ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

பிற்பால் (Appendix)
ஸ்ரீ அருணாசல அஷ்டகம் பாடல் 3 விளக்கவுரை (09)

Contents

பிற்பால்
பிற்பால் ஒன்பது
ஸ்ரீ அருணாசல அஷ்டகம் பாடல் 3 விளக்கவுரை

நின்னையா னுருவென வெண்ணியே நண்ண

நிலமிசை மலையெனு நிலையினை நீதான்

உன்னுரு வருவென வுன்னிடின் விண்ணோக்

குறவுல கலைதரு மொருவனை யொக்கும்

உன்னுரு வுனலற வுன்னிட முந்நீ

ருறுசருக் கரையுரு வெனவுரு வோயும்

என்னையா னறிவுற வென்னுரு வேறே

திருந்தனை யருணவான் கிரியென விருந்தோய்.

பொழிப்புரை: அருணாசலா, உன்னை உருவமாகக் கருதி நான் அணுகும்போது நீயோ இந்நிலவுலகில் ‘அருணாசலம்’ என்னும் மலைவடிவம் உடையவனாய் இருக்கின்றாய் (அதாவது, ஸ்ரீ ரமணர் கடவுளை உருவமாகக் கருதும்போது அவர் அருணாசலமாக அவருக்கு விளங்குகின்றார்). அவ்வாறின்றி, உனது சொரூபம் உருவமற்றது என்று ஒருவன் தியானிப்பதானது (எங்கும் நிறைந்த) ஆகாசத்தைக் காண்பதற்காக உலகம் முழுவதும் வீணாக அலைகின்ற ஒருவனது முயற்சிக்குச் சமானமேயாகும் (அதாவது, மனதிற்குக் கோசரமாகிற ஏதேனும் ஒன்றைப் பற்றி நினைப்பதே தியான சாத்தியமாகுமேயன்றி, அரூபத்யானம் என்பது நடக்கக் கூடாத காரியமே என்று பொருள்). அவ்வாறு முயலாமல் உன்னுண்மையாகிற ஆன்ம சொரூபத்தை இப்படி அப்படி என்று மனத்தால் பாவிக்காமல் – நினைக்காமல் (சும்மாவிருந்து) உள்ளபடி இருந்துணரும்போது, சமுத்திரத்தில் முழுகிய சர்க்கரைப் (உப்புப்) பொம்மை ஒன்றின் உருவம் அழிவது போல (மனம்) தனது உருவத்தை – இருப்பை இழக்கும். இவ்வாறு எனது சொரூபத்தை (நான் யார்? என்று) விசாரித்தறியும்போது எனக்கென்று ஒரு தனி உருவம் (அல்லது இருப்பு) வேறு ஏது இருக்கிறது? அருணாசலமாக விளங்குகின்ற நீயே இருக்கின்றாய் (நான் இல்லை)!

விளக்கவுரை: இப்பாடலில் ஸ்ரீ பகவான் ஆன்ம சாதகர்கட்கு ‘தியானம்’ என்பது பற்றிய பல உண்மைகளைக் கூறுகின்றார். சாதாரணமாக, ‘தியானம்’ என்பதை உருவத் தியானம்-அருவத் தியானம் என்றோ, சகுணத் தியானம்-நிர்க்குணத் தியானம் என்றோ இருவிதமாக நாம் பிரித்துக் கொள்கிறோமன்றோ? ஏதாவதொரு தெய்வத்தின் நாம ரூபத்தை விடாது சிந்திப்பதையே உருவத் தியானம் என்கிறோம். ஆனால், அருவத் தியானம் என்று முயல்வது எப்படி? சிலர், ‘உண்மையில் கடவுளுக்கு நாமமோ, ரூபமோ யாதொன்றும் இல்லையல்லவா? ஆதலின், கடவுளின் நிர்க்குணானுபவமே மேல்; அதைப் பெறுவதற்கு சகுணத் தியானமோ, சகுண வழிபாடோ செய்யக் கூடாது’ என்று முடிவு செய்கிறார்கள். பிரசாரமும் செய்கிறார்கள். நிர்க்குணத் தியானத்திற்காக ஏதேதோ கற்பனைகளாலான அப்பியாசங்களையும் மேற்கொள்கின்றனர்! இந்நிலையில் கடவுளின் நிர்க்குணானுபவம் பெற்ற அத்வைத ஞானானுபவியாகிய ஸ்ரீ ரமண பகவானது அறிவுரைகளை அவர்கள் ஏற்று நடப்பது நல்லது.

