ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

‘நான் யார்?’ விசாரமும் நால்வகை யோகமும் (Chapter 5)

Contents

அத்தியாயம்-5.
‘நான் யார்?’ விசாரமும் நால்வகை யோகமும்

மேற்கண்டவாறு நாமல்லாத நம் போர்வைகளிலிருந்து நம்மைப் பிரித்துக் கொள்ளும் முறையையே ‘யோகங்கள்’ என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. யோகம் என்றால் ‘சேர்வது’ என்றுதான் பொருள்படும். ஆனால் நாம் மேலே ஆராய்ந்தபடி பார்த்தால் ‘பிரிதல்’ என்று அதைக் கூறவேண்டி வருகிறது! இவையிரண்டும் (இந்தச் சேர்தலும் பிரிதலும்) ஒன்றே. பகவான் ரமணர் காட்டும் சுக வழியில் இதுவரையில் ‘நாமல்லாதவற்றிலிருந்து பிரிதல்’ என்று எது கூறப்பட்டு வருகிறதோ, அதுவே, இன்றுவரை நம்மிடை யுலவும் மத சாஸ்திரங்களில் ‘கடவுளோடு சேர்தல்’ என்று கூறப்பட்டு வந்திருக்கின்றது. பின், முரணான இவ்விரு சொற்களின் பிரயோகத்திற்குக் காரணம் என்னவெனின், ‘நாம்’ என்பதற்கு உலக மகா குருவாகிய ஸ்ரீ ரமணர் நமக்குக் கொடுக்கும் அடிப்படைக் கருத்தோ நம் யதார்த்த சுபாவமான ஆன்ம வுணர்வு; ஆனால் மத சாஸ்திரங்கள் ‘நாம்’ என்பதற்கு இதுவரை கொடுத்து வந்துள்ள அடிப்படைக் கருத்தோ ‘இவ்வுடலே நாம்’ என்னும் ஜீவ பாவமே.

உதாரணத்தோடு காண்போம். ஒருவன் ஓரிடத்தில் நின்றுகொண்டு ‘நான் திருவண்ணாமலைக்கு வந்தேன்’ என்கிறான்; மற்றொருவன் ஓரிடத்திலிருந்து கொண்டு ‘நான் திருவண்ணாமலைக்குப் போனேன்’ என்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இருவரும் தாம் திருவண்ணாமலையை அடைந்ததாகிற ஒரே நிகழ்ச்சியைத்தான் குறிப்பிடுகிறார்கள். எனினும் அவ்வடைவு ‘வந்தேன்’ என்றும், ‘போனேன்’ என்றும் முரணான இரு சொற்களாற் குறிக்கப்படுவதனால் தெரிய வருவதென்ன? முதலாமவன் இருக்குமிடம் திருவண்ணாமலை என்பதும், இரண்டாமவன் இருந்து பேசுமிடம் திருவண்ணாமலையல்ல, வேறெங்கோ இருந்து பேசுகிறான் என்பதும் தெரிய வருகிறதல்லவா? அது போலவே, பரிபூரண சுகானுபவத்துக்கு வழி கேட்கும் ஒரு சாதகனின் தன்னுணர்வுக்கு (‘நான்’ என்பதற்கு) எவ்வித அடிப்படை பாவம் கொடுக்கப்படுகிறதோ அல்லது கொள்ளப்படுகிறதோ அதைப் பொறுத்தே உபதேச முறையும் யோகமாகவோ (சேர்தலாகவோ) வியோகமாகவோ (பிரிதலாகவோ) கூறப்படுகிறது.

சாஸ்திரங்களிற் போதிக்கப்பட்டிருக்கும் ‘யோகம்’ என்பதற்கும், பகவானால் போதிக்கப்படும் ஆத்ம விசாரத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. சாஸ்திரங்கள், மனிதர்களின் மித்தையுணர்வாகிய ‘நான் ஒரு தேகம்; எனக்கு ஒரு தனியிருப்பு உண்டு’ என்ற ஒரு ஜீவபாவக் கொள்கையை அடிப்படையாக ஒத்துக்கொண்டு, கர்மம், பக்தி, யோகம், ஞானம் என்ற நான்குவித யோகங்களை உபதேசிக்கின்றன:

1. ‘பலனில் இச்சையற்றுக் கர்மம் புரி’ என்கிறது கர்மயோகம்.

2. ‘இதரப் பொருள்களை விரும்பாதே; கடவுளையே விரும்பு’ என்கிறது பக்தி யோகம்.

3. ‘இறைவனிடமிருந்து பிரிந்து நீ ஜீவனாகிச் சிறுமைப் பட்டுவிட்டாய்; அவனிடம் மீண்டும் போய்ச் சேர்’ என்கிறது இராஜ யோகம்.

4. ‘நீ அவனை அறி’ என்கிறது ஞான யோகம்.

இந் நான்கிலும், ‘நான்’ ஒருவன் இருந்துகொண்டே நிஷ்காமிய கர்மம் புரிய வேண்டும்; ‘நான்’ ஒருவன் இருந்துகொண்டே இறைவனை நேசிக்க வேண்டும்; பிரிந்து வந்தவனாகிய ‘நான்’ ஒருவன் இருந்தே அவனைப் போய்ச் சேரவேண்டும்; இறைவனை அறியாத ‘நான்’ ஒருவன் இருந்தே அவனை அறிய முற்பட வேண்டும்; இவ்வாறு இந் நான்கு யோகங்களிலும், ‘நான் இவன்’ அல்லது ‘நான் இது’ என்ற ஒரு தனிப்பட்ட (ஜீவ) இருப்பு அவசியப்படுகிறது. இந்த நான் இல்லாமல் எந்த யோகமும் செய்ய முடியாது!

‘இந்த நான் யார்? இவன் இருப்பது உண்மையா? உண்மையில் இவனுக்கு ஒரு தனி இருப்பு உண்டா? இவன் நிஜமானவனா?’ என்று முதலில் ஆராய வேண்டாமா? இவனால் விரும்பப்படும் கடவுள் நிலைக்கு மேற்காட்டிய நால்வகை யோக முறைகளில் முயன்று பாடுபடுவதைவிட, இவன் ‘தன் நிலைமை – தன் இருப்பு எது?’ என்பதை முன்னர் ஆராய்ந்தறிவதே அவசியமானதும், சுலபமானதும், மேலானதும், பயனுள்ளதும் கூட! தன்னைப் பற்றிய சந்தேகமற்ற அறிவு ஏற்படாத வரையில் கடவுளைப் பற்றி எவ்வளவுதான் படித்தோ, கேட்டோ, தரிசனங்கள் கண்டோ அறிந்தாலுங்கூட (தான் ஒருவன் இருப்பதால்) சந்தேகமும் துக்கமும் மீண்டும் மீண்டும் தனக்குக் கிளம்பிக் கொண்டேதான் இருக்கும். ஆகவே, மேற்கூறிய இந்த நான்கு யோகங்களையும் செய்யவேண்டிய இந்த ‘நான்’ என்பது தனி யிருப்புள்ள ஒரு மனிதனே (ஜீவனே) என்ற தீர்மானத்தை ஒத்துக்கொண்டுதான், சாஸ்திரங்களால் இதுவரை நமக்கு யோக உபதேசங்கள் கூறப்பட்டன. ஆனால் பகவான் ரமணரோ நம்மை இவ்விதம் ஒத்துக்கொள்ளவே விடுவதில்லை! ‘உன் பெட்டியை நீ திறந்து பார்ப்பதற்கு முன்பே உன்னை ‘நான் ஏழை, பணமில்லாதவன்’ என்று தரித்திரப் பட்டங் கட்டிக் கொண்டு வீணே கூக்குரலிடாதே. முதலில் உன் பெட்டியைத் திறந்து பார்க்கும் வேலையில் ஈடுபடு; பார்த்தபின் அதைப் பற்றிப் பேசலாம்; அது போல் ‘நீ யார்?’ என்று உன்னை விசாரித்து அறியுமுன்பே அனாவசியமாக உன்னை நீயே ஓர் அற்ப ஜீவனாகத் தப்புக் கணக்குப் போட்டுக் கொள்ளாதே; உன்னை யார் என்று ஆய்ந்து அறிவதில் ஈடுபடு. அறிந்தபின் உனக்கு ஏதாவது (கடவுள் – முக்தி – சுகம் முதலியன) தேவைப்படுமாயின் பார்த்துக் கொள்ளலாம்’ என்கிறார் பகவான்!

நம்மை உடலாகக் கருதும் தேகாத்ம புத்தியே ஜீவனாகும். இந்த ஜீவனின் இயல்பு என்னவென்றால் ‘நான் இவ்வுடல்’ என்ற ஓர் அறிவே.

20சடவுடல்நா னென்னாது சச்சித் துதியா(து)

உடலளவா நானொன் றுதிக்கும் — இடையில்இது

சிச்சடக்கி ரந்திபந்தம் ஜீவன்நுட்ப மெய்யகந்தை

இச்சமு சாரம்மனம் எண்.

(உள்ளது நாற்பது 24)

இந்த ‘நான் தேகம்’ என்ற அறிவு, தூக்கத்திற்குப்பின் உதித்தெழுகின்றது. மறுபடி தூக்கம் வரும் வரையில் வியவகரித்து இருந்துவிட்டு, தூக்கத்தில் ஒடுங்குகிறது. ஆனால் இவ்வுடலோ ஜடமாகையால் ‘நான்’ என்ற அறிவு அதற்குக் கிடையாது. அதனால் இவ் அறிவை (நான் தேகம் என்று எழுந்த அறிவை) உடம்பு என்று கூற முடியாது! ஆனால் இது ‘நான்’ என்ற அறிவு விளக்கமுடையதாக இருப்பதைக் கொண்டு இதை ‘ஆன்மா’ என்று கூறலாமோவென்றால், உதிப்பதும் ஒடுங்குவதும் ஆன்ம சுபாவமல்ல. ஆன்மா உதியாமல் ஒடுங்காமல் எப்போதும் ‘நான் இருக்கிறேன்’ என்று விளங்கும் சத்-சித் சொரூபமாகும். ஆகையால் இந்த உதித்தொடுங்கும் ‘நான் அறிவு’ ஆன்மா வென்றும் கூறமுடியாது. இது அறிவான ஆன்மாவுமல்ல; ஜடமான தேகமுமல்ல! உதித்தொடுங்கும் தேக சுபாவத்தையும், ‘நான்’ என்று விளங்கும் ஆன்ம சுபாவத்தையும் கலந்து கொண்டு, ஜடமான தேகத்திற்கும் சத்-சித்தான ஆன்மாவுக்கும் இடையில் சித்+ஜடக் கிரந்தியாய், அவையிரண்டுக்கும் அன்னியமாய், உடல் அளவே தன் அளவாக (கால தேச வரையறைக்குட்பட்டதாக)த் தோன்றியுள்ள ஓர் பேய்த் தோற்றம் போன்ற பொய்த் தோற்றமே இதுவாகும். இதுவே சிச்சடக் கிரந்தி, பந்தம், ஜீவன், நுட்ப மெய் (சூட்சும சரீரம்), அகந்தை, சம்சாரம், மனம் முதலிய பலவித நாமங்களால் அழைக்கப்படுவதாகும்.

உருப்பற்றி யுண்டாம் உருப்பற்றி நிற்கும்

உருப்பற்றி யுண்டுமிக வோங்கும் — உருவிட்(டு)

உருப்பற்றுந் தேடினால் ஓட்டம் பிடிக்கும்

உருவற்ற பேயகந்தை ஓர்.

(உள்ளது நாற்பது 25)

‘இது ஓர் (உடல்) உருவத்தை “நான்” என்று பற்றி(அபிமானித்து)க் கொண்டுதான் தோன்றும்; அவ்வுருவத்தைச் சார்ந்து நின்றுதான் இருப்புக் கொள்ளும்; அவ்வுருவின் சார்பையே தான் வாழ்வதற்கான உணவாகக் கொண்டு மிகவும் கொழுக்கும் (வளரும்); தான் பற்றிய ஓருருவத்தை விட்டு மற்றொரு உடல் வடிவத்தை “நான்” என்று பற்றிக் கொள்ளும்; “இது எது அல்லது யார்?” என்று நாட ஆரம்பித்தால் மட்டுமே இருப்பின்றி மறைந்துவிடும். இவ்வாறு “தேகமே நான்” என்று எழும் அகம்பாவம் - உண்மையிருப்பற்ற, உருவற்ற, கற்பிதமான வெறும் பேய்த் தோற்றமே’ என்கிறார் பகவான் ஸ்ரீ ரமணர்!

மேலும்,

இல்லாத ஒன்றை இருப்பதாக வைத்துக்கொண்டு, அப்படிக் கற்பிக்கப்பட்ட ‘நா’னுக்கு உய்வு தேடும் பொருட்டு, மேற்கூறிய நான்கு யோக மார்க்கங்களையும் நீ ஆரம்பிக்க வேண்டி வருகிறது! செய்யும் இச்சாதனையே, இல்லாத அகந்தைக்கு இருப்பை(உயிரை)க் கொடுக்கிறதாக ஆகும்போது, பின் அது எப்படி அகந்தையை அழிக்கும்? ஆன்ம விசாரம் ஒழிந்த மற்ற எவ்வித சாதனத்திலும் சாதனத்தை நடத்தும் பொருட்டு மனமென (ஜீவன்) ஒன்று இருந்தேயாக வேண்டும். மனமின்றி அந்தச் சாதனையை நடத்துவதெப்படி? மற்ற சாதனங்களால் அகந்தையை அழிக்க முயல்வது, திருடனே திருடனாகிய தன்னைப் பிடிக்கக் கொத்தவால் ஆவது போல்தான்! ஆன்ம விசாரமொன்றே, அகந்தையோ மனமோ (ஜீவனோ) உண்மையில் இல்லவேயில்லை என்னும் சத்தியத்தை வெளிப்படுத்தும். ஆகையால், நீ இன்னும் ஆராய்ந்து காணாத இவ்வகந்தையை மறுத்து, நிர்விஷயம் செய்து, (அதன் எழுச்சி எங்கிருந்து, எப்படி என்று நாடுவதால்) வேரோடு களைந்து சுட்டெரி. அவ்வாறின்றி, அதை (‘நான் யார்’ என்று) ஆராயுமுன்பே உண்மையானதாக ஒத்துக்கொண்டால் அதுவே உனக்கு விலங்காகி, இன்னும் இல்லாத தடைகளை(காமக்குரோதாதிகளை) எல்லாம் உனக்குக் கற்பித்து, பிறகு அவைகளைக் கடப்பதற்கென்று மேற்கூறிய வீண் முயற்சிகளையும் உனக்கு உண்டாக்கி வைக்கும் என்கிறார் பகவான்.21

நாமல்லாத ஒன்றை நாமாக முதலில் ஒப்புக் கொண்டால்தான், அதனின்றும் முயன்று மற்றோர் உண்மைப் பொருளைப் போய்ச்சேர வேண்டிய ‘யோகம்’ அவசியப்படும். ஒன்றை ஆராயுமுன் இப்படித் தப்பாக ஒப்புக் கொள்வதே அறியாமையாகும்! அதுவே பந்தமாகி விடுகிறது! இல்லாததை – சரியாகத் தெரியாததை (பந்தத்தை) ஒத்துக்கொண்டு, பிறகு அதனால் விளையும் துன்பத்தைத் தவிர்க்கப் பாடுபடுவதை விட, ‘அது உள்ளதா? அது எது? அதுவாகிய இந்த நான் யார்?’ என்று விசாரிப்பது, இன்னும் ஏற்புடைய உத்தமமான காரியமல்லவா?

வினையும் விபத்தி வியோகமஞ் ஞானம்

இனையவையார்க் கென்றாய்ந் திடலே — வினைபத்தி

யோகம்உணர்(வு) ஆய்ந்திடநா னின்றியவை யென்றுமில்;தா

னாகமன லேயுண்மை யாம்.

(உள்ளது நாற்பது - அனுபந்தம் 14)

பொருள்: நிட்காமிய கன்மம் செய்யாததும், கடவுளை நேசிக்காததும், கடவுளை விட்டுப் பிரிந்ததும், கடவுளை அறியாததுமான நான்கு குற்றங்களும் யாருக்கு என்றால் ‘எனக்கு’ என்று ஆகும். ‘இந்த நான் யார்?’ என்று தன்னை ஆராய்வதொன்றே உண்மையில் கர்மயோகமும், பக்தி யோகமும், ராஜ யோகமும், ஞான யோகமுமாகிய நான்குமாம். ஏனெனில், இவ்வாறு தன்னை யார் என்று ஆராய்ந்தால் இந்தக் குற்றவாளியாகிய ‘நான்’ இல்லாமற் போய்விடும். இந்த நான் உண்மையற்றதாவதால் மேற்கூறிய குற்றங்கள் நான்குமே என்றுமே இல்லாதனவாக உணரப்படும். என்றும் ஆன்மாவாகவே நாம் விளங்குவதே உண்மை அனுபவமாகி விடும்.

‘நான் யார்’ விசாரத்தின் பயனாய் இந்நிலை எய்தப்படவே, பிறகு சதுர் யோக சாதனைகளையும் யார் செய்வது? ஏன் செய்வது? எனவே, ‘நான் யார்’ என்ற விசாரமே யோகங்கள் அனைத்தின் சாரம். அதாவது மஹா யோகம் ஆகும்.

பகவான் ஸ்ரீ ரமணர் உண்மையான இருப்பு நிலையையே (ஸத் பாவத்தையே) நமது அடிப்படையுணர்வாகக் கொண்டு தமது உபதேசத்தை (‘நான் யார்?’ என்பதை) அருள்கின்றார். அதனால் அவர் ஜீவ போதமாகிய அகந்தையை – இல்லாததை – ஒத்துக்கொள்ள நம்மை விடுவதேயில்லை. ஆனால் மற்ற யோக மார்க்கங்களிலோ தற்போது நாம் 22ஆராயாமல் தப்பாக மேற்கொண்டுள்ள ஜீவ பாவமாகிய பொய்யை நம் இருப்பு நிலையான அடிப்படையாகக் கொண்டே போதனைகள் தரப்பட்டிருக்கின்றன. அதனால்தான் ‘சேர்தல்’ அல்லது ‘யோகம்’ என்று கூறப்பட்டது. எனின் வேதாந்த சாஸ்திரங்கள் தவறா? அவை, முமுக்ஷுக்களை வஞ்சித்தனவா? சாஸ்திர வாக்குகள் பொய்யாகுமா? பகவான் ஸ்ரீ ரமணர் சாஸ்திரங்களைக் கண்டித்தாரா? என்று சிலர் ஐயுறலாம்!

