ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)
பிற்பால் (Appendix)
நனவு, கனவு, துயில் (02)
பிற்பால் பிற்பால் இரண்டு நனவு, கனவு, துயில்
மனிதர் யாவரும் நனவு, கனவு, துயில் என்னும் மூன்று அவஸ்தைகளையும் தினமும் அனுபவிக்கிறோம். ஆனால், ‘நம் வாழ்வு’ என்று நாம் குறிப்பிடுவதின் பெரும் பாகம் நனவைப் பற்றியதேயாகும். கனவும், துயிலும் சுருங்கியதாகவும், நனவு நீண்டதாகவும் உணரப்படுவதால் நாம் இவ்விதம் எண்ணுகிறோம். துயிலில் நாம் தேக, லோகாதி விஷயங்கள் ஒன்றையுமறியாமல் சும்மா இருப்பதால் அது நமக்குச் சூன்யம் போல் தோன்றுகிறது. கனவிலும் நனவிலும் நாம் பலவற்றை அறிகிறோம். ஆனால், நனவில் நடப்பதாகத் தோன்றுபவைகளை மட்டும் மெய்யென்றும், கனவின் அனுபவங்களைப் பொய்யென்றும் நினைக்கிறோம். இதன் காரணம் கனவைவிட நனவு நீண்டதாலும், கனவினின்று விழிப்புறும் போதெல்லாம் நனவிலேயே நாம் இருப்பதாலுமேயாம். இவ்வாறு நாம் இருந்து அனுபவித்துவரும் நனவையும் (விழிப்பு நிலையையும்) பொய்யென்று கூறுகிறார் ஸ்ரீ ரமண பகவான்! இவ்வுலகின் சத்தியம் கனவின் சத்தியம்தான் என்கிறார்!
தூங்கும்போது நாம் கனவு காண்கிறோம். கனவு பலவிதமாயிருக்கிறது. செயற்கரிய வித்தைகளெல்லாங்கூட கனவில் சகஜமாய்ச் செய்யப்படுவதைக் காண்கிறோம். இறந்து போனவர்கள் உயிரோடிருந்து நம்முடன் அளவளாவுவதாகவும், நாம் நீர் மேல் நடப்பதாகவும், காற்றில் பறப்பதாகவும், இது போன்ற விசித்திரமான பல அனுபவங்களும் கனவில் காணப்படுகின்றன. நன்மையும் தீமையும் கலந்து, சுகமும் துக்கமும் அப்போது தருகின்ற இக்கனவுகள் யாவையும் கண்டபின் நாம் விழித்து ஜாக்கிரநிலை (நனவு நிலை) அடைந்ததும் இவை யாவும் பொய்யான கனவே என்றுணர்கிறோம். அங்கு கண்ட சுக துக்கங்களால் நாம் உண்மையாகவே பாதிக்கப்படாதிருப்பதை உணர்கிறோம். உதாரணமாக மலை மீதிருந்து கீழே உருண்டதாகக் கனவு கண்டு, அந்த பயத்தினால் விழிப்படைந்தோமானால், விழித்த பின்னுள்ள நம் சரீரத்தின் மேல் காயம் ஒன்றும் ஏற்படாதிருப்பதையுணர்ந்து சற்று வியப்பும், ‘ஓகோ! இது வெறும் கனவுதானே!’ என்ற அலக்ஷியமும் நமக்குத் தோன்றுகிறது. கனவில் பெற்ற அனுபவங்கள் நம் விழிப்பு நிலையில் ஒரு துளியும் பாதிக்காத காரணத்தால், சொப்பன காலத்திலுற்ற சுக துக்கங்களைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுகிறோம்.
நாம் வாழும் விழிப்பு நிலையாகிய ஜாக்கிர நிலையும் இத்தகைய கனவை ஒத்ததேயாகும் என்பது ஞானிகளின் அனுபவம். நாம் தூக்கத்தை வெறுமையாகவும், கனவை அதனினும் அறிவுள்ளதாகவும், ஜாக்கிரத்தை அதனினும் அறிவுள்ளதாகவும் கருதுகிறோம். நம் அனுபவம் இத்துடன் நின்று விடுகிறது. ஆனால் ஞானிகளோ இவ்வவஸ்தைகள் மூன்றும் தோன்றி ஒடுங்குவதற்கு ஆதாரமாய், தான் என்றும் உதித்தல் ஒடுங்குதல் அற்றதாய், நித்திய பரிபூரணமாய் விளங்கக்கூடிய ஓர் உண்மையான விழிப்பு நிலை உள்ளதாகக் கூறுகின்றனர்! அவர்கள் அந்நிலையிலேயே இருக்கின்றனர்! அதுவே துரீயம் எனச் சொல்லப்படும் நான்காம் அவஸ்தையாகும். ஆனால் இதை நான்காவது அவஸ்தையென்று கூறுவதும் பொறுத்தமற்றதென்றும், உண்மையில் நிலை இது ஒன்றேயென்றும், மற்ற துயில், கனவு, நனவு நிலைகள் யாவும் பொய்த் தோற்றங்களேயென்றும் அப்பெரியோர்கள் கூறுகின்றனர்.
