ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)
அனுபந்தம் (Supplement)
வினை (கர்மம்) (Chapter 3 )
அத்தியாயம்-3. வினை (கர்மம்)
அத்தியாயம்-3. வினை (கர்மம்) கர்மோற்பத்தி
உள்ள பொருள் பிரம்மம் எனப்படும் நாம். ஒரு விகாரமும் (மாறுதலும்) அற்ற நம் நிலையை இருப்பு (சத்) என்று குறிப்பிடலாம். இந்த இருப்பானது நம் இருப்பே ஆகையாலும், ‘நாம் இருக்கிறோம்’ என்ற உணர்வாலும் நம்மை நாம் அறியாமல் இல்லை; அறிந்தே இருக்கிறோம். இவ்வறிவே சித். ‘நாம் இருக்கிறோம்’ (சத்-சித்) என்ற யாதொரு விகாரமுமற்ற தன்னிலையில் அனைவர்க்கும் பிரியம் இருப்பது தூக்கத்தால் விளங்குகின்றது. பிரியத்திற்குக் காரணம், நம் இருப்பு சுகமயமானது என்பதே! ஆகையால், நாம் ஆனந்தம்; எனவே, நாம் சச்சிதானந்தம்.
இவ்வாறு உணரப்பட்ட நமக்கு நமது இயல்பான அந்நிலையில் அன்னியமாக வேறொன்றுமில்லாததால் சச்சிதானந்தமாகிய நாம் ஏகம். நம் ஏக நிலை பூரண சுதந்திர நிலை. ஏனெனில், அங்கு நம்மைக் கட்டுப்படுத்தவோ, நம்மாற் கட்டுப்படவோ அன்னிய வஸ்து ஒன்றுமில்லாததால் ஏக, சச்சிதானந்த, பரிபூரண சுதந்திரத் தன்மையே நம் இயல்பு என்பது தீர்ப்பு. நாம் பரிபூரண சுதந்திரன் என்பதன் விளக்கம் என்னவென்றால் நாம் நம் இஷ்டப்படி எதுவும் செய்ய வல்லோம் என்பதே. இப்படிப்பட்ட இஷ்டமும் வல்லமையும் நம்மிடம் இருப்பதால்தான் நாம் சுதந்திரன் என்றோம். இவ்விஷ்ட வல்லமையே நமது சக்தி. இது நாமே. நமது வல்லமையும் (சக்தியும்) நாமும் வேறல்ல.
...உளதுனி லலதிலா வதிசய சக்தி...
(ஸ்ரீ அருணாசல அஷ்டகம் 6)
தனது இஷ்ட வல்லமையின் விலாசத்தால் அசலமாயிருக்கவோ சலனமாய் எழும்பவோ செய்யும் சுதந்திரம் உள்ளவனான அப்புருஷன், தன் சுதந்திரத்தால் அப்படியே இருந்தபடி இருக்கலாம்; அல்லது சர்வ வல்லமையுள்ள தன் சக்தியால் அப்புருஷன் தன் அகண்ட ஏக நிலையை மறந்தவன் போல இருக்கும் ஓர் கற்பனையாகிய மறதிக்கும் உட்படலாம். தூக்கத்தில் தன் மனத்தாலேயே, தன்னையே சொப்பன ஜகமாகவும், அதில் உள்ள உயிரினங்களாகவும் தனக்கோர் உடலுள்ளவனாகவும் காண்பதுபோல, தனது இஷ்ட வல்லமையினாலேயே மேற்கொண்ட கற்பனையாகிய அந்தத் தன்மறதி நிலையில், தன்னாலேயே, தன்னிலேயே, தன்னையே அளவுக்குட்பட்ட ஓர் ஜீவனாகவும், அதே சமயத்தில் (ஜாக்கிரத்தில்) அந்த ஜீவனுக்குக் காணப்படும் உலகம், உயிர், கடவுள் ஆகிய திரிபதார்த்தங்களாகவும் (தன்னையே) காண்கின்றான். இவ்வாறு தன்னை மறந்த மறப்பு என்னும் பொய்க் கற்பனையாகிய அஞ்ஞானத் தூக்கத்தில் ஜீவ-ஈசுவர-ஜகங்கள் என்னும் சொப்பனத்தை, பரம்பொருளாகிய நாம் நம் சுதந்திரத்தாற் கற்பித்துக்கொண்ட ஜீவ மதியால் காண்கிறோம்.
தன்னைக் குறுக்கித் தனுவாக்கித்
தனுவி னுணர்வை சகமாக்கித்
தன்னைக் கண்டே தான்மயங்குந்
தடுமாற் றந்தான் சகமாயை.
(சாதனை சாரம் 44)
இந்த மயக்கம் வெறுங் கற்பனையே; நமது கற்பனையே!
நாம் நமது சுபாவ நிலையான சுதந்திர இச்சா வல்லபத்தை இப்படிப் பிரயோகப் படுத்தினாலுங்கூட, அப்படிப் பிரயோகிக்காமல் இருக்கவும் நமக்குச் சுதந்திரம் உண்டு! அல்லவா? இந்தச் சுதந்திரமே நம் பிரம்ம சுபாவம். நம்மைத்தவிர வேறொன்றும் ‘சத்’ என்பதில்லாததால் இது எக்காரணத்தாலும், எதனாலும் அழிக்கப்பட முடியாத சுதந்திரம்!! மேற்கூறிய மாயா112 விலாசத்திற் காணப்படும் ஜக-ஜீவ-ஈசுவரர்களான சர்வமும் நம் கற்பனையாலேயே இருப்புள்ளவையாகத் தோன்றுகின்றன. அவை சுய (சத்) இருப்பு உள்ளவையன்று. ஆகையால், மாயா விலாச நிலையிலுங்கூட நாமே சத் பொருள். நம்மைத்தவிர அவை கிஞ்சிற்றும் உண்மையிருப்பு அற்றவையே. அதனால் இரண்டாவது பொருள் என்று ஒன்றும் இல்லை; நாமே உள்ளோம்!
இவ்வாறு தன் அற்புத மாயா சக்தியால் தானே தன்னைப் பல ஜீவ-ஜக-ஈசுவரர்களாகக் கண்டு, அவற்றுள் தன்னை ஒரு ஜீவனாகவும் கருதிக்கொண்ட கற்பனையே இப்போது ஒவ்வொருவரிடமும் ‘நான்’ என்ற குறுகிய (தற்போது) பாவமாகக் கொள்ளப்பட்டு விளங்கும் அகந்தையாகிய முதல் எண்ணமாகும். இது ஒரு வெறும் எண்ணமே தவிர, நம் உண்மையுணர்வு (ஆன்மவுணர்வு) அல்ல, அல்லவா? எனினும் இந்த ‘நான் ஜீவன், நான் ஒரு மனிதன்’ என்ற விகற்பத்தோடு கூடிய ஜீவனிடத்தும் அவனது உண்மையியல்பான – பரமார்த்த இயல்பான – சச்சிதானந்தத் தன்மை இல்லாமற் போவதில்லை. அதனால் இந்தக் கற்பனை ஜீவனும் பரம சுகமயமாக இருக்க விரும்புவதில் தவறோ ஆச்சரியமோ ஒன்றுமில்லை. ஆனால், இவன் தன்னைத் தூல, சூக்ஷ்ம, காரண உடல்களுள் ஏதேனும் ஒன்றாகவும், அப்போது அவ்வுடல்களுக்கேற்ற உலகங்களைத் தனக்கு வெளியிற் காண்பதாகவும் உணர்வதால், அவ்வெளிப் பொருள்களிலிருந்து சுகம் பெறலாம் என நினைக்கிறான். அந்தோ! அச்சுகம் தன் சுத்த சுதந்திர சுபாவ நிலையாகத் தன்னுள்ளேயே உள்ளது (தானே அது) என்பதை இப்போது அறியாதவனாயிருப்பதே அவனுக்குத் தன் மறதியால் (பிரமாதத்தால்) ஏற்பட்டுள்ள திரை (மறைப்பு) ஆகும்.
இதனால், அந்த ஜீவன் தான் சுகமடையும் பொருட்டுத் தன் மனம், வாக்கு, உடலாதிகளை, தன்னால் எவ்விதமெல்லாம் இயலுமோ அவ்வாறெல்லாம் உபயோகிக்கின்றான். இதுவே அவனது கர்மாரம்பம். இவ்விதம் வினை உற்பத்தியாகின்றது! இவ்வாறு ஆரம்பிக்கப்படும் கர்மங்களுக்குக் காரணம், தான் மறந்து இழந்ததுபோலத் தோன்றும் தன் சுபாவ சுகநிலையை மீண்டும் அடையவேண்டும் என்ற ஆவலேயல்லவா? ஆயினும், இவ்விச்சா சக்தியானது தேகமனாதிகளின் மூலம் வெளிப் பிரவிருத்தியாக (புற நோக்காக) இருப்பதால், அவ்விருத்திகளாகிய கர்மங்களின் பயனாக ஜீவன் தன்னைத் தன் மூல நிலையமான சுகத்தினின்றும் மேலும் மேலும் வெகுதூரம் விலக்கிக்கொண்டே போகின்றான். இவனது கர்மப் பிரவிருத்தி முழுவதும் இவனைச் சுகத்தினின்றும் வெளியேற்றுகின்றதே தவிர, இவனுக்குச் சுகத்தை அடைவிப்பதில்லை. இங்ஙனம் ‘கர்மம் சுக சாதனமல்ல; துக்க சாதனமே’ என்று அறியும்வரை மனிதன் பெருவிருப்பத்தோடு கர்மம் செய்துகொண்டேயிருப்பான். மனம் வாக்குக் காயத்தால் அவன் செய்யும் சகல கர்மங்களும் அவனை அவனது லக்ஷியமான சுகத்தினின்றும் வெகு தொலைவுக்குத் தள்ளிக்கொண்டே வருகின்றன.
கர்மப் பாகுபாடு
பரம வஸ்துவாகிய நாம் நம் பரிபூரண சுதந்திரத்தினால் நம் உண்மையியல்பை மறந்ததுபோற் காணும்போது, அம்மறதியின் விளைவால் ‘ஓர் ஜீவன்’ எனப்படும் நமது பொய்த் தோற்றம் உண்டாகின்றது என்று கூறினோமல்லவா? இவனே தன்னை ஓர் உடலாகக் கருதிக்கொண்டு, அதனால் தன்னை ‘ஒரு மனிதன்’ என்று உணர்கிறான். இப்போது இவன் தன்னை அளவுக்குட்பட்டதோர் இருப்பு (ஸத்) அறிவு (சித்), இன்பம் (ஆனந்தம்) உடையவனாகவே உணர்கின்றான். அதாவது, எல்லையற்ற தன் இருப்பை (ஆன்ம இருப்பை) அளவுக்குட்பட்ட உடலளவான இருப்பாக உணர்கின்றான். அன்னியம் ஒன்றுமின்றி தானே ஏக பரிபூரண அகண்டமான தன் ஆன்ம அறிவை இப்போது ஐம்புலன்களின் வழியாக (தன்னைத் தவிர – ஆன்மாவைத் தவிர மற்றவற்றை) மட்டும் அறிகிற அற்பப் புலனறிவு அல்லது மன அறிவாக உணர்கின்றான். என்றும் குறையாததும், பிறவற்றின் தயவால் – ஹேதுவால் – உண்டாகி அழியாததுமான தன் பரம சுகத்தை (ஆன்ம சுகத்தை) இப்போது புலன்களின் வழியாக அனுபவிக்கப்படும் விருப்பு வெறுப்பாதி அற்ப சுகமாக(சிற்றின்பமாக)வும், அது வெளிப் பொருள்களிலிருந்தும் அவைகளைச் சேரும் புலனுணர்ச்சியாலும் கிடைக்கக்கூடிய நீடித்திராத சுகமாகவும், தனக்கு எப்போதும் உள்ளதாக இல்லாமல் எப்போதாவது புண்ணிய (கர்ம) வசத்தால் மட்டும் கிடைக்கக்கூடிய சுகமாகவும் கருதுகிறான். இவ்வாறு தன்னை எல்லைக்குட்பட்ட சத்-சித் ஆனந்தமுள்ள ஓர் அற்ப ஜீவனாகத் தாழ்த்தி அறிந்துகொண்டு அதனால் அதிருப்தியும் துன்பமும் அடைகின்றான். இவ்விதம், எல்லையற்ற சச்சிதானந்த ஆன்ம சொரூபத்தை குறுகியதோர் ஜீவ சொரூபமாகக் கருதிப் பிரமிக்கும்போது (கற்பனையாற் காணப்படும் போது), இருப்பு மாத்திரமாய் நிற்கும் அபார வல்லமையாகிய நமது அகண்ட பரிபூரண சுதந்திரமும், ஆகாமிய கர்மங்களை இயற்றும் குறுகிய, அற்ப ஜீவ சுதந்திரமாக ஜீவனிடம் காணப்படுகின்றது.
தனக்கு அன்னியமாக இரண்டாவது வஸ்து யாருமில்லாத அவன், இப்போது பிறரை அல்லது பிற பொருள்களைக் கண்டு அஞ்சுகிறான் அல்லது விரும்புகிறான். இவ்விதம் அவன் அனாவசியமாகத் தன்னைத் தானே கற்பனையாக ஏமாற்றிக்கொண்டு அளவிடமுடியாத துன்பங்களில் மூழ்குகின்றான். விரும்பியவை கிட்டும்போது களிப்படைகின்றான்; வெறுத்தவை கேடடையும் போதும் களிப்படைகின்றான்; விரும்பியவை கிட்டாதபோது துன்புறுகின்றான்; வெறுத்தவை ஓங்கும்போதும் துன்புறுகின்றான்! அப்பொருள்கள் கிட்டுவதோ அகல்வதோ இவனது வினைத் திறத்தை (கர்மங்களை)ப் பொருத்து அமைவதால், இவன் அதற்காகக் கோடிக்கணக்கான கர்மங்களை எண்ணமாகவும், சொல்லாகவும், செயலாகவும் உடலுள்ள மட்டும் செய்துகொண்டே இருக்கிறான். ஆயினும், அந்தோ! உடல் அற்ப ஆயுளே (100 வயதிற்குள்ளேயே) உடையதால், இவன் கோரி ஆரம்பித்துள்ள கர்மங்கள் எல்லாம் முற்றுப்பெறு முன்னும், அவைகளின் பயனை இவன் அடையுமுன்னும் உடல் நசிக்கப் பெறுகிறான். ஆகையால் செய்த கர்மங்களின் பலனை அனுபவிக்கவும், விட்ட கர்மங்களை மீண்டும் தொடர்ந்து பூர்த்தி பண்ணவும், தான் விரும்பிய வண்ணம் புதிதாகக் கர்மங்களை இயற்றவும் அவனுக்கு உடல் தேவையாகின்றது. இந்நிலையில், இவனது கற்பனைப்படி113 சர்வ வல்லமையும் சர்வக்ஞத்துவமும் பரம காருண்யமுமுள்ள மூர்த்தியாகக் கற்பிக்கப்பட்டவரும், உண்மையில் இவனது சொந்த இயல்பான ஆன்மாவைவிட வேறல்லாதவருமான கடவுள் இவனது சகாயத்திற்கு வருகிறார்.
இவனது ஜீவ திருஷ்டியின்படி அவரோ பரம காருண்ய சொரூபியாகையாலும், இவன் வேண்டியதெல்லாம் தரவல்ல சர்வசக்தி உடையவராகையாலும், இவன் எப்படிப்பட்ட உடலை மீண்டும் எடுத்தால் தன் பூர்வ கர்மங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளவும், நன்மை தீமைகளான அக்கர்மங்களின் பலனைச் சிறிதும் தவறாதபடி அனுபவிக்கவும் முடியுமோ அவ்வுடலை (அது மிருக, பக்ஷி, புழுவாதியுடல்களோ அல்லது மனிதவுடலோ) அடையத் தருகிறார். அவ்வுடல் அவனுக்கு இப்போது வருவதற்குக் காரணம், அவன் செய்த முன் கர்மங்களின் பலனேயல்லவா? அவனது முன் கர்மங்கள் எல்லையில்லாத அளவாயிருக்க, அவற்றில் ஒரு சிறு பகுதியின் பயனை மட்டுமே அவன் இப்போது அடைந்துள்ள உடம்பால் அனுபவிக்க முடியும். ஆகையால், எந்தெந்த சுகதுக்கங்களை அவனது கர்மங்களின் பலன்களாகத் தொகுத்து இப்பிறவியில் அவனது அனுபவத்திற்குக் கடவுளாற் கொடுக்கப்படுகிறதோ அந்தக் கர்மப் பகுதிக்கு மட்டும் ‘பிராரப்தம்’ என்று பெயர் (அதாவது, பலன் தருவதற்காகப் பிராரம்பித்த கர்மம் பிராரப்த கர்மம் எனப்படும்). இது போக மீந்துள்ள எந்த அளவற்ற பூர்வ கர்மங்கள் அவனால் இனிவரும் பல பிறவிகளில் அனுபவிக்கப்படுவதற்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றனவோ அவை அவனது சஞ்சித114 கர்மங்களாகும் (அதாவது, சேமிப்பில் இருப்பவை சஞ்சிதம்). இப்படி ஒதுக்கப்பட்ட பிராரப்த கர்மப் பகுதிக்குள் என்னென்ன சுக துக்கங்கள் (இவனது பூர்வ கர்மங்களின் விளைவுகளாக) அமைந்திருக்கின்றனவோ, அவைகளைத்தான் இவன் இவ்வுடலுள்ளபோது அனுபவிக்க முடியும். அதாவது, ஒவ்வொரு பிறப்பிலும் ஒருவன் தன் வாணாள் முழுதும் அனுபவிக்கவேண்டிய சுகதுக்கங்கள் அடங்கிய பிராரப்த கர்மம் முழுவதும், அவனது உடல் பிறக்கும் போது முன்கூட்டியே விதிக்கப்பட்டிருப்பதால், இப்பிறப்பில் அவன் அனுபவிக்கும் சுக-துக்கம் ஒவ்வொன்றும் முற்பிறப்பில் அவன் செய்துள்ள நல்-தீ-வினைகளின் பயனே தவிர, இப்பிறப்பிலேயே இதற்கு முன்பு செய்துள்ள கர்மங்களின் பயனல்ல. அச் சுக துக்கங்கள் முற்றும் அனுபவிக்கப்பட்டுத் தீர்ந்துவிட்டால், உடனே அத்தேகம் விழுந்து (மரித்து) விடும். ஆகவே, இத்தேகத்தை உண்டாக்கியதும், இத்தேக வடிவாக அவனுக்கு இருப்பதும் அவனது பிராரப்த கர்மமே! அதாவது, பிராரப்தத்தின் முடிவே அந்தத் தேக வாழ்வின் முடிவாம்.