உண்மை அப்படியல்ல! சாஸ்திரங்களும் பொய் கூறவில்லை; பகவான் ஸ்ரீ ரமணரும் சாஸ்திரங்களைக் கண்டிக்கவில்லை!! உண்மை என்னவென்றால், சாஸ்திரங்களின் உட்கிடக்கையை(மெய்ந் நோக்கத்தை)ப் புரிந்துகொள்ள முடியாத, வெறும் சாஸ்திரப் படிப்பாளிகளின் வியாக்கியானங்களால் சாஸ்திரங்களின் உயிர் நாடியாகிய பாரமார்த்திக உண்மையே காலக்கிரமத்தில் உயிரிழந்தது போல் ஆக்கப்பட்டுவிட்டது. அனுபவிகளாகிய ஞானிகளிடம் சென்றே சாஸ்திரங்களுக்கு உண்மையான பொருளைக் கேட்டறிய வேண்டுமே தவிர, தமது மொழிப் புலமையையும் மதி நுட்பத்தையும் மட்டும் துணை கொண்டு எவரும், எந்த சாஸ்திரத்தின் மெய்ந் நோக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியாது. இரண்டொரு உதாரணங்களுடன் இதைக் காண்போம்.

முதலாவதாக:

‘தத்துவமஸி’, ‘அது நீ’ என்று மகா வாக்கியோபதேசம் கூறப்பட்டுள்ளது. அவ் வரும் பொருட் சொற்றொடரைக் கேட்டதும் ஒரு முமுக்ஷு (மோக்ஷமடைய விரும்புபவன்) என்ன செய்ய வேண்டுமென்பதில் படிப்பாளிகளுக்கும் பகவானுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க. சாஸ்திரங்களை நன்றாகப் படித்துவிட்டு நூதன அர்த்தங்களுடன் பிறருக்குப் பிரசங்கித்தும் உபதேசித்தும் திரியும் படிப்பாளிகள் ‘தத்துவமஸி, அஹம் ப்ரம்மாஸ்மி, ஸோஹம்’ எனப்படும் இம் மகாவாக்கியங்களை ஜபம் செய்துவர ஆரம்பித்து விடுகிறார்கள். அல்லது ‘நான் பிரம்மமாயிருக்கிறேன்’ என்று நினைத்து (தியானித்து) வர ஆரம்பித்து விடுகிறார்கள். அவ்வாறே அவற்றை ஜபம் – தியானம் செய்யும்படிப் பிறருக்கு உபதேசித்தும் வருகிறார்கள். இதற்கு முன்பு, ‘நான் ஒரு ஜீவன் அல்லது மனிதன்’ என்று நினைத்திருந்த நினைப்புக்குப் பதிலாக இப்போது ‘நான் பிரம்மம்’ என்ற மற்றொரு வித நினைப்பையே மேற்கொள்கிறார்கள். இதுவும் ஒரு நினைப்பே தவிர, வேறல்ல! நினைப்பற்ற நிஷ்டையல்ல! இவ்வாறு அம் மகாவாக்கியங்களைக் கேட்டதும் அனுஷ்டானம் செய்யவேண்டிய முறை என்னவென்று தெரியாமல் பிழையாகக் கையாளப்படும் மகா வாக்கிய ஜபத் தியானங்கள் ஆண்டாண்டுதோறும் அனுஷ்டிக்கப்பட்டாலும் அனுபவ ஞானமடைவது அசாத்தியமாகி விடுவதை பகவான் அறிகிறார்! அவர் உடனே,

அதுநீயென் றம்மறைக ளார்த்திடவுந் தன்னை

யெதுவென்று தான்றேர்ந் திராஅ – ததுநான்

இதுவன்றென் றெண்ணலுர னின்மையினா லென்றும்

அதுவேதா னாயமர்வ தால்.

(உள்ளது நாற்பது 32)

என்று கூறி, சரியான வழியில் சாதகர்களைப் புகுத்துகின்றார். அதாவது, ‘அது நீ’ என்று சாஸ்திரங்கள் கூறினால், உடனே ‘எது நான்? நான் யார்?’ என்ற கவனத்துடன் தன்னை நாட வேண்டுமே தவிர, ‘இந்தத் தேகம் நானல்ல; அந்தப் பிரம்மம் நான்’ என்று கருதிக்கொண்டிருக்க வேண்டுமென்று அர்த்தமல்ல. சாஸ்திரங்கள் ‘அது நீ’ என்று கூறியதின் கருத்து, உடனே சாதகன் ‘நான் யார்?’ என்று தன்னை நாட வேண்டுமென்பதற்காகவே. ஆனால் அவ்வாறின்றி ‘அது நான்’, ‘ஸோஹம்’, ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்ற அவற்றை ஜபத் தியானமாக்கி விடுவதால், அவைகளைக் கூறவந்த சாஸ்திரங்களின் நோக்கம் பாழாயிற்று. சாதகர்களும் பயன்பெற முடியாமற் போயிற்று; அல்லவா? ஆனால் பகவான் இவ்வாறு உடனே ‘நான் யார்?’ என்ற தன் நாட்டத்திற்குச் சாதகர்களைத் திருப்புவதால், சாஸ்திரங்களின் நோக்கத்தை நிறைவேற்றி அவைகளுக்குப் புத்துயிர் அளிப்பதாகிறதே தவிர, கண்டிப்பதாக ஆகுமா? ஆகாது! மேலும் ஓர் உதாரணத்துடன் ஆராய்வோம்.

ஓர் சிறுவன் தந்தையுடன் அந்தி வேளையில் உலாவச் சென்றான். அங்கே, கிளைகளெல்லாம் வெட்டப்பட்டு நின்றதோர் அடி மரத்தைக் கண்டான். ‘அப்பா! அதோ! ஓர் பிசாசு!’ என்று கூறிப் பயந்தான். தந்தைக்கோ அது வெறும் அடிமரம் என்ற உண்மை தெரியும். அதனால் அவர், ‘ஓகோ! அந்தப் பிசாசா! அது உன்னை ஒன்றும் செய்ய முடியாது. நானிருக்கிறேன், பார்த்துக் கொள்கிறேன்! வா!’ என்று கூறி அழைத்து வந்துவிட்டார். தந்தையின் வார்த்தைகளைக் கேட்டதும் பையன், ‘நம் அப்பா இந்தப் பிசாசை விட பலசாலி போலிருக்கிறது! அதனால்தான் அது என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார்’ என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு விட்டான்! இது யோக வேதாந்த சாஸ்திரங்களைப் படித்ததும் படிப்பாளிகள் அர்த்தம் பண்ணிக்கொண்ட விதத்திற்குச் சமானமாகும்!

மறுநாள் மாலையில் அவன் அதே வழியாக, தன் ஆசிரியருடன் உலாவச் சென்றான். அன்று பையன், ‘ஐயா, அதோ பாருங்கள்; அங்கு ஒரு பிசாசு இருக்கிறது! நேற்றும் பார்த்தோம்!’ என்றான். ஆசிரியர் இவனது அறியாமைக்கு இரங்கி, ‘அது பிசாசல்ல!’ என்றார். பையனோ, ‘அல்ல, அல்ல; நேற்று என் அப்பாவும் பார்த்தார்; அந்தப் பிசாசு ஒன்றும் செய்ய முடியாதபடி தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்; நீங்கள் பிசாசே இல்லை என்கிறீர்களே!’ என்றான். ஆசிரியர் இலேசில் விடுபவரா? ‘அடேய்! அருகில் போய் நீயே பார்! இதோ (டார்ச்) விளக்கைக் காட்டுகிறேன்; அது பிசாசாயிருந்தால் பிறகு நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார்.

அத் தந்தையின் வார்த்தைகளைப் போன்றவை சாஸ்திரங்கள். தந்தைக்கு அது பிசாசல்ல என்பதும் தெரியும். அது போலவே சாஸ்திரங்களை அருளிய மகான்களுக்கும் அகந்தை, உடல், உலகம் ஒன்றும் உண்டாகிவிடவில்லை என்ற பாரமார்த்திக உண்மை தெரிந்ததே. பையனின் அன்றைய பயந்த நிலையில் அதை ஆராய்ந்து பார்க்க அவன் தகுதியற்றவனாயிருந்ததைக் கண்டு, தந்தை அவன் ஏற்றுக்கொண்ட பொய்ப் பாவமாகிய பிசாசைத் தானும் உண்மையென்று ஒத்துக்கொள்வதைப் போலவே நடித்து, அவனிடம் பேசினார். அப்படிப் பேசும் போதுங்கூட அவர் பொய் சொல்லவில்லை. அவனது பயத்தை உடனடியாக நீக்குவதற்காக ‘அந்தப் பிசாசு உன்னை ஒன்றுஞ் செய்ய முடியாது’ என்றே கூறினார். அது உண்மையே! ஆனால், மறுநாள் ஆசிரியர் கூறியதுதான் பாரமார்த்திக உண்மை. ‘அது பிசாசல்ல’ என்று கூறித் தந்தையின் வாக்கைப் பொய்யாக்குவது போல மேற்பார்வையிற் காணப்படினும், தந்தை கூறிய, ‘அது உன்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்ற கருத்தையே, (அது மரம்தான் என்று பிரத்தியட்சமாய் அவனையே அறிய வைப்பதால்) இன்னும் ஊர்ஜிதப்படுத்துகிறார் அல்லவா? தந்தையின் நோக்கத்தை நிறைவேற்றுவதால், ஆசிரியரின் கூற்று, தந்தையின் வாக்குக்குப் புத்துயிர் கொடுக்கிறதல்லவா? இவ்வாறு உணர்ந்து கொள்ளாமல் அந்தப் பையன், ‘அப்பாவை ஆசிரியர் கண்டிக்கிறார்!’ அல்லது ‘அப்பா பொய் கூறினார்!’ என்றெல்லாம் தீர்மானம் செய்வானாயின் அது பெரும் பிழை. அதுபோலவே பகவானும் சாஸ்திரங்களைக் கண்டிக்கவுமில்லை! பொய்யாக்கவுமில்லை; சாஸ்திரங்கள் பொய் கூறவுமில்லை. அவ்வாறு வாசகர்கள் யாராவது பகவானைப் பற்றி நினைப்பார்களானால் அவர்கள் கதையிற் கண்ட பையனைப் போலத் தவறான முடிவுக்கு வருபவர்களேயாவர்.

இரண்டாவதாக:

‘கைவல்ய நவநீதம்’ என்ற ஞான நூல் - ‘ஞானிக்கு ஞானத்தால் சஞ்சித கர்மம் எரிக்கப்படுகிறது; அவனைத் தூற்றுவோர் போற்றுவோரால் ஆகாமிய கர்மம் ஏற்றுக்கொள்ளப்பெற்று, அவனுக்கு இல்லாததாகி விடுகிறது; விஞ்சின பிராரப்தத்தின் வினையனுபவித்துத் தீரும் – பிராரப்த கர்மம் மட்டும் அவனது உடல் வாழ்நாளில் அனுபவிக்கப்பட்டு முடிவடைந்து விடும்’ என்று கூறிற்று. ஆனால் பகவானோ,

சஞ்சிதவா காமியங்கள் சாராவாம் ஞானிக்கூழ்

விஞ்சுமெனல் வேற்றார்கேள் விக்குவிளம் — புஞ்சொல்லாம்

பர்த்தாபோய்க் கைம்மையுறாப் பத்தினியெஞ் சாததுபோற்

கர்த்தாபோ மூவினையுங் காண்.

(உள்ளது நாற்பது - அனுபந்தம் 33)

என்று தீர்ப்பளிக்கின்றார்! ஞானிக்குப் பிராரப்தம் மாத்திரம் உண்டு என்று இதற்குமுன் ஞான சாஸ்திரங்களிற் கூறப்பட்டதை ‘வேற்றார் கேள்விக்கு விளம்பும் சொல்’ என்கிறார் பகவான்! அதாவது, ஞானமே ஞானி; நரவடிவமன்று’23 என்ற உண்மையைக் கிரகிக்க முடியாமல், அசரீரியாகிய (ஞானத்தையும்) ஞானியையும் ஒரு சரீரியாகவே – ஒரு தேகமாகவே – ஓர் தனி வியக்தியாகவே எண்ணிக் காண்கின்ற (முதல் நாள் அடிமரத்தைக் கண்டு பிசாசென்று பயந்து மயங்கியிருந்த பையனைப் போன்ற நிலையிலுள்ள) பாமரர்களையே இங்கு ‘வேற்றார்’ என்று பகவான் குறிப்பிடுகின்றார். ஏனெனில், அத்தகையோர் ‘ஞானி எப்படி நடப்பான், எப்படிச் செய்வான், எப்படி வாழ்கிறான்’ என்றெல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருப்பார்களாகையால் அவர்களுக்கு தேகான்ம பாவமற்ற ஓர் இருப்பு (ஸத்) ‘புரியாப்புதிர்’ ஆகும். அதனால் அவர்களை ‘வேற்றார்’ என்று குறிப்பிட்டு, ‘அவர்களுக்கு அப்படித்தான் சொல்ல வேண்டும்’ என்று காட்டுகிறார் பகவான்! அவ்வாறின்றிப் பாரமார்த்திக உண்மையை உள்ளபடி அறிந்துகொள்ளும் தீரத்தோடு வந்தணுகும் நன் முமுக்ஷுக்களே ‘உற்றா’ராதலின், அவர்களுக்கு உண்மையை ஒளிக்காமல்,

பர்த்தாபோய்க் கைம்மையுறாப் பத்தினியெஞ் சாததுபோற்

கர்த்தாபோ மூவினையுங் காண்.

‘மூன்று மனைவியருள்ள ஒரு கணவன் இறந்தால், மூவரும் கைம்மை யடைவரேயன்றி ஒருவரும் மிஞ்சார்; அதுபோல், கர்மங்களைச் செய்தவனாகிய ஜீவன் – கர்த்ருத்வம் – அழிந்தவுடன் ஆகாமிய சஞ்சித பிராரப்தம் மூன்றும் (போக்தாவின்றி) அநுபவிப்போனின்றி அழிகின்றன என்று பகவான் கூறுகிறார். இதனால் பகவான் கைவல்யத்தைக் கண்டித்ததாகுமா? அதில், அன்று அவ்வாறு கூறப்பட்டதும் ஏன் என்று தெளிவாக இப்பாடலால் பகவான் விளக்குவதால் இது கண்டனமாகாது.

மக்கள் சமூகத்தின் அறிவு முன்னேற்றத்திற்கு – பரிபாக காலத்திற்கு ஏற்ப, ஒரே பரம்பொருள், வேத ரிஷிகளாகி சாஸ்திரங்களை அருளியது. பிறகு அப் பரம் பொருளே ஞானாசிரியர்களாய் வெளிப்பட்டு, ஆதியில் தாம் அருளியதும், ஆனால் தக்கவாறு விளங்கிக் கொள்ளாமல் குயுக்திகளால் திரித்து மலினமாக்கப்பட்டதுமான, தனது பேருண்மையை, அவ்வக்கால மக்களின் அறிவெழுச்சிக்கேற்றப் புதுப்புது வழிகளில் தெளிவாக்கிப் புத்துயிரூட்டிப் போதிக்கின்றது! ஆகவே, அவ்வக் காலங்களில் வந்து அவதரிக்கும் அதே பரம்பொருளால் அருளப்பெறும் நூதன உபதேச முறைகள் எவையும் பண்டை உயர் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அமைவனவே தவிர நிராகரிப்பதற்காக அமையா. இக்கருத்தையே இயேசு கிறிஸ்து ‘I am not come to contradict, but to fulfill’ – ‘நான் நிராகரிப்பதற்கல்ல, நிறைவேற்றவே வந்தேன்’ என்றார்.

ஆனால் சாஸ்திர ஜால மஹாரண்ய இருளின் கவர்ச்சியால் மயங்கி, சாஸ்திரப் பற்று மட்டுமே தவிர, பயனை அனுபவிக்கப் பெறாதவர்களாயும், சாஸ்திரங்களைத் தம் புத்தி சாமர்த்தியத்தால் வியாக்கியானங்கள் எழுதுவதற்கும் மேடைப் பிரசங்கங்கள் நிகழ்த்துவதற்கும் மட்டுமே உபயோகித்துப் புகழ் பெறுபவர்களாயும் உள்ள சாஸ்திர மேதைகளின் கண்களுக்கு, சாஸ்திரங்களிற் கூறப்பட்டுள்ள சுற்று வழிகளைத் திருத்தியமைத்து, சாதகனுக்கு நேராகவும் எளியதாகவும் வழிகாட்டியருளுகின்ற பகவான் ஸ்ரீ ரமணரது புரட்சிகரமான உபதேசங்களைக் கண்டதும், அவை சாஸ்திரங்களைக் கண்டிப்பன போல் தோன்றுமே தவிர, சாஸ்திரங்களின் மெய்ப்பயனை அடைய விரும்பும் உண்மை முமுக்ஷுக்களுக்குப் பகவானது உபதேசங்கள் யாவும், சாஸ்திரங்களுக்குப் புத்துயிரும் புதுப் பெருமையும் தருவதற்காக அவைகளின் சிரமேல் அணிவிக்கப்பெற்ற சிரோ ரத்தினங்களாகவே காணப்படும்!