நனவாகிய கனவினின்றும் ஞானமாகிய துரியவிழிப்புற்ற ஞானி இதனால்தான் இவ்வுலக சுகதுக்கங்களால் தாக்கப் படாதிருக்கிறான். அண்டங்கள் பலவற்றிலும் நடக்கும் அற்புத சித்திகளையுங்கூட அவன் அற்பமாய், அலக்ஷியமாய்(நனவுற்றவன் கனவைப் பற்றிக் கருதுவது போல)க் கருதுகிறான். ‘பரிதியைச் சூறை தொடுமோ’ என்றபடி உலக வியவகாரங்கள் எதுவும் அவனைப் பாதிப்பதில்லை. அவன் நனவிலிருந்தும் விழித்துக்கொண்ட பூரண சாஸ்வதப் பிரக்ஞன். இந்நிலையே நன்னிலை; இந்நிலையே தன் நிலை. இந்நிலையே உயர்வற உயர்ந்த உண்மை நிலை. இந்நிலையே மனிதனின் லக்ஷியம். இந்நிலையே மதங்களின் முடிவு; இந்நிலையே விழிப்பில் விழிப்பு, இந்நிலையடைந்தவனே உண்மையில் விழிப்புற்றவன், உண்மையில் காண்பவன், உண்மை உணர்பவன்; இவனொருவனது சொல்லே என்றும் உண்மை. மற்றவர் விழிப்பெல்லாம் மயக்க உறக்கமே; மற்றவர் காட்சியெல்லாம் மருட் காட்சியே; மற்றவர் மொழியெல்லாம் மயக்கப் பிதற்றல்களே. இந்நிலையும் ஈசனும் ஒன்றேயாதலின் இந்நிலை நின்ற ஞானியின் திருமொழியே அருண்மொழி. அத்தகைய ஸ்ரீ பகவானின் அருண்மொழியைக் கேட்போம்:
‘விழிப்புலகத்துக்கும் கனாவுலகத்துக்குமுள்ள ஒற்றுமையை நன்கு உணர வேண்டும். இரண்டும் மனத்தின் கற்பனையே, மனம் இவ்விரண்டில் ஏதொன்றில் ஈடுபட்டிருந்தாலும் கனவு காணும்போது கனாவுலகத்தையும், விழித்திருக்கும் போது விழிப்புலகத்தையும் பொய்யென்று மறுக்க அது சக்தியற்றதாகும். தான் சிருஷ்டி செய்த இவ்வுலகத்தைத் தானே பொய்யென்று மனம் எப்படி ஏற்றுக் கொள்ளும்? இதற்கு மாறாக மனத்தை உலகத்தினின்று திருப்பி, அகமுகமாக்கி, அப்படியே அமர்ந்தால், அதாவது எல்லா அனுபவங்களுக்கும் ஆதாரமாகிய ஆன்மாவொன்றிலேயே விழிப்புடையவனாக (நாட்டமுடையவனாக) இருந்தால், நீ இப்பொழுது உணரும் உலகம் கனவில் வசித்த உலகம் போன்று அத்துணைப் பொய்யாகவே இருக்கும்.’
‘நீ கனவு காணும் போது அது மெய்யெனத் தோன்றுவதில் தோஷம் காண்கிறாயா? கனவு கனவாக இருக்கும் வரையில் அதிற் குற்றமென்ன? இறந்துபோன ஒருவனோடு பேசிக் கொண்டிருப்பது போல் நடப்பதற்கரியதாகிய ஏதோ ஒன்றைப் பற்றி நீ கனவு காணலாம். அக்கனவில் ஒரு க்ஷண மாத்திரம், “இந்த மனிதன் இறந்து போனவனல்லவா?” என்று நீயே சந்தேகப்படலாம். ஆனால், உன் மனம் சொப்பனக் காட்சியை எப்படியோ அப்போது மெய்யென ஏற்றுக்கொள்கிறது. கனவு நிகழுங்கால் அம்மனிதன் பிழைத்திருப்பது முழு மெய்யே! வேறு விதமாய்ச் சொன்னால் கனவு கனவாயிருக்கும் வரையில், அதன் உண்மையைச் சந்தேகிக்க அது இடம் கொடுப்பதில்லை. அதுபோலவே இவ்விழிப்புலகத்தின் மெய்யை நீ விழித்திருக்கும் போது சந்தேகிக்கச் சக்தி அற்றவனாய் இருக்கிறாய்.’ என்றருள்கின்றனர் ஸ்ரீ ரமண பகவான்.
சில மணி நேரம் காண்பது கனவு; பல மணி நேரம் (அதாவது வருடக்கணக்கில்) காண்பது நனவு. இவ்வளவே கனவுக்கும் நனவுக்கும் பேதம்! கனவு குறுகியது, நனவு நீண்டதுபோல் தோன்றுகிறது. மற்றபடி இரண்டின் உண்மையும் ஒரே விதமானதே. ‘நனவு, கனவு இரண்டிலும் நாம ரூபங்கள் நிரம்பியிருக்கின்றன. இரண்டும் கலக்கமுற்ற மனதினால் ஆக்கப் படுபவைகளே; ஆகையால், இரண்டும் பொய்யே; “குறுகிய அளவினதானதால் கனவு மட்டும் பொய், நனவு அப்படியல்ல; நீண்டதானதால் மெய்”யென்று கொள்ளக் கூடாது. மனதின் மாயா சக்தியால் நனவு நீண்டதாகவும், கனவு குறுகியதாகவும் எண்ணப்படுகிறது; காலம் என்பதே மனத்தின் கற்பனை’ என்பது ஸ்ரீ பகவானது உபதேச மொழி. கனவிலும், நனவிலும் மனம் ‘நான்’ என்று ஒரு தேகத்தைப் பற்றிக்கொண்டே திரிகிறது. ‘நான்’ என்ற அகந்தை அரை குறையாக விரிந்த நிலை கனவு; அது முற்றும் விரிந்த நிலை நனவு; அது சற்றே அடங்கியிருக்கும் நிலை நித்திரை. இவ்வளவுதான் பேதம்! நனவு, கனவு இரண்டுக்கும் அவ்வக்காலங்களில் கொள்ளும் ‘உடலே நான்’ என்னும் அகங்காரமே காரணமாகிறது. ஆகையால், இரண்டும் ஒன்றேதான்.
