ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

பிற்பால் (Appendix)
உள்ளது நாற்பது பாடல் 8 விளக்கவுரை (08)

Contents

பிற்பால்
பிற்பால் எட்டு
உள்ளது நாற்பது பாடல் 8 விளக்கவுரை
(பக்கங்கள் 201, 256-ன் அடிக்குறிப்பிற் குறிப்பிடப்பட்டது)

...– ஏன்றதாம்

எப்பெயரிட் டெவ்வுருவி லேத்தினுமார் பேருருவி

லப்பொருளைக் காண்வழிய தாயினுமம் – மெய்ப்பொருளி

னுண்மையிற்ற னுண்மையினை யோர்ந்தொடுங்கி யொன்றுதலே

யுண்மையிற் காண லுணர்.

அன்வயம்: ஆர் எப்பெயர் இட்டு எவ்வுருவில் ஏத்தினும், அது அப்பொருளைப் பேர் உருவில் காண் வழி; ஏன்றது ஆம். ஆயினும், தன் உண்மையினை ஓர்ந்து அம்மெய்ப்பொருளின் உண்மையில் ஒடுங்கி ஒன்றுதலே உண்மையில் காணல் உணர்.

பொழிப்புரை: யாரொருவர் எந்தப் பெயரை இட்டு எந்த உருவத்தில் வழிபட்டாலும் அந்நாமரூப வழிபாடு (நாமரூபமற்ற) அப்பரம்பொருளை அந்தந்த நாமரூபத்திற் காண்பதற்கு ஒருவழியேயாகும். ஏனெனில், அது கூடிய காரியமேயாகையால். ஆயினும் பெயர் வடிவுள்ள ஓர் அகந்தையாகவிருந்து வழிபடுகிற தனது யதார்த்த இயல்பை, ‘நான் யார்?’ என்று விசாரித்து, தன் உண்மையியல்பானது சச்சிதானந்தமே தவிர, இந்த நாமரூபமல்ல என்றுணர்ந்து அதனால் அம்மெய்ப்பொருளின் உண்மையியல்பாகிய சச்சிதானந்தத்தில் அதே இயல்பினனான தானும் நாம ரூபமற்று ஒடுங்கி ஒன்றாகி விடுவதுதான் அப்பரம்பொருளை உண்மையாகவே காண்பது (சத்திய தரிசனம்) ஆகும் என்றறிக.

விளக்கவுரை: மெய்ப்பொருளாகிய பிரம்மம் தனக்கென்று ஒரு (நாம ரூபம்) பெயர் வடிவு அற்றது. சத்து, சித்து, ஆனந்தம் என்னும் மூன்றும் அதன் சத்யாம்சங்கள்; நாமம், ரூபம் இரண்டும் அதன் மித்தியாம்சங்கள். எனவே, ஒருவன் மித்தியாம்சங்களான எந்த நாம ரூபத்தில் அதை வழிபட்டாலும், அந்தந்த நாமரூபமாகவே அப்பரம்பொருளைத் தரிசிக்க முடியும். பெயர் வடிவற்ற மெய்ப்பொருளை ஏதேனும் ஓர் பெயர் வடிவில் காண்பதற்கு மட்டுமே அவ்வழிபாடு ஓர் வழியாயமையும். ஆயினும், பிரம்மத்தின் இம்மித்யாம்ச தரிசனம் அதன் மெய்க் காட்சியாகாது. உண்மையில் அப்பரம்பொருளைக் காணவேண்டுமாயின் அதன் சத்யாம்சத்தையே தரிசிக்க வேண்டும். அதை எப்படிக் காண்பது என்பதற்கு ஸ்ரீ பகவான் இப்பாடலின் பின்னிரு அடிகளில் உபாயங் கூருகிறார்.