சாஸ்திரங்களுக்கும் பகவானுக்கும் இந்த போதனா முறையிலுள்ள வித்தியாசமானது உபதேசத்தை ஏற்றுக்கொள்வதற்கு நமக்கு எந்த அடிப்படை பாவம் கொடுக்கப்படுகிறதோ அதைப் பொறுத்ததேயாகும். இதனால்தான், இதர சாஸ்திரங்களைப் படித்து சாதனானுஷ்டானம் செய்துவரும் முமுக்ஷுக்கள், ‘தவம், தவம்’ என்று எம் முயற்சிகளையெல்லாம் சிலாகிக்கும் நோக்கத்துடன் பகவானிடம் வந்து வினவிய போதும், பகவான் அவர்களது அடிப்படை பாவத்தை மாற்றியமைப்பதொன்றையே தனது உபதேசக் குறிக்கோளாகக் கொண்டு, விடைகூறி வந்தனர்! சற்குருவின் இந்த நோக்கத்தை, தெளிந்த கூர்ந்த மதியால் தெரிந்துகொண்ட உத்தமச் சீடர்கள் அக்கணத்திலேயே தமது பிழையான அடிப்படை பாவத்தை (ஜீவ பாவத்தை) நாடி விசாரிக்கும் முறையில் ஈடுபட்டவர்களாய், தாம் அதுகாறும் தவம் என்று செய்துவந்த காரியங்களில் முயலாமலும், அத் தவ சாதனைகளில் ஏற்பட்டிருந்த சந்தேகங்களையே மீண்டும் வினவாமலும் பேரோய்வு கொண்டனர்! அந்தப் பேரோய்வு பகவானது சந்நிதியில் புதிதாக வந்தடையும் பலராலும் அடிக்கடி அனுபவிக்கப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். ஆயினும் அவ்வோய்வின் சகாயத்தால் மேன்மேலும் தன்மையுணர்வை நாடி ஆழ்ந்து முழுகுவோரே (நல்ல முமுக்ஷுக்களே) நிரந்தர சாந்தியைச் சுயார்ஜிதமாக்கிக் கொண்டனர். அவ்வாறின்றி, தமது அடிப்படை பாவத்தை மாற்ற விரும்பும் பகவானது நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாதோர், மேலும் மேலும் தமது தேகான்ம பாவத்திற்குப் பொருந்தியதாக, தாம் படித்த சாஸ்திரங்களில் எழுகின்ற சந்தேகங்களைத் திரும்பவுந் திரும்பவுங் கேட்டு வந்தனர்! தம் வழிக்கு வராத24 அவர்களது தடுமாற்றத்தைக் கண்ட பகவான், சில சந்தர்ப்பங்களில் அவர்களது நிலைக்கு இரங்கி, சாஸ்திரங்கள் ஏற்றுக்கொண்டுள்ளது போலவே (அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள) பொய் ஜீவ பாவத்திற்கேற்றபடி சாஸ்திர சந்தேக நிவர்த்திகளைச் சாஸ்திர பரிபாஷையிலேயே கூறுவதுமுண்டு. இதனால் பகவானது நேர் உபதேசங்கள் அவையாகி விடா! பகவான் மௌனமாயிராமற் பேசத் தொடங்கிய கால முதல், கடைசி வரையில் பகவானுடன் சம்பாஷணை வடிவில் (உரைநடையிலாயினும் சரி, செய்யுட்களிலாயினும் சரி) வெளிவந்துள்ள புத்தகங்கள் பலவற்றும் (ஸ்ரீ ரமணகீதை, Talks with Sri Ramana Maharshi, Day by Day with Bhagavan, மஹர்ஷி வாய்மொழி முதலிய சம்பாஷணை நூல்களில்) இத்தகைய கேள்விகளும் பதில்களும் அடிக்கடி வந்திருப்பதும், அவைகள் ஏன் வந்தன என்பதும், அவை ஏன் அவ்வாறு விடையளிக்கப்பட்டன என்பதும் அவைகளை ஊன்றி நோக்குவார்க்கு உணர்வாகும்.

‘நான் யார்?’ உபதேச வடிவைக் கொண்ட பகவானது ஸத் பாவ அடிப்படைக்கும், சாஸ்திரங்களிற் கூறப்பட்டுள்ள தவங்களில் முயலும் தேக பாவ அடிப்படைக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாகக் காட்டக்கூடிய ஓர் நிகழ்ச்சியை நோக்குவோம். பகவானது சீடருள் சிறந்த ஆரியக் கவியும், உணவாதிகளை ஒடுக்கி மிகச் சொற்ப அளவு உணவிலேயே வாழுந் தவத்தில் வல்லவருமான காவிய கண்ட கணபதி சாஸ்திரிகள் ஒரு முறை பகவானை அணுகி, ‘நாம் வாழ்வதற்கு ஒரு மாதத்திற்கு மூன்று ரூபாய் போதும் என்று தோன்றுகிறது’ என்றார்! உடனே பகவான், ‘நாம் வாழ்வதற்கு இவ் வுடல்கூட அவசியமில்லையே; மூன்று ரூபாய் எதற்கு?’ என்றார்!! இச் சம்பாஷணையின் உட்பொருள் நன்றாய் உணரப்பட வேண்டியதாகும். அதாவது அந்தச் சீடர் ‘நாம் வாழ’ என்று குறிப்பிட்டபோது, ‘உடல் வாழ’ என்ற கருத்திலேயே கூறினார். அதாவது, உடலையே நாமாகக் கொள்ளும் அடிப்படை பாவம் அச்சொல்லில் நன்கு விளங்குகிறது. பகவான் ‘நாம் வாழ’ என்று குறிப்பிட்டபோது, பஞ்ச கோசங்களுமற்ற சுத்த அறிவையே ‘நாம்’ என்று கொண்டுள்ள ஆன்ம பாவம் விளங்குகிறது. இதிலிருந்து இருவருக்கும் தமது இருப்புணர்வை(அடிப்படை பாவத்தை)ப் பற்றிய அனுபவம் யாதென விளங்குகிறதன்றோ?

இவ்வாறு பகவான், கணங்கூடத் தவறாமல் எப்போதும் தம் உண்மையில் திரிபில்லாதவராய் (ஸஹஜாத்ம ஸ்திதியில்) இருந்துகொண்டு, தன்னையடுத்த அடியார்களையும் பொய்யுணர்வான தேகாத்ம புத்திக்குச் சிறிதும் இடங் கொடாதபடி தடுத்து உபதேசித்து வந்திருக்கின்றனர் என்பது தெரிகிறதன்றோ? இதனால்தான் பகவான் ஸ்ரீ ரமணரது உபதேசங்கள் இதுவரை அப்பியசிக்கப்பட்டு வந்த நமது ஆன்ம சாதனங்களினின்றும் ஓர் புரட்சிகரமான தனிப்பட்ட சிறப்பும், தெளிவும், சத்தியமும் பொருந்தியதாக விளங்குகின்றன.

ஆத்ம விசாரத்தைத் தவிர மற்ற எல்லாச் சாதனங்களும் ‘நான் இவ்வுடல், நான் இன்னார்’ என்ற வடிவத்தில் எழுந்துள்ள, ஓர் அளவுக்குட்பட்ட தனி வியக்தி அல்லது அகந்தையானது உண்மை இருப்புள்ள ஒன்று என்றும், இந்த அற்ப விருத்தி ரூப ஜீவன் அந்த இதர சாதனைகளிலொன்றைப் புரிவதனாலேயே ஆன்மாவை அடைந்துவிட (அல்லது மனோ நாசம் – தன் வியக்தி நஷ்டம்) முடியும் என்றும் ஓர் தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டவைகளே! ஆனால் ஒருவன் ‘அளவுக்குட்பட்ட ஓர் அற்பத் தனி வியக்தியாகிய – அகந்தை அல்லது மனமாகிய – நான் உண்மை இருப்புள்ளவன்’ என்று நம்பி ஒத்துக்கொண்டிருக்கும் வரையில், அவனாற் செய்யப்படும் எந்தக் காரியமும் – சாதனமும் – அவ் வகந்தைத் தனியிருப்பைப் பொய்யானது என்று காட்டிக் கொடுக்கவே முடியாது. இது குறித்தே ஸ்ரீ பகவான் ‘ஸ்ரீ மஹர்ஷி வாய்மொழி’ என்ற நூலின் இரண்டாம் பாகம், முதல் அத்தியாயத்தில் (பன்னிரண்டாம் பதிப்பு, 2008, பக்கங்கள் 58, 53-4ல்):

ஸர்வ பரிபூரண ஸத் தத்துவமாகவே இருக்கும் உன் இயற்கையுண்மையைக் குறுக்கிக்கொண்டு, பிறகு ‘நான் ஓர் வியஷ்டி ஜீவன்’ எனத் துன்பம் மிகப் படுகிறாய்! மற்றும், இல்லாதவையாம் தளைகளைக் கடப்பதற்காக ஏதோ ஓர் சாதனையைக் கையாளுகிறாய்! இங்கே உன் சாதனையே உன் தளைகளை யதார்த்தம் என ஒத்துக்கொள்வதாயிருப்பதால் அவைகளைக் கடக்க அது எப்படி உதவும்? [...] ஆத்ம விசாரமொழிந்த மற்ற சாதனங்களால் [ஆன்மாவை அறியவோ, அல்லது] அகந்தையை ஒழிக்கவோ முயல்வது, திருடனைப் பிடிக்கத் திருடனே கொத்தவால் [policeman] ஆவது போலத்தான். ஆத்ம விசாரமொன்றே அகந்தையோ மனமோ உண்மையில் இல்லவேயில்லை என்னும் சத்தியத்தை வெளிப்படுத்தி, கைவல்யமான ஆத்மாவின் சுத்த நிர் விசேஷ ஸ்திதியை உணரச் செய்ய முடியும்.

என்று கூறியுள்ளார்.

மற்ற சாதனங்களால் அகந்தையை அழித்துவிட முயல்வது ஒருவன் தன் நிழலைப் புதைத்துவிட எண்ணிக் குழி தோண்டி, குழிக்குள் தன் நிழல் இருப்பதைக் கண்டு, உடனே மண்ணைப்போட்டுக் குழியை மூடி, அந்த நிழலைப் புதைத்துவிட முயல்வது போன்று வீணேயாகும். அகந்தை அல்லது மனமாகிய தன் தனியிருப்பைச் சந்தேகிப்பதோ, விசாரிப்பதோ, ஆன்ம விசாரத்தால்தான் நடைபெற வேண்டியிருப்பதால், ஆன்ம விசாரமொன்றே அகந்தை அல்லது மனத்தின் பொய்யிருப்பை வெளிப்படுத்தி, நமது எல்லையற்ற இயல்பான உண்மை சொரூபத்தை உணர வைக்கும்.

மற்ற எந்தவொரு சாதனையை ஒருவன் பயின்றாலும் ஆன்ம சாக்ஷாத்காரத்தைப் பெற, விரைவிலோ தாமதித்தோ ஆன்ம விசாரத்திற்கே வந்தாக வேண்டும். ஏனெனில், ‘நான் யார்?’ என்ற விசாரத்தால் இவ் வகந்தை அல்லது மனம் என்பது என்னவென்று ஆராயாமல், அது உண்மையில் இருப்பற்ற வெறும் பொய்த்தோற்றம் என்பதை எப்படி உணர முடியும்? அதைப் பொய்யிருப்பாக உணராதபோது எல்லையற்ற சத்திய சொரூபமான ஆன்மாவில் நிஷ்டை கூடி ஸ்திரமாக நிலைபெற எப்படி முடியும்?

...நானுதிக்குந் தானமதை நாடாமல் – நானுதியாத்

தன்னிழப்பைச் சார்வதெவன்? சாராமல் தானதுவாம்

தன்னிலையில் நிற்பதெவன்? சாற்று.

(உள்ளது நாற்பது - 27)

ஆகையால் ஆன்ம விசாரம் தவிர மற்ற சாதனைகள் யாவும் ஒருவாறு முடிவில் ஆன்ம விசாரத்தின் அவசியத்தை காட்டிக்கொடுத்து ஆன்ம விசாரத்திற்கே ஒருவனைக் கொண்டுபோய் விடுமே தவிர, (உபநதிகள் மூல நதியிற் போய்ச் சேருவதுபோல) நமது முடிந்த லக்ஷியமான ஆன்ம ஞான சாகரத்தில் தாமே நேராகக் கொண்டு சேர்ப்பனவல்ல.

இங்கு சிலர், ‘ஆன்ம விசாரமொன்றே நேராக ஆன்ம ஞானத்திற்கு இட்டுச்செல்லும் என்று ஸ்ரீ பகவான் அடிக்கடி கூறுவது உண்மையேயாயினும், “Talks with Sri Ramana Maharshi” போன்ற, ஸ்ரீ பகவானது சம்பாஷணைகளைக் குறிப்பெடுத்துத் தொகுக்கப்பட்ட சில புத்தகங்களில், பல இடங்களில் ஸ்ரீ பகவான், “மந்திர ஜபம், தியானம் இவைகளும் ஒருவனை அதே குறிக்கோளை அடைவிக்கும்” என்று ஒப்பம் தெரிவித்திருப்பதாகப் படிக்கின்றோமே. பகவத் சம்பாஷணைகளைக் காட்டும் நூல்களில் இவ்விதம் உபதேச முரண்பாடு தோன்றுவதற்குக் காரணம் என்ன?’ என்று கேட்பதுண்டு.

ஸ்ரீ பகவானது சம்பாஷணைகளில் இவ்விதத் தோற்றமாத்திர உபதேச முரண்கள் காணப்படுவது உண்மையே. ஏனெனில், ஸ்ரீ பகவான் ஏதோ ஒரு குறிப்பிட்ட வெறும் கொள்கைக்காரரோ (mere philosopher) அல்லது ஒரு மத போதகரோ அல்ல. மெய்ப்பொருளை அது உள்ளவாறே நேரே யாதொரு பண்டை சாதனை முறையும் கையாளாமலேயே தமது சுவானுபவத்திற் கண்டு தெளிந்தவர். அவர் தாம் கண்ட உண்மைக்கு எந்த ஒரு மத சாதனையையும் பின்பற்றியதில்லையாதலால் தாமாகவே எவ்வொருவருக்கும் எவ்வொரு பண்டை வழியிலும் வழிகாட்டியாகவோ, குருவாகவோ இருக்க முனைந்ததில்லை. ஆனால் பலமதக் கொள்கைகளையும், ஜபத்தியான யோகாதி சாதனைகளையும் முன்பே மேற்கொண்டிருக்கும் சாதகர்கள் தம்மிடம் வந்து உதவி நாடி நிற்கும்போது, அவரவர் வழியிலேயே அவரவரது அறிவுத் திறமைக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றவாறே தூண்டி, மேலே செல்ல வழி காட்டுவதுண்டு. ஒரு முறை 25ஒருவர், ‘மக்கள் அனைவரின் ஆன்மீக முன்னேற்றத்துக்காக பொதுவான உபதேசமாக எதைச் செய்யலாம்?’ என்று கேட்டபோது ஸ்ரீ பகவான், ‘ஒவ்வொரு தனி மனிதனுடைய மனப்போக்கிற்கும் பக்குவத்திற்கும், நம்பிக்கைக்கும் ஏற்ப உபதேசமும் மாறுபட்டே ஆகவேண்டும். எல்லா மக்களுக்கும் ஒரே உபதேசம் பொருந்தாது’ என்று கூறியருளினர். கீழ்வரும் ஒரு நிகழ்ச்சி26 இதனை நன்கு விளக்கும்:

மலைமீது ஸ்ரீ பகவான் வசித்திருந்த காலத்தில் காவிய கண்ட கணபதி சாஸ்திரிகள் என்ற ஒரு ரமண பக்தரது குமாரனான மகாதேவன் என்னும் இளைஞர் ஒருமுறை ஸ்ரீ பகவானிடம் தனியே வந்து, ‘‘பகவானே, ‘மந்திரேசுவரர்’ என்றழைக்கப்படும் என் தந்தை எனக்கு ‘இது முக்தியைத் தரும்’ என்று கூறி ‘சக்தி பஞ்சாக்ஷரி’ என்றொரு மந்திரத்தை உபதேசித்திருக்கிறார். இதை ஜபித்தால் முக்தி கிடைக்குமாவென்று தங்களைக் கேட்டறிந்துகொள்ள வந்தேன்’’ என்றார். ‘‘ஆஹா! அதுவே உயர்ந்த மந்திரம்; முக்தியைக் கொடுக்கும்’’ என்று ஸ்ரீ பகவான் கூறினார்! விபரம் அறியாத அவ் விளைஞர், ‘‘அப்படியானால், பகவானே, தாங்களும் இதைத்தான் ஜபம் செய்கிறீர்களா?’’ என்று கேட்டார்! அதற்கு பகவான், ‘‘ஆமாம்; அதைத்தான் நானும் செய்கிறேன்!’’ என்று விடையளித்து அவ் விளைஞரைத் தேற்றியனுப்பி விட்டார்! பிற்காலத்தில் ராம நாமம், காயத்ரீ போன்ற மந்திரங்களை ஜபிக்கும் பக்தர்கள் தம்மிடம் வந்து வினவியபோது, ‘அவைகளே மிகவுயர்ந்த மந்திரங்கள்’ என்று ஸ்ரீ பகவான் மிகவும் சிலாகித்துக் கூறிய வசனங்கள் பகவத் வசனாம்ருதம் (Talks with Sri Ramana Maharshi) போன்ற நூல்களில் நாம் காணக் கிடப்பதும் இதற்குச் சான்றாவனவாம்.

ஆகையால் பக்தர்களாற் குறிப்பெடுக்கப்பட்ட பல்வேறு பகவத் சம்பாஷணை நூல்களைப்27 படிக்கும் போது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீ பகவானளித்த விடைகள் அந்தந்தத் தனி ஒரு மனிதர்க்கு மட்டுமே பொருந்தக் கூடியவை என்று நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கேள்வி கேட்கும் அன்பர் அகந்தையின் உண்மையைச் சந்தேகிக்கத்தக்க சிறந்த பக்குவியாய் இருப்பாராயின், அப்போதெல்லாம் ஸ்ரீ பகவான் ஆன்ம ஞானமடைய நேர்வழியான ஆன்ம விசாரத்தையே தகுந்த ஒரே வழியாய் உபதேசிப்பர். அன்றி இவ்வுண்மையைப் புரிந்துகொள்ள மாட்டாதப் பக்குவக் குறைவினராய் இருப்பாராயின், தமது பரிசுத்த நேருபதேசத்தை, கேள்வி கேட்போருடைய மனப் பரிபக்குவத்திற்கேற்ப மலினப்படுத்திக் (dilute) கொள்ளவே நேர்ந்திருக்கின்றது. ஸ்ரீ பகவான், அத்தகைய மந்தாதிகாரிகளாகிய அபக்குவிகள் தத்தம் ஜீவத் தனித் தன்மையின் – வியக்தியின் – பொய்ம்மையைச் சந்தேகிக்கத் தயாராகவுமில்லை, விரும்பவுமில்லை என்பதையறிந்து, அவர்கள் அது வரையிற் செய்துகொண்டு வந்திருக்கும் கர்மானுஷ்டானங்கள், பூஜை, ஜபம், தியானம், யோகம் இவைகளையே செய்து வரும்படியும், அவைகளே ஆன்ம விசாரம் தரக்கூடிய குறிக்கோளைத் தந்துவிடும் என்றுங் கூறி உற்சாகப்படுத்தி, தாம் அவர்களது சாதனைகட்கும் அங்கீகாரம் கொடுப்பதுபோல் நடந்து கொள்வதும் உண்டு.