நனவில் மனம், ஓர் உடலை ‘நான்’ என்று அபிமானித்து நிற்கிறது. கனவைத் தரும் கர்மம் முற்றிப் பக்குவமடைந்தவுடன் நனவுடலை விட்டுவிட்டு நித்திரையில் கனவுடல் ஒன்றை எடுத்துக்கொள்கிறது. கனவு தீருமட்டும் அக்‘கனவுடலே நான்’ என்று அபிமானிக்கிறது. நனவுடல் வேறு; கனவுடல் வேறு. இவ்வாறே மரணமாகிய நித்திரையின்பின் கர்ம பரிபாக காலத்தில் மனம் மீண்டும் பிறப்பை அடைந்து, அப்போது கொள்ளும் உடலையே ‘நான்’ என்று அபிமானித்துக் கொள்கிறது. ஆகவே, இந்த மனமே ‘இந்த உடல் நான்’ என்ற அகங்காரமே ‘ஜீவன்’ எனப்படும். இந்த ஜீவ போதத்தின் இழப்பே முக்தி அல்லது துரீயமாகும். இப்படி வெகு காலமாய் (பல ஜன்மங்களாக) ஒன்று போக மற்றொரு தேகத்தை ‘நான்’ என்று கொள்ளும் அனாதி மல வாசனையே நனவு கனவுகளுக்குக் காரணம். ஸ்ரீ பகவான் கூறுவதாவது: ‘இப்போது அறிவற்றதாகவுள்ள நித்திரையே, இந்த தேகாத்ம புத்தி (தேகமே நான் என்னும் எண்ணம்) நசிக்கும்போது ஞான சொரூபத் துரீயமாகி விடும்’ என்பதாம்.
ஆனால், தூக்கத்தில் உடல் அனுபவம் ஒன்றும் நமக்கு இல்லை. அதனால் எந்த உலக அனுபவங்களுமில்லை. அங்கு நாம் தேகமற்றிருக்கிறோம். அதாவது, எந்த தேகமும் (நனவின் தேகமோ, கனவின் தேகமோ) நாமல்ல என்று தேகாத்ம புத்தி அற்றிருக்கிறோம். அதாவது மனமற்று, தேகமற்று இருக்கிறோம். ஆனால், விழிக்கும்போதே இந்த மனம் கிளம்பி ‘நான் இது தான்’ என்று ஒரு நனவுடலைப் பற்றிக் கொண்டுவிடுகிறது. இந்தப் பற்றே பந்தம். ஸ்ரீ பகவான், ‘இந்தச் சேர்க்கைக்கே அஞ்ஞானம் என்று பெயர். இந்தச் சேர்க்கையின் அழிவே ஒருவனின் முயற்சிகளின் முடிவு. தனக்கு உடம்போடுள்ள பொய்ச் சேர்க்கையே தேகாத்ம புத்தி. இச்சேர்க்கையழிந்தால் “நான்” என்னும் அகந்தை சுத்தமாவதோடு தன் மூலத்தில் ஒடுங்குகிறது. நல்ல பலன்கள் அடுப்பதற்கு இந்த தேகாத்ம புத்தி ஒழிய வேண்டும்’ என்கின்றனர்.
அதை எப்படி ஒழிப்பது? நாம் நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டிருப்பதெல்லாம் ‘இந்தவுடலே நாம்’ என்பதே. சிற்சில சமயம் சற்றுத் தெளிவுடன் பார்த்து, ‘அல்ல, உள்ளே தொழிற்படும் மனமே நாம்’ என்று கொள்கிறோம். உடலும் மனமும் நாம் என்பதே, கனவிலும் நனவிலும் நாம் கண்ட உண்மை. ஆனால், கனவும் நனவுமே உண்மையல்லவென்றால் மேற்சொன்ன நம் அறிவு எப்படி உண்மையாகும்? நம்மை நன்கு தெளிவுபடுத்த ஸ்ரீ பகவான் நனவு, கனவு, துயில் மூன்றின் தன்மையையும் பின்வருமாறு கூறுகிறார். ‘(கனவற்ற) தூக்கத்தில் உடம்போடும், மனத்தோடும் கூடாமல் நீ இருக்கிறாயல்லவா? சொப்பனம், ஜாக்கிரம் (நனவு) இவ்விரண்டிலும் நீ அவற்றோடு கூடியிருக்கிறாய். நீ தேகமோ, மனமோவானால் தூக்கத்தில் மட்டும் தேகமும், மனமும் அற்று எப்படி இருக்க முடியும்? இதனால் நீ தேகமோ, மனமோ அல்ல என்பது புலனாகிறது! தேகமும் மனமும் உனக்கு அன்னியமானவை என்று தெரிகிறது. உனக்கு அன்னியமாய் இருப்பவைகளிலிருந்து நீ உன்னைப் பிரித்துக் கொள்ளலாம். ஆனால் உன்னோடு ஒன்றியுள்ளதிலிருந்து (நீயாகவே இருக்கும் ஆத்மாவிலிருந்து) பிரிக்க முடியாது. ஆகையால் தேகமும் அகந்தையும் (மனமும்) ஒரு பொருளல்ல. விழிப்பு நிலையிலேயே இதை நன்கு உணரவேண்டும். கனவு நனவு துயில் என்ற மூன்று அவஸ்தைகளையும் நன்கு சோதிப்பது இந்த உண்மை அறிவை அடைவதன் பொருட்டேயாகும்.’