‘உருவந்தா னாயின் உலகு பரம் அற்றாம்...’ என்று ‘உள்ளது நாற்ப’தின் நான்காவது பாடலில் ஸ்ரீ பகவான் ஓர் முக்கிய உளவுரைக்கின்றார். அதாவது, நாம் நம்மை நமது உடலுருவமாகக் கருதி, ‘நான் இன்னாராக இருக்கிறேன்’ என்று ஒரு நாம ரூபத்தையே நாமாகக் கருதிக்கொண்டிருக்கிற வரையில் கடவுளையும் உலகத்தையும் நாமரூபம் உடையவைகளாகத்தான் அனுபவிக்க முடியும். கடவுளானவர் நாம ரூபங்களைக் கடந்து உள்ளவர் என்பது மெய்யேயாயினும், நாம் நம்மை ஒரு நாம ரூபமாக – ஓர் உடலுருவமாக – உணர்கின்ற வரையில், எப்படிப்பட்ட அப்பியாசத்தினாலும் கடவுளது நாமரூபங் கடந்த உண்மையை உணரவே முடியாது. காண்பான் எப்படியோ காட்சியும் அப்படியேதான் அமையும். கண்ணலாற் காட்சி உண்டோ? என்ற ‘உள்ளது நாற்ப’தின் நான்காவது பாடலின் உபதேசப்படி, காணும் நாம் எப்படியோ, அப்படியேதான் கடவுட் காட்சியும் அமைய முடியும். நாம் இவ்வுடலுருவே என்ற பிழையான தன்னுணர்வு நீங்காத வரையில், கடவுளை நாமரூபமில்லாதவராகத் தியானிக்கவோ அறியவோ எவ்வாறு முயன்றாலும் அது வெறும் வீண் முயற்சியாகவே முடியும். அஷ்டகத்தின் மூன்றாவது பாடலின் இரண்டாவது அடி இக்கருத்தையே விளக்குகின்றது. நமக்கு தேகாத்ம புத்தியாகிய நாமரூபத் தன்மை இருக்கும் வரையிலும் கடவுளையும் ஒரு நாம ரூபத்தில் வழிபடுவதும், தியானிப்பதும்தான் நல்லது. அதுதான் நம்மால் முடிந்த காரியம். அது தவறுமல்ல.

உருவவகங் கார மொழிந்தமனத் தோர்க்கே

அருவவழி பாடியல்வ தாகும் – மருவும்

உருவவகங் காரமனத் தோர்வழிபா டெல்லாம்

உருவவழி பாடே உணர்.

(குருவாசகக் கோவை 657)

பொருள்: ‘தன் தேகமாகிய உருவமே தான்’ என்ற புத்தி அழியப் பெற்றவர்கட்குத்தான் அருவ வழிபாடு என்பது சாத்தியமாகும். அவ்வாறின்றி தனக்கு ஏற்பட்டுள்ள தேக உருவத்தின் மேல் ‘நான்’ என்ற அபிமானமுள்ள மனத்தினர் (மனிதர்) செய்யும் வழிபாடெல்லாம் (‘அருவத் தியானம் செய்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு செய்யும் முயற்சிகள்கூட) உருவ வழிபாடாகவே முடியும் என்றறிக.

அருணாசல அஷ்டகத்தின் மூன்றாவது பாடலாகிய இதன் முதல் அடியில் ஸ்ரீ பகவான், ‘நின்னையா னுறுவென வெண்ணியே நண்ண, நிலமிசை மலையெனு நிலையினை நீதான்’ – ‘அருணாசலா, உன்னை நான் உருவக் கடவுளாகக் கருதியணுகவே நீ எனக்கு இவ்வருணாசல மலை வடிவாகவே விளங்குகின்றாய்’ – என்று கூறுகின்றார். ஸ்ரீ பகவான் கடவுளை அருணாசல கிரி வடிவாகவும், தன் சற்குரு வடிவாகவும் சகுண நாமரூபத்தில் ஏற்றுக் கொண்டிருப்பதை முறையே, ‘தெய்வ மென்றுன்னைச் சாரவே ...’ என்ற பாடலும், ‘குற்றமுற் றறுத்தெனை குணமாய்ப் பணித்தாள் குருவுரு வாயொளி ரருணாசலா’ என்ற பாடலும் காட்டுகின்றன. சஹஜ நிர்விகற்ப அத்வைதானுபவியான ஸ்ரீ ரமண பகவானே அருணாசல சகுணோபாசனையால் ஏற்படும் பயனை, ஸ்ரீ அருணாசல பதிகம், பாடல் 10-ல்,

பார்த்தனன் புதுமை யுயிர்வலி காந்த

பருவத மொருதர மிதனை

யோர்த்திடு முயிரின் சேட்டையை யொடுக்கி

யொருதன தபிமுக மாக

வீர்த்ததைத் தன்போ லசலமாச் செய்தவ்

வின்னுயிர் பலிகொளு மிஃதென்

னோர்த்துய்மி னுயிர்காள் உளமதி லொளிரிவ்

உயிர்க்கொலி யருணமா கிரியே.

என்று கூறுகின்றார். அதாவது, ‘இந்த அருணாசலமோ, இரும்பைக் காந்தம் கவர்ந்திழுப்பது போல, உயிர்களைக் கவர்ந்திழுக்கும் மலையாகும். இவ்வருணாசலத்தை எந்த உயிர் ஒரு முறையாவது நினைக்கிறதோ, அந்த உயிரின் பஹிர்முகப் பிரவிருத்தி சேஷ்டைகளை எல்லாம் ஒடுக்கி, ஆன்மாவாகிய தன்னை நோக்கி இழுத்து வசப்படுத்தி, அசலமாகிய தன்னைப் போலவே சற்றும் சலனமில்லாமற் செய்து, தன்னில் நிலைத்த அவ்வுயிரை தன்னுடன் இரண்டறக் கரைத்துப் பலியாக உண்டு விடுகிறது. இது என்ன ஆச்சரியம்! இப்புதுமையை நானே பார்த்திருக்கிறேன். ஆகையால் உயிர்காள், இவ்வருணாசலத்தைத் தியானித்து, ஜீவபோதம் அழியப்பெற்று உய்வடைவீர்களாக’ என்று உளவு கூறுகின்றார். அதாவது, ஒருமுறை அருணாசலத்தை நினைக்க, அது சாதகனுக்குள் ஆன்ம விசாரக் கிரியை முழுவதையும் தாமே நடத்தி முடிக்கிறது என்ற உளவு இப்பாடலால் கூறப்பட்டது.