வினைப்போக மேயொரு தேகங்கண் டாய்வினை தான் முடிந்தாற்
றினைப்போ தளவுநில் லாது... (பட்டினத்தார்)
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சுக-துக்கானுபவ பிராரப்த பகுதியுள்ள ஓர் தேகத்தைப் பெற்றுள்ள இந்த ஜீவன், அக்கர்மங்களின் மூல ‘கர்த்தா’ (முன்பு செய்தவன்); அவைகளை இப்போது அனுபவிக்கும் ‘போக்தா’ (அனுபவிப்பவன்).
வினைமுதனா மாயின் விளைபயன் றுய்ப்போம்...
(உள்ளது நாற்பது 38)
இந்தக் கர்த்ருத்துவ போக்த்ருத்துவத்துடன் கூடிய ஜீவன், முன்பே சொல்லப்பட்ட, இவனது சுபாவமான சுத்த சுதந்திர இச்சா-கிரியா சக்தியுடன் இருப்பவனல்லவா? இவ்விச்சா-கிரியா சக்தியின் சுதந்திரம், இந்தப் பிராரப்தானுபவ வாழ்க்கைக் காலத்திலுங்கூட இவனிடம் இருக்கின்றது. இவன் தனக்கு ஒதுக்கப்பட்ட பிராரப்தத்தை அனுபவிக்கும் வாழ்நாளில், தன் இச்சா-கிரியா சுதந்திரத்தால் தான் முன் ஜென்மத்திற் செய்தது போலவே மீண்டும் பற்பல புதுப்புது கர்மங்களையோ, பழைய கர்மங்களின் தொடர்ச்சியையோ செய்து வருகிறான். (இதே சுதந்திரத்தால் மேற்கூறிய தனது கற்பனையை நிறுத்தி வீடுபெறும் கிருதகிருத்தியமாகச் செய்து கொள்ளவும் முடியும்). இவ்வாறு, தேகம் விழும் வரையில் கர்ம முயற்சி உள்ளவனாகவே இருக்கின்றான். இதனால், மீண்டும் ஏராளமான கர்மங்களை இந்த ஜீவன் உற்பத்தி செய்கின்றான். இவ்விதம் இவன் இவ்வாழ்வில் உற்பத்தி செய்யும் கர்மங்கள் ‘ஆகாமியம்’115 எனப்படும் (அதாவது, வருங்காலத்திற் பலன் தருமாறு புதிதாக இயற்றப்படுபவை ஆகாமிய கர்மம் எனப்படும்).
ஒருவன் தன் ஒரு ஜன்மத்தில் 100 மூட்டைகள் ஆகாமிய கர்மங்களைச் செய்து சேர்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்பிறவி முடிந்து தேகம் மரிக்கும்போது இந்த 100 கர்ம மூட்டைகளும் அவனது சஞ்சித கர்மாவின் கணக்கில் சேர்கின்றன. (அதாவது, குறுகிய ஒரு வாணாளில் அனுபவித்துத் தீர்க்கும் பிராரப்த கர்ம அளவைவிட, ஒருவன் தனக்குப் பலமடங்கு பெருகியுள்ள பல்வேறு ஆசைகளால் செயற்பட்டுச் சேகரிக்கும் ஆகாமிய கர்ம அளவு பன்மடங்கு அதிகம் என்பதே கருத்து). அவ்வாறு சேர்க்கப்பட்ட சஞ்சிதக் கர்மங்களுள் பலவேறு சுகதுக்கானுபவங்களைப் பலனாகக் கொண்ட ஒரு மூட்டை மட்டுமே அவனது மறு பிறவியின் பிராரப்தப் பகுதியாகக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவனுக்குக் கிடைக்கின்றது. இப்பிராரப்த வினையை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பிறவிக் காலத்திலுங்கூட நாம் முன்பே கூறியதுபோல், மீண்டும் ஆகாமியங்களைச் செய்யத்தக்க இச்சா-கிரியா சுதந்திரமானது இவனிடம் இருந்தே வருகின்றதல்லவா? அவன் பெற்றுள்ள ஒரு மூட்டையாகிய பிராரப்த வினையை அனுபவிக்கும் இப்போதுள்ள ஜன்மத்தில், இவ்விச்சா-கிரியா சுதந்திரத்தால் மீண்டும் 100 ஆகாமிய கர்ம மூட்டைகளைச் சேர்க்கின்றானாயின், இந்த ஜன்ம முடிவில், இப்புதிய 100 கர்ம மூட்டைகளும் முன்பே மீதியுள்ள 99 சஞ்சித கர்ம-மூட்டைகளுடன் சேர்ந்து 199 மூட்டைகளாகிச் சஞ்சிதக் குவை பெருகுகின்றது! சஞ்சிதம் இவ்வாறு பிறவிதோறும் பெருகிக்கொண்டே போகுமாயின் ஜனன மரணங்களுக்கு எங்கே, எப்படி, எப்பொழுது ஓர் முடிவு காண்பது? ஆகையால், கர்மப் பிரவிருத்தியானது நம் குறிக்கோளான பரம சுகப் பிராப்திக்கு வழியல்ல என்று நாம் திண்ணமாகக் கண்டறிந்து கொள்ளல் வேண்டும்.
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற.
(உபதேச வுந்தியார் 2)
இத்தேகம் வாழ்போது பிராரப்த கர்மத்தைப் புஜித்துத் தீர்ப்பதும் ஆகாமிய கர்ம மூட்டைகளைப் பெருக்குவதுமாகவே இவன் இருக்கிறான். ஆகவே, ஒவ்வொரு தேக வாணாளிலும் பிராரப்த கர்மமும் ஆகாமிய கர்மமும் நிகழ்ந்துகொண்டே இருப்பதால் (அதாவது, பிராரப்தப் புஜிப்பும் ஆகாமிய ஆக்கமும் நடந்துகொண்டே இருப்பதால்) அற்ப அறிவினனான மனிதன் இவ்விரு கர்மங்களின் நிகழ்வில் ‘எது பிராரப்தம், எது ஆகாமியம்’ என்று பிரித்தறிய இயலாதவனாக இருக்கிறான். எல்லாம் அறிபவரான ஈசன் ஒருவருக்கே அது விளங்குவதாம்!.
பலனைத் தரப்போகும் நம் பூர்வ ஜன்ம கர்மங்களாகிய விதியால் நிர்ணயிக்கப்பட்டு அதன் வழி தொழிற்படும் நம் மனோ வாக்குக் காயங்களின் செயல்கள் பிராரப்தம் எனப்படும். நமது மதியால் இப்போது தீர்மானிக்கப்பட்டு அதன் வழி தொழிற்படும் நம் மனோ வாக்குக் காயங்களின் செயல்களே ஆகாமியம் எனப்படும். போக்தாவாக விதியை அனுபவிப்பவனும், கர்த்தாவாக ஆகாமியம் இயற்றத் தன் மதியை உபயோகிப்பவனுமாம் அகந்தையின் உண்மை (நம் உண்மை) யாதென்று (அதாவது, ‘நான் யார்?’ என்று) அறியாத வரையில் நாம் செய்யும் கர்மங்களுள் எவை பிராரப்தமாகிய விதியைச் சேர்ந்தவை, எவை ஆகாமியமாகிய மதியைச் சேர்ந்தவை என்று கண்டு பிடிக்கவே முடியாது! ஆன்ம விசாரத்தால் விதிமதிகளின் மூலமாகிய அகந்தையானது சத்தியமற்றது என்ற உண்மை கண்டுபிடிக்கப்படும்போது, ‘இவ்வுடலே நான், நான் ஒரு ஜீவனே’ என்றிருந்த இவ்வகந்தையைச் சார்ந்து பிழைத்திருந்த விதி மதிகளைப் பற்றிய கர்மங்களின் பாகுபாட்டையும் நாம் பயனற்றதாகத் தள்ளிவிடுவோம்.
விதிமதி மூல விவேக மிலார்க்கே
விதிமதி வெல்லும் விவாதம் – விதிமதிகட்
கோர்முதலாம் தன்னை யுணர்ந்தா ரவைதணந்தார்
சார்வரோ பின்னுமவை சாற்று.
(உள்ளது நாற்பது 19)
அகந்தை உயிர்த்திருக்கும் வரையில் ஒருவனது வாழ்வில் விதியும் மதியும் தொழிற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். மனம், வாக்கு, காயம் எனப்படும் இக் கர்மக் கருவியானது இரண்டு எழுத்தாளர்களிடம் அகப்பட்ட ஒரே பேனாவைப் போன்றதென்று சொல்லலாம். சிலசமயம் இக்கருவிகளாகிய பேனாவை விதி என்னும் எழுத்தாளன் எடுத்துக் கையாளுவான். சிலசமயம் இதே கருவியை மதி என்னும் எழுத்தாளன் எடுத்துக் கையாளுவான். அதனால் மனம், வாக்கு, காயங்களாகிய ஒரு பேனா உபயோகமாகிக் கொண்டிருப்பதை நாம் உணர்ந்தாலும் எந்த எழுத்தாளன் அதை உபயோகிக்கிறான் என்பதை நாம் அறிய முடியாது.
பிராரப்த கர்மப் பகுதியில் ஏதேனுமோர் சுகத்தையோ துக்கத்தையோ அனுபவிப்பதற்கு ஹேதுவாக இப்பிறப்பில் ஒருவனது புத்தி சிலசமயம் சில கர்மங்களில் உந்தியிழுக்கப்படலாம். அந்தப் பிரவிருத்தியால் அவன் பிராரப்தத்தின் பலனை (நன்மை தீமைகளை) அனுபவிப்பான். உதாரணமாக முன் ஒரு பிறவியில் பிறரைத் துன்புறுத்தியதின் பலனை இப்பிறவியில் அனுபவிக்க வேண்டியபடி பிராரப்தம் அமைந்து, அதற்கான நேரம் வந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். அப்போது, இவனது பந்து மித்திரர்களால் அத்துன்பானுபவம் தடுக்கப்பட்டு விடாதபடி நடந்தேற, இவன் அவர்களைப் பிரிந்து தனி வழியே எங்கேயாவது போக ஒரு விருப்பம் இவனுக்கு உண்டாகும். ‘புத்தி கர்மானுசாரிணீ’யாகையால் அப்படி இழுக்கும். அவனும் அவ்வாறே செல்வான். செல்லவே, தனி வழியில் எதிரிகளாலோ திருடர்களாலோ தாக்கப்பட்டுத் துன்பமடைவான். இவ்வாறு அவன் அன்று தனி வழிப்போக விரும்பிச் செய்த கர்மம் ஆகாமியம் போலவே அவனுக்குத் தோன்றும். ‘அடடா! நான் செய்தது சரியல்ல; தனியே போயிருக்கக் கூடாது; அப்படிப் போகாமல் இருந்திருந்தால் இந்தப் பகைவர்கள் என்னைத் தாக்கியிருக்க முடியாதல்லவா?’ என்று, தான் ஏதோ ஓர் ஆகாமியம் செய்துவிட்டதாகத் தீர்மானிப்பான். அது மட்டுமல்ல; தன்னை அடித்தவர்களுங்கூட தீய ஆகாமியம் ஒன்றைச் செய்திருப்பதாகவே தீர்மானிப்பான்! ஆனால், இவை இரண்டும் தவறான முடிவுகளே. இவை பிராரப்தமே தவிர வேறல்ல. இதனைச் சாதாரண மனித அறிவு கண்டு தீர்மானிக்க இயலாதல்லவா? ஆகவே, இவ்வாழ்வின் கர்மங்கள் முழுவதும் தன் புது முயற்சியாலேயே நடப்பதாகவும், தனக்கு இப்பிறப்பில் சம்பவிக்கும் சுகதுக்கானுபவங்கள் யாவும் தன் புது முயற்சிகளின் விளைவுகளே என்றும், அறிவில்லாத மனிதன் நினைக்கிறான். ஆனால், எவ்வளவு முயன்றும் சில சமயங்களில் காரியங்கள் தோல்வியுறுவதையும், சிலசமயம் கோரியபடியன்றி வேறுவிதமாக அவை முடிந்துவிடுவதையும், சிலசமயம் தான் எதிர்பாராத சில சுக துக்கங்கள் தாமாகவே வந்து சேர்ந்துவிடுவதையும், ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உணரவேண்டிய சந்தர்ப்பங்கள் பலப்பல வருகின்றன!
ஒன்றை நினைக்கி னதுவொழிந்திட் டொன்றாகும்;
அன்றி யதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினு நிற்கும்
எனையாளு மீசன் செயல்.
(ஔவையார் நல்வழி-27)
ஆகையால், பிராரப்த நிகழ்வை மனிதன் ஏற்றேயாகவேண்டும். ஆனால், ஒருவனது வாழ்வில் நடைபெறும் காரியங்களுள் ‘எது பிராரப்தம், எது இப்போது அவன் செய்யும் ஆகாமிய முயற்சி?’ என்று பகுத்தறியும் சக்தி அற்பக்ஞனான மனிதனுக்குக் கிடையாது. சர்வக்ஞனான ஈசுவரன் ஒருவரே அவைகளைப் பகுத்தறிந்து பலன் தரும் கர்த்தா. ஆகையால், மனிதன் இப்பாகுபாட்டைச் சரியாகச் செய்ய முயல வேண்டாம். அப்படியாயின், ஆகாமியப் பிராரப்தப் பாகுபாட்டறிவு அனாவசியமாவென்றால் மோக்ஷத்தையே விரும்பிப் பாடுபடும் முமுக்ஷு (சாதகன்) ஒருவன் தான் கர்மங்களை இயற்றும்போது பாப-புண்ணிய விவேகத்தை உபயோகிக்க விரும்புவானாயின், கீழ்க்கண்டவாறு தன் சிற்றறிவால் கர்மங்களைப் பாகுபடுத்திக் கொள்ளட்டும். அவ்விதம் செய்வதால் நன்மை மிகுந்து, தீமை குறைந்து, சித்த சுத்திக்குச் சகாயம் உண்டாகும்.
(1) தான் ஒருவர்க்குக் கேடு விளைவிக்க எண்ணம் கொள்ளும்போதெல்லாம் ‘இது என் ஆகாமிய முயற்சி’ என்று தடுத்துத் தற்காப்புச் செய்து கொள்ளட்டும். (2) பிறர் தனக்குக் கேடு விளைத்ததாகவோ விளைவிப்பதாகவோ எண்ணம் தோன்றும்போதெல்லாம், ‘இது என் பண்டை வினையாகிய பிராரப்தத்தின் பயன்; நான் முன்பு அவர்களுக்குத் துன்பம் விளைவித்திருக்கக் கூடும். ஆகவே அவர்களை நான் நோகவோ வெறுக்கவோ வேண்டாம்’ என்று கொண்டு, அவ்விளைவில் உதாசீன பாவம் கொள்ளட்டும். (3) தான் ஒருவர்க்கு நன்மை செய்ய நேரும்போதெல்லாம், ‘இது நான் அவரிடமிருந்து பூர்வத்திற் பெற்ற நன்மைக்குப் பிரதி செய்யும் செயலே; அதாவது, பிராரப்த நிகழ்வேயாகையால் இதற்குப் பலனை எதிர்பார்ப்பதோ அல்லது அந்த நன்மையைத் திரும்பிப் பெற எண்ணுவதோ தவறு’ என்று கொள்ளட்டும். (4) பிறர் ஒருவர் நமக்கு நன்மை செய்யும்போதெல்லாம் ‘இது அவரால் நான் பெறும் ஆகாமிய நலன்; உடனே இக்கடனைத் தீர்த்துப் பிரதி நன்றி செய்ய வேண்டும்’ என்று கொள்ளட்டும். சுருங்கச் சொல்லின்,
(1) நாம் பிறர்க்குச் செய்யும் தீமை நமது ஆகாமியம்;
(2) பிறர் நமக்குச் செய்யும் தீமை நமது பிராரப்தம்;
(3) தான் பிறர்க்குச் செய்யும் நன்மை நமது பிராரப்தம்;
(4) பிறர் நமக்குச் செய்யும் நன்மை நமது ஆகாமியம்.
இவ்வாறு கொண்டு நடப்பானாயின் இதுவே கர்மயோக ரூபமாகி, மனம் தூய்மை பெற்றுச் சீக்கிரம் பக்குவப்படும்.
ஆனால், மேலே காட்டிய ஆகாமியப் பிராரப்த கர்மப் பாகுபாடுதான் உண்மையில் சரியானதாகும் என்று கூறிவிட முடியாது. உண்மை வேறுவிதமாகவும் இருக்கலாம். அதாவது, நாம் பாகுபடுத்தியபடி பிறர்க்கு ஒருவன் செய்யும் தீமை ஆகாமியம் ஆக வேண்டுமல்லவா? ஆனால், அது முற்பிறவிகளில் அவனுக்குப் பிறர் செய்திருந்த தீமைகளின் பலனை அவர்கள் இப்பொழுது அனுபவிக்க இவனால் திருப்பிச் செய்யப்படும் காரியமாகவும் இருக்கலாம். அதனால், அவன் இப்போது அவ்விதம் செய்யவேண்டிய அவனது பிராரப்த கர்மமாகவே முடிவதால் அவன் அதற்காக வருந்த வேண்டியதில்லை என்று ஆகின்றது! அல்லவா? இவ்வாறே நமது பாகுபாட்டின்படி பிறருக்கு ஒருவன் செய்யும் நன்மை அவனது பிராரப்தமேயாகின்றது. ஆனால், முன் பிராரப்தப்படி அவன் பட்ட கடனைத் தீர்க்குங் காரியமாக இல்லாமல் அது இப்போது அவன் செய்யும் பரோபகாரம் எனப்படும் ஆகாமியப் புண்ணிய கர்மமாகவும் இருக்கலாம் அல்லவா? இவ்விதமே மேலே கூறிய மற்றிரண்டு பாகுபாடுகளையும் நாம் விரித்துக் கண்டுகொள்ள வேண்டும். இவ்விரகசியத்தின் உண்மை மனிதனுக்குக் காண்பிக்கப்பட்டால் அவனது அகங்காரம் கொழுத்துப் பெருத்துத் தலைக்கேறி, அதனால் சித்தம் மேலும் அசுத்தமாகி, அவனது மன பரிபாகம் தடைப்படுமல்லவா? அதனால்தான் இறை நியதியில் இக்கர்மப் பாகுபாட்டின் உண்மை மனித மதிக்கு முற்றும் மறைக்கப்பட்டுள்ளது. மனிதனின் மெய்யறிவு முன்னேற்றத்துக்கு உதவியாக இறைவனால் அருளப் பெற்றதோர் (திரோதானம் – மறைத்தல்) பெருவரம் அன்றோ இது!
எறிந்துமெறி பட்டுமுயி ரெண்ணில் பிறப்பிற்
செறிந்தவர லாற்றுத் திறந்தாம் – அறிவின்
மருவலறு மிக்க மறப்பா மறைப்பு
திருவருளே யாகத் தெளி.