இவ்வருளுரைகளினால் நாம் அறிவதென்ன? நனவு, கனவுகளிலிருப்பதைவிட துயிலில் அகந்தையின் பற்றற்றிருக்கிறோமென்பதும், நனவு கனவுகளைவிடத் துயிலில் நம் உண்மை நன்கு தனித்திருக்கிறது என்பதும், நாம் தேகமில்லாமலும் மனமுமில்லாமலும் இருக்க முடியும் என்பதும் நமக்கு விளங்குகிறது, ஆனால், நம்மில் பலர் விழித்த பின்போ, கனவு காணும் போதோதான் தானிருப்பது புலப்படுகிறதென்றும், தூங்கும்போது தன்னிருப்பை அறிவதில்லையென்றும் நினைக்கின்றனர். இக்கூற்று உண்மையல்ல, தூக்கமென்றது ஒன்றுமற்ற சூனியமல்ல. தூக்கத்தில் தேக, உலக அனுபவமில்லாவிடினும் நாம் இல்லையா என்ன? தூக்கத்தில் நாம் இருப்பது தெரியவில்லையே என நினைக்கிறோம். தூக்கத்தில் நாம் இல்லாமலிருக்க முடியவே முடியாது. தூங்கியெழுந்த பின், ‘அப்பாடா, சுகமாய்த் தூங்கினேன்’ என்று கூறுகிறோமல்லவா? இதனால் அவ்வளவுக்கு நம் இருப்பை தூக்கத்தில் உணர்ந்திருக்கிறோம் என்றே ஆகிறது. இருப்பும், உணர்வும் (சத்தும், சித்தும்) ஒன்றேயென முன்பே கண்டோமன்றோ? அதன்படி நாம் தூக்கத்தில் இருந்தது உண்மையாயின் நம் இருப்பை உணர்ந்ததும் உண்மையே. உணர்வற்ற இருப்பென்பதே இல்லை. உன் உறக்கத்தில் நீயறியாதது உன் உடலிருப்பையே தவிர, உன் இருப்பையல்ல. இந்த உடலுணர்வே நித்தியமான உன் அறிவென நீ பிரமிக்கிறாய். இதனால் தூக்கத்தில் நாம் சுத்தமாய் (தேகமனக் கலப்பற்று) இருக்கிறோமென்பதாகிறது. எனின், இத்தூக்கமேதான் துரியமான ஞான நிலையா? சர்வகாலமும் படுத்துத் தூங்கிக் கொண்டேயிருந்தால் அது சரியான ஞானமாகுமா என்று நம் அன்பர்கட்கு ஐயமெழலாம்.
உறக்கத்தில் மனம்(அகந்தை) அடங்கியும், எதனுடனும் சேராமலும் இருக்கிறது. அகந்தையின் விரிவே உலகம். அகந்தையின் நடனமே உலக வாழ்வு. அகந்தை அற்றபோது உலகமில்லை. உறக்கத்தில் அகந்தை கிளம்புவதில்லை. அதனால் உலகமும் இல்லை, உறக்கத்தில் உடலறிவு, உலகறிவு ஏதுமில்லாவிடினும் அது சூனியமல்ல.
உறக்கம் மூடமல்ல; அதுவே ஒருவனுடைய சுத்த நிலை; விழிப்பு அறிவல்ல; அது அறியாமையே; உறக்கத்தில் முற்றறிவு உள்ளது; விழிப்பில் பூரண அறியாமை இருக்கிறது; உன் மெய்ந்நிலை, இவ்விரண்டையும் வியாபித்து அதற்கப்பாலுமுள்ளது. அறிவு, அறியாமை இரண்டுக்கும் அப்பாலாயுள்ளது ஆத்மா. துயில், கனவு, நனவு இம்மூன்றும் ஆத்மாவின் முன் வந்துபோகும் தோற்றங்களே. நீ உணர்ந்தாலும் உணராவிட்டாலும் அவை நிகழ்கின்றன.
என்பர் ஸ்ரீ பகவான்131. இக்கூற்றின் உட்பொருள் நன்கு விளங்க வேண்டும். நனவு கனவுகளுக்கு மூல காரணமான அனாதி மலவாசனை (தேகாத்ம புத்தி) நசித்தால், இந்த அறிவற்ற நித்திரை என்னும் நிலையே ஞான சொரூபமான துரீயமாய்விடும்.
‘தேகம் நான்’ என்ற பாவனையுள்ள வரையில் சுழுப்தியில் (தூக்கத்தில்) யாராலும் நிரந்தரமாக இருந்துவிட முடியாது. ஏனெனில், சுழுப்தியில் மனம் (அகந்தை) இறக்கவில்லை; அடங்கியே இருக்கிறது. என்றென்றும் உயிர்க்காமல், எழாமல் அழிந்து போவதில்லை. தாற்காலிகமாக ஓய்வுபெற்று அடங்கியுள்ளது. தேகபாவனை நீங்காத அஞ்ஞானிக்கு அகந்தை இறக்காததால் மீண்டும் மீண்டும் எழும். அதனால், அது அவனை சுழுப்தியினின்றும் வெளியில் விவகரிக்கத் தள்ளி விடும். தேகத்தின் மரணமும் இவ்வாறானதே. அகந்தை அழியாததால், வேரற்றுப் போகாத வெட்டின மரம் மீண்டும் துளிர்ப்பது போல், உரியகாலத்தில் மீண்டும் பிறவியெடுத்து விரிந்து விவகரிக்கும். ஆகையால் தேக பாவனை நீங்காத அஞ்ஞானியின் துயில், ஆன்ம நிலையான துரிய நிலைக்குச் சமானமாகாது. தேக மனவுபாதிகளின் ஓய்வில் ஒருவித ஒற்றுமை காணப்படினும் துயில்நிலையற்ற, அநித்திய சுக நிலையே. துரீயமே - நிலைத்த, சுத்தப் பேரானந்தமாகும்.
