ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

பிற்பால் (Appendix)
உள்ளது நாற்பது பாடல் 9, 10, 11, 12 விளக்கவுரை (05)

Contents

பிற்பால்
பிற்பால் ஐந்து
உள்ளது நாற்பது பாடல் 9, 10, 11, 12 விளக்கவுரை
(பக்கம் 169-ன் அடிக் குறிப்பில் ‘இரட்டை முப்புடிகளின் ஆதாரம்
அகந்தையே’ என்று கூறப்பட்டதின் விளக்கம்)
... –விண்மை

இரட்டைகண் முப்புடிக ளென்றுமொன்று பற்றி

யிருப்பவா மவ்வொன்றே தென்று – கருத்தினுட்

கண்டாற் கழலுமவை கண்டவ ரேயுண்மை

கண்டார் கலங்காரே காணிருள் போல் – மண்டும்

அறியாமை விட்டறிவின் றாமறிவு விட்டவ்

வறியாமை யின்றாகு மந்த – வறிவு

மறியா மையுமார்க்கென் றம்முதலாந் தன்னை

யறியு மறிவே யறிவாம் – அறிப

அறிவுறுந் தன்னை யறியா தயலை

யறிவ தறியாமை யன்றி – யறிவோ

வறிவயற் காதாரத் தன்னை யறிய

வறிவறி யாமை யறுமே – அறவே

அறிவறி யாமையு மற்றதறி வாமே

யறியும துண்மையறி வாகா – தறிதற்

கறிவித்தற் கன்னியமின் றாயவிர்வ தாற்றா

னறிவாகும் பாழன் றறிவாய் ...

(உள்ளது நாற்பது 9, 10, 11,12)

உள்ளது நாற்பது 9-ஆவது பாடலில் ‘இரட்டை-முப்புடிகள் என்றும் ஒன்று பற்றி இருப்பவாம்’ என்ற வாக்கியத்தில் உள்ள ‘ஒன்று’ என்ற பதம், ஆன்மாவையே குறிப்பதாகத் தவறாகக் கருதப்பட்டு பலராலும் உரை செய்யப்பட்டுள்ளது. உள்ளது நாற்பதின் 10-ஆவது பாடலிலும் ‘அறிவும் அறியாமையும் ஆர்க்கு?’ என்று அம்முதலாம் ‘தன்னை’ என்ற சொல்லும் ஆன்மாவையே குறிப்பதாகத் தவறாகக் கொள்வதால், ‘ஆன்மாவுக்கே அறிவும் அறியாமையும்’ என்றே பலர் கருதுகின்றனர். இதனால் ஸ்ரீ பகவானது உபதேசங்களை அறிய விரும்பி உள்ளது நாற்பதை வாசிக்கும் சாதகர்களின் மனத்தில், ‘ஆன்மாவுக்கு அறிவும் அறியாமையும் உண்டாகின்றதா?’ என்ற ஐயமும், அதனால் பலவித குழப்பங்களும் தோன்ற இடம் உண்டாகிவிட்டது.