(குருவாசகக் கோவை 116)
சாதகர்களின் சித்த சுத்திக்கும் மன பரிபாகத்திற்கும் பேருதவியாக நாம் மேலே காட்டிய கர்மப் பாகுபாடு அமைந்துள்ளதாயினும், இதே காரணத்தினால்தான் அது இறைவனின் உண்மையான, சரியான, பாகுபாட்டிற்குப் பொருந்தாமலும் இருக்கும் என்று முதலிலேயே கூறப்பட்டது.
ஜீவ சுதந்திரத்தை உபயோகிக்கத் தக்க முறை சிலர், ‘ஸ்ரீ பகவான், ‘நமக்கு மனத்தை உண்முகமாக்கி ஆன்ம ஞானம் பெறுவதற்கு மட்டுமே சுதந்திரம் உண்டு’ என்று பல சந்தர்ப்பங்களிற் கூறியுள்ளனரே; அப்படியாயின் மனத்தை அந்தர்முகப் படுத்துவதைத் தவிர நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் – எல்லாக் காரியங்களும் – பிராரப்தத்தில் உள்ளவைதான் என்றுதானே முடிவாகின்றது!’ என்று கேட்பதுண்டு. ஆனால் ஸ்ரீ பகவான் அவ்வாறு கூறியது நம் சகல காரியங்களும் நம் பிராரப்தத்தின் உட்பட்டதே என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதல்ல. ஸ்ரீ பகவான் அவ்வாறு கூறியதின் கருத்தென்னவென்றால், பிராரப்தத்தில் நமக்கு விதிக்கப்பட்டுள்ள சுக-துக்கானுபவங்களை மாற்றவோ, குறைக்கவோ, கூட்டவோ நமக்குச் சுதந்திரம் கிடையாது என்பது மட்டுமே. நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தால் இச் சுகதுக்கங்களைத் தடுக்க நாம் விரும்பினால், அப்போது நம்மால் இயன்ற ஒரே ஒரு காரியம் என்னவென்றால், மனத்தை உண்முகப்படுத்தி ஆன்ம ஞானத்தை அடைந்தால் ஜீவத்துவமாகிற அகந்தை அழிவுறும். தேகம்-மனத்தை நான் என்று அபிமானித்து, அதனால் பிராரப்தத்திலுள்ள சுக-துக்கங்களை அனுபவிக்கும் போக்தாவாகிய இவ்வகந்தைத் தன்மையுணர்வு நீங்கிவிடுவதால் சுக-துக்கானுபவம் ஆன்மாவாகிய நமக்கல்ல என்று நீங்கிவிடும்.
அற்ப ஜீவனாகிய நமது சுதந்திரத்தால் பிராரப்தத்திலுள்ளவற்றை மாற்றவே முடியாது என்பது உண்மையேயாயினும் நாம் ஒவ்வொருவரும் சுகங்களைக் கூட்டவும், துக்கங்களைத் துடைக்கவும் விரும்பவே செய்கிறோம். அதற்காக முயலவும் செய்தே வருகின்றோம்; அல்லவா? இவ்வாறு நாம் விரும்புவதும் நமக்குள்ள அற்ப சுதந்திரத்தைத் தவறாக உபயோகிப்பதேயாகும். இவ்வாறு தவறான முறையில் நாம் விரும்பிச் செய்யும் இச்சையும், கிரியையும் ஆகாமியத்தை மேலும் உண்டாக்கிக் கொள்வதேயாகும். இப்படி, பிராரப்தத்தில் நமக்கு இல்லாத சுகங்களைத் தேடவும், துக்கங்களை ஒழிக்கவும் நாம் விரும்பவோ செய்யவோ நமக்குச் சுதந்திரம் இல்லை என்றால், நாம் எப்படி முன்பு ஆகாமியத்தைச் செய்திருக்க முடியும்? ஆகாமியத்தை முன்பு நாம் செய்து, சஞ்சிதத்தைப் பெருக்கிக் கொள்ளாதிருந்தால், அதிலிருந்து எடுக்கப்படும் ஒரு பிராரப்தப் பகுதியை ஏற்று மறுபிறப்பு எப்படி வந்திருக்க முடியும்? ஆகையால், பிராரப்தத்தை அனுபவிக்கும் காலத்திலேயே சுகதுக்கங்களை விரும்பவோ, வெறுக்கவோ அதற்காக முயலவோ செய்து ஆகாமியத்தை இயற்றுகின்ற சுதந்திரம் நிச்சயமாக உண்டு.
தன் முன்வினைப்படி சஞ்சிதத்திலிருந்து எடுத்துத் தரப்பட்ட பிராரப்தத்தின் விளைவாகிய இத்தேகத்தில் வாழும்போது மனிதன் தன் சுதந்திர இச்சா-கிரியா சக்தியால் இரண்டு விதமான பிழைகளைச் செய்து ஆகாமியங்களை உண்டாக்குகிறான். தடுத்தற்கோ, மாற்றற்கோ அரிய பிராரப்த வசத்தால் வரும் துன்பங்களைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முயல்கிறான். அவ்வாறே, பிராரப்த வசமாய் வரும் இன்பங்களைத் துரிதப்படுத்தவோ அதிகரிக்கவோ முயல்கிறான். இது அவனது முதல் பிழை. மனிதன் தன் இச்சா-கிரியா சுதந்திரத்தாற் செய்யும் இரண்டாவது பிழை என்னவெனில், (பிராரப்தத்தோடு போராடாமல் இருப்பவனுங்கூட) இனிவரும் பிறப்பிலாவது சுகத்தை அதிகமாக அடையவும், துக்கத்தைக் குறைக்கவும் தனது விருப்பு-வெறுப்புக்களால் உந்தப்பட்டு அதற்கேற்ற ஆகாமிய கர்மங்களை (புது காமிய கர்மங்களை) மேற்கொள்கிறான். சுகம் தனது சுபாவ நிலையே என்றறியாத காரணத்தால், மனம்-புலன்-உடலாதிகளின் இயக்கங்களால் உலகப் பொருள்களினின்று சுக மடையலாம் என்றெண்ணி, பலவகையான கர்மங்களைப் புரிகிறான்.
முதற் பிழையாகிய, பிராரப்தத்தால் வரும் இன்ப துன்பங்களைத் தடுப்பதோ மாற்றுவதோ இவனது இச்சா-கிரியா சக்தியின் சுதந்திரத்துக்கு உட்பட்டதல்ல. இவனது சக்தி இதற்குப் பயன்படாது. ஆகையால், இவன் இவ்வழியில் முயற்சித்து ஆயாசமடைவதை நிறுத்தி, இறைவன் இஷ்டத்திற்கு அவற்றை விட்டுவிடுவதே நல்லது.
இறைவனது இஷ்டத்திற்கு விட்டுவிடுவது என்பது என்ன? பிராரப்தத்தின் வழிக்கு விட்டுவிடுவதே அது! நம் பிராரப்தமே இறைவனது இஷ்டம் என்பது எப்படி என்று பார்ப்போம். பிராரப்தம் எப்படி வந்தது? ஜீவன் தான் இஷ்டப்பட்டு முன்பு செய்த கர்மங்கள் பலவற்றுள் ஒரு பகுதியின் பலனே இப்போது அவனுக்குப் பிராரப்தமாக வந்தமைகின்றதல்லவா? அது எப்படி இறைவனின் இஷ்டமாகின்றதெனின், ஜீவனது பூர்வ இஷ்டமே இப்போது இறைவனால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றது. அதாவது, ‘உன் இஷ்டங்களை முன்பின்னாக நிறைவேற்றிவைக்கும் பொறுப்பை மட்டும் இறைவனிடம் விட்டுவிடு’ என்பதே அதன் பொருள். தவிர, இறைவனது இஷ்டத்துக்கு விடுதல் என்றால், இறைவனுக்கு ஏதோ ஜீவன் பேரில் விருப்பு, வெறுப்பு, பாரபட்சம் உண்டென்றும், அதன் காரணமாக, ‘இஷ்டமிருந்தால் செய்வார்; இல்லையென்றால் செய்ய மாட்டார்’ என்றும் கருதுவது – அதாவது இறைவனை சங்கற்ப சகிதர் ஆக்கி விடுவதல்ல அது. இறைவனுக்கு என்று யாதொரு இஷ்டமோ அனிஷ்டமோ எப்போதும் இல்லை என்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நாம் பூர்வத்தில் இஷ்டப்பட்டுச் செய்துள்ள நமது கர்மங்களுக்கு முன்பின்னாகப் பலன் தரும் பொறுப்பை மட்டும் அவரிஷ்டத்திற்கு விட்டுவிட்டால், அவர் எல்லாம் அறிந்தவராய் நம்மைவிட பூரண அறிவுடையவராய் இருப்பதால், நாம் நம் பூர்வ பரமலாபமும், லக்ஷியமுமான சுபாவானந்த சொரூபானுபவத்தை – ஆன்ம ஞானத்தை – மீண்டும் பெறுவதற்கு எது ஹேதுவோ, எப்படி முன்பின்னாக நமக்கு நமது கர்ம பலானுபவங்கள் அனுமதிக்கப்பட்டால் நல்லதோ அதை அவர் அறிந்து அனுக்கிரகிப்பார் என்பதே கருத்து.
இறைவன் இஷ்டத்திற்கு ஒருவன் விட்டுவிடானாயின் என்ன நேரிடுகிறது? ஒருவன், தான் விரும்பினாலும் விரும்பாவிடினும் பிராரப்தத்தை அனுபவித்தே தீரவேண்டும். பிராரப்தம், பலனைத் தந்தே தீரும். ஆனால், ஊழ்வினை வலிந்தூட்டும் சுகதுக்கானுபவ சமயங்களில் அவன் அவைகளை அனுபவிக்க விருப்பமற்றிருப்பதால் அவனது மனம் நிலைதடுமாறிப் போகின்றது. புத்தி விவேகிக்கும் ஆற்றலையும் இழந்து விடுகின்றது. அதனால், அவன் அத்துயரங்களை எதித்துப் போராடி, அதனால் ஆகாமியங்களை மீண்டும் உண்டாக்குகின்றான். இதற்கு மாறாக, எதையும் ‘இறைவனது இஷ்டம்; பிரசாதம்’ என்று கொள்ளும்படி அவ்வளவு கடவுளன்பு உடையவனாய் இருப்பானாயின், அப்போது அவன் மனம் நிலைதடுமாறாமல், அப்பிராரப்தானுபவங்களை அமைதியோடும், சந்தோஷத்தோடும், பொறுமையோடும் எதிர்கொள்கின்றான். இவன் இவ்வாறு செய்வதால், பிராரப்தானுபவத்தால் இவனுக்கு எத்தகைய உயர்பயன் (சித்த சுத்தி) கிடைக்க வேண்டும் என்பது இறைவனின் கருத்தோ அப்பெரும் பயனை இவன் துரிதமாக அடைவதற்கான மனப்பக்குவத்தைப் பெற்று விடுகின்றான். இதனால் அறிய வேண்டியதென்ன?
(1) இறைவனது இஷ்டத்திற்கு விட்டுச் சரணடையவோ, சரணடையாதிருக்கவோ நமக்குச் சுதந்திரம் உண்டு. ஜீவனது இச்சா-கிரியா சுதந்திரத்தின் அளவு அவ்வளவே.
(2) இறைவனது இஷ்டத்திற்கு விடுவதால், நம் குறிக்கோளை நோக்கிய முன்னேற்றம் விரைவும் மிகுதியும் பெறுகின்றது. அப்படிச் செய்யாதபோது, நம் முன்னேற்றம் குன்றித் தடைபடுகின்றது. அதனால் தடைப்பட்ட முன்னேற்றத்தையும் மனபரிபாகத்தையும் பெற மீண்டும் இது போன்றதோர் பிராரப்தம் அமையக்கூடிய பிறவியொன்றை எதிர்பார்த்திருக்க வேண்டி வரும். ஏனோ இப்படியாகும்படி நடந்து கொள்வது? இப்பிறவியிலேயே இறைவனிஷ்டத்திற்கு விட்டுப் பிராரப்தத்தின் உண்மைப் பயனாகிய மனப்பக்குவத்தைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?
‘பிராரப்தத்தை மாற்றவோ தடுக்கவோ இறைவனாலுங்கூட இயலாதா?’ என்று சிலர் வினவுவதுண்டு. இறைவனது சக்தியோ சர்வ வல்லமை உடையதாகையாலும், பிராரப்தப் பகுதியை நிர்ணயித்து அது பலன் தரும்படி ஏவிய கர்த்தன் அவரேயாகையாலும், அவரது நிர்ணயங்களை மாற்றவோ தடுக்கவோ பூரண சுதந்திரம் உள்ளவர் அவரேயாகையாலும், அவரிடம் ஒப்புவித்த உள்ளத்தோடு, ‘இறைவா, துக்க சுகங்களைச் சகிக்கும் ஆற்றலற்ற என் தீன நிலையை அறிவீராக. ரக்ஷகரே, உம்மைச் சரணடையும் எனக்குச் சகிக்கும் அவ்வாற்றலை அருளிக் காப்பீராக!’ என்று பிரார்த்தித்து அவரைச் சார்ந்து வாழ்வானாயின், அப்போது அந்த ஜீவனது சுதந்திரம் இச்சா கிரியா சக்தியினால் தடுக்கப்படாத காரணத்தால், இறைவன் தனதிஷ்டப்படி எதுவும் நடத்த இயலும். அதாவது பிராரப்தத்தை அப்படியே அனுமதிக்கவோ, மாற்றவோ, நிறுத்தவோ முடியும். இதையே ஔவைப் பிராட்டியார்,
சிவாய நமவென்று சிந்தித் திருப்பார்க்
கபாய மொருநாளு மில்லை – யுபாயம்
இதுவே மதியாகும்; அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்.
(ஔவையார், நல்வழி 15)
என்றனர். ஒருவனது பிராரப்தத்தை இறைவன் மாற்றுவதும் நீக்குவதும் மட்டுமன்றி, அவனது ஆகாமியத்தை தற்போதுள்ள வாழ்விலேயே பலன் தரும்படி பிராரப்தத்திற் கூட்டவும் வல்லவராவார். முதல் வகைக்கு, மரணத்தை வென்ற மார்க்கண்டேயர் சரிதமும், இரண்டாம் வகைக்கு ஆதி சங்கரர்க்கு நெல்லிக்கனியளித்த ஏழை மாதொருத்தியின் சரிதமும் உதாரணங்களாகும். அவையாவன:-
பிராரப்தப்படி மார்க்கண்டேயருக்கு மரணமடைய வேண்டிய வயது பதினாறேயாகும். ஆயினும், சிவபிரானைச் சரண்புகுந்து நின்ற அவர் என்றும் பதினாறு வயதினராய் நித்திய வாழ்வு பெற்றார். இது பிராரப்தத்தை இறைவன் மாற்றுவதாகும்.
ஒருமுறை ஆதி சங்கரர் பிக்ஷைக்குச் சென்றபோது, ஓர் ஏழை மாது தன் எளிய குடிலின் ஜன்னல் வழியே கையை நீட்டி ஓர் நெல்லிக் கனியை அவருக்கு பிக்ஷையாக அளித்தாள். முறைப்படி கதவைத் திறந்து வெளியே வந்து பிக்ஷையளிக்க அவளுக்குப் போதிய ஆடைகூட இல்லாத வறுமை நிலையே இதற்குக் காரணம் என்றறிந்த ஸ்ரீ சங்கரரது உள்ளத்திற் கருணை ததும்பியது. செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி தேவியைக் குறித்து ‘கனக தாராஸ்தவம்’ என்ற துதியை அவர் செய்யவே, லக்ஷ்மி தேவி அவர்முன் தோன்றினாள். அவ்வெளிய மாதிற்கு நிறைய செல்வத்தை அளிக்குமாறு ஸ்ரீ சங்கரர் கேட்கவே, லக்ஷ்மி தேவி, ‘செல்வமளிக்க இடமில்லாதவாறு அந்த மாதின் பிராரப்தப் பகுதி சர்வேசுவரனான தங்களாலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளதே’, என்று கூறினாள். அதற்கு ஸ்ரீ சங்கரர், தற்போது அம்மாது தனக்குப் பிக்ஷையாக நெல்லிக்கனி அளித்த தர்மத்தை (புண்ணிய கர்மமாகிய ஆகாமியத்தை) அவளது பிராரப்தத்திற் சேர்த்துக் கணித்து, உடனே அப்புண்ணியப் பலனை அளிக்குமாறு விண்ணப்பித்தார். அச்சமயத்தில் அவரது ஆக்ஞையால் உடனே அந்த நெல்லிக்கனி அளவுள்ள எண்ணிறந்த பொற்கனிகள் அம்மாதின் குடிசைக்குள் மழையாய்ச் சொரியப்பட்டன. இதிலிருந்து, ஆகாமிய கர்மத்தையும் பிராரப்தத்திற் சேர்த்துப் பலனளிக்கும்படி செய்ய இறைவனால் இயலும் என்று தெரிய வருகின்றதல்லவா? இது ஆகாமியத்தை இப்போதே பலன்தர வைப்பதாகும். மேற்கண்ட இவ்விரு உதாரணங்களும்
கர்மம் பயன்றரல் கர்த்தன தாணையால்...
என்னும் ஸ்ரீ பகவானது ‘உபதேச வுந்தியாரின்’ முதற் செய்யுளின் கருத்தை நன்கு விளக்குகின்றன.
மேலே கூறப்பட்ட இருவித பிழைகளால், இவ்வுடல் விழும் பொழுது, முன்பே சேகரிக்கப்பட்டுள்ள தனது சஞ்சித கர்மங்களோடு இப்போது செய்துள்ள ஆகாமிய மூட்டைகளையும் கொண்டுபோய்ச் சேர்த்துக் குவித்து சஞ்சிதக் குவியல் மலையை மேலும் மேலும் உயர்ந்து வளரச் செய்கின்றான் மனிதன்.
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற;
வீடு தரலிலை யுந்தீபற.
(உபதேச வுந்தியார் 2)
இவ்விரண்டு விதமாக இவன் தன் சுதந்திரத்தைப் பிரயோகிக்கிறான். இது தவறு! இவ்விருவித குற்றங்களையும் நிவர்த்திப்பதெப்படி?
இந்நிலையில் அந்த ஜீவனது கற்பனைப்படி அவனுக்கு அன்னியமானவரும், எல்லாமறிந்தவரும், எல்லாம் வல்லவரும், இவன்மேல் யாவரினும் சிறந்த கருணை உடையவருமான கடவுளை அவன் இறைஞ்சுகின்றான்; ‘கோடிக்கணக்கான ஜன்மங்களாகச் செய்துவரும் சுகதுக்கக் கர்மங்களின் பலன்களால் துன்புற்று, நொந்து, அயரும் என் துயரங்கள் தீர, இறைவா, எனக்கு நல்வழியை, நல்லறிவை அருள்செய்ய வேண்டியதும் உன் கடமையே அன்றோ?’