ஹடயோக சமாதியிலும் கும்பகத்தால் மனம் இவ்வாறே வெகு காலம் இதயத்தில் லயித்திருந்து பிறகு கிளம்பிவிடும். இந்த லய சமாதியும், தூக்கத்தையும் மரணத்தையும் போன்றதே. சாசுவத சுகம் தராது. தேகாத்ம புத்தி ஒழிந்த ஸஹஜ நிலையான ஞான சமாதியே துரீயமாகும். இதை விளக்க ஸ்ரீ பகவான் ஓர் விபரம் தருவதுண்டு. அதாவது:
ஒரு யோகி, ஒரு சமயம் சமாதியினின்று எழுந்து, தன் சிஷ்யனை நோக்கி தண்ணீர் கொண்டுவரச் சொன்னார். சிஷ்யன் தண்ணீர் கொண்டு வருவதற்குள் யோகி மறுபடியும் சமாதியில் ஆழ்ந்துவிட்டார். இந்த நிலையிலேயே அநேக நூற்றாண்டுகள் சென்றுவிட்டன! நம் தேசத்தின் ஆட்சி, இந்துக்களை விட்டுக் கைமாறி முகம்மதியர் வசம் வந்து, அதன்பின் வெள்ளையர் கைக்கும் வந்து விட்டது!! கடைசியில் யோகி விழித்தார்! விழிக்கும்போதே, ‘அடே, தண்ணீர் கொண்டு வந்தாயா?’ என்று கேட்டுக்கொண்டே பகிர்முகமானார்!!! எந்த எண்ணத்தோடு சமாதியில் ஆழ்ந்தாரோ, அதே எண்ணம் இப்போது தலை எடுத்தது, அதாவது, மனம் அழியவில்லை. அகந்தை சாகாத நிலை. யோகி தூக்கம் போன்ற லய சமாதியில் வீழ்ந்து கிடந்தாரே தவிர, நித்திய விழிப்பான ஞான சமாதியை அடையவில்லை! இந்த லய சமாதியில் மனோலயமே உண்டாகிறது. மனோ நாசமாகாததால் முக்தி கிட்டுவதில்லை. நூற்றுக்கணக்கான வருடங்களாக ஆழ்ந்து கிடக்கும் இந்த லய சமாதியே, ஆன்ம ஞானமாகிய துரீய நிலைக்கு வெகு தொலை கீழ்ப்பட்ட, அற்ப அஞ்ஞான நிலையென்றால், நாம் தூங்கும் தூக்கமும் துரீயமும் ஒன்று என எவ்வாறு கொள்ள முடியும்!
ஆகையால் வாசகர்கள், ‘துயிலே ஞானம் போலும்!’ என்ற சங்கையை நீக்கிக் கொள்ள இது ஒன்றே போதும். இங்குக் குறிப்பிடப்பட்ட யோகி, யோக சக்தியால் தேகத்தைப் பலகாலம் அழிவுறாமல் காக்க முடிந்தது. நாமோவெனில், அதற்குப் பதிலாக, அந்தக் காலத்தில், பல தேகங்களை பிறப்பிறப்பின் வாயிலாகப் பெற்று ஜீவிக்கிறோம்! அதுதான் அவருக்கும் நமக்கும் பேதம். மற்றபடி அஞ்ஞான நிலையில் இருவரும் சமமே! இந்த லய சமாதியால் முக்தி வருமென்றால், மரணத்தாலும் முக்தி வந்து விடலாமே! அப்படியானால், மரணத்தையே முற்றிலும் ஒத்த தூக்கமே முக்தி தந்து விடுமே! அப்படியல்லாததால், தேக பாவம் அறாத துயிலுக்கும், துரீயத்துக்கும் ஒப்பு கூறுவது பெரும் பிழையாகும். ஸ்ரீ பகவான் கூறுவதாவது 132:
உன் விழிப்பிலுங்கூட உறக்கம் இருக்கிறது. நீ இப்பொழுதும் சுழுப்தியில்தான் இருக்கிறாய். [ஆனால்] அவ்விழிப்பிலேயே அறிவோடு உட்புகுந்தடைய [அறிய] வேண்டும். உண்மையில் அதற்குள் போவதுமில்லை; அதை விட்டு வருவதுமில்லை. [இவ்வாறு] ஜாக்கிரத்திலேயே சுழுப்தியை உணர்வதுதான் ஜாக்கிர சுழுப்தி [அல்லது துரீயம்], அல்லது [ஞான] சமாதி நிலை, [அல்லது சகஜாத்ம நிஷ்டையாகும்]. அஞ்ஞானி, அதிக நேரம் சுழுப்தியிலிருக்க முடியாது. அவனியற்கை அவனை அதனின்று வெளியில் [பகிர்முகப்படுத்தித்] தள்ளிவிடும். [...] ஆனால் ஞானி, அகந்தையை அதன் மூலத்திலேயே அழித்து விடுகிறான். அஞ்ஞானியிடம் எழும் அகந்தை, உண்மையில் உறக்கத்திலன்றி என்றும் ஒடுங்கியதேயில்லை. [...] அதாவது, அஞ்ஞானிக்குக் கனவு நனவுகளில் தன் சுழுப்தி நிலை தெரியாது. [...] நிரந்தரமாக மூலத்திற் கவனம் நிறுத்தப்பட்டால், கடலில் உப்புப் பொம்மையைப் போல் அகந்தை அம்மூலத்தில் அழிவுறும்.
