ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

பிற்பால் (Appendix)
ஆசாரம் (07)

Contents

பிற்பால்
பிற்பால் ஏழு
ஆசாரம்

ஸ்ரீ பகவானால் ஒருமுறை கூறப்பட்டதும், இந்நூலின் 220-ஆம் பக்கத்திற் குறிப்பிடப்பட்டதுமான கீழ்வரும் கதையின் சாரத்தை ஸ்ரீ முருகனார் ஓர் பாடலாக்கிக் குருவாசகக் கோவை பாடல் எண் 681-ஆகச் சேர்த்துள்ளார்.

ஒரு காலத்தில் ஓர் சீடன் ஓர் குருவையணுகி, ‘நான் கடவுளையடையுமாறு எனக்கு உபதேசம் செய்யுங்கள்’ என்று வேண்டி நின்றான். ‘கடவுள் உன்னுள்ளிருக்கிறார்; அவரை நீ காண விரும்புவாயாயின் ஆசாரங்களைக் கடைபிடித்து, எப்போதும் பரிசுத்தமாயிரு’ என்று உபதேசித்தனுப்பினார் குரு! சீடன் ஆசார ஒழுக்கங்கள் யாவை என்றறிய விரும்பிப் பல சாஸ்திரங்களையும் ஆராய்ந்து, தான் அறிந்ததை அனுஷ்டிக்க ஆரம்பித்தான். நீராடி உடல் தூய்மை பெறுவதிலும், உடைகளைத் துவைப்பதிலும், உலர்த்துவதிலும், வீட்டைப் பெருக்கிக் கழுவித் துப்புரவாக்குவதிலும், பிறரைத் தீண்டாது விலகி நிற்பதிலும், உணவைத் தயாரித்தல், உண்ணல், நீர் அருந்துதல் ஆகிய முறைகளிலும் ஆசாரத்தைக் கடைபிடிப்பதில் மிகுந்த உற்சாகமும் விருப்பமும் உடையவனானான்.

இவ்வளவு செய்தும்கூட விரைவில் அவனது உடலும் உடையும் மீண்டும் அழுக்காகி விடுவதை உணர்ந்தான். தினமும் இரு முறை நீராடி உடையையும் மாற்றிக்கொள்ள ஆரம்பித்தான். நாளடைவில் இருவேளை நீராடல் அறு வேளையாயுயர்ந்தது. உடை மாற்றுதலும் அவ்வாறேயாயிற்று. ஆகார விஷயத்திலும் ஆசாரம் பாய்ந்தது. ஓரிரண்டாண்டுகள் இவ்வாறு கடுமையான ஆசாரக் கடைப்பிடிப்பிற் கழிந்தபின், தன் குருநாதனைப் போய்ச் சந்தித்தான் சீடன்! பார்த்தார் குரு; சீடனின் உடல், உடையாதி, புறத் தூய்மைப் பொலிவைக் கண்டு தன்னுள் சிறிது மகிழ்வுற்றாராயினும் அதை வெளியில் காட்டாதவராய், ‘போ, போ அப்பால்; அசுத்தமாயிருக்கிறாய்! சுத்தம் போதாது. ஆசாரத்தை நன்றாய்க் கடைப்பிடித்து சுத்தமாயிரு; அசுத்தமானவற்றைத் தீண்டாதே!’ என்று கூறி அனுப்பிவிட்டார்!

விசனத்தோடு வீடு திரும்பினான் சீடன். மிகுந்த அக்கறையோடு ஆசார நெறிகளை அலசி ஆராய்ந்தான். அளவுக்கு மீறிய ஆசார சீலனாக மாறினான். தன் ஆடையிலோ ஆக்கையிலோ படும் தினையளவு அழுக்கும் பனையளவு பாபமாக அவன் கண்ணையும் மனத்தையும் உறுத்த ஆரம்பித்தது. தன் சிரத்தின் உரோமத்தைக் கரத்தால் தொட்டுவிட்டாலும், கால் விரல்களை கை விரல் தொட்டுவிட்டாலும், பெருந்தீட்டடைந்தவன் போல சௌசப் பிராயச்சித்தங்கள் தவறாமற் செய்வானாயினான்! அவனுக்கு ஆகாரம் தயாரிப்பதில் அநேகக் கட்டுப்பாடுகள் விதித்தான். எடுக்கும் நீரிலும் குடிக்கும் நீரிலும் ஏராளமான பத்திய விதிகள் உண்டாக்கினான். அந்த விதி-நிஷேதங்களிற் சிறிது தவறினாலும் பசி தாகத்தையும் பொறுத்துக்கொண்டு பட்டினி கிடந்தாலுங் கிடப்பானே தவிர, ஆசார விதிகள் அணுவும் பிறழ அனுமதிக்க மாட்டன். சுருங்கச் சொல்லின் அவனது ஆசாரக் கடுமையின்முன் அஞ்சி அவனது மனைவி, மக்கள், உற்றார், நண்பர்களுங்கூட விலகி நிற்கும் அளவில் வீட்டிலும் வெளியிலும் அவன் வாழ்வு மாறிவிட்டது!