ஒன்று மியலா துனது துணைநாடி
யென்று மிருக்கு மெனைக்காண்பாய் – குன்றருண
மாமலையா நின்றசிவ மங்கலனே...
(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 4)
என்று முறையிடுகின்றான்.
இவ்வாறு தன்னைப் பிரார்த்திக்கும் இந்த ஜீவனுக்கு உதவ இறைவன் வருகிறார். ‘பக்தி’ என்னும் முன் அத்தியாயத்தில் நாம் கூறியபடி, முன்பு காமியங்களைத் தன்பால் இவன் பிரார்த்தித்தபோது, அவைகளை இவன் அடையுமாறு வேதத்தின் கர்மகாண்டப் பகுதியை, முதல்-இரண்டாம் வகுப்பு ஆசிரியரிடமிருந்து உபதேசித்தும், பலன் அளித்தும் வந்தவர் அவ்விறைவனே அல்லவா? அவர் இப்போது அவனது பிரார்த்தனைக்கு இணங்கி, அவன் தனது இச்சா கிரியா சுதந்திரத்தால் மேற்கூறியபடி எவ்வாறு இருவிதத் தவறுகளைச் செய்து வருகிறான் என்று அறிவிக்கவும், அந்த ஜீவ சுதந்திரத்தைச் சரியாக உபயோகிக்க வேண்டிய முறை இன்னதுதான் என்று போதிக்கவும், சற்குருவாய் அவதரித்து வந்து அவனுக்கு வழிகாட்டுகின்றார். தன் பரிபூரண ப்ரம்ம சுதந்திரத்தால் தன் பேரின்பநிலையை மறந்தவன்போல் ஒரு தனி வியக்தியாகக் காணப்படும் இந்த ஜீவன், சுகத்தையடைவதற்காகத் தற்போதுள்ள தனது அற்ப சுதந்திரமான இச்சா-கிரியா-ஞான சக்தியினால் கர்மப் பிரவிருத்தியின் மூலம் முயன்று திணறிக் கொண்டிருக்கும்போது, அவன் நேசிக்கும் ஈசனைத்தவிர அவனுக்கு உண்மையானதோர் உதவியைச் செய்ய வேறு யாரால் இயலும்? ஏனெனில், ‘ஜீவனின் சுக இச்சையை முற்றும் நிறைவேற்றி வைப்பதென்பது, அவனது தன் மறதியைப் போக்கி அவனது ஆதி யதார்த்த நிலையான ஆன்மாவை உணரவைப்பதே’ என்பதை அவனது அருட்பெருஞ் சகாயியாகிய அவ்விறைவன் ஒருவரே அறிந்திருக்கிறார்!
எனவே, இப்போது ஜீவன் தன் மெய்யறிவைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் அவனது சஞ்சித கர்மக் குவியலின் பலன்களைக் கடவுள் உபயோகிக்கின்றார். ஜீவன் பிறவி எடுக்கும்போதெல்லாம் அவனது சஞ்சித கர்மத்திலிருந்து ஒரு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, அவனது அவ்வப் பிறவியின் பிராரப்தமாக அருளப்படுகின்றதல்லவா? அப்பொழுதெல்லாம் கடவுள் அவனது சஞ்சிதத்திலிருந்து எந்தெந்த(புண்ணிய அல்லது பாப)க் கர்மங்களின் பலனை எவ்வெப்போது (எந்தெந்த பிறவியில் நேரும் - எந்தெந்தச் சூழ்நிலையில்), எந்தெந்த விதத்தில் (எந்தெந்த சுக அல்லது துக்கங்களின் பின் எந்தெந்த துக்க அல்லது சுகங்களை முன்பின்னாக வரிசைப் படுத்தப்பட்டு) அவன் அனுபவிக்கும்படி எடுத்துத் தந்தால், அவனுக்கு அக்கர்ம மார்க்கம் முற்றும் பயனற்றது என்ற அறிவும், அக்கர்மத்திலும் கர்ம பலன்களிலும் மேன்மேலும் விருப்பமின்மையும் (வெறுப்பும்) தோன்றுமோ, அந்தந்த விதமான கர்மங்களைச் சஞ்சிதத்திலிருந்து தேர்ந்தெடுத்து அந்தந்தச் சமயங்களில் அவ்வப் பிறவிகளுக்கேற்ற பிராரப்தமாக வகுத்தளித்து வருகின்றார், இது கடவுளது எல்லையில்லாக் கருணையன்றோ!
இறைவனின் தனிப்பெருங் கருணையின் திறத்தை இவ்வாறு அறிந்துகொண்டு அவர்பால் தமக்கு மிகுந்தெழும் அன்பாலும் நம்பிக்கையாலும் அவரது இஷ்டத்திற்குத் தன்னை விட்டுக்கொடுத்துச் சரணடைந்து கிடப்பதொன்றே நமக்கு அறிவுடைமையாகும். அவ்வாறின்றிக் கடவுளை ‘எல்லாம் வல்லவர், எல்லாமறிந்தவர், கருணை வள்ளல்’ என்று கருதிவரும் மனிதன், அதே சமயத்தில் அவரிடம், ‘என் பிராரப்தத்தை மாற்றியருள்க; அதிலுள்ள துக்கங்களைக் குறைத்தருள்க; சுகங்களைக் கூட்டுக’ என்றெல்லாம் பிரார்த்திப்பானாயின், அது பேதைமையேயாகும். ஏனெனில், இவனது பிராரப்தப் பகுதியை நிர்ணயிப்பதில் கடவுளின் நோக்கமாவது இவனுக்குத் துக்க நிவிருத்தி – சுகப் பிராப்தியாகிய ஆன்ம ஞானத்தை அடைவிக்க வேண்டும் என்பதேதான்! அதை அறியாத மனிதனோ ஆண்டவனது அருள் திட்டத்தில் தன் அற்ப மதியால் பிழை காண்பவனாய், அப்பிராரப்தத்தை மாற்றும்படி பிரார்த்திக்கிறான்! இவனது இத்தகைய பிரார்த்தனை எதைக் காட்டுகின்றது தெரியுமா? ‘எல்லாமறிந்தவர்’ என்று யாரை அவன் கொண்டாடுகிறானோ, அந்தக் கடவுளுக்குத், தான் பிரார்த்தித்துக் கொள்ளாவிட்டால் தனது சிரமங்கள் தெரியவராது என்று கருதுவதாகவே ஆகின்றது. மேலும், இவனது பிராரப்தப் பகுதியைச் சரியாக நிர்ணயிக்க அக்கடவுளுக்குத் தெரியவில்லை என்றும் குற்றஞ் சாட்டுவதாகின்றது. அதாவது, இவன் தனது பிரார்த்தனையால், எல்லாமறிந்த அவரை ‘ஒன்றுமறியாதவர்’ ஆக்குகின்றான்! இவ்வாறே, இவனது பிராரப்தப்படி வருகின்ற இன்னல்களை நீக்கித் தரும்படி இவன் வேண்டிக் கொள்ளும்போது அது விலக்கப்படாவிட்டால் இவன் மிக வருத்தமுறுகிறான். இது எதைக் காட்டுகிறது? ‘எல்லாம் வல்லவர்’ என்று இவன் யாரைத் துதிக்கின்றானோ அக்கடவுளுக்கு இவனது சிரமங்களை நீக்கும் சக்தியில்லை என்று இவன் தீர்மானிப்பதையே காட்டுகிறது! அதாவது, எல்லாம்வல்ல அவரை ‘ஒன்றும் இயலாதவர்’ ஆக்குகின்றான்!! அது மட்டுமல்ல; தன்மேல் கருணை இல்லாததால்தான் கடவுள் அக் கஷ்டங்களை நீக்கவில்லை என்றும் அவன் கருதுகிறான். இது எதைக் காட்டுகின்றது? ‘கருணை வள்ளல்’ என்று இவன் யாரைப் போற்றுகின்றானோ, அக் கடவுளுக்கு இவன்பால் உதவிசெய்யத் தயவு பிறக்கவில்லை என்று இவன் தீர்மானிப்பதையே காட்டுகின்றதல்லவா? அதாவது, தனிப்பெரும் கருணை வடிவினரான அவரை ‘கருணையற்றவர்’ என்று இவன் கைச்சாற்று வழங்கியவனே ஆகின்றான்!!! அல்லவா? இவ்வாறு -மூன்று விதமாகவும் தன்னைக் கடவுளிடம் அன்பும் நம்பிக்கையும் அற்றவனாக நிரூபித்து விடுகிறான்! இதுவே பக்தன் என்ற பெயரோடு பிரார்த்தனை செய்யும் நம்மவரிடம் பெரும்பாலும் காணப்படுகின்றதன்றோ? சிந்தித்து உணர்க.
மனிதன் ஏன் இவ்வாறு செய்கிறான்? பிரார்த்தனை செய்யுமாறு அவனைத் தூண்டுவது எது? ‘துக்கம் நீங்க வேண்டும்; சுகம் கிடைக்க வேண்டும்’ என்ற ஆவலேயல்லவா? வாழ்வில் சிரமப்படும் ஒருவன் மட்டுமே சிரமம் நீங்கவும் நற்காலம் வரவும் இவ்வாறு பிரார்த்திப்பான் என்று கருத வேண்டாம். தற்போது ஓரளவு சுகமாக வாழும் மனிதனுங்கூட எதிர்காலத்தில் ஏதாவது துன்பம் வருமோ என்று அஞ்சிக் கலங்குவான் அல்லவா? அல்லது அம்மனிதன் தற்போதுள்ள சுக வாழ்வைவிட அதிகச் சுகமானதோர் வாழ்வை விரும்பி எதிர்பார்க்கலாமல்லவா? அதனாலும் அவன் பிரார்த்திக்கின்றான். இக்காரணங்களால் தன் எதிர்காலம் எப்படியிருக்கும் என்றறிய விரும்புகின்றான். ஆனால், இவ்விருப்பம் அவசியமற்றதோர் மனோ விருத்தியே ஆகுமன்றோ? ஒருவர் ஸ்ரீ பகவானை, ‘நம் முற்பிறவிகளான இறந்த காலத்தையும், இப்பிறப்பின் வருங்காலத்தையும், மறுபிறவிகளில் நிகழப் போவதையும் பற்றி அறியமுடியுமா?’ என்று கேட்டார். அதற்கு ஸ்ரீ பகவான், ‘நிகழ்காலமான தற்போதுள்ள வாழ்வின் நினைவுச் சுமைகளையே தாங்க முடியாமற் குழப்பமும் துயரமும் அடைந்து திணறும் மனிதன், இறந்தகால வருங்கால நிகழ்வுகளைப் பற்றிய எண்ணங்களும் கிடைக்கப் பெறுவானாயின் எவ்வளவு இன்னும் அதிகக் குழப்பமும் துன்பமும் அடைவான் தெரியுமா? அந்தோ! அப்போது அவனது தற்சமய வாழ்வே நரகமாகி விடாதா! எனவே, தான் யாரென்று ஆராய்ந்து நிகழ்காலத்தில் தன்னுண்மையை அறிவதைப் புறக்கணித்துவிட்டு இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறியத் தேடியலைவது அறியாமையே’ என்று அறிவுறுத்தினர். இவ்வுண்மை ஸ்ரீ பகவானால் கீழ்க்கண்டவாறு உபதேசிக்கப்படுகிறது:
இந்தவொரு சன்மத் தியல்வசில வற்றைமனத்
துந்துநினை வாய வுணர்ச்சியே – தந்தமுயிர்
வாழ்வதனைத் துன்ப மயமாக்க லான்மறப்பே
ஆவ லுறத்தக்க தால்.
(குருவாசகக் கோவை 117)
தம்மை யறியுந் தரமுமே யில்லாதார்
அம்மையோ டும்மை யமைதிகளைச் – சும்மையாய்ப்
பாவித் தறிதல் பசுங்குழவி தன்னிழலைத்
தாவிப் பிடிக்குந் தகைத்து.
(குருவாசகக் கோவை 601)
நடுநாளே தந்நிலையை நாடறியா தாற்றத்
தடுமாறும் புந்தியார் தாமே – முடியோ
டடிநாளுந் தங்க ளவத்தைகளை யெண்ணி
நெடிதாக நிண்ணயிப் பார்.
(குருவாசகக் கோவை 602)
இன்றுநா மெவ்வா றிருக்கின்றோ மென்றுணர
நன்றுதாஞ் சற்று நயக்கலார் – பொன்றுவதன்
பின்னும் பிறந்ததன் முன்னுமுள தம்முண்மை
உன்னியுழல் வாருணர்வென் னோ!
(குருவாசகக் கோவை 603)
...இன்றுண்மை தேரா திறப்பெதிர்வு தேரவுனல்
ஒன்றின்றி யெண்ண வுனல்.
(உள்ளது நாற்பது-15)
உண்மை இவ்வாறாயிருக்க, மனிதன் தன் வாழ்வின் வருங்கால இன்ப துன்பங்களை முன்கூட்டி அறிந்துகொள்ளவே விரும்புகிறான்! இப்படிப்பட்டவனுக்கே ஜோதிட சாஸ்திரம் துணைபுரிய வருகின்றது! ஜோதிட நூல் என்பது என்ன? தாய் வயிற்றிலிருந்து குழந்தையாய் வெளிப்பட்டு இம்மண்ணுலகில் மனிதன் பிறக்கும் அதே தருணத்தில் வானில் உலவும் இதர ஒன்பது கோள்களின் நிலையை அடிப்படையாய்க் கொண்டு அம்மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவனது வாழ்வாக நிகழப்போகும் யாவற்றையும் அறிந்துகொள்ள உதவும் ஓர் கணிதக் கலையே ஜோதிட சாஸ்திரம். சுருங்கக் கூறின், இப்பிறப்பில் மனிதன் ஒருவனுக்கு இறைவனால் தொகுத்தளிக்கப்பட்டுள்ள பிராரப்தப் பகுதியை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்ற ஓர் அற்புதமான கணிதக் கலையே அது! ஆனால் இக்கலையின் பலிதத்திற்கு முக்கியமான நிபந்தனைகள் மூன்றுண்டு. (1) ஜனன காலம் இம்மியும் பிறழாதபடிச் சரியாகக் குறிக்கப்பட வேண்டும். (2) ஜாதகத்தைப் பிழையின்றிக் கணித்து வரையும் திறமை ஜோதிடருக்கு இருக்க வேண்டும். (3) ஜாதகப் பலனைக் கூறும் ஜோதிடர் பொருளுக்கோ புகழுக்கோ ஆசைப்பட்டு முகஸ்துதி செய்யும் துர்க்குணம் இல்லாதவராயிருக்க வேண்டும். இம்மூன்று தகுதிகளில் ஒன்று இல்லாமற் போனாலுங்கூட ஜாதகப் பலன் தவறாகி விடுகின்றது. இம்மூன்றில் ஒன்றோ பலவோ இல்லாமற் போவதால்தான் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஜாதகப் பலன்கள் பலிக்காமற்போய், ஜோதிட சாஸ்திரத்திற்கே இழிவை உண்டாக்கி விடுகின்றன. ஜோதிடக் கலையைப் போலவே, ரேகை சாஸ்திரம், எண் ஜோதிடம் (numerology), பலகை ஜோதிடம் (planchette-reading), குறி சொல்லுதல், ஆவிகளோடு பேசுதல், சீனாவில் உள்ள ‘இச்சிங் (Iching)’ என்ற கலை முதலியவைகளும் இறந்தகால, எதிர்கால அறிவைப் பெறுவதற்காகவே உலகின் பலவேறு பாகங்களிலும் உபயோகிக்கப்படுகின்றன. எம்மனிதனும் இவைகளின் தயவை நாடியே ஓடி உழல்கின்றான்! என்ன பயன்? அவனது வாழ்வில் வரப்போகும் சுக துக்கங்களை மட்டுமே அவை காட்டித்தர முடியுமே தவிர, அச்சுகங்களை எள்முனையளவேனுங் கூட்டவோ குறைக்கவோ செய்யா! ஒருவன் ஜோதிட நூலைத் துணைகொண்டு, தன் பிராரப்தப்படி ஓர் பெருந்துன்பம் வரப்போவதாகத் தெரிந்து கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அத்துன்பம் வந்துசேரும் நாளின் முன்பே – அது வரப்போவதாகத் தெரிந்துகொண்ட தற்சமயம் தொட்டே அவனது மனம் துயரம் அனுபவிக்க ஆரம்பித்து விடுகின்றது! அப்போது அவனுக்கு ஜோதிட நூலிற் கைதேர்ந்த ஒருவன்கூட என்ன பரிகாரம் கூற முடியும்? ‘சனீசுவரன் கோவிலில் தீபம் ஏற்று; நவக்கிரகங்களுக்கு ஆராதனை செய்; ஏழைகளுக்கு அன்னதானம் செய்; இன்னின்ன கிழமைகளிலே, இன்னின்ன நக்ஷத்திரங்களிலே, இன்னின்ன தேவதைகளை (தேவ தேவியர்களின் நாமரூபங்களை) வழிபடு; அதனால் கிரக சாந்தி ஏற்பட்டுத் துன்பங்களின் வேகம் குறைவுபடும்; மலைபோல் வருவது பனிபோற் போகும்; நன்மையுண்டாகும்’. இதுவே ஜோதிட நிபுணன் கூறக்கூடிய அறிவுரை!
