஒரு நஷ்டமாகுமா? அது இருந்ததை மட்டுமின்றி அது இப்போது மறைந்த (மகாசூன்ய) நிலையையும் நீ அறிகிறாயல்லவா? அச் சூன்யத்தையும் “இது சூன்யம்” என்றறியும் நீயே அறிவாகும், பாழன்று; அறி’ (உள்ளது நாற்பது-12) என்று இவ்வளவும் ஒரு நொடியில், அந்நிலையில், பளிச்சென்று விளங்குகிற தன் இருப்பறிவுப் பிரகாசமாய், உள்ளத்தில் உள்ளமாய் ஸ்புரித்துத் தொட்டுக் காட்டுகின்றார்! ‘நான் எங்கிருந்து?’ அல்லது ‘நான் யார்?’ என்று தேடியவன், இப்போது எல்லைக்குட்பட்டதோர் இடம் காலம் ஏதுமின்றி, ஏகமாய் ‘நான் நானே’ என்று – தன்னுணர்வு – மெய்யுணர்வு பெறுகிறான்.

‘நான்’ என்ற உணர்வைப் பற்றிக்கொண்டு, அதில் மேன்மேலும் அடையும் ஏகாக்கிரத்தின் அடர்த்தியே (உரமே) உள்ளாழ்தல் என்பதாம். இவ்விதம் தன்னுள் ஆழாமல், பலர் ஆத்ம விசாரம் செய்வதாகக் கருதிக்கொண்டு, ‘நான் யார்?’ நான் எங்கிருந்து?’ என்று வாயால் அல்லது மனதால் மட்டும் கேட்டுக்கொண்டே வெகு நேரம் அமர்ந்திருப்பதுண்டு. மற்றும் சிலர் விசாரத்திற்காக அமர்ந்ததும், தம் எண்ணங்களை நோக்கி, ‘இவை யாருக்கு; எனக்கு; நானார்?’ என்று பகவான் சொல்லித்தந்த வினாத் தொடர்களைத் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டே இருப்பதும் அல்லது இவ்வினாக்களைப் பிரயோகிப்பதற்காக ‘அடுத்த எண்ணம் எது?’ என்று எதிர்பார்ப்பதும் உண்டு! இதுவும் பயனற்ற செயலேயாகும்! இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாய் எண்ணங்களைக் கூப்பிட்டு ‘நியாயஸ்தல விசாரணை’ நடத்தவா உட்கார்ந்தோம்! இதுவா உள்ளாழ்தலாகிய சாதனை! ஆகையால் ‘அடுத்த எண்ணம் எது?’ என்று கவனித்துக்கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு வினவிக்கொண்டே மட்டும் இருப்பது தன்மை நாட்டமல்ல. தன் இருப்புணர்வை நோக்கிக் கூர்ந்த மதியினால், மனம் மூச்சாதி சகல தேகேந்திரிய சேஷ்டைகளுமடங்கி உள்ளாழாமல், மேற்கண்டவாறு இவ்வினாக்களிலேயே நினைவை வைத்துக்கொண்டு, எண்ண அலைகளின் மேற்பரப்பிலேயே மிதக்கும் சாதகர்களைப் பற்றி பகவான்,

தானிருந்துந் தானாகத் தன்னைத்தான் ‘நானெவன்?

யானிருக்கும் தானம் எது?’வெனக்கேட் – பானுக்கு

‘யானெவன் எவ்விடம் யானுளன்?’ என்றமது

பானனை ஈடு பகர்!

(ஏகான்ம பஞ்சகம் 2)

என்றும்,

‘... நானுதிக்கும் தானமதை நாடாமல் (இவ்வாறு மிதப்பதால்) நானுதியாத் தன்னிழப்பைச் (அம் மகாசூன்யத்தைச்) சார்வதெவன்? (எப்படி?) சாராமல், தான் அதுவாம் (ஸோஹம் உணர்வில்) தன்னிலையில் நிற்பதெவன்? (எப்படி?) சாற்று’

(உள்ளது நாற்பது-27)

என்றும் கேட்கின்றார்!!

ஆகையால், தன்மையுணர்வின் ஞாபகத்தோடு சும்மாவிருக்கவே பழக வேண்டும். இத் தற்கவனத்தின் இடையிற் சோர்வு ஏற்பட்டால்தான், அதன் அடையாளமாக, எண்ணங்கள் தோன்றும். அவை தோன்றினால் நாம் மேற்கொண்ட தற்கவனம் நீங்கிவிட்டது என்றே அர்த்தம். மறுபடியும். அந்த நினைவின் நாட்டத்திலிருந்து தன்னாட்டத்திற்கு மீண்டுகொள்வதற்கோர் உபாயமாக மட்டுமே பகவான் ‘இது யாருக்குத் தோன்றுகிறதென்று கேள்’ என்றார். ‘எனக்கு’ என்று வருகிற பதில், ‘நான்’ என்பதின் நான்காம் வேற்றுமை வடிவேயாகையால், முதல் வேற்றுமை வடிவாகிய ‘நான்’ என்ற உணர்வை அது ஞாபகப்படுத்திவிடும். இதை யார் நினைப்பது என்று கேட்டாலும் முதல் வேற்றுமை வடிவான ‘நான்’ என்ற உணர்வே பதிலாகக் கிடைப்பதால், தனக்குத் தெரியாமலேயே நழுவிப்போன ‘தன்மை நாட்டம்’ இதனால் மீட்கப்பட்டதாகி விடுமல்லவா? இம்மீட்சி, தானாயிருத்தலே! இவ்விருப்பே சரியான சாதனை; சாதனை இருத்தலே; செய்தலல்ல (sadhana is not doing, but only being )!!

செம்மா தவத்திறனாச் சிந்தை கடைப்பிடிக்க

எம்மா னியம்புறுதி யிவ்வளவே – சும்மா

விருத்தலே யன்றிமற் றெண்ணலிலை யாதுங்

கருத்தினாற் செய்யுங் கடன்.

(குருவாசகக் கோவை 773)

இந்தச் சும்மாவிருக்கும் நிலையையே பகவான் ‘ஆன்ம வித்தைக் கீர்த்தன’த்தின் நான்காவது சரணத்தில்,

...சொன்மா னதத்தனுவின் கன்மாதி சிறிதின்றிச்

சும்மா வமர்ந்திருக்க அம்மா அகத்திலான்ம

சோதியே...

என்று குறிப்பிடும் நிலையாகும்.

இச் சும்மாவிருத்தல் என்பது நமது இயல்பான சுபாவ நிலையேயாதலால் அதில் நாம் நிற்பதற்குச் செய்யவேண்டியதெல்லாம் யாதெனின் எதுவும் செய்யாதிருத்தலே. சகல செயல்களின் (கர்மங்களின்) மூல நிலையமும், ‘நான் இத்தேகம்’ என்று எழும் தற்போத எழுச்சியேயாதலின், சும்மாவிருப்பதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் யாதெனின், இந்த அகந்தை அல்லது மனத்தை எழாமல் தடுக்க வேண்டிய தொன்றே. ‘சும்மா விருப்பதாவது மனத்தை ஆன்ம சொரூபத்தில் லயிக்கச் செய்வதே’ என்று ஸ்ரீ பகவான் ‘நான் யார்?’ என்ற நூலிற் கூறியுள்ளார். மனம் அல்லது அகந்தையானது அது கவனிக்கப்படும்போது மட்டுமே எழாது அடங்குகிறதே தவிர, தற்கவனம் நீங்கும்போது எழுந்துவிடுமாகையால், அதை ஆன்மாவில் அடங்கி லயிக்கச் செய்ய, அதன் மூலத்தில் உதிப்பிடத்தில் மிகவும் ஏகாக்கிரமாக, ஜாக்கிரதையுடன் நாட்டும் தற்கவனமே போதும்.

ஆனால், சிலர் ‘தூக்கத்திலிருந்து அகந்தை எழுவதே தெரியாதபடி போகிறபோது, அது எங்கிருந்து எழுகிறது என்று எப்படிக் காண்பது? அது இயலாது போல் இருக்கிறதே!!’ என்று பிரஸ்தாபிப்பதுண்டு. அது உண்மையே! ஏனெனில், மனத்தின் கவன முயற்சி தூக்கத்திற் கிடையாது; அங்கு மனமேயில்லாததால்! மனத்தின் முயற்சியறிவைத் தவிர தம் ‘இருப்பறிவு’ என்பதே சாதாரண மனிதர்கட்குப் பழக்கமில்லாததால், அத்தகையோர், தூக்கத்திலிருந்து எழும்பும் அகந்தையை அங்கிருந்தே அறிவது துர்லபம். அவர்கள் எதிர்பார்க்கிற முயற்சி தூக்கத்தில் இல்லாததால், விசாரத்தைத் தூக்கத்திலிருந்து ஆரம்பிக்க இயலாதது ஓர் ஆச்சரியமல்ல! எழுந்தபின் விழிப்பு முழுவதும் அகந்தையின் லீலா விநோதங்களாகவே இருப்பதாலும், இங்கே மன முயற்சியிருப்பது சகலர்க்கும் அனுபவமாதலாலும், இவ்விழிப்பில் ‘நான் இன்னாராக இருக்கிறேன்’ என்ற வடிவில் விளங்கும் போலித்தன்மை உருவையாவது திரும்பி நாட முடியும்.

திரும்பி அகந்தனைத் தினம்அகக் கண்காண்;

தெரியும்என் றனைஎன் அருணாசலா.

(ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை 44)

சாதனைக்காக அமரும் ஓய்வு நேரங்களாகிய விழிப்புக் காலத்தில்தான் இவ் விசாரத்தின் ஆரம்பம். பிற ஒரு பொருளின் பெயரை ஸ்மரித்த மாத்திரத்தில் அப்பொருள் ஞாபகத்துக்கு வருவதுபோல, ‘நான்’ என்ற பெயரை ஸ்மரித்தால் எவர்க்கும் தன்மையுணர்வு ஞாபகத்துக்கு வருகிறதல்லவா? இது போலித் தன்மையுணர்வாகிய அகந்தையேயாயினும் பாதகமில்லை. முன்னிலை-படர்க்கைகளினின்றும் மீண்டு, தன்மையை நமது கவனம் பற்றிக்கொள்வதே சாதனை. தன்மையுணர்வில் மனம் திரும்பியதும் பிற நினைவுகள் ஒழிவது மட்டுமல்லாமல், எழுந்து விரியும் போலித்தன்மையாகிய முதல் நினைவே விரிவொடுங்க (நீளம் குறைய) ஆரம்பிக்கின்றது!

அன்னியமே சுட்டி யலையு மகந்தைமதி

தன்னியலே சுட்டத் தலைப்படின்மற் – றன்னியம்போய்

நெஞ்சத் தியல்பா நிறைந்தொளிர்தன் மெய்யுணர்வாற்

கிஞ்சித் துவநான் கெடும்.

(குருவாசகக் கோவை 193)

தன்மையை நோக்கி யந்தச் சலமனந் திரும்பு மாகில்

இன்மையாய்த் தன்மை நீங்க, இருப்பது விளங்க...

(சாதனை சாரம் 244)

தன்மையை நாடும் செய்கை தற்கொலை சமான மாகும்...

(சாதனை சாரம் 245)

இதுவே பகவான் ஸ்ரீ ரமணர், சாதகர்களின் உலகிற்கு, வேதாந்தத்தை அனுபவ சாத்தியமாக்கும் ஓர் நூதனக் கண்டுபிடிப்பாகக் கண்டு அளித்த பேருபகாரமாகும்.

மேன்மேலும் இத்தன்மையுணர்வைப் பற்றுவதில் ஏகாக்கிரமடைவதால் இம்முதல் நினைவின் (அகந்தையின்) ஒடுக்கம், 55படிக்கட்டில் உருண்டு விழ ஆரம்பித்த ரப்பர் பந்தைப் போல், வரவரத் தீவிரமடைந்து, அதன் எழுமிடத்தில் ஒடுங்குகிறது. இப்படி ஒடுங்குவது எதுவென்றால், தூக்கத்தில் ‘நான் இருக்கிறேன்’ என்று மட்டும் விளங்கிய நம் இருப்புணர்வில், விழிப்புறும்போது ‘நான் இன்னாராக – இதுவாக – இருக்கிறேன்’ என்று இடையில் வந்து புகுந்து கலந்த ‘இன்னாராக’ என்ற உபாதியுணர்வு மட்டுமே ஒடுங்கி மறைகிறது. அதாவது, வந்து கலந்த இது இப்போது கழன்று போகிறது. இவ்வகந்தையின் கழற்சியைத்தான் (ஒடுக்கத்தை) சாதகன் முதலில் உணர முடியும். அது தலைவிரித்தாடும் விழிப்பிலிருந்து அதைத் தொடர்வதால் அதன் ஒழிவு (ஒடுக்க) நிலைதான் ஆரம்பத்திற் கண்டுபிடிக்க முடியுமே தவிர, தூக்கத்திலிருந்து அது எழுவதை (வந்து தொத்திக் கொள்வதை) ஆரம்பத்திற் காண்பது கடினமே

‘நான் இன்னாராக இருக்கிறேன்’ என்ற விழிப்புப் பிரக்ஞையிலிருந்து தன்மை நாட்டத்தைத் தொடர்ந்தபோது ‘இன்னாராக’ என்ற உபாதியுணர்வு மட்டுமே (அது இருப்பற்ற ஓர் பொய்யேயாகையால் அசத்தியம் அழிகிறது – ஸத்ய மேவ ஜயதே) நழுவுவதால் சாதகனுக்குத் தன் விழிப்பில் அனுபவித்த ‘நான் இருக்கிறேன்’ என்ற ப்ரக்ஞைக்கு (இன்னார் என்றது நழுவிய) இப்போதும் கேடில்லாமல் இருக்கிறது. சர்வமும் நீங்கியதும் (எண்ண மயமான இச்சர்வமும் அகந்தையின் விரிவேயாகையால் அகந்தையே யாவுமாம் – ஸர்வமாம்) தினந்தினம் அவன் அனுபவித்ததுமான தூக்கம் போன்ற நிலையைச் சாதகன் இப்போது அடைகிறான். ஆனால், இத்தனை நாளாக உடல் மனம் களைத்துத் தன்னையறியாமல் வந்து கவ்விய தூக்கத்திற்கும், இப்போது விழிப்பின் பூரணப் பிரக்ஞையில் தன்னறிவு இருந்த வண்ணமே வரவழைத்து அனுபவிக்கப்படும் இப்புதுவிதமான தூக்கத்திற்கும் ஒரு வித்தியாசம் அவனால் இப்போது அனுபவிக்கப்படும். அதாவது:

உணர்விருப்ப தால்ஈ துறக்கமன்(று) எண்ணத்

தணவிருப்ப தால்விழிப்பு தானன்(று) – உணர்விருப்பு

சித்சத் அகண்ட சிவசொரூபம்! நீங்காமல்

இச்சித் ததிலே இரு.

56(சாதனை சாரம் 229)

தூக்கம் போன்ற இந்நிலையினின்றும் (அப்பியாச காலத்தில்) புறமுகப்படும்போது ‘நான் இதுகாறும் தூங்கவேயில்லை; பிரக்ஞையோடுதான் இருந்தேன்’ என்று அவன் நிச்சயம் பண்ணுகிறான். ஆனால், சாதாரண தினசரித் துயிலிலிருந்து அவன் பஹிர்முகப் படும்போதோ (அத்துயிலிலோ ‘நான் இருக்கிறேன்’ என்ற பிரக்ஞையைக் கொஞ்சமும் சந்தேகமில்லாமல், அவனது நிஜரூபமான சத்-சித்து உணர்ந்திருந்தாலுங்கூட, அதை விழிப்பிலிருந்து தொடர்ந்து ஒருமுறைகூட அவன் உணர்ந்திராததால்) ‘நான் தூங்கினேன்; அங்கு என்னை அறியேன்’ என்றே கூறுவான். உண்மை என்னவென்றால், ‘இன்னார்’ என்னும் உபாதி ஒழிந்த தன் இருப்பு நிலையை விழிப்பிலிருந்த பிரக்ஞையோடேயே தொடர்ந்து சென்று பிடித்துக்கொண்டதால், இத்துயில் நிலையிலும் ‘நான் இருக்கிறேன்’ என்ற உணர்வை அவ்வுணர்வாகிய சத்-சித்தே அறிவது நன்றாய்த் தெரிகிறது. அதனால் ‘நான் இருந்தேன்; தூங்கவேயில்லை’ என்கிறான் சாதகன்! தினசரித் தூக்கத்திலோ – ‘இன்னாராக’ என்ற உபாதி வடிவ மனமே தான் என்று இதுகாறும் உணர்ந்திருந்த காரணத்தால், இந்த மனமே இல்லாத தூக்கத்திலோ – தானே இல்லாமற் போய்விட்டதாக அந்த மனம் (மனிதன்) விழித்த பிறகு சொல்கிறது! அவ்வளவுதான்!!

இவ்வகந்தைக் கழற்சிப் பயிற்சியைப் (தன்னிழப்பை) பலமுறை சாதனை மூலம் அனுபவித்து வருவோர்க்கு, அதன் கழற்சிக்குப் பின்னும்,‘நான் இருக்கிறேன்’ என்ற தன் சுத்த இருப்புணர்வின் பரிச்சயம் இருப்பதால், அவர்கள் தூக்கத்திலிருந்து விழிக்கும்போதுகூட, ‘இன்னாராக’ என்ற உபாதி வந்து கலப்பதை அதி சூட்சுமமாகக் கவனித்துவிட முடியும். இப்பயிற்சிப் பலம் இல்லாதோர் தூக்கத்திலிருந்து கிளம்பும் அகந்தையை எழுமிடத்திலேயே கண்டுவிட முடியாது. விழிப்பிலிருந்து முயன்று அதன் ஒழிவிடத்தைக் (அதுவே அதன் எழுமிடமுமாம்) காண்பதே சுலபம். இரண்டிலும் முடிவும் பயனும் ஒன்றே. நாட்டம் உள்ளே சென்று சென்றணுவாய்த் (அகந்தை) தேய்ந்து தேய்ந்து ஒன்றி ‘இருக்கிறேன்’ என்ற இத்தன்னுணர்வில் அணுவினும் அணுவான அதி சூட்சுமமாக நம் கவன சக்தி தீட்டப்பெற்று ஒளி சிறப்பதால், தினசரித் தூக்கம் நீங்கிய பின்னும், விழிப்பாகிய முதலெண்ணம் வந்து தொத்திக் கொள்வதன் முன்னும் (இரு நிலைகளுக்கிடையில்), நிதானித்து நின்றுகொள்ளும் நிஷ்டாபலம் இப்போது கிடைத்துவிடும். இதனால் வந்து கலக்கும் ‘இன்னார்’ என்ற உபாதியுருவை (அது தன்மை வடிவாகவே இதுவரை தோன்றி வந்துள்ளதென்றாலுங்கூட, தானல்லாத, தன் நிழல் போன்ற, முதற் சட்டையான – கோசமான) ஒரு முன்னிலையாகவே கண்டுபிடித்துக் கொள்ளும் சாமர்த்தியம் சாதகனுக்கு இப்போது உண்டாகிவிடும். இதையே ஜனகர் ‘என்னை அழித்துக் கொண்டிருந்த திருடனை(அவன் வரும் சமயத்தை – எழும்பு மகந்தை எழுமிடத்தை – காலத்தை)க் கண்டுபிடித்து விட்டேன்; அவனுக்குத் தக்க தண்டனை விதிக்கிறேன்!’ என்று கூறினார்! தக்க தண்டனையாவது: இதுகாறும் தன்மையுணர்வு போலவே நடித்து வந்த அகந்தையுணர்வானது அன்னியமானதோர் முன்னிலை நினைப்பாகவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட காரணத்தால், பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய தன்மை மீட்சி முறையின்படி (இது யாருக்கு? எனக்கு; நானார்? என்ற வழியில்) இருப்புணர்வாகிய மெய்த் தன்மையையே உரமாக மீண்டும் பற்றுவதால், அவ்வகந்தையை அதன் உற்பத்தி ஸ்தானத்திலேயே (பிரதிபலனக் கிரண நாசம் போல) நசுக்கி விடுவதே. இதுவே தக்க தண்டனை.

