ஸ்ரீ ரமண வழி (Śrī Ramaṇa Vaṙi)

அனுபந்தம் (Supplement)
பக்தி (Chapter 2)

Contents

அத்தியாயம்-2.
பக்தி

நீரின் சுபாவம் பள்ளத்தை நோக்கி விரைவதே. உலகின் மிகவும் பள்ளமான இடம் கடலேயாகையால் அங்குள்ள நீர் அப்பால் ஓட்டமற்று அளவற்றுப் பரந்து நிற்கின்றது. சூரியனால் ஆவியாக்கப்பட்டு, மேகமாகி ஆகாயத்திற் பறக்க நேரிட்டால் அங்கு அது நிலை கொள்வதில்லை. காற்றால் உந்தப்பட்டுக் குளிர்ந்த மலைப் பிரதேசங்களுக்குச் சென்று, மீண்டும் குளிர்ந்து நன்னீராகின்றது. உடனே நீரின் சுபாவப்படி அது மேலும் பள்ளமான இடத்தை நோக்கி விரைந்து நீர்வீழ்ச்சிகளாக இறங்கிக் குதித்துப் பல நீரோடைகளாக ஓடிக் கூடி, ஆறாகி, முடிவில் தன் பிறப்பிடமாகிய சமுத்திரத்தையே நாடி அடைகின்றது. தன் மூல நிலையமாகிற கடலை அடையும்வரை அது என்ன தடை செய்யப்பட்டாலும் நில்லாது. கால்வாய்களாகப் பிரிக்கப்பட்டு, விளை நிலங்களுக்குப் பாய்ச்சப்பட்டாலும், கிணறு, குளம் ஏரிகளில் தேக்கப்பட்டாலுங்கூட அது அங்கு நின்று விடுவதில்லை. மீண்டும் வற்றி, ஆவியாகிப் பறந்து, குளிர்ந்து, நீராகிப் பெய்து, ஆறாக ஓடித் தன் பிறப்பிடமாகிய ஆழியை அடையவே செய்கின்றது! இதுபோன்றதே உலகில் நாம் காணும் கணக்கற்ற உயிரினங்களின் முயற்சி வடிவமான உயிர் வாழ்க்கையுமாகும்.

மனிதன் மட்டுமல்ல; உயிரினங்கள் யாவற்றின் மூல நிலையமும் – பிறப்பிடமும் – கடவுளாகிய பரம்பொருளே. விளக்கவியலாத ஓர் பரம சக்தியால் அப் பரம்பொருளினின்றும் வேறாக்கப்பட்டதுபோல், கோடிக்கணக்கான அண்ட கோளங்களில் அளவற்றனவாய்க் காணப்படும் உயிரினங்கள் யாவும் மீண்டும் தம் மூல நிலையமாகிய கடவுளை நோக்கியே எப்போதும் விரைகின்றன! உயிர்களிடம் முயற்சி வடிவாகக் காணப்படும் எண்ணம், சொல், செயல் யாவும் பள்ளத்தை நோக்கி விரையும் நீரின் சுபாவம் போல், கடவுளை நோக்கி விரையும் ஜீவ சுபாவமேயாகும். எனவே, ஜீவர்களின் சுபாவம் தன் மூலத்தை (கடவுளை) அடைவதே!

ஆனால் மழை நீர் மலையினின்றும் புரண்டோடும் போது, நேராகக் கடலை நோக்கி ஓடி விடுவதில்லை. பள்ளமுள்ள இடங்களிலெல்லாம் பரவிச் செல்கின்றது. வழியிற் குறுக்கிடும் குளம், குட்டைகள் போன்ற பள்ளங்களில் தேங்குவதும், அவை நிரம்பியதும் வழிந்து, நிலப்பரப்பிற்கேற்பப் பல திசைகளில் வளைந்து வளைந்தோடுவதுமாய் ஆங்காங்கே அடுத்துப் பள்ளமாயுள்ள இடங்களை அடைகின்றது. மேலும், தான் கடலைத்தான் போய்ச்சேரப் போகிறோம் என்பதை அந்த நீரோட்டம் அறிவதில்லை. அது போலவே உயிர்களும், தம் முயற்சியால் எய்தப் போகும் முடிவு நிலையின் பூரணத் தெளிவில்லாமலேயே, தத்தம் விருப்பத்திற்கேற்ப, பலவகைப்பட்ட காரியங்களில் மாறி மாறி ஈடுபட்டு உழைத்து வருகின்றன. தமது கிரியைகள் யாவற்றின் முடிவான பயன் கடவுளை அடைவதே என்பதை அப்போது அந்த ஜீவர்கள் உணர்வதில்லை. மழை நீரானது உணர்ந்தாலும் உணராவிட்டாலும், கடலுக்கு வழி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், அதன் சுபாவமாகிய ‘பள்ளத்தை நோக்கி விரைதல்’ என்ற ஒரு காரியத்தையே செய்துகொண்டிருப்பதால் என்றேனும் ஒருநாள் சமுத்திரத்தை அடைந்தே தீரும். அடையாமல் வழியில் எங்கேனும் சாசுவதமாக நின்றுவிட முடியாது. அது போலவே, சுகத்தை நாடாமல் ஜீவர்கள் இருக்கவே முடியாது; ஏனெனில், ஜீவ சுபாவம் சுக நாட்டமே. அச் சுக நாட்டத்தால் தத்தம் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வது என்ற, தம்மாலியன்ற, ஒரே காரியத்தில் ஜீவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். தம் முயற்சிகளின் முடிவான பலன் கடவுளை அடைவதே என்பதை ஜீவர்கள் அறிந்தாலும் அறியாவிட்டாலும் கணக்கற்ற கற்பகோடி காலங்களுக்குப் பிறகாவது தமது உற்பத்தி ஸ்தானமாகிய பரம்பொருளை அடைந்தே தீரவேண்டும்; அடைந்தே தீர்வர்!

கடலிலிருந்து ஒருமுறை ஆவியாகிய நீர் மலைப் பிரதேசங்களில் மழையாக ஒருமுறை பெய்ததால் அது உடனே பெரிய நதியாகி, ஒரே ஓட்டமாக ஓடிக் கடலை அடைந்து விடுவதில்லை. அது மேலே கூறப்பட்ட காரணங்களால், இடையில் வற்றி, மறுபடியும் ஆவியாக்கப் படுகின்றதல்லவா? அது குளிர்ந்து மீண்டும் நீராக மாறுவது அந்த நீரின் மறுபிறவி. அதுபோலவே, ஜீவர்களும் இறைவனை அடையுமுன், மீண்டும் மீண்டும் உடலுருவங்களை அடைந்து காரியங்களில் (பிரவிருத்தியில்) முயற்சிப்பதும், உடல்கள் நைந்து மரணமுற்றதும் மீண்டும் உடல்களைப் பெற்றுப் பல்வேறு துறைகளில் முயற்சிப்பதுமாக இருக்கின்றனர். இதுவே, ஜீவர்களின் மறுபிறவிகளாகும்.

நீரின் ஓடும் முயற்சி போன்றதே ஜீவர்களின் தொழில் முயற்சி அல்லது கர்மப் பிரவிருத்தி. இத்தொழில் முயற்சிக்குக் கடவுளை அடையும்வரை சாசுவத ஓய்வே கிடையாது. எத்தனை தடை நேர்ந்தாலும் தண்ணீர் வளைந்து வளைந்தாவது ஓடிப் பக்கத்திலுள்ள ஏதேனுமொரு பள்ளத்தையடைவது போலவே, உலக உயிர்கள் எவ்வளவுதான் வாழ்க்கையில் இடர்கள் நேர்ந்தாலும் கர்மம் செய்யும் முயற்சியிற் கைசோர்வதே இல்லை!

நீரின் சுபாவம் பள்ளத்தை நாடுவதே போல, ஜீவ சுபாவமான சுக நாட்டத்தால் சகல ஜீவர்களும் சுகத்தை விரும்பியே மன மொழி மெய்களால் சதா உழைத்துக்கொண்டே இருக்கின்றனர். இப்படி ஜீவர்களிடம் சுபாவமாகக் காணப்படும் சுக இச்சையே, அது பரிசுத்தமாக்கப்பட்ட நிலையில் முடிவில் கடவுளிடம் கொண்டு சேர்க்கும் பரதெய்வ பக்தியாகின்றது. ஏனெனில், கடவுள் என்பது எல்லையற்ற சுக சாகரமே. மேலும், மலையினின்றும் ஓடிவரும் நீரின் போக்கில் எங்கெங்கெல்லாம் அடுத்தடுத்துப் பள்ளங்கள் காணப்படுகின்றனவோ அவைகளிலெல்லாம் அந்த நீர் சென்று தேங்குகின்றது. அந்தப் பள்ளம் நிரம்பும் நேரம் வரையிலும் அது ஓடாமல் நின்றுவிட்டது போல் தோன்றுகின்றது. ஆனால், ஓட்டச் செயலுக்குப் பதிலாக அந்தப் பள்ளத்தில் நீர் மட்டம், உயரும் செயலாக முயற்சி நடந்துகொண்டே இருக்கின்றது. இப்போது கவனித்தால் பள்ளத்திற்கு இறங்குகிற தன் சுபாவத்திற்கு மாறாக, மேட்டுக்கு உயரும் சுபாவம் போல் அந்த நீரின் தன்மை காணப்படுகின்றதல்லா? அது போலவே, சுகத்தின்மேல் உள்ள இச்சையின் காரணமாக உழைக்கும் ஜீவர்கள் வாழ்க்கையில் ஆங்காங்கு கிடைக்கும் போகப் பொருள்களின் அனுபவத்தில் (சுவர்க்க லோக இன்பங்கள் உள்பட) திருப்தியுற்று நின்றுவிட்டது போலத் தோன்றும். அந்நிலையிற் பார்த்தால் சுக நாட்டம் அதற்காக முயல்வதுமாகிய (அதிருப்தியாகிய) ஜீவ சுபாவத்திற்குப் பதிலாக, முனைப்பற்ற, திருப்தியாகிய பிரம்ம சுபாவம் ஏற்பட்டது போலத் தோன்றும். ஆனால், பள்ளம் நிரம்பியதும் நீர் மீண்டும் அதைவிட்டு ஓட ஆரம்பிப்பது போலவே, இக லோக, சுவர்க்கலோகச் சுகங்களைத் தம் கர்ம பலனாக மனிதன் அடைந்தாலும், அச்சுகங்கள் நீடித்த திருப்தியை அவனுக்கு அளிக்கவியலாததால் அவன் அவைகளை விட்டு மீண்டும் தனக்குத் தோன்றிய வழிகளில் உழைத்துப் பரிபூரண சுகத்தை அடைய முயன்றே தீருவான்.

அளவற்றதும் குறைவற்றதும் எப்போதுமுள்ளதுமான பரிபூரண அறிவானந்தமாகிய பேரின்ப நிலையே கடவுள். அதை அடையுமுன் வேறு எந்த சிறிய இன்பத் தோற்றங்களும் ஜீவனின் முயற்சி வடிவான போராட்டத்தை நிறுத்தி அமைதியாக்கிவிட முடியாது. மழைநீர் ஆழியை அடைந்தபின் அசைவற்று, முயற்சி ஓய்ந்து பேரமைதியை அடைவது போன்றே, ஜீவன் கடவுளை அடைந்தால் அதன்பின் தன் ஜீவ சுபாவமான கர்ம முனைப்பற்று, செய்ய வேண்டியன யாவும் செய்து முடித்தவனாய் (கிருத கிருத்தியனாய்) அசைவற்ற பேரமைதி வடிவான இறை சுபாவம் அடைவான்.

மனவுரு மாயமெய்ம் மன்னுமா யோகி

தனக்கோர் செயலிலை யுந்தீபற

தன்னியல் சார்ந்தன னுந்தீபற.

(உபதேச வுந்தியார் 15)

இவ்வாறு மலையினின்றும் இறங்கி, ஓடிச் சிதறி, வழி தப்பி, வறண்டு போகும் நீர்த் துளிகள் அவ்வாறாகுமுன்பே பெரிய நதியொன்றை(ஜீவ நதியை)த் துரிதமாக அடையுமாயின், வற்றிப் போகாமலும், ஆயாசமுள்ள, மிகப் பாடுபடுத்தும் மேடு பள்ளங்களில் இடர்ப்பட்டுத் தாமதமடையாமலும் நேராக சமுத்திரத்தை அடைந்து விடுகின்றனவன்றோ? அவ்வாறே ஜீவர்களை நேரே சிரமமின்றிக் கடவுளிடம் இழுத்துச் செல்லும் வற்றாத பெரிய நதிகளே உலகிற் தோன்றிய மகான்களாவர். அத்தெய்வீக நதிகள் ஓடிய வழியே அவர்களால் நிறுவப்பட்டுத் தற்போது உலகில் நிலவும் பற்பல மதங்களாகும். அவைகளில் யாதேனும் ஒன்றின் மூலம் மனிதன் முடிவு வரை செல்வானாயின், தன் குறிக்கோளும் பிறப்பிடமுமாகிய கடவுளையடைந்து அமைதி பெறுவான். அத்தகைய மதங்களுள் ஒவ்வொன்றும் மனிதனின் சுக இச்சையை ஒழுங்குபடுத்தி, நேர்வழி காட்டி இறைவனிடம் அழைத்துச்செல்லத் தக்கதாம். ஜீவ சுபாவமான சுக இச்சையைச் சுத்தப்படுத்தும் நேர் மார்க்கமே பக்தி மார்க்கம். ‘மனிதா, உன் முயற்சி யாவும் சுகத்திற்கேயன்றோ? உன் முழுச் சுகமானது கடவுள் நிலையாகிய பேரின்பமே. அதைத் தவிர மற்றவற்றின் கவர்ச்சியில் மயங்கி வழியில் நின்று விடாதே. விழி! எழு! இறைவனாகிய உனது அப் பேரின்ப நிலையை நேசித்து அதை அடையும் வரையில் தக்க வழியில் முயன்று சோர்வின்றி உழை!!’ என்று ஜீவர்களைத் தூண்டி அறிவுறுத்துவதே மதங்களின் வேலை. மனித சுபாவமான கர்ம முயற்சி ஒழுங்குபடுத்தப்பட்டு நெறிமுறைக்குள் கொண்டுவரப் பெற்றால் அதுவே இறையன்பு நெறி (தெய்வ பக்தி) எனப்படுகிற ஆன்ம சாதனம் ஆகி விடுகின்றது. எனவே, பக்தியே சகல ஜீவர்களும் கொள்ளத்தக்க நன்முயற்சியாகும். இதையே,

கடலெழு மெழிலியாற் பொழிதரு நீர்தான்

கடல்நிலை அடைவரை தடைசெயின் நில்லா(து)

உடலுயிர் உனில்எழும் உனைஉறு வரையில்

உறுபல வழிகளில் உழலினும் நில்லா(து)

இடவெளி அலையினும் நிலைஇலை புள்ளுக்(கு)

இடம்நிலம் அல(து)இலை; வருவழி செல்லக்

கடன்;உயிர் வருவழி சென்றிட இன்பக்

கடலுனை மருவிடும் அருணபூ தரனே!

(ஸ்ரீ அருணாசல அஷ்டகம் 8)

என்று கூறுகின்றார் பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகள். பகவான் ஸ்ரீ ரமணர் நமக்கு வெகு சமீப காலத்தில் உலகுயிர்களின் உய்வுக்குக் கிடைத்த, அளவற்ற ஆன்ம சக்தி வாய்ந்த மிகப்பெரிய ஜீவ நதியான அருட்கங்கை ஆவர்! இந்த ரமண கங்கையில் வீழ்வோம்! அது நம்மைச் சிரமமின்றி பிரம்மானந்த சமுத்திரம் சேர்ப்பிக்கும்! ஸ்ரீ ரமண வழியிலேயே மிதந்து செல்வோம்! எதிர் நீச்சலடித்தலோ, இருபுறக் கரைகளில் ஏற முயல்வதோ வேண்டாம். ஸ்ரீ ரமண கோட்பாட்டிற்கு (சித்தாந்தத்திற்கு) முரணான வஞ்சக வழிகளிற் சிந்திப்பதோ, அதைத் தத்தமக்கேற்றபடி ஒன்றை மற்றொன்றாகத் திரித்துப் பொருள் கொண்டு பிரவிருத்திப்பதோ82 ஆகிய இவை இரண்டுமே அவ் வருட்கங்கையில் எதிர் நீச்சலடித்தலும், ஆற்றோட்ட விசையைத் தவறான திசையிற் பயன்படுத்திக் கடலுக்குப் போக விரும்பாமல், குறுக்கே நீந்தி, இருபுறக் கரைகளுள் ஒன்றில் ஏற முயல்வதுமாகும்! மனப்பூர்வமாக ஸ்ரீ ரமண சித்தாந்தத்திற்கு நம்மை முழுதும் அர்ப்பணித்துக் கொண்டு, அதற்கேற்ப வாழ்வதே அவ் வருட்கங்கையின் ஓட்டத் திசையில் ஆயாசமின்றி மிதந்து செல்லும் ஆன்ம சமர்ப்பண நெறியாகும். அதற்குப் பூரண சரணாகதி செய்வோம். பிறகு, நாம் சேர்வது நம் மூல நிலையமான பரமானந்தப் பேராழியே.

முற்றும் பரிசுத்தமாக்கப்பட்ட அன்பு, முடிவில் பரம்பொருள்பால் ஊன்றும் பரபக்தியாக உருவெடுக்கின்றது. அன்பு சுத்தமாக்கப்பட்டுப் பரபக்தி வடிவாவது எவ்வாறு என்பதை இனிக் காண்போம்.

பக்தி என்பதென்ன? அது ஒரு பிரியவுணர்ச்சி; அன்புணர்வு. இப் பிரியவுணர்ச்சி எல்லாவுயிர்களிடம் இயல்பாக எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கின்றது. எவன் எதை விரும்புகிறானோ அவன் அதைப் பக்தி செய்கிறான் என்றே பொருள். எல்லாவுயிர்களிடமும் பிரகாசித்துக்கொண்டிருக்கும் இவ்வன்பு தன் பரிசுத்த இயல்பு நிலையில் சிவமே. அன்பு தன் இயல்பு நிலையிற் கங்கா ஜலம் போல் பரிசுத்தமானது. ஆனால், எடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தின் சுத்தா சுத்தத் தன்மைக்கேற்ப, ஒரே கங்கா ஜலமேயாயினும் உபயோகத்தின்போது உயர்வு தாழ்வை அடைகின்றதன்றோ? அவ்வாறே, ஜீவர்களின் சித்தசுத்திக்கேற்பப் பக்தியும் படிப்படியான உயர்வு தாழ்வுகளை உடையதாகின்றது. இவ்விதம் உயிர்களிடம் காணப்படும் பக்தி அல்லது அன்புணர்ச்சியை அதன் சுத்தா சுத்தத் தன்மைக்கேற்ப ஐவகையாகப் பிரிக்கலாம். பூரணமாகப் பரிசுத்தமாக்கப்பட்ட பிரியமே – அன்பே – சிவமாய்த் திகழும்!

நாம் முன்பு கூறியபடி அன்பானது உயிரினங்கள் அனைத்துள்ளும் (விலங்கு முதலிய அஃறிணை உயிரினங்களிலுங்கூட) விளங்கிக் கொண்டிருந்தாலும் கிரமமாகச் சுத்தமாக்கப்படும் அன்பின் ஐவகைப் படித்தரங்களை உயர் திணையான மனிதப் பிறவியினிடமே நன்றாகக் காண முடியும். விலங்கினங்கள் உலகப் பொருள்களையே பக்தி செய்கின்றன. அவை தாம் விரும்பும் பொருள்களைத் தம் புத்தி பலத்தைவிட அதிகமாகத் தம் தேக பலத்தையே உபயோகித்து அடைய முயற்சிக்கின்றன. ‘வலிமையே ஞாயம்’ (might is right) என்பதே விலங்கினங்களிடையே விதி (சட்டம்) ஆகும். ஆடு மாடுகள் வயல்களிலுள்ள பயிரையும், காட்டில் வாழும் கொடிய வலிய மிருகங்கள் எளிய மிருகங்களையும் தம் இஷ்டப்படி தின்பதில் முனைகின்றன. ஏனைய விலங்கு பறவையாதி ஜந்துக்களிடம் காணப்படுவது போன்றே பண்பாடற்ற பாமர ஆதி மனிதனிடம் இப் பிரியவுணர்ச்சி வெறும் உலகப் பொருள்களின்மேல் ஆசையாகவே வெளிப்படுவதால் அவ்வன்பு ‘விஷய பக்தி’யாகவே இருக்கின்றது. மிருகங்களைப் போலவே பண்பாடற்ற ஆதி மனிதனும் இவ்வுலகில் தான் விரும்பிய பொருள்களையெல்லாம் தன் புத்தி பலத்தைவிடத் தன் தேக பலத்தை உபயோகித்தே அடைந்து அனுபவிக்கலானான். இவ்வுலகின் வசீகரத்தில் மயங்கிய அம்மனிதன் மிருகங்களைப் போலவே சட்ட ஒழுங்கு ஒன்றுமில்லாதவனாக இருந்ததால், தன்னைப் போலவே மற்றொரு மனிதனுக்கும் இவ்வுலகப் பொருள்கள் தேவையும் உரிமையும் உள்ளவை என்ற நியாய உணர்ச்சியற்றவனாய், தன்னினும் வலிமை குறைந்த எவனையும் அழித்து எப்பொருளையும் விரும்பி அடைபவனானான்.

அவ்வாறு அடைவது அவ் வாதி மனிதர்களுள்ளும் வலிமைமிக்க மனிதனுக்கு மட்டுமே சாத்தியமாயிருந்தது. அவனுங்கூட, ‘ஆசைக்கோர் அளவில்லை’ என்றபடி, தன் அற்ப தேக-புத்தி பலத்தால் தானடைந்த தன் ஆவற் பொருள்களைவிட, தான் இன்னும் அடைய முடியாமலிருக்கும் ஆவற் பொருள்களே உலகில் அளவின்றியிருப்பதை அறிந்து நிறைவேறா ஆசைகளால் எப்பொழுதும் அதிருப்தியுற்றவனாகவே இருந்தான். அதனால் மேன்மேலும் தன் சக்தியைப் பெருக்கித் தன் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவே முயன்று வந்தான். ஆனால், சுயநலத்தால் எளியோரென்றும் பாபம் என்றும் பாராமல் அவனாற் செய்யப்பட்ட துஷ்கர்மங்களின் பலனாகக் கிடைக்கும் அவனது மறுபிறவிகள்தோறும் வலிமை குன்றிய தேக வாழ்வையே பெறுபவனானான். எனினும், அவனது ஆசை மட்டும் குன்றாது வளர்வதால் மன வலிவு குன்றியவனாய் மேன்மேலும் அதிகம் துன்புறுவோனாகி வந்தான். இங்ஙனம் சக்தி குன்றி, சுயநல ஆவல் மட்டும் மிகுந்துள்ள அம்மனிதன், ‘இன்னும் ஏதேனும் சுலபமான உபாயங்களிருந்தால் அவைகளின் மூலம் தாம் விரும்புவனவெல்லாம் அடையலாமே’ என்று கருதி, அதற்கான உபாயங்களைத் தேடியலைந்தான். இம் மனநிலையுடன் அலையும் மனிதர்கள் இன்றும் நம்மிடையே காணப்படுகின்றனரன்றோ! இத்தகைய மனிதன் விலங்கினங்களினும் சிறந்தவனல்லன்.

சுய நலமே சகல பாபங்களின் தாயகம் என்பதையும் கட்டுப்பாட்டிற்கு – சட்ட ஒழுங்கிற்கு – உட்படாமல் ‘வலிமையே நியாயம்’ எனச் சாதித்துக் கொள்ளப்படும் ஆசைகளின் நிறைவேற்றமெல்லாம் பாபங்களின் குவியலே என்பதையும் உணராத அம்மிருக மனிதனுக்கு அறிவுளோர் வழிகாட்ட வேண்டி வருகின்றது. பாபங்களால் வலிமை குன்றி ஆசை மிகுந்து அலையும் எளிய அம்மனிதன், ஆசையற்றுத் தவத்தால் வலிமை மிகுந்து என்றும் அமைதியில் நிற்கும் அறிவாளர் ஒருவரை அணுகி, தம் பற்றாக்குறையை முறையிடுகின்றான். அவரைப் போன்ற அறிஞர்களின் அறிவுரைகளே வேதம். வேதம் என்பது அறிவு. அவ்வறவோர் கண்டறிந்து உலகினர்க்கீந்த ஒழுக்க நெறிகளே வேதம். வேதம் ஞானிகளே. ஆதி மனிதனிடம் புயல் வீசிக்கொண்டிருக்கும் உலகாசை வெறியாகிய அசுத்தப் பிரியவுணர்ச்சியை அதாவது ‘விஷய பக்தியை’க் கிரமமாகத்தான் சுத்தம் செய்யவேண்டி இருக்கின்றது. பக்தி சுத்தீகரிக்கப்படும் பள்ளியாகிய வேதத்தினிடம் இதுவரை வந்து சேராத மனிதன் மிருகமே!

பக்தி அல்லது அன்பின் சுத்தீகரிப்பு நடைபெறும் வேதநெறியாகிய பள்ளியில் ஐந்து வகுப்புகள் உள்ளன. ஆனால், ஆசிரியர் மட்டும் ஒருவரே! இது ‘ஓராசிரியர் பள்ளி!’ வேத நெறியாகிய மகான்களின் உரைகளே இப்பள்ளியிலுள்ள ஓராசிரியர். பல படித்தரங்களூடே அன்புணர்வு சுத்தீகரிக்கப்பட வேண்டிய மனித சமூகம் முழுவதையும் ஒரு ‘மனிதன்’ என்றும், மனித சமூகம் அன்புணர்வைச் சீர்த்திருத்திப் பண்படுத்தும் வேத வேதாந்த நெறிகள் முழுவதையும் ஓர் ‘ஆசிரியர்’ என்றும், இனி இங்குக் குறிப்பிட்டழைப்போம். இவ்வாறு குறிப்பிடுவது மேல்வரும் நம் விளக்கத்திற்கு அனுகூலமாக இருக்கும்.

எனினும், பக்திப் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் மனிதனின் அன்புணர்ச்சி எவ்வாறு சுத்தமாக்கப்பட்டு, அவன் அடுத்த வகுப்பிற்கு முன்னேறுகின்றான் என்பதை மேலே விளக்கப் புகுமுன் அவ்வைந்து வகுப்புகளையும் பற்றி ஒர் சுருக்கமான விபரத்தை முதலில் இங்கு காண்போம்.

1) ‘வலிமையே ஞாயம் (might is right)’ என்ற ஒழுங்கற்ற, மிருகத் தன்மையால் தனது ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வது அசாத்தியம் என்றறிந்த மனிதன், பிறகு பக்திப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தபின், விகிதகர்மங்களாகிய தர்ம நெறியைப் பின்பற்றினால் மட்டுமே தன் ஆசைகளையெல்லாம் தவறாமல் பூர்த்தியாக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு கர்மங்களை இயற்ற ஆரம்பிக்கின்றான். அவன் வேதங்களாற் கூறப்பட்ட கர்மங்களையே செய்கிறானென்றாலும், அவற்றைச் செய்யும் தன்முயற்சியையும் திறனையுமே (கர்த்ருத்வத்தையே) தான் தன் வெற்றிக்கு அவசியமானதாகக் கருதி நிற்கிறானே தவிர, தனக்குமேல் கடவுளின் சக்தி ஒன்று இருக்கிறது என்பதை அவன் அப்போது (முதல் வகுப்பில்) அறிந்தானில்லை. தான் செய்யும் கர்மங்கள் தாமே பலனைக் கொடுத்துவிடும்; கொடுத்தேயாக வேண்டும் என்றவாறு தன் கர்மங்களிலேயே முழு நம்பிக்கை உடையவனாய், கடவுள் என்று ஒருவர் இருந்தாலுங்கூட அவர் தனது கர்மங்களின் போக்கில் வந்து குறுக்கிட முடியாது என்றும், கடவுளுங்கூட இத்தியாதி கர்மங்களின் மூலம்தான் சக்தி பெற்றிருப்பார் என்றும், எனவே கர்மங்களைத் தவிர கடவுள் வேறொன்றுமில்லை என்றும் நம்பி அவ்வளவு தூரம் கர்மபரனாகி விடுகிறான்.83

2) இரண்டாம் வகுப்பில் இம்மனிதன் வேதங்களால் விதிக்கப்பட்ட காமிய கர்மங்களைச் செய்தால் மட்டும் தனது ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொண்டுவிட முடியாதென்பதையும், கடவுளின் ஆக்ஞைக்கு உட்பட்டே கர்மங்கள் பலனைத் தரக் கூடியவை என்பதையும் உணர்கிறான். ஆகையால், கர்மங்களுக்கு மேலான கடவுளின் சில தெய்வீக சக்திகளின் தயவால் கர்ம பலன்களை எளிதில் அடைய முடியும் என்று கண்டு, கடவுளின் பலவேறுபட்ட சக்திகளை உடையனவான பல நாமரூபத் தெய்வங்களை உபாசித்து அவற்றின் தயவால் தனது பற்பலவான ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நம்பி நானா தெய்வ உபாசனைகளில் ஈடுபடுகிறான். ‘கடவுள் ஒருவரே; அவர் ஒருவரே நானா தெய்வ நாம ரூபங்கள்-மூலமாகவும் அருள் செய்து வருபவர்’ என்ற உண்மை இன்னும் அவனுக்குத் தெரியாததால், தன் பலவித ஆசைகளும் நிறைவேற பலவேறு நாமரூப உபாசனைகளும் அவசியம் செய்தேயாக வேண்டும் என்றெண்ணி உபாசிக்கிறான். கடவுள் ஒருவரே என்ற உண்மையை அப்பொழுது அவனுக்குக் கூறினாலும், அவனது மனம் பக்குவப்படாததால், அந்தந்தக் காமியங்களை அருளும் சக்தி அந்தந்த நாம ரூபங்களுக்குத்தான் உண்டு என்று அவன் நம்புவதால் அம்மனம் அதை ஏற்றுக் கொள்ளாது.

3) மூன்றாம் வகுப்பிலோ, உண்மையாகவே கடவுள் ஒருவர்தான் இருக்கிறார் என்றும், அவரது சக்தியே இதற்கு முன் தான் உபாசித்த பலவேறு நாமரூபங்களின் மூலமாகவும் தனக்கு உதவி வந்தது என்றும் அறிகிறான். அறிந்ததும் அவன் மனம் நானாரூபங்களிடம் ஓடிச்செல்ல விரும்பாமல் தான் இஷ்டப்பட்டுத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஏதாவதொரு நாமரூபக் கடவுளே (தன் இஷ்ட தெய்வம் ஒன்றே) தன் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்துவைக்கக் கூடியவர் என்றுணர்ந்து அந்த இஷ்ட தெய்வம் ஒன்றையே ஏகாக்கிரமாக உபாசிக்க ஆரம்பிக்கின்றான்.

இந்த மூன்றாம் வகுப்போ (a) என்றும், (b) என்றும் இரு பிரிவுகளாகப் பிரித்து விளக்கப்படுகின்றது. மூன்றாம் வகுப்பின் (a) பிரிவிலிருக்கும் மனிதன், ஏகதெய்வ ஏகாக்கிர பக்தியுடையவனாய் இருந்தபோதிலும், இன்னுங்கூட தனது உலக விஷயாசைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கத்துடனேயே தன் இஷ்டதெய்வத்தை உபாசிக்கின்றான். அதன் பிறகு நல்ல விவேகமுதித்து, தன் இஷ்ட தெய்வத்தின் மேல் மட்டும் அன்பு பெருகும்போது, இஷ்ட தெய்வத்திடமிருந்து உலக விஷயாசைப் பொருள்களை யாசிப்பதை விட்டுவிட்டு, இஷ்டதெய்வத்தின் அன்புக்காக மட்டும் அன்பு செய்கின்ற நிஷ்காமிய பக்தியைப் பெறுகின்றான். அவன் மூன்றாம் வகுப்பின் (a) பிரிவிலிருக்கும் போதெல்லாம் அவனது பக்தி விஷய பக்தியே. மூன்றாம் வகுப்பின் (b) பிரிவில்தான் அவனது பக்தி தெய்வ பக்தியாக மலர்கின்றது.

