ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

பிற்பால் (Appendix)
ஸ்ரீ அருணாசல அஷ்டகம் பாடல் 6 விளக்கவுரை (04)

Contents

பிற்பால்
பிற்பால் நான்கு
ஸ்ரீ அருணாசல அஷ்டகம் பாடல் 6 விளக்கவுரை
(பக்கம் 164-ல் குறிப்பிற் காட்டப்பட்டது)

உண்டொரு பொருளறி வொளியுள மேநீ

யுளதுனி லலதிலா வதிசய சக்தி

நின்றணு நிழனிரை நினைவறி வோடே

நிகழ்வினைச் சுழலிலந் நினைவொளி யாடி

கண்டன நிகழ்சக விசித்திர முள்ளுங்

கண்முதற் பொறிவழி புறத்துமோர் சில்லா

னின்றிடு நிழல்பட நிகரருட் குன்றே

நின்றிட சென்றிட நினைவிட வின்றே.

பொழிப்புரை:அறிவொளி மயமான உள்ளமே (அருணாசலா) நீயாகிய ஒரு பொருளே உள்ள வஸ்து. உன்னிலும் வேறாகாததாகிய (நீயேயாகிய) ஓர் அதியற்புதமான சக்தி உனக்குண்டு. அச்சக்தியினின்றும் அணு மாத்திர அளவுள்ளவையாய், வரிசை வரிசையாய், எண்ணிறந்த நினைவறிவுப் புள்ளிகள் எழுந்து, பிராரப்த வினையின் இயக்கத்தாற் சுழற்றப்பட்டு நினைவறிவே தன் வடிவமான மனக் கண்ணாடியில் (கண்ணாடியால்), 134நிழல் போன்ற சூட்சும நாமரூப உலக விசித்திரத் தோற்றங்களாய் உள்ளேயும் – ஒரு பூதக்கண்ணாடி(lens)யாற் பெரிதாக்கப்பட்டுத் தோன்றும் திரைப்படக் காட்சிபோல் – கண் முதலிய பொறிகளின் வழியே தூல நாம ரூப உலக விசித்திரத் தோற்றங்களாய் வெளியேயும் காணப்படுகின்றன. ஏ, அருள் மலையே! இவ்விசித்திரப் படங்களான உலகக் காட்சி (a) தோன்றிக் கொண்டிருந்தாலும் அல்லது மறைந்தாலும் உன்னைத் தவிர உண்மையாக இருப்புள்ள பொருள் இவை எதுவுமேயில்லை! (b) இருப்புக் கொள்ளவும் இயங்கவும் உன்னைத் தவிர வேறு மூல காரணப் பொருள் எதுவுமேயில்லை. (c) உன்னை விட்டுவிட்டுத் தாமே இருப்புக் கொள்ள இயலா!

விளக்கவுரை: அருணாசலம் எனப்படும் இதயமே – உள்ளமே – உள்ள பொருள். அது ஆன்ம அறிவொளியேயாகும். இவ்வான்ம இருப்பே உள்ள தன்மையால் உண்மைப் பொருள் – மெய்ப்பொருள் – எனப்படும். ஆன்மாவைத் தவிர வேறு பொருள் ஒன்றுமேயில்லை. உண்மை இவ்வாறாயின், ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிற்கிடமான இப்பிரபஞ்சத்தின் இருப்பைப் பற்றி என்ன முடிவு கூறுவது என்று பலரும் கேட்பதுண்டு. இவ்வினாவிற்கு ஸ்ரீ ரமண பிரானது விடையே இச்செய்யுளாகும். இதன் விளக்கமென்ன?

இவ்வைந்தொழிலும் அதன் விளைவுமான இந் நாம ரூபப் பிரபஞ்சம் சத்தியமல்ல. எங்ஙனம்?