ஜீவன் முதலில் தன் உண்மையியல்பு எது, ‘நான் யார்?’ என்று தன்னை விசாரித்தறிய முற்பட வேண்டும். ஜீவனின் இயல்பு என்ன? ‘நான் இன்னார்’ (ஓர் மனித நாம ரூபம்) என்பதே. இதில் ‘நான்’ என்பது சச்சிதானந்தமாகிய சத்யாம்சங்களின் உணர்வு; ‘இன்னார்’ என்பது நாமரூபமாகிய மித்யாம்சங்களின் உணர்வு. ஆத்ம விசாரத்தால் தன் சத்யாம்சத்தை நாமரூபமாகிய உடலினின்றும் பிரித்தறிந்து கொள்வதையே ‘ஓர்ந்து’ என்று குறிப்பிட்டார் ஸ்ரீ பகவான். பிறகு, பிரம்மத்தின் சத்யாம்சமும் தன் உண்மையம்சமும் சச்சிதானந்தமாகிய ஒன்றேயாவதால், ‘நான் உடல்’ என்னும் நாமரூப மித்யாம்ச உபாதியகன்று, தனக்கோர் தனி இருப்பற்று அச்சச்சிதானந்த அம்சத்தில் ஒடுங்கி விடுவதையே ‘ஒடுங்கி’ என்று குறிப்பிட்டார் ஸ்ரீ பகவான். அதனால் தனக்கோர் தனி இருப்பற்று ஒருவன் பிரம்ம மாத்திரமாக ஒன்றாகிவிடும் நிலை சித்திக்கும். இதையே ‘ஒன்றுதலே’ என்று குறிப்பிட்டார் ஸ்ரீ பகவான். இவ்வாறு ஏற்படும் ஐக்கியமே அம்மெய்ப்பொருளை ‘உண்மையிற் காணல்’ என்று ஸ்ரீ பகவான் கூறியருள்கின்றார்.

ஸ்ரீ பகவான் தாம் அருளிய அருணாசல அஷ்டகத்தின் மூன்றாவது பாடலில், ‘நின்னையான் உருவென எண்ணியே நண்ண, நிலமிசை மலையெனும் நிலையினை நீதான் ... உன் உரு உணலற உன்னிட, முந்நீர் உரு சருக்கரை உரு வென உரு ஓயும் ...’ என்று கூறுவதையும் இங்கு நோக்க வேண்டும். அதாவது, ‘அருணாசலா, உன்னை நான் உருவமாக எண்ணி அணுகும்போது, நீ இம்மலை வடிவாக எனக்கு விளங்குகின்றாய். ... உனது அருவ அனுபவம் பெற வேண்டுமாயின், ஒருவன் (தனக்கோ, உனக்கோ) எவ்வித நாமரூப நினைவுகளுக்கும் (நாம ரூபங்கள் வெறும் நினைவுகளேயாதலால்) இடம் கொடாமல் தன்னை விசாரிக்கும்போது, ‘நான்’ என்று கிளம்பி வழிபாடு செய்ய முனையும் அகந்தை, சமுத்திரத்தில் இடப்பட்ட சர்க்கரைப் பொம்மையின் உருவத்தைப் போல, உன்னிடம் நாமரூபமற்று ஏகமாய்க் கரைந்து ஓய்ந்து விடும்...’ என்று கூறி, நாமரூப வழிபாட்டால் இறைவனின் நாமரூப தரிசனமே பெற முடியும் என்றும், நாமரூபமற்ற மெய்க்காட்சிக்கு அது வழியல்லவென்றும், வழிபடக் கிளம்பும் தன் அகந்தையுணர்வை விசாரத்தால் ஆன்மாவாம் மெய்ப்பொருளிற் கரைப்பதொன்றே கடவுளை உண்மையிற் காணல் என்றும் ஸ்ரீ பகவான் விளக்கியருள்வது காண்க142 .

மேலும், ஒருவன் கடவுளை நாம ரூபத்தில் வழிபடுவானாயின், அது மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கருவிகளால் மட்டுமே நடக்கக்கூடிய காரியமாகும். மனோ வாக்குக் காயங்களாற் செய்யப்படுவன எதுவாகினும் அது ஒரு கர்மமே. ஆனால், கடவுளைப் (ஆன்மாவைப்) பற்றிய ஞானமோ, ஆன்ம விசாரத்தைத் தவிர ஆயிரங்கோடி கர்மங்களாலும் அடைய முடியாத ஒன்றேயாகும். ஸ்ரீ பகவான் விவேக சூடாமணியின் பதினோராவது சுலோகத்தின் மொழி பெயர்ப்பாக, ‘கர்மங்கள் சித்த சுத்திக்காக ஏற்பட்டனவேயன்றி வஸ்துவை (கடவுளை) அறிதற்கன்று; வஸ்து ஞானம் விசாரத்தால் வருமேயன்றிக் கோடி கர்மங்களாலும் சித்திக்காது’ என்று கூறுகின்றார். கர்மங்கள் மோக்ஷ சாதனமன்று! ஒருவன் கடவுளின் ஏதாவதொரு நாம ரூபத்தை பக்தியுடன் உபாசிப்பானாயின், அது நல்லதொரு நிஷ்காமிய கர்மமாகி, அவனுக்குப் போதிய சித்த சுத்தியை உண்டாக்கித் தந்து, அதனால் ஆன்ம விசாரமே முக்திக்கு நேர்மார்க்கம் என்றறியும் விவேகத்தையும் உண்டாக்கி வைக்கும்.