உண்மையில் இதன் பொருளென்ன? ‘அற்ப மனிதா, நீ உன் பிராரப்தத்தை மாற்றிக்கொள்ள முடியாது; எல்லாம் வல்லவரும், எல்லாமறிந்தவரும், எல்லோரினும் அதிகருணையுள்ளவருமான கடவுளிடம் தஞ்சம் புகு’ என்பதே அது. அல்லவா? அதாவது, அந்த ஜோதிடக் கலைஞன் அந்த மனிதனை இவ்வாறாக நம் பக்தி சுத்தீகரிக்கும் பள்ளியில் (முன் அத்தியாயத்திற் கூறப்பட்ட பள்ளியில்) முதலாவது, இரண்டாவது அல்லது மூன்றாவது (a) பிரிவு வகுப்புகளுள் ஒன்றில் சேரும்படி தூண்டுகின்றான் என்பதே வெளிப்படை. ஏனெனில், தனது லௌகீகக் காமியங்களைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக நானாவித நாமரூபத் தெய்வாராதனையைச் செய்யும்படித் தூண்டுகின்றானல்லவா? வேதத்தின் கர்ம காண்டப் பகுதிக்குமேல் நித்தியா நித்திய வஸ்து விவேகம் செய்து முன்னேற முடியாதவர்களாய், அக்காரணத்தால் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது (a) பிரிவு வகுப்புகளுக்கு மட்டுமே தகுதியுள்ள மந்த விவேகிகட்கே இது பொருத்தமுடையதாம். ஆனால், பக்திப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு (b) பிரிவிலும் நான்காம் வகுப்பிலும் உள்ள தீவிர சாதகர்கள் இந்த ஜோதிட நிபுணன் அறிவுரைத்தற்கு முன்பே, இயல்பாகவே, முழுமனதுடனும் நிஷ்காமியமாகவும் இறைவனைச் சார்ந்து நிற்கின்றனரன்றோ? ஆகையால், ஓர் உண்மையான ஆன்ம விசாரிக்கும் அல்லது உண்மையான ஆன்ம சமர்ப்பணம் செய்பவனான தெய்வ பக்தனுக்கும் இந்த ஜோதிடக் கலையாலோ, ஜோதிட நிபுணரின் அறிவுரையாலோ என்ன புதுப் பிரயோஜனம் உண்டாகிவிடப் போகிறது? ஒன்றுமில்லை! சம்பூரண சரணாகதி நெறியில் நிற்கும் அவ்வுத்தம பக்தன் இனி எந்தப் புதியதோர் தேவ தேவியரிடம் போய், பிராரப்தப்படி சம்பவிக்கின்ற எந்தத் துன்பங்களை நீக்கவும், எந்தச் சுகங்களை விருத்தி செய்யவும் வேண்டிக்கொள்ளப் போகின்றான்! ‘இறைவன் ஒருவரே’ என்பதும், அவர் தாமாகவே – இவனது பிரார்த்தனையுமின்றியே – தமது திருவருள் இச்சைப்படி, தேவையாயின், அவனது பிராரப்தத்தை மாற்றியமைப்பார் என்பதும் அவன் நன்கறிந்திருக்கின்றான் அல்லவா? இந்தத் திடவறிவு பெறாத ஒருவனுக்கே கடவுளின் பற்பல நாம ரூபங்களை வழிபடும் அவசியம் உண்டாக முடியுமே தவிர, இத் திடவறிவு மலரப்பெற்ற பக்தன் ஒருவனுக்கு ஜோதிடம் போன்ற கலைகளால் என்ன பயன்? மோக்ஷம் ஒன்றையே தான் விரும்பி முயல்வதாகக் கூறிக்கொள்ளும் சாதகனொருவன் அதேசமயத்தில் ஜோதிடம் போன்ற இத்தகைய எதிர்கால-இறந்தகால விமரிசனக் கலைகளிலும் மிக்க உற்சாகமுடைவனாக இருப்பானாயின் அவன் ஓர் உண்மையான பக்தனுமல்ல, ஓர் உண்மையான விசாரியுமல்ல! ஏனெனில், ஓர் உண்மையான பக்தனோ தனது இச்சா-கிரியா சுதந்திரத்தை இறைவனுக்குச் சமர்ப்பித்து விட்டதால், தன் பிராரப்தத்தை மாற்றும்படி பிரார்த்திக்கவே மாட்டான். ஓர் உண்மையான விசாரியோ தனது இச்சா-கிரியா சுதந்திரத்தை உபயோகிக்க வேண்டிய சரியான வழியை (தன்னாட்டம் ஒன்றுக்கே தனக்கு இச்சா-கிரியா சுதந்திரமுண்டு என்பதை) அறிந்திருப்பதால், ஆன்மாவை நாடுவது ஒன்றைத் தவிர, வேறொரு முயற்சியுமற்றிருப்பான். மேலும், ஜோதிடமும் அதுபோன்று மேற்சொன்ன இதர கலைகளும் உண்மையான நாம் ஆகிய – சத்-சித்தாகிய – ஆன்மாவைப் பற்றி ஒன்றும் கூறவியலா. அவை, ‘நான் இவ்வுடல், நான் இன்னார்’ என்று உயிர்த்திருக்கும் பொய்யுணர்வான ஜீவனின் வாழ்வைப் பற்றியும் அவனது குணாதிசயங்களைப் பற்றியும் மட்டுமே ஏதாவது கூறக் கூடியவையாகும். எனவே, தோற்றமாத்திர இப்பொய் வாழ்வின் மூலப் பொருளும், அதிஷ்டானமுமான ஆன்ம சத்தியமொன்றையே நாம் அறியத் தேடுவது உண்மையானால், இப்பொய்யுலக வாழ்வின் அற்ப விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் யாதோரு சிறு உற்சாகங்கூட காட்டவே கூடாது. ஒருவன் உத்தம பக்தனோ அல்லது விசாரியோயாயின் (அதாவது, நம் பக்திப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு (b) பிரிவையோ அல்லது நான்காம் வகுப்பையோ சேர்ந்த மாணவனாயின்) இக்கலைகளில் எவ்வாறு சிறிதேனும் ஆர்வமோ ருசியோ கொள்ளமுடியும்? அப்படி ஒருவன் கொள்வானாயின், தனக்கு இறைவனிடம் நம்பிக்கையோ, அன்போ இல்லை என்பதை, பக்கம் 316-317-ல் காட்டியபடி மூவிதமாகவும் நிரூபித்துக் கடவுளை இகழ்பவனே ஆகின்றான். இவ்வாறு, இக்கலைகள் பரிபூரண சரணாகதி நெறியில் அறவே அவசியமற்றுப் போகின்றன!
அன்றே யென்ற னாவியும்
உடலும் உடைமை யெல்லாமுங்
குன்றே யனையா யென்னையாட்
கொண்ட போதே கொண்டிலையோ?
இன்றோ ரிடையூ றெனக்குண்டோ
எண்டோள் முக்கண் ணெம்மானே,
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்,
நானோ விதற்கு நாயகமே?
(மணிவாசகர், குழைத்த பத்து-7)
மேற்கண்டவாறு கூறுவதால் அக்கலைகளெல்லாம் பொய்யென்றோ, வீணென்றோ, அல்லது நாம் அவைகளை வெறுக்க வேண்டுமென்றோ கூறுவதாக எண்ணி, வாசகர்கள் தவறான முடிவுக்கு வரவேண்டாம். அவை நம் பக்திப் பள்ளியின் முதல், இரண்டாம், மூன்றாம் (a) பிரிவில் உள்ளவர்களுக்கே கொள்ளத்தக்கன என்பதும், மெய்ப்பொருள் ஒன்றையே நாடும் உண்மை முமுக்ஷுக்களுக்கு அவை சிறிதும் பயனற்றவையாதலின், தள்ளத்தக்கன என்பதுமே நாம் இங்கு காட்டும் முடிவு.
நமக்கு உண்மையில் இறைவனிடம் மெய்யன்பு இருக்குமாயின்,
அண்ணா மலையா யடியேனை
யாண்ட வன்றே யாவியுடற்
கொண்டா யெனக்கோர் குறையுண்டோ
குறையுங் குணமு நீயல்லா
லெண்ணே னிவற்றை யென்னுயிரே
யெண்ண மெதுவோ வதுசெய்வாய்
கண்ணே யுன்றன் கழலிணையிற்
காதற் பெருக்கே தருவாயே.
(ஸ்ரீ அருணாசல நவமணி மாலை 7)
...அன்பினில் விளையு மின்பமே யன்பர்
அகத்தினி லூறுமா ரமுதே
என்புக லிடநின் னிட்டமென் னிட்டம்
இன்பதெற் கென்னுயி ரிறையே.
(ஸ்ரீ அருணாசலப் பதிகம் 2)
என்ற ஸ்ரீ ரமண வாக்கின்படி, அவனிடம் நாம் நிபந்தனையற்ற சம்பூரண சரணாகதி செய்துவிட வேண்டும். இவ்வாறு சரணாகதியின் தன்மையை நன்குணர்ந்து ஒப்பும் உத்தம பக்தனொருவனையே சென்ற அத்தியாயத்தில் நாம் பக்திப் பள்ளியின் நான்காம் வகுப்புக்குரியவனாகக் கூறப்பட்டது. அத்தகையோனுக்கே தன் இச்சா-கிரியா சுதந்திரத்தால் இழைக்கப்படும் இரு விதத் தவறுகளையும் நிவிருத்திக்கும் வழியையும் விளக்க முடியும்; அவனொருவனே அதை விளங்கிக் கொள்ளவும் முடியும்; அவனொருவனே அவ்விரு பிழைகளையும் நிவிருத்தித்துக் கொள்ளவும் முடியும்! தானியற்றிய கர்ம பலன்களைப் பற்பல பிறவிகளூடும் அனுபவித்து, விவேகத்தால் அவைகளில் வைராக்கியமடைந்து, அதனால் பக்குவ முதிர்ச்சி பெற்றுவரும் அவனைப் போன்ற ஒரு சில உத்தம முமுக்ஷுக்களுக்காகவே, உண்மையில் கடவுளும் குருவுருத்தாங்கிக் குவலயம் அடைகின்றார்! தன்னைப் போன்றதோர் மனிதனாகவே சற்குரு அவனது கண்முன் காணப்பட்டாலும், உண்மையில் அவர் அவனது அத்தியந்தப் பிரியரூபமான அவனது ஆன்மாவேயாகையால், அவர்பாற் கவர்ச்சியுற்று, எல்லையற்ற, தடுக்கமுடியாத, உள்ளன்பு அவனுக்கு இயல்பாகவே பொங்கிப் பெருகுவதில் ஆச்சரியமொன்றுமில்லை.
‘உன் ஆன்மாவை – மெய்ப்பொருளை – அறிவதொன்றே உன் இச்சா-கிரியா சுதந்திரத்தை உபயோகிக்கத்தக்க சரியான வழி. இந்நேர்வழி உனக்கு விளங்காவிடில் அல்லது அது உன்னால் இயலாவிடில், அந்த உன் சுதந்திரத்தைக் கடவுள் கைக்கொண்டு உனக்காக அதை அவரிஷ்டப்படி உபயோகித்துக் கொள்ளுமாறு அவரிடம் பூரணமாக விட்டுக்கொடுத்து (எண்ணும் மனச் சுதந்திரமற்று) சரணடைந்துவிடு. அதாவது உன் இச்சா-கிரியா சுதந்திரமாகிய உடைவாளைச் சரியாக உபயோகிக்கத் தெரிந்துகொள்; அன்றேல், அதை உபயோகிக்கத் தகுந்த, தெரிந்த உன் இறைவனிடமாவது முற்றும் ஒப்படைத்து விடு’116 என்று சற்குரு அவன்முன் ஆன்மவிசார நெறியாகிய ஞான மார்க்கத்தையும், ஆன்மசமர்ப்பண நெறியாகிய பக்தி மார்க்கத்தையும் எடுத்துக்காட்டித் தருகின்றார்.
கர்ம நாசம்
இவ்வாறு சற்குருவால் அருளப்பெற்ற ஆன்ம விசாரத்தையோ ஆன்ம சமர்ப்பணத்தையோ கைக்கொள்ளும் சீடனொருவன் அக்கணந்தொட்டு, தன் வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சி ஒவ்வொன்றும் தன் மன அலைவை ஓய்வித்து ஆன்மாவை நாடித் தன்னை நிலைக்க வைப்பதற்கென்றே திருவருளால் நடந்துவரும் சாதகமான நிகழ்ச்சியே என்று உணர ஆரம்பிக்கின்றான். அது மட்டுமின்றி, இவ்வான்மீக நெறிக்குத் தான் வருவதற்கு முன்பு, இறைவனாற் கணிக்கப்பட்டு நடந்துவரும் தனது பிராரப்தப்படி நிகழ்ந்த சென்றகால நிகழ்ச்சிகளுங்கூட, அலைமனம் ஒடுங்கி ஆன்மாவில் தான் நிலை பெறுவதற்கென்றே நிகழ்ந்திருக்கின்றன என்றும் அவன் உணர்பவனாகின்றான். தற்போது நேர்ந்துள்ள தன் புத்தறிவுக் கண்ணோட்டத்தால் தன் வாழ்வை நோக்கும் இப்பக்தனுக்கு,
குரு உன் உள்ளுமிருக்கின்றார்; புறத்தும் இருக்கின்றார்; நீ உண்முகப்பட அனுகூலமான ஸ்திதியை வெளியிலும் ஏற்படுத்தித் தந்து, நீ உள்ளத்தில் (ஆன்மாவில்) நன்கு நிலைபெறும் பொருட்டு அவர் வெளியிலிருந்து உன்னை உள்ளுக்குத் தள்ளுகின்றார்; உள்ளிருந்தும் இழுத்துக் கொள்கிறார்.
என்ற ஸ்ரீ ரமண வாய்மொழியின் உண்மை அனுபவமாகின்றது.117
இப் புதுநோக்கு அவனிடம் மலர்ந்தது முதல், தன் கடவுளிடமோ குருவினிடமோ தன் பிராரப்தத்தை மாற்றும்படி பிரார்த்திக்கவும் அவன் வெட்கமடைகின்றான்! ஏனெனில், தன் வாழ்வில் நேருவன யாவும் ஆன்மாவை நோக்கித் தன்னைத் திருப்புவதற்காகவே நிகழ்ந்து வருகின்றன என்ற உண்மையை இப்போது நன்குணர்பவனாகின்றான். சுருங்கக்கூறின், இத்தகைய பக்குவியின் பார்வையில் – அனுபவத்தில் – பிராரப்தம் என்று ஒன்று இல்லாததே ஆகின்றது! இன்ப துன்பமாகிய எந்நிகழ்விலும் அவன் ‘பிராரப்தம்’ என்ற சொல்லைக்கூட உபயோகிக்காதவனாய், ‘இது என் ஆண்டவனின் அருளிச்சை; அவனிஷ்டமே என்னிஷ்டம்; அதுவே எனக்கின்பம்’ என்று கூறி, அவற்றைத் ‘திருவருட் பிரசாதம்’ என்றே குறிக்கின்றான்! இங்குதான் சமர்ப்பணம் சம்பூரணமாகின்றது! பிறகு, அவனையணுகும் இன்னல்களெல்லாம்,
மாசில் வீணையு மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலு
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
என்ற அப்பரின் அருள்வாக்கிற்கே இலக்கியமாகின்றன!
இவ்வாறு சம்பூரண சமர்ப்பணத்தால் மறுமலர்ச்சியுற்ற அவனது மனம் இனி மனமேயல்ல; அது சுபாவ ஆன்மாவே. அவனிடம் முன்பு காணப்பட்ட மனம் அழிந்துவிட்டதென்றே கூற வேண்டும். மனம் இவ்வாறு அழிந்தபோது அவனது கர்த்ருத்துவமும் போக்த்ருத்துவமும் இரண்டும் நாசமாயிற்று என்றே நாம் அறிய வேண்டும்.
...வித்துப் - போன்ற
வினைமுதனா மாயின் விளைபயன் றுய்ப்போம்
வினைமுதலா ரென்று வினவித் – தனையறியக்
கர்த்ருத் துவம்போய்க் கருமமூன் றுங்கழலு
நித்தமா முத்தி நிலையீதே...
(உள்ளது நாற்பது 38)
கர்த்ருத்துவமும் போக்த்ருத்துவமும் (ஒரே ஏட்டின் இரு பக்கங்களைப் போல) ஒரே ஜீவனின் இரு முகங்களே. இவ்விரு முகங்களும் அழியப்பெற்று மோனமுற்ற ஜீவனின் நிலையே சும்மாவிருக்கும் நிலையாகும். இதுவே சற்குருவின் உயர்வற உயர்ந்த உண்மை உபதேசமாகும். இவ்வாறு சும்மா இருப்பதே மெய்யான இறைபணி இயற்றலும், குரு சேவை புரிவதுமாகும்.
பந்தவீ டற்ற பரசுக முற்றவா
றிந்த நிலைநிற்ற லுந்தீபற
விறைபணி நிற்றலா முந்தீபற.
(உபதேச வுந்தியார் 29)
இச் சும்மாவிருத்தலே பரமான்ம வாழ்வு; இதுவே நம் பூர்வ ஸஹஜாத்ம ஸ்திதி.
இவ்விதம் சும்மாவிருக்க விரும்பவோ – அதாவது, இருப்பை இச்சிக்கவோ – அல்லது சும்மா இராமையை விரும்பவோ – அதாவது எழுச்சியை இச்சிக்கவோ – எவ்வொருவனுக்கும் இச்சா சுதந்திரம் எப்போதும் இருந்தே வருகின்றது; ஏனெனில் இவ் விச்சா-கிரியா சுதந்திரமானது என்றும் இயல்பாயுள்ள நமது ஆன்ம – பிரம்ம – சுதந்திரமேயன்றோ!
நமது எந்த பரிபூரண பிரம்ம சுதந்திரத்தை, நம்மை ஓர் தனிக் கர்த்துருத்துவமுள்ள அற்ப ஜீவனாகக் கற்பனையாய்ச் சிருஷ்டித்துக் காணும் நமது பிரவிருத்தி ரூப இச்சா-கிரியா சக்தியாக விரும்பி உபயோகித்தோமோ, அச்சுதந்திரத்தையே இப்போது சும்மாவிருக்கும் நிவிருத்திரூப இச்சா-கிரியா சக்தியாய் விரும்பி உபயோகிக்கும்போது, அதுவே பிரபஞ்ச சிருஷ்டி ஸ்திதிகளுக்கு ஏதுவாக முன்பு கூறப்பட்ட பொய்யும் அற்பமுமான கற்பனா சக்தியை அழித்து இணையற்ற அளவற்ற அமைதிப் பேராற்றலாக (dynamic stillness)118 மகா மௌன பரம சக்தியாக – ஓங்கி நின்று விளங்குகின்றது!
இச்சை முதலா வியலும்பல் சக்திகளும்
சொச்சமாந் தன்சிற் சொரூபத்தே – மிச்சையாங்
கற்பனையாத் தீரக் கழல்வனகாண் தன்சொரூபச்
சிற்பரத்தே சித்தமற்றக் கால்.
(குருவாசகக் கோவை 42)
இந்நிலையில் ஒன்றான ஆன்மாவை, ஆன்மாவால், ஆன்மாவிலேயே பலவாகக் காணவல்ல மேற்கூறிய கற்பனா சக்தியின் விலாசத்தால் தோன்றிய – பிரம்ம இயல்பாகாத – ஜகஜீவேசுவரக் கற்பனைத் தோற்றங்கள் யாவும் இருப்பற்று மறைகின்றன! பிற பொருளற்று என்றும் ஏகமாய் விளங்கும் தன் மெய்ந்நிலையாகிய ஆன்மாவாய் விழிப்புற்ற சாதகனுக்கு, இதுகாறும் தான் ஓர் அகந்தை வடிவ ஜீவனாய்ப் பிறந்திறந்து உழன்றதாகக் கண்ட கனவுத் தோற்றத்திற்கு ஆதாரமாயிருந்த அஞ்ஞான நித்திரை இப்போது கலைந்து விடுகின்றது. இங்ஙனம் அகங்காரக் கர்த்தவ்வியம் அழிந்தபின் போக்தாவாக (அனுபவிப்போனாக) யார் எப்படி மிஞ்சி நிற்பான்? எனவே, அவனாற் சேர்க்கப்பட்ட நல் தீ வினைகளைக் கொண்ட சஞ்சிதக் குவியலானது கனவில் ஒருவன் சேர்த்த கடனும் சொத்தும் விழித்தபின் வெறுமையாவது போல தற்போது ஏற்பட்ட ஞான விழிப்பால், இருப்பற்ற பொய்யாய் மறைந்தே போகின்றது. இதையே,
பஞ்சினை யூழித் தீப்போற் பலசன்ம விவித வித்தாம்
சஞ்சித மெல்லாம் ஞானத் தழல்சுட்டு வெண்ணீ றாக்கும்...