சகுணமாக அருணாசலனை வழிபடுவதால் ஏற்படும் நன்மையையும் ஸ்ரீ பகவான், ஸ்ரீ அருணாசலப் பதிகம், பாடல் 11-ல்,

கிரியிது பரமாக் கருதிய வென்போற்

கெட்டவ ரெத்தனை கொல்லோ

விரிதுய ராலிப் பிழைப்பினில் விழைவு

விட்டுடல் விட்டிட விரகு

கருதியே திரிவீர் கருத்தினு ளொருகாற்

கருதிடக் கொலாமலே கொல்லும்

அருமருந் தொன்றுண் டவனியி லதுதான்

அருணமா திரமென வறிவீர்.

என்று முரசறைகின்றார்.

இதிலிருந்து ஸ்ரீ பகவான் அருணாசலத்தையே தனது சகுண நாமரூப இறைவனாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகின்றதல்லவா? இறைவனின் நாமரூபங்கள் எண்ணிறந்தனவாயினும், ஸ்ரீ ரமண பகவானையே சற்குருவாயடைந்து, அவரது இஷ்ட தெய்வத்தையே தனது இஷ்ட தெய்வமாகவுங் கொண்டு, அவரைப் பின்பற்றி அவரது வழியிலேயே தனது மனத்தின் இச்சையையும் உருவாக்கிக்கொள்ள விரும்பும் உத்தம ரமண பக்தர்கட்கு ஊக்கமும் அதனால் ஆக்கமும் அளிக்குமென்ற காரணத்தால், ஸ்ரீ பகவானது கண்ணோக்கில் அருணாசலத் தியானம் ஏன் மிகச் சிலாக்கியமானதாய் கருதப்படுகிறதோ அதைச் சிறிது ஆராய்வோம்.

இந்த உயிர்வலி காந்த பருவதமாகிய அருணாசலம், இதனை ஒரு தரம் ஓர்த்திடும் உயிரின் புறமுக மனச் சேட்டைகளை ஒடுக்கி, ஆன்மத் தன்மையாகிய தனது அபிமுகமாக ஈர்த்துக் கொள்கின்றது என்ற உண்மையை மேலே காட்டிய ‘பார்த்தனன் புதுமை’ என்ற பாடலால் கண்டோம். இது பொய்யல்ல. ஸ்ரீ ரமண பகவானது அனுபவம். ‘இவ்வருணாசலம் அறிவறு கிரிஎன அமர்தரு மாயினும், அம்மம்ம! அதிசயம் இதன் செயல்; ஆர்க்கும் அறிவரிது!’ என்று ஸ்ரீ பகவான் வியந்து கூறுகின்றார்! இது அருணாசல நாம ரூபத்தில் இறைவனுக்குள்ள ஒரு அதிசய அருட்சக்தி.

‘முன்னிலைப் பொருள்களை நாடநாட மனம் மேலும் மேலும் எண்ணங்களாய் விரிந்து பெருகும்’ என்பதே பொது விதியாயினும், இதற்கொரு விதி விலக்காய் அமைந்துள்ளது அருணாசலம். அது தன்மையை நினைப்பூட்டும் ஓர் முன்னிலைப் பொருள்! அருணாசல அஷ்டகம் முதற் பாடலின் கடைசி வரியில் ‘அருகினில் ஈர்க்க, அருகுறு மமயம் ஈ(து) அசலமாக் கண்டேன்’ என்று ஸ்ரீ பகவான் கூறியவுடனேயே அடுத்த பாடலை ஆரம்பிக்கும்போது ‘கண்டவன் எவன் எனக் கருத்தினுள் நாட...’ என்று அருணாசலத்தைக் கண்டவுடன் தன்னுள்ளத்தில் என்ன நிகழ்கிறது என்பதை விளக்குகிறார். ஞானத்திரளாய் நிற்கும் பெருமானான அந்த அருணாசலமாம் முன்னிலைப் பொருள், ‘என்னைப் பார்க்கும் நீ யார் என்று பார்’ என்று நம் கவனத்தைத் தன்மையின் மேல் திருப்பி விடுகின்றது என்ற இரகசியத்தைப் பகிரங்கப் படுத்துகிறார்! இப்படித் தன்மையை நினைப்பூட்டும் அதிசய சக்தி அருணாசலத்திற்கே உண்டு. இது ஸ்ரீ பகவானுடைய சொந்த அனுபவத்திலிருந்து நாமறியக் கிடப்பதாம்.

இந்த அருணாசல ஸ்மரணையே – நினைப்பே முக்தியைக் கொடுக்கும் என்பதை நூல்கள்,

காசியில் மரணம் முக்தி;கமலால யத்தில் ஜன்ம

நாசமாம் ஜனனம்; தில்லை நடேசனைக் காண முக்தி;

தேசரு ணாச லத்தைச் சேய்மைநின் றொருகா லேனும்

நேசமாய் நினைப்பா ராகில் நிலைத்திடும் முக்தி தாமே.

