ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)
பிற்பால் (Appendix)
சாதனையும் தொழிலும் (01)
பிற்பால் பிற்பால் ஒன்று சாதனையுந் தொழிலும்
‘நீ, அவன், அவள் அது, இதுவென்று தோன்றும் முன்னிலை-படர்க்கைகளையே நாடுகின்றனரே தவிர, எவ்வொருவரும் “நான்” என்ற தன்மையை நாடுவதாகிய தன்னாட்டத்தை (Self-attention) மேற்கொள்வதேயில்லை, அதைச் செய்ய முயற்சிப்பதுகூட இல்லை’யென்பதே மனித சமூகத்தின்மேல் விழும் பெருங் குற்றச்சாட்டு. மக்களனைவரின் பொதுக் குறிக்கோளான சுகமானது உலகப் பொருள்களிலிருந்துதான் வருகிறதென்ற கருத்து தவறானதென்றறிந்து ஒத்துக் கொண்டவர்களே சாதகர் நிலைக்குத் தகுதி பெற்றவர்களாவர், இந்தத் தகுதி ஒருவருக்கு இருக்குமானால் ‘மனமுண்டானால் வழியுண்டு’ என்ற பழமொழியின்படி, தன்னையறிவதற்காகத் தன்னாட்டத்திற் பேரூக்கம் அவர்களது வாழ்வில் முக்கிய விஷயமாகிவிடும். இத்தகுதி வாய்க்கப் பெறாதவர்கள் ஆன்மீக சாதனை செய்யாமலிருப்பதற்கு ஏதாவது காரியங்களின் மேல் ‘கடமைகள்’ என்று கூறிச் சுமையைப் போட்டுச் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டே இருப்பர். இது சிரத்தையின்மையையே காட்டுகின்றது.
சாதகனொருவன் உலகில் உழைக்கக் கூடாதென்பது அவனுக்கிருக்க வேண்டியதோர் தகுதியல்ல. உழைப்பு, சாதனைக்குத் தடையாகாதென்று ஸ்ரீ பகவான் கூறுவதுண்டு. ஆனால், சாதகனொருவனின் உழைப்பின் நோக்கமும் இயல்பும் மற்ற உலக மக்களின் உழைப்பின் நோக்கத்திற்கும் இயல்பிற்கும் முற்றிலும் மாறுபட்டிருக்க வேண்டும். பணந்திரட்டி, பஞ்சேந்திரியங்களைத் திருப்தி பண்ணுவதே பாமரர் உழைப்பின் நோக்கம். ‘தன்னையறிதல்’ என்னும் முக்கிய காரியம் இவ்வுடலில் வாழும் நாளில்தான் நடைபெற வேண்டியிருப்பதால், உடல் உயிரோடு வாழ்வதற்கு மட்டும் தேவையான உணவு, உடை, உறையுளைப் பெற்றுக்கொள்வது மட்டுமே சாதகனின் உழைப்பின் நோக்கம். தவறோ, நல்லதோ எவ்வழியிலாவது உழைப்பது (செல்வம் எப்படியாவது திரட்டுவது) பாமரர்களது உழைப்பின் இயல்பு. ஆனால், சாதகன் உழைக்கும்போதோ, நேர்மையற்ற வழிகளில் உழைப்பதை விட, உடல் பட்டினி கிடக்க, உறையுள் கிட்டாது ஓரத் தெருவில் உறங்க, போதிய உடையின்றிக் குளிர் வெப்பந்தாக்க நேருவதைக்கூடப் பொறுத்துக் கொள்வதே மேல் என்ற கருத்தோடு, அதற்கேற்ற இயல்புள்ள உழைப்பை மட்டும் மேற்கொள்வது என்பது அவனது உழைப்பின் இயல்பு. இவ்வாறு இருவரது உழைப்பின் நோக்கத்திலும் இயல்பிலும் மிகுந்த வேறுபாடுண்டு.
சாதகனொருவனது உழைப்பின் நோக்கத்தை ஓர் உதாரணத்துடன் விளக்குவோம்.