4) இம்மனிதன் மூன்றாம் வகுப்பின் (b) பிரிவில் உபாசித்த தன் இஷ்டதெய்வமே மனித உருக்கொண்டு இவன்முன் சற்குருவாக வந்து தோன்றுகின்றது. உலக விஷயாசைக் கலப்பற்ற, உத்தமமான, ஏகாக்கிர, இஷ்டதெய்வ பக்தியின் மகிமையால் விகாசமுற்றிருந்த அவனது பரிசுத்த உள்ளம் இப்போது தன் முன் மனித வடிவிற் காணப்படும் சற்குருவானவர்தான் முன்பு உபாசித்த தன் இஷ்ட தெய்வமேதான் என்ற உண்மையை அறிய முடிகிறது. அதனால், இஷ்டதெய்வ நாம ரூபத்தின் மேலிருந்த நிஷ்காமியப் பேரன்பு முழுவதும் அப்படியே இப்போது சற்குருவின் நாமரூபத்தின் மேல் அவனுக்கு ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் சற்குருவோ, அவனுக்குத் தன் நாமரூபத்தின் மேல் ஏற்பட்டிருக்கும் பேரன்பாகிய குருபக்தியோடு மட்டும் அவனைத் திருப்தியுற்றிருக்க விடுவதில்லை. அவனது இஷ்ட தெய்வத்தின் உண்மையும், அவனது சற்குரு வடிவத்தின் உண்மையுமாக ‘நான் இருக்கிறேன்’ என்று விளங்குகின்ற சச்-சித்துண்மையான ஆன்மாவின் மேல் அவனது மனத்தை உண்முகமாகத் திருப்பி விடுகின்றார். அம்மனிதனைப் பக்குவப்படுத்தி தன் நாமரூபத்திலிருந்து நீக்கி அகமுகம் ஆக்கிவிடுவதற்கு சற்குரு அவனுக்குச் செய்யும் முக்கியமான உபதேசங்கள் யாவும் குரு-சிஷ்ய சம்வாத முறையில் இங்கு நான்காம் வகுப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குரு-சீட சம்பாஷணையானது பகவான் ஸ்ரீ ரமணருக்கும் எந்த ஒரு தனிப்பட்ட சீடருக்கும் மட்டும் நேரடியாக நடந்த சம்பாஷணையல்ல. ஆனால், அவை யாவும் பற்பல உத்தம முமுக்ஷூக்களுக்கு ஸ்ரீ பகவான் அருளிய அதே கருத்துக்களையும் பதங்களையும் கொண்டே உருவாக்கப்பட்டவை. அக்கருத்துக்கள் ஒவ்வொன்றும் பற்பல சந்தர்ப்பங்களிற் கூறப்பட்ட ரமண வசனங்களேயாகும். சற்குருவின் வாய்மொழியான சம்பாஷணை வடிவில் அவை காணப்பட்டாலும் – இங்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் – சீடனது உள்ளத்தில் ஏற்படும் ஞான மறுமலர்ச்சிக்கு இந்த வெறும் வார்த்தைகள் மட்டுமே காரணம் என்று நாம் கொள்ளக் கூடாது. அதாவது, அம்மறுமலர்ச்சியானது வார்த்தைகளால் மட்டும் வரையறுக்கப்பட்ட விளக்கமுடையதல்ல, சற்குரு பிரதானமாக, தன் ஆன்ம நிஷ்டையாகிய மௌன மஹா சக்தியினாலேயே சீடனின் உள்ளத்தை மலர்த்துகின்றார். சீடனின் கவனத்தை உள்ளே ஆன்மாவின்பால் திருப்ப சற்குரு கையாளும் பல உபாயங்களுள் சாமானியமான ஒன்றே அவரது சம்பாஷணை, உபதேச மொழிகள் முதலியனவாகும்.

சர்வ வியாபியாகிய ஈசுவரன் தன் பக்தன்மேற் கருணைகூர்ந்து, பக்தனது பக்குவத்திற்குத் தக்கபடி அருளுருக் கொண்டு வருகிறார். பக்தனோ குருவை மனிதனென்று நினைத்து, இரண்டு பௌதிக சரீரங்களுக்கும் சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளப் பார்க்கிறான். ஆனால், பரமாத்மாவாகிய ஈசுவரனே மனிதவுருத்தாங்கி வந்துள்ள குரு, உள்ளிலிருந்து இவனது வழிகளிற் பிழைகாண உதவி, ஆன்மாவை அறியும்வரை சரியான மார்க்கத்தில் அவனை நடத்துகிறார் [...] குரு உள்ளும் புறமுமிருப்பதால் நீ உண்முகப்பட அநுகூலமான ஸ்திதியை ஏற்படுத்தி உன்னை மையத்துக்கு இழுக்க அவர் உண்முகத்தையும் தயார் செய்கிறார். இவ்வாறு நீ உள்ளத்தில் நன்கு நிலைநிற்கும் பொருட்டு, அவர் வெளியிலிருந்து உன்னை உள்ளுக்குத் தள்ளி, உள்ளிலிருந்தும் இழுத்துக் கொள்கிறார்...

என்று ஸ்ரீ ரமண பகவானே ‘மஹர்ஷி வாய்மொழி’ என்ற நூலின் முதற் பாகம், ஏழாவது அத்தியாயத்தில் (பன்னிரண்டாம் பதிப்பு, 2008, பக்கங்கள் 39-40-ல்) கூறுகின்றார்.

5) குரு பக்தியாகிய நான்காம் வகுப்பில் இருக்கும்போது, உள்ளும் புறமுமிருந்து அருளால் தூண்டும் சற்குருவின் உதவியால் இம்மனிதன் உள்ளே ‘நான்-நான்’ என்று விளங்கிக்கொண்டிருக்கும் ஆன்மாவை மெல்ல மெல்ல நாட மேன்மேலும் ஆரம்பிக்கின்றான். இதர வெளி விஷயங்களை விட்டு, மனம், தன் ஒளியுருவை மேன்மேலும் நாடவே அது மேன்மேலும் சுத்தப்படுகின்றது. இவ்வாறு சுத்தப்பட்ட மனத்தில் ஆன்ம நாட்டத்திற்கு அளவற்ற அன்பு உதிக்கின்றது. இவ்விதம் அவனது அன்பு வளர்ந்து மேன்மேலும் தூய்மையாகி, உத்தமமான ஸ்வாத்ம பக்தியாக உருவெடுப்பதால், அது முன்னிலை-படர்க்கைகளினின்றும் 180 டிகிரி84 முற்றும் உண்முகமாகத் திரும்பி, தன்மையின் உண்மையாகிய தான் உதித்த இடத்தில் – ஆன்மாவில் – என்றென்றும் மீளாமல் மூழ்கி உருவழிந்து விடுகின்றது. இவ்வாறு மனம் உத்தமமான பக்தியின் சிகரமான ஸ்வாத்ம பக்தியையடைந்து, ஆன்மாவில் மூழ்கி, தன் தனி இருப்பை (வியக்தித்துவத்தை) இழந்து ஆன்மாவில் ஆன்மாவாய் நிலைத்து விடுகின்றது. இந்நிலையே பக்திப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு ஆகும். இப்போதுதான் பக்தி சம்பூரணமடைகின்றது. ஐந்தாம் வகுப்பில் இவ்வாறு அடையப்பட்ட ஸ்வாத்ம பக்தியே பாரமார்த்திக சத்திய அன்பாகிய இரண்டற்ற, அனன்னிய பக்தியாகும். இப்படி அழிந்த மனம், மீண்டும் எழுந்து எதையும் தனக்கு அன்னியமாக அறிவதுமில்லை; ஆசைப்படுவதுமில்லை!

பின்வரும் பக்திப் பள்ளியின் ஐந்து வகுப்புகளில் விரிவாகக் கூறப்போகும் பக்தி சுத்தீகரிப்பை இங்கு சுருக்கமாகக் கூறினோம். இவ்வத்தியாயத்தினுள் பக்தி எப்படிக் கிரமமாக ஒவ்வொரு வகுப்பிலும் சுத்தீகரிக்கப்பட்டு ஸ்வாத்ம பக்தியாகிய உச்சநிலை அடைகிறதென்பதை வாசகர்கள் விரிவாகக் காணலாம். ஆனால் ஸ்ரீ பகவான் இப்பரிசுத்த ஸ்வாத்ம பக்தியைப் போதித்தாலும் இவ்வாறு ஐந்து வகையாக்கி ஒவ்வொன்றிலும் பக்தனின் அன்பு முதிர்வதைக் கிரமமாகவும் விளக்கமாகவும் எங்கும் காட்டியதில்லை. என்றாலும், இவ்வைந்து வகுப்புகளாக நாம் பகுத்து விளக்குவதற்கு வேண்டிய அடிப்படைக் கருத்துக்களைச் சுருக்கமாக ‘மஹர்ஷி வாய்மொழி’ என்ற நூலின் முதற் பாகம், ஏழாவது அத்தியாயத்தில் (பன்னிரண்டாம் பதிப்பு, 2008, பக்கம் 38-ல்) ‘குரு கிருபை என்பதென்ன? அதனால் ஆத்மாநுபூதி எப்படியுண்டாகும்?’ என்று கேட்கப்பட்ட வினாவுக்கு:

குரு என்பது ஆத்மா. சில வேளை மனிதன் உலக வாழ்வில் உள்ளதைக் கொண்டு திருப்தியடையாமல் அதிருப்தி மேலிட்டு, தன் ஆசைகள் நிறைவேறக் கடவுள் பூஜை முதலானவை செய்கிறான். கிரமமாக அவன் மனம் சுத்தமடைந்து, உலக ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு மேலாகக் கடவுளை அறிய விரும்புகிறான். அப்போது கடவுளருள் தோன்ற ஆரம்பிக்கின்றது. கடவுள் குருவுருக் கொண்டு பக்தனுக்குத் தோன்றி, ஸத்தியத்தைப் போதித்துத் தன் இணக்கத்தால் அவன் சித்தத்தைச் சுத்தம் செய்கிறார். பக்தன் மனம் பலமடைந்து அந்தர் முகப்படுகிறது. [ஆன்ம] தியானத்தால் அது இன்னும் சுத்தப்பட்டுச் சிறிதும் அலைவற்றுச் சும்மா நிற்கிறது. அந்த அமைதியான ஆகாசமே ஆத்மா. குரு வெளியுமுள்ளார்; உள்ளுமுள்ளார். வெளியிலிருந்து மனம் உண்முகமாகும்படித் தள்ளுகிறார். உள்ளிலிருந்து மனத்தைத் தன்வசமிழுத்து, அதை அமைதியாக வைத்துக்கொள்ள உதவுகிறார். இதுதான் குரு கிருபை. தெய்வம், குரு, ஆத்மா இவை ஒன்றே!

மேலெழுந்தவாரியாக நோக்குவோர்க்கு, இவ்வத்தியாயத்தில் விரித்துக் கூறப்படும் பக்திப் பள்ளியின் ஐந்து வகுப்புகளும் இந்து மதத்தார்க்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அது அப்படியல்ல. இங்கு விளக்கப்படும் பக்தியின் ஐந்து வகைகளும் இந்து மதத்திற் பிரபலமாயுள்ள பக்தி நெறியின் பாங்குக்கேற்பவே வகுக்கப்பட்டிருந்தாலும், வெளிமுகத்தில் அநுஷ்டிக்கப்படும் வெறும் சடங்குகளைப் பொருத்து நாம் இங்கு இவ் ஐவகை வகுப்புக்களைப் பிரிக்கவில்லை. அநுஷ்டானங்கள் மதத்திற்கு மதம் வேறுபடலாம். ஆயினும், எம்மதத்தைச் சேர்ந்தவனாயிருந்தாலும் அவ்வம் மதக் கடவுளிடம் கொள்ளும் உள்ளன்பின் பரிசுத்த நிலைக்கேற்பவே, அவனது பக்தியை ஐவகைப் படுத்தியிருக்கிறோம். ஆகவே, இவ்வகுப்புகள் எம்மதத்தார்க்கும் பொருந்தக் கூடியதே. இந்து மதமோ பலதரப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் அவரவரது பலவேறு ஆசைகளுக்கும் தேவைகளுக்கும் தக்கவாறு கடவுளை உபாசிக்க இடந்தருவதாய், மிக விசாலமான மதமாய் இருப்பதால், மேற்காட்டிய ஐந்து வகுப்புகளிலும் ஒரு தனி மனிதனது அன்பு எவ்வாறு மெல்ல மெல்ல சுத்தீகரிக்கப்படுகின்றது என்பதை விபரமாகவும், தெளிவாகவும் எடுத்து விளக்க இந்துமத சம்பிரதாயப்படியே, பிரித்து விளக்கிக் காட்டுவதே சுலபமாகின்றது. பின்வரும் ஐந்து வகுப்புகளுள் சிலவற்றிற் காட்டப்படும் இந்துமத வழிபாடுகளின் புறச் சின்னங்கள் பிறமதங்கள் சிலவற்றில் இடம் பெறவில்லை என்றாலும், அந்தப் பிற மதத்தினர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உள்ள பக்தி அல்லது அன்புணர்ச்சியின் தாரதம்மியமும் இவ் ஐவகைப் பாகுபாட்டுக்கும் உட்பட்டதாகவேதான் இருக்கிறது. எனவே, ஒருவன் எந்த வகுப்பில் உள்ளவன் என்பதை அவன் வெளியில் பின்பற்றும் வழிபாட்டுக் கிரியைகளைக் கொண்டு தீர்மானிக்காமல், அவனுள்ளத்தில் இருக்கும் சுத்தமாக்கப்பட்ட அன்புணர்ச்சி, நம்பிக்கை, சரணாகதித் தன்மை இவற்றைப் பொருத்தே அவன் இருக்கும் வகுப்பு தீர்மானிக்கப்படுகின்றது.

மேலும் இவ்வைந்து வகுப்புகளுள் சிலவற்றிற் செய்யப்படும் வழிபாட்டு முறைகளின் புறச் சின்னங்கள் சில, சிற்சில மதங்களுக்குப் பொருந்தாததாகக் காணப்பட்டாலும், அந்தந்த மதத்திலுள்ள மக்களின் உள்ளத்தில் உள்ள பக்தியில் தாரதம்மியங்கள் ஏதாவதொரு விதத்தில் ஒவ்வொரு மதத்தாராலும் கையாளப்பட்டே வருகின்றன! உதாரணமாக சிலர், ‘இந்து மதத்தார் வழிபடுவது போன்ற நானாவித தெய்வ நாமரூபங்கள் கிறிஸ்துவ மதத்திலில்லை. ஆகவே, இப் பக்திப் பள்ளியின் இரண்டாம் வகுப்பு என்பது கிறிஸ்துவ மதத்தார்க்குப் பொருந்தாததே’ என்று கூறலாம். ஆனால் நெருங்கிவந்து, கிறிஸ்துவ சகோதரர்களின் நம்பிக்கைகளையும் மனோ பாவங்களையும் நன்கு கவனித்தால் ஒன்று விளங்கும். இந்து மதத்தில் இரண்டாம் வகுப்பாகக் கூறப்படும் நானா தெய்வ உபாசனையானது, கிறிஸ்துவ மதத்திலும் வேறொரு வகையிற் கையாளப்படுகின்றது. அதாவது, ரோமன் கத்தோலிக்க சர்ச்சிலும் Eastern Orthodox சர்ச்சிலும் கிறிஸ்துவ மக்கள் தத்தம் பலவித கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கூடியவையாகவும், பலவித இன்னல்களைப் போக்கக் கூடியனவாகவும் பலவிதத் தனிப்பட்ட சக்தியுள்ளவர்களாக பல (Saints) முனிவர்களையும் விசேஷப்படுத்தி தொழுது வேண்டிக் கொள்வதுண்டு. இவ்வாறு நானா தெய்வ உபாசனைகளை நாடும் மனோபாவம் ஒவ்வொரு மனிதனிடமும் (எம்மதத்தாராயினும்) இயல்பாகவே இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஏனெனில், ஒவ்வொரு மதத்திலும் பலவேறு குண இயல்புகளைக் கொண்ட மக்கள் எண்ணற்றவர்கள் இருப்பதால், அன்னோர் அனைவரது அன்புணர்ச்சிகளையும் வழிபடு முறைகளையும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்திடம் மட்டுமே செலுத்த வேண்டுமென்று கட்டாயப்படுத்த முடியாது. ஒரு மதமானது தம்மகத்தேயுள்ள மக்கள் ஒவ்வொருவரின் தார தம்மியமுள்ள அன்புணர்ச்சிக்கும், பேதபாவ வழிபாடுகளுக்கும் அவரவர் இஷ்டப்படி அனுமதிக்காமல் இருக்குமாயின், அவர்களது மனோபீஷ்டங்களைப் பூர்த்தி பண்ணிவைக்கத் தவறுவதால் அது காலக்கிரமத்தில் மெல்லமெல்ல க்ஷீணமடைந்து விடும். நம் பக்திப் பள்ளியின் வகுப்புகள் ஐந்திலும் காணப்படும் அன்புணர்ச்சியின் ஏற்றத் தாழ்வுகளுக்கு மக்களிடம் ஏதாவதொரு விதத்தில் அனுமதி கொடுத்துவரும் மதங்கள் மட்டுமே தலைமுறை தலைமுறையாகப் பன்னெடுங்காலம் பார்மேல் செழித்து நிற்கின்றன.

நம் பக்திப் பள்ளியின் வகுப்புகள் ஒன்றுக்கொன்று உயர்வாகும் வரிசையில் வைத்துக் கூறப்பட்டிருக்கிறதென்றாலும், கீழ் வகுப்புகள் கண்டிக்கப்படுவதாக வாசகர்கள் கொள்ளக் கூடாது. கீழ் வகுப்புகள் ஒவ்வொன்றும் அதற்கடுத்த மேல்வகுப்புக்கு ஜீவனை அழைத்துச்செல்ல அமைந்திருக்கும் படிக்கட்டுகளே ஆகையால் ஒவ்வொன்றும் அவசியமானதே. உண்மையும் உத்தமுமான ‘ஸ்வாத்ம பக்தி’ என்னும் ஐந்தாம் வகுப்புக்கு மனிதனை அழைத்துச் செல்வதற்காகவே, கீழேயுள்ள நான்கு வகுப்புகளின் அமைப்பும் வேதங்களால் அனுமதிக்கப் பட்டிருக்கின்றது. ஆனால், மனிதன் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு உயரும்போது அவனது பக்தி அல்லது அன்பின் தன்மையும் சிறிது சிறிதாகச் சுத்தப்பட்டு மேன்மையடைவதால் ஒன்றுக்கொன்று உயர்ந்ததாக அவ்வகுப்புகளைச் சுட்டிக்காட்ட வேண்டி வருகிறது. ஒவ்வொரு கீழ் வகுப்பும் அதற்கடுத்த மேல் வகுப்புக்கு நம்மை ஏற்றிவிடும் ஏணிப்படிகளாவதால், ஒவ்வொன்றும் தத்தம் நிலையில் முக்கியமானதே ஆயினும், நாம் ஒவ்வொரு கீழ் வகுப்பிலும் உள்ள அன்பின் தூய்மைக் குறைவை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். துவித பக்தி பாவம் யாவற்றுள்ளும் மிகச் சிறந்ததான குருபக்தியை ஒருவன் நான்காம் வகுப்பிற் பெற்றிருக்கும்போது கூட, ஐந்தாம் வகுப்பில் அவன் பெறப்போகும் ஸ்வாத்ம பக்தியை விட அது எந்த விதத்தில் சிறிது குறையுடையது என்பதை நான்காம் வகுப்பில், குரு-சீட சம்பாஷணை வாயிலாகக் காட்டப்படுவதிலிருந்து நாம் தெற்றென விளங்கிக்கொள்ள முடிகிறதல்லவா? இவ்வாறு மிகச்சிறந்த குரு பக்தியைக் கூட ஐந்தாம் வகுப்பிலிருந்து நோக்குமிடத்து குறை சொல்லக்கூடிய சந்தர்ப்பமும் இவ்வத்தியாயத்திற் காட்டப் படுகின்றதல்லவா? கூர்மதியுள்ள வாசகர்கள் இதை ஒரு கண்டனமாகக் கொள்ள மாட்டார்கள் அல்லவா? அது போலவே ஒவ்வொரு வகுப்பிலும் அதற்குக் கீழுள்ள வகுப்பின் பக்தியிற் குறை காண்பதும் கூறுவதும் ஆக்கபூர்வமாய் மேலும் ஊக்கம் அளிப்பதற்கேயன்றி ஒரு கண்டனமல்ல என்றறிய வேண்டும். ஏனெனில், இதன் மூலம் கீழ் வகுப்புகளிலுள்ள குறைகளை நாம் அறிந்து கொண்டாலன்றி அவைகளைக் களைந்து சுத்தப்படுத்தி மேல் வகுப்புகளுக்கு முன்னேற முடியாதல்லவா?

இனி, இம்மனிதன் எவ்வாறு முதல் வகுப்பில் நுழைகின்றான் என்பதையும், பிறகு கிரமமாக எவ்வாறு மேல் வகுப்புகளுக்கு உயர்கின்றான் என்பதையும் காண்போம். ‘வலிமையே ஞாயம்’ (might is right) என்ற மிருக ஞாயத்தைக் கையாண்டுதான் இச்சித்த எல்லாம் எய்திவிட முடியாதென்றறிந்த மனிதன் ஆசிரியரிடம் வந்து:

‘சுவாமி, இவ்வுலகில் நான் விரும்பியவற்றையெல்லாம் அடைய முடியாதபடி என் தேகம் அற்ப சக்தி உடையதாயிருக்கின்றது. என் புத்தி வலிமையாலுங் கூடச் சாதித்துக்கொள்ள கிட்டாத ஆசைப் பொருள்களோ என் கண்முன் அளவிறந்து காணப்படுகின்றன. இதனால் நான் திருப்தியற்றவனாய்த் துன்புறுகிறேன். என் இஷ்டங்கள் எல்லாம் விரைவில் நிறைவேற ஏதாவது சுலபமான வழியுள்ளதா?’ என்று ஆசிரியரிடம் ஆலோசனை கேட்கிறான்!

‘உண்டு! உன் இயலாமையின் (அசக்தத்தின்) காரணத்தை முதலில் உணர். இவ்வுலகம் ஈசன் படைப்பு; அவரது சொத்து. அதில் உனக்கு வேண்டியதைப் பெற விரும்பினால், நீ அதற்காகக் கொடுக்கவேண்டிய விலை ஒன்றுண்டு. அதைக் கொடாமல் உன் வலிமையைக் காட்டி அவர் சொத்தை அபகரித்தனுபவிப்பது என்பதே பாபம், அதர்மம் எனப்படும். தர்மமே, அவருடைய சொத்தாகிய உலகை நீ அனுபவிப்பதற்காகக் கொடுக்கும் விலையும் உபாயமும் ஆகும்! தர்மத்தை அறியாமல் இதுவரை நீ நடந்துகொண்டதால்தான் பாபங்களால் உன் வலிமை (சக்தி) குன்றிவிட்டது. தர்மத்தை அறிந்து உன்னாற் கையாளப்படுகின்ற காரியங்களே (மனோ வாக்குக் காயங்களாற் செய்யப்படும் முயற்சிகளே) “விஹித கர்மங்கள்” அல்லது “சற் கருமங்கள்” எனப்படும். அவைகளைக் கேட்டறிக. நீ எவ்வெப் பொருள்களை இவ்வுலகிலும் பிற உலகங்களிலும் அடைந்து அனுபவிக்க விரும்புகிறாயோ அவை ஒவ்வொன்றையும் அடைவதற்கான கர்மங்கள் இன்னின்னவை; அவைகளை இயற்றும் முறைகள், கால தேசாதிகள் இன்னின்னவை; இன்னதைச் செய்தால் இன்னதை அடையலாம்’ என்று ஆரம்பித்து வேதம் மனிதனின் பல்வேறு முகப்பட்ட ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்து கொள்வதற்கான பல்வேறு காமிய கர்மங்களை, அவையவை இயற்றப்பட வேண்டிய விதிமுறைகளோடு ஸாங்கோபாங்கமாகக் கர்ம காண்டத்தால் முதலில் இம்மிருக மனிதனுக்கு உபதேசிக்கின்றது!

இவ்விகித யக்ஞங்களைச் செய்து முறைப்படி வாழ ஒத்துக்கொண்டு அந் நித்திய கர்மானுஷ்டானங்களைத் (அவை புண்ணிய கர்மங்கள் மட்டுமன்றிக் கடமையுமாம்) தவறாமல் அனுஷ்டித்துவரும் மனிதன் இப்பள்ளியில் முதல் வகுப்பிற் சேர்க்கப்பட்டவனாகின்றான். இது விஷய பக்தியேயாயினும், தன் அசக்தத்தையுணர்ந்து, தன்னினும் பெரியோர்களை மதித்து, அவர்களது அறிவுரைகளுக்கு அடங்கி நடக்கவாவது ஒருவன் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு அகங்காரம் அடங்கப் பெற்றவனாகின்றான் அல்லவா? இதுவே இப்பள்ளியில் முதல் வகுப்பில் அவன் சேருவதற்கான தகுதியாகும். இச்சிறிய அளவிற்கூட அகந்தை அடங்கிப் பெரியோர்கட்கும் சாஸ்திரங்கட்கும் கட்டுப்பட விரும்பாத மக்களும் உண்டல்லவா? அத்தகையோர் இன்றும் என்றும் இருந்தே வருகின்றனர். அவர்களெல்லாம் பள்ளிக்குச் செல்ல விரும்பாது வெளியில் வீதியில் வீணேயலையும் அடங்காச் சிறார்க்குச் சமானமானவர்களேயாகும்!

உலகில் எத்தனைவித மனிதர்களுண்டோ அத்தனைவித பேத மனங்களும் உண்டன்றோ? வெளிப் பொருள்களிலிருந்து தான் சுகம் வருகிறதென்ற தப்பெண்ணமுள்ள ஒவ்வொரு மனத்திற்கும் அதனதன் ருசிக்கேற்றபடி எத்தனையோ வித வெளிப்பொருள்கள் தேவைப்படுகின்றனவன்றோ? அத்தனைக் கோடிக் காமியங்களையும் அவரவர்கள் அடைவதற்குரிய கர்ம வழிகளையும் வகுத்துத் தரவேண்டிய அவசியம் ஏற்படுகின்றதன்றோ? ஆகையால்தான் வேதங்களிற் கர்ம காண்டப் பகுதி மிகமிக விரிந்தும் சிக்கலானதுமாய்க் காணப்படுகின்றது! பொன், மனை, நிலம், கல்வி, புகழ், நீண்ட ஆயுள், ஆரோக்கியம் முதலிய பலவகைப்பட்ட உலக விஷயப் பொருள்களின் ஈட்டமே சுக சாதனங்கள் என்ற தப்பறிவே பெரும்பாலான மக்களின் தீர்மானமாக இருப்பதால், ஓர் தாய் தன் குழந்தையின் திருப்திக்காக அது கேட்பவை பயனற்ற பொருள்களாயினும் இரக்கத்துடன் கொடுத்துதவுவது போலவே, உண்மையில் விஷயப் பொருள்கள் சுகந்தருவன அல்லவென்றாலும்,85 அவற்றில் மயங்கியிருக்கும்வரை, அம்மக்களுள் ஒவ்வொருவரின் விஷய விருப்பத்தையும் பூர்த்தி செய்வித்து அநுக்கிரகிக்கும் நோக்கத்துடனேயே கர்ம காண்டமும் வேதங்களில் மிகுந்த அளவில் விவரிக்கப்பட வேண்டியதாயிற்று! மனிதன் இவ்வாறு கர்மங்களையும் தர்மங்(ஒழுங்கு)களையும் பேரூக்கத்துடன் கடைப்பிடித்து, அக் கர்ம பலனாகிய விஷய சுகங்களைப் புஜித்து மகிழ்ச்சி அடைகின்றான். ஆயினும் என்ன?

ஓர் பெரிய அணைக்கட்டின் நீரை ஓர் சிறு அரை அங்குலக் குழாயின் வழியே வடித்துக் காலிசெய்ய முயல்வது போல, மனிதனின் அளவற்ற ஆசை வெள்ளத்தை கர்ம-தர்மக் குழாயின் வழி வடித்து முடிப்பதில் ஏற்படும் பெரும் தாமதத்தை எந்த ஜீவனும் பொறுத்துக் கொண்டிருக்க முடிவதில்லை அல்லவா? விதிக்கப்பட்ட ஒழுங்குகளின்படி அந்தந்த வேள்விகளைச் செய்தாலொழிய அவை தக்க பயனைத் தராமையை உணரும் மனிதன் அவ்வொழுங்குகளுக்கேற்றபடி அந்தந்த யக்ஞங்களுக்குத் தேவையான சாமக்கிரிகளைத் தேடி அல்லலுறுகிறான். அற்ப வேள்விகளுங்கூட, முறை வழுவாமல் நடத்தப்பட வேண்டுமென்றால், மிகுந்த பிரயாசைக்குப் பிறகே இயற்றப்பட இயல்கின்றன. இராஜசூய யாகம் செய்து உலகச் சக்கரவர்த்தியாகி ராஜ போகங்களை நுகர்வதென்றால் எம்மனிதனுக்குத்தான் இஷ்டமிராது! ஆனால், அதற்கு வேண்டிய சாமக்கிரிகளைப் பெற பேரரசர்களால் மட்டுந்தானே முடியும்? அதன்மேல் ஆசை மாத்திரமுள்ள அற்ப மனிதன் சாமக்கிரிகளுக்கு எங்கே போவது? அத்தகைய யக்ஞங்களை இயற்றி முடிக்குமுன் இடையில் வரும் இடையூறுகளும் எத்தனையெத்தனையோ! மனிதன் தன் தகுதிக்கும் திறமைக்கும் மேற்பட்ட கர்மங்களினால் மட்டுமே அடையக்கூடிய சுகங்களானாலும் சரி, அவற்றை ஆசைப்படாமல் இருப்பானா? மாட்டான்! இவ்வாறு, தன் பலவகைப்பட்ட ஆசைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் நிமித்தம் பலவகைப்பட்ட கர்மானுஷ்டானங்களைச் சிரத்தையுடன் கருத்தூன்றி நடத்தி, கீழ்மேல் உலகங்களில், பலவேறு பிறவிகளில், அவற்றின் பலன்களை அனுபவித்து வரும் மனிதன், நெய்யிடப்பட்ட நெருப்பே போல, விஷயானுபவத்தால் தன் ஆசைகள் மேன்மேலும் பெருக்கப்பட்டவனே ஆகின்றான். விஷயானுபவங்கள் கிடைக்கக் கிடைக்க, விஷயாசைத் தீயும் மேன்மேலும் ஓங்கி எரியவே ஆரம்பிக்கும்.

நிமிர்ந்தெழுத லன்றி நெருப்புநெய் யாலே

அமர்ந்துதணி வெய்தாத வாறே – சமைந்ததம்

காமங்கை கூடுங் களிப்பானே காமத்தீ

ஏமங் கொடுதணித லின்று.

(குருவாசகக் கோவை 592)

வெறும் தேக-புத்தி மாத்திர உபகரணங்களாற் செய்யப்படும் ஜட கர்மங்கள்86 எல்லைக்குட்பட்டதோர் சிறிய அளவே பலன் தரக் கூடியவையாக அமைவதையும் அவன் உணர்கிறான். தன் முயற்சியின் வடிவான இக்கர்மங்களைவிட இன்னும் துரிதமாகவும், பெருமளவிலும் பலனளிக்கக்கூடிய உபாயங்கள் வேறொன்றுமில்லையோ என்று மீண்டும் ஏங்குகிறான். தனக்குக் கர்ம வழிகாட்டிய ஆசிரியரிடமே இதற்கும் ஏதாவது வழி கிடைக்கும் என்று நம்பி, மறுபடியும் தன் ஆசிரியரிடம் (வேதத்தினிடம்) வருகிறான்.

மனிதன் தனக்கு முதல் வகுப்பிற் போதிக்கப்பட்ட கர்ம நெறிகளை ஒழுங்காகக் கடைப்பிடித்து ஒழுகியதால்தான் அதன் விளைவாகத் தனக்குத் தற்போது தோன்றியிருக்கும் ‘கர்ம அலுப்’பிற்கு வந்து சேருகிறான். இதற்குள் அவனுக்குப் பல்லாயிரக்கணக்கான பிறவிகள் வந்து போய்விடலாம்! அவ்வளவு காலம் அவன் முதல் வகுப்பிற் படிப்பவனே! இந்த கர்ம அலுப்பாகிய பக்குவம் அவனுக்கு உண்டாவதே முதல் வகுப்பில் அவன் இவ்வளவு காலம் ஒழுங்காகப் பூரண பயிற்சி பெற்றவன் என்பதைக் காட்டுகின்றது! இம்முதல் வகுப்பிற் கற்பவர்கள் இன்றுங்கூட நம்மிடையே அநேகர் உளர். அத்தகையோர் தற்காலப் பள்ளிப் படிப்பில் சர்வகலாசாலைப் பட்டதாரிகளாகக்கூட இருக்கலாம். ஆயினும் அவர்கள், நம் ‘பக்திப் பள்ளி’யில் முதல் வகுப்பிலேயே இன்னும் படித்து வருபவர்களாகும்! வேதங்கள் காட்டும் கர்ம நெறிகளைக் கடைப்பிடிப்பதற்குக் கூட இணங்கி வராமல், ‘கண்டதே காட்சி; கொண்டதே கோலம்’ என்று திரிபவர்களாய், இம்முதல் வகுப்பிற்கூடச் சேராமல், பள்ளிக்கு வெளியில் விலங்கினம்போல் வாழ்வோரும் நம்மிடையே இன்னும் கோடிக்கணக்கிற் காணப்படுகின்றனரென்றால், முதல் வகுப்பிலுள்ளவர்களைப் பற்றி வருத்தப்படுவானேன்!

முதல் வகுப்பிற் சேர்ந்து பயிற்சி பெற்ற மனிதன் அதன் முடிவில் மேற்காட்டியபடி ஆசிரியரிடம் வருகின்றான். ‘சுவாமி, விதித்த கர்மங்கள் எண்ணிலடங்காதனவாய் இருக்கின்றன. அவற்றைச் சரியாக முற்றும் செய்து முடிக்கத்தக்க சக்தியும் நேரமும் அற்றவனாயிருக்கிறேன். ஆயினும் அவைகள் யாவற்றின் பலன்களாகிய இகபர சம்பத்துக்களையும் அடைந்து அனுபவிக்காமல் எனக்குத் திருப்தியுண்டாகாது. ஆகையால், கர்மங்களைவிடச் சற்று எளியதும் அதிகப் பலனளிப்பதுமான வேறேதேனும் உபாயங்கள் உண்டோ என்று அறிந்து பின்பற்றத் தங்களை நாடிவந்தேன்’ என்று முறையிடுகின்றான்.