உள்ளது நாற்பதின் 11-ஆவது பாடலில் ஸ்ரீ பகவான், ‘அறிவு அயற்கு ஆதாரத் தன்னை...’ என்று குறித்தவிடத்திலும், ‘அறிவுக்கும் அறியாமைக்கும் ஆன்மாவே ஆதாரம்’ என்று சிலர் உரை செய்கின்றனர். ஆனால் அதே பாடலில், ‘அறிவுறும் தன்னை’ என்று கூறும்போது ‘தன்னை’ என்ற சொல்லால் ஸ்ரீ பகவான் எதைக் குறிப்பிடுகின்றார் என்று சற்று சிந்திக்க வேண்டும். ஆன்மாவோ ஒன்றையும் எதிரிட்டறியாத பூரணமாகையால், ‘அறிவுறுந் தான்’ என்றது அகந்தைத் தன்னையே என்பது வெளிப்படை. மேலும், உள்ளது நாற்பதின் 12-ஆவது பாடலிலும் ஸ்ரீ பகவான் ‘அறியுமது உண்மை யறிவு ஆகாது’ என்று மீண்டும் அகந்தையறிவையே ‘அறியுமது’ என்று குறிப்பிடுவதை நாம் உணர வேண்டும். ஆகவே உள்ளது நாற்பதின் 9, 10, 11 ஆகிய மூன்று பாடல்களிலும் ‘அறியும் ஒன்று’ அல்லது ‘அறியும் தன்னை’ என்று ஸ்ரீ பகவான் குறித்தது அகந்தையையே என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 12-ஆவது பாடலில் ஸ்ரீ பகவான் ‘ஆன்மா அறிவறியாமையும் அற்றது’ என்றும், ஒன்றை அறியும் அகந்தையறிவு உண்மையறிவு ஆகாது’ என்றும், ‘ஒன்றை அறிதற்கோ அறிவித்தற்கோ ஆன்மாவுக்கு அன்னியமாய் யாதொன்றும் இல்லாததால், அந்தத் தானே மெய்யறிவு ஆகும்; அது பாழல்ல’ என்றும் நன்கு விளக்கியிருப்பதைக் கொண்டு, முன் மூன்று பாடல்களிலும் ‘தன்னை ஒன்றை’ என்று குறிப்பிட்டதெல்லாம் அகந்தையையே என்று வாசகர்கள் கண்டுகொள்ள வேண்டும்.138 ‘யார்’ என்னும் அன்பர் எழுதிய உள்ளது நாற்பதின் தமிழ் விரிவுரை நூலில் இப்பாடல்கள் நான்கிற்கும், பகவானிடமே நேரில் கேட்டறிந்து சரியான பொருள் தந்து விளக்கப்பட்டிருந்துங்கூட, ஸ்ரீ ரமணாசிரமத்திலிருந்து வெளியான இச்சீரிய விரிவுரை நூலையும் கவனிக்காமல், இதர எழுத்தாளர்கள் பலர் தவறான விளக்கம் எழுதியுள்ளது வருந்தத் தக்கதே!

ஒன்றை அறிவதோ அறியாமலிருப்பதோ ஆன்மாவின் இயல்பல்ல. ஆன்மா எதையும் அறிவதுமில்லை; மறப்பதுமில்லை. அது அறிவறியாமைக்கு அப்பாற்பட்டது. அறிவதும் அறியாதிருப்பதும் மன அறிவாகிய அகந்தையின் இயல்பே. ஒன்றை அறியுமது உண்மையறிவு ஆகாது என்ற இலக்கணத்தால் ‘இருக்கிறேன்’ என்பது மட்டுமே உண்மையறிவு ஆகுமே தவிர, ‘அறிகிறேன்’ என்பது அறிவல்ல. ‘தானா யிருத்தலே தன்னை யறிதலாம்’ என்று உபதேச உந்தியார் 26-ஆவது பாடலில் ஸ்ரீ பகவான் ‘ஆன்மா தன்னை அறிவது என்பது ஓர் சுட்டறிவல்ல; தன் இருப்பேதான் தன்னை அறிதலுமாகும்’ என்றும், உபதேச உந்தியார் 23-ஆவது பாடலில் ‘உள்ளதே உணர்வு மாகும்’ என்றும் கூறுவது காண்க. இந்தத் ‘தானா இருத்தல்’ என்பது ‘இருக்கிறேன்’ என்னும் சுத்த வெற்றுணர்வே. எனவே, அறிதலும் அறியாமையும் அகந்தையின் இயல்பே என்று நாம் அறிய வேண்டும். ஏனெனில், ஆன்ம நிலையில் தனக்கு அன்னியப் பொருள் யாதொன்றுமே இல்லை. ‘ஆன்மா மற்றவற்றை அறியாதது மட்டுமல்ல; அது தன்னையும் “நான் இது”வென்று அறியாததேயாகும்!’ என்று ஸ்ரீ பகவான் ஒருமுறை கூறியருளிய மிக ஆழ்ந்த, முக்கியமான, இரகசிய உபதேசத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது! இக்கருத்தை ஸ்ரீ முருகனார், ‘மெய்த்தவ விளக்கம்’என்ற நூலின் 831-ஆவது பாடலாக,

தன்னியலோ வன்றிமற் றன்னியமோ தான்றேரா

அன்னவறி வேமெய் யகம்.