ஆன்மாவில், அதனினும் வேறல்லாத அதிசய சக்தியொன்றுள்ளது. இச்சக்தி ஆன்மாவில் இருக்கிறது என்று கூறுவதால், ஆன்மாவுக்கு அன்னியமான ஏதோ இரண்டாவதான இன்னொரு பொருள்தான் அந்த சக்தி என்று கருதக் கூடாது. ஆன்மாவுக்கே அத்தகைய சக்தி உண்டு. உண்மையில் ஆன்மாவே அச்சக்தி; வேறல்ல என்று கொள்ள வேண்டும். இதை ஏன் ஒரு அதிசய சக்தி என்று ஸ்ரீ பகவான் குறிப்பிடுகிறார்? எனின்,

அச்சக்தியினின்றும் யாராலும் விளக்க முடியாததோர் காரணத்தால், அணு மாத்திர, அதி சூட்சும, அறிவின் நிழல் போன்ற, நினைவறிவு வரிசைகள் தோற்றமாகின்றன. இவைகளே எண்ணங்கள். இவை யாவுள்ளும் முதலில் தோன்றுவதே ‘நான்’ (நான் இன்னார்) என்னும் எண்ணம். இதுவே மனம். இதுவே ஏனைய அணு மாத்திர எண்ண வரிசைகளைக் காணும் காண்பான் (திருக்கு)135 ஆகும்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், (1) காண்பானாகிய ‘நான்’ என்னும் முதல் எண்ணம், (2) இவ்வுலகத் தோற்றமாக விரிந்து காணப்படும் அந்த நுட்பமான எண்ண வரிசைகள், (3) இவ்வுலகைக் காண்பதற்கு மனத்திற்கு வரும் ஆன்மாவின் பிரதிபிம்பமான மன அறிவு, இவை யாவும் இவைகளுக்கு ஆதாரமாகிய ஆன்மா ஒன்றே என்பதுதான்!

நாமுலகங் காண்டலா னானாவாஞ் சக்தியுள

வோர்முதலை யொப்ப லொருதலையே – நாமவுருச்

சித்திரமும் பார்ப்பானுஞ் சேர்படமு மாரொளியு

மத்தனையுந் தானா மவன்.

(உள்ளது நாற்பது 1)

இதனால்தான் அச்சக்தியை ஸ்ரீ பகவான் ‘அதிசய சக்தி’ என்று வருணிக்கின்றார்.

அவ்வணு மாத்திர எண்ண வரிசைகளே உள்ளே மனத்தாற் காணப்படும்போது சூட்சுமவுலக நாம ரூபங்களாகவும், அவையே வெளியில் – அவ்வெண்ணங்களுள் ஒன்றேயான உடலிலுள்ள – கண் முதலிய பஞ்சேந்திரிய ங்களின் வழியாகக் காணப்படும்போது தூல வுலக நாம ரூபங்களாகவும் தோன்றுகின்றன. அவ்வியக்த நிலையிலுள்ள இவ்வணு நிழல் நிரை நினைவறிவுப் புள்ளிகள் வியக்த நாம ரூபங்களாகத் தோன்ற ஆரம்பிப்பது பிராரப்த வினை பயன்தர இயங்க ஆரம்பிக்கும் போதுதான் (அதாவது, மனமாம் கண்ணாடிக்கு ஆன்மாவிடமிருந்து ஒளி வரும்போதுதான்) நிகழ்கின்றது.136 இப்பிராரப்தச் சுழல்விசை உள்ளவரையில்தான் இவ்வுலகச் சித்திரங்களும் தெரிந்து கொண்டிருக்கும்.

பிராரப்தம் இயங்க ஆரம்பிப்பது, மனதிற்கு ஆன்மாவிடமிருந்து ஒளி வரும்போதுதான் கூடும். ஆன்ம ஒளியின் பிரதி பிம்பமாகிய மனமே கர்த்தா போக்தாவாகத் தொழிற்படுவதால், பிரதிபலன ஒளியை அது பெற முடியாத போது, கர்த்ருத்துவ-போக்த்ருத்துவமற்று ஆன்மாவில் ஒடுங்கி (லயமடைந்து) நிற்கின்றது. ஆன்ம ஒளியை மனத்தின்மேல் பிரதிபலிக்க அனுமதிப்பதே ‘கர்மங்கள் பயன் தரட்டும்’ என்று கர்த்தன் (இறைவன்) ஆணையிடுவதாக நாம் கொள்ள வேண்டும். இதுவே ‘கர்மம் பயன்றரல் கர்த்தன தாணையால்’ என்ற உபதேசத்தை இங்கு நாம் அறியவேண்டிய முறையாகும்.