‘உண்டு; வழியிருக்கின்றது! உன் கர்மங்கள் அனைத்தும் தாமே பலனைக் கொடுத்துவிடா! கொடுக்கவும் முடியாது! கர்மங்கள் வெறும் ஜடமே!87 அவைகள் பலனைத் தருவது (கர்த்தனாகிய) கடவுளின் ஆக்ஞைப்படியே ஆகும். தம்மை உபாசிப்பவனுக்குப் பல்வேறு பலன்களையும் விரைவிற் கொடுக்கும் சக்தியுள்ளவைகளாய், உபாசிப்பதற்குச் சுலபமாய் இறைவனின் பல்வேறு சகுண நாம ரூப மூர்த்திகள் உண்டு. ஆகையால் நானா தெய்வரூபமான அவ்வீசுவர -மூர்த்திகளை நீ உபாசித்தால் அவர்களது அனுக்கிரக சக்தியால் உனது குறைந்த பிரயாசையிலேயே நிறைந்த பலன்கள், நீ விரும்பியவாறு உனக்குக் கிட்டும். நீ எடுத்த எக்காரியங்களும் விக்கினமின்றி முடிவுபெற வேண்டுமானால் விநாயகரைப் பூஜி! கல்வி புகழாதிகளை மிகவும் பெற்று மேன்மையடைய நீ விரும்புவாயாயின் சகல வித்தைகளையும் எளிதில் வழங்கியருளும் சக்தியுடைய இறைவனின் சகுண ரூபமாக விளங்கும் சரஸ்வதியை வழிபடு! பொன், புத்திரர், நிலம், மனையாதி அஷ்டைசுவரியங்களையும் நிறைய அடைய விரும்புவாயாயின் மகாலட்சுமியை உபாசி! இதுபோன்றே உனது பல்வேறு இஷ்டங்களையும் பூர்த்தி செய்விக்கத்தக்க இறைவனின் நாம ரூபங்கள் சிவனாகவும், விஷ்ணுவாகவும், முருகனாகவும், தேவியாகவும் இவர்களின் எண்ணிறந்த பல்வேறு அம்ச தெய்வங்களாகவும் உள்ளன. இத்தேவ தேவியர்கள் ஒவ்வொருவரையும் பூஜிக்கத்தக்க மந்திரங்களும் பூஜா விதிகளும் இருக்கின்றன. மேலும் உன் சக்தியைப் பெருக்கிக்கொள்ள யந்திர தந்திராதி உபாசனை மார்க்கங்களும்88 இதோ மிகப் பலவாய் உள! உன் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்றபடி இவை யாவற்றையும் கைக்கொண்டு உன் தெய்வோபாசனையை ஆரம்பி! கர்மங்களைவிட தெய்வோபாசனையால் காரியங்கள் எளிதில் ஏராளமாய்க் கை கூடும்!’ என்று கூறி வேதமாகிய ஆசிரியர் நானா தெய்வ உபாசனை நெறியை அம்மனிதனுக்கு உபதேசிக்கின்றார்!

தன் முயற்சிகளான கர்மங்களைச் சார்ந்து நிற்பதைவிட உபாசனையால் தெய்வங்களின் சகாயத்தைப் பெற்று ஏராளமான இகபர சுகபோகங்களை எளிதில் அடையலாம் எனக் கேள்விப்பட்டதும் அம்மனிதன் மிகுந்த நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் நானா தெய்வ உபாசனைகளை உற்சாகமாய் மேற்கொள்கிறான்! கர்ம முனைப்பான தன் முயற்சியும் சக்தியும் அற்பம் என்று கண்டுகொள்வதும், தனக்குமேல் சக்தி வாய்ந்த பரம்பொருள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதும், அத்தெய்வங்களிடம் நம்பிக்கை கொள்வதும் இப்போது அவனது அறிவிற் புதிதாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களாம்.

ஏதுமிய லாதுதனா லென்றறிந்தா னாகிலழைக்

காதிறையை யாதுசெய்வன் கைகூப்பி? – ஆதலினால்

தன்னசக்தி யோருந் தரத்தளவே லௌகீகன்

றன்னகத்து பக்திவருந் தான்

(சாதனை சாரம் 110)

ஸ்ரீ பகவான் அருளிய உபதேச வுந்தியார் என்னும் நூலின் உபோற் காதமாக ஸ்ரீ முருகனார் என்னும் சீரிய ரமண பக்தர் இயற்றிய முதல் நான்கு பாடல்கள் இக்கருத்தை விளக்குவனவாம்.

தாரு வனத்திற் றவஞ்செய் திருந்தவர்

பூருவ கன்மத்தா லுந்தீபற

போக்கறை போயின ருந்தீபற.

கன்மத்தை யன்றிக் கடவு ளிலையெனும்

வன்மத்த ராயின ருந்தீபற

வஞ்சச் செருக்கினா லுந்தீபற.

கன்ம பலந்தருங் கர்த்தற் பழித்துச்செய்

கன்ம பலங்கண்டா ருந்தீபற

கர்வ மகன்றன ருந்தீபற.

காத்தரு ளென்று கரையக் கருணைக்கண்

சேர்த்தருள் செய்தன னுந்தீபற

சிவனுப தேசமி துந்தீபற.

அத்தெய்வத்தின் முன் தான் அடங்கி அதன் தயவை நாடி வணங்கும் அளவிற்கு அகந்தைத் தினவு அடங்கப் பெற்றிருப்பதே இப்போது அவனுக்குக் கர்மங்களைக் கடைப்பிடித்ததன் விளைவாகக் கிடைத்த உண்மையான பெரும் பயன்! இதனால் மனிதன் பக்திப் பள்ளியில் இரண்டாம் வகுப்பிற்குத் தேறியவனாகின்றான்!

தெய்வத்தை நாடிப் பணியும் பக்தனாக மாறியுள்ள இம்மனிதன் தன் மனோ பீஷ்டங்கள் எவையெவையோ அவைகளையெல்லாம் பூர்த்தி செய்து தரும் நானா தெய்வ நாமரூபங்களை, அவையவைகளுக்கேற்ற மந்திர, யந்திர, தந்திர சாதனங்களுடன் மிகுந்த சிரத்தையோடு சதாகாலமும் உபாசிக்க ஆரம்பிக்கின்றான். உலகில் ஆஸ்திகர்கள், பக்தர்கள் என்ற பெயருடன் தற்காலம் காணப்படுபவர்களுள் பெரும்பான்மை மக்கள் இந்த இரண்டாம் வகுப்பிற் சேர்ந்துள்ளவர்களே. தாம் கடவுள் பக்தியுள்ளவர்களாக இவர்கள் கூறிக் கொள்வர்! ஆயினும் என்ன? இவர்களது பக்தியெல்லாம் – பிரியமெல்லாம் – இவர்கள் நாடும் காமிய உலகப் பொருள்களின் மேலன்றோ? இவர்கள் பக்தி செய்வது – விரும்புவது – இக பர (சுவர்க்க) காமியங்களையே! அதற்குச் சகாயம் செய்யவே இவர்கள் தெய்வங்களைக் கூப்பிடுகின்றனர்! தெய்வங்கள் இவர்களுக்குச் சகாயிகளாக மட்டுமே தேவைப்படுகின்றன! பக்தியோ விஷய பக்தி; தெய்வ பக்தியல்ல! தெய்வம் இவர்களது சகாயி மட்டுமே!

கோரிக்கை முன்னிட்டுக் கொண்டிறையைக் கும்பிடலக்

கோரிக்கை தன்னையே கும்பிடல்...

(குருவாசகக் கோவை 683)

வேதப் பள்ளியிற் சேருமுன் மனிதனின் பிரியவுணர்ச்சி – பக்தியானது – விஷய பக்தியே. அப்போது அதை நிறைவேற்ற அவனது தேக-புத்தி பலமே சகாயமாயிருந்தது. பிறகு முதல் வகுப்பிற் சேர்ந்திருந்த பொழுதும் மனிதனின் பிரியவுணர்ச்சி– பக்தி –யானது விஷய பக்தியே. அப்போது அதை நிறைவேற்றக் கர்மங்கள் சகாயங்களாயிருந்தன. அவ்வாறே, இப்போது அம்மனிதன் உள்ள இரண்டாம் வகுப்பிலுங்கூட பக்தி விஷய பக்தியே! இப்போது கர்மங்களுக்குப் பதிலாக நானா தெய்வங்கள் அதை நிறைவேற்றித் தரும் சகாயிகளேஆகின்றனர்! இந்நிலையிலுள்ள மனிதன் மிக உற்சாகத்துடன் தனது இரண்டாம் வகுப்புப் பாடங்களாகிய நானா தெய்வ உபாசனையில் ஈடுபடுகின்றான்!

‘திருப்பதிக்குப் போய்வந்தேன்; ஏழுமலையான் ஐசுவரியம் தருவான்; ஆரோக்கியம் தருவான்! பழனி முருகனுக்குப் பாற்காவடி எடுத்தேன். பஞ்சாமிர்த அபிஷேகங்கள் செவ்வனே செய்தேன்; திருமுருகாற்றுப்படை பாராயணம் செய்கிறேன்; சகல பிணிகளும் கேடுகளும் நீக்கி இகபர நலனைத் தருவான் ஷண்முகன்; அவனருளால் சகல பீடைகளும் நீங்கி என் குடும்பம் சௌக்கியமடையும்! காசி ராமேசுவர தரிசனமும், கங்கா யமுனா தீர்த்தாடனமும் செய்துள்ளேன்; அதனால் எனக்குச் சற்புத்திர சந்தானம் ஏற்படும்! “ஆதித்ய ஹ்ருதயம்” பாராயணம் செய்து வருகின்றேன்; நீதிமன்றத்தில் என் எதிரிகள் என்னை என்ன செய்துவிட முடியும்? தொட்டகாரியந் துலங்க வேண்டுமல்லவா? அதனால் விநாயகரை விடாமற் பூஜிக்கின்றேன்! லட்சுமி அஷ்டோத்தர சதமும் ஸஹஸ்ர நாமமும் வருஷம் முழுவதும் பாராயணம் உண்டு; லட்சுமி தேவியின் கடாக்ஷம் எனக்குக் குபேர சம்பத்தையும் கொடுக்கும்! லலிதா ஸஹஸ்ர நாமமும் திரிசதியும் சண்டிகா ஹோமமும் ஸ்ரீ சக்ர பூஜையும் நான் தவறுவதேயில்லை; அம்பாள்தான் எனக்கு எல்லா பாக்கியங்களையும் அருள்கின்றாள்! சிதம்பரம் நடராஜா, அண்ணாமலையப்பன், காளத்தி நாதன், மகாலிங்கப் பெருமான், வைத்திய நாதனான வைத்தீசுவரன், கைலாயபதியாகிய எல்லா சிவ மூர்த்திகளையும் போய்த் தரிசித்தே தீருவதாக இருக்கிறேன்; சிவாஷ்டோத்தரசதமும் ஸஹஸ்ர நாமார்ச்சனையுங்கூட செய்து வருகின்றேன். இவ்வுலகிலும் மறு உலகிலும் எனக்கு வேண்டியதெல்லாம் தரும் மஹேசுவரன் அவரல்லவா? பரமேசுவரன் திருவருளே எனக்கு எல்லாவற்றையும் சாதித்துத் தரும்! அனுதினமும் காலை, நண்பகல், மாலையில் சந்தியாவந்தனத்துடன் ஆயிரம் காயத்ரி ஜபம்! பார் என்னை! எவ்வளவு தேஜசும் சக்தியும் எனக்கு உண்டாகியிருக்கின்றன! ஸ்ரீமத் பகவத் கீதை பாராயணம், இராமநாம சங்கீர்த்தனம், இராம நவமி மஹோற்சவம் இவைகளை எப்படியும் வருடந்தோறும் தவறாமல் நடத்தியே வருகின்றேன்! இந்த நானா தெய்வோபாசனையின் பலத்தால்தான் நான் எல்லா நன்மையும் அடைய முடிகின்றது!’

இவ்வாறு அவ்விரண்டாம் வகுப்பிற் கற்கும் மனிதனின் மனம் தன் விஷயாசையின் மிகுதியால் தெய்வங்கள் பற்பலவற்றினிடமும் தீவிரமான நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டு மேன்மேலும் உபாசனையில் முனைகின்றது.

எத்தனையோ பிறவிகள் இந் நானா தெய்வ உபாசனையிற் கழிகின்றன! மற்ற பாமர மக்களைவிட தெய்வ சகாயத்தால் இகபர சுகங்களைப் பெற முயலும் இம்மனிதனும் எத்தனையோவித இம்மை மறுமைப் பேறான சுகங்களைப் பெற்றுப் பூஜித்து வருகின்றான். ஆயினும் என்ன? போகப் பொருள்களாகிய உலகங்களின் விரிவும், பூஜிப்போனது விருப்பங்களாகிய மனோ கற்பனைகளும் எல்லையற்றுப் பெருகிக்கொண்டே போவது இயற்கையல்லவா? இதற்கு முடிவேது!

ஆசைக்கோ ரளவில்லை யகிலமெல் லாங்கட்டி

யாளினுங் கடன்மீதிலே

ஆணைசெல வேநினைவ ரளகேச னிகராக

வம்பொன்மிக வைத்த பேரும்

நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

நெடுநா ளிருந்த பேரும்

நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி

நெஞ்சுபுண் ணாவர்...

(ஸ்ரீ தாயுமானவர்)

மிகப்பெரிய உபாசனா பலம்பெற்று விளங்கியவர்களாகிய இரணிய கசிபு, இந்திரன், இராவணன் போன்றவர்களுங்கூட பிறர்மேல் அசூயையும், பிறர் பொருளின்மேல் ஆசையுங்கொண்டு, கொஞ்சமும் திருப்தியற்றவர்களாய்த் தத்தம் அழிவைத் தாமே தேடிக் கொண்டனர் என்றால், சாதாரண மனிதன் தெய்வோபாசனையாற் பெறும் அற்ப சக்தியைக் கொண்டு எவ்வளவு திருப்தி அடைந்துவிட முடியும்? ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தி லுண்டு’ என்ற வாக்கியத்தின்படி தன்னைவிட உபாசனாபலம் பெற்றுள்ளவர்களைக் கண்டு இம்மனிதன் வெதும்புகின்றான். இன்னும் நிறைவேறாத தன் எண்ணற்ற இஷ்டங்களை நோக்கி ஏக்கமுடையவனாய் இருக்கின்றான்!

வாழ்வின் பெரும்பகுதியைத் தன் வயிற்றுப் பிழைப்புக்காக எத்தனையோவிதத் தொழில்களிற் செலவிடும் மனிதர்களுக்கு, தூக்கம் போக எஞ்சியுள்ள நேரமோ கொஞ்சமாகவே உள்ளதல்லவா? ஒவ்வொரு தினமும் இக்குறுகிய நேரத்திற்குள் பெருகிய அளவான எத்தனை தெய்வங்களைத்தான் ஒருவன் ஆராதிக்க முடியும்? கிழமைகளின் விசேஷத்தைப் பொருத்து, வெள்ளி-செவ்வாய்க் கிழமைகளில் லக்ஷ்மி ஸஹஸ்ர நாமம்-கணபதி ஹோமமும், திங்கள்-வியாழன் கிழமைகளில் சிவனை ஆராதிக்கும் விசேஷ பூஜைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோபாசனையும், சனிக்கிழமைகளில் நவக்கிரக ஆராதனையுங் கூடி வாரத்தின் ஆறு நாட்களின் ஏராளமான நேரத்தை எடுத்துக்கொண்டு விடுகின்றன! இந்த ஆறு நாட்களில் மற்றுமுள்ள பற்பல தெய்வங்களும் வழிபாடு செய்யப்பட வேண்டியே இருக்கின்றன. எஞ்சியுள்ள புதன் கிழமைகளிலோ சம்பவிக்கும் விசேஷ வழிபாடுகளோடு தினசரி முறைப்படி எல்லாத் தெய்வங்களும் ஆராதிக்கப்பட வேண்டுமல்லவா? இந்நிலையில் ஒருவன் தெய்வங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தினமும் ஆசைதீர ஆராதிப்பது எப்படி இயலும்?

மனமானது மாறிமாறி விரும்பும் பின்ன ருசி உடையதேனும், ஏதேனும் ஒன்றில் விசேஷ விருப்பம் கொண்டதாக அமைவதும் இயல்பேயன்றோ? அவ்வாறே நானா தெய்வ உபாசனைகளின் நடுவிலும் ஏதேனும் ஒரு நாமரூபத்தில் மட்டும் விசேஷப் பிரியம் இம்மனிதனுக்கு ஏற்படவே செய்கின்றது. தன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அவ்வொரு உபாசனா மூர்த்தியிடம் இயல்பாகவே அவன் நெடுநேரம் உள்ளமூன்றி, அன்பு கனிந்து வழிபடுகின்றான். இதனால் மற்ற நாம ரூப தெய்வ வழிபாடுகளில் தனக்கிருந்த சிரத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதையும் அவன் உணர்கின்றான். மேலும் அவன் தன் வீட்டில் வழிபடும் அந்த நானா தெய்வங்களும் நாட்டில் பற்பல க்ஷேத்திரங்களிலும் எழுந்தருளிய உள்ளனவன்றோ? அந்த ஒவ்வொரு க்ஷேத்திரத்திலுமுள்ள தெய்வங்களின் சேவையும் இவனுக்குத் தேவையாகவே தோன்றுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! வருடந்தோறும் அவ் வொவ்வொரு க்ஷேத்திரத்திலும் விசேஷ உற்சவாதிகள் பற்பல நடந்து வருவதால் எதைப் போய்ச் சேவிப்பது? எதை விடுவது! ஒன்றைத் தொட்டால் ஒன்று விட்டுப் போகின்றது!

இந்நிலையில் அவனது முன் வினைப்படி வாழ்வில் இடையிடையே ஏதேனும் சிரமங்களோ துன்பங்களோ சம்பவிக்கும்போது இம்மனிதன், ‘ஆஹா! நேரமின்மையினாலோ, சிரத்தைக் குறைவினாலோ, கவனக் குறைவினாலோ இன்னின்ன இதர நாம ரூபத் தெய்வங்களை நான் உபாசிக்கத் தவறிவிட்டதனாலேயே இப்படிப்பட்ட துன்பங்கள் எனக்கு வந்துவிட்டன!’ என்று நினைத்து வருந்துகின்றான். ஆனால், உண்மை அவ்வாறின்றி வேறுவிதமாகும். அதாவது, அவன் அறிந்தோ அறியாமலோ பற்பல முற்பிறவிகளிற் செய்த தீ வினைகளின் பலன்களைக் கொண்ட பிராரப்தப் பகுதியால் இந்த ஜன்மத்தில் இப்பொழுது அவனுக்குத் துன்பம் அனுபவிக்க நேர்ந்திருக்குமே தவிர, இப்பொழுது செய்யத் தவறிப்போன தெய்வாராதனைக்குத் தண்டனையாக அவை வந்தவையல்ல. இவன் இப்போது உபாசிக்கும் எந்தத் தெய்வமும் இவனது ஊழ் வலியை விலக்கவியலாது! விலக்குவதுமில்லை!!

மேற்கண்ட தெய்வோபாசனைகளின் நிமித்தம் தேகசுத்தி மனோசுத்திகளான பற்பல ஆசார ஒழுக்கங்களையும் பற்பல விரதானுஷ்டானங்களையும் தினசரி கடைப்பிடித்து வரவேண்டிய அவசியம் அவனுக்குத் தானாகவே ஏற்பட்டு விடுகின்றது. ஏனெனில், பூஜிப்போனது தேகமனச் சுத்தமும், பூஜா திரவியங்களிற் கவனிக்கப்பட வேண்டிய சுத்தமும் இல்லாமல் அனாசாரப் பழக்கமுடையவர்கள் நானா தெய்வோபாசனைகளை எப்படிச் செய்வது? இவ்வொழுக்கக் கடைப்பிடிப்பால் உதாசீனப் படுத்தப்பட்டு அவனிடமிருந்த பற்பல தீய பழக்க வழக்கங்களும் சோம்பல் போன்ற கேடுகளும் நீங்குவதோடு அவனது அநேக அற்ப ஆசைகளுங்கூட அவனை விட்டு விலகி விடுகின்றன. ஆசாரங்களை உண்மையாகக் கடைப்பிடிக்கும் விதத்தையும் அவற்றின் முடிவான மேன்மையையும் விளக்க ஸ்ரீ பகவான் ரமணர் ஒருமுறை கூறியதின்89 சாரம் ஸ்ரீ முருகனாரால் ‘குருவாசகக் கோவை’யின் 680-ஆவது பாடலாகக் கோக்கப்பட்டுள்ளது. அப்பாடலாவது:-

உறுத்த வுறுத்தமல வூனுடற்குத் தூய்மை

மறித்துமறித் தும்மலமே வாய்தல் – குறித்து

வெறுத்துடல வேட்கையற வீடற்கே நூல்வற்

புறுத்துவது தூய்மை யுடற்கு!

(இம் மல மாமிச சரீரத்தை எவ்வளவுதான் முயன்று சுத்தம் செய்தாலும் மீண்டும் மீண்டும் அது மலமயமாகவே நிரம்பி நிற்பதைக் கண்டு, சாதகனொருவன் இவ்வுடலின் மீதுள்ள அபிமானத்தைத் துறந்து விடட்டும் என்ற பெரு நோக்கத்தால்தான் சாஸ்திரங்கள் தேக சுத்தியாகும் ஆசாரங்களை வற்புறுத்துகின்றன). இவ்வாறு, நல்ல பரிசுத்தமான வாழ்வுமுறை வாய்க்கப்பெற்ற இம்மனிதன் (நம் மனிதன்) இறைவனைச் சார்ந்து நிற்கும் இயல்புடையவனாகின்றான். வீட்டிலும் நாட்டிலும் விளங்கும் இந் நானா தெய்வ ஆராதனைகளைப் பற்றியே, தூங்கவும் நேரமின்றி, நாள் முழுவதும் சிந்திப்பவனாய், ஆனால் தன் வாணாளில் அதற்கு வேண்டிய நேரமும், திறமையும், வாய்ப்பும் போதாமல் மனங் குழம்பியவனாய் இருக்கும் நம் மனிதன் மீண்டும் தன் ஆசிரியரிடமே (வேதத்தினிடம்) வருகிறான்!

‘சுவாமி, தங்கள் கருணையால், தங்கள் உபதேசப்படியே நானா தெய்வங்களையும் உபாசித்து வருகிறேன். ஆயினும், அவை ஒவ்வொன்றையும் என் மனமாரப் பூஜித்துத் திருப்தி செய்ய எனக்கு நேரமும் திறமையும் இல்லாமற் போகின்றது. அதனால் சிற்சில நாமரூப உபாசனைகள் விட்டுப் போகவே, என் வாழ்வில் அடிக்கடி சிரமங்களும் துன்பங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. எல்லாத் தெய்வங்களையும் சரியானபடி உபாசித்தாலன்றி என் மனோ பீஷ்டங்கள் யாவும் நிறைவேறாவன்றோ? இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய மனத்தனாய்த் தங்கள் துணையை நாடி வந்துள்ளேன். என் இஷ்டங்கள் எல்லாம் நிறைவேற இன்னும் எளியதும், சுலபமாய்ப் பூரண பலனளிப்பதுமான உபாயம் ஏதேனுமில்லையா?’ என்று ஆவலோடு கேட்கிறான் அம்மனிதன்!

‘உண்டு; ஆம், வழியிருக்கின்றது! இதைக் கேள். கடவுள் ஒருவரே. அவரே பற்பல காமியங்களையும் அருளவல்ல சக்தியுடைய பற்பல நாமரூப தெய்வங்களாக வழிபடப்படுகிறாரே தவிர, கடவுள் பலரல்லர். சரி; இதுவரை நீ அவரது எத்தனையோவித நாம ரூபங்களை விரும்பி வழிபட்டு வந்திருக்கிறாயல்லவா? இவை பலவற்றுள்ளும் எந்த ஒரு நாம ரூபத்தில் உனக்கு இயல்பாகவே அதிக அன்பும் ஈடுபாடும் உண்டாகியுள்ளது? உன் மனத்திற்கு மிகவும் இஷ்டமான தெய்வம் எது? சொல்!’ என்கிறார் ஆசிரியர்.

சிவ வடிவோ, விஷ்ணு வடிவோ, தசாவதாரங்களுள் ராம, கிருஷ்ண வடிவங்களோ, விநாயகரோ, முருகனோ அல்லது தேவியின் பற்பல நாம ரூபங்களுள் ஏதேனுமொன்றோ நம் ஒவ்வொருவரின் உள்ளத்திற்கும் இசைந்த தெய்வமாய் அமைவதுண்டல்லவா? மேலும் இந்துக்களல்லாத மற்ற மதத்தினருங்கூட, தத்தம் மதங்களிற் சிலாகிக்கப்படும் தெய்வம் ஒன்றை ஏதாவதொரு நாமரூப மனக் கற்பனையிற் போற்றுவதுண்டு. நம் வாசகர்களுக்கும் இவ்விதமே ஏதேனும் ஒரு தெய்வநாம ரூபம் மிகவும் விருப்பமாய் இருக்குமல்லவா? அது எதுவொன்றோ அதன் பெயரையே இம்மனிதன் தன் ஆசிரியரிடம் கூறுவதாக வாசகர்கள் வைத்துக் கொள்ளட்டும்.

சற்று யோசித்து நிதானித்துக்கொண்டு அம்மனிதன், இதுவரை தான் உபாசித்து வரும்போது எந்த ஒரு நாமரூபத் தெய்வம் தன் மனம் முழுவதையும் கொள்ளை கொண்டதாய், மற்ற தெய்வ உபாசனைகள் தவறிப் போவதைக்கூடத் தான் பொருட்படுத்த முடியாதபடி நெடுநேரம் பூஜிக்கத்தக்கதாய் இருந்து வந்ததோ அது ஸ்ரீ முருகன் ஒன்றே எனத் தெரிவிக்கின்றான்! விஷய விளக்கத்தின் சௌகரியத்தை முன்னிட்டு இவ்வத்தியாய ஆரம்பத்தில் வேதம் முழுவதையும் ‘ஆசிரியர்’ என்றும், மனித சமூகம் முழுவதையும் ‘நம் மனிதன்’ என்றும் பெயரிட்டுக் கொண்டதைப் போலவே, இங்கும் நம் வாசகர்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வங்கள் பலவற்றையும் ‘முருகன்’ என்ற ஓர் பெயரால் அழைத்து மேலே விளக்கத்தைத் தொடர்வோம்!

‘சுவாமி, சாக்ஷாத் சிவபிரானே சிசுவடிவான சௌமிய பால-மூர்த்தியும், சூரனை அழித்துச் சுரரைக் காத்த சுப்ரமண்யமும், வரங்களையருளும் வடிவேலழகனும், தந்தைக்குபதேசித்த கந்த ஸ்வாமியும், தமது அருட் கவர்ச்சியால் என் உள்ளத்தை அவரது திருவடிக்கே என்றும் கவர்ந்துள்ளவருமான குன்றிலாடும் குமார ஷண்முகனே என் சிந்தைக்கினித்த தெய்வமாயிருக்கிறார்!’ என்று உள்ளம் பொங்கி உடல் சிலிர்த்துக் கூறுகின்றான் அம்மனிதன்!

‘ஆம்; அவரே உன் இஷ்ட தெய்வமாகட்டும்! உன் இஷ்ட தெய்வமான முருகனே பரம்பொருள்; சிரேஷ்டமான ப்ரம்மம் (சு-பிரம்மண்யம்) ஒருவரேயான இந்த உன் இஷ்ட தெய்வமேதான் இத்தனைக் காலமாக உன் பூஜையை ஏற்றுக்கொண்டு உனக்குத் தேவியாகவும், சிவனாகவும், விஷ்ணுவாகவும், விநாயகராகவும், பற்பல காமியங்களையும் தரும் ஏனைய பற்பல நாம ரூப தேவ தேவியர்களாகவும் இருந்து அனுக்கிரகித்து வந்தவர்! நானா தெய்வ ஆராதனையில் உன் அன்பானது பற்பலப் பகுதிகளாகச் சிதறிப் போவதால் எந்த ஒரு தெய்வத்தினிடமும் நீ பூரண பக்தி செலுத்த முடியவில்லை. ஆனால் இப்போது, எல்லாத் தெய்வங்களின் வடிவிலும் தாமே இருந்து அவை மூலமாக இதுவரை உன்னை அனுக்கிரகித்து வந்தது உன் இஷ்ட தெய்வமான முருகனே என்று அறிந்துகொண்டாய் அல்லவா? ஆதலால் உன் உள்ளக் காதல் முழுவதையுந் திரட்டி உன் இஷ்ட தெய்வத்தின்மேல் மட்டுமே செலுத்துக! விக்கினங்களை நீக்குவதோ, கல்வியோ, புத்தியோ, பொன்னோ, பொருளோ, புத்திர பாக்கியமோ, இதுபோன்று இன்னும் எவையெவைகளையெல்லாம் நீ விரும்புவாயோ அவை யாவற்றையும் உன் முருகனிடமே கேள்! அவர் நீ விரும்பும் அனைத்தையும் தரும் கற்பகத் தரு ஆவார். இப்போது உன் உபாசனை சுலபமாகி விட்டதல்லவா? சிரமமின்றி இவ்விஷ்ட தெய்வ உபாசனையை உன் மனங்கொண்ட அளவு செய்து மகிழ்ந்து, எல்லாக் காமியங்களும் பெற்று இன்புற்றிருப்பாயாக’ என்று உபதேசித்தருள்கின்றார் ஆசிரியர்!

ஆசிரியரின் அறிவுரையைக் கேட்ட அம்மனிதனின் மனம் ஐயம் நீங்கிக் குழப்பமெல்லாம் அகன்று தெளிவுற்றது. இத்தனைக் காலமாக உள்ளத்தில் ஊக்கமின்றி (ஆனால், செய்யத் தவறினால் என்னாகுமோ என்ற பயத்தால் மாத்திரம்) நடத்திவந்த இதர நாம ரூப தெய்வ வழிபாடுகளை மேலும் இயற்றவேண்டிய சிரமத்தினின்று ஓர் விடுதலையும், தன் முழுமனத்தோடும் விரும்பி வழிபடும் தன் இஷ்ட தெய்வம் ஒன்றினாலேயே தன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற உறுதியான நம்பிக்கையும் தன் ஆசிரியரது வாக்காலேயே கிடைக்கப் பெற்றதால் உள்ளம் மகிழ்ந்தவனாய், அம்மனிதன் தன் ஆசிரியரை வணங்கி முடிவாக விடை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினான்.

பெருகிய சிரத்தையோடும் ஏகாக்கிரச் சித்தத்தோடும் தன் இஷ்ட தெய்வமாகிய ஒரே ஒரு கடவுளை மட்டும் உபாசித்து வரும் இம்மனிதன் இப்போது நம் பக்திப் பள்ளியில் மூன்றாம் வகுப்பிற் சேர்க்கப்பட்டவனாகின்றான். இப்பள்ளியில் கர்மானுஷ்டானங்களே முதல் வகுப்பு; நானா தெய்வோபாசனையே இரண்டாம் வகுப்பு; இஷ்ட தெய்வமான ஏகதெய்வ வழிபாடே மூன்றாம் வகுப்பு. இம் மூன்றாம் வகுப்பில் ஆற்றப்படும் இஷ்டதெய்வ வழிபாடானது (a) விஷய பக்தி என்றும் (b) தெய்வபக்தி என்றும் இரு வகைப்படும். நம் மனிதனோ இன்னும் விஷய பக்தியையே உடையவனாயிருப்பதால் மூன்றாம் வகுப்பின் (a) பிரிவிலேயே இருப்பவனாகிறான்.

சோறு வேண்டினுந் துகிலணி முதலாஞ்

சுகங்கள் வேண்டினுஞ் சுகமலாற் சுகமாம்

வேறு வேண்டினு நினையடைந் தன்றி

மேவொ ணாதெனு மேலவ ருரைக்கே

மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்

வள்ள லேயுன்றன் மனக்குறிப் பறியேன்

சாறு வேண்டிய பொழில்வட லரசே

சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

(ஸ்ரீ இராமலிங்க வள்ளலார்)

என்றபடி எண்ணற்ற தன் காமியங்கள் அனைத்தையும் தன் இஷ்ட தெய்வத்தினிடம் மட்டுமே கேட்டு இவன் பெறுகிறான். எனினும், இங்கு அவன் பக்தி செய்வது அவன் விரும்பிய உலக விஷயங்களையே! அவனது இஷ்ட தெய்வமோ அதற்கு உதவி செய்வதற்கு (சகாயி) மட்டுமே! அவ்வளவுதான்! ஆயினும் இதுவரை பற்பல தெய்வங்களிடம் பன்முகப்பட்டு விரிந்து மெலிந்த அவனது சிந்தை, தற்போது ஒருமுகப்பட்டுக் குவிந்து ஒரே தெய்வத்தின் மேலேயே நிறுத்தப்படுவதால் அவனது இந்த ஏக தெய்வோபாசனை முன்னிலும் பன்மடங்கு சக்தி வாய்ந்ததாகின்றது.

‘மனம் அளவிறந்த நினைவுகளாய் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதி பலவீனமாய்ப் போகின்றது. நினைவுகள் அடங்க அடங்க ஏகாக்கிரத் தன்மையடைந்து, அதனால் மனம் பலத்தையடைகின்றது’ என்று ஸ்ரீ பகவான் ‘நான் யார்?’ என்ற நூலிற் கூறுகின்றார்.

பல நினைவுகளாகச் சிதறியோடும் மனத்தை ஒன்றாய்த் திரட்டி ஒருமுகமாய் நிறுத்தி வைப்பதே யோகத்தின் முக்கிய நோக்கமாகும். ஒருவன் விழிப்புக் காலத்தில் வாழ்க்கையின் நிமித்தம் எண்ணும் பலகோடி எண்ணங்களும் ஓய்ந்து மனம் குவிந்து வருவதற்கு பக்தி நெறியின் ஓர் சாதனமாக இறை வழிபாடு அமைகின்றது. ‘நம் வாழ்வில் எல்லாம் இறைவன் பார்த்துக் கவனித்துக் கொள்வார்! நாம் கவலைப்பட்டு எதையும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை!’ என்றவாறு தெய்வத்திடம் நம்பிக்கை வளர்ந்துகொண்டே போவதால் ஆயிரக்கணக்கான அனாவசிய எண்ணங்கள் மனிதனை விட்டு அகல்கின்றன. இது மட்டும் போதாது. இவ்வாறு மனத்தைக் குவிக்கும் மார்க்கமாகிய பக்தி வழிபாட்டிலும், தெய்வத்தின் வெவ்வேறு நாம ரூபங்களைப் பலமுறை மாற்றி மாற்றிச் சிந்திப்பதால் மனம் விரிந்து சிதறி அலைக்கழிக்கப்பட்டு விடும். அவ்வாறாகாமல் ஏதேனும் ஒரு நாம ரூபத்தில் மட்டும் ஒன்றிநிற்க வைப்பதே பக்தி யோகத்தின் சிறந்த அமிசமாகும். அப்படியின்றி,

ராமா கிருஷ்ணா நமோ ரஹீம்

லம்போ தராஸ்ரீ ஷண்முகாய

பாமா மேரீ புத்தா சிவா

பார்வதி அல்லா ஏசுநாதா!’