கர்த்தனுக் காக்கு(ம்)நிட் காமிய கன்மங்

கருத்தைத் திருத்தியஃ துந்தீபற

கதிவழி காண்பிக்கு முந்தீபற.

(உபதேச உந்தியார் 3)

‘ஒருவன் எந்தவொரு இதர மார்க்கத்தைப் பின்பற்றினாலும் சரி. அது முடிவில் ஆன்ம ஞானமடைவதற்கு ஆன்ம விசாரத்திற்கே இட்டுச்சென்று சேர்க்கும்’ என்று ஸ்ரீ பகவான் பலமுறை கூறுவதுண்டு. ஆகையால் நாம ரூபத்திற் கடவுளை உபாசிப்பது, நேரடியாக நாமரூபமற்ற பிரம்மானுபவத்தில் ஒருவனை கொண்டுபோய் விட்டு விடாது. அது சித்த சுத்தியை உண்டாக்கித் தந்து, முடிவில் ஆன்ம விசாரத்திற்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்.

நம்மை நாம் நாமரூபமற்ற ஆன்ம வஸ்துவாகக் கண்டறிந்தாலொழிய, கடவுளை நாமரூபமற்றவராகக் காண முடியாது. ‘உருவந் தானாயின் உலகு பரம் அற்றாம்...’ என்பது உள்ளது நாற்பதின் நான்காம் பாடலாகும். அப்படி நம்மை நாம் நாமரூபமற்ற வஸ்துவாக உணர வேண்டுமாயின், ஒரு நாமரூப அகந்தை வியக்தியாக நாம் எழுவது தடுக்கப்பட வேண்டும். அகந்தை எழுச்சி தடுக்கப்பட வேண்டுமாயின், அது எங்கிருந்து உற்பத்தியோ அந்த ‘நான் இருக்கிறேன்’ என்ற சத்-சித் உணர்வான ஆன்மாவை நாடுவது ஒன்றே அதற்கு வழியாகும்.

...நானுதிக்குந் தானமதை நாடாமல் – நானுதியாத்

தன்னிழப்பைச் சார்வதெவன்?....

(உள்ளது நாற்பது 27)

ஆகையால் நாமரூபமற்ற வஸ்துவை உள்ளபடி தரிசிப்பதற்கு ஆன்ம விசாரம் ஒன்றே தக்க வழியாகும்.

ஆனால் இங்கு சிலர், “‘பேர் உருவில்” என்ற சொற்றொடரிலுள்ள “இல்” என்ற பதத்திற்கு “இல்லாத” என்ற கருத்தையே ஸ்ரீ பகவான் இதன் தெலுங்கு மொழிபெயர்ப்பில் “நாம ரூபா ரஹித” என்றும், மலையாள மொழிபெயர்ப்பில் “நாம ரூபாதீத” என்றும் கொடுத்திருக்கின்றனரே. ஆகையால், “பரம்பொருளுக்கு எந்தவொரு நாமரூபம் கொடுத்து வழிபட்டாலும், அவ்வழிபாடு அப்பரம்பொருளை நாமரூபமற்ற நிலையிற் காண்பதற்கு அது வழி” என்று பொருளாகாதா?’ என்று கேட்பதுண்டு.

‘பேர் உருவில்’ என்ற சொற்றொடரிலுள்ள ‘இல்’ என்ற பதம், ‘பேர் உரு இல்லாத’ என்றவாறு ஓர் பெயரெச்சம் (adjective) ஆகவும், ‘பேர் உருவிலே’ என்றவாறு ஏழாம் வேற்றுமையின் ஓர் உருபாகவும் இருவிதமாகவும் தமிழிற் பொருள் தரும். தெலுங்கிலும் மலையாளத்திலும் ‘நாமரூபமில்லாத அப்பரம்பொருள்’ என்றவாறு ஓர் பெயரெச்சமாகவே ஸ்ரீ பகவான் உபயோகித்திருக்கின்றார். அதில் எந்த ரமண பக்தர்களுக்கும் யாதொரு மறுப்புமில்லை.