என்று கூறுகின்றன. இது பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்க்கையாலேயே மெய்ப்பிக்கப்பட்டு விட்டதல்லவா? எவ்வாறெனின், அறிவு தெரியாத இளங்குழவிப் பருவத்திலேயே பகவான் ரமணரின் உள்ளத்தில் ‘அருணாசலம்’ என்று ஓர் உள்ளுணர்வு இருந்து வந்தது. ‘அருணாசலம்’ என்றால் என்ன? அது ஒரு ஊரா, ஆறா, மலையா, கடலா, பொருளா, சுவாமியா என்றுகூட அவர் அப்போது அறிந்திலர். ஆனால், அது யாவற்றினும் பெரிய ஒன்று என்றவாறு மட்டும் ஓர் உள்ளுணர்வு இருந்து வந்தது. பிறகு அது எப்படி அவரை பரமாத்ம ஞானியாக விளங்க வைத்தது என்பது உலகமறிந்த விஷயம். இதை ஸ்ரீ பகவான், ஸ்ரீ அருணாசல அஷ்டகம், பாடல் 1-ல்,

அறிவறு கிரியென வமர்தரு மம்மா

வதிசய மிதன்செய லறிவறி தார்க்கும்

அறிவறு சிறுவய ததுமுத லருணா

சலமிகப் பெரிதென அறிவினி லங்க

அறிகில னதன்பொரு ளதுதிரு வண்ணா

மலையென வொருவரா லறிவுறப் பெற்றும்

அறிவினை மருளுறுத் தருகினி லீர்க்க

அருகுறு மமயமி தசலமாக் கண்டேன்.

என்று கூறுகின்றார்.

இன்னும் ஒரு சமயம் ஸ்ரீ பகவான் இவ்வருணாசல நாம ரூபத்தின் பெருமையைப் பற்றி தன் அன்பர் ஒருவரிடம், ‘நாம் எப்படி நம் தேகத்(நாம ரூபத்)தை “நான் இது” என்று அபிமானிக்கிறோமோ, அப்படிச் சிவபிரான் இந்த மலையை “நான்” என்று அபிமானிக்கிறார்’ என்று கூறியருளினர்.

மேலும், நம் புராண இதிகாசங்களின் கூற்றில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள நன்மக்கட்கு ‘ஸ்ரீ அருணாசல மஹாத்மியம்’ என்ற புராண நூலிலிருந்தும் மற்றொரு காரணம் காட்டலாம். அது வருமாறு: எங்கும் ஏகமாய் நிறைந்த பரிபூரண ப்ரம்மத்திற்கு ஒரு நாம ரூபம் உண்டு என்று முதன் முதலாக வெளிப்பட்டது இவ்வருணாசல லிங்கோத்பவத்தால்தான் என்று நாம் அறிய வருகிறோம். எவ்வாறெனின், உலக சிருஷ்டிகர்த்தாவும் ஸ்திதி கர்த்தாவுமான பிரம்ம-விஷ்ணுக்கள் நாம ரூபிகளாய், ப்ரம்மத்தினின்றும் வேறான வியக்திகளாய் வெளிப்பட்டுத் தத்தம் காரியங்களைச் செய்துவரும் காலத்தில் – தங்கள் இருவரின் மூல வஸ்துவைப் பற்றி அது உருவமென்றோ அருவமென்றோ ஒன்றுமறியாதிருந்த காலத்தில் - கர்வித்துத் தங்களுக்குட் சண்டையிட்டனர். அப்போது பரம்பொருள் முதன் முதலாக, பிரம்ம-விஷ்ணுக்களறிய, ஏற்றுக்கொண்ட முதல் நாம ரூபம் ஸ்ரீ அருணாசல ஜோதிர் லிங்கமேயாகும். பிரம்ம-விஷ்ணுக்களின் அறியாமையை நீக்கி, மெய்ப்பொருளின் இருப்பை அறிவிக்கும் சற்குரு சொரூபமாக இவ்வருணாசலம் ஆதியில் எழுந்தருளியது இங்கு சிந்திக்கற்பாலது. வாயுரையால் உபதேசிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் ஸ்ரீ அருணாசல ஜ்யோதிஸ்தம்பத்தின் ஆவிர்ப்பவம் ஒன்றே பிரம்ம-விஷ்ணுக்களுக்கு மூல வஸ்துவை உணர்ந்து அகந்தை அடங்கிவிடப் போதியதாக இருந்திருக்கிறதல்லவா?

... விண்டிடா துன்னிலை விளக்கிட வென்றே

விண்தல மசலமா விளங்கிட நின்றாய்.

என்ற ஸ்ரீ பகவானது அஷ்டகம் 2-ன் 4-ஆவது வரி இக்கருத்தையும் உட்கொண்டதேயாகும். இவ்வாறு ஓர் சற்குருவின் காரியத்தை ஆற்றவே ஸ்ரீ அருணாசலத் தோற்றம் உண்டாகியது என்று நாம் அறியவேண்டும். முன்பு மூலப் பரம்பொருளுக்கு லிங்க-நாமரூபம் ஒன்று உண்டு என்பதைப் பிரம்ம-விஷ்ணுக்கள் முதற்கொண்டு யாரும் அறிந்ததேயில்லை! ஆகையால், எந்தக் கோவிலும் சிவபிரானாகிய பரம்பொருளுக்கு அதற்குமுன் இருந்திருக்கவே முடியாதல்லவா? ஆகவே, அருணாசல ஆதி லிங்கோற்பவருக்குப் பிறகே பரம்பொருளுக்கு ஈசுவர வழிபாடு சுயம்பு லிங்கங்களிலும் ஆலயங்களிலும் ஏற்பட்டிருக்க முடியும். இது பற்றியே ஸ்ரீ ரமண பகவான் இறைவனின் ஆதி நாம ரூபமாகிய அருணாசலத்தின் தியானத்தை உயிர்களின் உய்வுக்கு, ‘அவனியில் அருணாசலம் என ஒன்றுண்டு; ஓர் காலேனும் அதை ஓர்த்து உய்மின் உயிர்காள்’ என்று ஆற்றுப்படுத்தினர் என்றும் நாம் கொள்வது மிகையாகாது.