இவ்வுணர்வின் றுய்ப்பி லிருந்திருந்து நீபழக

கவ்வியமுன் தூக்கம் கலைந்துவிடும் – மெய்விடயம்

பற்றும் விழிப்பும் படரா(து) அடுத்தடுத்துச்

சற்றுஞ் சலிப்பின்றிச் சார்.

(சாதனை சாரம் 228)

இப்படி இருப்பதில் இருந்து பழகப் பழக, நமது தினசரி இதர காரியங்களில் ஓய்வு பெறும்போதெல்லாம் இவ்விருப்புணர்வு தாமே வந்துவந்து நம்மைப் பற்றிக்கொள்வது போன்று அனுபவமாகும். அவ்வுணர்வு நாமேயாகையால், ஏதோ ஒன்று வந்து நம்மைப் பற்றிக் கொள்வதல்ல அதனுண்மை! நாம் இதர அலுவல்களின் சமயத்தில் பிறவற்றை நாடுகிறோம். அது முடிந்ததும், மற்றொரு முன்னிலை அல்லது படர்க்கை நாட்டங் கொள்வதற்கு முன் தன்னிலையில் நம் இயல்பாகவே நிற்கிறோம். எல்லோரின் விஷயத்திலும் தினசரி இப்படியேதான் நடக்கிறதென்றாலும், மேற்கூறிய தன்னுணர்வுப் பயிற்சியுடையோருக்கே, ஒரு முன்னிலை எண்ணத்தை விட்டு மற்றொன்றைப் பற்றுவதற்குமுன் (இரு எண்ணங்களுக்கிடையில்) தன் இருப்புணர்வு – ஆன்மவுணர்வு – நன்றாக விளங்குவது தெரியும்.

‘அடுத்தடுத்துச் சார்என்(று), அதில் இச்சித்(து)ஆர்’ என்

றெடுத்துரைத்த தேனென்றால் இஃதை – விடுத்தகற்றும்

வாசனைஓய் மட்டும் 57வரும்போம்போல் தோன்றுவதால்

நேசம்முயல்(வு) ஏற்றல் நெறி.

(சாதனை சாரம் 230)

இருக்க விருக்க வியல்பாகத் தன்னிற்

பெருக்கமுள்ள வாசனையும் பேரும் – சுருக்கமாய்

வாசனைக ளோய்விக்க வல்ல வுபாயமிதி

னாசரிக்க வேறில்லை யாங்கு.

(சாதனை சாரம் 60)

இப்பழக்கத் தாலே இயல்பாம் இருப்புணர்வு

தப்பமுடி யாத சகஜமாய் – எப்போதும்

ஓரப் படும்போ(து), உறக்கம் கனவுநனா

சேரப் படினும்இல்லை தீங்கு.

(சாதனை சாரம் 231)

மூன்றுநிலை யூடும் முடிவில்லாத் தன்னுணர்வில்

ஊன்றியிருப் பாருக் கொரேநிலைதான் – பூன்றம்!

முயல்கின்றேன் என்ற முனைப்புமிலா இஃதே

இயல்பாம் இருக்கை! இரு!!

(சாதனை சாரம் 232)

பிரதிபலனக் கிரணத்தைப் பற்றிக்கொண்டே இருட்டறையை விட்டு வெட்ட வெளியில் வந்த மனிதனைப் போல, நானென்னும் உணர்வைப் பற்றிக்கொண்டே நாடீபந்த உடற் சிறையினின்றும் நீங்கி, இதயாகாச வெட்டவெளியை உறும் இக்கிரியை விசார சீலனின் உடலில் எவ்விதம் நிகழ்கின்றது என்பதைச் சற்றுக் காண்போம்.

தூக்கத்திலிருந்து விழிக்கும்போது இதயத்திலிருந்து ‘நான்’ என்னும் அறிவுணர்ச்சி பளிச்சென்று மூளைக்குச் செல்கின்றது. மூளையிலிருந்து பிறகு நாடிகளின் மூலம் உடலெங்கும் பரவுகின்றது. ‘நான்’ என்னும் இவ்வறிவுணர்ச்சி ஒரு மின்சார சக்தி போன்றது. ஓர் உடலை நான் என்று அபிமானிக்கும் அபிமானமே அதன் வேகம். அளவற்ற இவ்வேகத்தோடு பரவும் இவ்வுணர்ச்சியானது இதயத்திலிருந்து மூளையை அடையும் வரையில் எவ்வுபாதியும் ஒட்டாத சுத்த உணர்வாக இருக்கும். ஆனால், இது ஒரு கணத்தின் கோடியில் ஒரு பங்கேயான மிகமிகக் குறைந்த காலத்துக்குள்ளேயே மூளையை அடைந்துவிடக்கூடிய அவ்வளவு அபிமான வேகமுள்ளதானபடியால் சாதாரண மக்கள் இதை உபாதியற்ற அந்நிலையில் உணர முடிவதில்லை. ‘இரு அவஸ்தைகளுக்கு அல்லது இரு எண்ணங்களுக்கு இடையில் அகந்தையின் மெய் இயற்கை – சுத்த நிலை – தோன்றும்’ என்று ‘மஹர்ஷி வாய்மொழி’ முதற்பாகம் – ‘ஆத்மாவும் அகந்தையும்’ என்ற அத்தியாயத்தில் (பன்னிரண்டாம் பதிப்பு, 2008, பக்கம் 29-ல்) குறிப்பிட்டது இதையேயாகும்.

வேகத்தோடு பாய்ந்து மூளையிலிருந்து உடலெங்கும் பரவும் இச்சக்திக்கு மின்சாரக் கம்பி போன்று உபயோகமாவது தேகத்திலுள்ள நாடிகளே (அவைகளின் எண்ணிக்கை நமக்கு அவசியமன்று). ‘நான் இருக்கிறேன்’ என்ற சுத்தவுணர்வு மூளையை அடைந்தபின் ‘நான் இன்னாராக – இதுவாக – உடலாக – இருக்கிறேன்’ என்று கலப்புப் பெறுவதே பந்தம் அல்லது கிரந்தி எனப்படும். இக்கிரந்தியானது நாடீ பந்தம், அபிமானம் என இருவகைப்படும். ‘நான்’ என்னும் இச்சக்திக்குத் தூல நாடிகளோடு உள்ள சம்பந்தமே நாடீ பந்தக் கிரந்தி எனப்படும். அதற்கு, வாசனைகளாகிய காரண தேகத்தோடுள்ள சம்பந்தமே (தேகாபிமானம்) அபிமானக் கிரந்தி எனப்படும். நாடீ பந்தக் கிரந்தியானது பிராணனோடு சம்பந்தப்பட்டது. அபிமானக் கிரந்தியோ மனத்தோடு சம்பந்தப்பட்டது.

உளமும் உயிரும் உணர்வும் செயலும்

உளவாங் கிளையிரண் டுந்தீபற

ஒன்றவற் றின்மூலம் உந்தீபற.

(உபதேச வுந்தியார் 12)

என்றபடி மனத்திற்கும் பிராணனுக்கும் பிறப்பிடம் ஒன்றே(இதயமே)யாகையால், மனத்தை விசாரித்து அழிப்பதால் அபிமானக் கிரந்தி அறும்போது நாடீ பந்தமும் அறுகின்றது. இராஜயோகத்தில் பிராண நிரோதம் செய்து நாடீ பந்தம் நீக்கப்பட்ட பிறகு, அதனால் ஒடுங்கும் மனத்தை ஸஹஸ்ராரத்திலிருந்து இதயத்துள் விடுக்கவே அப்போது பிறப்பிடத்தைச் சேர்வதால் அபிமானக் கிரந்தியும் நீங்குகின்றது.

ஒடுக்க வளியை ஒடுங்கும் உளத்தை

விடுக்கவே 58ஓர்வழி யுந்தீபற

வீயும் அதன்உரு உந்தீபற.

(உபதேச வுந்தியார் 14)

ஆயினும் அபிமானக் கிரந்தியே மூலமாகையால், ஆன்ம ஞானத்தால் அபிமான நாசம் ஏற்படாத வரையிலும், தூக்கம், மூர்ச்சை, காஷ்ட நிர்விகற்பம், மயக்க மருந்துகளின் பிரயோகம், மரணம் இவற்றால் தூலதேக நாடீ சம்பந்தம் தாற்காலிகமாக நீக்கப் பெற்றாலும், மீண்டும் சூட்சும தூல தேகங்களைத் தோற்றுவிக்கின்ற காரணதேக வாசனை வடிவில் அவ்வபிமானக் கிரந்தி மிஞ்சுவதால் புனர்ஜன்மங்கள் சாத்தியமாகின்றன. இதனால்தான் இராஜயோக முறையில் காஷ்ட நிருவிகற்ப சமாதியோடு நின்றுவிடாமல் (அது வெறும் மனோலயமேயாகையால்) மனோநாசமாகிற – தேகாபிமான நாசமாகிற – சகஜ நிருவிகற்ப சமாதியுற, ஒடுங்குமுளத்தை இதயத்துள் விடுக்க வேண்டுமென்று பகவானால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சகஜ ஞானியின் தேகத்தில், அபிமானக் கிரந்தி நசித்தபின்னும், நாடிகளில் சஞ்சரிக்கும் சைதன்யம் தாமரை இலைமேல் தண்ணீர் போலவும், எரிந்த கயிற்றுருவம் போலவும் பந்தஹேதுவாகாது. ஆகையால் எவ்வாற்றானும், அபிமானக் கிரந்தி நாசமே வாசனாக்ஷயமான சகஜ ஸ்திதிக்கு அவசியமானதாகும்.

