ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

‘நான் யார்?’ விசாரம் ஸோஹம் பாவனை அல்ல (Chapter 6)

Contents

அத்தியாயம்-6.
‘நான் யார்?’ ஸோஹம் பாவனை37 அல்ல!

ஒரு தொட்டியில் உள்ள ஓட்டைகளைக் கவனித்து முதலில் அடைத்துவிட்ட பிறகே நீர் நிரப்புகிறோமல்லவா? அவ்வாறில்லாவிட்டால் ஜலம் வார்க்கும் முயற்சி பெரிதும் வீணாகிவிடுகிறது. அது போலவே, ‘நான் யார்?’ என்ற ஆன்ம விசாரத்தைச் செய்யும் முறையை விளக்குவதற்கு முன், எப்படியெல்லாம் செய்யப்படாதோ, மக்கள் மனதில் விசாரம் என்பதற்கு இதுவரையில் எவ்வாறெல்லாம் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டிருந்ததோ, அவைகளையெல்லாம் நீக்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

பகவானாற் காட்டித் தரப்பட்ட ஆன்ம விசாரச் செய்முறைக்கும், சாஸ்திரங்களில் இத்தனை காலமாக நாம் கேள்விப்பட்டிருக்கும் ஆன்ம விசாரத்திற்கும் வேற்றுமை ஒன்றுண்டு. ‘நீ யார்? நீ உடம்பு, பிராணன், மனம், புத்தி அகங்காராதிகளல்ல; நீ ஆன்மா; ஆன்மாவாகிய அறிவே நீ’ என்று பல்லாயிரக்கணக்கான வருடங்களாக சாஸ்திரங்கள் கோஷிக்கின்றன. மேலும் அவை, தேகாதிப் பஞ்சகோசங்களை நானல்ல, நானல்ல(நேதி நேதி)வென்று தள்ளிவிடு என்று சொல்கிறதோடு நிற்கின்றனவே தவிர, எப்படித் தள்ளுவது? யார் தள்ளுவது? என்ற செய்முறையை விளக்கவேயில்லை. நேதி செய்யத்தக்க உபாயங்களும் திட்டவட்டமாக சாஸ்திரங்களால் நேர்வழியில் நிர்ணயிக்கப் படவில்லை.38 அதனால்தான், வேதாந்த சாஸ்திரங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களுங்கூட தேகாத்ம புத்தி நீங்கிய அனுபவ ஞானத்திற்கு அயலாராகவே காணப்படுகின்றனர். இம்முடிவு, அனுஷ்டானத்திற்குக் கொண்டுவராத சாஸ்திரப் பயிற்சியாளர்களைப் பற்றியது மட்டுமல்ல! வேதாந்தத்தைப் படித்து, நடைமுறைக்குக் கொண்டுவர முயல்கின்ற உண்மையான தீவிர சாதகர்கள் கூட, கைவல்ய ஞானானுபவம் பெற இயலாதவர்களாய் மிகத்திணற நேர்கிறது. ஆனால், ஸஹஜ ஸ்திதப் பிரக்ஞர்களாக விளங்கிய மகான்களோ ‘அவ்வான்மானுபவம் இப்போதே இங்கேயே நித்திய ஸித்தமாய் உள்ளது’ என்று தீர்ப்பளிக்கின்றனர்! பகவானும், ஆன்மானுபவமொன்றுக்காகவே பகவானையடைந்த சீடர்களும், ‘ஐயே! அதி சுலபம், ஆன்ம வித்தை!’ என்று மகிழ்வதற்குக் காரணம் என்னவென்றால் இவ்வான்ம விசார மார்க்கத்தில் பகவானால் செய்து தரப்பட்டுள்ள, பயிற்சிக்கு மிக்க எளிய, ஏதோ ஓர் நூதன சீர்திருத்த உளவே(உபாயமே)யாகும். அது என்னவென்று பார்ப்போம்.

‘தேஹம், நாஹம், கோஹம், ஸோஹம்’ என்பதே சாஸ்திரங்களிற் காணக் கிடைக்கும் ஆன்ம விசாரத்தின் சாராம்சமாகும். இதற்கு அனுகூலமான சாதனை முறைகள் நான்காக சாஸ்திரங்களில் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளோவெனில்,

1. நித்தியா நித்திய வஸ்து விவேகம்.

2. இஹாமுத்திரார்த்த பல போக விராகம்.

3.39 சமாதி ஷட்க சம்பத்தி.

4. முமுக்ஷுத்வம்.

என்பனவாம்.

ஒருவன் நித்தியா நித்திய வஸ்து விவேகத்தால் மோக்ஷமே நித்யவஸ்துவென்று அறிவதால் முமுக்ஷுத்வமுற்று, அது தவிர்த்த பல போகங்களிலும் வைராக்கியமடைந்து, சமாதி ஷட்க சம்பத்தியில் முயல்கிறான். அதனால் அவனுக்குச் செய்முறையாக, மூன்றாவதாகிய சமாதி ஷட்கத்திலேயே ஆன்மானுபவத்திற்கு ஹேதுவான உபாயங்களைச் சாஸ்திரங்கள் கூறிவிடுகின்றன. ஆகையால் இம்மூன்றாவதை அவன் அப்பியசிக்கும் போதே அவனிடம் ஒன்றாவது, இரண்டாவது, நான்காவதான சாதனங்கள் அமைந்திருக்க வேண்டுமென்பது தெரிய வருகிறதன்றோ?