இறைவனை இவ்விதம் சகுண நாம ரூபத்தில் தியானிப்பது-வழிபடுவது தவறல்ல. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் நாமரூப-விக்கிரஹ ஆராதனை தினமும் செய்தே வருகிறோம்! நம் உடலே நம் விக்ரஹம். கோவிலில் நடக்கும் விக்கிரக ஆராதனையைப் போலவே நாம் ஒவ்வொருவரும் தினந்தோறும் நம் உடல் விக்கிரகத்திற்கு அபிஷேகம் (ஸ்நாநம்), வஸ்திரம் சமர்ப்பித்தல் (உடுத்தல்), அலங்காரம் (அணிகலனாதி பூணுதல்), நிவேதனம் (உண்ணல்- அருந்தல்) முதலிய காரியங்களைச் செய்தே வருகிறோமல்லவா? கடவுள் ஆகாத ஒரு கல் அல்லது உலோக விக்கிரகத்தையே கடவுளாகக் கருதித் தியானித்தோ ஆராதித்தோ வருவது தவறானால், ‘நாம்’ அல்லாத மாமிச விக்கிரகமாகிய உடலையே நாமாகக் கருதி, தினமும் அதற்கு ஆராதனை செய்து வருவதும் தவறேயல்லவா? எம்மதத்தைச் சார்ந்தோராயினும் சரி, நாம் ஒவ்வொருவரும் இவ்வாறே நம்மை ஒரு நாம ரூபமாகக் கருதி, ஒழுகி வரும் வரையில், கடவுளையும் ஒரு நாம ரூபத்தில் தியானிப்பதும் தவிர்க்க முடியாத ஓர் இயற்கை சுபாவமேயாகும்.

விக்கிரகா ராதனையின் மிக்க ரகசியத்தை

நெக்குருகிக் காணாது நிந்திப்போய் – பொக்கமா

ஊரு முடல்வடிவ விக்கிரக மேநானென்

றாராதிக் கின்ற தெவன்?

(குருவாசக் கோவை 208)

பொருள்: விக்கிரக ஆராதனை செய்வதிலுள்ள மிக முக்கியமானதோர் இரகசியத்தை, உள்ளம் நெகிழ்ந்துருகும் அன்பால் அனுபவித்தறியாதவனாய் அதை தூஷிக்கும் மனிதனே! நீ மட்டும் நடமாடும் ஜடமாயிருக்கும் உனது இம் மாமிச உடல் வடிவமான விக்கிரகத்தை, ‘சைதன்யமான நீயே அது’ என்று (ஆவாஹனம் செய்து) தவறாகக் கருதி, தினமும் தவறாமல் அவ்வுடலாகிய விக்கிரகத்திற்கு (நீராட்டல், உடை, உறையுள் ஊணாதிகளை அளித்து) ஆராதிப்பது எப்படி நியாயமாகும்?

உடலுருவையே ‘நான்’ என்று கருதும் மடமை இருக்கும் வரையில் கடவுளை நாமரூப-விக்கிரஹங்களாக எண்ணி வழிபடுவதில் தவறொன்றுமில்லை. ஆராய்ந்து பார்க்கின் முன்னதே பின்னதற்குக் காரணமாயிற்று என்றறியலாம். ஆகையால், தன் தேகாராதனையைச் செய்து கொண்டிருப்போர் நாமரூப விக்கிரகாராதனையை நிந்தித்து கண்டிப்பது தவறு. அவர்கள் முதலில் ‘தான் தேகம்’ என்ற பாவனையை விடாது பற்றிக்கொண்டிருப்பதை நிந்திக்கட்டும், விட்டொழிக்கட்டும். பிறகு அவசியப்பட்டால் நாமரூப விக்கிரகாராதனையைக் கண்டிக்கலாம்.