என்று யாத்துப் பிற்காலம் வரும் ரமண பக்தர்களுக்காகப் பாதுகாத்து வைத்துள்ளார்!

அகந்தையறிவு தொழிற்படும்போது மட்டுமே அதை ஆதாரமாகக் கொண்டு இரட்டை முப்புடிகளாகிய பேதங்கள் தோன்றி விளங்க முடியும்.

...–கருவாம்

அகந்தையுண் டாயி னனைத்துமுண் டாகு

c மகந்தையின் றேலின் றனைத்தும் ...

(உள்ளது நாற்பது 26)

தூக்கத்தில் அகந்தை ஒடுங்கும்போது, இப்பேதங்களாகிய பிரபஞ்சத் தோற்றமும் அற்றுப்போவது இதை நிரூபிக்கின்றது. இருள் கலந்து மங்கியுள்ள அந்தி ஒளியில் மட்டுமே ஓர் கயிறு பாம்பாகத் தோன்ற முடியும். சூரிய ஒளி நன்றாகப் பிரகாசிக்கும் பட்டப் பகலில், அக்கயிறு கயிறாகவே நன்கு அறியப்படுவதால், கற்பித சர்ப்பம் மறைந்தொழிகின்றது. அது போலவே அஞ்ஞான இருட் கலப்புற்ற மன அறிவு விளங்குங் காலத்தில்தான் ஏகமாகிய பிரம்மம் (ஆன்மா) இரட்டை முப்புடிப் பேதங்களாகிய உடல் உலகாதிப் பிரபஞ்சமாகத் தோன்ற முடியும். மூல மெய்யறிவாகிய ஆன்ம விளக்கத்தில் நாம ரூபங்கள், இரட்டை முப்புடிகள் போன்ற பேதங்கள் இருப்பற்று மறைந்து விடும். திரையின் மேல் சினிமாப் படக் காட்சி நடைபெறுவதற்கு இருண்டதோர் அறையும், சினிமா இயந்திரத்திலிருந்து வெளிவரும் எல்லைக்குட்பட்டதோர் விளக்கொளியுமே அவசியமான ஆதாரப் பொருள்க ளாகும். சூரியனின் பிரகாசம் மிகுந்த பகல் ஒளி எப்படியாவது திடீரென அவ்வறைக்குள் வர நேர்ந்துவிட்டால், திரையின் மேல் தெரிந்த படக்காட்சி மறைந்தே போகின்றதல்லவா? ஏன்? படக் காட்சிக்கு ஆதாரமாயிருந்த அறையின் இருளும், இயந்திரத்திலிருந்து வந்த அற்பமான விளக்கொளியும் மிகப் பிரகாசமான சூரியப் பேரொளியால் விழுங்கப்பட்டு இருப்பற்றுப் போவதால்தான் படக் காட்சி மறைகின்றது; அல்லவா?

சின்னவொளி பேரொளியிற் சேர்ந்தொழியி லவ்வொளியிற்

றுன்னுபடக் காட்சி தொலைந்தாங்கே – மன்னியமெய்ச்

சித்தொளியிற் சித்தவொளி சேர்ந்தொழியிற் றீர்ந்தொழியும்

முத்திறப்பொய்க் காட்சி139 முடிந்து.