ஓராண்டு ஓடி மறைந்தது. இவ்வாசார சீடன் ஆசானிடம் வந்தான். தான் கருதிய அளவு ஆசாரங்களை முழுமையாகக் கடைபிடிக்க முடியவில்லையே என்ற கவலையோடு கண்ணீர் வடிப்பவனாய், ‘என்ன செய்தேன் சற்குரு நாதா! எத்தனை முறை நான் சுத்தி செய்தாலும் என் உடலும் உடையும் அழுக்காகிக்கொண்டே இருக்கின்றனவே! பூரண ஆசாரம் பொருந்த முடியாதவனாய் வருந்தி நிற்கிறேன்’ என்று பிரலாபித்தான். சற்குரு புன்சிரிப்போடு, ‘நீ என்ன மூடனா இருக்கிறாயே! மானிட தேகம் மல மாமிசப் பிண்டமேயல்லவா? அதை ஏன் நீ தீண்டுகிறாய்? தீண்டாமையைத் திடமாகக் கடைப்பிடி!’ என்றார். அந்தோ, பாவம்! அச்சீடன் திடுக்கிட்டுப் போனான். குருவின் வாக்கியம் புரியவே இல்லை. ‘என் உடம்பை நான் தீண்டக்கூடாதா! எனின், நான் அதை எப்படி நிறைவேற்றுவது?’ என்று தடுமாற்றக் குரலில் வாய் குளறினான் சீடன்! ‘என்ன இது? உன் பேச்சு விந்தையாயிருக்கிறதே! இந்த மல மாமிச மூட்டையாகிய உடம்புதான் நீயா? நீ கொள்ளும் “நான்” என்னும் உணர்வு, பரிசுத்த அறிவுமயமல்லவா? அதுவன்றோ நீ? “நான் இவ்வுடம்பு” என்று நினைப்பதே நீ இவ்வுடலைத் தீண்டுவதாகும். பிணமாம் உடலை “நான்” என்று அபிமானிப்பது பிணத்தைத் தீண்டிய பெருந்தீட்டாகும். ஆகையால், தேகத்தை நானென்று (கருதாத) தீண்டாத, தீண்டாமைத் தத்துவத்தைச் சிறிதும் தவறாது கடைப்பிடித்து, என்றும் பரிசுத்தனாயிரு!’ என்று சத்தியாசார போதனை செய்தார் சற்குரு.

சற்குருவின் அருட்சக்தி வாய்ந்த அவ்வசனங்கள் சீடனின் உள்ளத்தைத் தட்டியெழுப்பித் தத்துவ விசாரத்தில் தலைப்பட வைத்தன. ‘எனின், நான் எப்படி இருக்கிறேன்? எதுவாயிருக்கிறேன்? இவ்வுடலல்லாத உண்மை நான் யார்?’ என்றவாறு சீடன் சிந்திக்கலானான். இத்தனைக் காலமாகப் பூரணத் தூய்மை நிலை140யின் மேல் பொங்கிப் பாய்ந்திருந்த விருப்பத்தால் பக்குவப்பட்டிருந்த இச்சீடனது உள்ளமாகிய வெள்ளம் சற்குருவின் இவ்வருள் வசனங்களால் உந்தப்பட்டு, ஆன்ம ஞான சாகரத்தை இவனடையும்படி திசை திருப்பி விடப்படவே, பரிசுத்த ஆன்ம உணர்வு உதிக்கப் பெற்றவனாகி அவன் வீடு திரும்பினான்.