தூக்கத்தில் உள்ள சுகம் எவ்விதப் புறச் சாதனங்களுமின்றியே அனுபவிக்கப்படுவதால், அது ஆத்மாவினுடையதாகவே இருக்கவேண்டுமென்ற நிச்சயம் ஏற்படுகிறதன்றோ? அது ஆத்ம பர சுகத்தின் ஒரு திவலையேயாகும். தன் சொரூபமே – ஆத்மாவே – சுகமயமானதால் சுகானுபவத்திற்கு எப்பொருளும் தேவையில்லை; தேகமும் தேவையில்லை, மனமும் தேவையில்லை. ஆனால், தூக்கத்தில் நுகரப்படும் சுகம் அற்ப அளவினதாகும். ஸ்ரீ பகவான் இதைப் பற்றி, ‘பௌர்ணமி சந்திரன் பிரகாசிக்கும்போது ஒரு மரத்தின் இலைகளினிடையே மரத்தடியிற்படும் சந்திரிகை போல் தூக்கத்தின் சுகமும், வெட்ட வெளியிலுள்ள சந்திரிகை போல் ஞானியின் சுகமும் என்று சொல்லலாம்’ என்று கூறுவர். தூக்கத்தில் ஆத்மானுபவ சுகம் மிகமிகக் குறைவாயிருந்தும் அது யாவர்க்கும் பிரியமாயிருக்கிறதன்றோ? அப்படியிருக்க, பரிபூரண ஆத்மானுபவத்துக்கிடமான துரீய (ஞான) நிலையை யார்தான் வேண்டாமென்பர்?
சோம்பேறிகள் பலர் எவ்வித ஞான முயற்சியுமின்றி, ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று கூறிக்கொண்டு, கேவலமான அற்ப தூக்கத்தில் தூங்கித் தூங்கித் திறனழிவர்! அத்தகையோர் கொள்கை என்ன? ‘தூக்கமும் ஆத்ம சுகம் தானே! அது கிடைக்காவிட்டால் இதுவே இருக்கட்டுமே! இதுதான் என்னால் முடிந்தது’ என்பதாகும். இது பெருந்தவறு. ஞானிகளின் கூற்றுக்கு உண்மைப் பொருள் காணவறியாத அபக்குவிகள் வழி தவறும் இடம் இதுதான்! இவர்களது வாதம் சரியாயின், உலக விஷயாதிகளில் தோன்றும் அற்ப, அநித்திய, அக்கிரம சுகங்களுங்கூட ஆத்மாவின் அம்சத் துணுக்குகளேயன்றோ? பின் அவற்றை அனுபவிப்பதால் ஏன் மனிதன் பந்தமுற்றுத், துன்புற்று மீளா அஞ்ஞானப் படுகுழியில் விழுகிறான்? ஆகவே, அசிரத்தை காரணமாக இவ்வாறு தவறான பொருள் கொண்டால், திண்ணைத் தூங்கிச் சோம்பேறிகளும், தியானத்தில் நிலைத்து ஞானமுற்றிருக்கும் மகான்களும் சமம் என்றல்லவோ ஆகும்! இவ்விபரீதப் பொருள் ஏற்பட்டால், சாதகன் பின்னர் எந்தப் பாவத்திற்கும் இடமாகி நாசமுறுவானன்றோ? இத்தவற்றினை விலக்கவே தூக்கத்திற்கும் துரீயத்துக்கும் உள்ள பேதம் இங்கு விளக்கப்பட்டது.
நாம் விழித்திருக்கும்போது இவ்விழிப்புலகமும், இவ்வுலக அனுபவங்களும் தோன்றுகின்றன. இவை யாவும் மன மயக்கமானதென்றும், பொய்யென்றும் ஞானிகள் கூறிவிடுகின்றனர். அப்படிப் பொய்யாயினும், இவ்விழிப்புலகத்தின் உண்மையை மறுக்க இவ்விழிப்பு நிலையில் மனம் சக்தியற்றதென்றும் கூறுவர். இரண்டாவதான கனவிலோ, நாம் அடையும் உலகானுபவங்கள் அக்காலத்தில் மெய்போல் தோன்றிப் பின் விழிப்பிற் பொய்யாகின்றன. அவை நிகழும் கனவின் காலத்திலும் அவைகளைப் பொய்யெனச் சந்தேகிக்க மனம் இயலாததாகிறது. பின் மற்றொரு நிலையான துயிலிலோ நாம் எவ்விதமும் செயலற்று வீழ்ந்து கிடக்கிறோம். இம்மூன்றவஸ்தைகளைத் தவிர வேறொன்றும் நமக்கு அனுபவமும் இல்லை! பின்னர் எப்படித்தான் துயில், கனவு, நனவாதிகளைப் பொய்யாக்கி இவைகட்கப்பாலுள்ள நான்காவது நிலையாகிய துரீய நிலையை அடைவது என்று அன்பர்கட்கு இயல்பாக ஒர் பெரும் அயர்வு தோன்றக் கூடியதே. இதற்கு ஸ்ரீ பகவானின் அருண்மொழிகளை நோக்குவோம்.