என்று கைவல்யத்தின் முதற் படலம், 96-ஆவது பாடல் குறிக்கின்றது.
இதுவரை கூறப்பட்டதிலிருந்து, கர்த்தவ்வியம் அழிந்தவுடனேயே புது முயற்சிகளான ஆகாமியமும் இல்லாதொழியும் என்று தெரிகிறதல்லவா? ஆனால் சில சாஸ்திரங்ளில், ‘சஞ்சிதமும் ஆகாமியமும் ஞானிக்கு அற்றுப் போகும்; எஞ்சிய பிராரப்தம் மட்டும் அவனது உடல் மரிக்கும்வரை அனுபவிக்கப்பட்டு, உடலின் மரணத்தோடு தானும் அழியும்’ என்று வேற்றார் கேள்விக்கு விளம்பும் சொல்லாகக் கூறப்பட்டது. இது கூரிய விவேகமுள்ள உத்தமப் பக்குவிகளான உற்றார்க்கு உரைத்த உண்மை வசனமல்ல என்பதை நாம் நன்கறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், நல்ல விவேகிகள் இங்கு சற்றுச் சிந்தித்து உணர வேண்டும். அதாவது, கர்த்ருத்துவமும் போக்த்ருத்துவமும் (ஒரே ஏட்டின் இரு பக்கங்களைப் போல) ஜீவனின் இரு முகங்களேயாவதால், ஆன்மஞானத்தாற் கர்த்ருத்துவம் அழியும்போது போக்த்ருத்துவம் மட்டும் எப்படி உயிர்த்திருக்க முடியும்? முடியாதன்றோ? ஞானியிடம் இவ்வாறு போக்த்ருத்துவம் அற்ற போது பிராரப்தத்தை எப்படி, யார் புஜிப்பது (அனுபவிப்பது)? அனுபவிப்போன் இல்லாததால் பிராரப்தம் நசித்ததேயாகும். ஆகையால், ஞானிக்கு மூவித கர்மமும் அற்பமும் இல்லை என்பதே உண்மை!
யதை தாம்ஸி ஸமித்தோக்னி பஸ்மஸாத் குரு தேகுர்ஜுன
ஞானாக்னி ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா.
(ஸ்ரீமத் பகவத் கீதை 4-37)
ஸ்ரீ பகவானருளிய இதன் மொழி பெயர்ப்பு:
எரியு மெரியு மெரிகரும்பை யெல்லாம்
எரித்துநீ றாக்க லெனவே – எரியாம்
அறிவுங் கரும மனைத்து மெரித்தே
உறுவிக்கு(ம்) நீறா யுணர்.
(ஸ்ரீ பகவத் கீதாசாரம் 24)
ஆனால் அபக்குவிகள் ஞானியையும் ஒரு தேகமாகவே கருதுவதால் (தம்மைத் தேகமாகக் கருதும் அவர்கள் ஞானியை மட்டும் வேறுவிதமாகக் கருதுவது அசாத்தியம் ஆதலால்) ‘ஞானிக்குப் பிராரப்தம் மட்டும் உண்டு’ என்று சில சாஸ்திரங்களிற் கூறவேண்டி வந்தது. இக்காரணத்தால்தான், அவ்வக் காலங்களில் ஞானாசிரியர்களாய் அவதரித்து, அவ்வக்கால மக்களின் மன பரிபாகத்திற்கேற்பப் பற்பல சாஸ்திரங்களை வகுத்த அதே பரம்பொருளே; தற்போது பகவான் ஸ்ரீ ரமணராய் எழுந்தருளி வந்து, அதியுத்தமப் பக்குவிகள் மேன்மேலும் முன்னேறி மெய்விளக்கமுறுவதற்காகவே, முற்காலத்திற் பற்பல சமயங்களில் தாமே அருளிச் செய்த சாஸ்திரங்களிற் கீழ்க்கண்டவாறு திருத்தங்களும் அமைவுகளும் விளக்கமும் அருளி, நம்மை உய்விக்கின்றது!
சஞ்சிதவா காமியங்கள் சாராவாம் ஞானிக்கூழ்
விஞ்சுமெனல் வேற்றார்கேள் விக்குவிளம் – புஞ்சொல்லாம்
பர்த்தாபோய்க் கைம்மையுறாப் பத்தினியெஞ் சாததுபோற்
கர்த்தாபோம் மூவினையுங் காண்.
( உள்ளது நாற்பது-அனுபந்தம் 33)
பக்தி வழியிற் செல்லும் சாதகன் ஒருவன், தனக்கு எது நன்மையோ அதையெல்லாம் தமது கருணையால் தனக்குச் செய்தருளிக் காப்பாற்றவல்ல ஓர் கடவுளோ, குருவோ உண்டு என்று உறுதியாக நம்புகிறான். அத்தகைய பக்தன் தன் கர்த்ருத்துவத்தை அக்கடவுளிடமோ குருவினிடமோ சம்பூரணமாகச் சமர்ப்பிப்பதில் தனது இச்சா-கிரியா சுதந்திரத்தைப் பிரயோகிக்கின்றான். இதன் மூலம் அவன் ஆகாமிய முயற்சிகள் அற்றுச் சும்மாவிருக்கும் பரம நிலையை எய்துகின்றான்.
ஆனால், புத்தரைப் போன்ற மிக அரிய ஒரு சில சாதகர்கள் உண்டு. இவர்களுக்குக் கடவுள் என்றோ குரு என்றோ யாதொரு அன்னியப் பொருளிலும் நம்பிக்கை இருப்பதில்லை. இத்தகையோர் உலக வாழ்வில் நேரும் பல்வேறு வகையான சுகதுக்க நிகழ்ச்சிகளையும், சோதனைகளையும், அவற்றை முன்னிட்டு அவ்வப்போது தம்முள் தோன்றும் முயற்சி வடிவச் சலனங்களையும், அவற்றின் இயல்புகளையும் மிகவும் ஆழ்ந்து, கூர்ந்து, ஆராய்ந்து, அதன் விளைவாகத் தமது இச்சா-கிரியா சுதந்திரத்தை எவ்வாறு தக்க வழியிற் செலுத்திப் பயனுற வேண்டுமென்பதைச் சரியாகக் கண்டுபிடித்து விடுகிறார்கள்! ஆகவே, தமது இச்சா-கிரியா சுதந்திரத்தால் தமது நாட்டத்தை முன்னிலை-படர்க்கைகளாகிற அன்னியங்களினின்றும் மீட்டுத் தன்மேல் (ஆன்மாவில்) மட்டும் ஊன்றி, தோற்ற மாத்திரமாம் பிரமாதத்திற்குச் (அதனின்றும் நாட்டம் நழுவுதலுக்கு) சற்றும் இடந்தராமல், இழந்ததுபோற் காணப்படும் ஆன்ம ஞானத்தை (சுய அறிவை) – நிஷ்கிரிய அசலத் தன்மையை மீண்டும் அடைகின்றனர். இவ்வாறு அவர்களும் சும்மாவிருக்கும் பரம நிலையைப் பெறுகின்றனர்!
இவ்வாறு இறைவனிடம் பரிபூரண சரணாகதி செய்யவோ அல்லது கற்பனையான தன்மறதியால் (பிரமாதத்தால்) விளைந்த அஞ்ஞானத்தை ஆன்ம விசாரத்தால் நீக்கிக் கொள்ளவோ விரும்பும் இச்சா சுதந்திரமும் முயலும் கிரியா சுதந்திரமும் ஜீவனிடம் தடையற்று இருந்தே வருகின்றது (ஜீவர்கள் ஆகாமியம் இயற்ற முடிவது இதனால்தான்). அது எக்காலத்தும் தடுக்கப்பட்டதேயில்லை. ஏனெனில், இது பிரம்ம சுபாவமே – எல்லோரிடமும் சுபாவமாய் விளங்கும் ப்ரம்ம சுதந்திரமே. இது ஒன்றுமட்டும் இல்லையென்றால் முக்தியோ சர்வதுக்க நிவர்த்தியோ அறவே இயலாத காரியமாகிவிடும்! மேலும், ‘சாதனமின்றி ஒன்றைச் சாதிப்பா ருலகிலில்லை...’ என்று ஜீவர்களை விடுதலைக்காக விரும்பி முயலும்படி கூறி, அனாதி காலமாக உபதேசித்து வரும் குருமார்களும், சாஸ்திரங்களும் – யாவுமே – தேவையற்ற வெறும் வீணேயாகி விடுமல்லவா?
தன் முயற்சி
சிலர், பிராரப்தத்தின் வாயிலாகத்தான் ஞானம் கிடைக்க வேண்டும் என்று நம்பிக்கொண்டு, ‘ஞானமடையும் பிராரப்தம் எனக்கில்லை’ என்று சொல்லிக் கொண்டு, ஞானமடைய விரும்புவதற்குங்கூட விரும்பாதவர்களாய், சோம்பேறிகளாய் வாழ்வதுண்டு. ஆனால், அத்தகையோர் ஞானமடையும் விருப்பம்-முயற்சி இவைகளில் மட்டுந்தான் சோம்பலைக் காட்டிப் பிராரப்தத்தின் தலையிற் பழியைப் போட்டு, அதன் காலிலேயே சரணாகதி என்று வீழ்ந்து கிடப்பார்களே தவிர, அதே சமயத்தில் இதர உலகாயதக் காரியங்களில் – ஆசாபாசங்களுடன் தேவைப் பொருள்களைத் தேடி அலைந்து திரிவதில் – அலுத்துப்போவதே இல்லை! அதாவது, மாற்றற்கரிய, பிராரப்தப்படி வருகிற சுகங்களைத் தூண்டி அதிகப்படுத்தவும், துக்கங்களைத் தடுத்துக் குறைக்கவும் ஊக்கத்தோடு முயன்று மிகப் பாடுபட்டுப் போராடிக்கொண்டே இருப்பர்! ஆனால், இதனால் விளையும் பயன் பூஜ்ஜியமே!! செய்யத் தகாததை, செய்ய வேண்டாததை (அதாவது பிராரப்தத்தை எதிர்ப்பதை) செய்வதில் முழு முயற்சியுள்ள அவர்கள், செய்ய வேண்டியதான – கர்த்ருத்துவ நாசத்தை ஏற்படுத்தும் தன்னாட்டம் அல்லது சரணாகதியாகிய – சாதனையில் மட்டுமே சோம்பலுடையவர்களாய் இருக்கின்றனர். இதுவே அறியாமையின் உன்னத நிலை! ஆகையால், தெய்வ நம்பிக்கையுள்ளோர் கர்த்ருத்துவத்தைக் கடவுளிடம் ஒப்படைப்பதிலும், அந்த நம்பிக்கை ஏற்படாதோர் கர்த்ருத்துவத்தைச் சரியானபடி உபயோகிக்கும் விசார வழியாகிய தன்னாட்டத்திலும் மிகுந்த இச்சையும் பெரு முயற்சியும் உடையவர்கள் ஆக வேண்டும்.
தன் முயற்சியைக் கர்மோற்பத்திக்கு ஹேதுவான பிரவிருத்தி என்றும், கர்ம நாசத்திற்கு ஹேதுவான நிவிருத்தி என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். கர்மோற்பத்தி வழியில் தன் முயற்சியைச் செலுத்தினால், கர்மங்களின் பலன் முழுவதும் அனுபவித்துத் தீரும் வரையிலும் வீடுபேறாகிய ஞான விழிப்புக்கே இடமில்லை. பிராரப்த வாயிலாகக் கர்ம பலன்களை அனுபவிக்கும் (புஜித்துத் தீர்க்கும்) ஒவ்வொரு பிறவியிலும் கூடவே கர்மோற் பத்தியும் (ஆகாமியமும்) தன் முயற்சியால் நடந்துகொண்டே இருப்பதால், கர்ம மார்க்கத்தால் ஞானவிழிப்பு ஒருக்காலும் ஏற்படாது என்பது திண்ணம். மேலும், கர்மபலன்கள் பிறவிதோறும் அனுபவிக்கப்பட்டுச் சிறிது சிறிதாக நசித்து வந்தாலும், அவை வாசனைவடிவ வித்துக்களாக உள்ளத்தில் மிஞ்சி நின்று, மீண்டும் மீண்டுங் கர்மங்களைப் பெருக்கிக் குவிக்கவே தூண்டுவதால், தன் முயற்சியைக் கர்மோற்பத்தி வழியிற் செலுத்தி ஒருபோதும் வீடுபேறு அடையவே முடியாது என்றறிக.
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற.
(உபதேச வுந்தியார் 2)
கர்மநாசத் தன்முயற்சி என்பது ஆன்ம நாட்டம் எனப்படும் தன்னாட்டமே – தன்னை நோக்கித் திரும்புவதே. இதனால் உண்டாவது ஞான விழிப்பு. ஞான விழிப்பைத் ‘தன்னுணர்வுறுதல்’ என்றே கூற வேண்டும். தூங்கிக் கனவு கண்டு கொண்டிருக்கும் ஒருவன் விழித்துக்கொள்கிறான் என்று கூறினால், தூக்கத்திற்கு முன்பிருந்த நனவிலுள்ள தன்னுணர்வை அடைகிறான் என்பதே அதன் பொருள். நாம் கொள்ளும் பலகோடிப் பிறவி(வாழ்வு)களும் ஒரே தூக்கத்திற் காணப்படும் பலகோடிக் கனவுகளே! நமது அகண்ட ஏக இருப்புணர்வை (சத்-சித்தை) மறந்த தன் மறதியே அந்த நீண்ட தூக்கம்! இத்தூக்கம் கலையாத வரையில் நமது வாழ்வாகக் காணப்படும் பற்பல பிறவிக் கனவுகளும் மாறி மாறி அதில் வந்து கொண்டேயிருக்கும்.
ஒருவனுக்குக் கனவு எப்போது நீங்குகிறது? கனவு இருவித காரணங்களால் நீங்கும். (1) ஓர் கனவை ஆரம்பித்து வைத்து, அதன் நிகழ்வுக்குக் காரணமாக நிற்கும் (அந்தக் கனவுப் பிராரப்தக்) கர்ம பலன் புஜிக்கப்பட்டு முடிவுற்றால், அக்கனவு நீங்கி மீண்டும் தூக்கத்தையோ விழிப்பையோ ஒருவன் அடைவான். அல்லது (2) கனவு நிகழ்ச்சிகளின் இடையில் ஏற்படும் அதிக பயம், அதிக சந்தோஷம் அல்லது அதிக துக்கம்-கவலை போன்ற அசாதாரண உணர்வு அதிர்ச்சிகளுள் ஒன்றால் உந்தப்பட்டு, கனவு காண்போனின் மனோவிருத்தி, கனவிற் காணப்படும் முன்னிலை-படர்க்கைகளை விட்டு, கனவைக் காண்பானாகிய தன்மை(first person)யை நோக்கி (தெரிந்தோ தெரியாமலோ) உடனே திரும்புவதால் – அதாவது கனவு காணும் மனம் திடீரென ஆன்மாவாம் இதயத்தினுள் வந்து புகுவதால் விழிப்பு உண்டாகின்றது.
ஆயினும் இவ்விருவித விழிப்புக்களும் ஞான விழிப்புக்கான சரியான உதாரணமாவதில்லை. ஏனெனில், கனவில் மேற்கொண்டிருந்த ஓர் உடல்-உலகத் திருஷ்டி விருத்தியிலிருந்து மீண்டும் திரும்பி அதற்கு மூலமான நனவின் உடல்-உலகத் திருஷ்டி விருத்தியையே இவன் தற்போது தன்னுணர்வாகப் பெறுகிறானன்றோ? இதுபோலவே, இப்போதுள்ள நனவாகிய (வாழ்வாகிய) கனவை ஆரம்பித்து வைத்துள்ள பிராரப்தப் பலன் முடிவுற்றால், சிவ லோகம், விஷ்ணு லோகம், பிரம்ம லோகம், சுவர்க்க லோகம், பிதிர் லோகம் முதலியவற்றிலோ அல்லது மீண்டும் இவ்வுலகத்திலேயோ பெறும் மற்றொரு (சொப்பனமாகிய) வாழ்வின் உடல் உலகத் திருஷ்டி விருத்தியையே அவன் அடைகின்றான். தூக்கத்தினின்றும் மீண்டும் தோன்றும் மற்றொரு கனவு போலவே, தற்போதுள்ள நனவு மரணத்தில் மறைந்ததும் அதனின்றும் மீண்டும் ஓர் ‘உடல் நான்’ என்னும் வடிவில் அகந்தை வாழ்வாகிய நனவுக்கனவு (மறு பிறப்பு) உண்டாகின்றது. ஏனெனில், இவ்வாழ்வுக் கனவுக்குக் காரணமான தன்மறதித் தூக்கம் கலையாததால், இவ்வாழ்வு முடிந்ததும் ஞான விழிப்பு வந்து விடுவதில்லை, ஞான விழிப்புக்கும் இத்தகைய சொப்பன மாற்றங்களாகிய போலி விழிப்புகளுக்கும் உள்ள வேற்றுமையை வாசகர்கள் இந்நூலின் 146-147 பக்கத்திற் கொடுக்கப்பட்ட விளக்கத்தைக் கொண்டு கண்டு கொள்க. ஆகவே, ஞான விழிப்பானது இவ்வாறு முதல் வகையான பிராரப்த முடிவால் உண்டாகாது. இரண்டாவது வகையான முன்னிலை-படர்க்கை நாட்டத்தை விட்டு வைராக்கியத்தால் உந்தப்பட்டுத் தன்மையை நாடும் – தன்முயற்சியால் தான் உண்டாக முடியும்.