இவ்வாறு ஸ்ரீ பகவான் பக்குவமற்றவர்களின் கேள்விகளுக்கு இரங்கி, தனது உயரிய உபதேசத்தை (dilute) மலினப்படுத்தி விடையளித்ததற்கு இரண்டு நல்ல உதாரணங்கள் ஸ்ரீ ரமண கீதையில் உள்ளன! அந்நூலின் மூன்றாவது அத்தியாயத்தில், ‘தனதுண்மையை உணர்வதற்கான உபாயம், சுருங்கக் கூறின், எது? மிகவுயர்ந்ததான அக நோக்கம் எம்முயற்சியாற் கைகூடும்?’ (சுலோ 4) என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஸ்ரீ பகவான் கூறியதாகக் கொடுக்கப்பட்ட விடையாவது: ‘நினைப்பனைத்தையும் விஷயங்களினின்றும் முழு முயற்சியுடன் திருப்பி சலனமும் உபாதியுமற்ற ஆன்ம நாட்டத்திலேயே நிலைபெறச் செய்ய வேண்டும். தனதுண்மையை உணர்வதற்கான உபாயம், சுருங்கக் கூறின், இதுவேயாகும். இம்முயற்சி யொன்றாலேயே மிகவுயர்ந்த அக நோக்கம் சித்திக்கும்’ (சுலோ 5-6). இதில் முதலிலேயே திட்டவட்டமாக ஸ்ரீ பகவானது நேருபதேசம் கூறப்பட்டு விடுகின்றது. இவ்வாறு ஆன்ம விசாரம் ஒன்றே அதற்கு வழி என்று தெளிவாகக் கூறிய பிறகும், அக்கேள்வியாளர் ‘ஸ்திரமானதும் உபாதியற்றதுமான கேவல ஆன்ம நாட்டத்தால் ஆன்ம சித்தி கைகூடுவது போலவே மந்திரங்களை ஜபிப்பதால் ஆன்ம சித்தி கைகூடுமல்லவா?’ (சுலோ 9). என்று மீண்டும் கேட்கிறார்! ‘ஆன்ம விசாரம் ஒன்று மட்டுமே அந்நிலையை எய்துவிக்கும்’ என்று தான் கூறியதை இக்கேள்வியாளர் விரும்பவோ, ஒத்துக்கொள்ளவோ தயாராக இல்லை என்பதை இதனாலறிந்து ஸ்ரீ பகவான், தமது பரிசுத்த நேருபதேசத்தை கேள்வியாளர்க்காக மலினப் (dilute)படுத்தி, ‘சலனமற்ற மனத்தால் இடையறாது மந்திரங்களையோ, பிரணவத்தையோ ஜபிப்பதால் சிரத்தையாளர்க்கு ஆத்ம சித்தி கைகூடும்; மந்திரங்களையோ அல்லது பிரணவத்தை மாத்திரமோ ஜபிப்பதால், நினைவு விஷயங்களினின்றுந் திருப்பப்பட்டுத் தனதுண்மை மயமாகிவிடும்’ (சுலோ 10-11) என்று கூற வேண்டி நேர்ந்தது.

இது போன்றே ஸ்ரீ ரமண கீதையின் ஏழாவது அத்தியாயத்தில் சுலோகம் 6லும் 7லும் ‘சர்வ துக்க நிவர்த்தியே ஆத்ம விசாரத்தின் பயனாம். பலன் அனைத்தின் முடிவு இது. இதனினும் சிறந்த பலன் எதுவுமில்லை. மற்ற உபாயங்களால் அற்புத சித்திகளைப் பெறலாமெனினும், அவற்றை அடைந்தவனும் முடிவில் ஆன்ம விசாரமொன்றினாலேயே முத்தியடைய முடியும்’ என்று ஸ்ரீ பகவானால் அழுத்தமாகக் கூறப்பட்டுங் கூட, அதில் திருப்தியோ இஷ்டமோ இல்லாததால், கேள்வியாளர், ‘முத்திக்கு ஆன்ம விசாரத்தைத் தவிர வேறு ஏதாவது மார்க்கம் ஒன்றோ, பலவோ இருப்பின் பகவான் அதை எனக்குக் கூற வேண்டும்’ (சுலோ 21) என்று மறுபடியும் கேட்டதால்தான், தாம் கூறியதை (அதாவது, முக்தி ஆன்ம விசாரமொன்றால்தான் எய்தமுடியும் என்று கூறியதை) அக்கேள்வியாளர் ஒப்புக்கொள்ளாததை, அவரது இக்கேள்வியே தெற்றெனக் காட்டி விடுகிறதென்று கண்டு ஸ்ரீ பகவான், சுலோ.22-லிருந்து 26 வரை இடைப்பட்டவைகளில், ‘தேவதைகளையோ, மந்திரத்தையோ தியானிப்பவனுக்குங் கூட தன்னிலை சித்தித்து விடும்’ என்று ஒப்புவது போலவும், ஆனால் அதற்கு வெகு கால தாமதம் பிடிக்கும் என்றவாறு ஓர் எச்சரிக்கை(சுலோ 22)யும் கொடுத்து விடுகின்றார்!

மேற்கண்ட இரு உதாரணங்களாலும் ஜபத்தியானாப் பியாசத்தாலும் ஆன்ம ஞானம் கிடைக்கும் என்று கூறியிருப்பது, கேட்பவரது மன பரிபாகத்திற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப ஸ்ரீ பகவான் தமதுபதேசத்தை மலினப்படுத்தி அளித்த விடைகளே என்பது நன்கு விளங்குகின்றதன்றோ? இவ்வித காரணத்தால், ரமண கீதையில் மேற்கூறியபடி மலினப்படுத்தப்பட்ட உபதேசங்கள் காணப்படுவதைக் குறித்துப் பிற்காலத்தில் எழுந்த கேள்விகளுக்கு ஸ்ரீ பகவானே ‘Talks’ என்ற நூலில், நெ.57-ஆவது குறிப்பில், ‘ஸ்ரீ ரமண கீதைக் கேள்விகள் ஒரு சில உள் நோக்கங்களை வைத்துக்கொண்டே கேட்கப்பட்டனவாதலால், அதற்குத் தக்கவாறுதான் விடைகளும் கூறப்பட்டன’ என்று கூறியிருப்பதையும் இங்கு வாசகர்கள் கவனிக்க வேண்டும். தான் உபதேசிக்கும் ஆன்ம விசாரத்தை மேற்கொள்ள ஒருவர் விரும்பாவிட்டாலோ அல்லது அனுஷ்டிக்கத் தயாராக இல்லாவிட்டாலோ பகவான் மேற்கண்டவாறு அவரவர் அனுஷ்டிக்கும் சாதனையையே சிலாகித்து, அவ்வழியிலேயே ஊக்குவித்து அனுப்புவதே வழக்கம். தானுபதேசிக்கும் ஆன்ம விசார வழிக்கு வர விரும்பாத அல்லது பக்குவப்படாத அச்சாதகர்களை அவரவரது வழிகளிலாவது முயலும்படி ஊக்குவிப்பதற்காகவே ‘பிற சாதனங்களும் ஆன்மவிசாரக் குறிக்கோளைத் தந்து விடும்’ என்று கூடக் கூறியருள்வதுண்டு.

ஆனால், இப்படி பகவான் மற்ற சாதனங்களுக்கும் ஒப்புதல் அளிப்பதுபோல் விடை கூறுவதெல்லாம், கேள்வி கேட்போர் தாம் ஸ்ரீ பகவானிடம் வருவதற்கு முன்பு செய்துவந்த இதர சாதனைகளிலேயே பற்று மிகக் கொண்டிருந்த அபக்குவிகளின் கேள்விகளுக்கு மட்டுமே தவிர எல்லோருக்கும் அப்படிக் கூறுவதில்லை. ஆனால், பகவானிடம் வருவதற்கு முன் யாதொரு பிற சாதனங்களின் பற்றாலும் பயிற்சியாலும் குழப்பப்படாமல் தெளிவான சித்தத்துடன் பகவானிடம் அண்டி வினவிய உத்தம பக்தர்களின் கேள்விகளுக்கோ, அவர்கள் முதியவர்களோ இளைஞர்களோ, கற்றவர்களோ கல்லாதவர்களோ, கிரஹஸ்தர்களோ துறவிகளோ, யாராயிருந்தாலும் நேர்மார்க்கமாகிய ஆன்ம விசாரத்தையே போதிப்பது வழக்கம். கீழ்க்கண்டதோர் நிகழ்ச்சி28 ஸ்ரீ பகவானது இந்நோக்கத்தை நன்கு விளக்குவதாம்.

ஒரு சமயம் கிராமவாசிகளான சில அன்பர்கள் பகவானிடம் வந்தனர். அவர்களுள் ஒருவர், ‘மனத்தை எப்படி அடக்குவது?’ என்று ஸ்ரீ பகவானைக் கேட்டார். அதற்கு ஸ்ரீ பகவான், ‘மனம் என்று ஒன்று உண்மையில் இருந்தால்தான், அதை அடக்குவது எப்படி என்ற கேள்வி பயனுள்ளதாகும். ஆனால் நீ மனத்தின் சரியான இயல்பு என்ன என்பதை, ‘நான் யார்’ என்ற விசாரத்தால் ஆராய்ந்தால், மனம் என்று உண்மையில் ஒரு பொருளுமில்லை என்பதை அறிவாய்’ என்று கூறியருளினர். வந்தவர்கள் இவ்விடையைக் கேட்டு அதிசயித்தனரேனும் திருப்தியடைந்தவர்களாய் வேறு கேள்விகளை எழுப்பாமல் அமர்ந்திருந்தனர். சற்றுநேரங் கழித்து ஸ்ரீ பகவான் வழக்கம்போல் சற்று மலை மீது சஞ்சரித்து வருவதற்காகத் தம் அறையை விட்டு வெளியேறினர். அக் கிராமவாசிகளான அன்பர்களும் போய்விட்டனர். அப்போது அங்கிருந்த காவிய கண்ட கணபதி சாஸ்திரிகள் என்பவர் மற்ற அன்பர்களை நோக்கி, ‘கல்வியறிவற்ற இந்த கிராமவாசிகளிடங்கூட ஸ்ரீ பகவான் மிகவுயர்ந்த ஆன்ம விசாரத்தையே போதிக்கின்றார்! என் போன்ற மிகப் படித்தவர்களுக்குங் கூட அனுஷ்டிக்கக் கஷ்டமான இவ் விசார நெறியை, பாவம், ஒன்றும் கல்லாத இக் கிராமவாசிகள் எப்படிப் புரிந்து கொள்வர்? எப்படி அப்பியசிப்பர்? யாராயிருந்தாலும், எல்லோர்மேலும் ஸ்ரீ பகவான், ‘நான் யார்?’ என்னும் தமது மிகவுயர்ந்த பிரம்மாஸ்திரத்தையே பிரயோகிக்கிறார்! பூஜை, ஜபம், தியானம் முதலிய உபாசனைகள் ஏதாவது பகவான் அவர்களுக்கு உபதேசித்திருந்தால், அல்லது அவைகளை உபதேசித்துத் தீக்ஷை கொடுக்க என்னிடமாவது அனுப்பியிருந்தால், அதுதான் அவர்களுக்கு நடைமுறை சாத்தியத்திற்கு ஏற்ற உபதேசமாக இருந்திருக்கும்’ என்று கூறி, தனது குருநாதனின் குருத்துவத்திற் குறைகண்டு முணுமுணுத்தார்.

ஸ்ரீ பகவான் திரும்பி வந்தமர்ந்தவுடன் கணபதி சாஸ்திரிகள் இவ்விதம் கூறியவை அவரிடம் தெரிவிக்கப்பட்டன. அதற்கு ஸ்ரீ பகவான், ‘நான் என்ன செய்யட்டும்? எனக்குத் தெரிந்ததைத்தானே நான் சொல்வேன்; மந்திரம், ஜபம், தியானம் இவையொன்றும் எனக்குத் தெரியாது; எனக்குத் தெரிந்தது ஆத்ம விசாரமே; அதுதான் யார்க்கும் நேர்மார்க்கம். அதைத்தானே நான் கூற முடியும்? இவர்கள் கூறும் பூஜை, ஜபம், தியானம் எல்லாம் போதித்தாலும், கடைசியில் இவை யாவும் பயனற்றவை, மறக்க வேண்டியவை என்று கூறி, முடிவில் சாதகர்களிடம் இவை யாவற்றையும் விட்டொழிக்கத்தானே சொல்லவேண்டி வரும்! வெகு பாடுபட்டு முதலில் ‘சாதனை’ எனக் கருதிச் செய்து காலங்கடத்திய பிறகு விட்டொழிக்க வேண்டியதை, முதலிலேயே சொல்லிக் கொடுக்காமலிருப்பது நல்லதே அல்லவா?’ என்று தன் குருத்துவத்தைக் குறை கூறிய சீடர் பெருமானுக்கும் பொறையுரை அருளினார். மோக்ஷத்திற்கான சாதனைகளாகப் பேசப்படுவனவுள் விசாரத்தைத் தவிர மற்றவற்றைப் பற்றி ஸ்ரீ பகவானது அந்தரங்கக் கருத்தை விளக்க மேற்கூறிய சம்பவத்தையுந் தவிர மற்றொரு சிறு கதையும் ஸ்ரீ பகவானால் ஒரு முறை கூறப்பட்டது. அதாவது:

விஷய விரக்தியுற்ற உத்தம முமுக்ஷு ஒருவன் ஓர் மகாத்மாவான குருவினிடம் சென்று, தன் மோக்ஷ விருப்பத்தைத் தெரிவித்து,‘சுவாமி, கடவுளைக் காணவும் அவரருளால் மோக்ஷமடையவும் சற்குருவின் மூலம்தான் கூடும் என்று கூறப்படுவதால் தங்களிடம் வந்தேன். நான் கடவுளை எவ்வாறு உபாசித்தால் அவரைக் காண முடியுமோ அதற்கான மந்திரோபதேசத்தைச் செய்தருளுங்கள்’ என்று வேண்டி நின்றான். குரு, அவனுக்கோர் பூஜை முறையை உபதேசித்து, ‘இப் பூஜையை இரண்டாண்டுகள் சிரத்தையுடன் செய்து வா; அது உனக்கு நல்ல பலனைத் தரும்’ என்று கூறியனுப்பினார். அவ்வாறே இரண்டாண்டுகள் பூஜை செய்த பிறகு அச்சீடன் தனக்கு யாதொரு பலனுங் கிடைக்கவில்லையே என்று குருவினிடம் வந்து குறை கூறினான். ஆனால் குரு, ‘அப்படியல்ல; பூஜையின் பயனை நீ பெற்றிருக்கிறாய்! இனி, மந்திர ஜபம் தருகிறேன்; இதை இரண்டாண்டுகள் செய்துவா’ என்று ஒரு மந்திரத்தை உபதேசித்தார். இரண்டாண்டுகள் கழிந்ததும் அச்சீடன் முன் போலவே குறைபாட்டுடன் அவரிடம் வந்து, ‘சுவாமி, ஜபம் சரியாகவே செய்து வருகிறேன்; ஆனால் மோக்ஷத்தை உணரவில்லையே; ஜபத்தால் பயனில்லையோ எனச் சந்தேகிக்கிறேன்’ என்றான். அதைக் கேட்ட குரு, ‘நல்லது, நீ ஜபத்தின் பூரண பலனையும் அடைந்து விட்டாய்; ஆகையால் இனி ஜபிக்க வேண்டாம்; இதோ, ஒரு தியான முறை தருகிறேன்; தைல தாரை போல் இடையீடின்றி அதனைச் செய்; அது பலன் தரும்’ என்று உபதேசித்தனுப்பினார். இரண்டாண்டுகள் அத் தியானாப்பியாசம் முடிந்ததும் சீடன் வந்தான். ‘சுவாமி, மனத்தால் எவ்வளவுதான் கடவுளைக் கற்பித்துத் தியானித்தாலும் பூரண திருப்தியில்லையே’ என்றான். குரு, ‘நீ இப்போது உண்மையாகவே தியானத்தின் பயனை அடைந்துவிட்டாய்’ என்றார் இப்போது சீடன் சற்று பொறுமையிழந்தவனாய் ‘சுவாமி, பூஜை-ஜபம்-தியானம் இவற்றின் பயன் எனக்கு, என்ன, எப்படிச் சித்தித்து விட்டதாகக் கூறுகிறீர்கள்? சற்று விளக்கமாகக் கூறுங்கள்’ என்றான்.

குரு, ‘இவைகளாற் பரம்பொருளை அடைய முடியாது என்ற தீர்மானம் இப்போது உனக்குச் சுவாநுபவ பூர்வமாகக் கிடைத்துள்ளதல்லவா? இனி அவற்றில் உனக்கு யாதொரு பிரமையும் உண்டாகாது; இதுவே இவற்றால் நீயடைந்த பயன், இப் பயன் உனக்கு முன்கூட்டியே இவ்வாறு உண்டாகாவிட்டால், இனி நான் உபதேசிக்கப்போகும் ஆன்ம விசாரத்தில் உனக்குப் பிடிப்புண்டாகாது. “ஜபம், தியானம், யோகம் என்றெல்லாம் கூறுகிறார்களே.. ஒருவேளை அவற்றைச் செய்யலாமா?” என்று அடிக்கடி உனக்குச் சபலம் உண்டாகிக்கொண்டே இருக்கும். ஆனால், இனி அச் சபலமற்றுவிட்டது. இனி இத்தகைய முறைகளை நான் மட்டுமல்ல; வேறு யார் கூறினாலும் நீ கவர்ச்சியுற்றுச் சஞ்சலப்பட மாட்டாயல்லவா? இதுவே நீயடைந்த பெரும் பயன். ஆகையால், இனி நான் கூறுவதைக் கேள். மோக்ஷத்தை விரும்பும் உன்னை நீ யார் என்று விசாரித்தறி. உன்னை யார் என்றறியாமல் கடவுளை அறிய முடியாது. இவ்வுடலே நீ என்று இருக்கும் உன் மடைமையை விட்டு, உன் உண்மையை நீ அறியும்போது கடவுளுண்மையும் மோக்ஷமும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணரப்படும். ஆகையால் உன் உடலில் “நான்” என்றெழுவது எது என்று சாவதானமாக உண்முகப்பட்டுக் கவனி’ என்று ஆன்ம விசார மார்க்கத்தை உபதேசித்தருளினார். சீடன் பிற சாதனை மோகமற்று, ஆன்ம விசாரணையில் முழு ஊக்கத்துடனும் ஏகாக்கிரகத்துடனும் ஈடுபட்டான். அதனால் அகந்தை மறையவே ஆன்மாவில் நிலைபெற்ற அவன், பிறகு குருவினிடம் குறை கூற வரவேயில்லை!