மூன்றாவதாகிய சமம் முதலிய ஆறு அங்கங்களுள்ளும், வைராக்கியத்தால் பொறி புலன்களை அடக்குவதும், சலிக்கும் மனத்தைப் பிரம்மத்தில் நிறுத்துவதுமே முக்கிய உபாயங்களாக அச்சாதகன் கையாள வேண்டுவதாம். ஆனால் இதை நடைமுறையில் அனுஷ்டிக்கும் தீவிர சாதகனொருவன் என்ன செய்கிறான்? விஷய ஆசைகளோடு போராடுவதையும், ‘பிரம்மம்’ என்று தான் கருதும் ஏதோ ஒரு முன்னிலை அல்லது படர்க்கைப் பொருளை மனத்தாற் சிந்திப்பதையுமே தனது செய்முறையாகக் கொள்கிறான். இதற்குச் சகாயமாக அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளவையோ, ‘அஹம் பிரம்மாஸ்மி, ஸோஹம், தத்துவமஸி’ போன்ற மகா வாக்கியங்களாகும். இந்தப் பாவனைகளைப் பழகும்போது அவனுடைய முயற்சி ‘இந்த நான், அந்தப் பிரம்மம்’ என்றவாறு முன்னிலை-படர்க்கைகளைப் பற்றிய ஒரு விருத்தியாகவே போய்க் கொண்டிருக்கிறது. இது ஒரு மனோவிருத்தியே. ‘நான் பிரம்மம், நான் அது’ என்னும் பாவனையில் அவனால் பாவிக்கப்படும் ‘நான்’ என்பது அவனாகிய மனமே. ஏனெனில், பாவிக்கும் அவன் தூக்கத்திற்குப் பின் எழுந்த முதல் எண்ணமாகிய எழுச்சியே. இவனாற் கருதப்படும் பிரம்மமோ இவனுக்குப் பின் உண்டாகும் ஓர் படர்க்கைப் பொருளே. தேகத்தை ‘நான்’ என்றுணரும் அகந்தை மதியுள்ள வரையிலும் எம்மனிதனும் ‘பிரம்மம்’ என்ற ஒரு பெயரைக் கேட்டதும், அதை முன்னிலை படர்க்கைகளுள் ஒன்றாகத்தான் கருத முடியுமே தவிர, வேறு விதமாகத்(தன்மையுணர்வாக) ப்ரம்ம சப்தத்தை உணர்வது அசாத்தியம். ஏனென்றால், ‘நான் பிரம்மம்’ என்ற சொற்றொடரில் ‘நான்’ என்ற பதம் ஏற்கெனவே தன்மையைக் குறித்துவிடுவதால், ‘பிரம்மம்’ என்றது முன்னிலை அல்லது படர்க்கை உணர்வாகத்தான் தோன்றும். நுணுகி ஆராயுமிடத்து, இவ்வாறு ‘ஸோஹம், அஹம் ப்ரம்மாஸ்மி’ என்னும் பாவனைகள் முன்னிலை படர்க்கைகளாக விரிக்கப்படும் ஓர் மனப் பிரவிருத்தியே ஆகிவிடுவதால், பகவான் சொல்கின்ற நிவிருத்தி ரூப அக நாட்டத்திற்கும் இப்பிரவிருத்திக்கும் மலைக்கும் மடுவுக்கும் போன்ற வித்தியாசமுண்டு.

எவ்வாறெனின், ‘நான் பிரம்மம்’ என்பதில் முதலில் தோன்றும் ‘நான்’ என்ற அக உணர்வு, ‘பிரம்மம்’ என்ற முன்னிலை அல்லது படர்க்கையால் ஓர் சுட்டுணர்வாகத் திரிபடைகிறது. இதைத் தவிர்க்கவே பகவான், ‘நான், நான் என்று கருதிக் கொண்டிருந்தாலுங் கூடப் போதும்; அவ்விடத்திற் கொண்டுபோய் விட்டுவிடும்’ என்று கூறி அருளினர். ஊசியின் காதில் நுழைக்கப்படும் நுனி ஈரிழையாகப் பிரிவுபட்டு நிற்குமேல், உள் நுழையும் ஓரிழையும்கூட மற்றோரிழையாற் கெடுக்கப்படுவதால் வெளியிலிழுக்கப்படவேண்டி நேருவதைப் போல, ‘நான் ப்ரம்மம்’ என்று பாவிக்கும்போது, ‘நான்’ என்ற பதத்தால் முதலில் தோன்றிய தன்மை உணர்வுங்கூட நிலைத்து நிற்காமல் (நிட்டையுறாமல்) ‘பிரம்மம்’ என்ற முன்னிலை அல்லது படர்க்கைச் சுட்டுணர்வால் அலைத்திழுத்துப் பிரிக்கப்படுகிறது. இவ்விதம் அந்தச் சாதகனுள் தன்மையிலிருந்து முன்னிலைக்கும், பிறகு அதிலிருந்து தன்மைக்குமாக மாறிமாறி நடந்து கொண்டிருக்கும் நுட்பமான பிரவிருத்தியையே ‘ஆத்ம விசாரம்’ என்று அவன் கருதுகிறான்! இச் சூட்சுமப் பிரவிருத்தியில் அலுத்துச் சில சமயம் அந்த மனம் ஓய்ந்து கிடப்பதை (லயப்படுவதை) அவன் ஞான சமாதி என்று நினைத்துக் கொள்கிறான்! அது ஞானசமாதியாகுமானால், பிறகு விழித்ததும் தேகத்தின் மேல் (identification) ஆத்ம புத்தி (நான் இத்தேகம் என்ற அகந்தையுணர்வு) உண்டாக முடியாது. அப்படி உண்டாகாவிட்டால் அவன் மீண்டும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற பாவனையைத் தொடர முடியாது; தொடரவேண்டியதுமில்லை! ஆனால். அந்தச் சாதகனோ விழித்ததும் மீண்டும் அதைத் தொடருவதால், அவன் அதில் அடைந்தது வெறும் லயமே (தூக்கம் போன்ற ஓய்வே) என்பது நிரூபணமாகிறதன்றோ? சொப்பனத்திலிருந்து விழித்தவனுக்கு அதன்பின் சொப்பன தேகத்தில் (identification) ஆத்ம புத்தி எப்படி நிச்சயமாகவே உண்டாக முடியாதோ, அவ்வாறு தன்னுணர்வு (Self-realisation) பெற்ற ஞான சமாதியாகிய விழிப்புக்குப்பின் அகந்தை வெறும் பொய்யாகி (பொய்த் தோற்றமாகி) விடும். அதனால். ஞான சமாதியுற்ற ஞானி ‘நான் பிரம்மம்’ என்று எண்ணவே – பாவிக்கவே மாட்டான்.

...யாமென்றும்

நாம்அதுவென் றெண்ணுவதேன்? நான்மனிதன் என்றெணுமோ

நாம்அதுவா நிற்குமத னால்.

(உள்ளது நாற்பது 36)

என்று கேட்கிறார் பகவான். எந்த மனிதனாவது ‘நான் மனிதன், நான் மனிதன்’ என்று தியானித்துத்தான் (பாவித்துத்தான்) மனிதனாகத் தன்னை உணர்ந்து கொள்கிறானா? இல்லையல்லவா? அவ்வாறே அச்சாதகன் மீண்டும் ‘நான் பிரம்மம்’ என்று தியானிக்க ஆரம்பிப்பதிலிருந்தே, அவனடைந்தது ஞானசமாதி யன்று – மெய் விழிப்பன்று – என்று தெரிகிறது!