இவ்வாறே, இப்போதுள்ள நம் நனவில் எக்காரணத்தாலாவது நமது நாட்டம் முன்னிலை-படர்க்கைகளை விட்டுத் தன்மையின்மீது திருப்பப்பட்டால், கனவு போன்ற இந்நனவு கலைவது மட்டுமன்றி தூக்கம் போன்ற நீண்ட தன் (ஆன்ம) மறதியும் நீங்கி, நம்மை நித்திய சத்திய ஆன்ம விழிப்பிற் சேர்த்துவிடும். சிற்சில சமயங்களிற் பிராரப்த வாயிலாக நம் வாழ்வில் திடீரென்று அதிபயம், பேரிரக்கம், அதி துக்கம், அபரிமித சந்தோஷம் முதலிய உணர்வதிர்ச்சிகள் ஏற்படுவது உண்டல்லவா? பக்குவம் முதிர்ந்த சில ஜீவர்கள் (சில மகான்கள் தம் வாழ்வில் நேரிட்ட இத்தகைய உணர்வதிர்ச்சிகளால் உள்ளந் திறந்து இறை நெறிக்குத் திரும்பியதுண்டு) சகாயமான இச்சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு, புறமுக (முன்னிலை-படர்க்கை) நாட்டம் தவிர்த்து, அகமுக நாட்டமுற்றுத் (தன்மையை-ஆன்மாவை நாடி) திரும்புவதால் ஞான விழிப்படைகின்றனர். இதனால்தான் பகவான் ஸ்ரீ ரமணர் ஆன்ம விசாரமாகிய தன்மை நாட்டத்தை மேற்கொள்ளும்படி உபதேசிக்கின்றனர்.
தூக்கத்திலிருந்து விழிக்கும்போது நம் கவன சக்தி எப்படிச் செயற்படுகின்றது? முதலில், நம் உடலின் இருப்பு உணரப்படுகின்றது; உடனே, உடலின் ஐம்பொறிகளின் வழியே உலகவுணர்வு ஏற்படுகின்றது. உடல் நம்மால் முதலில் உணரப்படும் ஓர் முன்னிலைப் பொருளே அல்லவா? விழிப்புக் காலம் முழுவதிலும் நம் கவன சக்தி இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றான முன்னிலை-படர்க்கைகளின் மேலேயே மாறி மாறிச் சென்று கொண்டிருக்கின்றது. தூக்கம் வந்ததும்119 இம்முன்னிலை-படர்க்கை நாட்டம் ஓய்ந்து விடுகின்றது! நம் கவன சக்தியை இவ்வாறு முன்னிலை-படர்க்கைகளின்மேற் செலுத்துவது முழுவதும் நம் எண்ணுந் தொழிலேயாகும். விழிப்புக் காலம் முழுவதும் நினைவுகளின் கொட்டமே (தொகுதியே) தவிர வேறொன்றுமில்லை! பிறந்தது முதல் இறக்கும் வரையில் இது ஒன்றேதான் நடந்தேறி வருகின்றது!! சுருங்கக் கூறின், விழித்ததிலிருந்து தூங்கும்வரை (அதாவது ஒரு தூக்கத்திலிருந்து மற்றொரு தூக்கம் வரை), பிறப்பிலிருந்து இறப்பு வரை, சிருஷ்டியிலிருந்து பிரளயம் வரை எல்லா உயிரினங்களின் கவன சக்தியும் முன்னிலை-படர்க்கைகளையே நாடி நிற்கிறதன்றி, யாரொருவரின் நாட்டமும் – இவ்விழிப்புக் காலங்களில் – தன்மையின்மேல் திருப்பப்படுவதே இல்லை!!! இவ்வாறின்றி, விழிப்புக் காலத்திலேயே தன் முயற்சியால் நம் கவனசக்தி தன்மையின்மேல் திருப்பி நிறுத்தப்படுமாயின், இந்நனவாகிய கனவு நீங்குவதோடு, இதற்கு ஆதாரமான, நீண்ட, தன் மறதித் தூக்கமும் கலைந்து, மெய்ந்நனவாகிய ஞான விழிப்பு சித்திக்கும். இவ்வாறு தன்னை நோக்கித் திரும்புவது (ஆன்ம நாட்டம் என்பது) நாமாய் இருப்பதே தவிர, எண்ணும் ஓர் தொழிலல்ல; அதனால் இந்த நம் இருப்பு ஓர் எண்ணமல்ல; அதனால் இது ஓர் கர்மம் ஆகாது! இத்தகைய தன்முயற்சியே கர்மநாசத் தன்முயற்சியாகும். இதுவே வீடு தருவது. முன்னிலை- படர்க்கைகளின் நாட்டமாகிற முயற்சி முழுவதும் கர்மோற்பத்தித் தன் முயற்சியேயாவதால் அது ‘வீடு தரலிலை’. உண்மை இதுவாக, நம்மிற் சிலர் ஞான விழிப்புங்கூட பிராரப்த கர்மத்தின் பலனே (ஓர் கர்ம பலனே) என்று கருதி வருகின்றனர். இது தவறு. ஞானம் (அல்லது ஆன்மாவானது) கர்மத்துக்கு உட்பட்டதல்ல; கர்மத்தையும் கர்ம பலனையுங் கடந்து நிற்பது. எனவே, இரண்டாவது வகையான கர்மநாசத் தன்முயற்சி முயல்வின்றியே இயல்பாக மிளிரும்போது (நம் சுபாவ இருப்பு வடிவாய் விளங்கும்போது) ஸஹஜ ஸ்திதி எனப்படுகின்றது. இதுவே (effortless effort) முயற்சியற்றதோர் இடைவிடாப் பெருமுயற்சி – அமைதிப் பேராற்றல் (dynamic stillness) – எனப்படுவதாம்.
விட்டகுறை-தொட்டகுறை
ஓர் பிறவியிலிருந்து பிரிந்து மறுபிறவிக்குச் செல்லும் உயிர் (ஜீவன்), இந்த உடல் மாற்றத்தால் (transfer ஆக) தன் இடமாற்றம் மட்டும் பெறுகின்றானே தவிர, தன் உத்தியோகமோ (கர்மப் பிரவிருத்தியோ), ஊதியமோ (கர்ம பலனோ) மாறப் பெறுவதில்லை! தனது போக்கின் இயல்புக்கு அனுகுணமான சகல வாசனைகளுடனும் அவன் மறு பிறப்பை, இறைவனருளால் அடைகின்றான். இவனது கர்ம பலன்களும் கர்ம வாசனைகளும், இவ்வாறு இவனுடனேயே செல்வனவாகும்.
இவனது கர்மபலக் களஞ்சிய சஞ்சிதக் குவியலிலிருந்து கடவுளால் தேர்ந்தெடுத்தளிக்கப்பட்டிருக்கும் ஓர் சிறு பகுதியாகிய பிராரப்தமே இவனது புதுப் பிறவியின் அமைப்பு (அதாவது, எவ்வித ஜீவராசியாக உடல் கொண்டு பிறப்பது என்பது), அனுபவிப்பின் அளவு (அதாவது, எவ்வளவு சுகதுக்கங்களை எவ்வெப்போது அனுபவிப்பது என்பது), அந்தம் (அதாவது, அப்பிறவி எப்போது மரணத்தால் முடிவடைய வேண்டுமென்பது) ஆகியவைகளை நிர்ணயிக்கின்றது. சஞ்சிதத்தில் எஞ்சியுள்ள கர்ம பலன்கள் இனிவரும் மறு பிறவிகளுக்கு ஹேதுவான இவனது சேமிப்பு தொடர்ந்து காணப்படும் வினைத் தொடர்ச்சியே ‘விட்டகுறை-தொட்டகுறை’ எனப்படும்!
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்...
(உபதேச வுந்தியார் 2)
என்றபடி கர்மங்களின் விளைவு, (1) பழமாகிய பலன் என்றும் (2) வித்தாகிய வாசனை என்றும் இருவிதப் படுவதால் வினைத் தொடர்ச்சியாகிய விட்டகுறை-தொட்டகுறையையும் (1) கர்மபலத் தொடர்ச்சி என்றும் (2) கர்ம வாசனைத் தொடர்ச்சி என்றும் இருவிதமாகப் பிரிக்கலாம். முதல் வகைத் தொடர்ச்சி ஜீவனின் போக்த்ருத்வ முகத்தையும், இரண்டாவது வகையானது ஜீவனின் கர்த்ருத்துவ முகத்தையும் சார்ந்ததாகும். சில சமயம் நாம், ‘அவருக்கென்ன! அவரது பிராரப்தம் அப்படி இருந்திருக்கலாம்; அதனால்தான் எளிதாக அவர் அவ்வளவு சீரும், சிறப்பும், ஆரோக்கிய ஐசுவரியாதிகளும் அடைந்து விட்டார்! எல்லோருக்கும் (அத்தகைய விட்டகுறை-தொட்டகுறையாகிய பிராரப்தம் இல்லாத மற்றவர்கட்கெல்லாம்) அது கிடைத்து விடுமா?’ என்று மக்கள் சிலர் பேசிக்கொள்வதைக் கேட்கிறோமல்லவா? அது போக்த்ருத்துவ முகத்தின் கர்ம பலத் தொடர்ச்சியாகிய விட்ட-தொட்ட குறையைப் பற்றியதே தவிர, கர்த்ருத்துவ முகத்தின் விட்ட-தொட்ட குறையைப் பற்றிய பேச்சல்ல. ஆனால் சிலர் அடிக்கடி, ‘ஸ்ரீ ரமணருக்கென்ன! அவரது பிராரப்தம் அவருக்கு முக்தியைக் கொடுத்து விட்டது; அவர் ஜீவன் முக்தர் ஆகவேண்டிய பிராரப்தம் இருந்திருக்கிறது! அவரது பிராரப்தத்தின் விட்டகுறை---தொட்ட குறையே அது’ என்று கூறுவதுண்டு. இது சரியல்ல; இதில் அறிய வேண்டியது இன்னொன்றுண்டு.
ஸ்ரீ பகவானது விஷயத்தில் நிகழ்ந்ததும் உண்மையில் ஓர் விட்டகுறை-தொட்டகுறையின் விளைவே. ஆனால், அது, முன்கூறிய உதாரணம் போன்றதோர் போக்த்ருத்துவ முகத்து விட்ட-தொட்ட குறையான பிராரப்த கர்ம பலத் தொடர்ச்சியல்ல. இரண்டாவது வகையான கர்த்ருத்துவ முகத்தின் விட்ட-தொட்ட குறையே; அதாவது, கர்த்ருத்துவ முகத்தில் முற்பிறவிகளில் முயன்ற சாதனைகளால் உண்டான 120ஸத்வாசனைத் தொடர்ச்சியான விட்ட-தொட்ட குறையேயாகும். கர்த்ருத்துவ முகத்தால், எந்தெந்த முயற்சிகள் முன்னிலை- படர்க்கைகளை நாடிச் செய்யப்படுகின்றனவோ, கர்மங்களாகிய அவைகளின் பலன்கள் மட்டுமே பிராரப்த வடிவம் ஆகக் கூடியவை. அதாவது, ஜீவனின் போக்த்ருத்துவ முகத்தால் தேகமன அனுபவங்களாகிய சுக துக்கங்களாக அனுபவிக்கப்படுபவையாகும். (இதன் விளக்கத்தை இவ்வத்தியாயத்தின் ‘தன் முயற்சி’ என்ற முந்தையப் பகுதியிற் காண்க). அவ்வாறே, வாசனைகளும் முன்னிலை-படர்க்கை முகமாக இயற்றப்பட்ட கர்மங்களினின்றும் (விதைகளாக) ஜனித்திருக்குமேல் அவை (பிரவிருத்தி ரூப) கர்ம வாசனைகள் ஆகும். இவைகளே இப் பிறப்பில் கர்த்ருத்துவ முகத்தில் முயற்சியைத் தூண்டிப் புதிதாக ஆகாமிய கர்மக் குவியலைப் பெருக்குவனவாகும். ஆனால், மோக்ஷமுற விரும்பிப் பிறவிதோறும் தொடர்ந்து செய்யும் ஆன்ம சாதனை முயற்சியே நிவிருத்தி ரூபமான இருப்பு வாசனை அல்லது ஸத் வாசனை எனப்படும். ஆகையால், கர்ம வாசனைகளின் (விட்டகுறை-தொட்டகுறை) தொடர்ச்சி மோக்ஷ சாதனைக்கு இடையூறாகவும், ஸத் வாசனைகளின் தொடர்ச்சி மோக்ஷ சாதனைக்கு மிகவும் சகாயமாகவும் பிறவிதோறும் அமையும் என்றறிக. எனவே, ஸ்ரீ பகவானது முக்திப் பேறானது போக்த்ருத்துவ முகத்தில் தொழிற்படும் பிராரப்த கர்ம வாசனையின் விட்டகுறை-தொட்டகுறையுமல்ல. அது, ஜீவனிடமுள்ள சுதந்திரமாகிய கர்த்ருத்துவ முகத்தால் ‘நான்’ என்ற எழுச்சியற்றுத் தான் மாத்திரமாய் சும்மாவிருக்கும் பெரு விருப்பமாகிய பரபக்தி சாதனை வடிவில், பிறவிதோறும் தொடர்ந்து வந்த ஸத்வாசனையின் விட்டகுறை-தொட்டகுறையின் விளைவேயாகும். பிராரப்தமோ ஜீவனின் போக்த்ருத்துவ முகத்தில் மட்டுமே தொழிற்படுவது; வாசனைகளோ கர்த்ருத்துவ முகத்தில் தொழிற்படுவன.
கர்த்ருத்துவ முகத்தின் வாசனைத் தொடர்ச்சியானது எல்லாப் பிறவிகளிலும் ஜீவனிடம் தொழிற்படுமாயினும் மனிதப் பிறவிக்கு மட்டுமே அதைக்கொண்டு ஆகாமியப் புது வினைகளை ஈட்டத்தக்க பகுத்தறிவு இருக்கின்றது. ஏனைய விலங்கு பறவை முதலிய ஜீவராசிகளிடம் அக்கர்த்துருத்துவ முக முயற்சியானது பிராரப்தத்தைப் புஜிப்பதற்கு ஹேதுவான வழிகளில் (புத்தி கர்மானுசாரிணீ என்றபடி) உதவி செய்வதில் மாத்திரமே இயங்கும். பகுத்தறிவை சரியான விவேகத்தில் உபயோகிக்கத் தெரியாத மனிதனும் இதனால்தான் விலங்கினச் சமானன் எனப்படுகின்றான். ஆக, கர்த்துருத்துவ முகத்தில் தொழிற்படுங் கர்ம வாசனையைத் தூண்டிப் பிறவிதோறும் ஆகாமிய கர்மங்களைக் குவித்துக் கர்மபல சமுத்திரத்தில் மூழ்கிப்போவதோ அல்லது அதே ஜீவ சுதந்திரத்தால் சும்மாவிருக்க விரும்பி, இருப்பு வாசனையைத் தூண்டிப் பெருக்கி (ஆன்ம நிஷ்டை புரிந்து) விடுதலை பெறுவதோ மனிதனாகிய ஜீவனின் இஷ்டத்தில் இருக்கின்றது! ‘....விம்ருச்யைத தசேஷேண யதேச்சஸி ததாகுரு’ என்ற கீதோபதேசம் இதைக் குறிக்கும். இதற்கான சுதந்திரம் ஜீவனிடமே உள்ளது. சுப வாசனை, அசுப வாசனை என்னும் இரண்டும் கர்ம வாசனைத் தொகுதியைச் சேர்ந்தவையே. இவை பந்தத்தையே தரும். மோக்ஷம் தருவதோ இருப்பு வாசனையாகிய ஸத் வாசனையே. இதையே, ஸ்ரீ பகவான்,
பூமண மாமனம் பூரண மணங்கொளப்
பூரண மணம்அருள் அருணாசலா
என்ற அருணாசல அக்ஷரமணமாலையின் 69-ஆவது துதியில் ‘பூரண மணம்’ என்று குறிப்பிடுகின்றார். முன்னிலை-படர்க்கைகளாகிய உலகை நாடும் கர்ம வாசனைகளையே இங்கு ‘பூமணம்’ என்றும், தன்னை (ஆன்மாவை) நாடி நிலைக்கும் இருப்பு (ஸத்) வாசனையையே ‘பூரண மணம்’ என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது, ‘அருணாசலா, இலௌகிகக் கர்ம வாசனை நீங்கி அகமுகப்படும் ஸத் வாசனையை நான் அடையுமாறு நீ என்னை முழுவதும் ஐக்கியம் செய்து கொள்’ என்று பிரார்த்திக்கின்றார்.
ஜீவன்முக்தி என்பது ஜீவனது தன்னழிவே! அதாவது ஜீவத்துவம் (அகந்தை) அழியப் பெறுவதே.
செத்தாலே வீட்டுலகஞ் சேரலா மன்றிமற்
றெத்தாலுஞ்சேர லியையாதே – செத்தொழிகை
எவ்வதெனின் யானெனதை மாய்த்தலே யன்றிமற்
றிவ்வுடம்பை மாய்த்த லிழுக்கு.
(குருவாசகக் கோவை 858)
பகிர்முகக் கர்ம முனைப்பு இருக்கும் வரையில்தான் அவன் ஜீவன் எனப்படுவான். சும்மாவிருக்க விரும்பித் தூண்டும் இருப்பு வாசனா பலத்தால் கர்ம முனைப்பு அழியும்போது அவனது ஜீவத்துவமே அழிகின்றது. இதனால் ஜீவன்முக்தி என்பது ஓர் தற்கொலைக்குச் சமானமாகும்! ஒருவனது சாதனை முன்னிலை-படர்க்கைகளை நாடியதாயிருக்கும் வரையில், அது கர்ம வாசனைகளையே விருத்தி செய்வதால், ஜீவத்துவ நாசமாக்கும் முக்தியைத் தராது. அதற்கு மாறாக ஒருவனது சாதனை தன்மையின் நாட்டமாக இருக்குமானால், அது ஸத் வாசனையாய்ப் பரிணமித்து, ஜீவத்துவ நாசத்தை விளைவிக்கும். இந்நிலையில் இதை ஒரு வாசனை என்று கூடக்கூற நியாயமில்லாமற் போவதால், இதை நிர்வாசனை நிலை – வாசனாக்ஷயம் – அல்லது பிரம்மத்தின் என்றுமுள்ள, சுபாவ, இருப்புநிலை (ஸந்மாத்திர ஸ்திதி) என்றே கூற வேண்டும். இதுவே அகந்தையின் பரிபூரணத் தன்னழிவான முக்திநிலை. இது குறித்தே, ‘...தன்மையை நாடுஞ் செய்கை தற்கொலை சமானமாகும்...’ என்று சாதனை சாரத்தின் 245-ஆவது பாடலிற் கூறப்பட்டது.