ஒரு வியாபாரி ஒரு பட்டணத்தின் நடு வீதியில் ஒரு கடையை மாதம் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். வாடகைக்கு ஓர் கடையெடுத்து வியாபாரம் செய்வதன் நோக்கமாவது, மாதமொன்றுக்குப் பல்லாயிரம் ரூபாய்கள் லாபம் ஈட்டுவதேயல்லவா? அவ்வாறின்றி, அந்த வியாபாரி மாதம் முழுவதும் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வாடகை மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்பானாயின் அது பயனற்ற வியாபாரமும் அவன் ஒருஅறிவற்ற வியாபாரியுமே ஆகின்றதல்லவா?
நாம் எடுத்துள்ள இம்மனித சரீரமே வியாபாரத்திற்கான வாடகைக் கடை. நம் உடலுக்கு அளிக்கவேண்டிய உணவு, உடை, உறையுளாகிய அத்தியாவசியத் தேவைகளே கடை வாடகையாகும். ஒரு கை தேர்ந்த வியாபாரியின் நோக்கம் வாடகைச் செலவு போக மேலும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பதே ஆவது போல, ஒரு சாதகனின் நோக்கம் இவ்வுடல் வாணாளிலேயே உடலுக்கு உணவாதி கொடுப்பதற்காக உழைப்பது போக, ஆன்ம ஞானத்தைப் பெறுவதாகவே இருக்க வேண்டும். வியாபாரி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்காவிடில் அவனது கடை காலி செய்யப்படவேண்டி வருமல்லவா? கடை வாடகை கொடுத்தாலன்றி அவன் பெருலாபம் சம்பாதிக்கவும் முடியாது. அவ்வாறே இவ்வுடல் வாடகையை நாம் நமது உடல்மன வுழைப்பாலீட்டி அவ்வுடலுக்கே கொடுக்காவிடில் நாம் இவ்வுடலில் வாழ்ந்திருக்க முடியாது. உயிரானது உடலைக் காலி செய்யவேண்டி வரும். உடலில் நாம் குடியிருந்து நமது பிரதான நோக்கமான மெய்யறிவைப் பெற வேண்டுமாயின், ஓரளவு உடல் மனவுழைப்பால் உணவு உடை உறையுளாகிய வாடகையைச் சம்பாதித்து அவ்வுடலுக்குக் கொடுத்தேயாக வேண்டும். சாதகன் ஒருவனது புறமுக உழைப்பின் நோக்கம் உடல் வாடகையைக் கொடுப்பதோடு மட்டும் நின்றுவிட வேண்டும். அகமுகமாக மிக அதிகமாக உழைத்து ஆன்மாவையடைவதே உடலெடுத்த நோக்கமாய் இருக்க வேண்டும்.
உண்டி யுறையுளுடை தேட லுயிருடலி
லண்டியிருந்த தான்மஞா னானுபவங் – கொண்டிடவே,
யன்றி யுடல்வளர்க்க வன்று பிறந்தபய
னென்றறிந் துய்ய விரங்கு.
(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 62)
அவ்வாறின்றி, உடல் வாழ்வில் பஞ்சேந்திரிய சுகப் பொருள்களைக் கணக்கின்றித் தேடிக் குவிக்கும் நோக்கத்தால் பேராசையோடு, உறங்கவும் விரும்பாமல் நாள் முழுவதும் உழைப்பிலேயே செலவிடும் மனிதனோ, மாதம் முழுவதும் வாடகையான ஆயிரம் ரூபாய்க்கு மட்டும் வியாபாரம் செய்து கொண்டு, கடை வாடகை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கும் முட்டாள் வியாபாரியொருவனைப் போன்றவனேயாவான்.124
எனவே, சாதகனொருவன் தனது வாணாளிற் பெரும்பகுதியில் தனது உடல் மனத்தை உழைப்பில் ஈடுபடுத்தாமல், உடல் வாடகை கொடுப்பதற்கு வேண்டிய அளவு மட்டும் ஏற்றதாக உழைப்பை அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு தன் தொழிலைத் தானே வகைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவனுக்குத் தான் தனது வாழ்விற் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம் ஆன்ம சாதனையேயென்ற திடம் வந்ததாகும். இந்தத் திடம் வந்தவர்களே உண்மையான சாதகர்களாவர்.125 இந்தத் திடம் வந்துவட்டால் திருவருளும் சேர்ந்து விடுகின்றது. அந்தத் திருவருளின் தலையீட்டால் வர வர, அச்சாதகனின் புறமுகவுழைப்பின் அவசியமும் மேலும் மேலும் தாமே குறைந்துகொண்டே வரத்தக்க சூழ்நிலையும் வாழ்விலுண்டாகி விடுகின்றது. பிறகு, உடலின் குடி வாடகை ஓர் பெருஞ்சுமையாகாமல் தாமே நடந்தேறுவதை சாதகன் உணர்வான். இப்படிப்பட்ட சாதகர்களுக்கு உழைப்பின் நடுவிலும் எப்படித் தன்னாட்டம் சாத்தியமாகின்றதென்பதையும், அத்தன்னாட்டம் பிறகு எப்படி ஒரு நாளில் 24 மணி நேரமும் இடையறாத் தன்னியல்பாக மாறுகின்றது என்பதையும் இனி காண்போம்.