நாடிகளோ ஸ்தூலமானவை; அதில் ஓடும் (சைதன்ய சக்தியோ) அறிவொளியோ அதிசூட்சுமமானது. மின்சக்திக்கு அது செல்லும் கம்பிகளோடு உள்ள சம்பந்தம் போன்றதே, ‘நான்’ என்ற அறிவொளிக்கும் நாடிகளுக்கும் உள்ள சம்பந்தம். அதாவது, இச்சம்பந்தம் கணத்திற் பிரித்துவிடவும், உண்டாக்கவும் கூடியதான நிலையற்ற ஒன்றாகும். இது தினமும் தூக்கத்தாற் பிரிவுபடுகிறது; விழிப்பாற் பிணைபடுகிறது, இப்படித் தினந்தினம் உடலோடு சம்பந்தமும் பிரிவும் பட்டுவருவது நம் அனைவர்க்கும் அனுபவமானதேயல்லவா? இந்தச் சம்பந்தம் உண்டாக்கப்படும்போது உடலுணர்வு வருகிறது. அது விலகும்போது உடலுணர்வு விலகுகிறது. உடலுணர்வும் உலகவுணர்வும் வேறல்ல என்பது முன்பே கூறப்பட்டுள்ளது. ஆகவே இக்கிரந்தி சம்பந்தமானது, கழற்றிப் போடும் நமது ஆடையாபரணங்களைப் போன்று, நம்மீது தொத்திக் கொண்டிருப்பதே – நமக்கு அன்னியமானதே – நிலையற்ற தாற்காலிகமானதே – பொய்யே! அதனால்தான் ‘உனக்கு அன்னியமாயிருப்பதிலிருந்து நீ உன்னைப் பிரித்துக் கொள்ளலாம்’ என்று ஸ்ரீ பகவான் ‘மஹர்ஷி வாய்மொழி’ என்ற நூலின் முதற் பாகம், ஐந்தாவது அத்தியாயத்தில் (பன்னிரண்டாம் பதிப்பு, 2008, பக்கம் 28ல்) கூறுகின்றார். இப்படி நிரந்தரமாகப் பிரிப்பதையே கிரந்திபேதம், மனோநாசம் என்றெல்லாம் கூறப்படுகின்றது. மீண்டும் வராதபடி என்பதாவது: அது வந்தது உண்மையா என்றறிவதற்காக ‘அது இப்போது இருப்பது நிஜமா?’ என்று அதை (அகந்தையை) நாடி விசாரிப்பதால் அடையப்படும் மெய்ந் நனவாகிய ஞான விழிப்பால், ‘அவ்விதம் ஒன்று என்றுமே வந்ததில்லை – எழுந்ததில்லை; உள்ளதே உள்ளது! – “இருக்கிறேன்” என்று இருந்தது இருந்தபடியே இருக்கிறது’ என்று உரமாய் அறிவதால், ‘பந்தம் எக்காலமுமே இல்லாதது – வராதது’ என்றுணரும் அறிவே (ஆன்ம ஞானமே) நிரந்தரமாகப் பிரித்துக் கொள்வதாம். இதை ஓர் சிறு உதாரணக் கதையால் விளக்குவோம்.

‘அந்தோ! நான் சிறையிடப்பட்டு விட்டேனே! முக்கோண வடிவான இவ்வறையில் நான் அகப்பட்டு விட்டேனே! எப்படி விடுதலையடைவேன்?’ என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். இரு சுவர்கள் சேரும் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த அவன் தன் எதிரே வந்துசேரும் வலப்புறச் சுவரிலும் இடப்புறச் சுவரிலுமாக மாறிமாறித் தன் இரு கைகளாலும் தடவிய வண்ணம், ‘வெளியேறும் வழியாக கதவோ சாளரத் துவாரமோ, ஒன்றுமே தென்படவில்லையே; எப்படி வெளியேறுவேன்?’ என்று புலம்பலானான்.

சற்று தூரத்தில் திறந்த வெளியில் நின்றுகொண்டிருந்த, அம் மனிதனின் நண்பன் ஒருவன் இக்கூக்குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். புலம்பும் தன் நண்பனின் நிலையைக் கவனித்தான். அத் திறந்தவெளியில் இரண்டு சுவர்கள் மட்டுமே இருந்தன. ஒன்றின் நுனி மற்றொன்றின் நுனியுடன் சேர்ந்ததாய் இரு பக்கங்களை மட்டுமே அவை மறைத்து நின்றன. அவ்விரு சுவர்களையே நோக்கியவனாய் அவற்றின் நடுவில் நின்றுகொண்டிருந்த அம்மனிதன், தனது பின்புறமும் சுவர் ஒன்று இருப்பதாகத் தவறாக நினைத்துக் கொண்டதால்தான், முக்கோணச் சுவர்களாலான ஓர் சிறையில் தான் அகப்பட்டுக் கொண்டதாய் வருந்துகின்றான் என்பதை அந்த நண்பன் கண்டுகொண்டான். அதனால் அந்நண்பன், ‘ஏன் சுவரைத் தடவிக்கொண்டே புலம்புகின்றாய்?’ என்று கேட்டான். ‘இம் முக்கோணச் சிறையிலிருந்து தப்பிக்க எங்காவது ஒரு வழி கிடைக்குமா என்று தேடுகின்றேன்; ஆனால், ஒரு வழியுமே கிடைக்கவில்லையே!’ என்றான் அம்மனிதன்.

நண்பன்: சரி; உன் பின்புறமுள்ள மூன்றாவது சுவரில் ஏதாவது வழி கிடைக்கிறதா என்று தேடிப் பாரேன்!

மனிதன் (பின்புறம் திரும்பிப் பார்த்து): ஆ, இங்கு யாதொரு தடையுமே இல்லையே! இவ்வழியே நான் ஒடி விடுகிறேன் (என்று கூறி ஓட முயன்றான்).

நண்பன்: என்ன! ஏன் ஓடுகிறாய்? ஓட வேண்டியது அவசியந்தானா? ஓடாவிட்டால் நீ சிறையிலா இருப்பாய்?

மனிதன்: ஓஹோ! ஆமாம்! நான் சிறைப்படவே இல்லையே! பின்னால் சுவரே இல்லாதபோது நான் சிறைப்பட்டதேது? நான் சிறைப்பட்டேன் என்பது எனது வீண் பிரமையே. நான் என்றுமே சிறைப்பட்டதுமில்லை; இப்போது விடுதலை பெற்றதுமில்லை; இனி, விடுதலைக்காக இச்சுவர்களின் அருகாமையிலிருந்து நான் ஓட வேண்டியதுமில்லை! என் பின்புறம் பாராத குற்றமே என் பந்த காரணம்; திரும்பிப் பார்த்ததே என் விடுதலையின் காரணமான சாதனை! நான் சிறையோ விடுதலையோ அற்றவனாய் என்றும் உள்ளபடியே உள்ளேன்! என்று அறிந்து அமைதியுற்றான் .

என்றேனு நம்மை யிழந்தோ மறந்தோநாம்

நின்றோமென் றெண்ணல் நிசமல்ல – அன்றிநிச

மாகுமே லிப்போ தடைந்தாலு மீண்டுமிழப்

பாகுமே யென்செய் வது?

(சாதனை சாரம் 311)

இழந்தடைந்தாற் போன்றதல விந்தபத மென்று

மிழந்ததே யில்லையெனக் காணல் – இழந்தடையு

மாற்றமிலா ஞானமொளிர் வான்கதிர்முன் பொய்யிருளா

மாற்றமெவ் வாறு வரும்?

(சாதனை சாரம் 312)

உற்றடைவ தல்லஅந்த வுள்ளபொரு ளன்னியம்போற்

பற்றியநம் வீண்கற் பனையகற்றி – நிற்றலேதான்

கற்பனையைப் போக்கல் கருத்துட் டிரும்பிநமில்

நிற்பதுவே றன்று நிலை.

(சாதனை சாரம் 313)

முன்னிலை–படர்க்கையே இக்கதையில் வரும் இரு சுவர்கள். தன்மையே பின்புறம் இருப்பதாகக் கருதப்பட்ட மூன்றாவது சுவர். முன்னிலை–படர்க்கை நாட்டத்தால் மோக்ஷத்திற்கு வழியேயில்லை. ‘நான் யார்?’ என்னும் தன்மை நாட்டம் ஒன்றினால்தான் தன்மையாகிய அகந்தை என்றுமே இல்லாதது என்ற உண்மையறிவு உதிக்கும்; இவ்வாறு தன்மையாகிய அகந்தையற்றால்தான் பந்த மோக்ஷங்களின் பொய்த்தன்மை புலனாகும்.

பத்தன்நான் என்னுமட்டே பந்தமுத்தி சிந்தனைகள்

பத்தன்ஆர் என்றுதன்னைப் பார்க்குங்கால் – சித்தமாய்

நித்தமுத்தன் தான்நிற்க நிற்காதேல் பந்தசிந்தை

முத்திசிந்தை முன்நிற்கு மோ?