இக்கதையையும், கணபதி முனிவரின் புகாருக்குப் பகவானளித்த விடையையும் சேர்த்துச் சிந்தித்துப் பார்ப்போமானால், இதர சாதனைகளைப் பற்றி ஸ்ரீ பகவானது அந்தரங்க அபிப்பிராயம் என்ன என்ற உண்மை நமக்கு நன்றாக விளங்கும். அத்துடன், மற்ற ஜபத்தியானாதி சாதனங்களைத் தம்மிடம் வேண்டிநின்ற பக்தர்கட்கு ஸ்ரீ பகவான், ‘ஆகா, மிக நல்லது, அப்படியே செய்யுங்கள்’ என்று பல சமயங்களிற் கூறியருளியதின் மர்மமும் நன்கு விளங்குகின்றதல்லவா?

‘தான் ஒரு தனிவியக்தியாகிய ஜீவன் என்ற கருத்து சரியா? தன் தனித்தன்மை உண்மையானதுதானா?’ என்று ஒருவன் சந்தேகிக்காத வரையில், ஆன்ம சாக்ஷாத்காரம் அடைவதற்காக தான் ஏதாவது ஒரு சாதனை செய்தேயாக வேண்டும் என்றே கருதுவான்; விரும்புவான்! அதனால்தான் சாத்திரங்களில் பல்வேறு விதமான சாதனைகள் வகுத்தளிக்கப் பட்டிருக்கின்றன. அவைகளைப் பாடுபட்டு ஒருவன் செய்யும் போதுதான் ‘நான் செய்கிறேன்; நான் செய்வேன்’ என்ற அகந்தை முனைப்பின் அவலம் – பயனின்மை – நன்றாயுணரப்பட்டு, முடிவில் அவ் வகந்தையுணர்வு ஒன்றும் செய்ய முடியாமல் ஓயும்! இந்த ஓய்வில் அகந்தையாகிய சாதகனொருவன் 29‘சொல்மானதத் தனுவின் கன்மாதி சிறிதின்றிச் சும்மா அமர்ந்திருக்க, அம்மா, அகத்தில் ஆன்ம ஜோதி’ தாமே விளங்கும்.

என்னாலே நடக்க வேண்டு மென்றெண்ணி யெதுவுஞ் செய்யேல்;

நின்னாலொன் றாவ தில்லை; நீயொரு பொருளு மில்லை;

முன்னாலே யிதனை யோர்ந்து முனைப்பெலாந் தவிர்வாயாகில்,

தன்னாலே யாவுமாகும்; சாந்தியுங் குறைவு றாதே!

(சாதனைசாரம் 248)

ஆன்ம விசாரத்தைத் தவிர மற்ற சாதனைகளெல்லாம் சுற்று வழியே. அவற்றை மேற்கொள்ளும் சாதகனொருவன் தான் முயலும் அச்சாதனையின் பயனின்மையை மெய்யாக உணர வெகுகாலம் செல்லும். மேலும் அவைகளைப் பின்பற்றி ‘நான் செய்தேன்’ என்ற கர்த்ருத்வம் மிஞ்சி நிற்க, அக் கர்த்ருத்வத்தோடு அவன் செய்ததாக ஒன்றும் உணரப்படப் போவதில்லை. அப்படி எதையாவது கர்த்ருத்வத்தோடு அவன் செய்து அடைந்திருந்தாலும் அது முழுப்பயனான ஒன்றாக இராது. இதை அறிந்துகொள்ள – அதாவது பலசாதனைகளை இயற்றவும், சாதிக்கவும், பயனடையவும் கிளம்பிய ‘நான்’ என்னும் தனி வியத்தியாகிய தானே ஒரு இருப்பற்ற பொய்யுணர்வு என்பதை அறிந்துகொள்ள – முடிவில் ‘நான் யார்?’ என்ற விசார வழிக்கே ஒருவன் வந்து சேரவேண்டும்.

இவ்வாறு மற்ற சாதனங்களெல்லாம் தாமே முடிவான குறிக்கோளுக்கு ஒருவனை இட்டுச் செல்லா; முடிவில் நேர் மார்க்கமாகிய ஆன்ம விசாரத்திற்கே கொண்டுபோய் விடுவதால் அவை கால விரயமும் சுற்று வழியுமே என்பதை நன்கறிந்தே ஸ்ரீ பகவான், தன்னை உண்மையாகவே சார்ந்து நின்ற அடியார்களுக்கெல்லாம் ஆரம்பத்திலிருந்தே ஆன்ம விசார நெறியையே போதித்து வந்தனர். ஆன்ம விசார நெறி ஒன்றில்தான் சாதகன் ஒருவன் நேரடியாக, ‘சாதனை செய்வோனாகிய நான் யார்?’ என்று, சகலப் பிரச்சினைகட்கும் மூலமான தன் தனி வியக்தியை நாடித் தேட வழி பிறக்கிறது. அவ்வாறு தன்னை நாடி ஆராய்வதால்தான் செய்வோன் – கர்த்தா – ஆகிய ‘நான்’ என்னும் வியக்தி, உண்மையற்ற ஒரு பொய்யே என்பதும், அக்காரணத்தால் ஆன்ம சாக்ஷாத்காரத்திற்காக மனோ வாக்குக் காயங்களால் (சொன்மானதத் தனுவால்) தான் செய்யத்தக்கது சும்மா இருப்பதைத் தவிர வேறொன்றுமில்லையென்பதும் தெரியவரும்! இவ்வாறு ஆரம்பத்திலேயே தன் இருப்புணர்வை 30நாடும் ஆன்ம விசார நெறியில் – இதர சுற்று வழிகளிலெல்லாம் ஒருவன் அகப்பட்டுக் கொள்ளாமல் அவற்றை ஒதுக்கி (by pass செய்து) – முன்னேறிச் செல்கின்றான். ஏனெனில், இதர சாதனங்கள் தரும் எந்த மனோபலத்தையும் விட, தன் பிறப்பிடத்தில் தங்கிநிற்கத் தேவையான மனோ பலத்தை ஆன்ம விசாரம் ஒன்றே கொடுத்துவிடவல்லது ஆவதால்தான் !

இதுவரை கூறிவந்ததிலிருந்து ஒருவன் எந்த பிற சாதனத்தை மேற்கொண்டாலும், சாதனையை இயற்றும் தான் (அகந்தை) ஓர் உண்மைப் பொருள்தானா என்று சந்தேகிக்கவும், தன்னையழிக்கவும் முடிவில் ஆன்ம விசாரத்திற்கே வரவேண்டும் என்ற உண்மை விளங்குவதால், ஒருவன் அகந்தையழிந்து ஆன்ம ஞானம் பெற உண்மையாகவே விரும்புவானாயின் ஆரம்ப முதலே ஏன் ஆன்ம நாட்டத்தில் முயலக் கூடாது?

ஆனால், நம்மிடையே சிலர் இதற்குச் சிரத்தைக் குறைவால் ஒரு ஆக்ஷேபணையைக் கிளப்புவதுண்டு. அதாவது, ‘நானாவித யோக சாதனங்களால் மனம் பக்குவப்பட்டுப் பலம் பெற்றால்தானே, பிறகு ஆன்ம விசாரத்திற்கு அது அருகதை பெறும்; இன்றேல் பல எண்ணங்களாக அலையாதா? என்பதே அது! ஆனால் உண்மை அப்படியில்லை. இதைப் பற்றி பகவான் ‘நான் யார்?’ என்ற நூலில் தெளிவாக உபதேசிக்கின்றார். அதாவது, இதர எண்ணங்கள் எழுந்தால் இவை யாருக்கு எழுகின்றனவென்று பார். ‘எனக்கு’ என்று தோன்றும்; (எனக்கு என்ற சொல் ‘நான்’ என்ற உணர்வை ஞாபகப்படுத்தும்) உடனே ‘நான் யார்?’ என்ற தன் நாட்டத்திற்கு மனம் திரும்பிவிட முடியும்; இப்படிப் பழகப் பழக மனத்திற்குத் தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கிறது என்கிறார் பகவான்.

இதர சாதனங்கள் தரும் மனோ பலமானது மனத்திற்குத் தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தியல்ல! ஜபம், தியானம், ஷடாதாரங்களுள் ஒன்றை நாடல், ஜோதி அல்லது நாதம் இவற்றில் மனத்தை நிறுத்துதல், இவையெல்லாம் மனத்தை (முன்னிலை-படர்க்கைகளாகிய) அன்னியப் பொருள்களை நாட வைப்பதேயாகும். அவற்றுள் ஏதேனுமொரு அன்னியப் பொருளையே பற்றிக்கொண்டிருக்கும்படி மனத்தைப் பழக்குவதால் ஏற்படும் மனோபலம் உண்மையில் ஆன்ம ஞானத்துக்கு அனுகூலமான மனோ பலமல்ல! பிரதிகூலமானதால் அதை ‘மனோ பலம்’ என்று கூடச் சொல்லாமல் - மனத்தின் பலஹீனம், (ஸ்ரீ பகவானது அருள்வாக்கான உள்ளது நாற்பது பாடல் 32-ன் படி) ‘உரனின்மை’ என்றே சொல்ல வேண்டும்! வாங்கி வந்த ஓர் புதுப் பசுவை அன்னியர் வீட்டுத் தொழுவத்திலேயே கட்டிப் பழக்கிவிட்டால் அந்த அப்பியாச பலம் வலுத்துப் போனபின், ஒரு நாளைக்கு அதைத் தன் வீட்டிற்கு இழுத்து வந்தால் அங்கு நிற்குமா? நிற்காது. அன்னியர் வீட்டிற்கே ஓடும்! அதனால் அதைப் பழக்குமுன்பே இதை உணர்ந்துகொண்டு ஓர் புத்திசாலியான குடியானவன் அதைத் தன் வீட்டிலேயே தங்கும்படிக் கட்டிப் பழக்குகிறானல்லவா? அது போன்றே அன்னிய நாட்டத்திற் பழக்கப்பட்டுப் பலம்பெற்ற மனத்தினர், தன்னாட்டம் – தன்னிருப்புணர்வு – என்றாலே இன்னதெனப் புரிந்து அதைக் குறிக்கோளாக்கி(லக்ஷியமாக்கி)க் கொள்ளவே முடியாதபடி திணறுவர். ‘மனத்தை முதலில் பலப்படுத்திக்கொண்டு பிறகு ஆன்ம நாட்டத்திற்கு வருகிறேன்’ என்று இதர சாதனைகளில் நெடுங்காலம் மனத்தைப் பழக்கிவிட்டால் பிறகு சாதாரண மனத்தைவிட, இப்படிப் பழக்கப்பட்ட மனம் அந்தர்முகப்படுவதற்கு அதிக துர்பலமுடையதாக இருப்பது யாருக்கும் அனுபவமாகும்.

ஓர் உதாரணத்துடன் விளக்குவோம்: ஸ்ரீ கணபதி முனிவர் என்றழைக்கப்பட்ட ஸ்ரீ கணபதி சாஸ்திரிகள் பகவானது முக்கிய பக்தர்களுள் ஒருவர். ஜப சாதனை புரிந்தவருள் இணையற்றவர். கோடிக்கணக்கிற் ஜபம் செய்தவர். அவரது சீடர்களால் மந்திரேசுவரர் என்றழைக்கப்பட்டவர். அது மட்டுமன்றி தான் இயற்றிய ‘ரமண கீதை’ என்னும் நூலில் (அத் 18, சுலோ 15-ல்) தானே தன்னை மந்திரேசுவரர் என்றும் குறிப்பிட்டிருப்பவர்! ஆசு கவித்துவம், சதாவதானம் முதலிய அனேக மனோ சக்திகளைப் பெற்றவர். அப்படிப்பட்ட சாமர்த்தியமுள்ளவர், ‘நான் இந்திர லோகத்திற்குப் போய் இந்திரன் என்ன செய்கிறான் என்பதைக்கூட கண்டு சொல்ல முடியும்; ஆனால் இந்த “நான்” என்பது எங்கிருந்து எழுகிறது என்று அந்தர் முகப்பட்டு (உள்ளே திரும்பி) ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியவில்லை’ என்று அடிக்கடி கூறி வந்தார். அவரைப் பற்றி ஸ்ரீ பகவானுங்கூட 31பல தடவைகள், ‘நாயனா (கணபதி சாஸ்திரிகள்) சொல்வார்: “என் மனத்தைப் பகிர்முகத்திற் செலுத்துவதிற் சாமர்த்தியம் காட்டுவது எனக்கு மிக எளிது; ஆனால் மனத்தை உண்முகப் படுத்துவது – உள்ளே திருப்புவது – சிறிதுகூட முடிகிற காரியமில்லை. வெளி முகத்தில் (முன்னிலை-படர்க்கையை நோக்கி) மனத்தை எவ்வளவு வேகத்திலும் என்னால் செலுத்த முடியும், ஆனால் உண்முகத்தில் ஓரடி கூட எடுத்துவைக்க முடியாது” என்று கூறுவார்’ என்று கூறுவதுண்டு.

இதிலிருந்து நாம் அறியக் கிடப்பதென்ன? மிகுந்த சிரத்தையோடும் உண்மையோடும் ஜப சாதனையிலிறங்குவோர்க்கே அதன் அதி சூக்ஷ்ம விளைவு எப்படிப்பட்டது என்பது விளங்குமே தவிர, ‘ஜபம் விசாரத்திற்கு மிகுந்த உதவி செய்யும்’ என்று வெறுமனே வாயால் மட்டும் பேசி வாதமிடுவோர்க்கு இவ்வுண்மை விளங்காது. கணபதி முனிவரோ பல்லாண்டுகள் மெய்யாகவே ஜப சாதனையில் மூழ்கியவர். அதனால் அவரது மேற்கூறிய அனுபவம் நாம் மேலே கூறிய உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனி போல் மெய்ப்பிக்கின்றதன்றோ!

இவ்விடத்தில் சிலர், ‘உண்மை இவ்வாறிருக்க, பகவான் ஏன் “நான் யார்?” என்ற நூலில், “மூர்த்தித் தியானத்தாலும் மந்திர ஜபத்தாலும் மனம் ஏகாக்கிரத் தன்மையடைந்து, அதனாற் பலத்தையடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும்” என்று கூறியிருக்கின்றாரே?’ என்று கேட்பதுண்டு.

இங்கு நாம் ‘நான் யார்?’ என்ற நூலிற் கூறப்பட்ட சரியான கருத்தென்னவென்று சற்றுக் கூர்மையாகக் காணவேண்டும். ‘நான் யார்?’ என்ற நூலில் இதேயிடத்தில்,

மூர்த்தித் தியானத்தாலும், மந்திர ஜபத்தாலும் மனம் ஏகாக்கிரத்தை அடைகிறது. சதா சலித்துக்கொண்டிருக்கும் யானையின் துதிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால் அந்த யானை எப்படி வேறொன்றையும் பற்றாமல் அதையே பற்றிக்கொண்டு செல்லுமோ, அப்படியே சதா சலித்துக்கொண்டிருக்கும் மனமும் அதனை ஏதோ ஒரு நாமம் அல்லது ரூபத்திற் பழக்கினால் அதையே பற்றிக் கொண்டிருக்கும். மனம் அளவிறந்த நினைவுகளாய் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதி பலவீனமாகப் போகின்றது. நினைவுகளடங்கவடங்க ஏகாக்கிரத் தன்மையடைந்து அதனால் பலத்தையடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும்.

என்று ஸ்ரீ பகவான் கூறிவரும்போது, இடையிலிருக்கும் ஒரு சில வரிகளை விட்டு விட்டு, மேற்கண்டபடி இக்கேள்வி கேட்கப்படுகின்றது. அவற்றையும் சேர்த்து வாசித்தே இதன் விபரம் அறியப்பட வேண்டும்.

இடைவிடாது அலைந்துகொண்டிருக்கும் மனம் கணக்கற்ற எண்ணங்களாக விரிவதால் ஒவ்வோர் எண்ணமும் மிகப் பலவீனமாய்ப் போகின்றது. ஓர் யானையின் சதா சலித்துக்கொண்டிருக்கும் துதிக்கையில் ஓர் சங்கிலியைக் கொடுத்தால், அது அச்சங்கிலியையே விடாது பிடித்துக்கொள்வதால் துதிக்கையால் வேறு யாதொரு விஷமமும் செய்யமுடியாமற் போவது போல, மனத்திற்கும் கடவுளின் ஏதாவதொரு நாம ரூபத்தைப் பற்றிகொள்ளப் பயிற்சி அளிக்கப்பட்டால் அது ஒருமுகப்பட்டு ஒன்றையே பற்றி நிற்கும் ஏகாக்கிரத்தை அடைகின்றது. இவ்வழியில் மனம் பலவாய்ப் பிரிந்தோடும் தன்மையை மட்டுமே இழக்கின்றது.

மனம் ஆன்மாவில் நிஷ்டையுறுவதற்கு இருவிதமான பிரதிபந்தங்கள் உண்டு. ஆகையால் இருவிதமான இத்தடைகளைக் கடக்க மனத்திற்கு இருவிதமான பலம் தேவை. ஒன்று: பண்டை வாசனைகளால் முன்னிலை படர்க்கைகளாகிய புறமுகத்தில் ஐம்புல வேட்கைப் பொருள்களை நோக்கிப் பற்பல எண்ணங்களாகப் பிரிந்து ஓடுவதைத் தடுக்கும் பலம். இரண்டு: அகமுகப்பட்டுத் தன்மைப் பொருளாகிய ஆன்மாவை நாடும் தன்னாட்டத்தில் அது திரும்பி வருவதற்கு வேண்டிய பலம். ஜபத்தியானாதி பயிற்சிகளால் முதல் வகைத் தடைகளிலிருந்து – ஐம்புலப் புறப்பொருள்களை நோக்கி மனத்தை விரட்டும் வாசனைகளாகிய தடைகளிலிருந்து – விடுபடும் பலம் மட்டுமே எய்தப் பெறுகின்றது. ஆனால், ஆரம்பத்திலிருந்தே தன்னாட்டத்திற் பயிற்றப்படும் மனத்திற்குப் புறத்தே பலவாய்ப் பிரியாமையும், அகத்தே திரும்பி நிலைபெறுதலும் ஆகிய இருவித பலமும் ஒருங்கே சித்திக்கின்றது அல்லவா? ஜபத்தியானாதிப் பயிற்சியால் மனம் பல எண்ணங்களாய்ப் பிரிந்து பலஹீனப்படாத சக்தியை அடையப்பெற்றாலும், அது இன்னும் ஏதாவதொரு முன்னிலை அல்லது படர்க்கைப் பொருளையே பற்றிக் கொண்டிருக்கிறது. எனவே, ஜபத்தியானாதிப் பியாசங்களானவை மனத்திற்கு ஏதாவதொரு முன்னிலை படர்க்கைப் பொருளை மிகுந்த பற்றோடு ஒட்டிக் கிடக்கும் சக்தியையே விருத்தி செய்கின்றன. இவ்வாறு மனத்தை முன்னிலைப் பொருளிலிருந்து திருப்பித் தன்மையின் மேல் நிறுத்த முடியாத பலஹீனம் தனக்குத் தெரியாமலேயே இதனால் நாளடைவில் மிகுந்து விடுகின்றது. இது பெருந்தடையே! ஆகையால், பிறகு தன்னை நோக்கித் திரும்புவதென்றால் அது மனத்திற்கு மிகக் கடினமானதோர் காரியமாகவே ஆகிவிடுகின்றது. ஸ்ரீ கணபதி முனிவரின் சுயானுபவத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளக் கிடைப்பது இவ்வுண்மையே! ஜபத் தியானாதிப் பயிற்சியால் மனத்திற்குக் கிடைக்கும் ஏகாக்கிர சக்தியானது தன்னாட்டத்திற்கு (ஆன்ம நிஷ்டைக்கு) எப்படி ஒரு பெருந்தடையாகிறது என்பதை நாம் இனி ஓர் உபமானத்தால் விளக்குவோம்.