‘இச்செப்புப் பாத்திரத்தைத் தினந்தோறும் தேய்த்துத் துலக்கினால்தான் அது பளிச்சிடும்; அதுபோலத் தினம் தினம் தியானத்தால் (மேற்கூறிய பாவனைகளால்) சுத்தப்படுத்தினால்தான் மனம் ப்ரம்ம உணர்வில் திளைக்கும்’ என்று கூறிய தோதாபுரியாருக்கு, உடனே ஸ்ரீ இராமகிருஷ்ணர் ‘அப்பாத்திரம் பொன்னாகில் பிறகு துலக்குவானேன்?’ என்று கூறி அறிவுறுத்திய மெய்ம்மொழி இங்கு ஒத்துநோக்கத் தக்கது.

ஆதலால், ‘நான் அவன், நான் அது (ஸோஹம், அஹம் பிரம்மம், ததஹம்) போன்ற பாவனைகள் மனத்தின் ஒரு தொழிலே – பிரவிருத்தியே. ஆன்மானுபவத்துக்கோ இம்மனம் இருப்பின்றி அழிய வேண்டும். ஆனால், ஸோஹம் போன்ற பாவனைகளைச் செய்துகொண்டே இம்மனம் எவ்வளவு காலம் வேண்டுமாயினும் பிழைத்திருக்கும். ஏனெனில், மனத்திற்கு அதன் தொழிலே உணவு. முன்னிலை-படர்க்கைகளின் நாட்டமே மனத்தைப் போஷிப்பது. ஆகையால், ஸோஹம் போன்ற பாவனைகளால் மனம் நாசமாகாமல், அத்தொழிலைச் செய்துகொண்டோ அல்லது அதில் களைப்புற்ற போது ஓய்ந்து லயித்துக்கொண்டோ எப்போதும் உயிர் பெற்றிருக்கும். ஆகவே, இப்பாவனைகள் மனோநாசம் செய்யாததால், மனோ நாசம் தருவதாகிய பகவான் கூறும் ஆத்ம விசாரமாகா.

... அன்றி, அன்றிது;நா னாமதுஎன் றுன்னல்துணை

யாம் அதுவி சாரம் ஆமா.

(உள்ளது நாற்பது 29)

என்று கேட்கிறார் பகவான்! அப்பாவனைகள் விசாரமல்ல. ‘துணையாம்’ என்று கூறியதின் கருத்தை இவ்வத்தியாயத்தின் இறுதிப் பகுதியில் தக்கவிடத்தில் விளக்குவோம்.

மேற்கூறிய பாவனைகளைப் பகவான் ஆத்ம விசாரமாகக் கொள்வதில்லை. ‘நான் யார்?’ என்ற தற்கவனமே ரமணோபதேசம். பகவானது விசார மார்க்கமோவெனின், தன்னை இது, அது என்று பாவிக்காமல் இந்த நான் என்பது என்னவென்று ஆழ்ந்து ஊன்றுந் தன்மை நாட்டமே. மனத்திற்கு முன்னிலை-படர்க்கை நாட்டமாக எத்தொழிலைக் கொடுத்தாலும் (ஜபம், தியானமாதி) அது அதை நாசப்படுத்தாது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாகக் கண்டு, பகவான் அம்மஹா வாக்கியங்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தனது ‘நான் யார்?’ உபதேச மூலமாகச் சாஸ்திரங்களுக்கு ஓர் புத்துயிர் கொடுக்கின்றார். அவைகளின் மூலம் இத்தனை காலமாக நாம் அறியாததும், சாதகர்களால் விசாரத்தை வழி பிசகாது அனுஷ்டிக்க அதி முக்கியமானதுமான ஓர் கண்டுபிடிப்பு பகவானால் சாஸ்திரவுலகிற்குக் கிடைத்திருக்கின்றது. அது யாதெனில்: மனமானது தன்மையை (first person) நோக்கித் திரும்புமானால் மட்டுமே அழிவுறும்.

சூட்சுமப் பஞ்சேந்திரியங்களுக்கு அனுபவமாகிற ஜோதி, நாதம் முதலியவைகளும், கைலாசம் முதலிய திவ்விய லோகானுபவங்களும், சிவன் முதலிய மூர்த்தி தரிசனங்களும், உடலினுள் சிந்திக்கப்படுகிற மூலாதாரம் முதலிய ஷடாதாரச் சக்கரங்களும் இவை போன்ற மற்றும் பலவும் மிக்க சூட்சும நிலையுற்ற மனத்தாற் உணரப்படும் திருசியங்களே(அறிபடு பொருள்களே)யாகையால் அவை முன்னிலை-படர்க்கை உணர்வுகளே தவிர, திருக்காகிய தன்மையுணர்வு ஆக மாட்டா! மேலும் சகல நினைவுகளின் வடிவாகிய மனமே நம்மாலறியப்படும் திருசியப் பொருளாகையால், அம்மனத்தாலறிபடும் இவை திருசியமன்றி வேறென்ன? ஆதலால், சாதகன் ஒருவனின் நாட்டம் (மேற் கூறப்பட்டவாறு) முன்னிலை-படர்க்கைகளின் வழிப்படாமல், எப்போதும் (மனமற்ற போதும்) விளங்குகிற தன்மீது மட்டுமே பற்றும்படியாக இருக்க (நிறுத்தப்பட) வேண்டும் என்பதே.

முன்னிலை படர்க்கை பற்றி முன்னுதன் மூட மாகும்;

முன்னிலை படர்க்கை நாடின் மூண்டெழும் மனோ விருத்தி;

தன்மையை நாடுஞ் செய்கை தற்கொலை சமான மாகும்;

தன்மையாய்(வு) வொன்றி னாற்றான் சாய்ந்திடு மகந்தை தானே.