நனவு, கனவு என்ற இரண்டு நிலைகளிலும் ‘நான் தேகமே’ என்று அபிமானிக்கும் அபிமானியான ஜீவன் ஒருவன் (மனம்) உள்ள மட்டுமே நனவு, கனவுகளின் பேதம் அவனுக்குத் தோன்றும். துயிலிலோ ஜீவன் (மனம்) ஒடுங்கி விடுவதால் நாம் ஏதுமறியாமலிருக்கிறோம். இது, அது என்று பொருள்களையோ, (ஜாக்கிர, சொப்பனம் இவையென்று) நிலைகளையோ அறிவதெல்லாம் இந்த மனமேயாதலால் இந்த மனமற்ற நித்திரையை வெறுமையாக எண்ணுகிறோம். இப்படி எண்ணுவதும் நாம் விழித்துக்கொண்ட பிறகுள்ள மனமேயாகும். துயில் நிலையில் இந்த அனுபவமும் இல்லையன்றோ? ஆதலால் துயில், கனவு, நனவு என்ற பேதத் தோற்றமெல்லாம் அகந்தையான ஜீவபோதம் இருக்குமட்டே ஆகும்.
இவ்வகந்தை ‘நான் இது’, அல்லது ‘நான் அது’ என்ற அறிவின் வடிவாய்த் தோன்றும் தன்மையாகும். ஆனால் ஆன்மாவோ, ‘நான் நானே’ என்று விளங்குவதாகும். ‘இவ்வாறு துயிலிலில்லாமல் ஏனைய நிலைகளில் தோன்றும் அகந்தை, இரு நிலைகள் அல்லது இரு எண்ணங்களுக்கு இடைவெளியில் (அதாவது, கனவுக்கும் நனவுக்குமிடையில் அல்லது துயிலுக்கும் நனவுக்குமிடையில் அல்லது ஒரு எண்ணத்தை விட்டு மற்றொரு எண்ணத்தைப் பற்றுந் தருணத்தில்) சுத்த அகந்தையாய் அனுபவமாகும். அகந்தை, ஒன்றைப் பற்றியபின் ஒன்றை விடும் புழுவைப் போன்றது. பொருள்களுடனும், எண்ணங்களுடனும் பற்றற்ற போதே (அந்த இடைவெளியில்) அதன் மெய்யியற்கை தோன்றும். ஜாக்கிர, சொப்பன, சுழுப்தியாகிய இம்மூன்று நிலைகளையுஞ் சோதித்து அடையப்படும் உறுதியாகிய இந்த இடைவெளியே உனது உண்மை நிலையாக, நித்திய, நிர்விகார தத்துவமாக உணரவேண்டும்’ என்பது இம்மூன்று நிலைகளையும் பற்றிச் சோதிக்க வேண்டிய முறையாக ஸ்ரீ பகவானால் அருளப்படுகிறது.
இவைகளைக் கருத்திற் கொண்டு இம் மூவவஸ்தைகளையும் நன்கு ஆராய்வது நம் கடமை. ஆயினும் இவை மூன்றுக்கும் பிறப்பிடமாய், இவை மூன்றும் விளங்கும் பூமியாய் உள்ளது ‘நான்’ என்ற அகந்தையேயாவதால், இந்த ‘நான்’ என்று எழும் எழுச்சி எதுவென்று உட்புகுந்து தேடாத வரையில் இம் மூவவஸ்தைகள் மெய் போன்றே தோன்றிக் கொண்டிருக்கும். ‘நான்’ என்ற விருத்தியின் (எண்ணத்தின்) துணைகொண்டு அது எழும்பும் மூலமெங்கே என்று தேடப்புகுந்தால், அப்போது சர்வ அறிவிற்கும், சர்வ தொழிலுக்குங் காரணமான மனம் உருவழிய, நான் இது, அது என்னாமல், தானே தானாய் விளங்கும் தத்துவப் பொருளான ஆன்மாவொன்றே ஏகமாய்ப் பிரகாசிக்கும். இந்நிலையே துரீயமாகும்.
‘இவ்வாத்ம விசாரம் நனவில் மட்டுமே சாத்தியமெனினும் இவ்விசாரத்தின் தீவிர சாதனையால் இம் மூவவஸ்தைகளின் மாறுதலையும், மூவவஸ்தைகளுமே வெறும் தோற்றமென்பதையும், அவை தன் அந்தர்முக நிஷ்டையை எவ்விதத்தும் பாதிப்பதில்லையென்பதையும் ஒருவன் தன் அப்பியாச பலத்தால் நாளடைவில் தானே அறிவான்’ என்பர் ஸ்ரீ பகவான்.