நாம் எவ்வளவு முக்கியமான வேலைகளின் இடையிலும் தினமும் காலை மாலைக் கடன் கழித்தல், நீராடல், அருந்தல், உண்ணல், உறங்கலாதிகளைச் செய்தே தீருகிறோமல்லவா? இவைகட்கு எப்படி நேரங்கிடைக்கச் செய்து கொள்கிறோமோ அப்படியே ஒவ்வொரு நாளிலும் சுமார் பத்து நிமிடங்களாவது தன்னாட்டத்திற்காக அமர்வது என்ற ஒரு சாதனைக் கிரமத்தை முதலில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அது காலையோ, மாலையோ, இரவோ மற்றும் எந்த நேரமாயினும் சரியே. ஆனால், அந்தச் சமயம் மனம் எவ்விதக் கவலையுமில்லாமல் ஓய்ந்தும், ஆனால் சோம்பலின்றியும், உற்சாகமாகவும், உடல் களைப்பின்றிச் சுறுசுறுப்பாகவும், தூக்கத்திற்கு அவசியமில்லாமலும் இருக்க வேண்டும். அவரவர்க்கு எச்சமயத்தை இதற்கேற்பத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியுமோ அவ்வச் சமயமெல்லாம் சுப நேரமே. இவ்வாரம்ப முயற்சி சிறிது காலம் நடந்து வரட்டும். இவ்வாறு தினசரி வாழ்வில் தன்னாட்டப் பயிற்சிக்குச் சிறிது இடங் கொடுப்பதாவது126 ‘கூடாரமும் ஒட்டகமும்’ என்ற கதையில் நிகழ்ந்ததைப் போல் நம் வாழ்வில் பெருத்ததோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் ‘நான்’ என்னுந் தன்மையுணர்வை நாடும் பழக்கம் நமக்கு அறிமுகமானதோர் காரியமாகிவிட்ட பிறகு, வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது கூட இடையிடையே கிடைக்கும் 5 அல்லது 3 அல்லது 2 நிமிடங்களாகிய ஓய்வுகளிலுங்கூட (அதாவது, ஒருவித வேலையினின்றும் மாறி மற்றொருவித வேலையை ஆரம்பிக்கும்முன் இடையிலேற்படும் அற்ப நிமிட ஓய்விற்கூட), நம் கவனத்தைப் பிறவற்றினின்றும் நீக்கித் தன்னை நோக்கி ஒரு முறையாவது செலுத்தலாம். ஒவ்வொரு சிறு இடைவேளையிலும் இவ்வாறே தன்மீது கவனத்தைச் செலுத்திப் பழக்க ஆரம்பிக்கும் சாதகன், சில நாட்களுக்குப் பிறகு, வேலைகளின் இடையே கிடைக்கும் சிறிய ஓய்வு நேரங்களிலுங்கூட, முயற்சியின்றித் தாமாகவே மனம் தன்மையை நாடித் திரும்பிக் கொள்வதை அறிவான். வேலைகளின் இடையில் தற்கவனப் பழக்கம் தாமாகவே தூண்டப்பெறுவது சாதனையில் முன்னேற்றத்தைக் காட்டும் நல்ல அறிகுறியாகும். இவ்வாறு சாதனை நடைபெறும் நாட்களில் இரவில் படுக்கப் போகும்முன் அன்று முழுவதும் ஓரிரு நிமிடங்களாக விட்டுவிட்டுச் செய்யப்பட்ட தன்னாட்டத்தின் மொத்த நேரத்தைக் கணக்கிட்டால் ஒன்று அல்லது இரண்டு மணியளவுக்குக்கூடச் சேர்ந்து விட்டதை அறியலாம். மேலும் உழைப்பின் இடையிடையே விட்டுவிட்டுப் பழகப்படும் தன்னாட்டம், பிறகு காலையிலோ மாலையிலோ அதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் கிரமமான காலங்களில் நன்றாக இயற்றப்பட முடிவதையும் சாதகன் அறிய முடியும்.