ஆன்மவொளியாகிய அறிவு (சித்) கண்ணாடி போன்ற மனத்தின்மேல் பட்டதும் பிரதிபலிக்கும் (சித் ஆபாச) அறிவே ஜீவன். இவன் தோன்றும்போதே, அதேசமயம் நிழல் நுண்ணிய எண்ண விருத்திகளும் இயங்க ஆரம்பிக்கின்றன. மிக நுண்ணிய முதல் எண்ண விருத்தியாகிய ‘நான் இது’ என்ற சிதாபாச வடிவ ஜீவன் காண்பானாகி, இதர விருத்திகளாகிய நுண்ணிய நிழல்களை உள்ளேயும் புறத்தேயும் சூக்ஷ்ம தூல உலகங்களாகப் பார்க்கிறான். இவனது உற்பத்தியும் கர்த்ருத்துவ-போக்த்ருத்துவ இயக்கமும் அதன் விளைவான உலக வாழ்வுத் தோற்றங்களும் ஆன்மாவின் ஒளி படும்படி அனுமதிக்கப் படுவதாலேயே நிகழ்வதால் ‘இறைவன் சிருஷ்டியாதிகளைச் செய்து வருகிறார்’ என்று உருவகித்துச் சாஸ்திரங்கள் மந்தாதிகாரிகளுக்குக் கூறின.

ஆன்ம தரிசனத்தால் மனோநாசம் பெற்ற நிலையில் (ஞான நிலையில்) பிரதிபலிக்கும் கிரியை ஏதும் இல்லாததால், ஞானிகளுக்கு ஆன்மாவாகிய பிரம்மத்தைத் தவிர, உலகம் என்னும் சித்திரத் தோற்றங்கள் இருப்பற்ற பொய்யாகவே விளங்குகின்றன. சூரிய ஒளியிலிடப்பட்ட நிழற்படத் தகடு (photographic plate ) போலவே மனம் சம்ஸ்காரங்களைப் பெற முடியாதபடி ஆன்ம தரிசனத்தால் நாசமடைய வேண்டும். அப்படி ஆகாத அஞ்ஞானிகளுக்கே, விழிப்பு, பிறப்பு, சிருஷ்டி முதலிய காலங்களில் மீண்டும் மீண்டும் ஆன்ம ஒளி வந்து பட்டு பிரதிபலிப்பது போன்ற மூவஸ்தைத் தோற்றங்கள் உண்டாகக் கூடும்.