கடவுளின் வழிப்பட்டு நிற்றலே கடவுள் வழிபாடாயிற்று. கடவுளின் நாம ரூபத்தில் ஏற்படும் பிரியம் – பக்தியினால் – அவ்வழிப்பட்டு நிற்பதால் நமது உடலாகிய விக்கிரகத்தின் வழிப்பட்டு நிற்கும் மோஹம் (அதாவது, நான் இவ்வுடலுருவமே என்ற மயக்கம்) ஒழியும். கொஞ்சங் கொஞ்சமாய் அதனால் சித்த சுத்தி உண்டாகும். அப்படிச் சுத்தப்பட்ட சித்தத்திற்குத்தான் நிர்க்குணோபாசனையின் மெய்யியல்பையும், அதற்கான வழியையும் புரிந்து கொள்ளும் சக்தியுண்டாகும். அதாவது, அத்தகைய சுத்த மனத்திற்கே ‘உடலுருவமே நான் என்ற எண்ணமிருப்பதால்தான் நாமரூபங் கடந்த கடவுளையும் நாமரூபமற்ற சுத்த நிலையிற் காண முடியவில்லை’ என்ற அறிவு உதிக்கப் பெறும். ஆகையால், ‘என் உடலாகிய நாமரூபந்தான் நானா? அல்லது வேறா? நான் யார்?’ என்ற விசார வழிப்படும். இந்த ஆன்ம விசார வழிப்படுவதே, நிர்க்குண வழிபாடு! ஆகவே நிர்க்குணத் தியானம் என்பது ஆத்ம விசாரமாகவே முடிகிறது. இதையே ஸ்ரீ பகவான் இப்பாடலில் மூன்றாவது அடியில், ‘உன்னுரு உனலற உன்னிட’ என்று குறிப்பிடுகின்றார். இங்ஙனம், சகுண நாம ரூப வழிபாடு தக்கவாறு ஆற்றப்படின், அது சரியான நிர்க்குணோபாசனைக்கு – ஆன்ம விசாரத்திற்கு நாம் சென்றடைய வழிகோலி விடுகின்றது.

நினையா நினைவாலே நிட்களமா முண்மை

தனையாரா தித்தலே சால்பாம் – முனைவன்

அகளவழி பாட்டுக் கருகதையில் லாக்காற்

சகளவழி பாடே தகும்.

குருவாசகக் கோவை 658)

இயற்கையொளி யாந்தம் மிருக்கையுணர் வின்றி

மயக்கவினைப் பட்டுழலு மாந்தர் – நயக்குறுதம்

மூர்த்தி யுபாசனையான் மோகமொழிந் தான்மபர

மார்த்த மடைவா ரறி.

குருவாசகக் கோவை 659)

இதை விட்டு, நம்மில் சிலர் சகுணத் தியானம் தாழ்வென்றும், தாம் நிர்க்குணத் தியானம் செய்வதாகவும் சொல்லிக்கொண்டு முயல்வதுண்டு. எப்படி முயன்றாலும் அது ஒரு எண்ணமேயாகும். ‘ஆகாயத்தைப் போல யாதொரு ஸ்தூலப் பொருளுருவமும் இல்லாதவராகக் கடவுளைத் தியானிக்கிறேன்’ என்று முயல்வதும் நம் மனத்தின் கற்பனையாகிய ஓர் எண்ணமே. எண்ணம் ஒவ்வொன்றும் ஓர் வடிவமே. ‘தான் ஒரு தேகம்’ என்னும் மூல எண்ணம் இருக்கும் வரையில், ஒருவன் ஏனைய எண்ணமற்றிருப்பது என்பது அசம்பாவிதமே. இது குறித்தே, சரியான தியான முறையை உபதேசிக்க ஆரம்பித்த ஸ்ரீ பகவான், உள்ளது நாற்பது-முதல் மங்கல வெண்பாவிலேயே, ‘உள்ள பொருள் (பரம ஸத் வஸ்து – கடவுள்) உள்ளத்தே உள்ளல் அற உள்ளதால், உள்ள பொருள் உள்ளல் எவன்? உள்ளத்தே உள்ளபடி உள்ளதே உள்ளல்’ என்று கூறுகின்றார். அதாவது பரம்பொருளாகிய கடவுள் உள்ளத்தில் எண்ணமற்ற வஸ்துவாய் விளங்குவதால், எண்ணும் மனத்தொழிலாகிய தியானத்தால் அவரை எப்படி அணுக முடியும்? எண்ணமற்ற ஒன்றை எண்ணுவது – தியானிப்பது எப்படி முடியும்? (நிர்க்குணத் தியானம் என்பது எவராலும் முடியாது என்றபடி) தானும் எண்ணமற்று – தான் தேகமாகிய இன்னார் என்னும் அகந்தையுணர்வு அற்றுப்போய் – உள்ளத்தில் ஆன்மப் பொருள் மயமாக மூழ்கியிருப்பதே, கடவுளை அருவமாக உண்மையில் சரியாகத் தியானிப்பதாகும்.

‘அருவத் தியானம் அல்லது நிர்க்குணத் தியானம் செய்கிறேன்’ என்று ஒருவன் முயல்வதை ‘விண் நோக்குற உலகு அலைதரும் ஒருவனை ஒக்கும்’ என்று இப்பாடலின் இரண்டாவது அடியால் ஸ்ரீ பகவான் பரிகசிக்கின்றார். அதாவது ஒருவன் ஓரிடத்தில் நின்றுகொண்டு ஆகாயத்தைப் பார்க்கிறான். அது தலைக்கு மேலே வெகு உயரத்தில் இருப்பதாக அவன் கருதுவதால், அதை அருகிற் சென்று பார்க்க விரும்புகிறான். வெகு தூரத்தில் அடிவானத்தில் பூமியின் மேற்பரப்பை வானம் தொடுவது போல் காணப்படுவதைப் பார்க்கும் அவன், அது அவ்வாறு எந்த ஊரில் பூமியைத் தொடுகிறதோ அங்கு சென்று நின்று பார்த்தால் அது தன் தலைக்கு வெகு சமீபத்திலிருக்கும் என்று கருதி அங்கு ஓடுகின்றான்! அப்படிப் பல மைல் தூரம் ஓடிய பின், அங்கிருந்து பார்த்தாலும் வானம் முன்போலவே தலைக்கு மேல் வெகு உயரத்தில்தான் காணப்படுகிறது. ஏமாந்துபோன அவன் அங்கிருந்து பார்க்கும்போது வானம் வெகுதூரத்திற்கப்பால் மற்றோரிடத்தில் பூமியைத் தொடுவதாகக் காண்கிறான். அங்கு சென்றால் வானத்தை அருகிற் பார்த்து விடலாம் என்றெண்ணி அங்கு மறுபடியும் ஓடுகிறான். இவ்வாறு உலகம் முழுவதும் அலையும் ஒருவனுக்கு ஸ்ரீ பகவான் அருவத் தியானம் செய்யும் ஒருவனை ஒப்பிடுகிறார்!