என்றெல்லாம் சர்வமத சமரச, சர்வ தெய்வ நாம ரூப சமரச, ஒரே பொதுப் பஜனையாகத் தோத்திர கோஷங்களை உண்டாக்கி, எல்லோரையும் அதைப் பஜிக்கவும் ஜெபிக்கவும் தூண்டுவது பக்தி மார்க்கத்தில் ஓர் சாதனையாக அமையாது. ஏனெனில், இவ்வாறு செய்வதால் மனம் பலவாறு அலைக்கழிக்கப்படுமே தவிர, குவிந்து ஏகாக்கிரமடையாது. நல்ல விவேகமில்லாமல், மதவெறி கொண்டு, மத பேதத்தைத் தூண்டி, மத போதனை செய்யக் கிளம்பிச் சண்டையிட்டுக் கொண்டு, தம் பொழுதையும் சக்தியையும் வீணாக்கிப் பாழ்படும் பாமரர்களுக்கு, ‘பற்பல மதங்களில் பற்பல நாம ரூபங்களில் வழிபடப்படும் கடவுள் ஒருவரே’ என்ற அறிவைப் புகட்ட இத்தகைய சர்வமத பஜனைக் கீதங்கள் சமூக சீர்திருத்தக்காரர்களின் கையில் ஒரு கருவியாக மட்டும் ஓரளவு உபயோகப்படலாமே தவிர, கடவுளை அடைய முயலும் சாதகன் ஒருவனுக்கு இவை ஓர் சாதனமாக எவ்விதத்திலும் ஆகவேயாகா! இதனால் எந்த ஒரு தெய்வத்தின் நாம ரூபத்திலும் மனம் குவிந்து ஈடுபடாது. எல்லாத் தெய்வம் ஒன்றே என்று அறிந்தோன் ஒருவனின் அடையாளம் என்ன? எல்லாவற்றினிடமும் ஓடி அலைவதல்ல. ‘ஒருவனைப்பற்றி ஓரகத் திரு’த்தலே. அதாவது, ஏதேனும் ஒரே தெய்வத்தினிடம் மனம் ஒன்றி நிற்பதே. பற்பல மத தெய்வ நாம ரூபங்களைக் கதம்பமாக்கிப் பாடி, பற்பலவற்றின்பால் மனத்தால் ஓடிக்கொண்டிருப்பது ‘ஒன்றே கடவுள்’ என்ற தத்துவத்தில் ஒருவனுக்கு இன்னும் போதிய நம்பிக்கையும் திடமும் உதிக்கவில்லை என்பதையே காட்டிக் கொடுக்கின்றதன்றோ?

ஆன்மாவின் பிரதி பிம்ப வடிவான மனம், தன் சுத்த நிலையில் அபரிமிதமானதோர் அதிசய சக்தியாகும். அது எதை, எப்படி, தீவிரமாக நினைக்கின்றதோ அதை அப்படியே உண்டாக்கித் தூலமாய்க் காணும் பேராற்றலுடையது. அதனால்தான் உண்மையில் பரம்பொருள் நாம ரூபமற்றதேயாயினும் ஒருவன் தன் இஷ்ட தெய்வமாக மனத்தால் எந்த நாமரூபத்தை அதற்கு இட்டு வழிபட்டாலும் நாமரூபமற்ற அப்பரம்பொருளை அந்தந்த நாமரூபத்தில் தன் கண்களால் அவன் காண்பதற்கு அது ஒரு வழியாக அமைகின்றது. இதையே ஸ்ரீ பகவான் உள்ளது நாற்பதின் 8-ஆவது பாடலில்,

எப்பெயரிட் டெவ்வுருவில் ஏத்தினும்ஆர் பேர்உருவில்

அப்பொருளைக் காண்வழியது...

என்கிறார். எனவே, நம் மனிதனின் பக்தி காமிய விஷய பக்தியாயினும், மனத்தின் தீவிர ஈடுபாட்டுடன் கூடிய வழிபாட்டால் அவனது காமியங்கள் நிறைவேறுவதோடு அவன் அழைக்கும்போதெல்லாம் அவனது இஷ்ட தெய்வமான முருகனை அவன் தரிசிக்கவும் முடிகிறது. ‘ஒருவனுக்கு உண்மையான பக்தியும் சிரத்தையும் இருக்குமானால், அசேதனக் கல்லிலுங்கூட சேதன ஆண்டவனைக் கண்டு அனுபவிக்க இயலும்’ என்பது ஸ்ரீ ராமகிருஷ்ணரது அருள்வாக்கன்றோ? இவ்வனுபந்தத்தின் முதல் அத்தியாயத்தில், பக்கம் 165-ல் ‘புறத்தே காணப்படுவன யாவும் உண்மையில் அகத்தே யுள்ளனவே; வேறல்ல’ என்று விளக்கிய தத்துவத்தை இங்கு நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அரசன் உள்பட அனைவரும் காண அருணகிரிநாதர் ஆறுமுகனை அழைத்து ஓர் கம்பத்தில் எழுந்தருளச் செய்ததும், பாலறாவாயரான ஞானசம்பந்தப் பெருந்தகை தமது மூன்றாம் பிராயத்திலேயே ‘அம்மையப்பா’ என்றழைத்துப் பார்வதி சமேதராய்ப் பரமசிவனைத் தரிசித்து ஞானப் பாலுண்டதும், நெல், பொன், மனை, தூது, ஆள் முதலிய சகல தேவைகளுக்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபிரானை வேண்டியழைத்துப் பெற்று வாழ்ந்ததும், பால வயதிலிருந்தே நாம தேவர் பண்டரீபுரத்து விட்டல் பிரபுவுடன் உண்டு உடுத்தி, விளையாடி மகிழ்ந்திருந்ததும், ஸ்ரீ ராமகிருஷ்ணர் அன்னை காளியுடன் தாயுஞ் சேயுமாய் அளவளாவி வாழ்ந்திருந்ததும்90 , இதுபோன்றே இன்னும் எத்தனையோ கணக்கில்லாத பெரியோர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் நம் மனிதன் தன் இஷ்ட தெய்வமான முருகனைக் காண்பது போல பரம்பொருளைப் பல்வேறு நாம ரூபங்களையுடைய சகுண தெய்வங்களாகத் தனது பக்தியால் ஊனக்கண் கொண்டே ஒருவன் கண்டு அனுபவிக்க இயலும் என்பதற்குத் தக்க சான்றுகளாய் விளங்குகின்றனவன்றோ?

தான் உபாசிக்கும் இஷ்ட தெய்வ முருகனை அழைக்கும் போதெல்லாம் நேரில் தரிசிக்கப் பெறுவதால் நம் மனிதன் தன் வாழ்க்கையில் விரும்பும் எப்பொருளையும் அத்தெய்வத்தினிடமே வேண்டிப் பெற்றுக்கொள்ளத் தலைப்படுகின்றான். இதில் ஆச்சரியமோ அசாத்தியமோ ஒன்றுமில்லை. ஏனெனில், மனிதனானவன் அற்பமும் அசக்தனும் அசத்தியமுமான ஓர் அகந்தையே. இப்படிப்பட்ட அகந்தை (மனிதன்) தன் போலவேயுள்ள மற்றொரு மனிதனுக்கு உதவுவதும் உதவி பெறுவதுமாக இருப்பதை வாழ்வில் தினம் நாம் காண்கிறோமல்லவா? இது உண்மைபோல் அனுபவிக்கப் படும்போது இம்மனிதனும் எல்லாம் வல்லவரும் சத்திய வஸ்துவுமான இறைவனிடம் முறையிட்டுத் தன் குறைகள் தீர்ந்து இஷ்டா பூர்த்தி பெறுகின்றான் என்ற உண்மையில் ஐயுறுவதற்கோ ஆச்சரியப்படுவதற்கோ என்ன இருக்கிறது!

அற்ப வகந்தை அதிலும் அசத்தசக்தம்

உற்பவித் தோயும் உபாதிஇதன் – தற்பலத்துச்

சாதனையே யீயுமாம்! தண்ணருளின் பேராற்றல்

ஏதுமிலை யாம்என்னே ஈது!

(சாதனை சாரம் 20)

பொய்ம்மனிதர் பொய்யுதவி பொய்ம்மனிதர்க் காற்றுவதை

மெய்யா யனுபவிக்கும் மேதினியில் – மெய்யருளோய்

பொய்யகந்தை போக்கிப் புரத்தலிய லாதோநீ?

ஐய(ம்)வியப் பென்னுண் டதில்?

(சாதனை சாரம் 21)

மனிதர்தமக் குற்றதுயர் வாயுரையால் மற்றோர்

மனிதரிடங் கூறுங்கால் வல்ல – மனிதரால்

மாற்றப்பட் டஃது மகிழ்வதிலை யோவுன்னின்

ஏற்றவல் லாளர் எவர்?

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 929)

எப்போது தன் கற்பனா சக்தியால் சச்சிதானந்த பிரம்மத்தினின்றும் தான் வேறானதோர் வியக்தி என்று ஜீவன் தன்னை முதலில் கருதிக்கொள்ள ஆரம்பித்தானோ (இவ்வனுபந்தத்தின் முன் அத்தியாயத்தில் பக்கங்கள் 167-168-ல் கூறியபடி ‘உலகு-உயிர்-இறை’ என்ற முப்பொருள்களாகத் தன்னையே கற்பித்துக் காண ஆரம்பித்தானோ) அக்கணத்திலிருந்தே அவனுக்கு வேறு போல் காணப்படும் இறைவன் எத்தனையோ அருள் வழிகளில் அச்சீவனுடைய அறியாமையை (கற்பனையை) நீக்கி அவனை மீண்டும் இழுத்து மெய்ஞ்ஞான வஸ்துவாம் தன்னுடன் ஏகமாய் அணைத்துக்கொள்ள தன் அருட்கரங்களை நீட்டியவண்ணமே இருந்து வருகின்றான் (அருள்பாலிக்க ஆரம்பித்து விடுகின்றான்) எனக் கொள்க. ஆதலின், அவ்வருளின் வண்மையால் இம்மனிதன் ஆண்டவனைத் தன் இஷ்ட தெய்வமான முருகன் வடிவிற் கண்டு, பேசி, காமியங்கள் நிறைவேறப்பெற்று வாழ்ந்து வருகின்றான். ஆனால், இம்மனிதன் ஆவலோடு அழைக்கும் போதெல்லாம் ஆறுமுகன் வந்து தோன்றுகின்றானாயினும், இவனது எல்லா அபீஷ்டங்களையுமே நிறைவேற்றித் தந்துவிடுவதில்லை! ஏனெனில், தனக்கு உண்மையான நன்மை எது, தீமை எது என்றறியும் விவேகம் இம்மனிதனுக்கு இல்லையல்லவா? மேலும், ‘என் இஷ்டமெல்லாம் நிறைவேற்ற என் ஆண்டவன் இருக்கின்றான்’ என்றெண்ணி இறுமாப்பால் இவனது அகந்தை முதிர்ந்து விடாமல் அவ்வப்போது இவனைத் தடுத்தாட்கொண்டு பாதுகாக்கவும் வேண்டுமல்லவா? அதனால் இம்மனிதனின் சிற்சில கோரிக்கைகளைத் தராமலும், தரும் சிலவற்றால் இவன் துன்பமே அனுபவிக்கும் படியுங்கூட இறைவன் தனது அருள் லீலைகளை (திருவிளையாடல்களை) இம்மனிதனுடன் நடத்தி வருகின்றான்! விரும்பியதெல்லாம் கேட்பதும், கேட்டதெல்லாம் கொடுத்தருள்வதுமான நிகழ்ச்சிகளுக்கு சுந்தரமூர்த்தி சுவாமிகளது வாழ்வில் நடந்த பற்பல சிவானுக்கிரக லீலைகள் உதாரணங்களாகின்றன. நாமதேவருடன் விட்டல் பிரபு சொக்கட்டான் ஆடியதும், சேர்ந்தே திருவமுது பண்ணியதும் இதன் பாற்படும். ஆயினும் தன் பக்தன் வேண்டியதை மறுத்து இறைவன் அறிவு புகட்டும் திருவிளையாடல்களுக்கும் இப்பெரியோர்களது சரித்திரங்களிலேயே பல உதாரணங்கள் உண்டென்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது!

உதாரணமாக, சங்கிலி நாச்சியாரை மணம் முடிப்பதற்காக சுந்தரர் ஆண்டவனை ஆலயம் விட்டுச் சிறிது நீங்கி அருகிருக்கும் வன்னித் தருநிழலடையுமாறு பிரார்த்தித்தார். இறைவன் இவ்வேண்டுகோளுக்கு இணங்கிய விதமானது சுந்தரர் தம் இரு கண்களையும் இழப்பதற்கே காரணமாய் முடிந்தது! உழவாரத் திருப்பணி மேற்கொண்டு இறைவனுக்கு ஆக்கையாலும் தொண்டாற்றியவர் அப்பர். இத்திருமேனித் தவத்தில் திருஞான சம்பந்தரையும் விஞ்சி நின்ற அப்பரின் சிறப்பை விளக்கவேண்டிச் சிவபிரான் செய்த திருவிளையாடல் இங்கு மற்றோர் உதாரணமாகும். அப்பருக்கும் சம்பந்தருக்கும் ஒரேவிதமான இரு பொற்காசுகளை இறைவன் அளிக்கின்றார். ஆயினும், அப்பரின் கரத்துற்ற பொற்காசே மாற்றிற் சிறந்து மதிப்போங்கி நின்றது! நாமதேவரை ‘இது சுடாத பச்சைமண் சட்டி’ என்று பெரியோர் பலர் நடுவில் கோராக்கும்பர் கூறிய இழிவுரை பொறுக்காமல், விட்டல் பிரபுவிடம் முறையிட்டார் நாமதேவர். ஆனால், அவரது இஷ்ட தெய்வமான விட்டல் பிரபுவும் சேர்ந்து கொண்டு, ‘ஆமாம்; நீ சுடப்படாத பச்சை மண்ணே’ என்று தீர்ப்புக் கூறியதும் இதற்கு மற்றோர் உதாரணமாகும்! பக்தர்களின் வேண்டுகோட்படி பரமன் இசையாமைக்கு இன்னும் பற்பல உதாரண நிகழ்ச்சிகளும் உண்டு.

விஷய பக்தி செய்து காமிய சித்தனாய் வாழும் இம்மனிதனின் நிலையை அடையும் மக்களிற் பலர் மேன்மேலும் முன்னேறாதவர்களாய், இங்கு நல்வழி தவறி, பல பிறவிகளை வியர்த்தமாக்குவதும் உண்டு. ‘நான் கடவுளைக் கண்டு விட்டேன்! பார்; எனக்குத் தேவி பிரத்யட்சம்! ... எனக்கு ஸ்ரீ சீதாராமனே எப்போதும் பிரசன்னமாகிறார்! ... நான் கூப்பிட்டவுடனேயே குகன் வருகிறான்; குறைகள் தீர்ப்பான்! ...உலகில் எவர்க்கும் என்னால் எந்த அனுக்கிரகமும் என் இஷ்ட தெய்வத்தின் மூலம், நான் செய்ய முடியும்!’ என்றவாறு கூவி அகங்காரம் மூண்டு, மக்களைக் கூவிக் கும்பலைச் சேர்த்துக் குங்கும-விபூதி கொடுத்துக் கொண்டு திரியக் கிளம்பிவிடுவது பலருக்கும் இங்கு நேரும் பெருவிபத்தாகும். இதுவே முழு மடமையும் பெருந்தவறுமாம்! ‘தனக்கு இரங்கி அருள்புரியுங் கடவுள் தரணியர் பிறர்க்கும் தாமே அருள் புரிவார்’ என்று அறியும் அளவிற்காவது ஒருவனுக்கு அகங்காரம் குறைந்து அடக்கம் தலைப்படுமாயின், மேற்காட்டியது போன்ற வீழ்ச்சி அச்சாதகனின் வாழ்வில் நேரவே நேராது. அடங்காமல் ஆடக் கிளம்பும் அகந்தை இவ்வாறே சித்தி மோகத்திற் சிக்கிப் புகழெனும் மாயப் புலைச்சி வேசிக்கு அடிமையாகிப் பிறவிப் பயனையிழந்து பின்னமடைகின்றது! அந்தோ, பரிதாபம்! இதையே ஸ்ரீ ரமண பகவான், உள்ளது நாற்பது-அனுபந்தம் 37-ஆவது பாடலால்,

எல்லா உலகும் துரும்பா யினும்மறைகள்

எல்லாமே கைக்குள் இருந்தாலும் – பொல்லாப்

புகழ்ச்சியாம் வேசிவசம் புக்கார் அடிமை

அகலவிடல் அம்மா! அரிது!!

என்று கூறி எச்சரிக்கின்றார்.

இப்படிப்பட்ட ஒருவனின் தெய்வ தரிசனத்தைக் கேள்விப்பட்டதும் பிற மனிதர்கள் சந்தேகமின்றி இவனை, ‘அவர் கடவுளைக் கண்ட மகான்!’ என்று நம்பிக்கொண்டு கூட்டமிடுகின்றனர். ஆயினும் இவனது உண்மை நிலை என்ன? இவனுக்கு - மூன்றாம் வகுப்பின் (b) பிரிவை அடையத் தகுந்த தெய்வ பக்திகூட இன்னும் உண்டாகவில்லை அல்லவா? விஷயபக்தியே கொண்டவனாய், பேருக்கும் புகழுக்கும் ஆசையும் அடிமையுமாகி இவன் இன்னும் மூன்றாம் வகுப்பின் (a) பிரிவிலேயே இருந்து வருகின்றான். இந்த ‘விஷய பக்தி மகானை’ச் சுற்றி வெகுஜனக் கூட்டம் கூடுகின்றது! ஏன்தான் மக்கள் கூட்டமிட மாட்டார்கள்? அவர்களும் ‘விஷய பக்தித் தொண்டர்’களாய், உலகப் பொருள்களின் ஆசைக்கு அடிமைகளாகி ஆண்டவனின் சகாயத்தைத் தேடி நிற்கும் இரண்டாம் வகுப்பைச் சேர்ந்தவர்களேயன்றோ? சர்வ கலாசாலைப் பட்டதாரிகளும், சமூகத்தில் உயர் பதவி வகிப்பவர்களும், செல்வச் சீமான்களுங்கூட இப்படிக் கூடும் பக்த கோடிகளுள் பலராவர்! உள்ளத்தில் உண்மையான தெய்வ பக்திகூட (மூன்றாம் வகுப்பின் (b) பிரிவிற்குரிய தகுதிகூட) தலையெடுக்கப் பெறாத இம்மகானும் குருடனுக்குக் குருடன் வழிகாட்டுவது போல, அம்மக்களுக்கு வழிகாட்டி நடத்தவும், அனுக்கிரகிக்கவும் ஆரம்பித்து விடுகின்றான்!.

உய்ந்தான்றான் மன்னுயிர்க ளுய்விப்பா னன்னியனோ

அந்தனுக்கந் தன்றுணையா மாறு.

(குருவாசகக் கோவை 15)

இத்தகைய போலிகளை விட்டு, இனி நம் மனிதனை நோக்குவோம்.

தன் இஷ்ட தெய்வமான ஷண்முகப் பெருமானுடன் இணக்கம் பெற்றவனாய் வாழ்கின்றான் நம் மனிதன். ஆனால், இன்னும் இவன் விரும்புவது உலகப் பொருள்களையேயன்றோ? எனவே, அவனது பக்தி இன்னும் விஷய பக்தியே. அவனது இஷ்ட தெய்வம் வெறும் சகாயியே! இந்நிலையில் பல்லாயிரம் பிறவிகள்கூட வந்து போய்க் கொண்டிருக்கும்! எனினும், பரம்பொருளாகிய ஸத் வஸ்துவே இஷ்ட தெய்வமாய் இப்படி முருகனின் நாம ரூபங்கொண்டு இவனுடன் அருள் இணக்கம் புரிந்து வருவதால், இவ்விணக்கமானது அடைதற்கரிய மிக உயர்ந்ததோர் சற் சங்கமாக91 அமைகின்றது.

சத்திணக் கத்தினாற் சார்பகலுஞ் சார்பகலச்

சித்தத்தின் சார்பு சிதையுமே...

(உள்ளது நாற்பது-அனுபந்தம் 1)

சற்சங்கத்தைவிடத் தீவிரமானதொரு சாதனமோ, உயிரை உய்விக்கும் உபாயமோ வேறு யாது உண்டு? அதனால் இம்மனிதன் தன் இஷ்ட தெய்வமான முருகனின் சாந்நித்திய சகாயத்தால் தனக்குத் தெரியாமலேயே மன அழுக்கு நீங்கப்பெற்றுக் கிரமமாகச் சித்த சுத்தி பெற்று வருகின்றான். இது வரையிலும் இவனது ஆசிரியராய் நின்று வழிகாட்டி நடத்தி வந்த வேதங்களே இப்போது இவனது இஷ்ட தெய்வமாய் இவன்முன் எழுந்தருளி வந்து, இவன் கேட்கும் காமியங்களைச் சிலசமயம் அருளியும், சிலசமயம் மறுத்தும் பற்பல விதமாக, பற்பல பிறவிகளூடே இவனைப் பக்குவப்படுத்தி வருகின்றது. இப்போது நம் மனிதன் தக்க பக்குவநிலை பெற்றுவிட்டான் என்பதை இவனது கீழ்க்காணும் மன மாற்றத்தால் நாம் அறியலாம். இம்மனிதன் தற்போது சிந்திக்கின்றான்:

‘ஆ! என்ன ஆச்சரியம்! என் இறைவனாகிய ஆறுமுகன் நான் எப்போது அழைத்தாலும் எனக்கு இரங்கிவந்து தரிசனம் தருகின்றார். எதைக் கேட்டாலும் தந்தருள்கின்றார். என்மீது இத்தகைய கருணையையும் அன்பையும் என்னைப் பெற்று வளர்த்த என் தாய் தந்தையர் கூடக் காண்பித்ததில்லையே! என்மேல் இவ்வளவு அன்புடைய ஒருவரும் உலகில் உண்டோ? நான் இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்! ஆ... கைம்மாறா? கடவுளுக்கு என்னால் ஆக வேண்டியது யாதொன்றுமில்லையே! காரணமில்லாமலும், கைம்மாறு வேண்டாமலும், கடமைப்பாடாக இல்லாமலும் இவ்வளவு கருணை பெய்யும் இறைவனிடம் நான் எவ்வளவு பக்தி செய்கிறேன் என்று பார்த்தாலோ, அது மிகவும் வெட்கக்கேடான விஷயமாக இருக்கின்றதே! ஆண்டவனுக்கோ என்மேல் அளவற்ற அன்பு; எனக்கோ உலகப் பொருள்களின் மேல்தான் பிரியம்! இதுவா நான் இறைவனுக்காற்றும் நன்றி? அவர் என்மீது கொள்ளும் அருளன்பில் ஆயிரத்தில் ஒரு கூறுகூட நான் அவரிடம் கொள்ளாமல், என் சுகத்திற்காக உலகப் பொருள்களையேயன்றோ அவரிடம் கேட்டுத் துன்புறுத்துகிறேன்! இதுவா என் இஷ்டதெய்வ பக்தி!! சீ, சீ! இது என் விஷய பக்தியே! தவிர, இது தெய்வ பக்தியே அல்ல!! அவரருளால் உயிர்த்திருக்கும் அற்ப ஜீவன் நான்; நான் மூச்சு விடுவது அவரருளாலேயே; என்னிடம் உள்ளவை யாவும் அவர் தந்த பொருள்; என் உடல்நலம் அவராற் காக்கப்படுகின்றது; என் புத்தி அவரருளால் இயங்குகின்றது; என் மதியூகமும் அவர் தந்ததே! இவற்றைக் கொண்டு பூஜிக்கும்போது, ‘இப்பூஜை நான் செய்தது; இப்பூஜா பலன் எனக்கு வேண்டும்’ என்று கேட்பது என்ன மடமைச் செயல்! வெறும் ஏமாற்று வியாபாரமாகவன்றோ இருக்கின்றது! என்ன கேவலமான தன்மையன் யான்!

‘இன்னின்ன காமியங்கள் எனக்குத் தேவை என்று நான் அறிந்து அவரிடம் வேண்டுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, அவைகள் எனக்குத் தேவையுள்ளனவாக என் முருகப் பெருமான் அறிந்து கொள்வதோடு மட்டுமன்றி நான் அவற்றை விரும்ப ஆரம்பிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே, அவை எனக்குக் கிட்டவேண்டிய காலத்திற் கிடைக்கும்படி முன்கூட்டியே தயார் செய்து வந்திருக்கின்றார் என்பதை நான், வர வர இப்போதுதான் நன்கு உணர்கின்றேன். நாம் காமியங்களைப் பிரார்த்திப்பதற்கு விருப்பங் கொள்வதற்கு முன்பே என்னினும் என் பொருட்டாய்க் கவலை கொண்டு நிற்கும் அருளாளன் அவர் என்றல்லவோ ஆகின்றது. இத்தனைப் பொறுப்புடனே, என்றும் என்மேல் விருப்புடனே, உள்ள சத்திய இறைவனையே நான் விரும்பாமல், என் அற்ப வாழ்வின் தேவைகளையே அல்லும் பகலும் அவரிடம் கேட்டுப் பெறுவது எவ்வளவு அறியாமைச் செயல்! அவர் எல்லாம் அறிந்தவர் ஆவதால், என்று எது எனக்குத் தேவை என்பதை என்னைவிட நன்கறிந்திருக்கின்றார்! அவர் எல்லாம் வல்லவர் ஆவதால், என்னால் எய்த முடியாதனவெல்லாம் எய்தவைத்து அருள்கின்றார். அவர் எல்லோரையும் விட என்மேல் அதி கருணையுடையவர் ஆவதால்தான் இவ்வாறு அறிந்து ஆற்றி வருகின்றார்.

எல்லாஞ் செயவல்லா யெல்லா மறிந்தென்மே

லெல்லா ரினுநீ யிரக்கமுளா – யல்லவோ?

ஆதலினாற் றானா னவனியர்பின் கிஞ்சிற்றும்

போதலிலேன்; நீயே புர.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 645)

எல்லா மறிவாய்மற் றெல்லாஞ் செயவல்லா

யெல்லா ரினுநீ யிரக்கமுளாய் – பல்லாற்று

முன்னிடமே கூறி யுளமங்க லாய்த்தயரு

மென்னிடமித் தாமதமு மேன்.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 766)

எனவே, இனி நான் எதைக் கேட்பது? ஏன் கேட்பது? அப்படிக் கேட்பதால் எல்லாம் அறிந்த அவரை, என் தேவைகளை அறியாதவராக்குகின்றேன்; என் குறை தீரவில்லையே என்று முறையிடுவதால் எல்லாம்வல்ல அவரை ஒன்றும் இயலாதவராக்குகின்றேன்; என் அற்ப பூஜைக்குப் பலனைக் கேட்பதால் அவரது அவ்வியாஜ கருணையை விலைக்கு வாங்கும் வியாபாரப் பொருளாக்கி, அவரை கருணையற்றவராக்கி அவமதிக்கின்றேன்! இவ்வாறு நான் என் இஷ்ட தெய்வத்தினிடம் செய்யும் காமியப் பிரார்த்தனையும் பூஜையும் ஆண்டவனது இம் முப்பெருஞ் சிறப்புக்களைப் போற்றுவதல்ல; தூற்றுவதேயாகிறது! அவருக்கு உண்மையில் முப்பெரும் இழிவைச் சுமத்துவதேயாகின்றது! இதுவா நான் செய்யும் கைம்மாறு? இதுவா என் தெய்வ பக்தி? அந்தோ! எத்தனைக் கேவலம்! என் சிறுமையின் சிறப்புதான் என்னே! சீ, சீ; இனி ஒருபோதும் எதையும் அவரிடம் கேளேன்.

நான்கேட்டுப் பெற்றவிக லாபமெலாம் போதுமவை

யான்மாப ராதமா யாயினவே! – ஏன்கேட்டேன்?

அந்தோ! இனியேனும் அவ்விதங்கேட் பானெழுச்சி

யுந்தாம லுன்கீ ழொடுக்கு.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 733)

உன்னை யகன்றிவ் வுடலுலகைக் கூடியுழன்

றென்னையோ யான்பெற்ற வின்பங்கள்! – என்னைநான்

ஏமாற்றிக் கொள்ளு மிதுவோ வறிவுடைமை?

நீமாற்றித் தாவிந் நிலை.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 739)

என்னை அன்புக் கரங்களால் அணைத்து வளர்க்கும் அவரைத் தவிர அயற்பொருள் எதுவும் இனி அவர்பாற் கேளேன். எனக்கு வேண்டியது அவரே தவிர, அவர் மூலம் பெறும் பொருள் ஏழுலகிலுள்ள எதுவேயாயினும் இனி வேண்டேன். இன்று முதல் என் வாழ்வின் ஆவற் பெரும் பொருள் என் ஆண்டவன் ஒருவரே. என் முடிவை, இதோ, அவரிடமே தெரிவித்து, இத்தனைக் காலமாக அவருக்கு நான் இழைத்த அவமதிப்புக்கு மன்னிப்புக் கேட்பேன்!!’ என்று எழுந்து விரைந்து சென்று, தன் இஷ்ட தெய்வ முருகன் சந்நிதியை அடைந்து ‘என் உயிர் இறையே’ என்று அழைக்கின்றான் நம் மனிதன்!

மழலைப் பருவ மதலையொன்று தன் மாதா தனக்களித்த உணவை எடுத்துத் தன் தாயின் வாயிலேயே ஊட்டுகின்றது! இச்செயல் தாயிடம் அச்சேய்க்குள்ள அன்பையாவது காட்டுகின்றது. ஆனால், இத்தனைக் காலமாக இம்மனிதன் செய்துவந்த இஷ்டதெய்வ உபாசனை, தாய் அளித்ததைத் தாய்க்கே ஊட்டும் குழந்தைச் செயலைப் போன்றே இருந்து வந்ததாயினும், அது அவ்விஷ்ட தெய்வத்தின்மேல் அவனுக்கிருந்த அன்பால் நடைபெற்றதல்ல; உலகப் பொருள்களின் மேல் இருந்த ஆசையால் கடவுளுக்குக் கொடுக்கப்பட்ட கையுறையேயாயிற்று! அல்லவா? இம்மனிதன் இதுகாறும் செய்துவந்த பூஜையெல்லாம் வெல்லப் பிள்ளையாருக்கு அவரது விரலையே பிட்டு நிவேதித்த கதையே92யாயிற்று! பெற்றோரின் அளவற்ற அன்பை அறிய முடியாத சிறு குழந்தைப் பருவத்தில் ஒருவன், ‘இதைக் கொடு; அதைக் கொடு’ என்று பெற்றோரிடம், கேட்டுக்கேட்டுத் தொந்தரவு கொடுக்கிறான். ஆனால் வயது முதிர்ந்து அறிவு வந்தபோது, அவன் தன் பெற்றோர் தனக்கு வேண்டியதெல்லாம் தாமாகவே தருகிறார்கள் என்பதையும், மேலும், தன் எதிர்கால வாழ்வுக்கான எல்லாத் தேவைகளையும் ஈட்டி வைத்து வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்கிறான். ஆகையால் அதன் பிறகு அவன் முன்பு நச்சரித்துக் கேட்டது போல் எதையும் கேட்டுப் பெறுவதை நிறுத்தி விடுகின்றான்! அல்லவா? அது போலவே இப்போது நம் மனிதன் ‘கடவுள் எல்லாமறிந்தவர் எல்லாம் வல்லவர்; எல்லாரினும் நம் மேல் இரக்கமுள்ளவர்’ என்றறிந்துள்ள விவேகத்தால் பக்குவ முதிர்ச்சி பெற்றுவிட்டதால், ‘வேண்டுதல், வேண்டிப் பெறுதல்’ என்ற அறியாமை விலகப் பெற்றவனாகின்றான்.

ஆதியில் விலங்கினமே போன்று விஷயாதிகளையே விரும்பி நின்ற நம் மனிதனது அன்புணர்ச்சியைத் தன் கருணையால் பையப் பையச் சுத்தீகரித்துப் பக்குவப்படுத்தி சுயநல விஷய பக்திச் சிறையினின்றும் விவேகத்தாலும் விராகத்தாலும் விடுதலையருளி உண்மையான தெய்வ பக்தி என்பது என்ன என்றறிய வைத்து, இம்மெய்யன்பில் அளவற்ற ருசி காட்டிக் கொடுத்த இவனது இஷ்டதெய்வ முருகன் வழக்கம்போல் இவன்முன் தோன்றி, ‘அன்ப, உனக்கு யாது குறை நேர்ந்தது? ஏன் இவ்வளவு பதறி வேண்டி அழைத்தாய்?’ என்று பரிவோடு கேட்கிறார்! இம்மனிதன், ‘என் ஆருயிர் இறைவனே! என்னை மன்னித்தருள்க; என்னை மன்னித்தருள்க! இணையற்ற கருணை வள்ளலாகிய உம்மை விடுத்து இகபர போகப் பொருள்களையே இதுகாறும் விரும்பி வேண்டிய என் மடமைத் தவறை மன்னித்தருள்க.’

அன்புரு அருணா சலஅழன் மெழுகாய்

அகத்துனை நினைந்துநைந் துருகும்

அன்பிலி யெனக்குன் அன்பினை அருளா(து)

ஆண்டெனை அழித்திடல் அழகோ?