(குருவாசகக் கோவை 114)

இவ்வாறு இவ்வுலகத் தோற்றம் ஆன்ம ஞானத்தால் விழுங்கப்படுவதையே ஸ்ரீ பகவான் தாம் அருளிய அருணாசல பஞ்சரத்தினத்தின் முதற் பாடலில், ‘விரிகதிரால் யாவும் (இந் நாமரூபப் பிரபஞ்சம் முழுவதையும்) விழுங்கும் அருணகிரி பரமான்மாவே’ என்று குறிப்பிட்டனர். இதனால், இரட்டை முப்புடிகளாகிய இப்பேதப் பிரபஞ்சப் படத் தோற்றங்கள் ஆன்ம ஒளியின் முன் நில்லா என்று உபதேசிக்கப்படுகின்றது. ஆகையால், ‘அறிவும் அறியாமையும் ஆர்க்கு?’ என்று ஸ்ரீ பகவான் உள்ளது நாற்பதின் 10-ஆவது பாடலாற் கேட்கும் போது, ‘அகந்தைக்கே; ஆன்மாவுக்கல்ல’ என்று நாம் விடைகூறும் திண்ணத்தைப் பெற வேண்டும்!

மேலும் 9-ஆவது பாடலில், ‘இரட்டைகள் முப்புடிகள் என்றும் எவ்வொன்றைப் பற்றி இருப்பவாம்? அவ்வொன்று ஏது என்று கருத்தினுட் கண்டால்’ என்று ஸ்ரீ பகவான் உபதேசிக்கும்போது, அவ்வொன்று என்பது அகந்தையே என்றும், அவ்வகந்தை உண்மையிருப்பு அற்றது என்று விசாரத்தாற் காண்பதையே ‘கருத்தினுட் கண்டால்’ என்று குறிப்பிடுகின்றார் என்றும் நாம் அறிய வேண்டும். இது போலவே, 10-ஆவது பாடலில் ‘அறிவும் அறியாமையும் ஆர்க்கு என்று அம்முதலாம் தன்னை யறிவது’ என்று கூறியதும், பிறகு 11-ஆவது பாடலில் ‘அறிவுறும் தன்னை அறியாது’ என்றதும், ‘அறிவு அயற்கு ஆதாரத் தன்னை யறிய’ என்று கூறியதும், இங்கு அகந்தையின் இன்மையை அறிவதே என்றுதான் ஸ்ரீ பகவான் குறிப்பிடுகின்றார் என்று நாம் அறிந்துகொள்ள வேண்டும். இங்கு ‘தன்னை’ என்றது ஆன்மாவை என்று பொருள் கூறினால், ஆன்மாவே இவ்வசத்திய பேதத் தோற்றங்கட்கெல்லாம் ஆதாரம் (அடிப்படை) என்ற தப்பு அபிப்பிராயம் சாதகர்கட்கு உண்டாகிவிடும். இதனால்தான், ‘இரட்டை முப்புடிகளின் ஆதாரம் ஆன்மாவே’ என்று கொண்டு எழுதப்பட்ட உரைகள் தவறு எனப்பட்டது.

‘இவ்வகந்தை எது (நான் யார்)?’ என்று விசாரித்தால், அகந்தையின் இன்மை அறியப்படும். இதுவே இரட்டை முப்புடிகளின் ஆதாரம் எதுவோ அவ்வொன்றைப் பற்றிச் சரியாக அறிவதாகும். அகந்தையின் இன்மை அறியப்படும்போதே அவ்வகந்தைக்கும் மூலமான ஆன்மாவின் உண்மையும் உள்ளவாறு விளங்குவதால், இவ்வான்ம ஒளியில் இரட்டை முப்புடிகளின் ஆதார இருளாகிய அகந்தையறிவு அழியுங்காரணத்தால் (படக் காட்சியில் அறையிலுள்ள இருளும், விளக்கொளியுமாகிய ஆதாரம் அழியும் காரணத்தால் படக் காட்சி நீங்குவது போலவே) இரட்டை முப்புடிகளும் அழிகின்றன. அதாவது, மூலமான ஆன்மவொளி இரட்டை முப்புடிகளின் இருப்புக்கு ஆதாரமல்ல; இருப்பற்ற அஞ்ஞான அகந்தை அறிவே இரட்டை முப்புடிகளின் இருப்புக்கு ஆதாரமாவது என்பதே அறிய வேண்டியதாம்.