(சாதனை சாரம் 245)

இது சாமானியமான உளவல்ல! தீவிர வைராக்கியசாலிகளாய், எடுத்த காரியத்தினின்றும் இம்மியும் பிறழாது நிற்கக்கூடிய ஏகாக்கிரமுடையவர்களான சாதகர்கள் கூட அத்தகைய வைராக்கியத்தோடும் ஏகாக்கிர சக்தியோடும், முயற்சிக்க வேண்டிய திசையை விட்டுப் பயனற்ற படர்க்கை முன்னிலை லட்சியங்களிற் தம் முயற்சி முழுவதும் செலுத்திக் கணக்கற்ற காலம் (பல பிறவிகளிற் கூட) முடிவு காண முடியாது திகைக்குங்கால், பகவான் ஸ்ரீ ரமணர் காட்டிய இவ்வுளவு (தன்மை நாட்டம்) வறியோன் கையிற்கிடைத்த வைரப் பொதியாக மதிக்கப்படும். அது மட்டுமன்றி, நாட்டம் முன்னிலை-படர்க்கை வழிப்படாமல் தன்மீதே பற்றுவதற்கு ஆரம்ப உபாயமாக ஆன்ம விசாரச் செய்முறையையும் பகவான் ‘நான் யார்?’ என்ற அரிய, இனிய, சிறிய நூலில் அருளியிருக்கின்றார். அதன் விளக்கத்தை அடுத்து வரும் அத்தியாயங்களிற் காண்போம்.

தன் வீட்டுத் தரையினடியி லிருந்த புதையல், தன்னால் எடுத்தனுபவிக்கப்படாத வரையில் அது தனக்கு இல்லாததே – தன் தோட்டத்து மூலிகை வைத்தியனாற் கண்டுபிடிக்கப்பட்ட கதையைப் போல40 புதையலின் இருப்பையுணரவும், அதை வெட்டியெடுத்து அனுபவிக்கவும் எல்லா வழியிலும் ஒருவன் உதவுவானாயின், அவனே நமக்கு அந்த ஐசுவரியத்தைப் புதிதாகக் கொடுத்தவனாவான். நம்மை ஐசுவரியவானாக்கியவன் அவ்வுபகாரியே. அதற்கு முன்னால் நாம் தரித்திரனே. அதுபோல பகவானது ஆன்ம விசார மார்க்கத்தின் புதுமைச் சிறப்பை – பேருதவியை – அறியாமல், ‘ஆத்ம விசாரம் முன்பேதான் சாஸ்திரங்களில் இருக்கிறதே’ என்று மட்டும் சொல்லிக் கொண்டு, அவைகளைப் படித்திருந்தும் ஆன்மானுபவம் பெறவியலாமல், ‘பகவான் என்ன புதிதாகக் கண்டுபிடித்து விட்டார்?’ என்று சிலர் கூறுவதுண்டு. இவர்களது கூற்று, ‘என்னிடம் இந்தத் திரவியங்களெல்லாம் முன்பே இருந்து வருகின்றன’ என்று மட்டும் சொல்லிக் கொண்டு, அதை வெட்டியெடுத்து அனுபவிக்கத் தெரியாத அந்த வறியோனது கூற்றேயாகும். ஏன் வறியோனது கூற்றைப் போன்றதென்று கூறப்பட்டதென்றால், அப்பேருதவியாளனைப் பின்பற்றி, ஐசுவரியப் பெருலாபமடைந்து, அதன் மகிமையை – சுகத்தை – அனுபவித்துணரப் பெற்றிருப்பானாகில், அவனது உதவியை இவ்வளவு அற்பமாக அத் தரித்திரன் கருதமாட்டான்! ஆன்ம விசாரத்தால் சொரூபானுபவ சுகத்தின் லவலேசத்தைக் கூட அனுபவமாக உணராதவர்களும், வாசா மாத்திரப் பண்டை சாஸ்திர விற்பன்னர்களுமே ரமண சற்குருவால் உலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஆத்ம விசார உளவின் மதிப்பை உணர முடியாமல் இவ்விதம் கூற முடியும். இத்தனைக் காலமாக இவர்கள் படித்த சாஸ்திரங்களின் மூலம் விசார அப்பியாச வழி இவர்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்குமாயின் இவர்கள் இன்னும் ஏன் ஆன்மாநுபூதி பெறாது தத்தளிக்க வேண்டும்? பகவானால் இப்பேருதவி பெற்று உண்மையுணர்ந்தோர் பலரும் பண்டை நூல்களில் விற்பன்னர்கள் அல்லர் என்பதும் இதற்குப் போதிய சான்றாகும்.

‘நான்’ என்ற உணர்வு, ‘நான் இன்னார்’ என்ற வடிவில் உபாதியுடன் உணரப்படும் போது அது ஓர் நினைப்பாகி விடுகிறது. இந்த நினைப்பே எல்லா நினைவுகளிலும் முதல் நினைப்பு. ஆனால், உபாதியற்றுத் தனித்து ‘நான் நான்’ என்று மட்டும் விளங்கும் அகவுணர்வே ஆன்மா அல்லது ப்ரம்மம். அவ்வுணர்வு ஓர் நினைப்பல்ல. 41அது நம் இருப்பு. ஆகையால், ‘அகம்ப்ரம்மம்’ என்று சாஸ்திரங்களாற் போதிக்கப்பட்டதின் நோக்கம் யாதெனின், ப்ரம்மம் நமது சுத்த இருப்பே என்று முன்கூட்டித் தெரிவிக்கப்பட்டதோர் முடிவே தவிர, அதை (ப்ரம்மத்தை) நமது நினைப்பினுள் ஒன்றாக ஆக்கிக் கொள்வதற்கல்ல. அதனால், ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்பது, அடையப்போகும் நம் உண்மை நிலையின் முன்னறிவிப்பே. நினைப்பைக் கடந்த நம் இருப்பை நினைப்பால் எய்த முடியாது. அதை நினைக்க முடியாதாகையால், ‘அஹம் யார்?’ என்ற நாட்டத்தால் (தற்கவனத்தால்) அகவெழுச்சி ஓய்ந்து, பிறகு யாது உளதோ, அதுவாயிருத்தலே ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்பதன் பொருள்.

... உள்ளல்எவன்; உள்ளத்தே உள்ளபடி

உள்ளதே உள்ளல்! உணர்.

என்ற உள்ளது நாற்பதின் முதல் மங்கல வெண்பாவை நோக்குக.