அன்பினில் விளையும் இன்பமே, அன்பர்

அகத்தினில் ஊறுமா ரமுதே,

என்புக லிடநின் னிஷ்டமென் னிஷ்டம்

இன்பதெற் கென்னுயிர் இறையே!

(ஸ்ரீ அருணாசலப் பதிகம் 2)

பரமநின் பாதம் பற்றறப் பற்றும்

பரவறி(வு) வறியரிற் பரமன்

பரமுனக் கெனவென் பணியறப் பணியாய்

பரித்திடும் உனக்கெது பாரம்?

பரமநிற் பிரிந்திவ் வுலகினைத் தலையிற்

பற்றியான் பெற்றது போதும்;

பரமனாம் அருணா சலஎனை இனிஉன்

பதத்தினின்(று) ஒதுக்குறப் பாரேல்.

(ஸ்ரீ அருணாசலப் பதிகம் 9)

காந்தம் இரும்புபோல் கவர்ந்தெனை விடாமல்

கலந்தெனோ(டு) இருப்பாய் அருணாசலா.

(ஸ்ரீஅருணாசல அக்ஷரமணமாலை 16)

அம்புவில் ஆலிபோல் அன்புறு உனில்எனை

அன்பாக் கரைத்தருள் அருணாசலா.

(ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை 101)

அண்ணா மலையாய் அடியேனை

ஆண்ட அன்றே ஆவியுடல்

கொண்டாய் எனக்கோர் குறையுண்டோ

குறையும் குணமும் நீயல்லால்

எண்ணேன் இவற்றை என்உயிரே

எண்ணம் எதுவோ அதுசெய்வாய்

கண்ணே உன்றன் கழலிணையிற்

காதல் பெருக்கே தருவாயே.

(ஸ்ரீ அருணாசல நவமணிமாலை 7)

பரிபூரண அன்பு வடிவினனான உம்மை விட்டு உலகப் பொருள்களையே நாடி நின்ற என் புன்மை பொறுத்தருள்க. இன்று முதல் என் வாழ்வில் எனக்குத் தேவை என்று ஒரு பொருளுமில்லை. உமது இஷ்டப்படி இவ்வாழ்வில் எதுவும் நடக்கட்டும்.

எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி யெய்துகினும்

எய்துக; பிறப்பிலினியான்

எய்தாமை யெய்துகினு மெய்திடுக; இருமையினும்

இன்பமெய் தினுமெய்துக;

வழுவகைத் துன்பமே வந்திடினும் வருக;மிகு

வாழ்வுவந் திடினும் வருக;

வறுமைவரு கினும்வருக; மதிவரினும் வருக; அவ

மதிவரினும் வருக;உயர்வோ(டு)

இழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருக;அல(து)

எதுபோயி னும்போக; நின்

இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்

எனக்கடைதல் வேண்டுமரசே...

(திருவருட்பா - ஸ்ரீ ராமலிங்க அடிகள்)

மெய்யான பக்திகொண்டால் மீண்டு முனைவிடுத்தோர்

பொய்யா யெழுந்தகன்று போவேனோ – ஐயாவென்

போலிப் பணிவின் புரைநீக்கி மெய்யன்பு

பாலித் தருள்க பதம்.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 326)

நைச்சரித்துன் பாலிந்த நாயேன் பெறவிரும்பும்

ஐச்சுவர்ய பாக்கியம்மெய் யன்பேதான் – பொய்ச்சுகங்கள்

கூட்டும் பிறவரங்கள் கொள்ள விரும்பேனுன்

தாட்டா மரைக்கடிமை தா.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 337)

மற்றவையெல் லாமுன் மலரடிக ளிச்சைவழி

யுற்றிடுக ஆனாலிவ் வுண்மையன்பு – பெற்றிடுதல்

ஒன்றுமட்டு மென்று(ம்)நா னுன்பா லிரக்கின்றேன்

இன்றே யருள்வா யினிது.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 339)

இறைவ, இனி எனக்கு வேண்டிய ஒரே ஒரு பொருள் தாங்கள் ஒருவரே! அருள்க!’ என்று பிரார்த்தித்துச் சரணடைகின்றான்.

விஷய பக்தியும் அதை நிறைவேற்றும் ஓர் உபாயமாக இஷ்ட தெய்வ உபாசனையும் கொண்டு, மூன்றாம் வகுப்பின் (a) பிரிவிற் கற்றுவந்த இம்மனிதன் இப்போதுதான் தன் இஷ்ட தெய்வத்தினிடம் பக்தியைப் – உண்மையான தெய்வ பக்தியைப் – பெறுகின்றான். மூன்றாம் வகுப்பின் (a) பிரிவிற் கற்றுவந்த போது, ஒருமுகமாகித் தன் இஷ்ட தெய்வத்தை மட்டும் இவன் உபாசித்தானாயினும், அப்போது அவனது அன்புணர்ச்சி தெய்வ பக்தியாயில்லாமல் வெறும் விஷய பக்தியாய், பற்பல உலகப் பொருள்களின் மேல் சிதறிப் பல்வேறு முகப்பட்டுப் பிரிந்து கிடந்தது. ஆனால் இப்போதோ, அவனது அன்புக் கணையானது பலவாகிய விஷயப் பொருள்களினின்றுந் திருப்பப்பட்டு, ஒரு முகப்பட்டு, அவனது இஷ்ட தெய்வமாகிய – ஏக நாம ரூபமாகிய – ஒரே லக்ஷியத்தை மட்டுமே நோக்கி நிற்பதால் மிகுந்த விசையுடன் பாய்கிறது. இவ்வன்புக் கணையின் பாய்வே அவனைத் தகுதியளித்து மூன்றாம் வகுப்பின் (b) பிரிவிற் சேர்த்து விடுகின்றது.

தன் இஷ்ட தெய்வத்தின் சகாயத்தால் எல்லா விதமான பிரபஞ்ச விஷய சுகப் பொருள்களையும் பெற்றுப் பல்லாயிரம் ஜன்மங்களாக அனுபவித்து வந்த இம்மனிதன் அவ்வனுபவங்களால் மேன்மேலும் துன்பங்களே பெருகுவதை அறிவதோடு, நெய்யிடப்பட்ட நெருப்பே போல, அனுபவிக்கக் கிட்டும் அவனிப் பொருள்களால் ஆசைத் தீ அணையாமல் மேன்மேலும் ஓங்கியே எழும்93 என்ற உண்மையையும் இப்போது கண்டு கொள்கின்றான். இவ்வாறு ஐம்புல நுகர்ச்சிகளில் அவனுக்கு இப்போது விராகம் (வைராக்கியம்) பூரணமாக உண்டாகியிருக்கின்றது. மேலும், அறியாமையால் அவ்விஷயங்களை விரும்பி யாசித்த காலத்தும் தன் மேல் பேரிரக்கத்தால் அவைகளைக் கொடுத்தருளி வந்த தன் இஷ்ட தெய்வத்தின் எல்லையற்ற கருணையை நினைக்கும்போது, இவற்றைக் ‘கொடுத்தவன் பெரிதா? அல்லது இந்தக் கொடைப் பொருள் பெரிதா?’94 என்ற விவேகம் உள்ளத்தில் நன்றாய் மலர்வதால், உண்மையான தெய்வ பக்தியும் அவனுக்கு இப்போது உண்டாகியிருக்கின்றது. மோக்ஷ உப்பரிகைக்குப் (மாடிக்குப்) பறந்து செல்ல உதவியாய் பக்தி, வைராக்கியம் என்னும் இரு சிறகுகளையும் இவ்வாறு எய்தப்பெற்ற இந்தப் பக்குவியாகிய பறவை தன் லக்ஷியத்தை நோக்கி இப்போது விரைந்து பறந்து செல்லக்கூடியதாய் இருக்கின்றது!

இஷ்ட தெய்வக் காதலால் எல்லாம் மறந்து, எல்லாம் துறந்து, ‘தன்னைத் தந்து என்னைக் கொள்’ என்று வந்து பிரார்த்தித்து நிற்கும் இவ்வுத்தம பக்தனுக்கு இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இறைவன் அறிந்தேயிருக்கின்றார். அவர் தன்னை இவனுக்குத் தருதலாவது எப்படி? இவனைக் கொள்ளலாவது எப்படி? அறியாமையால் விவேகமின்றி இருந்த இத்தனைக் காலம் அவன் கேட்ட தகுதியற்ற, வீண் பிரார்த்தனைகளுக்கெல்லாம் கூட செவி சாய்த்தருளிய தெய்வம் இப்போது இவனது இதயபூர்வமானதும் மிக உயர்ந்ததுமான இப்பிரார்த்தனையை நிறைவேற்றாமல் இருக்குமா? இதை நிறைவேற்றவும், அவனை மேன்மேலும் முன்னேற்றவும் இறைவன் இயற்றும் முதற்காரியம் என்ன? தனது அருளுருத் தரிசனம் தந்தவாறு அவன்முன் நின்ற இஷ்ட தெய்வ முருகன் மறைகின்றார்!

தன் இஷ்ட தெய்வத்தைத் தவிர இப்போது இஷ்டமொன்றுமே இல்லாது நிற்கும் இம்மனிதன் என் செய்வான்? நல்லறிவு உதித்து மெய்யன்பு மலரும்போது, கண்ணெதிரே நின்ற கடவுளும் மறைந்தால் அவனுள்ளம் எப்படித் துடிக்கும்! இம்மனிதன் இப்போது எத்தனை முறை அழைத்தாலும் ஆறுமுகன் தோன்றுவதே இல்லை!! இவனால் பின்னால் ஒதுக்கித் தள்ளப்பட்ட உலகப் பொருள்களோ இவனைச் சிறிதும் கவர்ச்சி செய்ய முடியாத நிலையில், தனக்குப் பூரணக் கவர்ச்சிப் பொருளாயமைந்த இஷ்ட தெய்வம் மறைந்தால் அவன் உள்ளம் எப்படிப் பதறிக் கதறித் துன்புற்றுத் துடிக்கும்! இப்பிரிவாற்றாமையை அவன் தாங்குவதெப்படி? ஆண்டவனது காட்சிக்காக அனலிடை மெழுகாய் உருகித் துதிக்கின்றான் இம்மனிதன்! அவனது வெம்பும் உள்ளம் வேண்டுகின்றது:-

கருணையா லென்னை யாண்டநீ யெனக்குன்

காட்சிதந் தருளிலை யென்றால்

இருள்நலி வுலகில் ஏங்கியே பதைத்திவ்

வுடல்விடில் என்கதி என்னாம்?

அருணணைக் காணா தலருமோ கமலம்

அருணனுக் கருணனா மன்னி

அருள்நனி சுரந்தங் கருவியாய்ப் பெருகும்

அருணமா மலையெனும் அன்பே.

(ஸ்ரீ அருணாசலப் பதிகம் 1)

பைங்கொடி யாநான் பற்றின்றி வாடாமல்

பற்றுக்கோ டாய்க்கா அருணாசலா. (72)

ஆருக் காவெனை யாண்டனை அகற்றிடில்

அகிலம் பழித்திடும் அருணாசலா. (4)

இப்பழி தப்புனை ஏன்நினைப் பித்தாய்

இனியார் விடுவார் அருணாசலா. (5)

ஈன்றிடும் அன்னையிற் பெரிதருள் புரிவோய்

இதுவோ உனதருள் அருணாசலா. (6)

கேளா தளிக்கும் உன் கேடில் புகழைக்

கேடுசெய் யாதருள் அருணாசலா. (22)

கோபமில் குணத்தோய் குறியாய் எனைக்கொளக்

குறைஎன் செய்தேன் அருணாசலா. (25)

நேசமில் எனக்குன் ஆசையைக் காட்டி நீ

மோசஞ் செயாதருள் அருணாசலா. (60)

நைந்தழி கனியால் நலனிலை பதத்தில்

நாடியுட் கொள்நலம் அருணாசலா. (61)

நொந்திடா துன்றனைத் தந்தெனைக் கொண்டிலை

அந்தகன் நீயெனக் கருணாசலா. (62)

நோக்கியே கருதிமெய் தாக்கியே பக்குவம்

ஆக்கிநீ யாண்டருள் அருணாசலா. (63)

யவன்என் வாயில் மண்ணினை யட்டி

என்பிழைப் பொழித்த தருணாசலா. (88)

யாருமறி யாதென் மதியினை மருட்டி

எவர்கொளை கொண்ட தருணாசலா. (89)

பித்துவிட் டுனைநேர் பித்தனாக் கினையருள்

பித்தந் தெளிமருந் தருணாசலா. (66)

பேய்த்தனம் விடவிடாப் பேயாப் பிடித்தெனைப்

பேயனாக் கினையென் அருணாசலா. (71)

சேரா யெனின்மெய் நீரா யுருகிக்கண்

ணீராற் றழிவேன் அருணாசலா. (34)

சையெனத் தள்ளிற் செய்வினை சுடுமலால்

உய்வகை ஏதுரை அருணாசலா. (35)

விட்டிடிற் கட்டமாம் விட்டிடா துனையுயிர்

விட்டிட அருள்புரி அருணாசலா. (96)

நுண்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட

எண்ணலை இறுமென் றருணாசலா. (57)

மிஞ்சிடிற் கெஞ்சிடுங் கொஞ்சவ றிவனியான்

வஞ்சியா தருளெனை அருணாசலா. (78)

ஞமலியிற் கேடா நானென் உறுதியால்

நாடிநின் உறுவேன் அருணாசலா. (39)

மௌனியாய்க் கல்போல் மலரா திருந்தால்

மௌனமி தாமோ அருணாசலா. (87)

தெய்வமென் றுன்னைச் சாரவே என்னைச்

சேர ஒழித்தாய் அருணாசலா. (48)

நின்னெரி எரித்தெனை நீறாக் கிடுமுன்

னின்னருள் மழைபொழி அருணாசலா. (55)

(ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை)

இட்டிடல், எடுத்தல், எழுவதோ டிருத்தல்,

ஏகுதல், இதுசெயல், செயாமல்

விட்டிடல், அடுத்தல், விரும்புதல், வெறுத்தல்

வேண்டிய கருமங்கள், இவைபோல்

தொட்டதற் கெல்லாம் நின்னொடு பேசித்

தொடர்புகொண் டணுத்துணை யேனும்

கட்டமில் வாழ்க்கை கண்டுநான் வாழக்

கருணையே ரமணனே வருக.

(ஸ்ரீ ரமண வருகை 8195 )

இறைவன் ஏன் தோன்றுவதில்லை? பக்தன் கேட்டதாவது, ‘உன்னைத் தா’ என்பதேயல்லவா? அவர் (இஷ்ட தெய்வமாகத் தோன்றியது) என்ன என்பதை அவன் சரியாக அறிவானா? இல்லை. ஆண்டவனே தன் உண்மையை அறிந்தவர். இந்த நாம ரூபத்தையே அவர் என்று இம்மனிதன் எண்ணியிருப்பதால் அதையே அவன் விரும்பி நிற்கின்றான்! ஆனால், அது உண்மைக்குப் புறம்பானது என்று இறைவன் அறிந்திருப்பதால் அவன் நினைத்தபடியே அருளி அவனை ஏமாற்றத் தயாராக இல்லை! உண்மையாகவே தான் எதுவோ, அதை அவனுக்கு அளிப்பதே அவரது திருவருள் நோக்கம்!

சத்து, சித்து, ஆனந்தம், நாமம், ரூபம் என்னும் பிரம்மத்தின் ஐந்து அம்சங்களுள் ‘சச்சிதானந்தம்’ ஆகிய மூன்றுமே சத்தியாம்சம்; ‘நாமம், ரூபம்’ இரண்டும் மித்யாம்சம் (பொய்). இத்தனை காலமாக அவனுக்கு அளிக்கப்பட்ட தரிசனம் மித்யாம்ச தரிசனமே! அதாவது, மித்யாம்சமான எண்ணிறந்த நாம ரூபங்களுள் ஏதோ ஒரு நாம ரூபமான இஷ்ட தெய்வதரிசனம் அத்தெய்வத்தின் இணக்கமுமே அவன் இதுவரையிலும் பெற்று மகிழ்ந்திருந்தான். இந்த நாம ரூபம் இப்போது மறைந்தவுடன், இதையே இறைவனின் உண்மை என்று நம்பியிருந்த அம்மனிதன் இறைவனையே இழந்துவிட்டதாகக் கருதிப் பிரிவாற்றாமையால் துடிக்கின்றான்! இறைவனின் மெய் வடிவான – பிரம்மத்தின் சத்யாம்சமான – சச்சிதானந்தாத்ம சொரூப அறிவு இல்லாததால் இந்த மிகப்பெரிய வேதனை அவனுக்கு உண்டாயிற்று!

ஞானமி லாதுன் னாசையாற் றளர்வற

ஞானந் தெரித்தரு ளருணாசலா.

(ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை 40)

‘அம்மனிதனின் தற்சமயத் தளர்வு கடவுளாசையால் ஏற்பட்ட தளர்வாகும். இது அவரது உண்மை சொரூபத்தைப் பற்றிய சரியான ஞானமில்லாததால்தான் உண்டாயிற்று. இதற்கு ஒரே மருந்து ஆன்ம ஞானம் தெரிவித்தருளுவதே’ என்பதை இறைவன் நன்கறிவார். ஆதலால், முதலில் தனது மித்யாம்ச நாம ரூபத்தை மறைத்தருளுகின்றார்!.

வேலவனின் கோலத்திலேயே உள்ளம் பறிபோனவனாய், தன் இஷ்ட தெய்வ தரிசனத்தையே தேடி ஓடி அலையும் இம்மனிதன் ‘கடவுட் பித்தன்’ ஆகி விடுகின்றான்! வீடு, தொழில், மனைவி, மக்களைப் பற்றிய எண்ணமே அற்றவனாய், ஆனால் முயற்சியின்றியே சதா காலம் விடாப்பிடியாய்ப் பிடித்து அழுத்தும் முருகனின் சிந்தனையில் (தியானத்தில்) முழுகப் பெற்றவனாய், உன்மத்தனாய் நிற்கின்றான்; நடக்கின்றான்; சிலசமயம், ‘முருகா, முருகா, வேலவா’ என்று வாய் ஓயாமல் உரத்த குரலிலும், சில சமயம் வாய்க்குள்ளேயே மந்த குரலிலும் விடாமற் கூவியழைக்கின்றான்; களைக்கின்றான்; விம்மி விம்மி அழுகின்றான்! உறவினரும் நண்பர்களும் இவனைப் ‘பித்தன்’ என்று இகழ்கின்றனர்!

பண்ட மெல்லாம் பாரேன், தீப்

பசியு மறப்பேன்; பலர்ஏசிக்

கொண்டு சொல்லற் குறியேன்; என்

குருவே துயிலேன் உனைக்கண்ணால்

கண்டு கொண்டே னெனிலுலகக்

கனவை மறந்துன் கழிபித்தே

கொண்டு திரிவேன்; என்னாசை

குறுக ரமணா வருவாயே.

(ஸ்ரீ ரமண வருகை 156)

கதிரோ னுதயம் கடுவெயிலும்

காரின் வரவும் கனிகாய்கள்

முதிரும் பருவம் மழைபனியும்

மூடும் பருவம் முதலாய

எதுவுந் தெரியே னிறைவாநீ

என்முன் னெழுந்திங் கிருப்பாயேல்;

பதியே ஆசைப் பயித்தியமும்

பலிக்க ரமணா வருவாயே.

(ஸ்ரீ ரமண வருகை 157)

உலகம் கருதேன் உடல்கருதேன்

உயிர்க்கக் கருதேன் உயிருடலை

விலகு மிருக்கும் விதங்கருதேன்

வீடும் பற்று மிரண்டற்றுள்

இலகும் பெருமா னுன்னோடே

யிருக்கப் பெற்றே னெனிலின்றே

அலகில் லாத வருளுடையாய்

அப்பா ரமணா வருவாயே.

(ஸ்ரீ ரமண வருகை 158)

தன்னைப் பெற்ற தாய்தந்தை

சாமி குருவாம் சதுர்வடிவன்

உன்னைப் பற்றிக் கொண்டாற்பின்

உயிரைப் பற்றிக் கவலையிலை!

என்னைப் பற்றி உலகத்தார்

எதுவோ கூறி யிகழட்டும்!

இன்னே நீவந் திடஆசை

எழுந்தேன் ரமணா வருவாயே.

(ஸ்ரீ ரமண வருகை 159)

தேகமி ருக்கும் வரைகண்முன்

செக மிருக்கும் வரைநாவில்

தாகமி ருக்கும் வரையுதரத்

தணலு மிருக்கும் வரைபேசும்

மோகமி ருக்கும் வரைநீஎன்

முன்னிலி ருக்க வரவேண்டும்;

ஏகமி ருக்க வைத்தால்நான்

எங்கே ரமணா வருவாயே.

(ஸ்ரீ ரமண வருகை 163)

இஷ்ட தெய்வக் காதலால் துடிக்கும் இவனது மனநிலை, கயிலையைக் காணச் சென்ற அப்பரையும், கண்ணனை நோக்கிக் கதறிச்சென்ற சைதன்யரையும், காளியன்னையின் காட்சி வேண்டிக் கைவாளால் தன் கழுத்தைச் சேதிக்கவுந் துணிந்த இராமகிருஷ்ணரையும், அசோக வனத்திற் சிறையிடப்பட்டு இராம தாகத்தால் ஏங்கி நின்ற சீதாப் பிராட்டியையும், இராமனைக் காணக் கானகஞ் சென்ற பரதனையும் அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது! இப்பிரிவுத் துயர் நிலையில் பிறவிகள் சிலவுங்கூடக் கழிவதுண்டு!

நாம ரூபத்தில் எவ்வளவுதான் இறைவனைக் கண்டு அளவளாவினும் என்றேனும் ஒருநாள் அந்த நாம ரூபம் மறைந்தே தீருமாகையால், அது சாசுவதமாக இறைவனை அடைந்த நிலையாகாது.

...ஆயினும் அம் – மெய்ப்பொருளின்

உண்மையில்தன் உண்மையினை ஓர்ந்தொடுங்கி ஒன்றுதலே

உண்மையில் காணல் உணர்.

(உள்ளது நாற்பது 8)

இறைவனின் உண்மை எதுவோ அதுவாகிய ஆன்ம சொரூபத்தில் தன் ஆன்ம சொரூபத்தின் ஏகத்துவத்தை உணர்ந்து, ஜீவத்துவம் கிஞ்சிற்றும் மீதமின்றி ஒடுங்கி ஒன்றாவதே கடவுளை உள்ளபடி காணல், அடைதல் ஆகும் அல்லவா? ஆகவே இந்நிலையை ஒளிக்காமல் அம்மனிதனுக்கீந்து அவனைக் கிருத கிருத்தியனாய், பூரண காமனாக்கவே அவனது இஷ்ட தெய்வமாகிய பரம்பொருள் திருவுளம் கொள்கின்றது. அதை எப்படி அவனுக்கு அருளுவது?

...கோணறவோர் மான்காட்டி மானையீர்க்குங்

கொள்கையென அருள்மௌன குருவாய்வந்து...

(தாயுமானவர்)

மானைப் பிடிப்பவன் பழக்கிய மானொன்றையும், யானையைப் பிடிப்பவன் பழக்கிய யானையொன்றையும் காட்டிற் கொண்டு சென்று காட்டி, காட்டு மான்களையும் யானைகளையும் பிடிக்கிறான். தன்போன்ற இனமாகவே எதிரில் தோன்றும் மானையும் யானையையும் கண்டாலொழிய, காட்டு மானோ யானையோ பயமின்றிக் காட்டில் மறைவிடத்தை விட்டு வெளிவராது; கைக்கும் பிடிபடாது. அது போலவே, மாதா வயிற்றிற் பிறந்து மானிட சரீரம் தாங்கி, இவனைப் போல் ஒரு மனிதனாகவே வந்து, இம்மனிதனுடன் குரு சிஷ்ய உறவு கொண்டாலன்றி இவனுக்கு உண்மையை உணர்த்துவது அரிது என்று கொண்டு பரம்பொருள் பார்மேல் தக்கவோர் தாய் தந்தையர் வயிற்றில் தனக்கோர் உடலாலயம் கட்டிக்கொண்டு மனித உருவுடன் வருகின்றது. இதுவே ‘குருவவதாரம்’ என்பதாம்.

இப்படிப்பட்ட குருவவதார காலத்தில் இவனையும் இவனைப் போலவே பக்குவமுற்று உலகின் பற்பல பகுதியிலும் தனக்காகக் கழிபித்தேறிக் கதறித் திரிந்துகொண்டிருக்கும் பக்குவ ஜீவரத்தினங்கள் பற்பலரையும், தான் பூமியில் தேகம் தாங்கி நிற்கப்போகும் புனித ஸ்தலத்திற்கருகிலோ, அல்லது அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து தன் அருளிணக்கம் பெறத்தக்க இடங்களிலோ, பிறக்கும்படிச் செய்வது அப்பரம்பொருளின் திருவருட் திட்டமேயாகும்! வேதங்கள் முழுவதையும் ‘ஆசிரியர்’ என்றும், மனித சமூகம் முழுவதையும் ஒரு ‘மனிதன்’ என்றும், இறைவனின் எண்ணிறந்த நாம ரூபங்களுள் முருகப் பெருமானை ‘இஷ்ட தெய்வம்’ என்றும், நமது விளக்கத்திற்கு அனுகூலமாக இதுவரையில் நாம் குறிப்பிட்டு வந்திருப்பது போலவே, இம்மனிதன் குருதரிசனம் பெறப்போகும் இவ்விடத்திலும் பகவான் ஸ்ரீ ரமணரையே அவனது ‘சற்குரு’ என்றும் வைத்துக்கொண்டு மேலே கூறிச் செல்வோம்!

நம் மனிதன் தன் சற்குருவாகிய பகவான் ஸ்ரீ ரமணரைத் தரிசிக்க வருமுன், எப்படி, இஷ்ட தெய்வ தரிசனம் பெற்ற ஓர் உத்தம பக்தனைக்கூட, ஆன்மஞானம் பெற அவ்விஷ்ட தெய்வம் ஒரு சற்குருவினிடம் அனுப்பிவைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது என்பதை விளக்க ஒரு சரித்திர நிகழ்ச்சியைக் குறிப்பிடுவோம்.

‘ஏன் வருந்துகின்றாய்? என்ன நடந்தது?’ என்று கேட்ட ஸ்ரீ விட்டல் பிரபுவினிடம் நாம தேவர், ‘அக் குயவன் சட்டி தட்டுங் கட்டையால் என் தலை மேல் தட்ட வந்தான்! நான் தடுத்தேன். அதனால் அவன் என்னை, “இது வேகாத பச்சை மண்சட்டி!” என்று இழித்துரைத்தான்’ என்றார்.

‘மற்றவர்கள் தலையிலும் தட்டினாரா?’

‘ஆம்; அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அது போலவே என் தலையிலும் அவன் தட்டலாமா? நான் ஆண்டவனாகிய உமது பக்தனன்றோ? உமக்குப் பிரியமானவனன்றோ?’ ‘அதுதான் உன் குற்றம். “நான் கடவுளின் பக்தன்; எனக்குப் பக்தி அதிகம்; இறைவன் என் பிரியன்” என்ற வடிவில் உன் அகங்காரம் முதிர்ந்து தடித்துப் போயுள்ளது. எனது பிரியத்தால் நீ செல்லங் கொடுத்துச் சீரழிக்கப்பட்டு வருகிறாய். உன் பிரியத்திற்குப் பிரியம் காட்ட வேண்டியது இஷ்ட தெய்வ நிலையில் என் கடமையாகி விடுவதால், உன்னைக் கண்டித்துத் திருத்தி மெய்யறிவு புகட்ட முடியாமற் போகின்றது. பெற்றோர் தம் பிள்ளைகளை மற்றோர் ஆசிரியரிடம் அனுப்பியே அறிவு புகட்ட வேண்டியிருப்பது போல, நானும் உன்னை உன் குருவினிடம் அனுப்பி நீ அறிவையும் பணிவையுங் கற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். அதுவரையிலும் நீ வேகாத பச்சை மண்சட்டியே தான்!’ என்று தீர்ப்பளித்து விட்டார் நாம தேவரின் இஷ்ட தெய்வமான பண்டரீபுர விட்டல்!

நாமதேவர்: ‘இறைவா, தங்களைவிட மேலானவரா “குரு”?’

ஸ்ரீவிட்டல்: ‘ஆம்; ஆன்ம ஞான அடைவாகிய “சட்டி சுடுதல்” ஆசானாலன்றி, அன்னை தந்தை போலுள்ள உன் இஷ்ட தெய்வமாகிய என்னால் ஆகாததே. உன் குருவினால் மட்டுமே ஆகக் கூடியது அது! உன் குரு அதோ அருகிலுள்ள காட்டில் ஓர் பாழ் மண்டபத்திற் படுத்திருக்கின்றார். அவரிடம் போ’ என்றருளினார்!

ஞானிகள் பலர் கூடிய சபையில் தான் பரிகசிக்கப்பட்டதோடு விட்டல் பிரபுவாலும் அவ்வாறே இகழப்பட்டதால் மனம் வெதும்பி, உண்மையறிவு ஒன்றையே பெறத் தீவிரமாக விரும்பி நிற்கும் நாம தேவர் தன் இஷ்ட தெய்வமான விட்டல் பிரபுவை விட்டு விட்டு, அவர் சொற்படியே அடுத்துள்ள காட்டிற் புகுந்தார். ஆங்கோர் பாழ் மண்டபத்திற் படுத்திருக்கும் வயோதிகர் ஒருவரை தூரத்தில் வரும்போதே கண்டார். கண்டதும் திகைத்துப் போனார்! ஏன்? அக்கிழவர் அங்கிருந்த ஒர் சிவலிங்கத்தின் மேல் தன் கால்களைப் போட்டுக் கொண்டு படுத்திருந்தார்! இதை ஓர் அடாத செயலாகக் கண்ட நாமதேவர், ‘மெய்யறிவைப் புகட்டும் குரு இவர் என்று என் இறைவன் கூறினாரே! ஆனால், சிவலிங்கத்தின் மேல் கால் படக் கூடாது என்ற ஒர் சாமானிய உண்மை கூட இவருக்குத் தெரியவில்லையே’ என்று கருதி அருகிற் சென்றார்.

‘வா, விட்டல் அனுப்பினாரா?’ என்றார் கிழவர்! திடுக்கிட்டுப் போன நாமதேவர், ‘சுவாமி, விட்டல் என்னை அனுப்பிய விஷயம்கூட அறியும் திரிகால அறிவுள்ளவராகக் காணப்படும் நீர், இப்படிச் சிவலிங்கத்தின் மேல் காலை போட்டுக் கொண்டிருக்கக் கூடாதென்பதை அறியாதது என்னே?’ என்று வெடுக்கென்று கேட்டார்!

பக்தியில் எவ்வளவு உயர்ந்திருந்தாலும் பணிவு, அடக்கம் இல்லாத மனம் குருவை அடையவோ, சற்குரு தரிசனத்தாலாகும் உத்தமப் பயனைப் பெறவோ தகுதியற்றதாகவே இருக்கும். குருவினிடம் அறிவு பெற வந்து குருவுக்கே அறிவு புகட்டவும் அது கிளம்பிவிடும்! ஸ்ரீ ரமண பகவானிடம் அறிந்துகொள்ள வந்தோர் சிலர் ஸ்ரீ பகவானுக்கே அறிவுறுத்த ஆரம்பித்ததும், அடிமைகளாகிச் சேவை புரிவதாய் வந்தவர்கள் சிலர் அதிகாரிகளாக மாறி ஸ்ரீ பகவானுக்கே ஆணை பிறப்பிக்க ஆரம்பித்ததும், நாம் பலமுறை ஸ்ரீ ரமண சந்நிதியிற் கண்ட விநோதங்களேயன்றோ!96 பக்குவமற்ற பாமர மனம் குருவை மனிதனாய் கருதி முதலில் இப்படித்தான் நடந்து கொள்ளும். அவரது தினசரி வாழ்வில், நாமதேவரைப் போல குற்றங் கண்டுபிடித்துச் சீர்திருத்தவும் முயலும்! ஆயினும் பரம கருணாமூர்த்தியான பரம்பொருளே குருவாய் மனிதவுருத் தாங்கி வந்திருப்பதால் இவர்களது ஆரவார பக்தியாகிய போற்றுதலையும் அரைகுறை அறிவாற் செய்யுந் தூற்றுதலையும் சற்குரு பொருட்படுத்துவதே இல்லை. அவ்வாறே அக்கிழவரும் நாமதேவரது கேள்விக்குப் பொறுமையோடு பதிலளிக்கின்றார்:

‘அப்பா, அப்படியா? சிவலிங்கத்தின் மேலேயா என் கால் கிடக்கின்றது? எனக்கு வயோதிகத்தாற் கால்கள் உணர்வற்றுப் போனதால், அவை எங்கு கிடக்கின்றன என்பதை ஸ்பரிசத்தால் அறிய முடியவில்லை; பார்வை மங்கிவிட்டதால் கண்ணாற் பார்த்தறியவுங்கூட இயலவில்லை. கால்களை நகர்த்தவும் சக்தியில்லை. நீ தயவுசெய்து அக்கால்களைச் சிவலிங்கமில்லாத இடத்தில் எடுத்துப் போட்டுவிடு’ என்றார். தான் சாற்றிய குற்றத்தை குரு ஒப்புக்கொண்டது போல் காணப்பட்டதால் நாமதேவர் மகிழ்ந்து, உடனே அக்கிழவரின் இரு கால்களையும் பிடித்துத் தூக்கி வேறோரிடத்தில் நகர்த்திப் போட்டார். என்ன ஆச்சரியம்! சிவலிங்கம் அக்கால்களின் அடியில் வந்து நின்றது! எத்தனை முறை எத்தனை வெவ்வேறிடங்களில் அவர் கால்களை மாற்றி மாற்றி இழுத்துப் போட்டபோதும் அத்தனை முறையும் அங்கங்கேயும் சிவலிங்கம் சற்குருவின் காலடியில் வந்தே நின்றது! விட்டல் பிரபுவின் சற்சங்கத்தால் பணிவு ஒன்றைத் தவிர மற்றெல்லா விதத்தும் பக்குவமாக்கப்பட்டிருந்த நாமதேவரது மனம் குரு பாதமாகிய ஸ்பரிசவேதி ஒன்றுக்காகவே காத்திருந்தது போலும்! அருட் குருவின் திருவடிகளை இவ்வாறு பலமுறை தீண்டக் கிடைத்ததால் உடனே நாமதேவரது உள்ளம் உண்மை விழிப்புற்றது! அவ்விரு பாதங்களையும் போடுவதற்கு ஓர் புனிதமற்ற இடம் எங்குமே கிடைக்காமற் போவதைக் கண்ட நாமதேவர் முடிவில், தன் சிரமே எப்பொருளிலும் மிக இழிந்த இடம் என்று தீர்மானித்தார்! இவ்விதம் தற்பெருமையழிந்து பணிவின் சிகரத்தை எட்டிய அவர் தன் சற்குருவின் பாதம் பட்டவிடமெல்லாம் பரமசிவமேயாகி வருவதைக் கண்டு பயந்து, வியந்து, ‘என் குருவின் திருவடிகளை வேறு எங்கே வைப்பது? இனி மிக இழிந்த இடமாகிய என் தலை மேலேயே வைத்துக் கொள்கிறேன்’ என்று துணிந்து தன் சிரமேல் தாங்கினார்97! எனின், அதன் விளைவு என்ன? நாமதேவர் சிவலிங்கமேயானார்! அதாவது, ஆன்மாவே (தானே) சிவமாகும் அத்வைத உண்மையை – சிவ – சாட்சாற்காரத்தை - அடைந்தவரேயானார்.