தானல்லாதவற்றின்மேல் அவனுக்கு இயல்பாகவே நாட்டம் நீங்கியதால், உடம்பின் மேல் உதாசீனம் முற்றியது. இதுகாறும் புரந்த ஆசாரங்கள் மறந்து மறைந்தன. நீராடலும், ஆடை மாற்றுதலும், ஏன், மல ஜல விஸர்ஜன சௌசங்களுங்கூட மறக்கப்பட்டன! இவ்வாறு சில மாதங்கள் சென்றன. அவனைக் கண்ட உறவினரும் நண்பர்களும், இதென்ன அலங்கோலம்! அசுத்த பாண்டமாகிவிட்டானே! இவனது ஆசார அனுஷ்டானங்களெல்லாம் எங்கே போயின? தூ, தூ, அழுக்குப் பிண்டம்! அவமானம்! என்று கூறி இகழ்ந்து, அகன்றனர். ஆயினும் அவனிடம் அன்புகொண்டிருந்த வேறு சிலர் அவனையணுகி, ‘நீ சில மாதங்களுக்கு முன் மகா ஆசார சீலனாய், பரிசுத்தத்தின் பரிபூரண சின்னமாகவே காணப்பட்டாயே! அதையெல்லாம் ஏன் அனுஷ்டிக்காமல் விட்டு விட்டாய்?’ என்று பரிவோடு விசாரித்தனர். அதற்கு அம்மனிதன் புன்னகை பூத்தவனாய் அமைதியோடு, ‘நான் இப்போது சுத்தமாகத் தானே இருக்கிறேன்!’ என்று விடையிறுத்தான். இதைக் கேட்கப் பொறாத அந்நண்பர்கள், ‘இவனுக்கு ஆசாரங்களைப் போதித்த குருவினிடம் கொண்டுபோனாலன்றி இவன் வழிக்கு வரான்’ என்று முடிவு செய்து, அவனை அவனது குருவினிடம் அழைத்து வந்து நிறுத்தி, அவனது அனாசார வாழ்வைக் குறித்துத் தங்கள் மனக் கவலையைக் கூறி முறையிட்டனர். சீடனின் நிலையைக் கண்ட சற்குரு ‘இதுவே சத்திய ஆசாரம்; சதாசாரம்! பரமோத்தமமான பிரம்மாசாரம்! புறத்தே ஆசாரம் பொருந்த வாழ்ந்ததின் பூரணப் பயனாய் அகத்தே விளைந்த ஆன்மாசாரம்! அவனை நீர் தீண்டி அசுத்தமாக்காதீர்! அகன்று நில்மின்!! பரிசுத்தமான பரம வஸ்து இவனே!!!’ என்றனர்.

உறுத்த வுறுத்தமல வூனுடற்குத் தூய்மை

மறித்துமறித் தும்மலமே வாய்தல் – குறித்து

வெறுத்துடல வேட்கையற வீடற்கே நூல்வற்

புறுத்துவது தூய்மை யுடற்கு.

(குருவாசகக் கோவை 680)

பொருள்: மலமயமான மாமிச மானிட சரீரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு மேன்மேலும் முயல முயல, அது (நவத் துவாரங்களின் வழியே) மீண்டும் மீண்டும் அசுத்தமலம் பெருக்கித் துர்நாற்றமே மிகுவதை உணர்ந்து, வெறுப்படைந்து, உடலின்மேல் (நான், எனது என்றெழுந்துள்ள) தேகாபிமான வடிவிலுள்ள ஆசையை அடியோடு விடுவதற்காகவே சாஸ்திரங்கள் சரீரத்திற்குத் தூய்மை தரும் ஆசார விதிகளை வற்புறுத்தியுள்ளன.

பேசாத மோனப் பெரும்பதப்பேற் றாசையுமே

ஆசார மாட்சிக் கயலென்றால் – தேசிலா

மாசா ருடம்போடு மற்றவற்றின் மேலாசை

ஆசார மாமோ வறை!

(குருவாசகக் கோவை 376)

பொருள்: 141உரைகடந்த மோனமாம் பிரம்ம நிலையை அடைய வேண்டும் என்னும் ஆசைகூட சதாசார மாண்பிற்கு(ஞானசாரச் சிறப்பிற்கு)ப் புறம்பானதுதான் என்று (ஞானிகள்) கூறுவர் என்றால், புனிதமற்ற இழிந்த இவ்வுடல் மேலும், உடற் சம்பந்தமுற்ற பிற பொருள்கள் மேலும் ஆசை உடையவர்களாய் இருப்போரை எவ்வாறு ஆசாரமுடையவர்களென்று கூறுவது? (கூற முடியாது என்பதாம்).

140 ஆன்மாவே பூரணத் தூய்மை நிலையாவதாலும், அவ்விருப்பம் சிறந்த பக்தியாகி இச்சீடனிடம் செயல்பட்டது எனக் காண்க.

141 இப்பாடலின் விளக்கவுரையை இந்நூலாசிரியர் இயற்றிய ‘குருவாசகக் கோவை – உரை’ என்னும் நூலிற் காண்க.

 

Contents