அப்பொருள் ‘நாமரூபமில்லாதது – நாமரூபாதீதம் அல்லது நாமரூப ரஹிதம்’ என்று மலையாளத்திலும் தெலுங்கிலும் கூறியதால், நாம ரூபமில்லாமலேயே அதைக் காண்பது என்று அர்த்தம் வராது. அதாவது, அது நாமரூபம் இல்லாததாயினும் நாமரூபத்திற் காணக் கூடியதே. இதை விளக்கவே ஸ்ரீ பகவான் இப்பாடலைக் கலிவெண்பா வடிவாக்கும் போது ‘ஏன்றதாம்’ என்ற ஒரு தனிச் சொல்லையும் அமைத்தனர் என்றறிக. ஆகவே, ‘பேர் உருவிலே’ என்று பொருள் கொள்வதிலும், ‘பேர் உருவில்லாத – நாமரூபாதீத – நாமரூப ரஹித’ என்று பொருள் கொள்வதிலும், முரண் ஒன்றுமில்லை. இதனால்தான் ஸ்ரீ சிவப்பிரகாசம் பிள்ளையவர்கள் இவ்விரு விதப் பொருளையும் தமது பொழிப்புரையில் பொருத்தியிருக்கிறார்.

நாமரூப வழிபாட்டில் தமக்கிருந்து வரும் உற்சாக மிகுதியினால் சிலர், “‘பேர் உருவில்” என்பதற்கு “பேர் உரு இல்லாமல்” என்று பொருள் கொள்ளக் கூடாதா?’ என்று கேட்பதுண்டு. ஆம், தமிழிலக்கணப்படி இச்சொற்றொடருக்குக் கீழ்க்கண்ட மூன்று விதமாகப் பொருள் கொள்ளலாம். பெயரெச்சமாகப் பொருள் கொள்ளும்போது, (1) ‘பேர் உரு இல்லாத பரம்பொருள்’ என்று அர்த்தம்; வினையெச்சமாக பொருள் கொள்ளும்போது, (2) ‘பேர் உருவிலே காண்பது’ என்றும், (3) ‘பேர் உரு இல்லாமற் காண்பது’ என்றும் இருவிதமாக அர்த்தம் கொள்ள முடியும்.

முதல் வகையில் ‘இல்’ என்ற பதம் அம்மெய்ப்பொருளின் தன்மையை மட்டும் காட்டும் பெயரெச்சமாக வருகிறது. இரண்டாவது, மூன்றாவது வகையில் அதைக் காணும் வகைகள் காட்டப்படுகின்றன. அப்பரம்பொருளின் இயல்பைக் கூறும் முதல் வகை யாவர்க்கும் உடன்பாடே. ஏனெனில், அப்பொருள் நாமரூபாதீதமே – நாமரூப ரஹிதமே. ‘இல்’ என்ற பதம் அப்பொருளைக் காணும் வகையைக் காட்ட உபயோகிக்கப் படும்போதுதான் கருத்து வேறுபாடு எழுகிறது. அதாவது பேர் உரு இல்லாத அப்பொருளை பேர் உருவிலே காண்பதா? அல்லது பேர் உரு இல்லாத அப்பொருளை பேர் உரு இல்லாத வண்ணம் காண்பதா? பிற மொழிகளில் இது திட்டவட்டமாகக் கொடுக்கப்படவில்லை. இங்குதான் ஸ்ரீ பகவானது கருத்து என்ன என்று ஸ்ரீ பகவானது முக்கிய உபதேச நெறி வழி ஆராய்ந்து நாம் காண வேண்டும்.