நாமதேவர் தன் சற்குருவின் திருவடிகளை வைப்பதற்கு இடம் தேடிய செய்கையால் முன்னிலை-படர்க்கை இடங்களுள் எங்குமே சிவலிங்கம் இல்லாத இடமில்லை என்று கண்டுகொண்ட போதுங்கூட அவருக்கு மெய்யறிவு உதிக்கவில்லை என்பதும், பிறகு அத்திருவடிகளைத் தன் தலை மேலேயே வைத்துக் கொள்ளும் செயலான தன்மை நாட்டம் ஏற்பட்டவுடனேயே அம்மெய்யறிவு உதித்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்க முக்கிய விஷயமாகும். இது, ‘ஒருவன் எவ்வளவுதான் உலகில் உள்ள எல்லாவற்றையும் கடவுளாக ஒத்துக் கொண்டாலும், எல்லாவற்றையும் கடவுளாகப் பார்க்க முயன்றாலும், தன்னை முதலில் (பிரம்மமாக) அறிந்தாலன்றி எல்லாம் பிரம்மம் என்ற அறிவு உண்மையாகவும் பூரணமாகவும் அனுபவமாகாமல் வெறும் மனக் கற்பனையாகவே முடியும்’98 என்ற ஸ்ரீ ரமண பகவானது உபதேசத்தைத் தெற்றென நிரூபித்து விடுகின்றதன்றோ?

எங்கு முள்ள கடவுளை இதய குகையிற் காணலாம்

இங்கு கண்ட பிறகுதான் இருப்ப தெல்லா மவன்மயம்!

(சாதனை சாரம் 515)

தன்னுள் சிவனைக் கண்டால் சர்வஉயிரும் – சிவன்

தானாகக் காணஏது சங்கை பாப்பா?

முன்னம்உன் னுள்ளேஅக மூலமறிந்தே – நின்றால்

முழுதுஞ் சிவசொரூபம் ஒன்றே பாப்பா!

(சாதனை சாரம் 156)

...தன்மையின் உண்மையைத் தானாய்ந்து – தன்மையறின்

முன்னிலைப டர்க்கை முடிவுற்றொன் றாயொளிருந்

தன்மையே தன்னிலைமை தான்.

(உள்ளது நாற்பது 14)

மெய்யறிவு பெற்ற நாமதேவர் தன் வீடு திரும்பினார். ஆலயத்திலிருந்த ஸ்ரீ விட்டல் பிரபு சில நாள் கழித்து நாமதேவரின் இல்லத்திற் தோன்றி, ‘நீ ஏன் நம்மிடம் இப்போது வருவதில்லை?’ என்று வினவினர். ‘இறைவா, இன்னுமா என்னைச் சோதிக்கின்றீர்கள்? நான் எங்கிருக்கிறேன்! நானில்லை; தாங்களே உள்ளீர்! எனவே, எங்கு எப்போது நான் தங்கள் திருவடியில் இல்லை?’ என்று விடையளித்தார் நாமதேவர்! ‘அப்பா, இந்தச் சட்டி சுட்ட சட்டியாகி விட்டது!’ என்று கூறியவாறே இறைவன் மறைந்தார்.

விஷய பக்தியில்லாத தெய்வ பக்தியேயாயினும் இஷ்ட தெய்வ பக்தியானது (மூன்றாம் வகுப்பின் (b) பிரிவில் உள்ள பக்தி) ஒர் எல்லையுள்ளதாய் முடிவதையும், இஷ்ட தெய்வமே தன் பக்தனை மெய்யறிவு பெற குருவினிடம் அனுப்பவேண்டி வருவதையும் இவ் வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோமல்லவா? இனி நம் மனிதனை நோக்குவோம்.

இம்மனிதன் கதறிப் பதறி அழுது வேண்டி அடைய விரும்பித் தேடியலையும் பொருளாகிய இவனது இஷ்டதெய்வம் பரந்த இப்பூமியில் எங்கேயோ ஓர் மூலையில் திருச்சுழி என்னும் கிராமத்தில் சுந்தரமையர்-அழகம்மை என்னும் தம்பதிகளுக்குச் சின்னஞ் சிறியதோர் குழந்தையாக மனித உருவிற் பிறந்து வளர்கின்றது! உன்னதமான மெய்யறிவை உலகுக்கு ஊட்டும் திருவருள் நோக்கத்துடனேயே மனிதவுடல் தாங்கும் பரம்பொருள் இதுவாகையால், தான் ஞானோதயம் பெறக் காரணமாக ஏதோ மரண பயம் என்று ஒன்று வந்ததாகவும், ‘சாவது யார்?’ எனத் தன்னை விசாரித்தறிந்ததாகவும், பிற்காலத்தில் தன் சரிதமெழுதப் போகும் சரித்திரக்காரர்களுக்கு ஒரு சாக்குப் போக்கை(தனது சரித்திரமாக)க் காட்டிக்கொண்டு, ஆனால் என்றென்றும் தான் இருந்ததனில் இருந்தபடி இருந்து காட்டும் இயல்பில் திரியாது நிலைத்த வண்ணமே இருந்து கொண்டு,99 தற்போது தான் கொண்டுள்ள ஸ்தூல தேகத்தின் விசுவரூபமேயான அருணாசலத்தை அடைந்து இவ்வுத்தம பக்தனுக்காகக் காத்திருக்கின்றது!

பக்திப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு (b) பிரிவில் உத்தம தெய்வ பக்தியைப் பெற்று, ஆனால் இஷ்ட தெய்வமும் மறையப்பெற்ற இம்மனிதனின் நிலையில் தீவிரர் சிலருக்கு இந்நிலையிலேயே சில பிறவிகளுங்கூடக் கழியலாம் என்றோமல்லவா? அவ்வாறு நேரும் ஒவ்வொரு பிறவியிலும் அவர்கள் ‘ஹோமா’100 என்ற பறவையைப் போலவே, உலக மயக்கத்தில் வீழாமல் அனாயாசமாகத் தப்பி அறிவறு சிறுவய ததுமுதல் ஆண்டவன் பால் கழிபித்தேறி காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்பு நெக்கு நெக்குருகி, இறைவனைத் தேடி யலையும் வாழ்வினராய்க் காணப்படுவர்.

‘குகா, முருகா, வேலவா’ என்று கூவிக் கூவித் தன் இஷ்ட தெய்வம் ஒன்றையே விரும்பி நிற்கும் பக்குவ நிலை பெற்றுள்ள நம் மனிதனை, இந் நிலையில் யாரோ சில நண்பர்கள் வந்து சந்திக்கின்றனர். ‘‘உன் முருகனுக்காக உருகியுருகி அழுது அலைகிறாயே; ‘சற்குருவின் சகாயமின்றி சர்வேசுவரனை யாரும் அடைய முடியாது’ என்று ஆன்றோர் கூறியிருப்பதை நீ அறியாயோ? சற்றுக் கவனி; அதோ அருளுருவாய் ஆத்ம ஞானியாய், ‘பகவான் ரமணர்’ என்றொரு மஹாத்மா திருவண்ணாமலையில் வீற்றிருந்து, சற்குருவாய் அநேகரால் அறிந்து போற்றப்படுகின்றாரே! அவரிடம் நீ சென்று உன் இஷ்ட தெய்வ தரிசனத்தைப் பெற உதவும்படி ஏன் பிரார்த்திக்கக் கூடாது!’’ என்று அந்த நண்பர்கள் இம்மனிதனை வினவினர்!

‘‘அப்படியா! ஆயின் இதோ சென்று அப்பெரியாரைக் காண்பேன்’‘ என்று கூறி, தன் சற்குருவைச் சந்திக்க ஆர்வம் பெருகி அருணாசலத்தை அடைகின்றான் அம்மனிதன்.

தன் கண்ணெதிரே அவன் காண்பதென்ன? யாரோ ஓர் மனிதர் போன்ற உருவம்! பொல்லாரிடமும் தன் உள்ளத்திற் பொன்றாது பெருகி வழியும் பேரன்பு பொங்கிக் கொண்டிருக்க, ஆனால் வந்து போகும் எவரிடமும் அதை வெளியிற் காட்டிக் கொள்ளாது விருப்பு வெறுப்பற்ற முகபாவம்! நம் மனிதனுக்காகவே காத்திருந்து, அவனைக் காந்தம் இரும்பு போற் கவர்ந்திழுத்துத் தன் சந்நிதிக்குக் கொண்டு வந்த அருட்சக்தி அதுவாகவே இருந்துங்கூட, அக்கருணையின் சின்னத்தைக் கொஞ்சமும் வெளியிற் காட்டிக் கொள்ளாமல், வந்து போகும் பலருள் ஒருவரைப் பார்ப்பது போன்று அவனைப் பாராது பார்த்திருக்கும் சாக்ஷித்வ வெளி நாட்டம்! இவற்றுடன் கூடி, இலைமறை காய் போல் மனித வடிவில் மறைந்து விளங்குபவராய் வீற்றிருக்கும் தன் சற்குருவைக் காண்கின்றான் நம் மனிதன். ஆனால், அவன் முன்னிலையில் உட்கார்ந்திருக்கும் அது எது? இத்தனை ஜன்மங்களாக எதை உபாசித்து, எதன்மேல் ஏற்பட்ட உத்தமமான நிஷ்காமிய தெய்வ பக்தியினால் உடல், உறவு, உலகாதிகளைத் துச்சமாய்த் துறந்துவந்து நிற்கின்றானோ, அந்த மாபெரும் உயிர்வலி காந்த பருவதமான இஷ்ட தெய்வமே அல்லவா எதிரே அமர்ந்திருக்கின்றது! ஓர் மனித உருவமாக வெளியிற் காணப்பட்டாலும் உண்மையில் அதனுள்ளேயிருப்பது இவனைக் கவர்ந்திழுத்து வந்த இவனது உபாசனா மூர்த்தியேயன்றோ? அதனாற் கவரப்பட்ட சித்தனாய் சற்குருவின் திருவடிகளில் விழுந்து பணிந்து எழுந்து நிற்கின்றான் அம்மனிதன். எதிரேயுள்ள குருவடிவான மனிதரை அவன் இதற்குமுன் ஒருநாளும் சந்தித்தறியானாயினும் அத்திருவுருவின் உள்ளேயுள்ள வஸ்துவுடன் பன்னெடும் பழம் பிறவிகளிலும் இடையறாது கொண்டிருந்த பக்தித் தொடர்பே இப்போது அவனுக்கேற்பட்டுள்ள பெருங்கவர்ச்சிக்குக் காரணமாகும்.

முதன் முறை நரேந்திரன் ஸ்ரீ இராமகிருஷ்ணரைச் சந்தித்த பிறகு வாரம் ஒரு முறையாவது அவரிடம் போகாமல் இருக்க முடியவில்லை. கவர்ச்சிமிக்க காட்சிகள் நிறைந்த கல்கத்தா வாசியான நரேந்திரன் தன் வாலிபப் பருவத்தில் அந்நகரத்தில் தான் காணவோ செய்யவோ ஏதும் ருசியின்றி விட்டுவிட்டு, படிப்பறிவோ, உடலழகோ, செல்வச் சிறப்போ யாதொன்றுமில்லாத ஓர் பைத்தியக்காரக் கிழவனைப் போற் காணப்பட்ட பரமஹம்ஸரைப் பார்க்காமல் இருக்க முடியாதவாறு அவனைப் பற்றியிழுத்த பாசக் கவர்ச்சிதான் எது? ‘என் படிப்பறிவாலும் பகுத்தறிவாலும் எவ்வளவு தடுத்தாலும் நிற்காமல் என் மனம் அப்பரம பைத்தியக்காரரிடம் பறந்து பாய்ந்து வந்துகொண்டே இருந்தது’ என்று ஒரு முறை சுவாமி விவேகானந்தர் (நரேந்திரன்) தன் சற்குருவின் ஆகர்ஷண சக்தியைப் பற்றிக் கூறியது இங்கு உய்த்துணரத் தக்கது.

இவ்விதமே தன் சற்குருவினால் உள்ளங்கவரப்பட்ட நம் மனிதன் ‘‘குருவே, நான் முருகப் பெருமானை உபாசித்தேன். அவரது திவ்விய தரிசனம் பெற்றேன். அழைத்தபோதெல்லாம் என்முன் தோன்றிய ஆண்டவனிடம், அறிவிலியாகிய நான் முதலில் உலகப் பொருள்களையே யாசித்தேன். அவர் அருளால் பிறகு ஒரு நாள் என் பிழையுணர்ந்து, இனி இறைவனுக்காகவே இறைவனை நேசிப்பது என்ற முடிவுக்கு வந்து, எம்பெருமானை அழைத்து, ‘ஏழுலகின்பமும் எனக்கினி வேண்டேன்; என்னுயிர் இறையே! நீயே வேண்டும்‘ என்று அவரிடமே முறையிட்டேன். ஆனால் அந்தோ! அன்றுதொட்டு இன்றுவரை அவர் திருவுருவம் மறைந்தே போயிற்று! நான் எவ்வளவு முயன்று வருந்திக் கதறியழைத்தும் அவர் வருவதேயில்லை. இழந்த என் இறைவனை நான் மீண்டும் என்றென்றும் எய்தும்படி தாங்கள் அருள வேண்டும். நித்திய சத்திய சொரூபியான கடவுளை சற்குருவின் அருளுதவியின்றி யாரும் அடைய இயலாதென்று ஆன்றோர் வாக்கால் அறிவுறுத்தப்பெற்றுத் தங்களிடம் வந்துள்ளேன்; அருள்க!’’

தக்கவலி யோனடியைச் சார்ந்தாற் பிறப்பறுதல்

மிக்கெளிதென் பாருரைக்கு வேறின்றி – இக்கலியில்

தக்ஷிணா மூர்த்தியவ தார ரமணனேநின்

பக்கமே சேர்ந்தவெனைப் பார்.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 598)

என்று பகவான் ரமணரிடம் பிரார்த்தித்தான்.

குரு: உன் இறைவன் மறைந்து விட்டாரா! சத்திய சொரூபமாயின் எப்படி அவர் மறைய முடியும்? அல்லது நீ சொல்கிறபடி மறைந்தது உண்மை என்றால் அவ்வுருவம் எப்படி சத்திய சொரூபமாக இருக்க முடியும்?

மனிதன்: நடந்ததை நான் உண்மையாகவேதான் சொல்கிறேன். அவர் எனக்குத் தோன்றி அளவளாவியிருந்தார் என்பது சத்தியமே. அவ்வாறே இப்போது அவர் மறைந்து விட்டதும் சத்தியமே. பகவானே, என்னைச் சந்தேகிக்க வேண்டாம்.

குரு: ஆம்; நீ சொல்வது உண்மையே! அவர் தோன்றியது எவ்வளவு சத்தியமோ, அவர் மறைந்ததும் அவ்வளவு சத்தியமே. ஆனால், தோன்றலும் மறைதலும் சத்தியத்தின் லக்ஷணமல்லவே. எது வரவுள்ளதோ அதற்குப் போக்கும் இருந்தே தீரும். ஏதாவது ஒன்று வந்து தோன்றியது என்றால், அந்நிகழ்ச்சியின் நேரத்திற்கு முன் அந்த இடத்தில் அது இல்லை என்றே ஆகின்றது. அது பிறகு மறைந்து போயிற்று என்றால், அந்த மறைவு நிகழ்ச்சியின் நேரத்திற்குப் பின் அந்த இடத்தில் அது இல்லை என்றே அர்த்தமாகின்றது; அல்லவா? இப்படிக் காலதேசக் கட்டுக்குட்பட்டும், போக்குவரத்து உள்ளதாயும் உள்ள ஓர் பொருள், எப்படிக் கட்டற்ற நித்திய வஸ்துவான இறைவன் ஆக முடியும்? நீ ‘என்றுமுள்ள சத்திய சொரூபத்தை அடைய உதவி செய்வீர்களா?’ என்று கேட்டாயல்லவா? அதனால், நீயேதான் எது சத்ய வஸ்து என்று விவேகித்துச் சரியாக முடிவு செய்ய வேண்டும். அது எதுவோ, அதை நீ அடைய உதவி செய்வதுதான் நல்லதே தவிர, இப்படி ஒருகால் தோன்றி ஒருகால் மறையும் கடவுளின் ஒரு நாம ரூபத்தை நீ மற்றொருகால் மீண்டும் அடையும்படி உதவுவதில் யாது பயன்? சொல். நீ மறுபடியும் அதைக் காண உதவினாலும் அது மீண்டும் மறையவே செய்யும். அதனால் உன் குறை எப்போதும் இருந்தே தீரும் ! அல்லவா? அதனால் உனக்கு எது வேண்டும் என்பதை நீயே முடிவாகத் தேர்ந்து தீர்மானித்துச் சொல். நீ உன் லக்ஷியமாகிய சத்திய வஸ்து இன்னதென்று தீர்மானிப்பதற்குங்கூட, வேண்டிய உளவும் உதவியும் இங்குக் கிடைக்கும்!

மனிதன்: அப்படியானால் சத்தியத்தின் லக்ஷணமென்ன?

குரு: அழிவின்மை, மாற்றமின்மை, சுய விளக்கம்! (1) தோன்றல் மறைதல் இல்லாமல், எல்லாவிடத்தும் எல்லாப் பொழுதிலும் உள்ளதாகவும், (2) குன்றல் வளர்தல் மற்றொன்றாய் மாறுதல் முதலிய மாற்றங்கள் இல்லாதாகவும், (3) தன் இருப்பை விளக்க மற்றொரு பொருளின் உதவி வேண்டாமல் (தானே) சுயமாய்ப் பிரகாசிப்பதாகவும் எது உள்ளதோ அதுவே சத்திய வஸ்து. இப்போது, எந்த ஒரே பொருள் இம்மூன்று லக்ஷணங்களையும் கொண்டதாய் விளங்குகின்றதென்பதை நீயே ஆராய்ந்து தீர்மானித்துச் சொல்.

மனிதன்: நான் பார்த்த, பார்க்கிற, பார்க்கும் (சூரிய சந்திராதிகள் உள்ளிட்ட) இப் பிரபஞ்சம் முழுவதுமே கால தேசத்தில் மாற்றமுள்ளதாகவும் அழிவுள்ளதாகவும் ஆவதால் உண்மையற்றவையாகவே தீர்க்கவேண்டி வருகின்றதே! என் இஷ்ட தெய்வம் கூட, தோன்றி மறைந்ததால் சத்தியத்தின் லக்ஷணத்தைப் பூர்த்தி செய்யக் காணேனே! அப்படியாயின், இங்கு உள்ள எதுவுமே சத்தியமல்ல என்றல்லவோ ஆகின்றது! எனின், எப்படி நான் சத்திய வஸ்துவைத் தீர்மானிப்பேன்?

குரு: இவை எல்லாவற்றையும் விசாரித்துத் தீர்மானிக்கும் நீ யார்? சத்திய லக்ஷணத்திற்கு நீ பொருத்தமானவனா என்று ஏன் பார்க்கக் கூடாது?

மனிதன்: நானும் பிறந்து தோன்றினேன்; வளர்ந்து மாறுகிறேன்; முதுமையடைந்து ஒரு நாள் இறந்து மறைவேன். என் நிலைமையும் தோற்றமும் மாற்றமும் அழிவுமுள்ளதாகத்தானே இருக்கின்றது!

குரு: என்ன! நீ பிறந்தாயா! பிறந்தது எது? உடலா, நீயா? உடலல்லவா பிறந்து, வளர்ந்து, குன்றி, இறந்து மறைகின்றது? நீ உடலா?

மனிதன்: என் உடல் மாற்றமடைந்து மடிகின்றதே!

குரு: மரிக்கும் உடல் உன் உடைமையானால் உடையவனான நீ யார்?

மனிதன்: ஆம்; உடலையுடையவனான நான் உடலினும் வேறொன்றே. உடலையும் பிற பொருள்களையும் நினைத்து உணர்ந்து அறிந்துகொள்ளும் நான் உடலினும் வேறுதான்.

குரு: என்ன! நினைக்கும் மனமா நீ? உன் நினைவுகளே உன் மனத்தின் வடிவமல்லவா?

மனிதன்: ஆம்; என் மனம் நினைக்கின்றது; நினைவுகள்தான் மனமா?

குரு: நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார். அப்போது மனம் என்றொரு பொருள் தனியாக இராது. நினைவே, மனதின் சொரூபம் .

மனிதன்: (நம் மனிதன் பக்குவியாகையால் சற்று நினைவற்று இருந்து, பிறகு) நினைவுகள் அற்றவிடத்தில் யாதொன்றுமில்லையே! பின், சத்திய சொரூபம் என்பது ஒன்றுமேயில்லையா?

குரு: நினைவுகளாகிய மனத்தை அறியும் நீ மனத்திற்கு வேறானவனல்லவா? உன்னால் அறியப்படும் மனம் உன் உடைமையே (திருசியமே) அல்லவா? ஆதலால், இம்மனத்தை உடைய நீ யார்? எப்படிப்பட்டவன் நீ என்று பார்.

மனிதன்: மனமற்றபோது எண்ணங்கள் யாவும் அற்றிருக்கிறது எனபதைத் தவிர அங்கு நான் அறிய யாதொன்றுமில்லையே.

குரு: உன் எண்ணங்கள் எழுந்து விரிந்து அலைந்துகொண்டிருந்ததை நீ அறிந்தது போலவே, இப்போது அவ்வெண்ணங்கள் எழுந்து அலையாது ஒடுங்கிப்போன நிலையையும் நீ அறிகிறாயல்லவா?

மனிதன்: ஆம்; எண்ணமற்ற இருள் போன்ற சூன்யம் என்னால் அறியப்படுகின்றது.

குரு: உன்னால் அறியப்படும் பொருளாகிய எண்ணங்களற்ற இச்சூன்ய நிலையும் (கேவல நிலையும்), அதன் முன்பு இருந்த எண்ணங்களோடு கூடிய நிலையும் (சகள நிலையும்) தோன்றி மறைகின்றனவன்றோ? ஆதலால், அவை சத்திய லக்ஷணத்தைப் பெற்றவையாதல் எங்ஙனம்? ‘இது சகளம் (இது எல்லாம் தோன்றும் நிலை), இது கேவலம் (இது ஒன்றும் தோன்றாத – சூன்ய – நிலை)’ என்று இவற்றை அறியும் நீ சத்திய லக்ஷணத்திற்குப் பொருத்தமா, அல்லவா? பார்.

முன்பு சிறு குழந்தையாய்ப் பிறந்திருந்த உன் உடல் பின்பு வளர்ந்து உருவ மாற்றமடைந்தது. அப்போது இருந்த உன் மனமும், வயது வந்தபின் இப்போது எண்ணிலா மாற்றமடைந்துள்ளது. உன் உடல் மனங்களின் இந்த மாற்றங்களுக்கு இடையிலும், அப்போது இருந்த நீயே இப்போதும் மாற்றமின்றி இருக்கிறாயல்லவா? இந்த உனக்கு மாற்றமிருந்ததா?

மனிதன்: இல்லை. நான் நானே. நான் மற்றொருவனாகி விடவில்லை! என்றாலும் இவ்வுடல் பிறக்குமுன் இந்த நான் இருந்தேனா? இவ்வுடல் இறந்தபின் நான் இருப்பேனா? நான் யார்?

எங்கிருக்கின் றேன்?மேல் இனியென் முயற்சிகொண்டே

எங்குசெல் வேன்?நான் இதற்குமுன் – எங்கிருந்தேன்?

ஒன்று மறியா துடல்மயக்கக் காரிருளிற்

பொன்றுகின்றேன்! நீயே புகல்!

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 660)

குரு: அவ்வளவு தூரம் ஏன் போகிறாய்? உன் தூக்கத்தில் நீ என்ன ஆகிறாய்? இருந்தாயா, இல்லையா?

மனிதன்: இவ்வுடல், மனம் அல்லாத நான் தூக்கத்தில் இருந்தேயாக வேண்டும். ஆனால், என் இருப்பு அப்போது தெரியவில்லையே!

குரு: அப்போது உனக்குத் தெரியாமலிருந்தது எது? உன் உடல், மனம், உலகங்களே அப்போது உனக்குத் தெரியவில்லை. தவிர, நீ இருந்தது தெரியாமலா போயிற்று? அங்கு நீ இருந்ததாக உன் இருப்பை ஒத்துக் கொள்ளும்போது, நீ அங்கு உன் இருப்பை அறிந்தவனும் ஆகின்றாய்! இருப்பும் அறிவும் (ஸத் சித்) வேறல்ல; அவை ஒன்றே. ‘நான் சுகமாகத் தூங்கினேன்; அங்கு ஒரு சொப்பனங்கூடக் காணவில்லை’ என்று உன் தூக்கக் காலத்தில் இருந்த உன் இருப்பின் தன்மையை அறிந்த அனுபவத்தையே பிறகு விழிப்பில் கூறுகிறாயல்லவா? நீ விழித்தபின் கூறும் இது, தூக்க நிலையில் உன் இருப்பைப் பற்றி அனுபவித்த அறிவையே அல்லவா குறிக்கின்றது. ‘சுகமாகத் தூங்கினேன்; சொப்பனமே இல்லை’ என்ற அறிவும், மன-உடல்-உலகங்கள் அங்கு இல்லாத சூன்யத்தை நீ அறிந்ததாகக் கூறும் அறிவும், தூக்கத்தில் நீ இருந்ததைப் பற்றி நீயே அறிந்திருக்கும் தன்னறிவைக் காட்டிவிடுகின்றதல்லவா? உடல் உலக அறிபடு பொருள்கள் உள்ளதும் என்ணங்களின் மயமேயானதுமான ஜாக்கிராவஸ்தை(விழிப்பு நிலை)யானது சகளத்தையும் (வியக்த நிலையையும்), இவையற்ற சூன்யமான சுழுப்தி அவஸ்தை(தூக்க நிலை)யானது கேவலத்தையும் (அவ்வியக்த நிலையையும்) குறிப்பதால், இங்கேயே (உடலில் வாழும் இப்போதே) பிறப்பு-இறப்புக்களின் (சகள-கேவலங்களின்) உண்மையை நீ விசாரித்து அறிந்துவிட முடிகிறது அல்லவா? ஆதலால், உன் உடலின் பிறப்புக்கு முன்னும் அதன் மரணத்திற்குப் பின்னும் உள்ள உன் நிலை இங்கேயே இப்போதே தெற்றென உணரப்பட்டதாகின்றதே! தூக்கத்திலும் விழிப்பிலும் நீ, உடல் மனத்திற்கு வேறாக இருப்பதை இப்போது நீ அறிய முடிவதால், இந்த உன் வாழ்நாளிலும், இப்போதுள்ள உன் உடல் பிறந்ததற்கு முன்னும், இவ்வுடலுக்கு இனி வரும் மரணத்திற்குப் பின்னும் (இறப்பின் பின் உள்ள நிலையே பிறப்பின் முன் உள்ள நிலையும் ஆகும்) உடல் மனத்திற்கு வேறான ஓர் வஸ்துவாக நீ என்றும் விளங்குவதை நீயே அறிந்துகொள்ள முடியும்.

மேலும், உலகத்தை அறிய ஒளியும், உடலின் பொறி புலன்களும், மனமும் உனக்கு இதர உதவிகளாகத் தேவைப்படுகின்றன. ஆனால், உடல் மனமற்ற சூன்ய நிலையாகிய தூக்கத்திலும் நீ உன் இருப்பை அறிய எந்த இதர உதவி உனக்குத் தேவையாயிருந்தது? ஒன்றுமில்லையே! எனவே, நீ உன் இருப்பை எப்போதும் அறிய வேறு எது ஒன்றின் உதவியும் உனக்குத் தேவையில்லையே !

வினா: ‘ஒளி உனக்கு எது?’

விடை: ‘(எனக்கு) பகல் இனன்; இருள் விளக்கு’

வினா: ‘ஒளி உணர் ஒளி எது?’

விடை: ‘கண்!’

வினா: ‘அது உணர் ஒளி எது?’

விடை: ‘ஒளி, மதி.’

வினா: ‘மதி உணர் ஒளி எது?’

விடை: ‘அது அகம்!’

‘ஒளிதனில் ஒளியும் நீ’ எனகுரு

‘அகம் அதே!’

(உள்ளது நாற்பது-அனுபந்தம் 7)

சத்தியத்தின் மேற்கண்ட மூவித லக்ஷணங்களையும் பொருந்தப் பெற்றுள்ள உன்னை இவ்வாறு நன்றாக ஆராய்ந்து அறிந்து கொள்.

மனிதன்: ஆம்; நானே சத்தியப் பொருள் (ஸத்வஸ்து) என்ற முடிவுக்கல்லவோ வரவேண்டி இருக்கின்றது! அங்ஙனமாயின், இவ்வளவு காலமாய் என்னிடம் யாதொரு பிரதிப் பிரயோஜனமும் எதிர்பாராமல் நான் கேட்டதெல்லாம் அளித்து வந்த கருணாமூர்த்தியும், என் உயிரினும் இனியவராய் நான் உணர்ந்து என்னால் அன்பு செலுத்திவரப் பெற்றவருமான என் இஷ்ட தெய்வம் என்ன ஆவது? அவர் யார்? அவரிடம் நான் கொண்டிருந்த பக்தியும், என்னிடம் அவர் காட்டிய அவ்வியாஜ கருணையும் வெறும் அசத்திய உணர்ச்சிகளா? அவையெல்லாம் வீணா? எனது இக்குழப்பத்தையும் தயை கூர்ந்து நீக்கியருள்க.

குரு: உனக்கு அன்னியமாக அன்பு ஒன்று இருக்குமாயின், சத்திய வஸ்துவின் ஏகத்துவத்திற்கு ஹானி உண்டாகிறதல்லவா? அது மறைமுடிவின் தீர்ப்புக்குப் பொருந்தாததாகிவிடும், எனவே, நீயே அன்பு! அன்பு நீயாகவேதான் இருக்க வேண்டுமே தவிர, அன்பு உனக்கு அன்னியமானதோர் ஸத் ஆக முடியுமா? சத்தாகிய உன்னை அறிவது என்பது இதரப் பொருள்களின் அபேக்ஷையின்றித் தாமாகவே நடைபெறுவதால் அறிவும் நீயே ஆவது போலவே, உன்னிடம் காணப்படும் அன்பின் உணர்வு எதுவும் (நீ உன் தெய்வத்தை நேசித்த நேசமும், அவருக்கு உன்னிடம் இருப்பதாக நீ கண்ட நேசமும் – எந்த நேசமும்) உன்னைத் தவிர வேறாகாது! ஏனெனில், நீயே அன்பும் (ஆனந்தமும்) ஆகிறாய். உன் நிஜ சொரூபம் சத்-சித் ஆனந்தமேயாகின்றது.

மனிதன்: அன்பே நான் என்பதின் அனுபவம் எனக்கு உண்டா? மனத்தின் இருப்பையும் அதன் அபாவத்தையும் (இன்மையையும்) நான் அறிய முடிவதால், ‘அறிவும் நானே’ என்று ஒத்துக்கொள்வது என் அனுபவத்திற்கு உட்பட்டதாய் இருப்பதைத் தாங்கள் கிருபையோடு சற்றுமுன் விளக்கினீர்கள். அதுபோல ‘அன்பும் நானே’ என்பதற்கு எனக்கு அனுபவம் இருக்க முடியுமா? தயை கூர்ந்து விளக்கியருள்க.

குரு: சற்று ஆராய்ந்தால் நீயே அறிவாய். ஸத் பொருளாகிய நீ சித் சொரூபம் ஆவாய் என்பதை நீ சற்றுமுன் ஆராய்ந்ததால் உன் அனுபவத்திலேயே பெற முடிந்ததைப் போலவே, ஸத் ஆகிய நீயே ஆனந்தமும் – அன்பும் – பிரியமும் – ஆவாய் என்பது உன் அனுபவத்தில் உள்ளதே என்பதையும் நீ சிறிது ஆராய்ந்தால் அறியலாம்.

மனிதன்: நான் எப்படி ‘அன்பு’ ஆவேன்? எப்படி ஆராய்வது?