திரும்பி யகந்தனைத் தினமகக் கண்காண்
டெரியுமென் றனையென் னருணாசலா.
என்பது குருபகவான் இதை ஆமோதித்தருளிச் செய்த அறிவுரையாகும்.
கிரமமாகத் தினந்தினம் செய்யப்படும் தன்னாட்டப் பழக்க நேரத்திலுங்கூட முதலில் ஒரேயடியாக அரை மணி நேரமும் மனதைத் தன்மையுணர்வின் மேல் அசையாமல் ஊன்றி நிறுத்துவது சிரமமே. இடையிடையே மனம் வேறு எண்ணங்களை உண்டுபண்ணிக் கொண்டு அவற்றின்பின் அலைய ஆரம்பிப்பது இயல்பே. பிறகு, அதை முன்னிலை--படர்க்கைக் கவனத்திலிருந்து வழிமறித்துத் (‘இந்த எண்ணங்களை எண்ணுவது யார்?’ என்ற கேள்வி மூலம் ‘நான்’ என்ற தன்மையுணர்வின் ஞாபகத்தைப் பெற்று) திருப்புவதும், பிறகு அது மீண்டும் சில நிமிடங்களுக்குள் தன் மறதியாற் புறமுகப்பட்டு வெளியேறி விடுவதுமாகவே இருக்கும்.127 இவ்வாறு அரைமணி நேரமும் விடாப் போராட்டம் செய்துகொண்டிருப்பதால் மனம் களைத்துப் போகும். ஆகவே, இவ்வாறு விடாமல் வெகுநேரம் ஒரேயடியாகப் போராடிக் கொண்டிருப்பது வீண். தன்னாட்டத்திற்காக உட்கார்ந்ததும் தன் இருப்புணர்வின் மேல் கவன சக்தியைத் திருப்பி, ஓரிரு நிமிடங்கள் மட்டும் நிற்கச் செய்தலே போதும். அது சற்று நின்று, பிறகு தற்கவனத்தினின்றும் நழுவும்போது, முயற்சியைத் தளர்த்தி (relax செய்து) விட்டுக் (கண்களைத் திறந்தோ அல்லது திறக்காமலோ இருந்து) கொள்ளலாம். மறுபடி ஒரு நிமிடங்கழித்து மீண்டும் கவனசக்திக்குத் தன்னாட்டத்தில் ஒரு திருப்பம் கொடுக்க, இப்போது மனம் சற்று உற்சாகத்துடன் தன்னாட்டத்தில் ஓரிரு நிமிடங்கள் ஈடுபடும். பிறகு ஒரு நிமிடம் முயற்சியை நிறுத்திவிட்டு relax செய்துகொண்டு மீண்டும் தன்னாட்டத்திற் பதிக்க. இவ்வாறு விட்டுவிட்டு முயலப்படும் தன்னாட்டத்தால் ஒவ்வொரு முயற்சியும் புத்துணர்ச்சியும், புது பலமும் உடையதாக அமைய ஹேதுவாகின்றது.