ப்ரம்மானுபவம் உண்டாகாதவரை ஒருவன் ப்ரம்மத்தை எப்படி நினைத்தாலும் அது ஓர் (முன்னிலை-படர்க்கை) நினைப்பே ஆகிவிடும். அதற்குப் பதிலாக ‘நான்’ என்று மட்டும் கருதுவானாயினுங்கூட, அது தன்மை நாட்டமாகையால், அவ்வாறு நினைக்கக் கிளம்பிய நானென்னும் விருத்தி, பிணஞ்சுடு தடிபோலவும், சூரியனை நோக்கித் திருப்பப் பெற்றதோர் கண்ணாடியின் சூரியப் பிரதிபிம்பம் போலவும் மூலத்தில் மூழ்கி, உருவும் இருப்பும் அற்றுப் போகும். எனவே ‘சிவோஹம், ஸோஹம்’ என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்தால் அகங்காரம் விருத்தியாகும். ‘அஞ்ஞானியாகிய மனிதன் மிகவும் அற்பமான இத்தேகமே நான் என்று எண்ணிக் கொண்டதனாலேயே சுயேச்சையாய் வரம்பின்றிக் குதிக்கிறான்! இப்படிப்பட்டவன், “அந்தப் பரமனே நான்” என்று எண்ண ஆரம்பிப்பானேயாகின், செய்யத் தகாதது என்று எதுதான் அவனுக்குத் தோன்றும்?’ என்று குரு ரமண வசனமாலை-149ல் கூறுகின்றார் பகவான். அதற்கு மாறாக ‘நான் யார்?’ என்று தன்னை நாடினால் அகங்காரம் நசிக்கும். இதனால்தான் பகவான் ரமணர் ‘ஸோஹம்’ என்பதை ஓர் சாதனமாக உபதேசிக்கவில்லை. நாம் போய்ச் சேரவேண்டிய ஓர் ஊரைப் பற்றி முன்பே நமக்குத் தெரிவிக்கப்பெற்ற கருத்துக்கள் நமக்கு ஒரு சகாயமாவது போல, நம் முடிவான உண்மை பிரம்மமே என்ற கருத்து (அஹம் பிரம்மாஸ்மி போன்ற மகாவாக்கியம் மூலம்) நமக்குத் தெரிவிக்கப் பெற்றது நல்லதோர் துணையே தவிர, சாதனமாகிய விசாரமாகி விடுமா? ஆகாது! ஓர் ஊரைப்பற்றி முன்கூட்டி அறிந்த விபரங்களைப் படித்து நெட்டுருப் போட்டு நினைத்துக் கொண்டேயிருப்பது, எப்படி அவ்வூருக்குப் போகும் நமது பிரயாணமாகி விடாதோ, அதுபோல் எனக் காண்க. இதையே பகவான் உள்ளது நாற்பது 29ஆவது பாடலிலும், 36ஆவது பாடலிலும் முறையே, ‘நாம் அதுவென்று உன்னல் துணையாம்; அது விசாரமாமா?’ என்றும், ‘நாம் அதுவென்றெண்ணுமது நாமதுவா நிற்பதற்கு நற்றுணையே யாம்.’ என்றும் குறித்தனர். எனவே, ‘நான் யார்?’ என்னும் விசார மார்க்கம் ‘ஸோஹம்’ போன்ற மகாவாக்கியத் தியானமல்ல.

ஞானச் சுடர்களான பகவான் ரமணரது அருட்கண்களால் அவரது சந்நிதியில் தூண்டப் பெற்றாலன்றி விளங்குவதற்கரிய இவ்வுண்மையை, அவ்வரிய பாக்கியத்தைப் பெறவியலாதோர் சிலர், உணர முடியாமல், பிற்காலத்தில் உபதேச சாரத்தைப் படித்துவிட்டு, அதில் 8-ஆவது பாடலாக வருகிற ‘அவனகமாகும் அனன்னிய பாவமே அனைத்தினும் உத்தமம்’ என்ற பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, ‘ஸோஹம் பாவனையைத்தான் ரமணரும் உபதேசித்திருக்கின்றார்’ என்று வியாக்யானம் செய்வதைக் கேட்டிருக்கிறோம். அதன் பொருட்டு, இதுபற்றிச் சிறிது ஆராய வேண்டியதும் அவசியப்படுகிறது. உபதேச சாரத்தின் மூல நூல் ‘உபதேச வுந்தியார்’ என்ற தமிழ்ப் பாடல்களாகும். அவை பகவானால் அருளப்பெற்ற நோக்கமும் சந்தர்ப்பமும் சற்றுக் கவனிக்கப்பட்டால் இதனுண்மை விளங்கும்.

ஸ்ரீ முருகனார் எழுதி வந்த ‘ஸ்ரீ ரமண சந்நிதி முறை’ என்ற நூலில், சிவபிரானது அருள் லீலைகளாகப் பாடிய திருவுந்தியாரில், காமிய கர்ம காண்டிகளாய்க் கர்வம் மிகுந்து கெட்டுப்போன தாருவனத் தவசிகளைத் திருத்தி நல்வழி காட்ட, சிவபிரான் செய்த உபதேசப் பகுதியை மட்டும் சாட்சாத் அருணாசல சிவமேயான பகவான்தான் பாடியருள வேண்டுமென்று வேண்டவே, அக் காதைப் பகுதியின் தொடர்ச்சியாக, சிவபிரான் கூறும் உபதேசத்தை பகவான் ரமணர் ஆரம்பிக்கின்றார். இம் முப்பது செய்யுட்களில் முதல் இரண்டால் காமிய கர்மத்தைக் கண்டித்த பிறகு, இதற்குமுன் சகல சாஸ்திரங்களிலும் கூறப் பெற்றிருந்த நிட்காமிய கர்மம், பக்தி, யோகம் என்ற மூன்று மார்க்கங்களையும் 3ஆவது முதல் 15ஆவது பாடல் வரையுள்ள 13 பாடல்களுக்குள் உபதேசித்து விடுகின்றார். இதற்கிடையில் ஞான மார்க்கமாகிய ஆன்ம விசாரமே நேரடியாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. 3ஆவது முதல் 6ஆவது பாடல்வரை பூஜை, ஜபம் இவற்றைக் கூறியபின் 7லும் 8லும் பண்டைத்தியான பாவங்களின் உயர்வு தாழ்வுகளை வரிசைப்படுத்திக் கூறும்போது, ‘அன்னிய பாவத்தின் அவனகமாகும் அனன்னிய பாவமே உத்தமம்’ எனக் கூறப்படுகிறது. அன்று தாருகாவனத்தாருக்குச் சிவபிரான் செய்த பண்டை உபதேசங்களைக் கூற நேர்ந்த சந்தர்ப்பத்தின் காரணத்தால் பகவான் பண்டை மார்க்கங்களையும் சுருக்கிக் கூற வேண்டி வந்தது. அதனால் (சிவபிரானது உபதேசமாகிற) 3 முதல் 15 வரை இடைப்பட்டுள்ள எதையும் பகவானது நேரனுபவமான ஆன்ம விசார உபதேசமாகக் கொள்ளக் கூடாது.