இவ்வாறு இரட்டை முப்புடிகளுக்கு ஆதாரம் அகந்தையே என்று விளங்குகின்றதல்லவா? ‘எல்லாம் பிரம்மமே’ என்று கூறும் வேதாந்த சாஸ்திரங்களைப் படித்துவிட்டு, ஆன்மாநுபூதி பெறாத சில பண்டிதர்கள், ஆன்மாவே அகந்தையின் எழுச்சிக்கும் இருப்புக்கும் மூல ஆதாரமாக இருப்பது கொண்டு, ஆன்மாவையே இரட்டை முப்புடிகட்கும் ஆதாரம் என்று தீர்மானிக்கிறார்கள்! அது இங்கு சரியல்ல. அத்தகையோர் இங்கு ஸ்ரீ பகவான் உபதேசிக்கும் ஓர் அரிய விஷயத்தை அறியத் தவறிப் போகிறார்கள்! உள்ளது நாற்பதின் மேற்காட்டிய நான்கு பாடல்களையும் நோக்குமிடத்து அகந்தையே இரட்டை முப்புடிகட்கு ஆதாரம் என்பதே ஸ்ரீ பகவான் கருத்து என்றே நாம் அறியக் கிடைக்கின்றது. ‘எல்லாம் பிரம்மமே’ என்று கூறும் வேதாந்தம் உண்மையேயாயினும், அந்நிலையை அடைய முயலும் சாதகர்களுக்குத் தடையாயிருப்பது இரட்டை முப்புடிகளின் பேத உணர்வேயல்லவா? ‘ஸர்வம் பிரம்மம்’ என்பதும், ‘ஸர்வம் அகந்தையே’ (‘அகந்தையே யாவும் ஆம்’) என்பதும் ஒன்றுக்கொன்று முரண்படுவது போலத் தோன்றினாலும், உண்மை அப்படியல்ல. வேதாந்த முடிவை அனுபவ சாத்தியமாக்குவதற்கே ஸ்ரீ பகவான் உள்ளது நாற்பதை அருளினர். இரட்டை முப்புடிகளாகிய பேத உணர்வுகளே ஸர்வ துக்கங்கட்கும் மூல காரணமாகும். ‘எல்லாம் பிரம்மமே’ என்ற அபேத உணர்வே சுகப்ராப்தியாகிய சாந்திக்குக் காரணமாகும். பேத உணர்வை நீக்கினாலன்றி சுகப்ராப்தி சாத்தியமல்ல. ‘எல்லாம்’ என்பதில் இரட்டை முப்புடிகளின் பேதமும் அடங்கும். பயனுள்ள உளவுகளைக் கூற மகா குருவாக வந்து அவதரித்த ஸ்ரீ பகவான் இரட்டை-முப்புடிகளின் பேத அறிவின் நீக்கத்திற்கு அனுபவ சாத்தியமானதோர் வழியைக் கூறுகின்றார். அதாவது, இரட்டை-முப்புடிகட்கு உடனடி ஆதாரம் அகந்தையே என்பதை மேற்காட்டிய நான்கு பாடல்களாலும் விளக்குகின்றார். ஆகையால், அகந்தையை மட்டும் நீக்கினாலே – அழித்தாலே – போதும்; இரட்டை-முப்புடிகள் நீங்கிவிடும். வெறும் சாஸ்திரப் பண்டிதர்கள் கொள்வது போல் இரட்டை-முப்புடிகட்கு ஆன்மாவே ஆதாரம் என்று பொருள் கொண்டால், இரட்டை-முப்புடிகளை நீக்குவதற்கு ஆன்மாவையே அல்லவா நீக்கவேண்டும்? இது அசாத்தியம். ஆன்ம ஞானிகளின் அனுபவத்திற்கே முரணானது. ஆன்மாவோ, எக்காரணத்தாலும், எச்சாதனத்தாலும், எத்தவத்தாலும் நீக்கமுடியாத பரம வஸ்து. ஆகையால், இரட்டை-முப்புடிகட்கு ஆன்மாவையே ஆதாரமாகக் கொண்டு, ஆன்மாவை நீக்கப் பாடுபட வேண்டாம். அது மூடத்தனம்! உடனடி ஆதாரமான அகந்தையை ஒழிப்பதே எல்லாத் தவங்களின் சாரமும் பயனுமாகும். அதுவே சாத்தியமான காரியம். தூக்கத்தில் ஆன்மா சுயமே பிரகாசிக்கும்போது, அகந்தை மட்டும் ஓய்வதால் இரட்டை-முப்புடி பேதங்கள் அங்கு ஓயவில்லையா? அது அனைவர்க்கும் அனுபவமே அன்றோ? இந்தச் சாமானிய அனுபவத்திலிருந்தே இரட்டை-முப்புடிகளுக்கு அகந்தையே ஆதாரம் என்று தெரிகிறதல்லவா? துக்க நிவர்த்திக்கும் சுகப் பிராப்திக்கும் அகந்தையின் அழிவு மட்டுமே போதும். ஆன்ம விசாரத்தால் அகந்தையழிந்தால் (சினிமாப் படம் காட்டப்படும் இருட்டறையொன்றினுள் சூரியப்பேரொளி ஊடுருவி வந்தால் அவ்வறையிலிருந்த இருளும் விளக்கொளியும் மறைவதால் திரையில் படங்களும் மறைவது போல) இரட்டை-முப்புடிகளும் மறையும். எனவே, இரட்டை-முப்புடிகளின் ஆதாரம் அகந்தையே என்று நாம் அறிந்தால், அகந்தையை அழிக்கும் வழியைக் (ஆன்ம விசாரத்தைக்) கடைப்பிடித்துத் துக்க நிவிருத்தியை அடையலாம். அவ்வாறின்றி இரட்டை-முப்புடிகள் ஆன்மாவையே பற்றிக் கொண்டிருக்கின்றன என்று நாம் கொண்டால் நமக்குத் துக்கங்களினின்றும் என்றைக்குமே கதிமோக்ஷமில்லை. துக்க நிவிருத்தி வேண்டுமெனின் அகந்தை அழியவே வேண்டும்.