குரு: நீ இப்போது விரும்பி இங்கு வந்தது எதை? உன் இஷ்ட தெய்வத்தையே அல்லவா? அவ்விஷ்ட தெய்வத்தை நீ ஏன் விரும்பினாய்? அதற்குமுன் நீ விரும்பிய உலகப் பொருள்களையெல்லாம் உனக்கு அளித்தவர் உன் இஷ்டதெய்வம் என்ற காரணத்தால் தானே நீ அவரை விரும்பினாய்? அவற்றை அவர் உன்னைத் தவிர மற்றவர்களுக்கு மட்டும் கொடுத்து வந்திருப்பாராயின் நீ அவரை விரும்பி வந்திருப்பாயா?

மனிதன்: இதற்குமுன் உலகப் பொருள்களுக்காக அவரை நான் விரும்பினேனாயினும் இப்போது நான் என் இஷ்ட தெய்வத்தை மட்டுமே விரும்புகிறேனே. இதுவும் சுயநலமா?

குரு: அவர் இப்போது யாதொன்றும் உனக்கு அருள வேண்டியதில்லை என்றும், உன்முன் எழுந்தருளி அளவளாவி இருந்தால் மட்டுமே போதும் என்றும், சுயநலமற்றவன் போல் வேண்டிக் கொள்கிறாயே! அவர் இப்போது உன்னைத் தவிர மற்றவர்கட்கே தரிசனம் அளித்து அளவளாவி வருகிறார் என்றும், இனி ஒருபோதும் உனக்குக் காட்சி தருவதில்லை என்ற முடிவுடன் இருப்பதாகவும் நீ அறிய வருகிறாய் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீ அவரை நேசிப்பாயா? இவ்வாறு அவருடைய அன்பை நீ ஆகிய எந்த ஒரு லக்ஷியத்தின் மேல் எதிர்பார்க்கிறாயோ அதையல்லவா நீ உண்மையில் விரும்புகிறாய் – பக்தி செய்கிறாய் என்று அர்த்தமாகின்றது? இது குறித்தேயன்றோ மறைகள், ‘ஆன்மாவின் பொருட்டே சகலமும் நேசிக்கப்படுகின்றன; ஆன்மாவே பரமப்பிரிய வஸ்து’ என்று கோஷிக்கின்றன! எனவே, நீயே (ஆன்மாவே) அனைத்தினும் பிரியமானவன்!

மனிதன்: ஆ! என்ன ஆச்சரியம் இது! நன்கு விசாரித்துப் பார்க்கின், என் பிரியம் முழுவதும் என்மேலேயே – என் இஷ்ட தெய்வ பக்திகூட மறைமுகமாக என் சுயநலத்தை101 முன்னிட்டே – என்றல்லவோ தீர்மானமாகின்றது!

சரி, அது இருக்கட்டும். என் இஷ்ட தெய்வமானவர் எதை முன்னிட்டு அத்தகைய அளவிலா அவ்வியாஜ கருணைவடிவான அன்பை என்மேல் கொண்டிருந்தார்? அவ்வன்பின் விளக்கம் என்ன?

குரு: உன்னால் அவருக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. அப்படியிருந்தும் அவர் யார்மேல் அன்பு கொண்டிருந்தார்? உன் மேல்தான்; அல்லவா? உன்னிடமிருந்தும் உன் இஷ்ட தெய்வத்தினிடமிருந்தும் (இரு முனைகளிலிருந்தும்) அன்பின் லக்ஷிய வஸ்துவாக நீயே சுட்டப்படுகிறாயல்லவா? இதிலிருந்து அவ்வன்பின் பூரண வடிவம் நீயே என்பது விளங்கவில்லையா? உன் இருப்பை அறியும் அறிவு எப்படி நீயேயாகிறாய் என்பதைச் சற்றுமுன் கண்டறிந்தாயோ அப்படியே உன்னை நேசிக்கும் சுபாவ அன்பு வடிவம் (உன் இஷ்ட தெய்வம் – நீ, ஆகிய இருவரும்) நீயேயாகின்றாய் என்பதை இப்போது அறிகிறாய்! இவ்வாறு சத்-சித் ஆகிய நீயே ஆனந்தமும் (அன்பும்) ஆகிறாய். எனவே, சத்-சித்தாக நீ உன்னை அறிவதே நீ அடையும் பேரானந்தம். உன் இஷ்ட தெய்வத்தின் மித்யாம்சங்களான நாம ரூபங்களைத் தள்ளிவிட்டு சத்யாம்சங்களான இந்த சச்-சித் ஆனந்தத்தை நீ அடைவதே உன் இஷ்ட தெய்வத்தை சாசுவதமாக நீ அடைவதும் ஆகும். இதை அறிந்து, அனுபவித்து, அமர்க.

எப்பெயரிட் டெவ்வுருவி லேத்தினுமார் பேருருவில்

அப்பொருளைக் காண்வழிய தாயினுமம் – மெய்ப்பொருளின்

உண்மையில்தன் உண்மையினை ஓர்ந்தொடுங்கி ஒன்றுதலே

உண்மையிற் காணல் உணர்.

(உள்ளது நாற்பது 8102 )

தேற்று முபாசனையாற் சேருந்தெய் வம்பலவும்

தோற்றமறை வுற்றுத் தொலைதலால் – தேற்றமோ

டென்றுமுள தாந்தன் னியற்கையே மாறாது

நின்றபர தெய்வ நிஜம்.

(குருவாசகக் கோவை 1073)

இதைக் கேட்ட அம்மனிதன் அன்பு பொங்க, மெய்சிலிர்த்து, குருவின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, வீடு திரும்பினான்.

இரவும் பகலுமாகச் சிலநாள் அவனது புத்தி சற்குருவினிடம் பெற்ற அத்வைத உபதேசத்தையே பன்னிப் பன்னிச் சிந்தித்து நிதித்தியாசனம் அடைய ஆரம்பிக்கின்றது; ‘ஆம், உண்மைப் பொருளை நோக்கி என்னைத் திருப்பிவிட்ட என் சற்குருநாதனானவர் என் இஷ்ட தெய்வத்தைத் தவிர வேறு யாருமாக இருக்கவே முடியாது! இத்தனைக் காலமாய் என்மீது இவ்வளவு பிரியமும் பொறுப்பும் கொண்டிருந்தவர் என் இஷ்ட தெய்வமான முருகனே. ஆயினும் நான் கேட்ட உலகப் பொருள்களையே கொடுத்துவந்த என் இஷ்ட தெய்வத்தினும் பன்மடங்கு அதிகமாய், எனக்கு உண்மை வழிகாட்டிப் பெருநலம் விளைவித்த என் சற்குருநாதனே இப்போது என்னால் அடையத்தகுந்த ஒரே ஒரு உத்தமப் பொருளாவர் என்று உணர்கிறேன்! ‘இனி, எனக்கு நீங்களே வேண்டும்; தந்தருள்க’, என்று கடைசியாக நான் என் இஷ்ட தெய்வத்தினிடம் வேண்டி நின்ற வரத்தை இப்போதே தந்தருளப் பெறுகின்றேன் போலும்! என் இஷ்ட தெய்வம் இப்போது இப்படி என் குருநாதனாக அவதரித்திருப்பதே அவர் தன்னை எனக்குக் கொடுத்தருள்வதாகிறது! ஏதோ ஓர்கால் தோன்றித் தரிசனம் தந்து பிறகு மறைந்துவிடும் இஷ்ட தெய்வம் போலன்றி, என்போன்றதொரு மனித வடிவில் அல்லும் பகலும் எழுந்தருளியிருந்து வாழ்ந்து வரும் சகுணக் கடவுள் சொரூபமான என் சற்குருநாதனே இனி என் உண்மையான இஷ்ட தெய்வமாகும்! அவரது திருவடியில் என்றும் வாழும் பேறே நான் என் இஷ்ட தெய்வத்தைக் கேட்ட வரம். இனி, எனக்கு இங்கு (வீட்டில்) என்ன வேலை? ஒன்றுமில்லை! என்று தீர்மானித்த அம்மனிதன், தன்னுள் மலர்ந்த குருபக்தியால் ‘தனது’ என்பதை யாவற்றையும் விட்டு, முற்றிலும் துறந்து, தன் எஞ்சிய வாணாளைச் சற்குரு திருவடி நிழலிலேயே கழிக்க முடிவு செய்து, குரு சந்நிதிக்கே வந்து விடுகிறான்!

இப்போதுதான் இவன் குருபக்தியை அடைந்தவனாகிறான். இஷ்ட தெய்வ பக்தியானது குருபக்தியாக முற்றிப் பழுக்கின்றது! பக்திப் பள்ளியில் படிப்படியாகச் சுத்தீகரிக்கப்பட்ட அன்புணர்வு இப்போது ‘குரு பக்தி’ எனப்படும் நான்காம் வகுப்பை அடைகின்றது. இந்நான்காம் வகுப்பாகிய குருபக்தியே துவித பக்தியின் எல்லை. இதனினும் சிறந்த வடிவில் துவித பக்தியை எவ்விதத்தும் ஒருவன் அடைய முடியாது.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:

குருஸ் ஸாக்ஷாத் பரப்ரம்மம் தஸ்மை ஸ்ரீ குரவே நம:

திரிமூர்த்திகளும் குருமூர்த்தியும் ஒன்றே! இத்தகைய சற்குரு பக்தி தலையெடுத்துவிட்டால், பிறகு ஒருவனின் மோக்ஷ யாத்திரை கங்கையில் விழுந்த மழைத்துளியேயாகின்றது.103 ஒருவன் உண்மையான குரு ஒருவரை அடைவதும் அவரிடம் உண்மையான குருபக்தியை அடைவதும் பக்தி சுத்தீகரிக்கும் நம் பள்ளியின் நான்காம் வகுப்பில்தான் நிகழ்கின்றன. தன் சற்குருவைச் சார்ந்து அவரது திருவடியில் வாழ்ந்திருப்பதே தன் இஷ்ட தெய்வத்தை மீண்டும் பெற்று அவருடன் வாழ்வதாகும் என்ற விவேகம் அம்மனிதனுக்கு உதித்தவுடன், இஷ்ட தெய்வத்தைப் பெறவேண்டும் என்று இதற்குமுன் எழுந்திருந்த பேராவல் தாமே மங்கி மறைந்தது! இவ்வாறு அவன் சகலவிதமான வெளிப்பொருள்களின் ஆவலும் (இஷ்ட தெய்வக் காதல் உள்பட) உயர்ந்த விவேகத்தால் தாமாக ஓய்ந்து விடலும், சந்தோஷ சிந்தனாய் – ஆனந்தனாய் (விவேகானந்தனாய்), தன் சற்குரு சந்நிதிமாத்திரத் திருப்தனாய் குருவின் திருவடி நிழலில் வந்தமர்கிறான்!

துவித பக்தியின் வகைகள் அனைத்தினும் மிக உன்னதமானதாய் விளங்கும் குருபக்தி இவ்வளவு உயர்ந்த நிலையாயிருக்க, நாம் ஒவ்வொருவரும் அடைந்து விட்டதாக எண்ணிக்கொண்டிருக்கும் நம் குருபக்தி நிலையின் உண்மையைச் சிறிது ஆராய்வோம்!

ஆதியில், அன்புணர்ச்சி சிறிதும் பண்படாத மிருக மனிதன் நம் ஓராசிரியர் பள்ளியின் முதல் வகுப்பிற் சேர்ந்தபோது, அவ்வேதமாகிய தன் ஆசிரியரிடம் அவன் கொண்டிருந்த பக்தியும் ஒருவித குருபக்தியே அல்லவா? நமது விளக்கத்தின் சௌகரியத்தை முன்னிட்டு வேதங்களை ஓர் ஆசிரியராகவும், மனித சமூகம் முழுவதையும் ஒரு மனிதனாகவும் கூறி வருகிறோமென்றாலும், இது நடைமுறையில் எவ்விதம் செயல்படுகின்றது என்பதையும் பார்ப்போம். முதல் வகுப்பிற் போதிக்கப்படும் வேதத்தின் கர்ம காண்டப் பகுதியின் கணக்கற்ற பிரிவுகளுள் ஒவ்வொன்றிற் கைதேர்ந்துள்ள சாஸ்திரிகளும் பண்டிதர்களும் ஆங்காங்கே இருந்து வருகின்றனரல்லவா? அவர்களிடமிருந்தே மனித சமூகம் அவ்வக் கர்மங்களை இயற்றும் முறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அதனால் அந்த சாஸ்திரப் பண்டிதர்கள் ஒவ்வொருவரும் அவ்வப்பகுதியைப் போதிக்கும் ஓர் ‘குரு’ ஆகின்றனர்! எனவே, முதல் வகுப்புக்குக் குருமார்களாய் இருப்பவர்களும் பற்பலர்; அவர்கள் ஒவ்வொருவரிடம் கர்ம நெறி பயிலும் சீடர்களும் எண்ணற்றவராவர். இவ்விதம், முன்பு முதல் வகுப்பிற் படித்துக்கொண்டிருந்த நம் மனிதனைப் போன்ற மக்களாகிய பல்வேறு சீடர் கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் கர்ம காண்டப் பகுதிகளைப் போதித்துவரும் பற்பல குருமார்கள் மனித சமூகத்தில் இருந்து வருகின்றனர். இத்தகைய முதல் வகுப்புக் குருமார்களும் சீடர்களும் நம்மிடையே முன்பும் இருந்தனர்; இன்றும் இருந்து வருகின்றனர்; இனியும் என்றும் இருந்தே வருவர். அந்தச் சீடர் கூட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் வாய்த்துள்ள ஒவ்வொரு குருவையும் அச்சீடர் கணத்திலுள்ள ஒவ்வொருவரும், ‘எனது குரு ஒருவரே மிக உயர்ந்த சற்குரு!’ என்று கூறிக்கொள்வதிலும் வியப்பொன்றுமில்லை! இச்சீடர்கள் தத்தம் குருமார்களிடம் கொண்டிருப்பதும் ஒருவித குருபக்தியே! இந்தச் சீடர்களின் குருபக்திக்கும் இப்போது நான்காம் வகுப்பை அடைந்துள்ள நம் மனிதனின் குருபக்திக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்கும் போன்ற பெரும் வித்தியாசத்தை இப்போது நாம் உணர முடிகிறதல்லவா?

முதல் வகுப்பிலுள்ள மக்களுக்கு அவர்களது (விஷயபக்தி) விஷய விருப்பங்கள் நிறைவேறும்படி போதித்து உதவி செய்யக் கணக்கற்ற குருமார்கள் இருப்பது போலவே, இரண்டாம் வகுப்பிற் பயிற்சி பெறும் எண்ணில்லாத மக்களுக்கும் நானாதெய்வ நாமரூப உபாசனைகளால் விஷய வேட்கைகளை (காமியங்களை) நிறைவேறும்படி உபதேசம் செய்ய நம்மிடையே கணக்கற்ற குருமார்களும் இருந்தே வருகின்றனர்! கலப்பற்ற காமிய நோக்கமாகிய விஷய பக்தியோடு முதல் வகுப்பில் கர்ம காண்ட(வேத)ப் பகுதியைப் பயிலும் மக்கள் அதை தமக்குப் போதிக்கும் வேத ஆசிரியரிடம் கொள்ளும் பக்தியும் ‘குருபக்தி’ என்றே மயங்குவது போல, இரண்டாம் வகுப்பில் நானா தெய்வோபாசனைகளைச் செய்துவரும் மக்களும் தத்தம் விஷய வேட்கைகளுக்குதவும் உபாசனா மார்க்கங்களைப் போதிக்கும் பற்பல குருமார்களிடம் கொள்ளும் பக்தியும் ‘குருபக்தி’ என்றே கருதப்படுகின்றது! மூன்றாம் வகுப்பின் (a) பிரிவில் கற்பவருட் சிலர் நாமரூப தெய்வ தரிசனம் பெற்றிருந்துங்கூட, விஷய ஆசைகளோடு சித்திகளின் மேல் விருப்பமும் கொடிய புகழாசையும் கொண்ட காரணத்தால் தன் ஆன்ம முன்னேற்றம் தடைப்பட்டு, வழி தவறி வீணாகின்றனர் என்று பக்கங்கள் 86,87-ல் குறிப்பிட்டோமல்லவா? இப்படிப்பட்டவர்களை ‘இவர் கடவுளைக் கண்ட மஹான்’ என்று புகழ்ந்து, இரண்டாம் வகுப்பில் நானாதெய்வ உபாசனைகளைக் கற்றுக்கொள்ள விரும்பி நிற்கும் பற்பல மக்களும் தத்தம் சற்குருவாகக் கொள்கின்றனர்! இவ்விரண்டாம் வகுப்பில் கோடிக்கணக்கான மக்கள் பயிற்சி பெறுவதாலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள எண்ணிறந்த ஆசைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக்கொள்ள கணக்கற்ற நாமரூபத் தெய்வங்களை உபாசிக்க வேண்டியிருப்பதாலும், நம் பக்திப் பள்ளியின் இரண்டாம் வகுப்பிற்குக் குருக்களும் கோடிக்கணக்கில் இருக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை அல்லவா?

‘அதோ, அவ்வூரில் ஓர் பெரிய மகான் இருக்கிறார்! அவர் லக்ஷ்மி உபாசனையில் சித்தி பெற்றவர்! அவரிடம் போனால் நமக்கு ஐசுவரியம், கீர்த்தி எல்லாம் உண்டாகும்!... இதோ, இங்கு ஒரு சுவாமி இருக்கிறார்! அவருக்கு அம்பாள் பிரத்யட்சம்! நாம் நமது சகல காமியங்களையும் பெற அவர் பிரசாதம் தருகிறார்!... அந்த மலைமேல் ஓரிடத்தில் ஓர் பெரியவருண்டு! சாட்சாத் முருகனே அவர் மூலம் பேசுகிறாராம்! அவர் விபூதி கொடுத்தால் நடக்காததெல்லாம் நடக்கிறதாம்!!’ என்று கூறிக்கொண்டு, மக்கள் (பாமரராயினும் சரி, படித்த பட்டதாரிகளோ, பதவியாளர்களோ ஆயினும் சரி) அங்குமிங்கும் ஓடி அவர்களிடம் கூட்டமிடுவதை நாம் பலவாறும் காண்கிறோமன்றோ? இவர்களிடம் போய் வரும் (இரண்டாம் வகுப்பு மாணவர்களாகிய) இம்மக்களைக் கேட்டால், ‘ஆகா...எனப்படும் இன்னார்தான் இன்று கடவுளைக் கண்ட மகான்! அவர் கால்கொண்டு நடமாடும் கடவுள் – மஹர்ஷி; அவரிடம் போங்கள்; எல்லாம் சித்தியாகும்’ என்று உத்வேகமும் உற்சாகமும் ததும்ப அவர்கள் தமது சற்குருவைச் சிபாரிசு செய்வார்கள்!! இம்மக்கள் தத்தம் குருவிடம் கொண்டுள்ளதும் ஒருவித குரு பக்தியே! இந்த ‘மகாத்மாக்கள்’ எல்லாம் நம் பக்திப் பள்ளியில் முதல்-இரண்டாம் வகுப்புகளுக்கு வேதத்தின் பிரிதிநிதிகளான ஆசிரியர்களாயிருந்து போதித்து வருகின்றனர்!

பக்திப் பள்ளியில் மூன்றாம் வகுப்பின் (a) பிரிவிலிருக்கும் சாதகன் ஒருவன் தனது ஏக தெய்வ பக்தியால் தன் இஷ்ட தெய்வத்தின் சத் சங்கத்தைப் பெற்று அவருடன் அளவளாவி மகிழ்ந்து வருவதால், தன் முன்னேற்றத்திற்காக இனி யாரொருவரிடமும் – தன்னை மூன்றாம் வகுப்பிற்குத் தேறச்செய்த ஆசிரியராகிய வேதத்தினிடங்கூட – போகவேண்டிய அவசியமற்றவனாக இருக்கிறான். ஏனெனில், வேதம் என்பது காமிய விஷயப் பொருள்களைத் தற்போது கொடுத்துவரும் இஷ்ட தெய்வத்தினும் வேறொன்றாக எப்படியிருக்க முடியும்? தன் இஷ்ட தெய்வம் ஒன்றைத் தவிர ஏனைய நாம ரூபக் கடவுளர்களிடம் தரிசிக்கச் செல்வதோ அல்லது மேலே கூறிய பற்பல குருமார்களிடம் ஒடியலைவதோ ஏக பக்தியிற் சிறந்த இச்சாதகனின் தற்போதுள்ள இயல்புக்குச் சிறிதும் பொருந்தாத காரியமாகி விடுகின்றது!

சிலசமயம் ஒரு விநோதம் நேருவதும் உண்டு! பரிசுத்த தெய்வ பக்தி மேலிட்டு, பரிபூரண விஷய விரக்தி பெற்று, நான்காம் வகுப்பாகிய உன்னத குரு பக்திக்குத் தகுதியடைந்துள்ள நம் மனிதனைப் போன்ற ஒருசில சாதகர்களுங்கூட சிற்சில சமயம் முதல்-இரண்டாம் வகுப்பு குருமார்களாகிய கர்ம காண்டப் பண்டிதர்கள் – உபாசகர்களிடமும் - மூன்றாம் வகுப்பு (a) பிரிவில், நாம் முன்பு கூறியபடி தம் முன்னேற்றம் தடைப்பட்டு வழி தவறிய ‘மகாத்மா’க்களிடமும், அவர்களது சீடர்களின் பிரசார மகிமையால் தூண்டப்பட்டு வந்து சேருவதுமுண்டு!! ஆனால், வெகுசீக்கிரம் இவ்வுத்தம சாதகர்கள் அவ்விடம் விட்டு விலகிவிடும்படி – அவர்களது நன்மையை முன்னிட்டு – திருவருளே கூட்டுவிக்கும். புத்தர் நாடு துறந்து உண்மைப் பொருளை நாடிக் காட்டில் அலைந்து திரிந்தபோது, நம் பக்திப் பள்ளியின் முதல்-இரண்டாம் வகுப்புகளுக்கே உரிய ஆசிரியர்களான, பற்பல, கர்மகாண்டப் பண்டிதப் பெரியோர்களிடம் வந்து சிக்கிக்கொள்ள நேர்ந்ததுண்டு! ஆனால், அவர் வெகுவிரைவில் அவர்களது சகவாசம் பயனற்றதை உணர்ந்து அவர்களை உதறிச் சென்றுவிட்டார்! நம் பக்திப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு (b) பிரிவிலிருக்கும் சாதகன் ஒருவனின் ஞான தாபாக்கினியின் உக்கிர ஜ்வாலையின் முன் இத்தகைய குருமார்களின் நிஷ்பிரயோஜனம் வெட்ட வெளிச்சமாவதில் வியப்பொன்றுமில்லை! பைரவி, பிராம்மணி போன்ற யோகியர்கூட சிலசமயம் ஒதுக்கப்பட வேண்டிய நிலை ஸ்ரீ இராமகிருஷ்ணருக்கு ஏற்பட்டது இங்கு நினைவுகூரத் தக்கது. சிலசமயம் இக்குருமார்கள் தம்மிடம் கவர்ச்சியிழந்து, தம்மை நீங்கி மேலே நான்காம் வகுப்பை நோக்கித் தீவிரமாக முன்னேறும் சாதகன் ஒருவனை ‘பக்தியற்றவன்! குருத் துரோகி! நன்றி கெட்டவன்!’ என்றுகூடத் தூற்றுவதுண்டு! ஆயினும், உத்தம பக்தருட் சிறந்த மாணிக்கமான இச்சாதகன் மனத்தாலுங்கூட இவர்களுக்கு யாதொரு அவமரியாதையும் செய்யாதவனாய், தன் குறிக்கோளையே நோக்கி முன்னேறிச் செல்கின்றான். மெய்ப்பொருட் காதல் மிகுந்த அவனது பக்தி வெள்ளப்பெருக்கில் இப்படிப்பட்ட ‘மகாத்மாக்க’ளிடம் தான் சென்றதால் வீணாக்கப்பட்ட நாட்களை எண்ணிக் கழிவிரக்கம் கொள்ளவோ, அல்லது அவர்களை வெறுக்கவோ, அவமதிக்கவோ இவனுக்கு நேரம் ஏது? விருப்பு வெறுப்பற்ற உதாசீன பாவத்தோடு இவன் அவர்களை மறந்து மேலே சென்று விடுகிறான்!

பக்திப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு (b) பிரிவிலிருந்து நான்காம் வகுப்பிற்குச் செல்லும் அதி தீவிர முமுக்ஷுக்களிற் பலர், கீழ் வகுப்புக்களுக்கே தகுதியுள்ள, மேற்கூறிய, பற்பல குருக்கள் ஒவ்வொருவரிடம் சென்று சென்று ஏமாந்து அலுத்துத் திரும்புவதையும், அவர்களின் காலம் விரயமாவதையும் கருத்திற் கொண்டு, தற்காலத்தில் சிலர், இதுகாறும் இருந்துவரும் சீரிய வழக்கமான குரு-சிஷ்ய உறவே தேவையில்லை என்றும், சற்குரு ஒருவர் சீடனுக்கு ஞான விழிப்பருளுவது என்பதே மிகை என்றும் மக்களிடையே போதிக்கவேண்டி நேர்ந்துள்ளது! இவ்வாறு கூறப்படுவதில் உள்ள சாரம் உண்மையும் என்னவெனில், ‘நான்காம் வகுப்பிற்குத் தகுதிபெற்ற தீவிர முமுக்ஷு ஒருவன் மேற்கூறிய குருமார்கள் யாரிடமும் போய் அலைய வேண்டாம்; தக்க காலத்தில் தகுந்த சற்குருவை அவன் அடையும்படித் திருவருளே கூட்டுவிக்கும்’ என்பதே!

ஆயினும், வீணான பிழை வழிகளிற் சென்று கெடாதபடி உத்தம முமுக்ஷுக்களுக்கு மேற்கண்ட நல் எச்சரிக்கையைக் கொடுத்து உதவும் இவர்கள் தாம் செய்யும் இவ்வெச்சரிக்கையாகிய போதனையினாலேயே ஓர் குருவின் ஸ்தானத்தை வகிப்பவர்களாகி விடுகின்றனரல்லவா? வேதாந்த விரிவுரை நிகழ்த்துவதில் வாசாலகர்களான வெறும் உபந்நியாசர்களும், நம் பக்திப் பள்ளியில் - மூன்றாம் வகுப்பு (a) பிரிவில் பிரஷ்டர்களாகி, உபாசனா பலத்தால் சில சித்திகளைப் பெற்றுக் காமியங்களைச் சாதிக்கும் கீழ் வகுப்புப் போதகர்களும் தாமே பெரிய ‘குரு’ என்ற பாவனையுடன் செய்துவரும் ஆரவாரத்தால் சில உண்மை முமுக்ஷுக்கள் ஏமாற்றமடைவது உண்மையேயாயினும், ‘குரு’ என்னும் தத்துவமே (சற்குருவின் அருளுதவியே) வேண்டாம் என்று தீர்மானித்து விடுவது பேராபத்தான காரியமாகும்! இதுகுறித்தே ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவரும், ‘சிறிய நீர்ப்பாம்பு ஒன்று பெரியதோர் தவளையைக் கௌவிக் கொண்டால் பாம்பாலும் விழுங்க முடியாது; தவளையாலும் விடுபட முடியாது; இரண்டும் திண்டாடிச் சிரமமுறும்’ என்று கூறினர். தக்க குருவை அடைவது அவசியம் என்பதே இங்கு அறியவேண்டிய விஷயமாகும்.

தான் ஒரு மனிதன், ஒரு தனி வியக்தி என்ற ஜீவபாவம் இருக்கும் வரையில், வெளியிலும் தனக்கு மிக்கதாக, அப்பரம்பொருள் ஒரு வியக்தியாக இருந்தே தீரும்; இருந்தே தீரவேண்டும்; அதுவே சற்குரு! வெகு வெகு அரிதாக ஓரிரு உத்தமோத்தமத் தீவிர பக்குவிகட்கு மட்டுமே அப்பரம்பொருள் வெளியில் குரு வடிவத்தில் எழுந்தருளவேண்டிய அவசியமற்று, தம் அறிவிற்கறிவாய், ஆத்மாவாய், உள்ளிருந்தே வழி துலக்கி உண்மையை விளக்குவதுண்டு. எனினும், இது பொது விதி ஆகாது; விதி விலக்கே(exception)! ஆதி குரு தக்ஷிணா-மூர்த்தியும், புத்தரும், ஸ்ரீ ரமண பகவானும் போன்ற சிலரே இவ் விதிவிலக்கிற்கு இலக்கிய புருஷராவர். இத்தகையோர் பல்லாயிரம் வருடங்கட்கு ஒருவரே நம் சரித்திரத்தின் கண்களுக்குப் புலப்படுகின்றனரன்றோ?

இது போலவே மற்றொரு வித விந்தையும் சில சமயம் நேருவதுண்டு. விஷய பக்தி மட்டுமே கொண்டவர்களான முதல், இரண்டாம், மூன்றாம் (a) வகுப்புகளுக்குரிய மக்களுள் பற்பலருங்கூட, நான்காம் வகுப்புக்குரிய உத்தம பக்தர்களுக்காக அவதரித்துள்ள சற்குருவின் சந்நிதிக்கு வந்து சேருவதுண்டு! இவ்வாறு வந்துசேரும் விஷய பக்தர்களைப் பற்றி ‘இத்தகையோர் ஏனோ இங்கு வருகின்றனர்!’ என்னும் ஸ்ரீ ரமண பகவானது கருத்தைக் குருவாசகக் கோவையின் 605-ஆவது பாடல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

ஐம்புலத்தை யாற்ற வடர்த்தொழுகு மவ்வினத்தோ

டென்பொருட்டுக் கூடியொருங் கேய்கின்றார் – புன்புலத்துக்

கெண்பதத்தா லேங்கி யிளகிக் கரைந்தொழுகும்

பண்படா வுள்ளத் தவர்?

நித்திய வஸ்துவான பரப்ரம்மமே நரவுருத் தாங்கிவந்து எழுந்தருளியிருப்பவரான சற்குருவின் சந்நிதிக்கு, இவ்விஷய விருப்பமுள்ள மக்கள் தம் பிராரப்தத்திலுள்ள ஏதோ ஓர் புண்ணிய வசத்தால் வந்துசேர நேர்ந்தாலுங்கூட, தமது விஷய பக்திப் பொருள்களாகிய காமியங்களை நிறைவேற்றித் தரத்தக்க ஓர் சகாயியாகவேதான் இச் சற்குருவை ஏற்றுக்கொள்வர். தத்தம் காமியங்களையே வரமாக அவரிடம் வேண்டி அவரை நேசிப்பர். விஷயாதிகளை அடைவதற்கான சாதனைகளையே அருளும்படி வேண்டி நிற்பர். ஆகையால் அவரிடம் இவர்கள் கொள்ளும் அன்பு குருபக்தியாகவே ஆகாது! விஷய பக்தர்களாகிய இவர்கள், சற்குருவின் சந்நிதியில் வந்து அமர்ந்து,

அக்னாவிஷ்ணூ ஸஜோஷஸா...வாஜச்ச மே...க்ரதுச்ச மே...ஸுவச்ச மே...ஸஹச்ச மே...தனூச்ச மே...அங்கானிச மே...அஸ்தானிச மே பரூம்ஷிச மே சரீராணிச மே.

பொருள்: அக்னி தேவனே, மேலும் விஷ்ணு தேவனே! நீங்கள் என்னிடம் திருப்தியுற்றவர்களாக இருங்கள்...அன்னம் எனக்குக் கிட்டட்டும்...யாகமும் நான் செய்யட்டும்...சுவர்க்கமும் எனக்குக் கிட்டட்டும்...சத்துருக்களை வெல்லுந் திறமையும் எனக்குக் கிட்டட்டும்...எனக்கு உடலும் இருக்கட்டும்...(திடமாக) உறுப்புகளும் எனக்கு இருக்கட்டும்; (திடமான) எலும்புகளும் எனக்கு இருக்கட்டும்; (திடமான) கணுக்களும் எனக்கு இருக்கட்டும்; உடலிலுள்ள எல்லா அவயவங்களும் எனக்கு (திடமாக) இருக்கட்டும்.

(சமகம் 1)

ஜ்யைஷ்ட்யம்ச மே ஆதிபத்யம்ச மே மன்யுச்ச மே..ஜேமாசமே மஹிமாச மே வரி மாச மே...

பொருள்: மேன்மையும் எனக்கு உண்டாகட்டும்; தலைமையும் எனக்கு உண்டாகட்டும்; கோபமும் எனக்கு உண்டாகட்டும்... வெற்றித் திறமையும் எனக்கு உண்டாகட்டும்; வெற்றிப் பெருமையும் எனக்கு உண்டாகட்டும்; பூஜ்யதையும் எனக்குக் கிட்டட்டும்...

(சமகம் 2)

சம்சமே மயச்சமே ப்ரியம்ச மே அநுகாமச்ச மே காமச்ச மே... வஸ்யச்ச மே யசச்சமே பகச்சமே த்ரவிணம்சமே க்ஷேமச்சமே...மஹச்சமே...ஸூச்சமே ப்ரஸூச்சமே... ருதம்ச மே கும்ருதம்ச மே.. தீர்காயுத்வம்ச மே...

பொருள்: இவ்வுலக இன்பமும் எனக்கு உண்டாகட்டும்; மேலுலக இன்பமும் எனக்கு உண்டாகட்டும்; அவைகளிடம் எனக்குப் பிரியமும் உண்டாகட்டும்; அதனால் ஏற்படும் ஆசையும் எனக்கு உண்டாகட்டும்; அவ்வாசையின் அநுபவமும் எனக்கு உண்டாகட்டும்; நல்ல வாசஸ்தானம் எனக்கு உண்டாகட்டும்; புகழும் எனக்கு உண்டாகட்டும்; ஸௌபாக்யமும் எனக்கு உண்டாகட்டும்; செல்வமும் எனக்கு உண்டாகட்டும்... உடமையின் ரக்ஷணம் எனக்கு உண்டாகட்டும்... வெகுமானமும் எனக்கு உண்டாகட்டும்...மக்களை ஏவும் திறமும் எனக்கு உண்டாகட்டும்; பணியாட்களை நடத்தும் திறமையும் எனக்கு உண்டாகட்டும்; யாகம் முதலிய நற்கருமங்களும் எனக்குக் கிடைக்கட்டும்; அதன் புண்ணிய பலனும் எனக்குக் கிடைக்கட்டும்... நீண்ட ஆயுளும் எனக்கு உண்டாகட்டும்...