‘சரி, ஸோஹம் பாவனை பகவானது நேருபதேசமல்ல என்றாலும், அப் பாவ பலத்தினால் பரபக்தியாகிய முக்தி கிடைக்குமென்றுதானே 9ஆவது பாடலில் “பாவ பலத்தினாற் பாவனா தீதசத் பாவத் திருத்தலே பரபத்தி தத்துவம்” என்று கூறப்பட்டுள்ளது’ என்று சிலர் கேட்பதுண்டு. இப் பாவபலமாவது யாது; அப் பலத்தினால் நேருவது யாது; என்பதைச் சாதகன் ஒருவனது அனுபவ வழி காண்போம். பண்டை முறைப்படி 3லிருந்து 7ஆவது பாடல்வரை கூறப்பட்ட பூஜை முதல் தியானம் வரையிலுள்ள சாதனைகளைச் செய்துவந்த காலம் முழுவதும் சாதகனின் மனம் கடவுளை முன்னிலை அல்லது படர்க்கைப் பொருள்களுள் ஒன்றாகவே கருதி வந்திருக்கின்றது. அவ்வறியாமை நீங்கி, இம் மகா வாக்கியப் பொருளில் நம்பிக்கை பிறந்து, ‘கடவுள் நம் தன்மையின் உண்மை வடிவே’ என்று ஒப்புக்கொள்ளும் தேற்றத்தைப் பெறுவதற்காகவே அவனகமாகும் (ஸோஹம்) தியானம் சாஸ்திரங்களில் விதிக்கப் பெற்றது. இவ் வொப்பத்தின் வலிவே ‘பாவபலம்’ ஆகும். தன்மையின் உண்மையே கடவுள் என்ற இவ்வொப்பத்தை இச்சுற்று வழியிற் பெறுவானேன்? தாருவனத்துக் கர்ம காண்டிகள் அச் சுற்றுவழியின் நடுவில் நின்றிருந்த காரணத்தால் அவர்களை இவ்விதம் சுற்றித்தான் அழைத்துவர வேண்டியிருந்தது 42‘தன்மை யுண்டேல் முன்னிலை படர்க்கைகள் தாமுளவாம்’ என்ற பகவானது உள்ளது நாற்பதின் 14ஆவது உபதேசத்தைக் கிரகித்தவுடன் ‘முன்னிலை படர்க்கை வாழ்தல் மூலமாம் தன்மையாலே’ என்று ஏன் தேற்றமடைந்து உடனே தன்னை நாடக் கூடாது? இவ்வாறு பகவானது வழிக்கு வராமல் முன்னிலை-படர்க்கைகளில் முயன்று கொண்டிருக்கும் சாதகர்களை முடிவில் (பிறர் வீட்டுத் தொழுவத்திற் கட்டிப் பழக்கிய பசுவை அதன் உண்மை எஜமானன் பலமுறை அதன் முன்வந்து பழகிப்பழகி, தானே அதன் தலைவன் என அப்பசுவிற்கு ஒப்பமுண்டாகச் செய்து அந்த பலத்தால் – பாவபலம் – பிறகு தன் வீட்டிற்கு இழுத்து வந்தபோது, முன்னடையாளம் கண்டதனால் அது அங்கு நிற்கச் சம்மதிப்பதுபோல) தன்மை நாட்டத்தில் திருப்பி நிறுத்துவதற்கு முன்கூட்டி அறிவிக்கப்பட்ட துணையாக உதவும். அதாவது, ‘கடவுள்’ என்பது தன்னுள் ‘நான்’ என்று விளங்கும் உண்மைத் தன்மைப் பொருளே என்ற ஒப்பம் மனத்திற்கு உண்டாகி விடுமாயின் அது விருப்பத்தோடு தன்னையே நாடியடங்குமே தவிர, அகந்தையாகிய ஓர் தனி வியக்தியாய் எழுந்து பிறவற்றை நாடிக் குதித்து ஓடாது. இது குறித்தே பண்டை முறைகளுட் சிறந்த தியான பாவமாக பகவான் இதைக் கூறினார் எனக் காண்க.

மேலும், உபதேச வுந்தியாரின், எட்டாவது பாடலில் ஸ்ரீ பகவான் ‘ஸோஹம் – அவன் நான்’ என்பதை ஒரு தியான முறையாகப் போதிக்கவேயில்லை என்பதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஸ்ரீ பகவான் இங்கு உபதேசிப்பதாவது: கடவுளைத் தனக்கு வேறான ஒரு அன்னியப் பொருளாகக் கருதுகின்ற அன்னிய பாவத்தை விட, அவனைத் ‘தான்’ ஆகக் கருதும் அனன்னிய பாவமே எல்லாவற்றிலும் உயர்ந்த நெறி என்பதே. அதாவது, அவன் – கடவுள் – என்றெல்லாம் அன்னியமாக இவ்வளவு காலமாகக் கருதப்பட்டு வந்தது தவறு; அந்தப் பொருள் தன்னுள் ‘நான் – அகம்’ என்று விளங்கிக்கொண்டிருக்கும் உணர்வு மயமே என்பதைக் காட்ட ‘அவன், அகம் ஆகின்ற அனன்னிய பாவம்’ என்றே ஸ்ரீ பகவானாற் குறிக்கப்படுகின்றது. தன்னுள் ‘நான்’ என்று எது விளங்கிக் கொண்டிருக்கின்றதோ, அதுவே ‘கடவுள்’ என்ற திட நிச்சயத்தால், கடவுளைத் தியானித்தல் என்பது ‘நான்-நான்’ என்று மட்டும் தியானிப்பதுதான் என்றே உபதேசிக்கின்றார் ஸ்ரீ பகவான். எனவே, இப்பாடலிற் குறிக்கப்பட்ட ‘அனன்னிய பாவம்’ என்பது ‘அவன் நான்’ என்ற ஒரு புது எண்ணத்தைத் தியானிப்பதல்ல; அதைவிட தன்னை நாடுதல் என்ற தன்னாட்டப் பயிற்சியாகவே உண்மையான தீவிர பக்குவிகள் கண்டுகொள்வார்களாக. 43இங்கு ‘அனன்னிய பாவம்’ எனப்பட்டது ‘தன்னாட்டமே’ என்று தெரிந்து கொள்ளப்பட்டால், இனிவரும் ஒன்பதாவது பாடலில் ‘அனன்னிய பாவ பலம்’ என்ற சொற்றொடராற் குறிக்கப்படுவது, தன்னாட்டப் பயிற்சியால் விளையும் ‘தன் பிறப்பிடத்திற் றங்கிநிற்கும் சக்தியே’ என்று ஆகும்! இதையே ‘சத்பாவத் திருத்தல்’ என்றும் ஒன்பதாவது பாடலால் ஊர்ஜிதப் படுத்துகிறார் ஸ்ரீ பகவான். அவ்வாறின்றி, மேலெழுந்தவாறு அர்த்தம் செய்துகொள்ளும் பல வாசகர்களைப் போல, ‘அவன் நான் (ஸோஹம்)’ என்று நினைக்க ஆரம்பிப்பார்களாயின் அப்படிச் செய்வோர் அடையும் ‘பாவபலம்’ என்பது (பசு அடைந்தது போன்ற) அத்தகைய நினைப்பால் அடைந்த ஒரு ‘ஒப்ப பலமே’ யாகும்.