மேலே இரண்டாவதாகக் கொடுக்கப்பட்ட ‘பேர் உருவிலே காண்பது’ என்பதையே பகவானது சரியான கருத்து என்று நாம் இதுகாறும் கூறி வந்திருக்கிறோம். நாமரூப வழிபாடு நாமரூபமில்லாமல் மெய்ப்பொருளைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பது பகவானின் கருத்தாயின், பிறகு வரும் ஈற்றிரண்டடிகளில் ‘ஆயினும்’ என்ற சொல்லை உபயோகித்து, ‘உண்மையிற் காணல் என்பது இன்னதுதான்’ என்று, தன்னையறியும் விசார சாதனையை ஸ்ரீ பகவான் கூறவேண்டிய அவசியமேயில்லை அல்லவா? ஆனால் பின்னிரண்டடிகளால் ஸ்ரீ பகவான் ‘ஓர்ந்து ஒடுங்கி ஒன்றுதலே உண்மையிற் காணல்’ என்று திட்டவட்டமாக, ஊர்ஜிதப்படுத்தி விளக்கியிருப்பதால், ‘இல்’ என்ற பதத்திற்கு ‘பேர் உருவிலே’ என்றவாறு (2-ஆவதாக) மேலே காட்டிய பொருளைக் கொள்வதுதான் ஸ்ரீ பகவானது கருத்துக்கு ஏற்புடையது என்று நாம் அறிய வேண்டும். ஆகவே, நாமரூப வழிபாடு நேரடியாக நாமரூபமில்லாமல் பரம்பொருளைக் காட்டித் தராது என்பதே ஸ்ரீ பகவானது கருத்து என்றும் நாம் அறிய வேண்டும்.

பேர் உருவில் வழிபாடு செய்வதால், பேர் உரு இல்லாத பிரம்மநிலையை அடைய முடியுமா என்பதே சில ரமண பக்தர்களின் ஐயம். சுற்று வழியால் அது ஒருவாறு முடியும். ஆனால், இப்பாடலின் பின்னிரு அடிகளால் ஸ்ரீ பகவான் கூறும் நேர் வழியல்ல அது. அதைக் கீழே காண்போம்.

‘நாமரூப வழிபாடு செய்துவந்த சில அன்பர்களிடம் ஸ்ரீ பகவான், “அதையே செய்துவா. அது முடிவில் பரம்பொருளின் சாக்ஷாத்காரத்தைக் கூட்டுவிக்கும்” என்று கூறியதைக் கேட்டிருக்கிறோமே’ என்று சில ரமண பக்தர்கள் கேட்பதுண்டு. ஆம்; ஆனால் அது சுற்று வழி! உண்மையான விஷய வைராக்யத்துடன் நாமரூப வழிபாட்டிலே இதற்குமுன் முயன்று வந்துகொண்டிருக்கும் நல்லோர் சிலருக்கு, அவர்கள் மேன்மேலும் ஊக்கம் தளராமலும், திசை மாறாமலும் முன்னேற வேண்டி ஸ்ரீ பகவான் அவ்வாறு கூறுவதுண்டு. ஆனால், அதன் உண்மை என்னவெனின், இந்நூலின் அனுபந்தத்திலுள்ள ‘பக்தி’ என்னும் இரண்டாம் அத்தியாயத்தில் இஷ்ட தெய்வ, நிஷ்காமிய, ஏக பக்தி பூண்டு மூன்றாம் வகுப்பின் (b) பிரிவிலிருக்கும் உத்தம பக்குவியான பக்தனுக்கு அவனது இஷ்ட தெய்வமே பிறகு மானிடவுருத் தாங்கி சற்குருவாக அவதரித்து வந்து (சிலருக்கு அத்தெய்வ வடிவமே குரு வடிவமாகவும் தோன்றி) முடிவில் தன்னை அறியும் ஞான விசார மார்க்கத்தைப் போதித்து, அதன் மூலம் நாமரூபமற்ற பரமான்மக் காட்சியைப் பெற உதவுகின்றது என்று விளக்கினோமல்லவா? இவ்வாறே – நாமதேவருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் அவர்களது நாமரூப வழிபாட்டின் உச்ச நிலைக்குப் பிறகு அவர்களது இஷ்ட தெய்வமே அவர்களைச் சற்குருவிடம் கூட்டுவித்து ஆன்ம சாட்சாத்காரம் பெறச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது போலவே – நடந்தேறும் என்பதே அதன் இரகசியமாகும்.

எவ்வாறேனும், முடிவில் சாதகன் ஒருவனிடம் (தனக்கோ, தான் வழிபடும் இறைவனுக்கோ உள்ள) மித்யாம்ச நாமரூபமும், அதன்மேல் தனக்கிருந்த சத்திய புத்தியும் நழுவி மறைய வேண்டியதே அவசியம் என்பது விளங்குகின்றது. எனவே, விசாரத்தால் தன்னையறிவதே நாமரூபமற்ற இறைவனின் மெய்க்காட்சி என்றறிக.

142 ஸ்ரீ அருணாசல அஷ்டகத்தின் மூன்றாவது பாடலின் விரிவான விளக்கத்தையும் அடுத்த பிற்பாலிற் காண்க.

 

Contents