ஒருவன் திருவண்ணாமலையிலிருந்து வேலூருக்கு சைக்கிளில் போகவேண்டி நேருகிறதென்று வைத்துக்கொள்வோம். வேலூர், திருவண்ணாமலைக்கு வடக்கே 50 மைல் தொலைவிலுள்ள ஊர். இம்மனிதனுக்கோ சைக்கிள் ஒட்டத் தெரியாது. இவன் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதற்காக ஒரு சாலையைத் தேர்ந்தெடுக்கிறான். அதுவோ திருவண்ணாமலைக்குத் தெற்கில் 20 மைல் தூரத்திலுள்ள திருக்கோவிலூருக்குச் செல்லும் சாலை. அதன் வழியே சைக்கிள் ஓட்டப் பயிலுகின்றான். பல மணி நேரங்களுக்குப் பிறகு அவன் சைக்கிள் ஓட்டக் கற்று முடிக்கின்றபோது, அவன் திருக்கோவிலூரை அடைந்து விடுகிறான். அப்படியானால், அவன் இப்போது தான் போய்ச் சேரவிரும்பிய வேலூரிலிருந்து 70 மைல் தூரத்திலிருக்கிறானல்லவா? அதனால், தனது குறிக்கோளான வேலூரிலிருந்து பின்னும் அதிக தூரத்திலிருப்பதோடு, மேலும் அதிகமான முயற்சியும், அதிகமான காலமும் மேற்கொள்ள வேண்டி வருகிறதல்லவா? ஆனால், இதற்கு மாறாக இவன் ஆரம்பத்திலிருந்தே – அதாவது திருவண்ணாமலையிலிருந்தே வேலூருக்குச் செல்லும் சாலையில் சைக்கிள் ஓட்டும் பயிற்சியை மேற்கொண்டிருந்திருப்பானாயின், தான் பயிற்சிக்கு எடுத்துக்கொண்ட அதேயளவு நேரத்தில் வேலூருக்கு 30 மைல் அருகாமையில் வந்திருப்பானல்லவா? மேலும், இப்போது சைக்கிள் ஓட்டவும் தெரிந்து விட்டதால் மீதியுள்ள 30 மைல் தொலைவையும் வெகு சீக்கிரத்தில், மிக எளிதில், அவசியமற்ற காலதாமதமோ, முயற்சியோ இன்றிக் கடந்து வேலூரை அடைந்துவிட முடியுமன்றோ?

ஏகாக்கிரம் வேண்டி ஜபத்தியானாதிகளில் பழகும் சாதகனுக்கு நேருவது, திருக்கோவிலூர் சாலையில் சைக்கிள் பயின்றவனுக்கு ஏற்பட்ட கதியே தவிர வேறில்லை. ஜபத்தியானாதிகளில் அடையப்பட்ட மனோ பலமானது தன்மை நாட்டத்திற்கு எதிர் திசையான முன்னிலைப் பொருள்களின் மேல் ஏற்பட்ட பற்றாகி விடுவதால், அந்த மனோ பலம் முழுவதும் (தன்னாட்டத்திலிருந்து) தன்மையிலிருந்து அவனது கவனத்தை வெகுதூரம் எதிர் திசையில் தள்ளிச் சென்ற பலம் ஆகிவிடுகிறதன்றோ? இதற்குப் பதிலாக ஒரு சாதகன் முதலிலிருந்தே தன்மையை நாடும் பயிற்சியில் (ஆன்ம விசாரத்தில்) ஈடுபடுவானாயின், அது வேலூர் சாலையிலேயே சைக்கிள் ஓட்டப் பயில ஆரம்பித்ததற்கு ஒப்பாகின்றது! இவ்வாறு தன்னாட்டமாகிய ஆன்ம விசாரம் அனாவசியப் பாடுகளையெல்லாம் தவிர்த்து, நேரே ஆன்ம நிஷ்டையைத் தருவதால்தான் பகவான் ஸ்ரீ ரமணர் ‘ஆன்ம வித்தைக் கீர்த்தன’த்தில் ‘எம்மார்க்கம் அதனினும் இம்மார்க்கம் மிக்கெளிது’ என்றும், உபதேச வுந்தியாரின் 17வது பாடலில் ‘மார்க்கம் நேர் ஆர்க்கும் இது’ என்றும் கூறியருள்கின்றனர்.

ஜபம், தியானம் முதலிய பயிற்சிகளில் மனம் ஐம்புலப் புறப் பொருள்களை நோக்கிப் பற்பல எண்ணங்களாகப் பிரிந்து பலஹீனப் பட்டுவிடாமல் தடுக்கப்படுவதால், பகவான் ‘நான் யார்?’ என்ற நூலில், ‘அவை மனத்திற்கு பலத்தைத் தருகின்றன’ என்று கூறினர். ஆனால் இப்படிச் சொன்னது, மனம் விஷய வாசனைகளால் தூண்டப்பட்டுப் பற்பல எண்ணங்களாக விரிந்து பிரிந்து போகும் ஆபத்தைத் தடுப்பதான ஒருவகை மனோ பலத்தை மட்டுமே குறித்ததாகும். மேலும் பகவானால் ‘நான் யார்?’ என்ற நூலில், ‘இப்படிப் பழகப் பழக மனத்திற்கு தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது’ என்று குறிக்கப்பட்ட மனோபலம் இதுவல்ல. இந்த ஜபத்தியானாதிகளால் அடையப்படும் மனோபலம், ஆன்மாவுக்கு அன்னியமானவையும் முன்னிலை-படர்க்கை வடிவிலுள்ளவையுமான பொருள்களின் மேல் ஊன்றி நிற்கும் மனோபலமே! ஆன்ம லாபத்திற்காக மட்டும் முயலும் முழுக்ஷுக்கட்கு இவ்வாறு முன்னிலை - படர்க்கைப் பொருள்களின் மேல் ஊன்றி நிற்கும் பலமானது ஓர் தடையேயாகும் என்பதே இந்நூலின் வாசகர்கள் இங்கு அறியத் தரப்படுவதாம்.

வேலூர் செல்லவேண்டிய ஒருவன் திருக்கோவிலூர் சாலையில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது எத்தகைய உதவியோ, அத்தகையதுதான் ஜபத்தியானாதிகளாற் கிடைத்த ஏகாக்கிர சக்தியால் ஆன்ம விசாரத்திற்கு ஏற்படும் அனுகூலமுமாகும். திருக்கோவிலூர் சாலையில் சைக்கிள் ஓட்டிக் கற்றுக்கொண்டது வேலூர் செல்ல, சுற்றி வளைத்து எப்படி ஒரு மறைமுகமான உதவியோ, அது போலவே ஜபத்தியானாப் பியாசங்கள் நெடுங்காலத்திற்குப் பிறகாவது ஆன்மாவை அடைய ஓர் சுற்றுவழியாகப் பயன்படும். அவ்வளவு தான்! மேலும், வேலூர் போய்ச் சேர வேண்டியவனுக்கு முதலில் திருக்கோவிலூர் சாலையில் சைக்கிள் ஓட்டப் பயின்றதால் எம்மாதிரியான தடங்கலும் தாமதமும் ஏற்பட்டதோ, அப்படிப்பட்டதே ஆன்ம சாட்சாத்காரத்திற்கு ஒருவன் ஜபத்தியானப் பயிற்சியை ஆரம்பத்தில் செய்வதால் ஏற்படும் தடங்கலும் தாமதமுமாகும். ஏனெனில், திருக்கோவிலூர் சாலையில் சைக்கிள் பயில்வோனை அவனது முயற்சி எப்படி நிமிடத்திற்கு நிமிடம் வேலூரிலிருந்து வெகு தூரம் அப்பாற் போகும்படிச் செய்கிறதோ அவ்வாறே ஆரம்பத்தில் ஜபத்தியானாதிகளில் முயல்வோனது ஒவ்வொரு முயற்சியும் அவனை ஆன்மாவிற்கு அன்னிய முகமாக வெகு தூரம் தள்ளிக்கொண்டே செல்கின்றது.

இங்கு ஜபத்தியானாதிகள் முற்றிலும் தவறோ என்றொரு சங்கை வாசகர்கட்கு எழலாம். அல்ல, அப்படியல்ல. உண்மையான சிறந்த இறையன்பர்கள் இறைவன் திருவடியில் உள்ளமுருக்கும் மெய்யன்போடு அவனது திருநாமத்தைச் சொல்லிக் கூவியழைக்கும் அன்புக் குரலாகிய ஜபத்தை நாம் குறை கூறுவதாக மெய்யன்பர்கள் எண்ணிவிட வேண்டாம். பக்தி மார்க்கத்தில் நின்று தன் சற்குரு நாமத்தையோ, இஷ்டதெய்வ நாமத்தையோ பேரன்போடு ஜபித்து வரும் ஓர் உத்தம பக்தனது ஜப சாதனையானது, இந்நூலின் அனுபந்தத்தில், ‘பக்தி’ என்னும் இரண்டாம் அத்தியாயத்தில் வரும் பக்திப் பள்ளியின் மூன்றாவது (b) வகுப்பாகிய பிரிவில் உள்ள ஒருவனது நிலையையே சேர்ந்ததாகையாலும், மேலும் இவ்வன்பு ஜபமானது பகவான் ஸ்ரீ ரமணர் உபதேசித்த இரு பெரு முக்கிய நெறிகளான ஆன்ம விசாரம்-ஆன்ம சமர்ப்பணம் என்பவற்றுள் ஒன்றாகிய ஆன்ம சமர்ப்பண நெறியையே சார்ந்ததாகையாலும், இந்த பக்தியோடு கூடிய ஜபத்தை இங்கு நாம் கண்டிக்கவோ, மறுக்கவோ, குறை கூறவோ இல்லை.32 ‘மனத்தின் ஏகாக்கிரத் தன்மையை மட்டும் அபிவிருத்தி செய்தாலே போதும், மோக்ஷம் கிடைத்துவிடும்’ என்று நம்பி, புனித மந்திரங்களை ஜபித்தோ தியானித்தோ உருவேற்றும் அன்பற்ற மந்திரஜப, தியான சாதனைகளே ஆன்ம ஞானப் பேற்றுக்குப் பயனற்றவை என்று இங்கு கண்டிக்கப் படுகின்றன.

திருக்கோவிலூர் சாலையில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட திறமைக்கு உபமானமாகச் சொல்லப்பட்ட ஜபத்தியானாதிகளால் அடையப்படும் மனோபலம் ஓர் அற்புதமான ஆயுதம் போன்றதாகும். ஓர் கூரிய வாளோ, நெருப்போ, அணுசக்தியோ உபயோகிக்கப்படும் தன்மையைப் பொருத்து மக்களுக்கு எப்படி நன்மையோ தீமையோ செய்துவிட இயலுமோ, அவ்வாறே இந்த ஜபத்தியானாதிகளாற் சேகரிக்கப்பட்ட மனோ பலமும் சாதகன் ஒருவனுக்கு அவனது உபயோகத்தைப் பொருத்துத் தீமையையோ நன்மையையோ பயக்கும். ஒரு கூரிய வாள் ஒரு கொலைஞன் கையில் தொழிற்படும்போது மற்றோருயிரைக் கொல்கிறது; ஆனால், ஒரு மருத்துவரின் கையில் தொழிற்படும்போது மற்றோருயிரைக் காப்பாற்றுகிறது. அவ்வாறே நெருப்பும் அணுசக்தியும் ஆக்கத்திற்கோ, அழிவுக்கோ எதற்கும் பயன்படும். அது போலவே சாதகனொருவனிடம் முன்னிலை-படர்க்கை நாட்டமாகிய ஜபத்தியானாதிகளாற் சேகரிக்கப்பட்ட மனத்தின் ஏகாக்கிர சக்தி, அந்த சாதகனிடம் பொதிந்து கிடக்கும் ஆசாபாசங்களாகிய வாசனைகளுக்கேற்ப உபயோகிக்கப்படும்போது அது அவனது நாசத்திற்கோ நன்மைக்கோ உபயோகமாகி விடும். அச்சாதகனுக்கு பூர்வ அசுபவாசனைகளின் வயமாக சித்திகளிலோ ஐம்புல இன்ப நுகர்ச்சிகளிலோ ஆசையிருந்தால், இந்த ஏகாக்கிர சித்தமான மனோ பலத்தை சூக்ஷுமமாகவும் திறமையாகவும் உபயோகித்து அவன் அவ்வாசனைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஏனெனில், ஜபத் தியானாதிகளெல்லாம் முன்னிலை-படர்க்கைகளின் மேல் மனத்தைச் செலுத்தும் காரியமேயாகையால், அதனால் அடையப்படும் ஒரு முகப்பட்ட மனோபலமானது (முன்னிலை-படர்க்கைகளின் மேல்தான்) மனம் புறமுகத்திற் போகவே சக்தியைச் சேகரித்துத் தந்திருப்பதால், புறமுகப் பொருள்களாகிய அனாத்ம விஷயங்களைத்தான் அதி வேகமாகவும் பலமாகவும் நாடி நிற்கும். இந்தப் பகிர்முகத்தாற் கிடைத்த ஏகாக்கிர மனோபலம் உடையவன் நல்ல நித்தியா நித்திய வஸ்து விவேகம் உள்ள சாதகனாயிருந்தால், அதன் பயனாக அவன் அநாத்ம திருசிய விஷயப் பொருள்களின் மேற் பாயும் தன் மனப்போக்கை மாற்றிக்கொள்ள விரும்புவான். அப்போது அந்த விவேகம் அவனை ஆன்ம விசாரத்தில் அச்சக்தியை உபயோகிக்கத் தூண்டும். ஆயினும், பிறகு உண்முகமாகத் திரும்ப விருப்பம் ஏற்பட்டு அதற்காக வெகுகாலம் பெருமுயற்சி செய்த பின்னரே (அதாவது, திருக்கோயிலூர் சாலையில் சைக்கிள் பயின்றவன் பிறகு வெகு நீண்ட காலதாமதமும் பெருமுயற்சியும் செய்து 70 மைலும் பிரயாணம் செய்து வேலூரை அடைவதைப் போல) ஆன்ம சாக்ஷாத்காரத்திற்கு அந்த மனோபலம் அருகதையையுண்டாக்கி ஆன்ம ஞானமாகிய லக்ஷியத்தை எய்த வைக்கும். ஆனால், பொதுவாக நாம் காண்பதென்ன? ஜப தியான ஹட யோகாதி பயிற்சிகளில் முயலும் சாதகர் பலரும் அமானுஷ்ய சக்தி சித்திகளைப் பெறுவதிலும், பேர் புகழைத் தேடுவதிலும் இன்னும் இவை போன்ற அற்ப சுகங்களுக்காகவே வாணாள் முழுவதும் அலைந்து கொண்டிருப்பதை நாம் காணவில்லையா? எனவே ஜப தியானாதி புறமுகப் பயிற்சிகளால் அடையப்படும் மனோ பலமானது மிகவும் ஆபத்தானது என்பதும், ஆகையால் ஆரம்ப முதலே தன்மையை நாடும் தன்னாட்டப் (ஆன்ம விசாரப்) பயிற்சியால் அடையப்படும் ஏகாக்கிர சக்தியாகிய மனோபலமே புத்திசாலிகள் மேற்கொள்ளத்தக்கது என்பதும் இங்கு நாம் அறியக் கிடக்கின்றது.