எனவே, முக்தியடையப் பிராரப்தத்தின் தயவை யாரும் எதிர்பார்த்திருக்க வேண்டியதில்லை. பிராரப்தத்திற்கும் முக்திக்கும் சம்பந்தமே கிடையாது! ‘பிராரப்தமென்பது வெளிமுகத்திற்கேயொழிய உண்முகத்திற்கன்று’ என்பது ஸ்ரீ ரமண வாக்கு.121 ஜட கர்ம பலனைத் தரும் பிராரப்தமோ போக்த்ருத்துவ முகத்தைச் சார்வதையும், சைதன்னியமான முக்தியைத் தரும் ஸத் வாசனை முதிர்ச்சியோ அதனினும் வேறான கர்த்ருத்துவ முகத்தைச் சார்வதையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளக்கப்படத்தின் உதவியாற் கண்டு தெளிக. ஜீவன் முக்தியானது வாசனாக்ஷயமான சுபாவ இருப்பேயாகும். அதாவது, ஆன்ம சாதனையாகிற தன்னாட்டத்தால் விளையும் நிஷ்க்ரிய – கர்மமற்ற கர்மமான – ஸத் வாசனையின் விட்ட-தொட்ட குறையால்தான் அது ஏற்படுகின்றது.
இதுவரை கூறி வந்ததிலிருந்து, முக்தி பிராரப்தத்தினுட் கட்டுப்பட்டதல்ல என்பதும், முற்பிறவிகளிற் செய்யப்பட்ட ஆன்ம சாதனையின் வலிவு விட்டகுறை-தொட்டகுறையாகி இப்பிறவியிலும் வந்து தொடர்ந்து ஒருவனுக்கு முக்தியுற உதவும் என்பதும் நன்கு தெரிய வருகின்றதாகையால், நம் பிராரப்தத்தில் நமக்கு முக்திக்கு இடமிருக்கிறதோ இல்லையோ என்று கவலைப்பட்டு, அதை முன்கூட்டித் தெரிந்து கொள்வதற்காக ஜாதகம், ரேகை சாஸ்திரம், இச்சிங், எண் ஜோதிடம் முதலிய அபர வித்தைகளின் உதவியை நாடி, ஏங்கி, அலைந்து திரியாமல் (ஏனெனில் அவை இதை அறிவிக்க மாட்டா), மகா தைரியவானாய், ஆன்ம விசாரமாகிய தன்னாட்டத்தால் ஸத் வாசனையை விருத்தி செய்து, நமது யதார்த்த சொரூப ஞானத்தைப் பெற்றுய்வோமாக.
திருவருட் சகாயத்தின் இன்றியமையாமை
‘கடவுள் அல்லது குரு எனப் போற்றப்படும் எல்லையற்ற, சத்திய, அகண்ட சிற்சக்தியின் திருவருளாம் பேருதவியின்றி, அதன் லவலேசக் கற்பனைப் பிரதி பிம்பமேயான ஜீவனின் அற்பப் பொய்யறிவின் சக்தியை(அற்ப சித் சக்தியை)க் கொண்டு பரிபூரண நிலையை அடைய முடியாது எனக் கூறப்படுகிறதே’ என்று சிலர் வினவுவதுண்டு. ஆம், அது மெய்யே; திருவருட் சகாயமே மிக முக்கிய ஹேதுவாகும்.
உள்ளே யிருக்கு முடையா னருள்வலத்தால்
உள்ளே யிழுத்தா லொழியத்தம் – கள்ளமனச்
சேட்டைவலத் தாலுளத்துட் சேர்ந்தமைதிச் சால்பெய்த
மாட்டுநரார் போக்கை மறித்து.
(குருவாசகக் கோவை 725)
ஜீவன் அப்பரிபூரண நிலையை விரும்பி (இச்சை). ஆனால் அதையடையத் தன் அசக்தத்தை உணர்ந்து (ஞானம்), அதனால் ஆண்டவனின் உதவியை நாடி(கிரியை)ப் பிரார்த்திக்கும் போது, அவனது அற்ப இச்சா-கிரியா-ஞானச் சுதந்திரமானது தக்க வழியில், அளவில், நன்கு செயற்படுத்தப்படுவதால், தன்னை நம்பிப் பிரார்த்திக்கும் அந்த பக்தன், ‘நான்’ என்னும் அகந்தையைச் சமர்ப்பிக்கும் உள் முயற்சியில் அவனது சரணாகதியைச் சம்பூரணமாக்கி வைக்கத் தேவையான அபரிமிதமான அருட்சக்தியாக அப்பரம்பொருளின் எல்லையற்ற திருவருளுதவி தாமே பொழியப்படுகின்றது! இதையே ஸ்ரீ பகவான்:
தன்னைநினைத் தோரடிநீ சார்ந்தா லதற்கீடா
வன்னையினு மிக்கவவ் வாண்டவனும் – உன்னை
நினைத்துத்தா னொன்பதடி நீளவந் தேற்பா
னனைத்துக்கா ணன்னோ னருள்.
என்று குருவாசகக் கோவை, பாடல் 965-ல் கூறினர்.
‘புலி வாயிற் பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவினருட் பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரேயன்றி, ஒருக்காலும் கைவிடப்படார்; எனினும், குரு காட்டிய வழிப்படி தவறாது நடக்க வேண்டும்’ என்று ஸ்ரீ ரமண பகவானும் ‘நான் யார்?’ என்னும் நூலில், ஜீவனின் பங்கில் ஓர் தோற்ற மாத்திரப் பொறுப்பை விதித்திருப்பதின் தாத்பரியம் இதுவே. ‘நான் யார்?’ என்ற நூல் முதலில் வினாவிடையாக வெளிவந்த பதிப்பில் ஸ்ரீ பகவான், ‘கடவுளும் குருவும் முக்தியையடைவதற்கு வழியைக் காட்டுவார்களே அல்லாமல், தாமாகவே ஜீவர்களை முக்தியிற் சேர்க்க முடியாது’ என்று கூறியிருப்பதாகக் காணப்படுகிறது.122 ஆயினும், பிறகு ஸ்ரீ பகவானே ஓர் கட்டுரை வடிவில் இந்நூலை எழுதிய காலத்தில் மேற்கண்ட இவ்வாக்கியத்தை நீக்கி விட்டனர். முதலில் வெளியான இவ்வினா-விடை நூலில் இவ்வாறு ஏன் கூறினர்? பிறகு, கட்டுரை வடிவ நூலில் ஏன் நீக்கி விட்டனர்? கடவுளோ குருவோ ஜீவர்களது இச்சா-கிரியா சுதந்திரத்தை ஒரு நாளுந் தடுப்பதேயில்லை. ஆதலால் எந்த ஒரு ஜீவனையும், அவனுக்கு விருப்பமில்லாவிட்டால், தாமாகவே முக்தியிற் சேர்ப்பதில்லை. ஆனால், ஜீவனொருவன் தான் முக்தியடைய பெரிதும் விரும்பி, ஆனால் தன் சொந்த முயற்சியினாலேயே அதையடையத் தக்க சக்தியற்றவனாய் இருப்பதுணர்ந்து, கடவுள் அல்லது குருவின் பேரருளுதவியை நாடிப் பிரார்த்திப்பானாயின் அவர்கள் அவனுக்கு அருளுதவி செய்து மோக்ஷமடைய வைப்பது திண்ணம்.123 இங்கு ‘ஈசன் பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும், அவ்வளவையும் அவர் வகித்துக் கொள்ளுகிறார்’ என்று ‘நான் யார்?’ என்ற நூலில் ஸ்ரீ பகவான் கூறுவதை மனதில் கொள்ளவேண்டும். அதாவது, நாம் கடவுள் அல்லது குருவின் அருளையே முழுவதுமாகச் சார்ந்திருந்து, மோக்ஷமடைவது உட்பட எல்லா பாரங்களையும் அவர் மேல் போட்டால், அப்பாரத்தை நிச்சயமாகத் தாங்கிக்கொண்டு, நாம் மோக்ஷமடையும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார்.
விரும்புவார்க் கன்றி விடுதலைதா மீயார்
அருங்குருவு மீசனுமா னாலும் – விரும்பியுனைக்
கேட்கின்றே னுள்ளங் கிளர்வன்மை தானில்லேன்
ஆட்கொண் டதனை யருள்.
(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 131)
மோக்ஷமடைய இச்சிப்பதோ மறுப்பதோ ஜீவனது சுதந்திரத்திலிருப்பதால், ஸ்ரீ பகவான் ‘நான் யார்?’ என்ற வினாவிடை நூலில், ‘கடவுளுங் குருவுந் தாமாகவே ஜீவர்களை முக்தியிற் சேர்க்க முடியாது’ என்று கூறினர். ஆனால் மோக்ஷமடைய இச்சிக்கும் எந்த ஜீவனொருவனுக்கும் அதை அடைவித்தருளும் சக்தி கடவுளுக்கும் குருவுக்கும் நிச்சயமாகவே இருப்பதால், மேலே வினாவிடையிற் கூறியதின் உட்பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல், ஆனால் மோக்ஷ இச்சை கொண்ட முமுக்ஷுக்களாய், கடவுளையோ குருவையோ பிரார்த்தித்து நிற்கும் நல்லடியார்கள் பலர் நம்பிக்கையிழந்து மனமுடைந்து விடாதிருக்கவே ஸ்ரீ பகவான் இவ்வாக்கியத்தை, கட்டுரை வடிவிலெழுதுங்கால் ‘நான் யார்?’ நூலிலிருந்து நீக்கி விட்டனர்.
அன்றியும் கடவுள் நம்பிக்கை(துவித உபாசனை)யின்றேனும் முழு முயற்சியோடு தீவிரமாகத் தன்னுள் தன் உண்மையை நாடி விசாரிக்கும் விசார சீலன் ஒருவனுக்கு அவனது ஆன்மாவே உள்ளும் புறமும் குருவாயிருந்து பேரருளுதவி புரிகின்றது. அவனது புற வாழ்வின் நிகழ்ச்சிகளைக் கொண்டே புறமுகம் துக்கம் என்ற உண்மையை அவன் புரிந்துகொள்ளத்தக்க அறிவின் தெளிவாக அது அவனுள் விளக்கமுறுகின்றது! அவ்வான்மாவே அவனுள் ‘உன்னழகைக் காட்டருணாசலா’ என்றபடி, பேரின்ப வடிவாய் வீசியெழுந்து, தன் உபசாந்தியழகைக் காட்டி வசீகரித்துத் தன்பால் ‘திரும்பி அகம்தனை தினம் அகக் கண் காண’வைத்து, அதனால் அவன், ‘இவ்வானந்தமே என் மெய்யான சுயநிலை!’ என்றுணரவைத்து, அப்படியே அதுவாகவே ஒன்றிச் சும்மா இருக்குமாறு அவனை உள்ளே கவர்ந்திழுத்துக் கொள்கின்றது! இவ்விதம் குருவருள், அந்தக் கடவுள் நம்பிக்கையற்ற ஒருவனுக்குங்கூட, உள்ளும் புறமிருந்து, ‘தானேதானே தத்துவ மிதனைத் தானே காட்டி’ அருளி இடைவிடாது பேருதவி புரிவதால், இவ்விருவித சாதகர்களுள் எவருக்கும் அந்த சர்வ வல்லமையுள்ள அகண்ட சிற்சக்தியின் அருளுதவிக்குப் பஞ்சமேயில்லை!
இங்ஙனம் உண்மையில் இறைவன் திருவருள் எப்போதும் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றது. அருளால்தான் ஞான விளக்கமாகிய இந்தக் காரியம் பூர்த்தியாகின்றது! ஆயினும், ஜீவன்தான் உய்வடைய விரும்பவும் முயலவும் வேண்டும். அந்த இஷ்டம் இவனது சுதந்திரத்தின்பாற் பட்டதே. இஷ்டமில்லார்பால் இறைவன் எதையும் திணிப்பதில்லை. அவர்,
இட்டமுற்றார்க் கன்றி யிரண்டற்ற மோனமணிப்
பெட்டகத்தை யீயாப் பெரும்வள்ளல்...
(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 680)
சுக துக்கங்கள் வருவது பிராரப்தப் பிரகாரமாயினும், அவைகளால் அசைக்க முடியாதபடி (கர்த்துருத்துவ போக்த்ருத்துவமற்ற) நடுநிலையுற்று நிற்பதற்கு நமக்கு நம் சொந்தமான சுதந்திரமுண்டு. அதனால்தான் ஸ்ரீ பகவான்,
முன்னேதான் செய்த முயற்சியே பக்குவத்தாற்
பின்னேதான் ஊழுருவாப் பேர்தலால் – முன்னதனை
ஆற்றியதன் னாலே யரிதுமுயன் றவ்வூழை
மாற்றலுமா மென்றே மதி.
[முற்பிறவிகளில் ஒருவன் செய்த தன் முயற்சியே பிறகு பக்குவப்பட்டு இப்போதுள்ள பிராரப்த வடிவமாக மாறுவதால், அப்பிராரப்தத்தை இயற்றிய கர்த்தாவாகிய தானே (யோகத்தால் அதற்கு எதிரிடையாக உண்முகமாக) மிக முயன்று அப்பிராரப்தத்தை மாற்றுவதுங் கூடும் என்றறிக] என்றும்,
எந்தநற் றீவினைக ளின்பமொடு துன்பமாம்
தந்தம் பயனைத் தருகினுமே – சொந்த
சொரூபமாம் செம்பொருளைத் தோய்ந்தமனத் தாலவ்
விருவினையின் கொற்றநீ யெற்று.
[எந்தெந்த நல்வினைகளும் தீ வினைகளும் முறையே இன்பங்களுந் துன்பங்களுமான தத்தம் பலன்களைத் தந்தாலும் சரி, நீ உன் சொந்த ஆன்ம சொருபமான பரம்பொருளில் மூழ்கிய மனத்தால் அவ்விரு வினைகளின் ஆதிக்கத்தையும் வெற்றி கொள்வாயாக] என்றும் குருவாசகக் கோவை 692, 693 ஆகிய பாடல்களில் கூறியுள்ளார். அதாவது, ஆன்மாவில் மூழ்குவதால் கர்த்ருத்துவ போக்ருத்துவங்கள் அழியும். அவை அழிவதால் பிராரப்தத்தை அனுபவிக்கும் போக்தா இல்லாமற் போவதே ஊழை வெல்வதாம்.
இதற்கு மட்டுமே நமக்குச் சுதந்திரமுண்டு; பிராரப்த நிகழ்வையோ போக்கையோ முறையே தடுக்கவோ மாற்றவோ அல்ல. நமது இச்சா-கிரியா சுதந்திரத்தை சும்மாவிருப்பதில் விரும்பி உபயோகித்தால் கர்த்ருத்துவம் அழிகின்றது. அது அழியவே, பிராரப்தத்தை அனுபவிப்பதற்கு இன்றியமையாத போக்த்ருத்துவமும் அதனுடன் நாசமாகின்றது. எனவே, இச்சுதந்திரத்தைக் கொண்டுதான் நாம் உருப்பட (சொரூபத்தைச் சாக்ஷாத்கரிக்க) வேண்டும். இஃது ஒன்றுமட்டும் இன்றேல் உய்வே கிடையாது. ஆண்டவனின் காரணமற்ற, சுபாவ கருணையாகிய அருளால் ஜீவர்கள்பால் விளங்கக் கிடைத்துள்ள இச்சுதந்திரமே கர்மத் தளையினின்றும் விடுபட வழிவகுக்கின்றது. இதுவே கர்மங்களைப் பற்றி நாம் அறியவேண்டிய இரகசியமாகும்!
ஸ்ரீ ரமண வழி அனுபந்தம்
முற்றிற்று.
ஸ்ரீ ரமணார்ப்பண மஸ்து.
112 மாயா – ‘இல்லாதது’ என்று பொருள் தரும் சொல். அது இன்னதென உரைக்க இயலாதது.
113 ஜீவன் ஒருவன் தன்னை, தான் ஒரு உண்மை இருப்புடையவனாகக் கருதிக் கொண்டிருக்கும் வரையிலும், அவனது அறிவிற்குக் கடவுளும் சர்வ வல்லமை உடையவராகவும், சர்வக்ஞத்வம் உடையவராகவும், பரம கருணா மூர்த்தியாகவும் இருப்பதும், தன் உண்மையைப் போலவே அவ்வளவு முழு உண்மையேயாகும்.
114 சஞ்சித – சஞ்சயிக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட.
115 ஆகாமி – ஆகாமிக்கும், புதிதாக இயற்றப்படும்.
116 இந்நூலாசிரியர் இயற்றிய ‘மன வாள்’ என்னும் பாடல், இங்கு ஒத்துநோக்கத் தக்கது. [பதிப்பாளர் குறிப்பு: ஸ்ரீ ரமண கான அமுதம் என்னும் நூலின் பக்கங்கள் 99-101-ல் காண்க.]
117 ‘ஸ்ரீ மஹர்ஷி வாய்மொழி’ என்ற நூலின் முதற் பாகம், ஏழாவது அத்தியாயத்தைப் (பன்னிரண்டாம் பதிப்பு, 2008, பக்கம் 38-ஐ) பார்க்கவும்.
118 ஆன்ம ஞான நிலையில் அனுபவப்படுகின்ற ‘சும்மா விருத்தல்’ என்பது இயக்கமற்றதோர் சோம்பல் நிலையல்ல. அது மிக சக்தி வாய்ந்த தன் இருப்புணர்வின் ஓர் பேரறிவு நிலையாகும். உள்ளே பேரமைதி பிரவகிக்கும் இவ்வபார சக்தி நிலையை, வெறுமனே நிற்பது போலத் தோன்றினாலும் அதி வேகமாகச் சுழலும் ஒரு பம்பரத்திற்கு ஒப்பிடுகிறார் ஸ்ரீ பகவான். ‘பகவத்வசனாம்ருதம்’ என்னும் நூலின் பக்கம் 351 (டிசம்பர் 21, 1938) – Talks with Sri Ramana Maharshi, page 353(section 599)ல் காண்க.
119 தூக்கத்தில் இக் கவன சக்தி என்னவாகின்றது என்பதன் உண்மையை தன்னாட்டப் பயிற்சியில் முதிர்ந்த விசார சீலர்கள் தாமே அனுபவத்தில் அறிய முடியுமாகையால் முன்கூட்டி இங்கு விளக்காமல் விடப்படுகின்றது.
120 ‘ஸத்வாசனை’ (இருப்பு வாசனை) வேறு; சுப-அசுப வாசனைகள் வேறு. சுப (நல்) வாசனையும் அசுப (தீய) வாசனையும் கர்ம ஹேதுக்களாகிய பிருவிருத்தி ரூபமானவை. ஆனால், ஸத் வாசனையோ மோக்ஷ ஹேதுவாகிய நிவிருத்தி ரூபமானது.
121 உபதேச மஞ்சரி, அப்பியாசப் பிரகரணம், வினாவிடை 21.
122 ‘நான் யார்?’, 1930-ஆம் ஆண்டுப் பதிப்பு, பக்கம் 13.
123 ‘ஸ்ரீ மஹர்ஷி வாய்மொழி’ என்ற நூலின் இரண்டாம் பாகம், இரண்டாவது அத்தியாயத்தில் (பன்னிரண்டாம் பதிப்பு, 2008, பக்கங்கள் 60-1-ல்) காண்க.