உள்ளது நாற்பதில் ஸ்ரீ பகவான் மிக முக்கியமாகக் கூறும் இரு பெரு உபதேசங்களாவன: (1) சகல பேதங்களும் அகந்தையையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. (2) பேதமற்ற ஏகாத்ம ஞானத்தை (வேதாந்த மெய்ப்பொருளைப்) பெற வேண்டுமாயின் அகந்தையை ஒழிக்க வேண்டுமாகையால், அதையழிக்க ஆத்ம விசாரமே வழி. இவ்விரண்டே உள்ளது நாற்பது முழுதிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்தப் படுகின்றன. அகந்தையை ஒழிக்க, அகந்தையே யாவுமாம் ஆதலால், ‘யாது இது?’ என்று நாடலே – தேடலே (எல்லாப் பேதங்களையும்) ஒழிக்கும் வழி (ஓவுதல் யாவும் என) ஓர்க என்றும், தேடினால் அகந்தை ஓட்டம் பிடிக்கும் என்றும் ஸ்ரீ பகவான் பயனுள்ள உளவுகளை உள்ளது நாற்பதில் உபதேசிக்கின்றார். இதுவே உள்ளது நாற்பதின் சாரமாகும். முமுக்ஷுக்களுக்கு, இரட்டை-முப்புடிகளின் ஆதாரம் அகந்தையே என்று காட்டிக் கொடுப்பதாலும், அகந்தையை அழிக்க, ‘அது எது – நான் யார்?’ என்று நாடுவதே வழி என்று உபதேசிப்பதாலும், வேதாந்தத்தின் முடிவை எய்த ஓர் அரிய, எளிய, நேரான மார்க்கத்தை ஸ்ரீ பகவான் உள்ளது நாற்பது மூலம் அருளியுள்ளனர்.

138 அகந்தையே இரட்டை முப்புடிகளின் ஆதாரம் என்பதை குருவாசகக் கோவை பாடல்கள் 35, 459, 575, 577, 765, 879 ஆகியவற்றாலும் அறிக.

139 முத்திறப் பொய்க் காட்சி – ஜீவேசுவர ஜகத் தோற்றம்.

 

Contents