ஏகாக்கிர சக்தியை (மனதின் ஒரு முகப்படும் பலத்தை) அடைய வேண்டியது சாதகர்கட்கு மிக முக்கியமான ஒன்றே. ஜபம், தியானம் செய்யும்போது கூட பலவாகச் சிதறி ஓடும் மனத்தின் கவன சக்தியைப் பல்லாயிரம் முறையும் மற்ற எண்ணங்களினின்றும் திருப்பித் திருப்பிக் கொண்டுவந்து தனது லக்ஷியத்தில் நிறுத்துவதற்குப் பெருமுயற்சி எடுக்கவேண்டியே இருக்கிறதன்றோ? தன்னாட்டமாகிய ஆன்ம விசாரத்திலும், அலையும் மனத்தை மீண்டும் மீண்டும் இழுத்துவந்து ஆன்மாவாம் தன் இருப்புணர்வின் (சத்-சித்தின்) மேல் நிறுத்துவதற்கு அதே அளவு முயற்சியே தேவைப்படுகிறது. இவ்விருவித சாதனைகளிலும் ஏகாக்கிரத் தன்மையைப் பெற உண்மையான உழைப்பு ஒன்று நிச்சயமாகத் தேவைப்படுகிறதல்லவா? எனின், ஏன் ஒருவன் ஆபத்தற்ற தன்னாட்டப் பயிற்சியின் மூலமே ஆரம்ப முதலே உழைத்து மன ஏகாக்கிரத்தைப் பெறக் கூடாது? ஒரு சமயம் ஸ்ரீ ரமண பகவானது சந்நிதியில் நடந்த கீழ்க்கண்ட நிகழ்ச்சி இம்முடிவை நன்கு விளக்குவதாகும். அதாவது:

சிறிது நேரம் ஸ்ரீ பகவானது சந்நிதியில் அமர்ந்திருந்த பின் ஒரு பக்தர் பகவானிடம், ‘பகவானே, எனக்கு ஆன்ம விசாரம் செய்ய இயலவில்லை. அது கஷ்டமாகத் தோன்றுகிறது. தியானம் பண்ணட்டுமா?’ என்று வினவினார். ‘சரி’ என்றார் பகவான். சற்று நேரம் கழித்து அந்த பக்தர் பகவான் இருந்த ஹாலை விட்டெழுந்து சென்றுவிட்டார். அவர் சென்றபின் ஸ்ரீ பகவான் அருகிலிருந்தவர்களை நோக்கி, ‘‘அவர் ஆத்ம விசாரம் செய்வது மிகவும் கஷ்டம் என்றும், அதனால் அதைத் தான் செய்ய முடியாது என்றும் கூறி, ‘தியானம் செய்யட்டுமா?’ என்று அநுமதி கேட்டார். அவரே, தானே விசாரம் செய்ய முடியாது என்று கூறும்போது, அவரை விசாரம் செய்யும்படி நான் எப்படிக் கட்டாயப்படுத்துவது? அதனால் அவர், ‘நான் தியானம் செய்யட்டுமா?‘ என்று கேட்ட போது ‘சரி‘ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. சில நாளைக்குப் பின் அவர் வந்து, ‘பகவானே, என் மனம் தியானத்தில் நிலைபெற முடிவதில்லை. நான் ஜபம் செய்யட்டுமா?’ என்று கேட்பார். அப்படிக் கேட்கும்போது நான் என்ன சொல்வது? ‘சரி’ என்றுதான் சொல்ல வேண்டும்! அம்மாதிரியே சில நாட் கழித்தாயினும் ஒரு நாள் அவர் வந்து, ‘என் மனம் ஜபத்தில் ஏகாக்கிரமுறுவதில்லை. என் நாக்கு மட்டும் ஜபத்தைச் செய்கிறது; மனமோ பற்பல எண்ணங்களை எண்ணி அலைகிறது. அதனால் நான் பூஜை, ஸ்தோத்திரங்கள் இவைகளைச் செய்யவா?’ என்றும் முறையிடலாம். அப்போதும். ‘சரி, சரி’ என்று சொல்வதைத் தவிர, அவரது முறையீடுகளுக்கெல்லாம் நான் வேறு என்ன சொல்ல முடியும்? ஒருவன் ஸ்தோத்திரமோ, பூஜையோ, ஜபமோ, தியானமோ எதுவொன்றையாவது செய்ய உண்மையான முயற்சியுடையவனாய் இருப்பானாகில் ஆன்ம விசாரத்திற்கும் அந்த அளவு உண்மை முயற்சியொன்றே போதும். இம்மாதிரி குறைமுறைகளெல்லாம் உண்மையாகவே எந்தவொரு சாதனையையும் செய்யவோ பயனடையவோ மெய்யான சிரத்தை உதிக்காதவர்களுக்கே உண்டாகும். அவ்வளவுதான்! எந்த சாதனை செய்வதாயிருந்தாலும் அலையும் மனத்தைத் திருப்பியிழுத்துவந்து குறிப்பிட்ட ஒரு லக்ஷியத்திலேயே நிறுத்த முயல்வது இன்றியமையாதது. எனின், அதை ஏன் தன்னாட்டத்தில் (ஆத்ம விசாரத்தில்) இழுத்துவந்து நிறுத்திப் பழகக் கூடாது? செய்யவேண்டியது இவ்வளவுதான்! பகவத்கீதையிலுங்கூட:

சனை: சனை ருபரமேத் புத்யாத்ருதி க்ருஹீதயா

ஆத்ம ஸம்ஸ்தம் மனஃக்ருத்வா நகிஞ்சிதபி சிந்தயேத். (6-25)

(ஸ்ரீ பகவானது மொழி பெயர்ப்பு):

– எத்தனித்துத்

தீரஞ்சேர் புத்தியினாற் சித்தத்தை மெல்லமெல்ல

நேரச் செயவேண்டு நிச்சலனம் – மாரதனே

சித்தத்தை யான்மாவிற் சேர்த்திடுக மற்றெதுவு

மித்தனையு மெண்ணிடா தே.

(ஸ்ரீ பகவத் கீதாசாரம் 27)

என்றும்,

யதோ யதோ நிஸ்சரதி மனஸ்சஞ்சல மஸ்திரம்

ததஸ்ததோ நியம்யைதத் ஆத்மன் ஏவ வசம்நயேத். (6-26)

(ஸ்ரீ பகவானது மொழி பெயர்ப்பு):

எதுவுந் திரமின்றி யென்றுமலை சித்த

மெதெதனைப் பற்றியே யேகு – மததினின்

றீர்த் தந்தச் சித்தத்தை யெப்போது மான்மாவிற்

சேர்த்துத் திரமுறவே செய்.

(ஸ்ரீ பகவத் கீதாசாரம் 28)

என்றும் கூறப்பட்டுள்ளது’’ என்றனர்.

உயர்ந்த தியான வகையாகக் கருதப்படுகிற ‘அஹம் பிரம்மாஸ்மி’ முதலிய பாவனைகளிற் பழக்கப்படும் மனத்தைக் கூட பகவான் ‘அவ்வா றெண்ணல் உரனின்மையினால்!’ என்று உள்ளது நாற்பது 32ஆவது பாடலிற் குறிப்பிடுகின்றார். ஆகையால் ஜபத்தியானாதி மூலம் முன்னிலை-படர்க்கை லக்ஷியங்களில் மனம் பெறுவது பலமல்ல! பலஹீனமே! முன்னோக்கிப் பறக்கும் பந்தயக் குதிரை பின்னோக்கி இழுக்கவேண்டிய கவலையேற்றத்திற்குதவுமா? உதவாது! ஆனால், ‘இப்படிப் பழகப் பழக மனத்திற்குத் தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது’ என்று பகவான் எச்சாதனத்தைக் குறிக்கின்றாரோ, அந்தத் தன்னாட்டமே மனதிற்குச் சத்தியமான பலத்தைத் தரும் சாதனமாகும். இது வரையிலும் யாதொரு அன்னிய லக்ஷியத்திலும் (சாதனத்திலும்) பழகிக் கொள்ளாததும், சோம்பலற்று உற்சாகத்தோடுள்ளதும், எதிர்த்து வாதாடாமல் சொன்னதை உடனே கேட்கும் குழந்தை போன்ற பணிவுச் சுபாவத்துடன் உள்ளதுமான மனத்தை உடையவர்களெல்லாம் பகவானிடம் வந்ததும் உடனே தம் மனத்தை நேரே ‘நான் யார்?’ என்னும் தற்கவனத்திற் பழக்கி மேற்கண்டவாறு உண்மையான மனோபலம் பெற்றதால், ‘ஐயே! அதி சுலபம்! ஆன்ம வித்தை’ என்ற அனுபவமுற்றனர்!

இதர சாதனங்கள் தரும் மனோ பலத்தைவிட ஆன்ம ஞானத்துக்கு வேண்டிய மெய்யான மனோ பலத்தை இவ்விதம் ‘நான் யார்?’ என்ற விசாரமே கொடுத்துவிடக் கூடியதாயிருக்க, ‘ஆன்ம விசார மார்க்கம் கஷ்டம்’ என்றும், ‘ஜபத்தியானாதி யோக முறைகள் சுலப’ மென்றும் பொதுவாக 33நம்மவருள் – ஸ்ரீ ரமண பக்தர்களுள்ளும் – ஓர் கருத்து இருந்தும், பரவியும் வருகிறது! இது எவ்வளவு தூரம் உண்மை என்றும் பார்ப்போம்!

பகவானுடைய அபிப்பிராயமோவென்றால் ‘எம்மார்க்க மதனினும் இம் மார்க்கம் மிக்கெளிது; மார்க்கம் நேர் ஆர்க்கும் இது’ என்பதாமென்று முறையே ஆன்ம வித்தைக் கீர்த்தனம் 4வது சரணத்தினின்றும், உபதேச வுந்தியார் 17வது பாடலினின்றும் தெரிகிறது. அதாவது இவ்வான்ம விசார மார்க்கத்தை ஏனைய எல்லா மார்க்கங்களையும் விடச் சுலபமானதென்றும், அது மட்டுமின்றி எல்லோருக்குமே சுலபமானதென்றும் பகவான் அபிப்பிராயப்படுவதாக ஆகின்றது, ‘எக்காரணத்தால் பகவான் இப்படி அபிப்பிராயப்படுகிறார்? அவரது அபிப்பிராயத்தில் சரியான நியாயம் இருக்க முடியுமா? இருக்குமாயின் அது எங்ஙனம்?’ என்றவாறு யோசித்துப் பார்க்காமல் நம்மவருட் சிலர், ‘அது பகவானுக்குத்தான் சுலபம்; ஏனையோர்க்கு இயலாததே!’ என்று சொல்லிக்கொண்டு தைரியமிழப்பதுண்டு. இந்தத் தைரியமே நமது குறிக்கோளைத் தேடித் தரக்கூடிய சிரத்தையாகையால் அதை இழக்காமலிருப்பதற்காக, பகவானது அபிப்பிராயத்திலுள்ள நியாயத்தைச் சிறிது கவனிப்போம்.

ஒன்றை நாம் சுலபம் அல்லது கஷ்டம் என்று கூறுவதன் கருத்தென்ன? சுலபம் என்றால் என்ன? கஷ்டம் என்றால் என்ன? எது நம்மால் விரும்பப்படாததோ, எது நம்மால் செய்ய முடியாததோ, எது நமக்குத் தெரியாததோ அதையே ‘கஷ்டம்’ என்கிறோம். எது முன்பே நமக்கு விருப்பமுள்ளதோ (இச்சை), எதை நாம் முன்பே ஒருமுறை செய்து முடிக்கக்கூடியதாய், நம்மால் இயன்றதாய் இருக்கின்றதோ (கிரியை), எதை நாம் முன்பே அறிந்திருக்கிறோமோ (ஞானம்) அதையே ‘சுலபம்’ என்கிறோம். அதாவது, எவை முன்பே நமது இச்சா, கிரியா, ஞான சக்திக்கு அனுபவம் உள்ளவையோ அவைகளே சுலபம் என்பதும், அவ்வாறு முன் அநுபவமற்றவை கஷ்டம் என்பதும் முடிவு. இதுவே ‘கஷ்டம்-சுலபம்’ என்பதன் இலக்கணம். அதன்படி, ஜபத்தியானாதியோக முயற்சி சுலபமா, அல்லது ஆன்ம விசார முயற்சி சுலபமா என்று பார்ப்போம்.

முன்பே கூறியபடி, முன்னிலை அல்லது படர்க்கைகளின் நாட்டமே ஜபத்தியானாதி யோகமாகிற இதர மார்க்கங்கள். பகவான் உபதேசிக்கும் ஆன்ம விசாரமோ தன்மையின் நாட்டம். மனத்தின் ஏகாக்கிர சக்தியை முன்னிலை-படர்க்கைப் பொருள்களில் செலுத்துவது ஜபம், தியானம் அல்லது நால்வகை யோக சாதனைகளுக்கு அவசியமாகின்றது. அது பஹிர் முகமே. மனத்தின் ஏகாக்கிர சக்தியை, (தன்னை)தன்மையை நாடுவதில் – கவனிப்பதில் – செலுத்துவது ஆன்ம விசாரம் எனப்படுகிறது. முன்னிலை-படர்க்கைகளைப் பற்றி முன்னனுபவமாக நமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இச்சா, கிரியா, ஞானானுபவங்களைக் காட்டிலும், தன்மையைப்பற்றி (ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் கூட) இச்சா, கிரியா, ஞானானுபவங்கள் அதிகமாகவும் சுபாவமாகவும் ஏற்பட்டிருக்கின்றன என்பது சற்று ஆராய்ந்தாலே விளங்கும். ஆராய்வோம்.

முன்னிலை-படர்க்கையின் மேல் முயற்சிகளாகிய ஒரு நாமம், ரூபம், பாவம் அல்லது ஷடாதாரச் சக்கர ஸ்தானங்கள் முதலியவை நமக்குப் புதிதாக அறிவிக்கப்பட்டு (ஞானம்), விரும்பி (இச்சை), இயற்றுமாறு (கிரியை) உபதேசிக்கப்படுகின்றன. அவை (நாம் குருவாக நினைப்பவர்களால்) பிறரால் நமக்குத் தூண்டப்படும் வரை முன்பே தெரியாத இச்சா, கிரியா, ஞானானுபவங்களேயாகும். உதாரணமாக:

ஒரு தெய்வ நாம ரூபத்தையோ, காயத்ரி போன்ற புனித மந்திரங்களையோ நமது தாய் தந்தையர்களாவது அல்லது யாரேனும் பெரியோர்களுள் ஒருவராவது உபதேசிப்பதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் அம்மந்திர, தியான, மூர்த்திகளை உபதேசித்துக் கொடுக்குமுன் நாம் அதனை அறிந்ததில்லை. அதன் பிறகே புதிதாக அதைப் பற்றிய அறிவைப் பெறுகிறாம். அதாவது, ‘அப்படி ஓர் மந்திரம் அல்லது தியானம் இருக்கிறது’ என்ற அறிவை – ஞானானுபவத்தை – அப்போதுதான் புதிதாகப் பெறுகிறோம். அவ்வாறே அப்பெரியோர்களால் அம் மந்திரம் அல்லது தியானத்தின் அருமை, பெருமை, வலிமை முதலியவற்றைக் கேள்விப்பட்ட பிறகே அதன்மேல் விசுவாசம் – பிரியம் – நமக்கு உண்டாகிறது. இது புதிதாக நமக்கு உண்டாக்கப்படும் பிரியமே! அதாவது, அதன்மேல் நமக்கு ஏற்படும் இச்சானுபவம் புதியதே என்று தெரிகிறது. அவ்வாறே, அம் மந்திர ஜெபம் அல்லது மூர்த்தித் தியானம் அல்லது பாவனைகளை நாம் அதற்குமுன் செய்தறியோம். அம்மந்திரத்தை எப்படிச் சுத்தமாக உச்சரிப்பது என்றும், தொனியில் ஏற்ற இறக்க நிறுத்தங்களை ஓரிருமுறை அப்பெரியோர்களின் முன் நாம் உச்சரித்துக் காட்டி, திருத்தங்களை மேற்கொண்ட பிறகே அதனைச் சரியாகச் செய்ய – இயற்ற – அறிகிறோம். தியானம் முதலியவைகளும் இப்படியே! அதாவது, அவற்றின் கிரியானுபவம் நமக்கு அதற்குமுன் இல்லாதிருந்து பிறகே ஏற்படுகிறது. பிராணாயாமாதி ஹட ராஜயோக சாதனைகளும் இப்படிப்பட்ட, இதற்கு முன் நமக்கில்லாத புதிய இச்சா, கிரியா, ஞானானுபவங்களே ஆகின்றன அல்லவா?

ஆனால், தன்மையின் முயற்சியிலோ நமக்கு இச்சா, கிரியா, ஞானானுபவங்கள் எவ்விதப் புறத் தூண்டுதலுமின்றியே, எப்போதுமே, முன்பே, இயல்பாகவே இருந்து வருவன. எவ்வாறெனின், நம் ஒவ்வொருவருக்கும், முன்னிலை, படர்க்கைப் பொருள்கள் யாவற்றையும் விட, தன்மையாகிய நம் மேலேயே அதிகப் பிரியம் இருக்கிறது. இது முன்பே இரண்டாம் அத்தியாயத்தில் 16-17 பக்கங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இயல்பாகவே தன்மையின் மேலுள்ள இச்சானுபவம் முதலாவதாக நிரூபணமாகிறது. இரண்டாவதாக, நாமல்லாத தேகாத்ம பாவத்திலிருந்து யாதொரு முயற்சியுமின்றியே, சுலபமாக, இயல்பாக நாம் நம்மைத் தினந்தினம் தூக்கத்திற் பிரித்துக்கொண்டு இருந்து வருகிறோம். இப்படிப் பிரித்துக்கொள்ள முடிவதானது, தன்மை மாத்திரமாக நாம் எஞ்சி நிற்கவல்ல, நமது கிரியானுபவத்தை நிரூபிக்கிறது. மூன்றாவதாக, கண்ணுக்குத் தன் தேகம்கூடத் தெரியாத காரிருள் அறையில் ஒருவன் உட்கார்ந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். வெளியில் இருக்கும் ஒருவர் அவனை, ‘உனக்கு அருகில் என் புத்தகம் இருக்கிறதா?’ என்று கேட்டால், அவன் ‘அதன் இருப்பை நான் அறியேன்’ என்கிறான். அவனை ‘நீ இருக்கிறாயா?’ என்று கேட்டால், உடனே ‘ஆகா! நான் இருக்கிறேனே!’ என்கிறான். முன்னிலை- படர்க்கைகளை அறிவதற்கு அவசியமான இதர ஒளியின் சகாயமற்ற நிலையிலும் கூட தன்னொளியால் (அறிவால்) தன் இருப்பை அறிய அவனால் முடிகிறதன்றோ? இன்னும், உடல் – மனம் – அற்ற 34தூக்கத்திலுங்கூட ‘நான் இருக்கிறேன்’ என்ற அறிவு யாருக்கும் இருப்பதால், முன்னிலை- படர்க்கைகளை விட, தன்மையைப் பற்றி நமக்கு எப்போதும் உள்ள அறிவு மிகத் தெளிவாக விளங்குகிறது. இது சாமானிய மனிதர் ஒவ்வொருவருக்கும் தன்மையின் மேலுள்ள ஞான சக்தியை நிரூபிக்கிறது. நாம் முன்பே விரும்பாத ஒன்றை பகவான் விரும்பச்சொல்லி உபதேசித்தால் அது நமக்குக் கஷ்டம் எனலாம்; நமக்கு இதுவரை தெரியாததை பகவான் தெரிந்துகொள்ளச் சொன்னால் அது கஷ்டம் எனலாம்; இதற்கு முன் நாம் இருந்து அனுபவித்தறியாத ஒரு நிலைக்கு நம்மைப் பகவான் போகச் சொன்னால் அது கஷ்டம் எனலாம். இவ்வாறு தன்மையின் மேல்தான் நமக்கு இச்சா, கிரியா, ஞானானுபவங்கள் முன்பே தெளிவாக இயல்பாக இருந்து வருவது தெரிகிறபடியால், மேற்கூறிய கஷ்ட-சுலபங்களின் இலக்கணப்படிப் பார்த்தால், ஜபத்தியானப் பிராணாயாமாதி சதுர் யோகமான முன்னிலை-படர்க்கைகளின் முயற்சியைவிடத் தன்மையை நாடும் ஆன்ம விசாரமே மிகச் சுலபமானது என்பது விளங்கும்.