ஆத்மா துரீயத்தில்தான் இருக்கிறதென்றோ, மற்ற நிலைகள் ஆத்மா அற்றதென்றோ, ஆத்மாவுக்கு அன்னியமானதென்றோ எண்ணுவது பிழையாகும். ஸ்ரீ பகவான், ‘ஆத்மா இங்கே, இப்போழுதே பிரத்யக்ஷமாயிருக்கிறது; அப்படியில்லாமல் பிரயத்தனத்தால் ஏதோவொரு காலத்தில் நூதனமாயடையப்படும் பொருளாயிருந்தால், அதைத் தேடியடைவதில் என்ன பயன்? சகஜமாய் (எப்போதும்) இல்லாதது ஸ்திரமாயும் இராது. ஆத்மா எப்போதும், எங்கும் உள்ளதாகையால் இங்கு, இப்போதே பிரத்யக்ஷமாய் இருக்கிறது எனப்பட்டது’ என்கிறார் ஆகையால் நனவிலும், கனவிலும் துயிலிலும் ஆன்மா விளங்கிக் கொண்டேதானிருக்கிறது. அகந்தை அதை மறைக்கிறது. எனவே விழிப்பு நிலையிலேயே, ‘நான் யார்?’ என்ற ஆத்ம விசாரங் கொண்டு தன் இருப்பைத் தேடவேண்டும், ‘தேகமே நான்’ என்ற மதியை நீக்கி, தேகத்தை நமக்கு அன்னியமாய், ஜடம் போல் தூரத்தள்ளி, சதா சலித்த வண்ணமே இருக்கும் மனத்தை, ‘தன் இருப்பின் மூலத்தைத் தேடவேண்டும்’ என்ற வைராக்கிய புத்தியால் நிச்சலமாக்கி, இப்போது ‘நான்’ என்று விளங்குவது எதுவென்று கவனிக்க வேண்டும். அப்போது இதயத்தில் எண்ணமற்ற, உருவற்ற, சப்தமற்ற, ஸ்புரிப்பு மாத்திரமாய் ‘நான் நான்’ எனப் பரம்பொருள் நாமாகவே நடமிடுவது விளங்கும். ‘தன்னைத் தேடும் சூக்ஷுமமான மன விருத்தியினால் இதை அனுபவித்து உணர முடியும்’ என்பர் ஸ்ரீ பகவான். இந்த சுக நிலையின் பிறகு, அனுபவிக்கும் அந்த சூக்ஷும மனமும் கரைந்து, ஸ்புரிப்பும் அடங்கி, ஏகரஸமாய், பரம சாந்தமாய் ஆன்மா இருந்தபடி இருந்தொளிரும். இதுவே கைவல்யம்; ஞானம், துரீயம், முக்தி, சுகாதீதம், பிறப்பிறப்பறுதல், சாயுஜ்யம், சகஜ நிலை, நிர்வாணம், சந்நியாசம், மௌனம், கிரந்தி பேதித்த தன்மை, கிருத கிருத்தியம், மனோ நாசம், பரம சாந்தி, சுய ராஜ்யம், ஆத்ம லோகம், பரலோகம், சாக்ஷாத்காரம் என்று பலவிதமாகவும், வேதாந்தக் கிரந்தங்களால் முரசடிக்கப் படுவதாகும்.
ஆகாயத்துக்கு அன்னியமாய் மற்ற நான்கு பூதங்களும் (மண், நீர், நெருப்பு, காற்று) இல்லாதது போல் இத்துரீய நிலைக்கு வேறாக ஜாக்கிர, ஸ்வப்பன, சுழுப்தியாகிய மூன்று நிலைகளும் இல்லை என்று விவேகிகள் அறிய வேண்டும். ‘இம் மூவித நிலைகளையும் உணரும் நான் யாராயிருக்கிறேன்?’ என்ற விசாரத்தால், நித்திரையின் அறிவின்மையை நீக்கி ஞானமயத் துரீய நிலையில் நிற்காதவர்களுக்கு மட்டுமே இம்மூன்று நிலைகளும், இதற்குமேல் ‘துரீயம்’ என்ற நான்காவது நிலையும், அதற்கும் மேலாக, ‘துரீயாதீதம்’ என்று ஐந்தாவதாகக்கூட ஒரு நிலையும், ஆகிய இவ்வைந்தைப் பற்றின வாதமும் பலமாயிருக்கும். ஞானிக்கோ ஒரே நிலைதான் உண்மை. நனவு, கனவு, துயில் மூன்றும் பொய்யாவதால் உண்மை நிலையான துரீயம் நான்காவது ஆகாது! ஐந்தாவதும் ஆகாது!! அதற்குப் பொருத்தமான பெயர் ‘அதீதம்’ என்பதே.
மேலே கூறப்பட்ட ‘சூக்ஷ்ம மனதுடன் ஸ்வரூபானுபவமுடைமையே [ஆத்ம ஸ்புரிப்புடைமையே] ஜீவன் முக்தி [துரீயம்] என்பது’ என்றும், ‘இந்த சூக்ஷ்ம மனமும் லயித்து சொரூபத்தின் அனுபவமும் இல்லாமல், ஆனந்தக் கடலில் மூழ்கி ஒன்றும் தோற்றாமல் அம்மயமாகவே இருப்பதே விதேக முக்தி [துரீயாதீதம்] என்பது’ என்றும், ‘மேல் ஒரு நிலையுமில்லை. இதுவே முடிவு’ என்றும் கூறுவர் ஸ்ரீ பகவான் (விசாரசங்கிரகம் 8.3).
நனவு கனவுதுயில் நாடுவார்க்(கு) அப்பால்நனவு துயில்துரிய நாமத்(து) – எனும் அத்
துரீய மதேஉளதால், தோன்றும்மூன்(று) இன்றால்,
துரீய வதீதம் துணி.
(உள்ளது நாற்பது – அனுபந்தம் 32)
பொருள்: விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று அவஸ்தைகளை அனுபவிக்கிற சம்சாரிகளுக்கு (அஞ்ஞானிகளுக்கு) அம்மூன்றுக்கும் அப்பாலுள்ள ‘விழிப்புத் தூக்கமானது (நனவுத்துயில் அல்லது ஜாக்கிர சுழுப்தியானது) துரீயம் என்ற பெயருடையது’. அந்தத் துரீய நிலை ஒன்றே உண்மையாகையால் நாம் காணும் நனவு, கனவு, துயில் மூன்றும் இல்லாதனவே (பொய்யே) ஆகும். ஆதலால், அந்தத் துரியமே துரீயாதீதமுமாகும் என்று அறிவாய்.
131 ‘ஸ்ரீ மஹர்ஷி வாய்மொழி’ என்ற நூலின் முதல் பாகம், முதல் அத்தியாயத்தில் (பன்னிரண்டாம் பதிப்பு, 2008, பக்கம் 10-ல்) காண்க.
132 ‘ஸ்ரீ மஹர்ஷி வாய்மொழி’ என்ற நூலின் முதல் பாகம், ஐந்தாம் அத்தியாயத்தில் (பன்னிரண்டாம் பதிப்பு, 2008, பக்கங்கள் 29-30-ல்) காண்க.