நூல்களிற் கூறப்பட்ட பிரமரகீட நியாயத்தில் சாதகனுள் நிகழ்வது இவ் வொப்ப பலம் பெறும் காரியமே தவிர, ‘ஜீவன் ஓர் பிரம்மமாக மாறி விடுகிறான்’ எனக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், பிரம்ம நிலையானது புதிதாக ஆக்கப்படும் ஒன்றல்ல. அஃது என்றும் மாற்றத்திற்காளாகாத நம் இயல்பு நிலை.

போதலற்ற, ஒன்றைப் பொருந்தலற்ற மற்றொன்றா

யாதலற்ற, சற்றும் அலுக்கலற்ற — சாதலற்ற

ஏதுக்குஞ் சற்றும் எழுச்சியற்ற உன்னிருப்பாம்

பாதம்...

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 233)

என்று வருணிக்கப்பெற்ற, பரிபூரண பிரம்ம நிலையின் நித்தியத்துவத்துக்குப் ‘புதிதாக ஆதல்’ என்பது பொருந்தாததன்றோ?

சாதகத்தி லேதுவிதம் சாத்தியத்தி லத்துவிதம்

ஓதுகின்ற வாதமதும் உண்மையல ...

(உள்ளது நாற்பது 37)

இந்தப் பாவபலத்தால் ‘கடவுள் என்பது தனது உண்மை யிருப்புணர்வே’ என்ற தேற்றம் (conviction) உறுதிப்பட்ட பிறகு யாதேனுமோர் வேளையில் அச்சாதகனுக்கு, ‘நான்தான் இருக்கிறேனே! நான் இருப்பதற்குத் தியானிப்பதேன்?’ என்ற வடிவில் தன் இருப்புணர்வின் மேல் (ஸத்பாவத்தில்) கவனம் திடீரெனப் பற்றிக்கொள்ள வியலும். இதுவே சரியான விசாரக் கிரியை. இதனால் ‘அஹம் கடவுள்’ பாவனை அவசியமற்று அஹமஸ்மி (நான் இருக்கிறேன்) என்ற எண்ணமற்ற உணர்வான ஸத்பாவமுறுவான். இதுவே 9ஆவது பாடலில் கூறப்பட்டது. எனவே, தன்னாட்டமாகிய பகவானது ஆன்ம விசாரமே முடிவில் அவனிடம் நிகழவேண்டி வருகிறது. இந்த ஸ்வாத்ம பக்தியே பரபக்தி தத்துவமாகிய முக்தி.

பிறகு 16ஆவது உபதேசத்திலிருந்து 29-வரையிலும் ஞான மார்க்கத்தைப் போதிக்கப் புகும்போதுங்கூட, பகவானது உபதேச முறைக்கும் சாஸ்திரங்களின் உபதேச முறைக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டை நாம் காண முடியும். பகவான் 16முதல் 20ஆவது பாடல் வரையிலும் ‘நான் யார்?’ என்று விசாரம் செய்யும் (தன்னை நாடியறியும்) முறையை நன்கு விளக்கிவிட்டு, அதன்பின் 21ஆவது பாடலில் ‘நான் என்ற சொல்லின் மெய்யான பொருள் ஆன்மாவே’ என்று ஆன்மவுணர்வையே தனக்கு அனுபவப் பொருளாக்கிய பிறகு, தன்னுண்மை இவ்வாறாதலால் ‘உடல், பொறி, உள்ளம், உயிர், இருள் என்னும் ஐங்கோசங்களும் சடம், அசத், சத்தான நானல்ல’ என்று 22ஆவது பாடலில் தீர்ப்பாகக் கூறுகின்றார். ஐங்கோசங்களை நானல்ல (நேதி நேதி) என்று தள்ளுவதையே விசாரமெனப் பண்டை ஆன்ம விசார முறைகளிற் கூறப்பட்டிருப்பினும், தள்ளுவதெப்படி என்று தடுமாறும் சாதகர்களுக்குத் ‘தன்னை நாடுவதே தானல்லாதவற்றைத் தள்ளுவதாம்’ என்ற செய்முறையை 16லிருந்து 20வரை கொடுத்த பிறகு, 22ஆவது பாடலில் ‘நேதி நேதி’யை பகவான் அதன் பயனாகக் காட்டுகிறார். இதனால் பண்டை ஞானமார்க்கச் செய்முறையைச் சீர்திருத்தி, முன் பின்னாக எவ்வெக்கருத்துக்களை அமைத்துத்தர வேண்டுமோ அவ்வாறமைத்து, ‘நான் யார்?’ விசாரத்தையே சரியான ஞான மார்க்கமாகக் கொண்டு 29ஆவது பாடல் வரை உபதேசித்து முடிக்கின்றனர். அதன்படி ‘இத் தன்னறிவில் நிற்பதே தவம் அன்றி மற்றவையல்ல’வென்றும் 30ஆவது பாடல் முடிவு கூறுகின்றது.