ஆன்ம விசாரமொன்றே நேரான வழி. மற்ற வழிகள் நேரானவையல்ல. ஆன்ம விசாரமே ஆன்மாவுக்கு இட்டுச் செல்லும். மற்றவை வேறெங்கோ செல்பவை; அவை நேராக ஆன்மாவைச் சென்றடைவதில்லை. மற்றவற்றால் ஏதாவது சகாயம் உண்டென்றால், அவை முடிவில் ஒருவனை ஆன்மவிசார நெறியிற் கொண்டு சேர்த்து விடுவதால்தான்! கடைசியில் ஒருவன் ஆன்ம விசாரத்தையே செய்யவேண்டி வருவதால், ஏன் முதலிலேயே அவன் அதை மேற்கொள்ளக் கூடாது? மற்ற வழிகளில் வீணே காலத்தைப் போக்குவானேன்?

என்று ஸ்ரீ பகவான் ஒருமுறை கேட்டதுண்டு.

இதுவே பகவான், ‘எம் மார்க்க மதனினும் இம் மார்க்கம் மிக்கெளிது’ என்றும், ‘மார்க்கம் நேர் ஆர்க்கும் இது’ என்றும் கூறுவதற்கான நியாயமாகும். இது குறித்தே பகவானும் ‘ஆன்மாவானது இங்கேயே இப்பொழுதே நித்திய ஸித்தமாயுள்ளது’ என்று அடிக்கடி கூறி வந்துள்ளார், ‘ஆருக்கும் இது நேர் மார்க்கம்’ என்று பகவான் கூறுவதாவது, எவ்வளவு மனோபலமற்றவராயினும் சரியே, இம்மார்க்கத்தில் மனத்திற்குத் தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தியாகிய உண்மையான மனோ பலத்தைப் (பக்குவத்தைப்) பெற்று விடலாம் என்பதைக் குறிக்கின்றது35. ஆகையால் அகமுகமாகிய – அந்தர்முகமாகிய – ஆன்ம நாட்டமே, மனத்திற்கு இதர லக்ஷியங்களைக் கொடுப்பதைவிட மிகச் சிறந்தது என்பதே பகவானது உபதேசச் சிறப்பு.

நாம் எந்த இதர சாதனங்களை மேற்கொண்டாலும் சரி, எப்படியாவது முடிவில் ‘நான் இருக்கிறேன்’ என்னும் சத்-சித் உணர்வை நோக்கி நம் கவன சக்தியைத் திருப்பினாலன்றி நமது முடிந்த குறிக்கோளான ஆன்ம ஞானத்தை அடையவே முடியாது. ஏனென்றால், ஆன்மாவை நாடினாலன்றி ஆன்மாவை அறிய முடியாது. ஒரு பொருளை நாம் கவனித்தாலன்றி அதைப் பற்றிய அறிவு கிட்டாதன்றோ? ‘சூரியன் எப்பொழுதும் பிரகாசித்துக் கொண்டேதான் இருக்கிறது; ஆயினும் நாம் சூரியனைக் காண விரும்பினால் அதனை நோக்கி நம் கண்களைத் திருப்பிப் பார்க்க வேண்டுமல்லவா? அதுபோல சத்திய ஆன்மா எப்பொழுதும் ‘நான் இருக்கிறேன்’ என்ற தன்மைப் பொருளின் வடிவில் நம்முள் பிரகாசித்துக் கொண்டேதானிருக்கிறது. ஆனால், நாம் அதை உள்ளபடி அறிய விரும்புவோமாயின் நம் கவனத்தை – நாட்டத்தை – தன்னை நோக்கித் திருப்ப வேண்டும். நாம் நம் எண்ணங்களையோ, பிற பொருள்களையோ நாடிக்கொண்டிருக்கும் வரையில் நாம் அவைகளைத்தான் அறியமுடியும். ஆனால், அவற்றினின்றும் நம் கவனத்தைத் திருப்பி, ‘நான் இருக்கிறேன்’ என்னும் ஆன்ம உணர்வை நோக்கி நாடினால் ஆன்மா ஒன்றையே நாம் அறிவோம். எனவே, எல்லாம் நம் நாட்டத்தைப் பொறுத்த விஷயமே!’ என்று ஸ்ரீ பகவான் கூறுவதுண்டு. ஆகையால், ஆன்ம ஞானத்தையடைய நாம் முடிவில் ஆன்ம விசார வழிக்கே வந்தாக வேண்டும். எந்த இதர சாதனைகளை நாம் பயின்றாலும் அவை முடிவில் நம்மை நேர்மார்க்கமான தன்னாட்டத்திற்குக் (ஆன்ம விசாரத்திற்குக்) கொண்டு வந்து சேர்க்காவிட்டால் – சேர்க்கும் வரையிலும் – அவைகளால் நாம் ஆன்மாவை அறியவியலாது. இக்காரணத்தால்தான், ‘ஆன்மாவையறிந்து, ஆன்மாவிலேயே நிலை பெற – நிஷ்டையுற – தன்மையை நாடும் முயற்சியொன்றே பயனுள்ளதும் முடிவானதுமான முயற்சியாகும்’ என்று அடிக்கடி மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்துள்ளனர் பகவான்.

மன்மப் புலந்துருவு மார்க்கமொழிந் தெஞ்சியவாம்

கன்மமுத லாய கடப்பாட்டால் — என் முயற்சி

செய்துமித யத்துத் திகழான்ம வைப்பைத்தாம்

எய்துவித் தின்புறுத்த லின்று.

(குருவாசகக் கோவை 885)

மேலும் கடவுள், முன்னிலை அல்லது படர்க்கைப் பொருள்களுள் ஒன்றாக இருக்க முடியுமா? முடியாது! ஏனெனில்

முன்னிலை படர்க்கை வாழ்தல்

மூலமாந் தன்மை யாலே...

(சாதனை சாரம் 244)

தன்மையுண்டேல் முன்னிலை படர்க்கைகள் தாமுளவாம்...

(உள்ளது நாற்பது-14)

அகமெனும் நினைவு இன்றெனிற் பிறவொன்றும் இன்று.

(ஸ்ரீ அருணாசல அஷ்டகம் 7)

என்பது பகவானது அனுபவம். அதாவது முன்னிலை, படர்க்கைகள் தம் இருப்பைப் பெறுவதற்கு, ‘நான் இத்தேகம்’ என்ற நினைப்பு வடிவில் எழுகின்ற அகந்தையெழுச்சியாகிய தன்மையை(போலியை)யே சார்ந்து நிற்க வேண்டியிருக்கிறது. ஆகையால் கடவுள், முன்னிலை அல்லது படர்க்கைப் பொருள்களுள் ஒன்றாக இருப்பவரேயானால், அவர் தம் இருப்புக்கு (உண்மைக்கு–ஸத்துக்கு) இவ்வகந்தையின் தயவை நாடி நிற்பவராகி விடுவார்! அதாவது உண்மை(உள்ள தன்மை)யின் வடிவேயாக இருக்கும் கடவுள், கடவுள் தன்மையே அற்றவராகி விடுவாரன்றோ? ஆகையால் கடவுள், முன்னிலை- படர்க்கைகளுள் ஒன்றாகார். அவர் இப்போலித் தன்மையின் எழுச்சிக்கு ஆதாரமாய், எழுமிடமாய், தன்மையின் உண்மையாய்த்தான் விளங்க முடியும்.

ஆன்மாநு சந்தான மஃதுபர மீசபக்தி

ஆன்மாவா யீசனுள னால்.

(குருவாசகக் கோவை பகவான்-13)

இவ்வாறு ப்ரம்மம் அல்லது கடவுளானவர் ‘நான்’ என்ற அகம் ஸ்வரூப உண்மையாகவே சதா விளங்கிக் கொண்டிருப்பதால், மனத்திற்குத் தன்னாட்டத்தைச் சாதனமாகத் தருவதே கடவுளை நாடும் பயனுள்ள யோகமாகும். அதனால், சரியான கடவுள் நாட்டமாவது தன்னாட்டமே!

உன்னை நினைப்பதுநான் றன்னை நினைப்பதுவே

என்னை நினைப்பதெண் ணாமையே — அன்னதூஉம்

நானென் றெழாதிருக்கும் நாட்டமே, நாடுவதும்

ஏன்என் இருப்பே யது.

(36ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 990)

‘பரிபூரண சுக வடிவம் நாமே’ என்று அத்தியாயம் 3ன் ஆரம்பத்தில் முடிவு கண்டபடி பரிபூரணானந்தக் கடலாகிய கடவுள், தன்மையின் உண்மையாகவே இருப்பதால், தன்னை விசாரித்துத் தானல்லாதவற்றை பிரித்தகற்றித் தன்னையறிந்தால் உள்ளது உள்ளபடி விளங்க, இல்லாத பந்தத்தைப் போக்கடிப்பதற்காக சாஸ்திரங்களிற் கூறப்பட்ட இதர உபாயங்களில் முயலும் பிரயாசை அவ்வளவும் அவசியமற்றுப் போகின்றனவன்றோ? எனவே, நம்மை நாமல்லாதவற்றினின்றும் பிரித்தறியும் மஹாயோகமாகிய ஆன்ம விசார முறையைக் கவனிப்போம்.

20 ஸ்ரீ பகவானது நூல்களிலிருந்து தரப்படும் மேற்கோள்களின் சரியான உரையை இந்நூலாசிரியரால் அவ்வவற்றின் உரை, விரிவுரை எழுதப்பட்ட தனிப் புத்தகங்களின் மூலம் வாசகர்கள் அறிக.

21 ‘ஸ்ரீ மஹர்ஷி வாய்மொழி’ என்னும் நூலின் இரண்டாம் பாகத்தில் ‘ஆன்ம விசாரம்’ என்ற முதல் அத்தியாயம் முழுவதும் இங்கு கவனிக்கத்தக்கது.

22 பக்கம் 45-ல் வருகிற ‘சிறுவனும் பிசாசும்’ என்கிற கதை இங்கும் காணத்தக்கது.

23 சாதனை சாரம் 349-ஆவது பாடல் இங்குக் கவனிக்கத்தக்கது.

24 அவர்களது – இத்தகையோரையே ‘வேற்றார் கேள்விக்கு’ என்று முன்பு குறிக்கப்பட்டது.

25 Talks with Sri Ramana Maharshi, என்ற நூலின் நெ.107-ஐ இங்கே வாசித்தறிக.

26 ‘ஸ்ரீ ரமண தரிசனம்’ என்னும் நூலின் முதற் பதிப்பில் பக்கம் 69-ல் காண்க. இம் முழு விபரமும் அதன் நூலாசிரியரான ஸ்ரீ நடனானந்தரால் தரப்பட்டவையாம்.

27 ஸ்ரீ பகவான் தன்னுடன் சம்பாஷித்த பக்தர்களின் தனிப்பட்ட மன பரிபாகத்திற்கும், கிரகிக்கும் சக்திக்கும் ஏற்றபடி கூறிய விடைகளில், நாம் முன்பு கூறிய காரணங்களால் விளைந்த முரண் தோற்றங்கள் ஒருபுறமிருக்க, சம்பாஷணைக் குறிப்புக்களடங்கிய Talks with Sri Ramana Maharshi போன்ற நூல்களுக்காகச் சேகரிக்கப்பட்ட குறிப்புக்களின் மெய்ம்மை (accuracy)யும் கூட பலவிடங்களில் சரியாக அமையாததாலும், மேலும் பல பிரச்சினைகள் எழ இடமுண்டாகி விட்டது! அச் சம்பாஷணைகளைக் குறிப்பெடுத்தோர் அச் சம்பாஷணைகள் நடக்கும்போதே எடுத்தவையல்ல அவை, பிறகே எழுதப்பட்டன. குறிப்பெடுத்தோர் தமது ஞாபக சக்தியையே பெரிதும் நம்பிச் செயற்பட வேண்டியிருந்ததால், பகவான் கூறியவற்றை அவர்கள் எவ்வளவு புரிந்துகொண்டார்களோ, அதைப் பொருத்தே அக்குறிப்புக்கள் அமைந்தன. மேலும் ஸ்ரீ பகவான் பலகாலும் பொதுவாகத் தன் தாய்மொழியாகிய தமிழிலேயே விடையளித்து வந்தனர். சிற்சில சமயம் மட்டுமே கேட்போரின் மொழியறிவைப் பொருத்து சிறிது தெலுங்கிலும், மலையாளத்திலும், பேசியதுண்டு. ஆனால் ‘Talks’, ‘Day by Day’ முதலிய பல சம்பாஷணை நூல்களும் குறிப்பெடுக்கப் படும்போதே ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோதான் எடுக்கப்பட்டன. ஏனெனில், அந்நூல்களை எழுதியவர்கள் தமிழிலேயே அவற்றைக் குறித்துக் கொள்ளத்தக்க தமிழறிவு பெற்றிருக்கவில்லை. பகவானது வாக்கியங்களைச் சரியாகத் தவறின்றிக் குறித்துக்கொள்ள வேண்டுமாயின், ஒருவர், பகவானது உபதேச நெறியில் பரிபூரண நம்பிக்கையும் அறிவும் பெற்றிருக்க வேண்டியது மட்டுமன்றி, பகவான் தமிழ் மொழியைக் கையாளும் வகையையும் நன்றாய் அறிந்துகொள்ளும் வல்லமை பெற்ற தமிழறிஞராகவும் இருக்கவேண்டியது அவசியம். இத்தகைய ஆற்றலின் தனிச் சிறப்பும் தகுதியும் பெற்றிருந்தவர் ஸ்ரீ முருகனாரே. அவரைத் தவிர வெகு வெகு சிலரேயான தமிழ் அடியார்கள் மட்டுமே இத்தகுதி பெற்றிருந்தனர். ஆகையால்தான், பகவான் தாமே தமிழில் இயற்றிய மூல நூல்களும், முருகனாராற் தொகுக்கப்பெற்ற ரமண வாசகங்களாகிய குருவாசகக் கோவையும் மட்டுமே ரமணோபதேசங்களுக்கு முக்கியப் பிரமாணங்களாகக் கொள்ளவும் நம்பவும் தக்கனவாகின்றன. ‘Talks’ போன்ற இதர ஆங்கில சம்பாஷணை நூல்கள் முக்கியப் பிரமாணங்கள் (authorities) ஆகாமல், இரண்டாந்தரப் பிரமாணங்களாகவே கருதப்பட வேண்டியதால், அவைகளிற் கூறப்பட்டுள்ளவை சிற்சில சமயம் சந்தேகிக்கத் தக்கனவேயாகும். ஆனால் ‘Talks with Sri Ramana Maharshi’ போன்ற நூல்களைப் படிப்பதனால் பயனேயில்லை என்று நாம் சொல்வதாக வாசகர்கள் எண்ண வேண்டாம். அந்நூல்களில் பயனுள்ள முக்கியமான கருத்துக்கள் பலவுள என்பது உண்மையே. ஆயினும் அவைகளில் பகவானது கருத்துக்கள் பற்பல, தெளிவாக இல்லாமலும் சிலவிடங்களில் திரிபடைந்தும் காணப்படுகின்றனவென்பதால் ஜாக்கிரதையாகவும், தகுந்தவாறு விவேகித்தும் அவற்றைப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே இங்கு கூறப்படுகின்றது.

28 இது ஸ்ரீ குஞ்சுசுவாமி என்பவரால் கொடுக்கப்பட்ட விஷயங்களைச் சுருக்கி (Bhagavan Sri Ramana – A Pictorial Biography) என்ற நூலில் வெளியிடப்பட்டிருக்கிறது.

29 ஸ்ரீ பகவானருளிய ஆன்மவித்தைக் கீர்த்தனம் 4ஆவது சரணம்.

30 இந்நூலின் 7-ஆவது அத்தியாயத்தில் – ‘ஆகவே தன்னை நாட ஆரம்பித்த மனம் மனமல்ல; ஆன்மாவின் சித்ரூபமே!’ என்று விளக்கப்பட்டிருப்பது காண்க! மேலும், பகவானருளிய ‘ஸ்ரீ மஹர்ஷி வாய்மொழி’ என்ற நூலின் இரண்டாம் பாகம், முதல் அத்தியாயத்தில் (பன்னிரண்டாம் பதிப்பு, 2008, பக்கம் 53-ல்) ‘ஆத்ம விசாரம் ஒன்றைத் தவிர மற்ற எவ்வித சாதனத்திலும் [அச்] சாதனத்தை நடத்தும் பொருட்டு “மனம்” என ஒன்று இருந்தேயாக வேண்டும்’ என்று கூறுவதிலிருந்து ஆன்ம விசாரம் மனமாகிய மனத்தால் செய்யப்படுவதல்ல என்ற உளவு அறிக.

31 Talks with Ramana Maharshi என்ற நூலின் நெ.362-ன் மூன்றாம் பகுதியிலும். Day by Day with Bhagavan 9-5-1946-ன் இரண்டாவது பாராவிலும் பகவான் கூறியிருப்பது காண்க.

32 ‘சாதனை சாரம்’ என்ற நூலில் 69-ஆவது அத்தியாயமாக வரும் ‘ஜபம்’ என்னும் பகுதியை இங்கு வாசித்துணர்க.

33 ‘நம்மவருள்’ என்ற சொற்றொடர் ஸ்ரீ ரமண பகவானது பக்தர்கள் அனைவரையும் குறித்து நிற்கின்றதாயினும், பெரிதெளிது பெம்மா னடியார்க் கயலார் அரிதரிதென் றோது மது. (மெய்த்தவ விளக்கம் 58) என்று ஸ்ரீ முருகனார் கூறும் அளவுகோலைக் கொண்டு பார்க்குமிடத்து, உண்மையில் ‘நம்மவர்’ எனப்படும் ஸ்ரீ ரமண பக்தர்கள் யாவர், அயலார் யாவர் என்பதை வாசகர்கள் நன்குணர இயலும்!

34 தூக்கத்தில், யாவருக்கும் தன் இருப்பின் அறிவுண்டு என்ற விளக்கம் பக்கங்கள் 31—32-ல் காட்டப்பட்டது. தூக்கத்தில் தானில்லையென்றும் அப்படி இருந்திருந்தாலும் அது தனக்குத் தெரியாது என்றும் கூறுவோர் கூற்று தவறானதாகும். ‘ஸ்ரீ மஹர்ஷி வாய்மொழி’ என்ற நூலின் இரண்டாம் பாகம், ஆறாம் அத்தியாயத்தில் (பன்னிரண்டாம் பதிப்பு, 2008, பக்கம் 97—98-ல்) இது விளக்கப்பெறுகிறது.

35 உபதேசவுந்தியார் – விளக்கவுரை என்ற நூலின் 134-ஆவது பக்கம் இங்கு வாசிக்கத்தக்கது.

36 இந்நூலாசிரியரால் இயற்றப் பெற்றுள்ள ஓர் ஞானப் பிரார்த்தனை நூலாகும்.

 

Contents