128 உதாரணமாக ஓர் எடை அல்லது அழுத்தமளக்கும் கருவியில் நமது கைப் பெருவிரலை வைத்து அழுத்தும்போது அக்கருவியின் முள் 10 கிலோகிராம் காட்டுகிறதென்று வைத்துக் கொள்வோம். ஆனால், வெகுநேரம் விரலை அழுத்திக்கொண்டே இருந்தால், வர வர எடை அல்லது அழுத்தம் குறைந்து கொண்டே வருவதை முள் காட்டும். அதற்கு மாறாக, கை விரலை எடுத்துவிட்டுச் சற்று நேரங்கழித்து மறுபடியும் விரலால் அழுத்தினால் இப்புது அழுத்தத்தால் 10 கிலோ கிராமுக்கு மேலேயும் முள் சென்று திரும்புவது தெரியும். தன்னாட்டத்திலும் இப்படியேதான் நிகழ்கிறது. ஒருவன் ஒரேயடியாக வெகுநேரம் உட்கார்ந்தபடியே தன்னாட்டத்தில் முயன்றுகொண்டே இருப்பானாயின், தன்னாட்டத்தின் கூர்மையும், தெளிவும் வர வர மங்கிக் குறைந்து வரும். மாறாக, பிற எண்ணங்களால் தன்னாட்டம் மலினமடைய ஆரம்பித்தவுடனேயே முயற்சியை நிறுத்திவிட்டு (கண் திறந்தோ, திறவாமலோ இருந்தபடி) பிறகு சிறிது நேரத்தில் மறுபடியும் தன்னிருப்புணர்வின் மேல் நாட்டத்தைச் சரேலெனத் திருப்பினால், அந்த நாட்டம் அப்போது அதிகத் தெளிவும், திறமும், கூர்மையும் கொண்டதாகி விடுவதால், இன்னும் தன்னுள் ஆழ்ந்து நிலைபெற இயலும். எனவே, எவ்வளவு நேரம் ஒரே மூச்சாக உட்கார்ந்திருக்கிறோம் அல்லது முயல்கிறோம் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு முறையும் தன்னாட்டத்தில் எவ்வளவு உண்மையும், ஆர்வமும், கூர்மையும், தெளிவும் அதிகரிக்கச் செய்கிறோம் என்பதே கவனிக்கத் தக்கது.
மேற்கண்டவாறு தினமும் தன்னாட்டம் பயின்று வரும்போது ஓர் சாதகனுள் நடந்து வருவதென்ன?
முன்னிலை படர்க்கையை நாடி நிற்கும் மனம் அந்நிலையிலிருந்து 180 டிகிரி நேர் பின்புறம் திரும்பித் தன்னை – தன்மையைக் கவனிக்க வேண்டுமல்லவா? ஆரம்பத்தில் முயற்சி செய்யும் ஒவ்வொரு தடவையிலும் அவரவர் திறமைக்கேற்றவாறு 5 டிகிரியோ, 10 டிகிரியோ, 30 டிகிரியோதான் சரியான தன்மையை நோக்கி நம் கவனம் திரும்ப முடியும். இந்தத் திறமையானது ‘தன்னையறிய வேண்டும்’ என்று எழுந்துள்ள ஆவலின் வேகத்தை ஸ்வாத்ம பக்தியின் மிகுதியைப் பொறுத்து சாதகர்களுக்குள் வேறுபட்ட அளவில் அமைந்து நிற்கின்றது. தினமும் செய்யும் பயிற்சியாலும், ‘ஆன்மாவை அறிவதே முதன்மையானது, இதுவே கடமை; இதுவே நம் வாழ்வின் லக்ஷியம்’ என்று அடிக்கடி நம்மை இடித்துக் கூறிப் புகட்டும் ஞான நூல்களுடனோ, மனிதர்களுடனோ நாம் மேன்மேலும் கொள்ளும் தொடர்பாலும் (சத்சங்கத்தாலும்) இந்த ஆன்ம நாட்டத்திற் பக்தி பெருகி வளர்ந்துகொண்டே வரும். இப்பக்தி வளர வளர, மேன்மேலும் தன்னை நோக்கித் திரும்பும் திறனும் (15, 30, 90, 120, 150 டிகிரியென்ற அளவில் திரும்புவதற்கேற்ற சக்தியும்) நமக்கு அதிகரித்துக் கொண்டே வரும். அதே சமயத்தில் (சற்றுக் கவனித்துப் பார்த்தால்) தன் இருப்பைப் பற்றிய ஏதோ ஓர் உணர்ச்சியின் (பிரக்ஞையின்) தொடர்பு விடாது தன்னுள் இருந்து வருவது நமக்கே தெரிய வரும். (அதாவது ஒரு சிறு குழந்தை தன் தாயின் மடியில் உட்கார்ந்த வண்ணமே அருகிலிருக்கும் பொம்மைகளுடனோ, மற்ற மனிதர்களுடனோ விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதுங்கூட, ‘தன் தாயின் மடியிலிருக்கிறோம்’ என்ற நிச்சயமும், அதனால் ஒருவித பயமின்மையும் சகஜமாகவே விடாது இருந்து வருவது போல,) இடைவிட்டு விட்டுப் புதிது புதிதாகச் செய்யப்படும் இவ்வநேக முயற்சிகளில் ஒவ்வொன்றும் நமக்குச் சிறிது சிறிதாக அதிகமானதோர் திரும்பும் சக்தியைச் சேகரித்துத் தரும். ஆயினும் இது அப்பியாச காலமே. இவ்வப்பியாச காலம் முழுவதும் நடக்கும் தன்னாட்டம் விட்டு விட்டுக் கருதுதலே தவிர, விடாது கருதுதலல்ல என்றறிய வேண்டும், எப்போதும் இடைவிடாது கருதுதல் (unceasingly and unswervingly attending or to abiding in Self) என்பது எப்போது எப்படிச் சித்திக்கின்றதென்று மேலே காண்போம்.