முன்பு ஒரு காலத்தில் தாருவனத்தார்க்குச் சிவபிரான் உபதேசிக்க நேர்ந்த சந்தர்ப்பத்தில், அப்போது அவர்கள் கர்மமே பரமென்றிருந்த கீழ்நிலையிலிருந்து முன்னேற வேண்டிச் செய்த சிவோபதேசமே இதுவாகையால், சிவபிரானது அவ்வுபதேசத்தைச் சுருக்கிக் கூறும் அவசியம் நேர்ந்த இப்போது ஸ்ரீ பகவான் இவ்வுபதேச வுந்தியாரில் ‘ஸோஹம்’ என்ற சொற்றொடருக்கும் இடந்தந்தனர் என்பதும், இதனால் இச் ஸோஹம் பாவனையே நேரான ஸ்ரீ ரமணோபதேசமான ‘நான் யார்?’ என்ற ஆன்ம விசாரமாகி விடாது என்பதும் இதனின்று நாம் அறியக் கிடக்கின்றது.

37 ‘ஸோஹம் பாவனை’ – ‘நான் அவன், நான் பிரம்மம்’ என்று தியானிப்பது.

38 சாஸ்திரங்கள் அவ்வளவுதான் சொல்லும். பண்டை முமுக்ஷுக்கள் இச் சாஸ்திரங்களைப் படித்தபிறகு ஞானானுபவிகளான குருமார்களிடம் சென்று பலகாலம் பணிவிடை செய்தே அவர்களால் பிரத்தியேகமாகக் காட்டி அனுக்கிரகிக்கப்பட்ட இரகசிய உளவால் வழி கண்டுகொண்டு, தானல்லாத கோசங்களினின்றும் பிரிந்துகொள்ளும் சாதனானுபவங்களைப் பெற்றனர். ஆனால் பகவான் ஸ்ரீ ரமணரோ, அவ் விரகசிய உண்மைகளையெல்லாம் எல்லோருக்கும் பொதுவாக்கித் திறந்து வெளியிட்ட ஞானகுருவாவர்.

39 சமாதி ஷட்க சம்பத்தி – சமம் முதலிய அறுவகை தவப் பேறுகள் – அவை: சமம், தமம், உபரதி, திதிக்ஷை, சிரத்தை, சமாதானம் (அல்லது ஸமாதி) என்பனவாம். a) சமம்: விஷயங்களிலுள்ள தோஷங்களை அடிக்கடி நினைத்துப் பார்த்தலால் அவைகளில் விரக்தியடைந்து மனத்தைத் தன் லக்ஷியத்தில் இருத்துவது. b) தமம்: விஷயங்களிற் செல்லும் ஞான கர்ம இந்திரியங்களைத் திருப்பி அதனதன் ஸ்தானத்திலேயே இருக்கச் செய்வது. c) உபரதி: பூர்வ வாசனைகளால் மீண்டும் வெளி விஷயங்களை நினையாது மனத்தைத் தன் லக்ஷியத்திலேயே ஸ்திரமாய் நிறுத்தி, இதர கர்மங்களை விட்டுவிடுதல். d) திதிக்ஷை: எவ்வளவு இன்னல்கள் வரினும் அவைகளைத் தடுக்காமலும் அவற்றிற்காக ஏங்கி அழாமலும் தைரியத்தால் அவைகளைச் சகித்தல். e) சிரத்தை: வேதாந்த சாஸ்திரமும் குரு வாக்கியமும் சத்தியம் எனக் கொள்ளும் நிச்சயம். f) சமாதானம் (ஸமாதி): சஞ்சல சுபாவமுள்ள மனத்தைப் போனபடி போகவிடாமல் சர்வ பிரயத்தனங்களாலும் பரிசுத்த பிரம்மத்திலேயே ஸ்திரமாயிருத்துதல். இந்த ஆறும் கூடி சமாதி ஷட்க சம்பத்தி எனப்படும்.

40 இங்குக் குறிக்கப்பட்ட கதையாவது: வெகுகாலமாகத் தீராத ஓர் நோயினால் வருந்தி இறக்கும் தருவாயிலிருந்த நோயாளி ஒருவனிடம் நண்பர்கள் சிலர் ஒரு புது வைத்தியனை அழைத்து வந்தனர். நோயின் தன்மையை நன்கு பரிசோதித்தபின் அவ்வைத்தியன் நோயாளியின் தோட்டத்தில் இங்குமங்குமாகச் சற்று தூரம் நடந்துகொண்டே மூலிகையொன்றைப் பறித்து வந்தான். அதன் பிரயோகத்தால் அந்நோய் உடனே அகன்றது. அதைக்கண்ட அனைவரும் வியந்து ‘தாங்களே இவனுக்கு உயிர் கொடுத்தீர்கள்!’ என்று வைத்தியனைப் புகழ்ந்து நன்றி கூறினர். அந்த மூலிகை அத்தனைக் காலமும் அந்நோயாளியின் தோட்டத்தில்தான் இருந்தது. என்றாலும் அவனது துன்பமோ தீர்ந்த பாடில்லை. வைத்தியர் இதைக் கண்டுபிடித்தளித்தது அவனது உயிரையே அளித்ததாகின்றதன்றோ? அவரது உதவியின் முக்கியத்தை உணராமல், அந்நோயாளியோ, பிறரோ, ‘இவரென்ன சாதித்து விட்டார்? எல்லாம் என் தோட்டத்திலிருந்த மூலிகைதானே! இதுதான் முன்பே என்னிடமிருந்ததே!’ என்று கூறுவாராயின், அக்கூற்று ‘ஆத்ம விசாரம் முன்பேதான் சாஸ்திரங்களிற் காணப்படுகின்றனவே! பகவான் ரமணர் என்ன புதிதாகச் செய்து விட்டார்?’ என்று கூறுவோர் பேச்சைப் போன்றதே என்பதாம்.

41 இதன் விளக்கத்தை ‘ஆத்ம விசாரம்’ என்னும் அடுத்து வரும் அத்தியாயத்தில் காண்க.

42 இந்நூலில் 5-ஆவது அத்தியாயத்தில் 75-ஆம் பக்கத்தில் ‘மேலும் கடவுள், முன்னிலை அல்லது படர்க்கைப் பொருள்களுள்’ என்று தொடங்கும் பாராவை இங்கும் ஒத்து நோக்குக.

43 ‘உபதேச வுந்தியார்-விளக்கவுரை’ என்ற நூலின் பக்கம் 102-லிருந்து 104 வரை இங்கு வாசித்துணரத் தக்கது.

 

Contents