அம்மனிதன் பூமியிலிருந்து கொண்டே எங்கு அலைந்தாலும் வானம் காணப்படும் உயரத்தை இம்மியும் குறைக்கவியலாது. அது போலவே, மூல எண்ணமாகிய ‘நான் இன்னார்’ என்னும் தேக நாம ரூபத் தன்னுணர்வாகிய மன அறிவை வைத்துக்கொண்டு நாம ரூபமற்ற – மனங்கடந்த – எண்ணமற்ற – கடவுளை எவ்வளவு முயன்று தியானித்தாலும் அடையவே முடியாது. உலகம் முழுதும் அலைந்தும் அதே உயரத்திற் காணப்படும் ஆகாயத்தை, உலகில் எந்த ஒரு இடத்திற்கும் ஓடியலையாமல் இருந்த இடத்திலேயே இருந்தாலும் அதே உயரத்திற் காணலாமல்லவா? அலைந்தது வீணே. அதுவே வழியற்ற வழி. வீண் முயற்சி. நிர்க்குண ப்ரம்மானுபவம் பெறுவதற்குச் செய்யவேண்டிய சரியான முயற்சிதான் என்ன? மனோ வாக்குக் காயங்களால் எந்தவித எண்ணத் தொழிலும் இயற்றாதிருப்பதே. ஸ்ரீ பகவான் கூறுகின்றார்:

...சொல் மானத தனுவின் கன்மாதி சிறிதின்றி

சும்மா அமர்ந்திருக்க அம்மா அகத்தி லான்ம

சோதியே...

(ஆன்ம வித்தைக் கீர்த்தனம் 4)

ஆகாயம் என்று ஒரு பொருள் எங்கோ தலைக்கு மேல் ஒன்று இருப்பதாக அவன் கருதியதே தவறல்லவா? நம்மைச் சுற்றி எங்குமுள்ளதும் ஆகாயமே. அதை எங்கேயோ உயரத்தில் – தூரத்திலுள்ளதாக அம்மனிதன் கருதியதே தவறு. அந்தத் தப்பெண்ணம் நீங்கினால் ஆகாயம் இங்கேயே இப்போதே அடையப்பட்டதாகின்றது அல்லவா? அது போலவே, ‘நான் இத்தேகம்’ என்ற உபாதியற்று விளங்கும் தன்மையுணர்வே கடவுளின் நாமரூபமற்ற நிலை. நான் யார்? என்றவாறு நாட்டத்தைத் தன் மீது திருப்பி நிறுத்தினால் அது இங்கேயே இப்போதே எல்லோருக்கும் இயல்பாகவே அடையப்பட்ட யதார்த்த வஸ்துவாக விளங்கக் கூடியது. அதை விட்டு, மனோ வாக்குக் காயங்களின் சேஷ்டையால் – தியானத்தால் – முயல்வது, ஆகாயத்தைக் காண உலகம் முழுவதும் அலையும் ஒருவனின் செயலைப் போல நகைப்புக்கு இடமானதேயாகும்.

இவ்வுண்மையைக் கூறி இப்பாடலின் இரண்டாவது வரியால் அருவத் தியான முயற்சியைப் பரிகசித்த பிறகு, மூன்றாவது வரியில், ‘உன்னுரு உனலற உன்னிட முந்நீ ருறு சருக்கரையுரு வென வுரு வோயும்...’ என்று அருவத் தியானத்தின் குறிக்கோளைச் சரியாக அடையும் வழியைக் கூறுகின்றார் ஸ்ரீ பகவான். அதாவது, தியானிக்க முயற்சிக்கும் ஒருவன், தியானிக்கும் நான் யார்? என்ற சரியான வழியில் – தன்மை நாட்டத்தில் – அகமுகப் பட்டானாயின், ‘நான் இன்னார்’ என்னும் தியானிப்பவனே – மனமே – நாசமாகி, மனதற்ற, பரிசுத்த பரம்பொருள் நிலை தாமே விளங்குவது அனுபவப் பட்டிருக்கும். தியானிக்கக் கிளம்பிய மனோவிருத்தி ஓயும் வழி இவ்வாறு உபதேசிக்கப் படுகின்றது. இவ்விதம் ‘நான் இன்னார்’ என்னும் நாமரூபப் போலி நான் விசாரத்தாலொழியவே, பிறகு விளங்கும் மெய்ப்பொருள் ‘நான் நானே’ என்ற வடிவில் அனுபவமாகி விடவே, நிர்க்குணத் தியானத்தால் அடைவதற்கு எதிர்பார்த்த நாமரூபமற்ற மெய்ப்பொருள் ‘தானே’ என்று அனுபவிக்கும் இந்நிலையில், நிர்க்குணத் தியானம் உள்பட எந்தவிதத் தியானமுந்தான் எதற்கு? அதாவது, தன்னைச் சுற்றிலும், தலைக்கு மேலும் எங்குமிருப்பது ஆகாயமே என்றறிந்து விட்டால், பிறகு ஒருவன் அதைப் பிடிக்க உலகமெல்லாம் சுற்றித் திரிந்தலைவது எதற்கு என்றபடி!