மேலும் மேலும் ஆவலோடு (பக்தியோடு) இவ்வாறு தற்கவனம் பழகும் சாதகனுக்கு குருவருளும் மிகமிக உதவிக்கு வந்து விடுகின்றது! விசையுற்றெரியும் நெருப்போடு, வீசுங்காற்றுஞ் சேர்ந்தாற்போல், உள்ளே கனன்று வரும் தன்னாட்டப் பயிற்சியார்வத்தோடு (ஸ்வாத்ம பக்தியோடு) குருவருளுங் கூடிக் கொள்ளவே, சாதகன் தான் செய்துவரும் இவ்வான்ம யோகப் பயிற்சியில் மிகத் துரிதமாக முன்னேறிக் கொண்டு வருகின்றான். இந்நிலையில் இவனாற் செய்யப்படுந் தன்னாட்டப் பிரயத்தனத்தில் ஏதாவதொரு தடவையாவது, ஒரு கணப் போதாவது 180 டிகிரியும் பூரணமாகத் திரும்பித் தன்மேல் தன்னாட்டம் படும்போது, உள்ளத்தில்
– மறதியின்றிக்
காத்திருந்த வீசனருட் கைப்பிடியுட் சிக்கிமனம்
மீத்திரும்பா தாழ்ந்து விடும்.
(சாதனை சாரம் 237)
அங்கு ஓர் பெரிய மாறுதல் (மெய்விழிப்பு) தாமாகவே நடைபெறுவதை அவன் அறியமுடியும். அதாவது, தினந்தினம் பலமுறை முயன்று பற்பல டிகிரிகளாகத் திரும்பி, ஆனால் மீண்டும் பகிர்முகப்பட்டு வந்த கவன சக்தியானது, 180 டிகிரியும் பூரணமாகத் திரும்பும் வாய்ப்பை ஒரே முறையாவது பெற்றதும், உடனே அங்கு ஒரு 129(கொக்கி – Clutch) அருட்பிடிப்புக்குள் சிக்கி விடுகின்றது. பிறகு அம்மனம் என்றென்றும் திரும்பிப் பகிர்முகமடைவதே இல்லாமற் போகின்றது. அந்தப் பிடிப்பே (Clutch தான்) ‘குருவருள்’ எனப்படுவது. இதுவரையிலும் கொஞ்சங் கொஞ்சமாக உள்ளே திரும்ப உதவியதும் அந்தத் திருவருளின் பேருதவியேயென்றாலும், ‘அருளுக்குப் பூரணமாக ஊணாவது’ என்பதை இப்போதுதான் உண்மையில் வாய்க்கப் பெறுகின்றான் அச்சாதகன்! இவ்வாறு திருவருளால் தடுத்தாட்கொள்ளப்பட்ட மனம் பிறகு என்றுமே பகிர்முகப் படுவதில்லை! இதையே ஞானாநுபூதி என்கிறோம்.