(உள்ளது நாற்பது 39)

‘இடம்’ சம்பந்தமான தன்மை-முன்னிலை-படர்க்கை என்னும் முச்சுவர்களைப் போலவே, ‘காலம்’ சம்பந்தமான இறந்தகாலம்-எதிர்காலம்-நிகழ்காலம் என்றும் அம் முச்சுவர்களை வர்ணிக்கலாம். இறந்த-எதிர்காலங்களைப் பற்றி எண்ணாமல் நிகழ்காலத்தின் சரியான உண்மை எது என்று செய்யும் நிகழ்கால நாட்டத்தினாலும் சகல எண்ணங்களும் அழிய, ‘நிகழ் காலம்’ என்பதும் இருப்பற்று மறைய, காலாதீதத் தன்னிருப்புணர்வே மிஞ்சும். எவ்வாறெனின், தற்சமயத்துக்கு ஒரு விநாடி முன்பு நடந்ததை இறந்த காலம் என்கிறோம். ஒரு விநாடிக்குப் பிறகு நடக்கப்போவதை எதிர்காலம் என்கிறோம். ஆகையால் இப்போதைக்கு ஒரு விநாடிக்கு முந்திய காலத்தையோ, ஒரு விநாடிக்குப் பிந்திய காலத்தையோ கவனிக்காமல், தற்போது நிகழும் ஒரு விநாடியாகிய காலம் எது என்று கவனிக்க முயன்றால் தற்போது நிகழ்காலம் போலத் தோன்றும் ஒரு விநாடியின் கோடியில் ஒரு பங்கு நேரங்கூட ஒரு இறந்தகாலப் பகுதியாகவோ, அல்லது ஒரு எதிர்காலப் பகுதியாகவோ தான் இருப்பது தெரியவரும். இந்த அதிசூட்சும இறந்த எதிர்காலத்தையுங்கூடக் கவனிக்காமல் ஒதுக்கிவிட்டு, அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நிகழ்காலம் எது என்று கவனித்தால், சரியான நிகழ்காலம் என்று ஏதொன்றுமே உணரப்படாமற் போகும். இங்ஙனம் ‘நிகழ்காலம்’ என்ற கற்பனை இருப்பற்று மறையவே, காலங்கடந்த, ‘இருக்கிறேன்’ என்ற தன்னிருப்புணர்வே மிஞ்சும்.

நிகழ்வினைப் பற்றி இறப்(பு)எதிர்வு நிற்ப

நிகழ்கால் அவையும் நிகழ்வே – நிகழ்வொன்றே;

இன்றுண்மை தேரா(து) இறப்(பு) எதிர்வு தேரஉனல்

ஒன்றின்றி எண்ண உனல்.

(உள்ளதுநாற்பது 15)

நாமன்றி நாளேது, நாடேது நாடுங்கால்

நாம்உடம்பேல் நாள்நாட்டுள் நாம்படுவம் – நாமுடம்போ

நாம்இன்றன் றென்றுமொன்று நா(டு)இங்கங் கெங்குமொன்றால்

நாம்உண்டு நாள்நா(டு)இல் நாம்.

(உள்ளதுநாற்பது 16)

எனவே மூவிடங்களுள் தன்மையையோ, முக்காலங்களுள் நிகழ்காலத்தையோ நாடுவதொன்றே மோக்ஷ வழி. ஸ்ரீ ரமண வழியாகிய இதுவுங்கூட பந்த நிவிருத்திக்கோ, மோக்ஷப் பிராப்திக்கோ அல்ல! உண்மையில் என்றும் நமக்குப் பந்தமேயில்லை எனக் காணும் மெய்ஞ்ஞானத்தால் மோக்ஷ சிந்தையும் அற்றுப் பேரமைதியில் திளைப்பதற்கே ஸ்ரீ ரமண வழி அமைந்ததாம்!

தன்மையிட முஞ்சாருந் தற்கால முந்தேடச்

சொன்னவிடங் காலமிதைச் சூட்சுமமாய் – மன்னுவையேல்

யோகம் முடிந்துசித்தி யுற்றவனா யான்மபர

போகமுண்பாய் கண்டு புசி!

(சாதனை சாரம் 447)

இது நிற்க, சாதகன் ஒருவன் ‘நான்’ என்ற தன்மையுணர்வை நாடும்போது, உடலெங்கும் நாடிகள் மூலம் பரவிக் கிடந்து, முன்னிலை-படர்க்கைகளை அறிகிற, சைதன்ய உணர்வின் பரவும் சக்தியானது (ஓட்ட வேகமானது) தன்னை நாடும் தற்கவன சக்தியாக உருமாற்றி உபயோகிக்கப்படுவதால், அது நாடிகளிற் பரவுதலை நீத்து, திசைமாறித் திருப்பமுறுகிறது. இதையே நாடிகளின் கடைதல் அல்லது மதனம் என்பர். நாடிகளில் நேரும் இக்கடைதலால் ‘நான்’ என்ற உணர்வு (பின்நோக்கி) மீட்சியுற்றுத் திரும்பிவந்து, தாம் முன்பு பல நாடிகளிற் பிரிந்த இடமாகிய மூளையில் ஒன்றுசேர்ந்து, மீண்டும் அங்கிருந்து, தான் எழுந்த இடமாகிய இதய மூலத்தினுள் – சுத்த அறிவில் மூழ்கி நிலைபெறுகிறது.

இராஜயோகத்திற் பிராண கும்பகத்தால் உண்டாக்கப்படும் அழுத்தும் சக்தியை உபயோகித்து நாடிகளிற் பரவிய இந்த ‘நான்’ என்ற அறிவொளி அது கிளம்பிய மூலத்தை நோக்கி உந்தித் தள்ளப்படுகிறது. ஆனால், இது பலாத்காரமான முறை. ‘பிராண கும்பகத்தால் இவ்வாறு செய்வது, ஓடும் ஒரு பசுவை விரட்டிச்சென்று, அடித்துப் பிடித்து, இழுத்துவந்து தொழுவத்திற் கட்டுவது போன்ற முரட்டு வழி’ என்றும், ‘விசாரத்தால் இம்மீட்சி வேலையை இயற்றுவது, அப்பசுவிற்குப் புல்லைக் காட்டிக் கவர்ச்சியுண்டாக்கித் தடவிக் கொடுத்து, அதைத் தாமே நம் பின் வரும்படி செய்து, கொண்டுவந்து தொழுவத்திற் கட்டுவது போன்ற சாந்த வழி’ என்றும் பகவான் கூறியதுண்டு. இதுவே சாந்தமான வழி. பிராண கும்பகத்தால் உண்டாக்கப்படும் நாடிகளின் மதனத்தை(கடைதலை)த் தேகம் தாங்க வேண்டுமாயின், அதற்கு இளமையும் வலிமையும் அவசியம். மூப்போ பலஹீனமோ உள்ள சரீரத்தில் இம்முறையில் கடைதல் உண்டாக்கப்பட்டால், அத்தேகம் தாங்க அசக்தமுடையதாகையால் பல இன்னல்களும், நோய்களும், பைத்தியம் போன்ற மூளைக் கோளாறுகளும் உண்டாக ஹேதுவுண்டு. ஆனால், விசார வழியினால் உண்டாக்கப்படும் கடைதல் சாந்தமானதால் அத்தகைய ஆபத்துக்களுக்கு இடமில்லை.

ஞான சொரூபான்ம நம்பனைப் பற்றியுளத்

தூனமறு நிட்டை யுறப்பயின்றே – தானறிவு

மத்த முறக்கலங்கி மாழ்கலமு துண்டொருவன்

செத்தொழித லேயாந் தெரி.

(குருவாசகக் கோவை 745)

தூக்கத்தில் சிரமமின்றி ஒடுங்குவது போலவே, விசாரத்திலும் அமைதியாக இம்மீட்சி வேலை நடைபெறுகிறது. ‘முப்பதாம் ஆண்டளவில் இது முடிந்துவிட வேண்டும்’ என்று சில நூல்களிற் கூறப்படுவது போன்ற வயதின் எல்லையானது இராஜயோக வழிக்குப் பொருந்துமே தவிர, விசார நெறியான ஸ்ரீ ரமண வழிக்கு அல்ல!59

இதயத்திலிருந்து கிளம்பிச் சென்று தேகமெங்கும் வியாபித்திருந்த ‘நான்’ உணர்வைத் திரும்ப வரவழைக்கும்போது அனுபவப்படுகிற அதன் உணர்வுப் பாதையே ‘சுஷும்னை’ நாடி எனப்படுகிறது. கை கால்கள் உபாங்கங்களே யாகையால், அவைகளை நீக்கி, உடலின் அடிப்பாகத்தினின்றும் உச்சந்தலை வரை (மூலாதாரம் முதல் ஸஹஸ்ராரம் வரை) அனுபவப்படும் ‘நான்’ உணர்வுப் பாதையே ‘சுஷும்னை’யாகும்.