இவ்வுலகச் சித்திரம் தோன்றும் முறையை ஓர் திரைப்படக் காட்சிக்கு ஒப்பிடுகிறார் ஸ்ரீ பகவான்137. ஓர் சினிமா இயந்திரத்தில் பிரகாசமானதோர் விளக்கொளியிருக்கின்றது. அதன் அருகிலுள்ள ஒர் கண்ணாடி(mirror)யிற் பட்டுப் பிரதிபலித்து வரும் ஒளி, அடுத்துள்ள சின்னஞ்சிறு படத் தகடு(films)களின் வழியே ஊடுருவி, அவற்றை அடுத்துள்ள பூதக் கண்ணாடியாற் (lens) பெரிதாக்கப்பட்டு, வெளிவந்து, தூரத்திலிலுள்ள திரையின் மேல் பெரிய படங்களாகத் தெரிகின்றன. அவ்வாறே, இவ்வுலகக் காட்சியில் நாமாகிய ஆன்மாவே பிரகாசமான விளக்கு. ஆன்ம அறிவொளியைப் பிரதிபலிக்கும் மனமே கண்ணாடி. மன அறிவே பிரதிபலனவொளி. எண்ணங்களின் அதி சூட்சும நிலையான வாசனைகளே படத்தகடுகள். காது, கண் முதலிய ஐம்பொறிகளே, அவ்வணு மாத்திர வாசனைகளைச் சுவை யொளி யூறு வோசை நாற்றம் ஆகிய ஐம்புலப் பொருளறிவுகளாய்ப், பெரிதாக்கிக் காட்டும் பூதக்கண்ணாடிகள். காண்பானாகிய ஜீவனுக்கு முன்னிலைப் பொருள்களாய்த் தோன்றும் இத்தூல உலகமே திரைமேல் தெரியும் படங்கள் ஆகும். ஆன்ம அறிவொளியைப் பிரதிபலிக்கும் மனவறிவே இவ்வுலகச் சித்திரத்தை உண்டாக்குவதோடு காணுவதுமாகும். மனம் ஆன்மவொளியைப் பிரதிபலிக்காத சமயங்களில் தூல உலகமோ சூட்சும உலகங்களோ உண்டாகித் தெரிவதில்லை. மூர்ச்சை, தூக்கம், மரணம், பிரளயம் ஆகியவை மனத்திற்கு அறிவொளி வராத சமயங்களாகும். ஆன்ம பிரதிபலனமான மன அறிவொளியற்ற அச்சமயங்களில் மனமோ உலகமோ யாவும் இல்லாதனவே. மனம் ஆன்ம ஒளியைப் பெற்றுப் பிரதிபலித்துத் தொழில்படும் சமயங்களே விழிப்பு, கனவு, வாழ்வு, அல்லது பிறவி, சிருஷ்டி, ஸ்திதி ஆகியவையாம். முந்தியது கேவல நிலை; பிந்தியது சகள நிலை எனப்படும். எனவே, சகள நிலையான தூல சூட்சும உலக சிருஷ்டி, ஸ்திதியாதி காரியங்களோ அதற்குக் காரணமான மனமோ மற்றும் அதன் பிரதிபிம்ப மனவறிவொளியோ, இவை யாவும் அநித்தியமே, அசத்தியமே என்றறிக. ஆகையால், இக்கேவல அல்லது சகள நிலைகளில் உலகத் தோற்றங்கள் முறையே மறைந்தாலோ அல்லது நிகழ்ந்து கொண்டிருந்தாலோ, மூலவொளியான ஆன்மா யாதொரு விகாரமும் அடையாமல், பற்றற்ற பரிசுத்த அறிவொளியாய், என்றுமுள்ள நித்திய சத்திய வஸ்துவாய், அசலமாய் விளங்கிக்கொண்டே இருக்கிறது. இதையே ஸ்ரீ பகவான், ‘அருட்குன்றே அருணாசலமாம் ஆன்மாவே, உன் அதிசய சக்தியினின்று நிழல் சக விசித்திரம் உள்ளும் புறமும் நினைவொளி யாடி கண்டன; இவை நின்றிட (அல்லது) சென்றிட; நினைவிட இன்றே!’ என்று அஷ்டகத்தில் இவ்வாறாவது பாடலால் விளக்கினர்.

134 பிரபஞ்சம் மன அறிவால்தான் பார்க்கப்படுகின்றதே தவிர, ஆன்மாவுக்குத் தன்னால் பார்க்கப்பட வேறு இரண்டாவது பொருளே இல்லையாகையால், மனக் கண்ணாடியினாலேயே பார்க்கப்படுகின்றது என்றும், பிரபஞ்சச் சித்திரமானது மனமெழுந்த பிறகே, அதன் மேலேயே தோன்றுவதால் மனக்கண்ணாடியில்தான் பார்க்கப்படுகின்றது என்றும் இருவிதமும் வருவித்துப் பொருள் கொள்க.

135 மனமே திருக்கு (காண்பான்); பிரபஞ்சமே திருசியம் (காணப்படு பொருள்). இம் மனத்தின் தோற்றம், சலனம், ஒடுக்கம் முதலியவற்றை ஆன்மாவாகிய நாம் அறிவதால், ஆன்மாவே மேலான திருக்கு என்றாலும், அம்மனமே பொய்யாகையால் அதன்பால் நமக்குள்ள சாக்ஷித்துவமும் திருக்குத் தன்மையும் பாரமார்த்திக உண்மையற்றதாகின்றது. எனவே, ஏகத்துவ ஆன்ம நிலையில் ஆன்மாவை திருக்கென்றுங் கூறாதொழிக. ஸ்ரீ ரமண நூற்றிரட்டின் விசார சங்கிரகம், அத்தியாயம் 3-ஐக் காண்க.

136 ஸ்ரீ ரமண நூற்றிரட்டில், விசார சங்கிரகம் என்ற நூலில், அவஸ்தாத்திரயம் என்ற சித்திர விளக்கத்தை இங்கு ஒத்து நோக்கி உணர்க.

137 இங்கு உபதேச மஞ்சரி-அப்பியாசப் பிரகரணம் 13-ஆவது வினா விடை முழுவதும் நோக்கத் தக்கது.

 

Contents