‘பிறகு, அந்த மனம் (மனிதன்) என்றுமே முன்னிலை-படர்க்கை நாட்டத்தைப் பெற்று இதரப் பொருள்களை அறிய முடியாதபடி சமாதியிற் சொக்கிக் கிடந்து விடுமோ?’ என்று சிலர் கேட்பதுண்டு. சமாதியின் லக்ஷணம் அது மட்டுமன்று. சிலருடைய தேகம் வாணாள் முழுவதும் அப்படியே காஷ்ட சமாதி நிலையிலிருந்து விடுவதுமுண்டு, என்றாலும், அப்படி ஒரே மாதிரி எல்லோருடைய தேக வாழ்வும் நடக்க வேண்டுமென்ற நியதியில்லாததால் (அதாவது அவ்வத் தேகப் பிராரப்தம் வேறுபடுமாகையாலும், ஆனால் பிராரப்தத்தாற் கட்டுப்படாத அவர்களது ஞானம் வித்தியாசப்படாது என்பதாலும்) பிராரப்தத்திற்குக் கட்டுப்பட்ட தேக வாழ்க்கை ஒன்றுக்கொன்று மாறுபடலாம். சிலர் சில காலத்திலோ, சிறிது நேரத்திலோ உடலுணர்வு பெறுவதாக, மற்றவர் திருஷ்டிக்குக் காணப்படலாம். இப்படிக் காணப்பட்டாலும் அவன் அடைவது முன்னிலை–படர்க்கை நாட்டமல்ல. பின் என்ன? இதுகாறுந் தன்னை ஒரு சிறு உடலளவாக மட்டும் குறுக்கிக் கருதி வந்ததால், உண்மையிற் குறுக்கப்படாத தனது அகண்ட ஆன்ம சொரூபமே, மாயையால், நாம ரூபங்களோடு எதிரே முன்னிலை-படர்க்கைப் பொருள்களாக அவனால் தவறாக மதிக்கப்பட்டிருந்து, இப்போது தன் நிஜத் தன்மையுணர்வு தெரிந்துவிட்ட படியால், மாயை தோஷம் நீங்கிவிட்ட படியால், அதாவது, தன்னை உடலாகக் கருதாத ஞானத்தால் அவை யாவும் தனக்கு அன்னியமற்றுத் ‘தான்’ ஆகவே விளங்கும். அவன் அவற்றைப் பார்க்கும்போதும் தன்னைப் பார்ப்பவனேயாகின்றான்.130 சுருங்கச் சொல்லின், அவன் பார்ப்பனவெல்லாம் தன்னைத்தவிர வேறொரு பொருளுமல்ல என்றாகிறது. இதுவே என்றென்றும் இடைவிடாமல் தன்னில் 24 மணி நேரமும் ஊன்றி நிற்கும் நிலையாகும். நழுவாத் தன்னாட்டமும் ஆன்மானுபவமும் ஒன்றே. ஆன்ம ஞானி ஒருவனே இடைவிடாமல் ஆன்மாவைத் தியானிப்பவனாவான். இவ் விடைவிடா ஆன்மத் தியானம் அப்பியாச காலத்தில் நடவாத காரியம். அப்பியாச காலத்தில் நடப்பதெல்லாம் அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகளே. இதையே இந்நூலின் பக்கம் 145-ல்,
... – ஜீவமயல்
தீர்வ தொரேகணத்துத் தீர்வேதான்...
(in a split second) என்று சாதனை சாரம் பாடல் 324-ல் கூறப்பட்டது.
124 சாதனை சாரம் என்ற நூலில், ‘கடை வாடகை’ என்ற தலைப்பின் செய்யுட்கள் 46, 47-ஐ மீண்டும் இங்கு வாசித்தறிக.