சாதகனின் அகவுணர்வு இவ்வாறு மீட்கப்படும்போது, அவன் ஆறு ஆதாரங்களின் ஸ்தான அனுபவங்களைப் பெற்றாலும் பெறலாம்; பெறாமல் ஒரேயடியாக இதயத்தையடைந்தும் விடலாம். புகைவண்டியில் டில்லிக்குச் செல்பவன் வழியிலுள்ள வண்டி நிலையங்களையும், காட்சிகளையும் பார்த்துத்தான் செல்ல வேண்டுமென்பதில்லை. அவைகளை நாடியறியாமல் சுகமாகத் தூங்கிக் கொண்டும் சென்று டில்லியை அடையலாமல்லவா? அதுபோல, காலதேசத்துக்குட்பட்ட பற்பல நாம ரூபாதி தெய்வங்களின் பூர்வ உபாசனா வாசனைகளுக்கேற்ப சிலருக்கு ஆறாதார ஸ்தானங்களும், அங்கு பலவித தெய்வீகக் காட்சி, நாதம் முதலிய அனுபவங்களும் உண்டாவதுண்டு; அத்தகைய வாசனைத் தடையற்றவர்கட்கு வழி நிர்விசேஷமாய் சுகமாய் அமைவதுமுண்டு. முன்னதற்குக் காரணமென்னவெனில், இது தன்னாட்டத்தில் சோர்ந்து விலகுவதாகிய பிரமாதத்தால் விளைவதே! இவை அங்கு நேரும் முன்னிலை நாட்டமே! இதுவே தன்னாட்டம் இழக்கப்பட்டதைக் காட்டி விடுகின்றது! பிரமாதத்தால் (செய்வன தவிர்த்தலால்) தன்னாட்டம் தவிர்வதற்குச் சற்றும் இடங்கொடாத தீவிர சாதகர்கட்கு இவ்வறிபடு பொருள்கள் தோன்றா! ‘எல்லோரும் தரிசனங்கள் கண்டதாகக் கூறுகிறார்களே! எனக்கு ஒன்றும் காணப்படுவதில்லையே’ என்று ஸ்ரீ விவேகானந்தர் ஒருமுறை ஸ்ரீ ராமகிருஷ்ணரை வினவியபோது, ‘அது நல்லதே!’ என்று குரு சொன்னது இங்கு கவனிக்கப்பட வேண்டியதே. அதுமட்டுமன்றி தூரதிருஷ்டி போன்ற சில சித்திகள் கைவருவதாக ஸ்ரீ விவேகானந்தர் கூறியபோது, அவரது குருநாதர் ‘சாதனையைக் கொஞ்ச காலம் நிறுத்திவிடு; அவை நீங்கட்டும்’ என்று எச்சரித்ததும் இங்கு கவனிக்கத்தக்கதே! ஆகவே, பிரமாதத்தால் தன்னாட்டம் தடைபட்டுத் தங்கிச் செல்வோர்க்கே இவ்வனுபவங்கள் உண்டாகும்.

மீட்கப்படும் அகவுணர்வு, சுஷும்னையில் மட்டுமே சஞ்சரித்தாலும், அதன் காந்தியால் (அதி தீக்ஷண்யத்தால்) அவ்வொளிப்பாதையின் அருகாமையில் உள்ள (ஐம்புலன்களையும்) ஞானேந்திரியங்களையும் அது நன்றாய்ப் பிரகாசிக்க வைப்பதால் இவ்வனுபவங்கள் உண்டாகின்றன. எவ்வாறெனின், ‘நான்’ உணர்வின் ஒளி சுஷும்னையில் நின்று காட்சிப் புலனை அனுசரிக்கும்போது ஈசுவராதி ரூபங்களும், திவ்விய பல உலகங்களும் தரிசிக்கப்படும்; கேள்விப் புலனைச் சம்பந்திக்கும்போது தெய்வீக நாதங்களும், ஓங்கார ஓசையும் உணரப்படும்; நாசிப் புலனை அனுசரிக்கும்போது, திவ்விய சுகந்தங்கள் அனுபவிக்கப்படும்; சுவைப்புலனை அனுசரிக்கும்போது, அமிர்த பானம் பண்ணுவது போன்ற சுவையுணர்வு பெறப்படும்; ஸ்பரிசப் புலனை அனுபவிக்கும்போது அபரிமிதமான சுகவுணர்வு உடலெங்கும் பாய்வது போலவும், ஒருவித சுகக்கடலில் தான் மிதப்பது போலவும் உணரப்படும். நனவில் உடலெங்கும் சிதறிக் கிடந்த அசுத்த அகவுணர்வால் தூல பஞ்சேந்திரியங்கள் தொழிற்பட்டபோது அனுபவமான உலகாதிகளினும், தற்போது குவியப்பெற்றுத் திரண்டுற்ற சுத்த அக உணர்வால் தொழிற்படும் சூட்சுமப் பஞ்சேந்திரியங்களின் மூலம் பெறப்படும் காட்சியாதி அனுபவங்கள் நனவைவிட அதிகத் தெளிவும் உண்மையும் உடையன போற் காணப்படுவதில் வியப்பொன்றுமில்லை. ஆயினும், இவை யாவும் விசேஷமான மனவுணர்வே தவிர, நிர்விசேஷத் தன்னுணர்வு (ஏகான்மவுணர்வு) ஆகாது!

ஏனெனில், உண்முகப்பட்ட, ஒருமுகப்பட்ட இந்நிலையில் மனம் அதி சூட்சுமமும், விஷய ஆசாபாசமற்ற பரிசுத்தமுமாக இருக்கிறபடியால் பூர்வ சுபகர்ம வாசனைகளையே பஞ்சேந்திரியங்களின் மூலம் சப்த, ரூப, ரஸ, கந்த, ஸ்பரிச அனுபவங்களாக விரித்துக் காட்டுகிறது. அதனால் இத்தரிசனாதிகளைக் கொண்டு மனம் ஆன்ம மயமாகிவிட்டதாகத் தீர்மானித்துவிடக் கூடாது. அப்போதுங்கூட அது நாசமாகாமல் பிழைத்திருந்து, மேற்கூறிய முன்னிலை- படர்க்கைகளை அதி சூட்சுமமும் தீக்ஷண்யமுமானவைகளாக சிருஷ்டி செய்து, தானே கண்டு, களிக்கின்ற சுப வாசனா வயத்ததாகவே உள்ளது என்க. இவை வாசனா க்ஷயமான நிர்விசேஷ ஞானானுபவமல்ல. எது தோன்றினாலும் அல்லது அனுபவிக்கப்பட்டாலும் அது முன்னிலை உணர்வேயாகையால் அப்போது சாதனையாகிய தன்னாட்டம் நழுவிப் போயிற்று என்றே அதற்கு அர்த்தம்! இவ்விசேஷ சுவை, ஒளி, நாதமாதி அனுபவங்களையே பிரம்மஞானப் பேறு என்றும், அவைகளைப் பெற்றுவிட்டதால் முக்தியடைந்து விட்டதாகவும் எண்ணிக்கொண்டு முன்னிலைகளாகிய அவைகளிலேயே மேன்மேலும் நாட்டத்தை வைத்துக்கொண்டு தற்கவனச் சாதனையை நிறுத்திவிடும் சாதகர்கள் யோகப் பிரஷ்டர்களாகின்றனர்! டில்லிக்குப் புகைவண்டியிற் செல்பவன் இடையில் ஏதாவதொரு வண்டி நிலையத்தின் கவர்ச்சிகரமான காட்சியால் மயங்கி, ‘இதுதான் டில்லி’ என்று வண்டியை விட்டு இறங்கிவிடுவது போன்றதே இது! சாதனையின் இடையில் வரும் அமானுஷ்ய சக்திகளாகிய சித்திகளுங்கூட, இவ்வாறே நம் மோட்சப் பிரயாணத்தைக் கெடுத்து, வழியில், முன்பின் தெரியாத ஊரில் நம்மை இறக்கி விட்டுவிடுகிற நமது பிரமைகளேயாகும்.

இவ்வாபத்துக்களிற் சிக்காமல் தப்ப என்ன செய்வது? இந்நிலையிலும் பகவான் ஸ்ரீ ரமணர் அளித்த உபாயமே தக்க மருந்தாகின்றது! எவ்வாறெனின், மேற்கூறிய விசேஷ அனுபவங்களின் சமயத்தில் ‘இவை யாருக்கு உணர்வாகின்றன?’ என்ற ரமணாஸ்திரத்தையே பிரயோகிக்க வேண்டும்! ‘எனக்கு’ என்பதே பதிலுணர்வு! அதனின்றும் ‘நான் யார்?’ என்று உடனே தன்னாட்டத்தை மீண்டும் பற்றிக்கொள்ள முடியும். அப்போது முன்னிலை-படர்க்கைகளாகிய அவ்விசேஷங்கள் கவனிப்போனற்றுப் போவதால் (பிறர் பிடிக்கப் பிடிக்கப் பேயாடுவோனது ஆவேசம், பிடிப்பார் அற்றால் மலையேறி விடுவது போல) தாமே மறைந்து அகலும். அவ்விசேஷ வெளிவிடயங்களை விட்டு மனம் மறுபடியும் தன் ஒளியுரு நோக்கித் திரும்பவே, தன் பிறப்பிடமாகிய இதய மூலத்துள் மூழ்கி உருவழியும். ஆகவே ‘நான் யார்?’ விசாரம் ஒன்றேதான் (யோகாப்பியாசமுள்ளவர்களுக்குங்கூட) முடிவுவரை நம்மைக் கொண்டு சேர்க்கும் (உய்விக்கும்) மகோன்னத சாதனமாகும். இது ஸ்ரீ ரமண சற்குரு அநுக்கிரகத்தாற் பெறக்கூடிய பிரம்மாஸ்திரம் ஆகும்! உலக லக்ஷியமாகிய சுகப் பாதையில் வழி தவறிவிடாமல் நம்மைக் காப்பாற்றும் வழிகாட்டியாகும். இதுவே நம்மை நாமாக்கும் ஸ்ரீ ரமண வழி ஆகும் !!!

சாதனைக் காலத்தில் அப்பியாசத்தால் இதுவரை அகந்தையின் ஒடுங்கு நிலையும், தான் லட்சியமாக்கிக் கொண்டுள்ள தன்னுணர்வு என்பது இன்னதுதான் என்ற அனுபவமும் சாதகனுக்கு இப்போது ஏற்பட்டு வரும். உடலற்ற, உபாதியுணர்வற்ற, தன் சுத்த இருப்பு அடிக்கடி அனுபவப்படுமாயினும் இது இன்னும் அப்பியாச நிலையே தவிர முடிந்த நிலையல்ல! ஏனெனில், புறமுகப்படுவதாகவும் உண்முகப்படுவதாகவும் இருவேறு உணர்வுகள் இன்னும் இருந்து வருவதாலும் உண்முகப்படும் முயற்சியும் புறமுகப்படுவதாகிய அம்முயற்சியின் ஓய்வும் உணரப்படுவதாலும் ‘இவ்வனுபவம் இறுதியல்ல’ எனப்பட்டது.