இப்பாடலின் மூன்றாவது வரியில்தான் ஜீவர்கள் செய்யவேண்டிய தியான முயற்சியின் சரியான வழி உபதேசிக்கப் படுகிறது. நாமரூபத் தியான முயற்சியால் நாம் கடவுளை நாமரூபமாக மட்டுமே காணமுடியும். அது முடிந்த, உண்மையான கடவுட் காட்சியல்லவாயினும், அக்காட்சி பயனற்றதல்ல. நாமரூபமற்ற கடவுள், சாதகன் ஒருவனுக்கு நாமரூபமற்ற தன்னிலையை அருளும் வரையில் ஓய்ந்திருப்பதில்லை. இறைவனின் நாம ரூபத்திலேயே மிகவுயர்ந்த நாமரூபமான சற்குரு வடிவில் அவர் கடைசியாகத் தன் பக்தனுக்குத் தோன்றி, ‘உனலற உன்னுதல்’ என்னும் ஆத்ம விசாரத்தை – சரியான நிர்க்குணத் தியானத்தை – உபதேசித்து, நிர்க்குண பிரம்மானுபவமான, தனது நாமரூபாதீத நிலையை அவன் பெறுமாறு அருள்கின்றார். அதாவது, அவனது ஜீவ சுபாவத்தையழித்து அவர் தானே விளக்கமுறுகின்றார். இந்நிலையையே இப்பாடலின் நான்காவது வரியில் ஸ்ரீ பகவான், ‘என்னை யான் அறிவுற என் உரு வேறு ஏது? அருணவான் கிரியென விருந்தோய், இருந்தனை’ என்று குறிப்பிடுகின்றார். அதாவது, ‘தியானிக்கக் கிளம்பிய நான் யார்?’ என்று தன்னை விசாரிக்கவே, ‘நான் இன்னார்’ என்னும் தன் அகந்தையுரு வெறும் ஓர் பொய்த் தோற்றமே என்று அறியப்படுவதால், தனக்கென்று ஓர் தனியிருப்பு ஏது மிஞ்சும்? ஆகவே, நானற்றவிடத்து அப் பரம்பொருளாகிய அருணாசலமே ‘தான்’ என்று விளங்குவதையே, வேண்டுமானால், ஒருவன் நிர்க்குணத் தியானம் என்று சொல்லிக் கொள்ளட்டும்.

வேற்றுநினை வுள்ளத்து மேவுமட்டே தன்னினைவாற்

றேற்றுமிறை தன்னினைவு சேர்தலாம் – வேற்று

நினைவழிவா லந்த நினைவுமழி வேமெய்ந்

நினைவா(ம்), நினையா நினைவு.

(குருவாசகக் கோவை 1207)

பொருள்: பிற நினைவுகள் உள்ளத்தில் எழுந்துகொண்டிருக்கும் வரையிலுந்தான் தன் மனத்தால் நினைந்து செய்யுங் கடவுள் தியானமும் நடைபெற முடியும். ஆனால், பரபக்தியாகிய ஆன்ம சமர்ப்பணத்தில் (‘நான்’ என்னும் முதல் நினைவே அற்றபோது) பிற நினைவுகள் யாவுமழிவதால் அவ்விறை நினைவும் அழிவதே பரம்பொருளை நினைப்பற்று நினைக்கும் மெய்ந்நினைவு (சத்தியமான பிரம்மத் தியானம்) ஆகும்.

எந்நினைவுமற்றுச் சும்மாவிருக்கும் இந்நிலையை ‘உனலற வுன்னுதல் – நினைவற நினைத்தல், தியானித்தல்’ என்று மறுபடியும் ஒரு தியானமாகக் கூறுவது ஏன்? இது ஆன்ம விசாரமே என்று முன்பே கண்டோமல்லவா?

துன்றுநினை வொன்றுமறச் சும்மா விருப்பைநினை

வென்றவழக் கென்னை யியம்புகெனின் – என்றும்

மறப்பிலா வுண்மை மயமா முணர்ச்சித்

திறத்தினா லென்றே தெளி.

(குருவாசகக் கோவை 1208)

பொருள்: நிறைந்தெழும் சகல நினைவுகளும் ஒன்றுகூட விடாமல் அழிந்து போனபின் (மேற்கூறியவாறு இருப்பு மாத்திரமாகச்) சும்மாவிருக்கும் நிலையை (பிரம்மத் தியானம் – நிர்க்குணத் தியானம் என்று) ஓர் நினைப்பாகச் சாஸ்திரங்களிற் கூறப்பட்டிருப்பது ஏனென்று கேட்பாயாகில், (இருப்பு மாத்திர) அவ்வுண்மை மயமான ‘இருக்கிறேன்’ என்ற உணர்ச்சி சிறிதும் மறப்பே இல்லாமல் விளங்குந் தன்மையால் அவ்வாறு (ஓர் நினைப்பாக – ஓர் அறிவாக) கூறப்படுகின்றது என்றறிக.

ஸ்ரீ ரமணார்ப்பண மஸ்து.

 

Contents