125 ஆன்ம லாபத்திற்காகவே வாழ்க்கையின் தொழில் முறையைத் திருத்திக் கொண்டு வாழும் மெய்ச் சாதகனொருவன், புத்திசாலியான கடை வியாபாரிக்குச் சமானமானவன். அவனது வாழ்வில் லௌகீக மேம்பாடுகள் ஒன்றும் அதிகமாகத் தென்படாதுதான்! ஆனால், புருஷார்த்தமாகிய ஆன்ம லாபமோ தடையின்றி அளவின்றிச் செழித்து வளரும். நம் பாரத நாடும் இது போன்றதே! முற்காலத்திலும் தற்காலத்திலும் நம் இந்தியப் பெருமக்கள் இந்த மூல தத்துவத்தை நன்குணர்ந்து கடைப்பிடித்து வந்ததனால்தான் பொருளாதாரத் துறையில் பின்தங்கிய நாடுபோல இந்தியா காணப்பட்டாலும், உயர்ந்த ஆன்ம சக்தியில் இந்தியா பிற நாடுகளை விஞ்சியதாய் – அவைகட்கு வழிகாட்டுவதாய் – உள்ளது. வெறும் பொருளாதாரத்தில் மட்டும் முன்னேறும் நாடுகளெல்லாம், வாடகைக்கு மட்டும் சம்பாதிக்கும் வியாபாரியைப் போன்றவைகளேயாகும். ஆன்மீக லக்ஷியத்திற்குப் பாடுபடும் மக்களைக் கொண்ட பாரதம், பல்லாயிரக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கும் விவேக புத்தியுள்ள சாமர்த்தியசாலியான வியாபாரிக்குச் சமமாகும். இவ்வுண்மையை வாசகர்கள் நன்கு சிந்தித்து அமைக.
126 ‘கூடாரமும் ஒட்டகமும்’ என்ற கதை: அரேபியாவில் ஒட்டகத்தின்மேல் அலைந்து திரியும் ஒரு மனிதன், வழியில் ஓர் இரவு ஒரு சிறு கூடாரம் இட்டுக்கொண்டு, ஒட்டகத்தை வெளியில் கட்டி வைத்துவிட்டுத் தான் மட்டும் குளிருக்காகக் கூடாரத்தினுள் படுத்துறங்கினான். நடு நிசியில் விழிப்பு வந்தபோது, ஒட்டகம் குளிர் தாங்காமல் தனது முகத்தை மட்டும் கூடாரத்தினுள் நுழைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். ‘சரி, முகத்தை மட்டுமாவது உள்ளே வைத்துக்கொள்ள இடம் கொடுப்போம்’ என்று தீர்மானித்தான். மறுமுறை அவன் விழிப்புற்றபோது, ஒட்டகம் தன் கால்களையும் தலையையும் உள்ளே நுழைத்துக்கொண்டு விட்டதை அறிந்தான்; அனுமதித்தான், தூங்கிவிட்டான். விடியற்காலையில் விழித்துப் பார்த்தால் - ஒட்டகம் கூடாரம் முழுவதையும் வியாபித்துக்கொள்ள, இவன் வெளியில் உருண்டு கிடப்பதை உணர்ந்தான்! தன்னாட்டப் பழக்கத்திற்கு, இவ்விதம் சாதகர்கள் முதலில் சிறிது இடம் கொடுத்தால் போதும். திருவருளுதவியால் அது முடிவில் வாழ்வு முழுவதையும் சுவீகரித்து விழுங்கிவிட்டு, ஆன்மாகாச வெட்டவெளி வாழ்வையே அவனது இயல்பாக்கி விடுவதை ஒருவன் அனுபவத்தில் தெரிந்துகொள்ள முடியும்.
127 ‘எண்ணங்களையே கவனித்துக் கொண்டு போ’ என்று சில போதகர்கள் தற்காலம் சாதகர்களுக்குப் போதிப்பது எவ்வளவு பெருந்தவறான வழி என்பதை – ஸ்ரீ ரமண பகவானது போதனைக்கு முற்றும் முரணானது என்பதை - இங்கு வாசகர்கள் கண்டறிந்து உய்வாராக.
128 சாதனை சாரம் பாடல் 236-ன் குறிப்பை இங்கு வாசித்துணர்க.
129 இங்கு ‘அருட் பிடி, கொக்கி’ என்று எது கூறப்பட்டதோ, இதையே ஸ்ரீ பகவான் ‘ஓர் சக்தி கிளம்பி’ என்று விவரித்துள்ளனர் என்று இந்நூலின் பக்கம் 144-ல் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிக.
130 ஒரு முறை ஸ்ரீ பகவான் ஐன்னலின் வழியே அருணாசலத்தை நோக்கியவண்ணம் இருந்தபோது அன்பரொருவர், ‘பகவான், அண்ணாமலையைப் பார்க்கின்றீர்களா?’ என்று வினயமுடன் வினவினார். அதற்கு விடையாக ஸ்ரீ பகவான், ‘நான் என்னையேதான் பார்க்கிறேன்’ என்று கூறியருளினர்.