அகநோக்க மென்னப் புறநோக்க மென்ன

நிகழ்நோக்க வேற்றுமை யின்றித் – திகழ்நோக்க

மொன்றேயா வென்று மொழுகுஞ் சிதம்பரனே

பொன்றாத் திதப்பிரஞ்ஞ னாம்.

(குருவாசகக் கோவை 1111)

இதைப்பற்றி பகவான், ‘சாதனையில் (இங்ஙனம்) மனம் (நாட்டம்) நிலைத்து விடுமாயின் அப்போது உள்ளேயிருந்து ஒரு சக்தி கிளம்பி, மனத்தைத் தன் வசமாக்கிக் கொண்டு அதை இதயத்திற் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும்’ என்று கூறியருளியுள்ளனர். இத்‘திருவருட் சக்தி’, எனப்பட்டது யாதெனின், இதயத்தில் ‘நாம்’ என்று விளங்கும் பரமான்மாவின் சுபாவ அருட்பெருங் கருணை வடிவான, நம் இருப்பின் பரிபூரண விளக்கமே!

ஓர் காந்தப் பிரதேசத்துள் (magnetic field) கிடக்கும் ஊசி தன் துரு நீங்கப்பெற்றால் பிறகு இழுக்கப்பெறுவது இயல்பே. அதனால். ஊசியின் துரு நீங்கிய பிறகுதான் காந்த சக்தி அங்கு உண்டாகிறதென்று கொள்ளக் கூடாது. காந்தப் பிரதேசம் முழுவதிலும் எப்போதும் கவர்ச்சி சக்தி இயல்பாக இருந்துகொண்டே இருக்கிறதல்லவா? ஊசி அக்காந்தப் பிரதேசத்திலேயே அத்தனைக் காலமும் இருந்தாலும், துரு நீங்கப் பெறுமளவிற்கே அச்சக்தியின் இழுப்பையுணர்கிறது. அது போல் வெளிமுகம் நீங்கி, தன்மை நாட்டத்தில் முயல்வதெல்லாம் துரு நீங்குவது போன்றதே! அதனால், ஆன்ம விரிகதிரால் யாவும் கவர்ந்து விழுங்கிக்கொண்டே விளங்கும் அருள்ஞான காந்தப் பிரதேசமாகிய இதய விளக்கத்திற்கு வசமாவதே முயல்வின் பயன். பரிபக்குவமுள்ளோர் இவ்விதய விளக்கமாகிய சக்தியை எதிர்க்காமல் அதற்கு இஷ்டத்துடன் வசமாவர். மற்றவர்களோ அஞ்சி, புறமுகப்பட்டு வெளி நாட்டமடைந்து விடுவர். ஆகையால், தன்னை அறியவேண்டும் என்ற ஆவல் (பக்தி) மிகுதியாலும், முன்னிலை-படர்க்கைகளை நாட விரும்பாத விராக(வைராக்கிய)த்தாலும் தன்னைப் பக்குவமாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு, ‘சாதகன்’ என்ற தனி வியக்தியே (தனி இருப்பே) விழுங்கப்படுவதால் அவனது ‘முயற்சி’ என்பதும் இல்லாததாகிறது. இவ்வாறு உடலெங்கும் நாடிகளின் மூலம் பரவிக்கிடந்த ‘நான்’ உணர்வு இதயத்துள் மூழ்கவே, மெய்ந் நனவாகிய ஞான விழிப்பு உண்டாகிறது. இது ஒருகணத்து நிகழ்வே!

சாவென்ப தோர்கணத்துச் சார்வே; துயில் விடற்கும்

ஆவ தொருகணமே; அவ்வாறே – ஜீவமயல்

தீர்வ தொரேகணத்துத் தீர்வேதான் ! மெய்யுணர்வு

கூர்வதும் பின்னர் குலைவதுமாய் – நேர்வதல்ல;

அவ்வா றுணருங்கால் அப்பியாச மேசொல்வ

தொவ்வாது ஞானத்தை யுற்றவனாய் – செவ்வையாம்

ஞான விழிப்(பு) ஒருவி நாடி நிகழ்ச்சியே,

ஆனநெடு நாளடைவில் ஆவதல்ல – ஊனமில்லாப்

பக்குவத்தைச் சாரவே பல்லாண்டு சாதனைகள்

தக்கதிட் டாந்தம் தருவேன்கேள் – மக்கள்

மருந்திட்டுக் கல்லிட்டு மத்திட்(டு) இடித்துப்

பொருந்தத் திரியிட்டுப் பூசித் – தருந்தணலை

ஈட்டுங் கணத்தே இடிபோன் றொலிக்கும்அதிர்

வேட்டும் வெடிக்கும் விதம்போலக் – கேட்டும்

படித்தும், பயின்றும், பலநெடுங் காலம்

துடித்துமனச் சுத்தியுற்ற பின்னர் – நொடிப்போதில்

சட்டென்(று) அகமகமாம் சற்போதம் மேவும், இது

தொட்டவுடன் உண்மைத் துலக்கத்தால் – வெட்டவெளி

யானவிது தானே அனாதியாய் நம்மியல்பாம்

ஞானமெனக் காண்டலால், நாட்டமுமே – மோனமுற

என்றும் எதுவும் இனியியற்றல் எய்தலின்றி

நின்றிடுவ தேமெய்ந் நிலை!

(சாதனை சாரம் 324)

இப்போது நாம் உணரும் (ஜாக்கிரம்) நனவு உண்மையான விழிப்பு நிலையல்ல. இந்த ஜாக்கிரமும் சொப்பனமே. இந்நனவுக்கும் கனவுக்கும் யாதொரு பேதமுமில்லை. இவ்விரண்டிலும் ‘நான்’ என்ற உணர்வு ஓருடலை அபிமானித்துப் பற்றிக்கொண்டு பிறவற்றைக் கண்டு வியவகரிக்கிறது. இந்நனவுக் கனவாகிய சொப்பனத்தினின்றும் மேற்கண்டவாறு விழிப்படைவதே ஞானவிழிப்பான மெய்நிலை அல்லது மெய்ந்நனவு60.

சிலர் இங்கு, ‘நாம் ஒரு சொப்பனத்திலிருந்து விழித்து இப்போதுள்ள ஜாக்கிரமாகிய மற்றொரு சொப்பனத்திற்கு வந்திருக்கிறோம் என்று கூறினால், இனி இதிலிருந்து விழித்த பின்னும், அதுவும் இதுபோன்றே ஒரு சொப்பனமாயிராதா? “இனி மீண்டும் ஓர் விழிப்பு அவசியமில்லை; இதுவே மெய்ந் நனவு” என்று எப்படி நிர்ணயிப்பது?’ என்று கேட்பதுண்டு. நாம் ‘விழிப்பு’ என்று உணர்கின்றது எந்த நிலையானாலும் சரி, எது காறும் அங்கு முன்னிலை- படர்க்கைகளாக தனக்கு அன்னியமான பொருள்களின் இருப்பு உணரப்படுகிறதோ அதுவரை அது மெய்ந் நனவல்ல; சொப்பனமே!

எந்நிலையி லொன்றை யெதிரிட்டுக் காண்பதிலை

எந்நிலையி லொன்றை யெதிரிட்டுக் – கேட்பதிலை

எந்நிலையி லொன்றை யெதிரிட் டறிவதிலை

அந்நிலையே பூமா வறி.

(குருவாசகக் கோவை 1005)

எந்நிலையில் நமக்கு அன்னியமாக மற்றெதுவும் உணரப்படாமல் நமது இருப்புணர்வு (பிரக்ஞை) சுயமே (எவ்வுடற் சார்புமற்று) விளங்குகிறதோ அதுவே மெய்ந்(நிலை) நனவு. பூரணமான தன் பிரக்ஞையும், அந்நிலையில் தனக்கு அன்னியமாக மற்றொன்றும் அறியப்படாத ஏகத்துவமுமே விழிப்பின் இலக்கணம்! இதைக்கொண்டு கண்டு கொள்க. இவ்விழிப்பையே பகவான்:

தன்னை மறந்து தனுவேதா னாவெண்ணி

எண்ணில் பிறவி யெடுத்திறுதி – தன்னை

உணர்ந்துதா னாதல் உலகசஞ் சாரக்

கனவின் விழித்தலே காண்!

(ஏகான்ம பஞ்சகம் 1)

என்றனர்.

ஒரு பெரிய ஹாலின் குறுக்கே இரு சுவர்கள் எழுப்பப்பட்டால் அவ்வொரேயிடம் மூன்று அறைகளாகி விடுவது போல, உபாதியற்று ஏகமாய் எப்போதும் உள்ள நம் இருப்புணர்வின் குறுக்கே (தோற்ற மாத்திர) வாசனா வயத்தால் சொப்பனம், ஜாக்கிரம் என்ற இரு உடலுபாதி நிலைகள் கிளம்பும்போது, அகண்ட ஏகமாய் இருந்த நம் யதார்த்த நிலையே ஜாக்கிரம், சொப்பனம், தூக்கம் என்ற மூன்று நிலைகளாகக் காணப்படுகின்றன. புதிதாகக் கிளம்பிய ஜாக்கிர சொப்பனமெனும் இவ்விரண்டும் இல்லாவிட்டால் அது ஒரே தன்னிலைதான். இம்மூன்றையும் உண்மையாகவே கொள்ளும் மந்தாதிகாரிகளுக்காகவே ஞான விழிப்பாகிய நம் யதார்த்த மெய்ந்நனவை நான்காவதாகிய துரீயம் என்று சாஸ்திரங்கள் கூறின. உண்மையில் இது (இந்த நான்காவதான துரீயம்) மற்ற மூன்று நிலைகளின் இன்மையால், முதலாவதேயாகி விடுவதால் இதைத் துரீயம் என்றோ, ஓர் அவஸ்தை (துரியாவஸ்தை) என்றோ குறிக்க வேண்டியதுமில்லை. இக்காரணத்தால் இது அவஸ்தாதீதம்; இதையே துரியாதீதம் என்பது; தவிர, அதை மற்றொரு ஐந்தாவதவஸ்தையாகக் கருதக் கூடாது. இதையே பகவான்,

நனவு கனவுதுயில் நாடுவார்க்(கு) அப்பால்

நனவு துயில்துரிய நாமத் – தெனும்அத்

துரிய மதேயுளதால், தோன்றுமூன்(று) இன்றால்,

துரிய வதீதம் துணி.

(உள்ளது நாற்பது அனுபந்தம் 32)

சுழுத்திமயல் பீறிச் சுடர்துரியந் தோய்ந்தங்

கழுத்தமுற நிற்கலா தார்க்கே – கொழுத்த

முதன்மூன் றவத்தை முயக்கமொடு நாலைந்

ததன்வேறு பாடு மறி.

(குருவாசகக் கோவை 567)

என்று குறிப்பிட்டனர்.

மேற்கூறிய தன்னாட்டத்தால் நம் இருப்புணர்வில் ஊன்ற ஊன்ற கவனிப்பாரற்று வாசனைகள் நாசமாவதால், தோற்ற மாத்திர இவ்வாசனைகளால் எழுப்பப்பட்ட ஜாக்கிர சொப்பனங்களும் நாசமாகும். அதன்பின் மீதியுள்ள இவ்வொரே நிலைக்குத் ‘தூக்கம்’ என்று பெயரிடக் கூடாது.

கனாநனாக் கட்குத்தான் காரணமா நின்ற

அனாதிமல வாதனைபோ யற்றால் – இனாத

கதிபடரக் கூட்டும்பாழ்ங் கண்ணுறக்க மூடம்

அதீததுரி யாவவத்தை யாம்.

(குருவாசகக் கோவை 460)

இதுவரை ‘தூக்கம்’ என்று சாமானிய மக்களால் உணரப்பட்ட நிலையானது, நனவு கனவுகளாற் குலைத்து அழிக்கப்படுவதால், அற்பமாய், நிலையற்றதாய்த் தோன்றியது. அதனால்தான் இந்நூலின் 22-23ஆம் பக்கங்களில் தூக்கம் ஓர் குறைபாடுள்ள நிலை என்றும், 22ஆம் பக்கத்தின் கீழ்க்குறிப்பில் தூக்கத்தின் உண்மை இயல்பு பிறகு தரப்படும் என்றும் காட்டப்பட்டது. எனவே, மெய்ந் நனவு எனப்படும் நம் யதார்த்த நிலை ஒன்றே பரம ஸத்தியமாம்.

இம்மெய்ந் நனவு புதிதாக ஏற்பட்ட ஓர் அவஸ்தையாவதில்லை. ஆகையால், ஜீவன் முக்தனுக்குத் தன் முக்தி ஓர் நினைப்பாவதில்லை! அதாவது பந்தம் உண்மையாகாததால் முக்தி நினைப்பு அவனுக்கில்லை!! எனின் பந்த நினைப்பு இனி எவ்வாறு அவனுக்கு வரும்? பத்தனுக்கே (பந்தப்பட்ட அஞ்ஞானிக்கே) பந்தத்தைப் பற்றியும் முக்தியைப் பற்றியும் நினைப்பு! ஆகையால், பந்த வீடு அற்ற பரசுகம் (முதல் அத்தியாயத்திற் கூறியபடி உலக உயிர்கள் அனைவரின் ஏக லக்ஷியமான ஒழிவிலா இன்பத்தை) உற்றவாறு இந்தத் தன்னிலை நிற்றலே பகவான் ஸ்ரீ ரமணர் நம்மைப் பணித்தவாறு இறைபணி நிறைவேற்றி நிற்றலாகும். இதுவே நம் கடமை. இதுவே ஸ்ரீ ரமண வழியாம்.

பந்தவீ டற்ற பரசுக முற்றவா

றிந்த நிலைநிற்ற லுந்தீபற

இறைபணி நிற்றலா முந்தீபற.

(உபதேச வுந்தியார் 29)

ஸ்ரீ ரமண வழி முற்றிற்று. ஸ்ரீ ரமணார்ப்பண மஸ்து.

51 உலகை உய்விக்கும் இரு பெரும் உயர் வழிகளாகப் பகவான் ஸ்ரீ ரமணர் தமதனுபவத்திற்கண்டு உலகுக்களித்தவை ‘நான் யார்’ விசாரமென்னும் ஞான மார்க்கமும், ‘சரணாகதி’ என்னும் பக்தி மார்க்கமுமே. ஸ்ரீ ரமண வழியில் (அதாவது, இம் முக்கிய பாகத்தில்) கேவல, சுத்த, ஞான மார்க்கமாகிய ‘நான் யார் விசாரம்’ மட்டும் விளக்கப்படுகிறது. இதன் அனுபந்தத்திற் ‘பக்தி’ என்னும் இரண்டாவது அத்தியாயத்தில் இப் பரபக்தியின் விளக்கம் நன்கு காணக் கிடைக்கும்.

52 உருப்படுவான் – ஆன்ம உருவை – சொரூப சாட்சாத்காரத்தை அடைவான்.

53 ‘விசாரசங்கிரகத்’தின் முதல் அத்தியாயத்தினின்றும், மேலும் ‘நான் யார்?’ என்ற நூலின் முழுமையினின்றும் தொகுக்கப்பட்டவைகளே இவையாகும்.

54 குருடன் கதையாவது: பிறவிக் குருடன் ஒருவன், தனக்கோர் குழந்தை பிறந்திருப்பதாக வந்த செய்தியைக் கேட்டு சந்தோஷம் அடைந்திருந்தான். மறுநாளே அக்குழந்தை இறந்துவிட்டதாக மற்றொருவன் செய்தி கொண்டு வந்தான். அதைக் கேட்ட குருடன் வருந்தி வினவலானான்: ‘என் குழந்தை எப்படி இறந்து போயிற்று?’ ‘பால் குடித்த போது.’ ‘பால் என்றால் எப்படியிருக்கும்?’ ‘வெண்மையாக.’ ‘வெண்மை எப்படியிருக்கும்?’ ‘கொக்கைப் போல.’ ‘கொக்கு எப்படியிருக்கும்?’ செய்தி கொண்டுவந்தவன் பொறுமையிழந்தவனாய், தன் முன்கையை வளைத்துக் காட்டி, ‘இப்படியிருக்கும்’ என்றான். குருடன் அதைத் தடவிப் பார்த்ததும், ‘ஆ! இவ்வளவு பெரிய பொருளை என் சிறு குழந்தை விழுங்கினால் இறக்காமல் என்ன செய்யும்?’ என்று கலங்கினான்.

55 ஒவ்வொரு படியும் ஒரு அடி உயரமுள்ளதாகக் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகளின் உச்சியிலிருந்து ஒரு ரப்பர் பந்து உருண்டு விழுவதாக வைத்துக் கொள்வோம். இரண்டாவது படியில் விழுந்ததும் அரை அடி உயரம் அது எழும்புகிறதென்றால், மூன்றாம் படியில் விழும்பொழுது ஒன்றரை அடி உயரத்திலிருந்து விழுந்ததாகி விடுகிறதல்லவா? அதனால், முக்கால் அடி எழும்பும். அடுத்த படியில் விழும் உயரமோ ஒன்றே முக்கால் அடி ஆகிவிடும். இவ்வாறு வரவர இயல்பாக வேக மிகுந்துவிடுகிறது (gaining momentum) அல்லவா? அதுபோல் எனக் கொள்க.

56 இந்நூலாசிரியர் அவ்வப்போது தன்னை வினவிய சாதகர்கட்குச் சந்தேக நிவர்த்திக்காக எழுதித்தந்த சாதனைக்கு மிக்க உபயோகமாயுள்ள தனிப் பாடல்களை எல்லாம் தொகுத்து, கையெழுத்துப் பிரதி வடிவிலிருந்த செய்யுள் நூலே இச்சாதனை சாரம். இது ஒரு தனி நூலாக வெளிவந்துள்ளது.

57 மேகங்கள் ஓடுவதால் சந்திரனே மறுதிசையில் ஓடுவதாகக் காணப்படுவது போல, வாசனைகளின் வரவும் நீக்கமுமாகிய கிரியையால், நம் இருப்புணர்வானது அடிக்கடித் தாமே வந்து வந்து நம்மைப் பற்றுவதும் விட்டுப்போவதும் போலத் தோன்றுகிறது.

58 ‘ஓர்’ என்ற சொல் - ‘ஒரு’ என்றும், ‘உணர்’ என்றும் இருபொருள் தந்தாலும், ‘உணர்’ என்ற பொருளே ஸ்ரீ பகவானுக்குச் சம்மதமான கருத்தாகக் கொள்ளப்பட வேண்டும் என்பது ஸ்ரீ பகவானது உபதேசத் தொகுப்பான ‘குருவாசகக் கோவை’யின் 392-ஆவது பாடலால் ஊர்ஜிதப்படுத்தப்படும் விளக்கத்தை உபதேசவுந்தியார்-விளக்கவுரை’ என்ற நூலில் பக்கம் 119-லிருந்து 122 வரை காண்க.

59 ஞான வாசிட்டத்தின் சூடாலை கதை இதற்கு உதாரணமாகும்.

60 ‘சாதனை சாரம்’ என்ற நூலின் பாடல்கள் 250 முதல் 282 வரையும், இந்நூலின் பிற்பால் 2-ஐயும் இங்கு உடன் வாசித்துணர்க.

 

Contents