(சமகம் 3)

ஊர்க்சமே... பயச்சமே ரஸச்சமே க்ரதம்ச மே மதுச்ச மே... ஜைத்ரம்ச மே ஔத்பித்யம்ச மே ரயிச்சமே ராயச்ச மே புஷ்டம்ச மே புஷ்டிச்ச மே...

பொருள்: அன்னமும் எனக்குக் கிட்டட்டும்....பாலும் எனக்குக் கிட்டட்டும்; அதன் ஸாரமும் எனக்குக் கிட்டட்டும்; தேனும் எனக்குக் கிட்டட்டும். நெய்யும் எனக்குக் கிட்டட்டும்... வெற்றியளிக்கும் பூமியும் எனக்குக் கிட்டட்டும்; மரம் செடி கொடிகளின் உற்பத்தியும் எனக்குக் கிட்டட்டும்; பொன்னும் எனக்குக் கிட்டட்டும்; மணிகளும் எனக்குக் கிட்டட்டும்; செல்வத்தின் செழிப்பும் எனக்குக் கிட்டட்டும்; திடகாத்திரம் எனக்கு உண்டாகட்டும்...

(சமகம் 4)

அச்மாச்ச மே ம்ருத்திகாச மே கிரயச்சமே பர்வதாச்சமே ஸிகதாச்ச மே வனஸ்பதயச்சமே ஹிரண்யம்ச மே குயச்சமே ஸீஸம்ச மே த்ரபுச்ச மே ச்யாமம்ச மே லோஹம்ச மே.... வஸூசமே வஸதிச்சமே கர்மச மே சக்திச்ச மே குர்த்தச்சமே...

பொருள்: கல்லும் எனக்குக் கிட்டட்டும்; மண்ணும் எனக்குக் கிட்டட்டும்; குன்றுகளும் எனக்குக் கிட்டட்டும்; மலைகளும் எனக்குக் கிட்டட்டும்; மணல்களும் எனக்குக் கிட்டட்டும்; மரங்களும் எனக்குக் கிட்டட்டும்; பொன்னும் எனக்குக் கிட்டட்டும்; எஃகும் எனக்குக் கிட்டட்டும்; ஈயமும் எனக்குக் கிட்டட்டும்; துத்தநாகமும் எனக்குக் கிட்டட்டும்; இரும்பும் எனக்குக் கிட்டட்டும்; தாமிரமும் எனக்குக் கிட்டட்டும்... ஜங்கம சொத்தும் எனக்குக் கிட்டட்டும்; ஸ்தாவர சொத்தும் எனக்குக் கிட்டட்டும்; அக்னி ஹோத்ரம் போன்ற கர்மங்களும் எனக்குக் கிட்டட்டும்; செயல்திறமையும் எனக்குக் கிட்டட்டும்; (அவைகளின்) நற்பயனும் எனக்குக் கிட்டட்டும்...

(சமகம் 5104 )

என்று வேதம் ஓதிப் பிரார்த்தித்து நிற்பர்!! ‘நான்-எனது’ என்ற அகங்கார மமகாரங்களாகிய சித்தமலங்கள் அழியவேண்டிப் பிரார்த்திக்கும் உத்தம பக்தனாகிய மூன்றாம் வகுப்பு (b) பிரிவிலும் நான்காம் வகுப்பாகிய குருபக்தியிலும் திளைத்து நிற்கும் சீடர்கள் எங்கே; மேற்கூறியவாறு சற்குரு சந்நிதியில் வேட்கை நிறைவேற வேதமோதும் சீடர்கள் எங்கே! இவ்விரு சாராரும் அந்த சற்குருவினிடம் குரு பக்தியுள்ளவர்களாகவே காணப்பட்டாலும் நான்காம் வகுப்பாகிய சற்குரு பக்திக்கும் இக்காமிய விஷயிகளின் குரு பக்திக்கும் உள்ள வேறுபாட்டை வாசகர்கள் கண்டுணர்க. பாராளும் சக்கரவர்த்தியாகிய ஓர் வள்ளலிடம் பழங்கூழ் யாசிக்கும் இவர்கள் நிலை:

...வேம்பன்றோ, காக்கை விரும்புங் கனி!

மணமும் சுவையும் மலிந்த கனிகள் நிறைந்த பழத்தோட்டமேயாயினும் அங்கு செல்லும் காகம் வேப்பம் பழத்தையே விரும்பிப் புசிக்கிறதன்றோ!!

ஆயினும், இச்சா சங்கற்ப யத்தனம் சிறிதுமின்றியுள்ள ஆதித்தனைப் போல எழுந்தருளியிருக்கும் சற்குருவின் சந்நிதி மாத்திரமே, வேண்டுவோர் வேண்டிய வண்ணம் ஈந்தருளுங் கற்பகத் தருவாக இயங்குவதும் உண்மையேயாகையால், சற்குருவின் சந்நிதியில் இவ்விஷய பக்தர்களின் காமியக் கோரிக்கைகள் தாமாகவே நிறைவேறப் பெறுவதுமுண்டு. இவர்கள், தத்தம் காமியங்களை நிறைவேற்றித் தரும்படி பிரார்த்திப்பதோடு மட்டும் நின்று விடுவதில்லை. முதல், இரண்டாம், மூன்றாம் (a) பிரிவு வகுப்புகளிலேயே உள்ள இம்மக்கள் தத்தமக்குரிய கர்மானுஷ்டானங்கள், மந்திர தீக்ஷை, தெய்வோபாசனைகளுக்கான பூஜா விதிகள் முதலியவற்றையும் தமது திருவாக்கால் உபதேசித்தருளும்படி அந்த சற்குருவினிடம் யாசிப்பர்! வேறெங்குமே கற்றடையக் கூடாததும், குரு பக்தியினும் சிறந்ததும், சுத்தீகரிக்கப்பட்ட பக்தி நிலைகள் யாவினும் உயர்ந்ததுமான ஸ்வாத்ம பக்தியை நான்காம் வகுப்பிலுள்ள உத்தமாதிகாரிகளுக்கு உபதேசிப்பதற்கென்றே அவதரித்துள்ளவராய் இருந்துங்கூட, சிற்சில சமயம் சற்குருவானவர் விஷயப் பொருள்களுக்காகவே பிரார்த்தித்து நிற்கும் மற்றவர்களிடம் அவர்களது அறியாமைக்கு இரங்கி, அவர்களது பக்திக்குரிய முதல் வகுப்பிலுள்ளவர்களுக்கான கர்மானுஷ்டான நெறிகள் சிலவற்றையும் இரண்டாம் வகுப்பிலுள்ளவர்களின் நானா தெய்வோபாசனைகளுக்கேற்ற ஸ்ரீ சக்கரப் பிரதிஷ்டை பூஜைகள் போன்றவைகளையும், மூன்றாம் வகுப்பின் (a) பிரிவிலுள்ளவர்களுக்கான சில தோத்திரப் பாக்களையும், நாம ஜபங்களையும், அவரவர் வேண்டுகோள், விருப்பம், தகுதிக்குத் தக்கபடி – கீழ் வகுப்பு நெறிகளையும் அருளிச்செய்து உதவி புரிவதுமுண்டு. ஒரு தாய் தன் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு ஒரு விதமும், நோயுற்றவர்களுக்கு மற்றொரு விதமும், ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு இன்னொரு விதமும், வயதானவர்களுக்கு வேறொரு விதமுமாக, அவரவர் ஜீரண சக்திக்கு ஏற்ற பேத உணவு வகைகளைத் தயாரித்து அளிப்பது போலவே, சற்குருவானவர் தம்மிடம் உலக விஷயப் பொருள்களின் பேற்றுக்காகவே வரும் காமியார்த்திகளுக்கும் அவரவர்க்கேற்ற உதவி செய்தருளுவதில் வியப்பொன்றுமில்லை அல்லவா? முதல், இரண்டு, மூன்றாம் (a) பிரிவு வகுப்புகளுக்கு இயல்பாகவே குரு ஆக வேண்டிய சாதாரண, வேத சாஸ்திரப் பண்டிதர்களையும் உபாசகர்களையும் விட, மனிதவடிவில் எழுந்தருளி வந்திருக்கும் பரம்பொருளாகிய சற்குருவினிடமே இம்மக்கள் தத்தம் பால பாடங்களைப் போதிக்கப் பெறுவது அவர்களது ஒரு அரிய பாக்கியமே அல்லவா? மூன்றாம் வகுப்பு (a) பிரிவுக்கும், கீழுள்ள வகுப்புகளுக்கும் உரிய கர்மானுஷ்டானங்கள், மந்திர ஜபங்கள், ஸ்ரீ சக்ரமாதி நானா தெய்வோபசானைகள் முதலியவற்றை இந்த உயர்வற உயர்ந்த சற்குருவினிடமே பெற்றுக்கொள்ளும் அக் கீழ்வகுப்பு மாணவர்கள் ‘இவைகளே அந்த சற்குருவின் முக்கியோபதேசங்கள்’ என்று கருதவும், அவ்வாறே பலர்க்கும் எழுத்தாலும் சொல்லாலும் பிரசாரம் செய்யவும் ஆரம்பித்து விடுகிறனர். ஆம்; அத்தகையோர்க்கு – அவர்களுக்கு மட்டுமே – அவைகள்தான் அந்த சற்குருவின் முக்கியோபதேசங்கள்! வேறு சந்தேகமேயில்லை!! ஆகையால், நம் பக்திப் பள்ளியின் நான்காம் வகுப்பிலுள்ள உத்தம சாதகர்களுக்கு சற்குருவின் உண்மையான முக்கியோபதேசம் எதுவென்று கண்டறிந்து அதை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டியது தலையாய கடமையாகும்.

முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு (a) பிரிவு வரையுள்ள குருமார்கள் ஆத்ம ஞானிகள் அல்லராதலால் நாம ரூபப் பிரபஞ்சத்தில் சத்திய புத்தியுள்ளவர்களாய், அதனால் இக பர உலகங்களில் உள்ள சுகங்களின் ஆசைக்கும், மக்களால் ‘தான் ஓர் பெரிய குரு என்று போற்றப்பட வேண்டும்’ என்ற புகழாசைக்கும் அடிமைகளாய், அதனால் தம்மிடம் வந்துள்ள ஓர் சீடன் தன் உபதேசங்களில் என்றும் திருப்தியும், தன்னிடம் விசுவாசமும், பயபக்தியும் உடையவனாய், என்றும் வேறு யாரிடத்தும் போய் சீடனாகிவிடக் கூடாது என்ற அசூயையும் உடையவர்களாய் இருப்பர். தமக்கே ஆத்மஞானம் இல்லாத காரணத்தால், தன் சீடன் ஐந்தாம் வகுப்பாகிய ஸ்வாத்ம பக்தி தலையெடுத்து அத்வைதானந்தனாய் தன்னுள் ரமித்திருக்கும் ஆத்ம த்ருப்தன் ஆவதிலும் அசூயை உடையவர்களாகவே இருப்பர். துவித நிலையாகிய குருபக்தியிலிருந்து அவனை அத்வைதானுபவமான ஸ்வாத்ம பக்திக்கு மேலேற அவர்கள் விடவே மாட்டார்கள்.

ஆனால் உத்தம சற்குருவோ பரப்ரம்ம சொரூபத்தினும் வேறல்லராகையால் அச்சீடன் தன்னிடம் துவித பக்தி கொள்வதால் அவன் பெறும் ஓர்வித சாந்தியை மட்டும் அனுபவித்துக்கொண்டு திருப்தியுற்றிருக்க அவனை விடுவதில்லை. துவித பக்தியாகிய குருபக்தியில் அவன் திருப்தியடைவதில் உள்ள குறையை எடுத்துக்காட்டி, அனன்னிய சகஜாத்ம சாந்தி அவனுக்கு அனுபவமாகும் வரையிலும் அவனை, தற்போதுள்ள (குருபக்தியாற் கிடைத்துள்ள) சாந்தியில் திருப்தியுற்றிருக்க அனுமதிப்பதேயில்லை!

இனி, நமது மனிதனைத் தொடர்வோம். தமது சற்குருவே இதுகாறும் தான் விரும்பி நின்ற இஷ்ட தெய்வம் என்ற அறிவு உதித்து, அதனால் உலகில் யாவும் துறந்து குருவின் திருவடியில் வந்தமர்ந்திருக்கும் இம்மனிதன், கடலை அடையும்முன் பெரியதோர் ஏரியில் தேக்கப்பட்ட மழைநீர் போல, மனோவிருத்தி ரூப முயற்சி மேலொன்றும் அற்றவனாய் ஓய்ந்து ஆனந்தமாய் இருந்துகொண்டு தன் சற்குருவைத் துதிக்கின்றான்:

மேற்செலுங் கதியே தென்ன வினாவினேற் குவந்து‘தத்தம்

பாற்செலுங் கதியே யன்றிப் பரகதி மற்றொன் றில்லை!

ஏச்சிலா நெறியொன் றீதே’யெனுமுரை யல்லால் வேற்றுப்

பேச்சிலா ரமண னல்லாற் பிறதெய்வ மறிந்தி லேனே.

பாரிலே மனித்தப் படிவமாய் ரமணப்

பசும்பெயர் தாங்கியே வந்த

பாரியே ஞான பானுவே தன்னைப்

பற்றியே யகங்கரைந் துணர்வார்

(ஸ்ரீ ரமண சந்நிதி முறை 533)

பேரிலே யிரங்கிப் பேரருள் சுரக்கும்

பிறங்கல்போற் பிறங்குபே ரின்ப

வாரியே யுன்னை வாய்மடுத் திடநான்

வருகவென் றருள்புரி வாயே.

(ஸ்ரீ ரமண சந்நிதி முறை 218)

தெருவா யலைந்து திரியுநா யேனைத் தெருமரலால்

வருவா தனையற வாழ்விக்க வெண்ணியம் மாயையினால்

வெருவா திருக்கும் விதமுப தேசித்த வேதியநற்

குருவா கியரம ணாகுறு கேன்பிறர் கோயில்களே.

(ஸ்ரீ ரமண சந்நிதி முறை 544)

ஆனால், அவனது சற்குருவாகிய ஸ்ரீ ரமண பகவானோ அவன் இவ்விதத் திருப்தியில் ஓய்ந்திருக்க விடுவதில்லை! அடையவேண்டிய வஸ்துவை அடைந்துவிட்டவன் போல திருப்தனாய்த் தன்னைத் துதித்து நிற்கும் இவ்வுத்தம குருபக்தனை நோக்கி, சற்குருவானவர், ‘அப்படியா! என்ன உன் இஷ்ட தெய்வம் உனக்குக் கிடைத்து விட்டதா?’ என்று வினவுகிறார்.

மனிதன்: ஆம் ஐயனே; கிடைத்து விட்டது! அது தாங்களே!

ஐயனே யெனதுள் ளேநின் றனந்தசன் மங்க ளாண்ட

மெய்யனே யுபதே சிக்க வெளிவந்த குருவே போற்றி

உய்யவே முத்தி நல்கு முதவிக்கோ ருதவி நாயேன்

செய்யுமா றொன்றுங் காணேன் றிருவடி போற்றி போற்றி.

(கைவல்யம்-தத்துவ விளக்கப் படலம் 79)

குரு: நீ உன் இஷ்ட தெய்வத்தினிடம் முன்பு கேட்ட வரம் யாது?

மனிதன்: உலகப் பொருள்களையே அதற்குமுன் கேட்டுவந்த நான் நல்லறிவு உதித்தபின் கேட்ட ஒரே வரமானது, ‘இனி நீயே எனக்கு வேண்டும்; வேறு எப்பொருளும் யான் வேண்டேன்’ என்பதே.

குரு: அப்பொருள் கிடைத்து விட்டதா?

மனிதன்: ஆம்; அப்பொருள் இதோ என் கண்முன் இருக்கும் சற்குருவாகிய தாங்களே. ஆகையால் நான் கேட்ட அப்பொருளை நான் அடைந்தவனாகிறேன்.

குரு: உன் கண்முன் இருப்பது, இதோ (தன் உடலைச் சுட்டிக் காட்டி) இவ்வுரு! இதுதான் நீ விரும்பியதா?

மனிதன்: சற்குரு மூர்த்தியாகிய தாங்களே நான் கேட்ட பொருள்.

குரு: சரி; நான் இதுதானா? இவ்வுடலே நான் என்பதே உன் கருத்தா? அப்படியாயின், இதற்குமுன் நீ பார்த்த உன் இஷ்ட தெய்வத்தினும் இவ்வுடலுரு எப்படிச் சிறந்ததாகும்? அவ்வுரு கொஞ்ச நேரம் தோன்றியிருந்து பிறகு மறைந்து விட்டது. அவ்வாறே இவ்வுருவும் (குருவின் திருமேனி வடிவமும்) சிறிது காலம் உன்னுடன் வாழ்ந்திருந்து பின்பு ஒருநாள் இறந்து மறையும்! அல்லவா? எனின், இது எப்படி அதைவிடச் சிறந்ததாகும்? நீ அடைய வேண்டியதாக எண்ணிய குறிக்கோள் இந்த நாமரூபமேயாயின், உன் விருப்பம் என்றேனும் ஒருநாளில் பயனற்றதாகவே, ஏமாற்றமாகவே முடியும். ‘உன் குறிக்கோளை இன்னதென்று தீர்மானித்துக் கொள்’ என்றே முன்பு உனக்குக் கூறப்பட்டதல்லவா? அதை இப்போதாவது சரியாகத் தீர்மானிப்பாயாக.

மனிதன்: நானே அம்மெய்ப்பொருள் என்ற பேருண்மையைத் தாங்களே எனக்கு விளக்கினீர்கள்; என் இஷ்ட தெய்வங்கூட அதை எனக்கு அறிவிக்கவில்லை! ஆகையால், நான் தன்னிடம் கேட்டுக் கொண்டிருந்தவற்றை மாத்திரம் கொடுத்துக்கொண்டு வந்த என் இஷ்ட தெய்வத்திற்கு என் மேலிருந்த அன்பைவிட, என் உண்மை நன்மையிற் பெரும் பொறுப்புங் கவலையுங் கொண்ட தங்களின் அன்பே மிகப் பெரியது என்று இப்போது நான் உணர்கிறேன். ஆதலால், என் இஷ்ட தெய்வத்தைவிட, தாங்களே என்னால் வேண்டப்படும் சரியான குறிக்கோள். தங்களால் உபதேசிக்கப்பட்ட அந்தப் பாரமர்த்திக உண்மையும் தாங்களும் இருவேறு பொருள்களல்ல என்பதே எனது தீர்ந்த முடிவு.

குரு: நான் அதுவாவதால் உனக்கென்ன பயன்? என்னை ‘தெய்வம், குரு, ப்ரம்மம்’ என்று கொண்டாடிப் போற்றுவதோடு உன் காரியம் முடிந்துவிட்டதா? நான் அப் பாரமார்த்திக உண்மையானால், நீ என்ன ஆவது? நீ யார்? நீ அப் பரமவஸ்துவாக என்னைப் பெறுவது என்பது உன்னை அப் பாரமார்த்திக உண்மை வஸ்துவாக நீ உணர்வதல்லவா?

மனிதன்: சற்குருவாகிய தங்கள் திருவடிகளைப் பற்றிக்கொள்வதே நான் சற்கதி பெறும் வழியல்லவா?

உற்பவமா யோங்கி யொழியுந் திரிவிதமாங்

கற்பனையே காணாக் கடவுளே – சற்குருவே

மானிடமாத் தோன்றிநின்ற மாவிருடி யேநினது

கானிழலே யென்றன் கதி.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 655)

கைகூப்பி நெஞ்சங் கனிந்து கரைந்துருகி

மெய்வேர்த் துரோம விதிர்ப்பெய்தி – செய்வேற்றுக்

கன்மமறந் துன்கழலே காமுறுநிட் டானுபவச்

சென்மமா யென்வாழ்வைச் செய்.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 318)

(என்று கூறி குருவின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவைகளைப் பற்றிக் கொள்கிறான்).

குரு: இதுதானா குரு பாதம்? இதுதானா (தன் உடலைச் சுட்டிக் காட்டி) சற்குரு? மீண்டும் மீண்டும் இப்படியே அதே அறியாமைத் தவறுக்காளாகிறாயே! சற்குரு இதோ உன் உள் இருக்கிறார். ‘நான் நான்’ என்று நித்தியாபரோக்ஷமாக உன்னுள் எப்போதும் அழிவற்று விளங்கும் ஆன்மப்ரக்ஞையே சற்குருவின் உண்மையான திருவடி! அதைப் பற்றிக்கொள். அதுவே உன்னை ஈடேற்றும்.

மனிதன்: நான் இப்படிப்பட்ட பேருண்மையை வெளியிலிருக்கும் சற்குரு வடிவான தங்களது திருவாய் மொழியால்தானே அறிகிறேன். என்னை ஆட்கொண்ட பகவனே, தினமும் தங்களையே நமஸ்கரித்து, தங்களையே பூஜித்து, தங்களது அருட் பிரசாதத்தையே உட்கொண்டு வாழ்ந்து நான் தன்யனாக அருள் செய்யுங்கள்!

நின்றசிவ ஞான நெடுங்கிரியண் ணாமலைநீ

தென்றலினு மின்பத் திருவுருக்கொண் – டின்றுரம

ணாசா ரியனா யடியேனை யாட்கொண்டாய்!

ஈசா வருள்க வெனக்கு.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 646)

குரு: சீடன் குருவென்னச் சீவன் சிவனென்ன

மூடவகங் கார முழுமோகம் – கூடும்பாழ்ம்

பேதமதி சற்றும் பிறவாத மோனமே

போதநமஸ் காரப் பொருள்.

பொருள்: மூட அகங்காரப் பெரு மயக்கத்தால் தோற்றுவிக்கப்படும் ‘சீவன்-சிவன், சீடன்-குரு’ என்ற பொய்யான பேதபுத்தி சிறிதுகூடக் கிளம்பாத மௌன நிலையே அறிந்து செய்யும் நமஸ்காரத்தின் பொருளாகும்.

(குருவாசகக் கோவை 310)

ஏகரச மாக விருந்தொளிரு மான்மாநு

போககுரு போதப் புணரியிலே – தேக

உருவா மகந்தை யுணர்வாய ஆலி

கரைவே குருபூ சனை.

பொருள்: என்றும் ஒருபடித்தாய் இருந்து விளங்கும் ஆன்மாநுபூதியே தாமாகிய சற்குருவாகிய ஞானக் கடலில், ‘தேகமே தான்’ என்னும் அகந்தையே தானாம் சீடனாகிய பனிக் கட்டி, தன் உருவழிந்து கரைந்து போதலே குருவிற்குச் சீடன் ஆற்றும் உண்மையான பூசனையாகும்.

(குருவாசகக் கோவை 315)

ஞானகுரு வாக நடக்கும் பரமசிவனுக்

கானவழி பாடனைத்து மாற்றிடினும் – யானற்

றுயிர்க்குயிரா மந்த வுடையான்மாட் டொன்றும்

அயிக்கியமே போற்றி யடைவு.

பொருள்: பரசிவனே உலகில் கால்கொண்டு நடமாடுபவரான ஞான குருவுக்கு எல்லாவித பூஜைகளும் (துவித வழிபாடுகளும்) ஒருவன் செய்தாலும், தன் உயிருக்கும் உயிராய் (பரமான்மாவாய்) தன்னுள் விளங்கும் அந்த சற்குருவினிடம் அவன் ‘நான்’ என்னும் அகந்தையற்று (இருமையற்று) ஒடுங்கும் ஏக நிலையே தலைசிறந்த குரு வழிபாடாகக் கண்டுகொண்டு அதையே செய்ய வேண்டும்.

(குருவாசகக் கோவை 309)

மோனகுரு வாய முழுமுதலுக் கூணாக

மானமாந் தன்னை வழங்கிப்பின் – பானமாய்

எஞ்சிய தன்னை யிதயத்துட் கோடலே

விஞ்சுமுச் சிட்ட மிசைவு.

பொருள்: மோன குருவாக வந்துள்ள முழுமுதற் பரம் பொருளுக்கு ‘நான் தேகம்’ என்னும் அபிமானத்தை ஊணாக்கியபின் உபாதி ஏதுமற்று இதயத்தில் மிஞ்சி நிற்கும் ‘நான் நான்’ என்னும் ஆத்மப் பிரக்ஞையை உணர்வதே குருவின் உச்சிஷ்டத்தை (குருவின் பிரசாதத்தை) உட்கொள்வதாகும்.

(குருவாசகக் கோவை 302)

அன்னியர் தம்மை யடைந்து வழிபட்டால்

அன்னியங்கள் யாவு மடையலாம் – மன்னியமெய்ச்

சிற்பரமாந் தெய்வச் சிவபதத்து வாழ்க்கையுயிர்க்

கற்பர்மற் றாரளிப் பார்?

பொருள்: ஆன்மாவுக்கு அன்னியமாகத் தெய்வங்கள் பற்பலவற்றை ஒருவன் வழிபடும்போது ஆன்மாவைத் தவிர எல்லா அன்னியப் பொருள்களையும் அவன் ஒருவேளை பெற இயலும். ஆனால், அழியாத சத்-சித் சொரூபமான பரசிவ நிலையில் வாழவேண்டின், ஆன்மாநுசந்தானமாகிய உபாசனையைத் தவிர, அற்பமான வேறு எந்தத் தெய்வங்கள்தான் அவனுக்கு அதை அளித்துவிட முடியும்? (முடியாதென்க).

(குருவாசகக் கோவை 1071)

ஆகையால், என்னை உண்மையாக நீ உபாசிக்கும் ஒரே வழியானது உன்னை நீ உள்ளாழ்ந்து ‘நான் யார்?’ என்று நாடுவதே என்றறிக! ...உன்னை நீ அறிந்தாயாகில் உனக்கொரு கேடு மில்லை;

என்னைநீ கேட்கை யாலே யீதுப தேசித் தேனே.

(கைவல்யம் 1.13)

அவ்வாறின்றி, நாமரூபத்தில் எத்தனைமுறை கடவுளையோ குருவையோ நீ அடைந்தாலும் அவை ஒரு நாள் மறைந்தேபோம்.

பெற்றதா வன்றிப் பிரிந்ததாப் பேதுறுவார்

உற்ற துயிலோ டுணர்வினிடைச் – சற்றும்

தெரியா ததற்குந் தெரிவதற்கு மொப்பக்

கரியாகத் தம்மைக் கலார்.

பொருள்: தூக்கத்தில் உணரப்படும் ‘ஒன்று மறியேன்’ என்னும் சூனிய நிலைக்கும், விழிப்பில் உணரப்படும் ‘பலவற்றை அறிகிறேன்’ என்னும் சகள நிலைக்கும் சாக்ஷியாகத் தன்னை (ஆன்மாவை) யார் அறிந்து கொள்வதில்லையோ, அவர்களே கடவுளைத் தாம் காணப் பெற்றதாகவும், பிறகு அவர் மறைந்ததாகவும் எண்ணி மயங்கி வருந்துவர்.

(குருவாசகக் கோவை 1072)

பல்வகையா மூர்த்திகளைப் பார்த்துப் பதற்றமொடு

சில்பொழுது சிந்தையாற் செம்மாப்பார் – நில்லாத

பொய்ம்மையா மெய்யையலாற் பொய்ம்மருவா மெய்ம்மயமாம்

தம்மையே தாமுணரா தார்.

பொருள்: நிலையற்றதாய் பொய்யானதாயுள்ள இத்தேகத்தையேயன்றி, நித்திய சத்திய ஆன்மாவைத் ‘தான்’ என உணரமுடியாத மக்கள்தான் (அஞ்ஞானிகள் தான்) பற்பலவிதமான மூர்த்தி தரிசனங்களைச் சிற்சில சமயம் மனோமயத்திற் கண்டு வியப்பும் பரபரப்பும் அடைவர்.

(குருவாசகக் கோவை 1070)

மனிதன்: எனின், குருநாதா! தங்களையும் நான் மறந்து என்னுள் ஆழ்ந்து என்னை அறிய வேண்டுமோ? இது தகாததுபோல் தோன்றுகின்றதே!

குரு: உன் குரு என்பது யார்? நீ உன்னை ஓர் உடலாகக் கருதும் வரையில் அவரையும் ஓர் உடலாகவே கருதுகிறாய்! இது, அவர் தன்னை எதுவாக அறிந்திருக்கிறாரோ அவ்வனுபவத்திற்கும், அவர் உனக்கு அளித்திருக்கும் உபதேசத்திற்கும் (இரண்டிற்கும்) முற்றிலும் முரணானது. இதுதான் உனக்குத் தகாதது!

தானே மகத்தன்றித் தன்னினுமே மிக்கதாம்

ஏனை மகத்தொன்று மில்லையே – ஆனதால்

எற்றுத் திறத்தாலும் யாங்காணேந் தன்னைத்தான்

விற்றுக் கொளத்தக்க வேறு.

பொருள்: சிறப்பனைத்தினும் சிறந்தது ஆன்மாவே (தானே). அதனினும் பெரிய சிறப்புடைய பொருள் வேறொன்றுமே இல்லை. ஆகையால், ஆன்மாவாகிய தன்னை விற்று அதற்கு ஈடாகப் பெறக்கூடிய பேறு வேறு எதையும், எவ்வளவு தவம் செய்தும், யாம் கண்டதேயில்லை!

(குருவாசகக் கோவை 1060)

என்னை நான் எவ்வாறு அறிந்துள்ளேனோ (நாமரூபமற்ற ஆத்ம சொரூபமாக) அவ்வாறே என்னை அறிவோரே என்னை உள்ளபடி அறிந்து கொண்டவராவர்.

பராகாய மாகப் பயின்றிடா நின்றே

நராகார மாத்தோன்று ஞான குருவை

நிராகார னென்றுணர் நெஞ்ச மிலாதார்

துராசார பாப துரந்தரர் தாமே.

பொருள்: தாம் பரம ஆத்மாகாசமாகவே விளங்கிக் கொண்டிருந்தும் மனித வடிவமாய்க் காணப்படும் ஞான குருவை, ‘உண்மையில் யாதோர் உருவமற்ற பரம்பொருள்’ என்று அறிந்து கொள்ளாதோர் தீய பாவிகளுட் சிறந்த பாவிகளேயாவர்.

(குருவாசகக் கோவை 274)

மனிதன்: என் ஆன்ம சொரூபமும் என் இஷ்ட தெய்வ சொரூபமும் என் குரு சொரூபமாகிய தாங்களே என்று நான் உணர்கிறேன். அத்தகைய சற்குரு வெளியில் எனக்குக் கிடைத்தது எனது பெரும் பாக்கியமாய் மகிழ்கிறேன். ஆதலால், அதை நான் எப்படித் துறந்துவிடுவது?

குரு: குரு உன் உள்ளுமிருக்கிறார்; வெளியிலுமிருக்கிறார். வெளியிலுள்ள உன் குரு நீ உன்னுள் ஆழ்ந்து உன் நிஜ சொரூபத்தை அறிவதற்கு அனுகூலமான வெளிச் சூழ்நிலைகளை உனக்கு உருவாக்கி, உன்னை வெளியிலிருந்து உள்ளே தள்ளுகின்றார்! உள்ளேயுள்ள உன் குரு உள்ளிருந்து உன்னை இழுத்து நீ இதயத்தைவிட்டு நீங்காதிருக்கும்படி உள்ளே அமர்த்திக் கொள்கின்றார்!

மனிதன்: எனின், வெளியிலுள்ள தங்கள் சகுண குரு சொரூபத்தை நான் பற்றிக் கொள்கிறேன்; தங்களருளால் நான் ஆன்மாவைச் சென்றடைந்துவிட மாட்டேனா? இதிற் பிழையில்லையே?

குரு: அப்படியல்ல; அது பிழையே. சூரியவொளி உன்னைச் சுற்றிலுமிருந்தாலும், நீ சூரியனைப் பார்க்க விரும்பினால் அதன் பக்கம் உன் கண்களைத் திருப்பித்தானே காண வேண்டும்? நீ எதை அறிய விரும்புகிறாயோ அதன்பால் நீயே உன் நாட்டத்தைத் திருப்பிக் காண வேண்டும்; நீ பார்க்க வேண்டியதை, அறிய வேண்டியதை உனக்காகப் பிறர் பார்ப்பதால் உனக்குப் பயனுண்டா? அது போல நீ ஆன்மாவை அறிய விரும்பினால் நீயே அதை நாடி நோக்க வேண்டும். குருவருள் அப்போதுதான் துணை செய்வதை நீ அறிவாய்.

மனிதன்: என்னை நான் தங்களிடம் சரணாகதி செய்துவிட்டாற் போதாதா?

குரு: நீ சரணாகதி செய்வது எதை என்று நீ அறியாவிட்டால், சரணாகதி எப்படி சம்பூரணமாகும்? சரணாகதி செய்யப்படவேண்டிய உன்னை நீ யாரென்று அறியாவிட்டால் எப்படி எதைச் சரணாகதி செய்வது? சரணாகதி செய்வதற்காகவாவது நீ உன்னை யார் என்று நாடி அறிய வேண்டாமா? எனவே, நீ உன்னை நாடியறிவதே சரணாகதி நெறியுமாகும்.

வெளியிற் காணப்படும் குரு சொரூபம் தோற்றமும் மறைவும் உடையதல்லவா? அது நீடித்து நில்லாது. ஆன்மாவே குரு; ஆன்மசொரூப சாட்சாத்காரமே ஒருவன் உண்மையில் குருவையோ கடவுளையோ அடைவதாகும். அதைத் தவிர, குருவையோ கடவுளையோ உனக்கு அன்னிய வஸ்துவாகப் பார்க்கும் வரையில் நீ பரிபூரண சுதந்திர நிலையான உன் ஆன்மாவை உணர முடியாது. அன்னிய உணர்வு இருக்கும் வரையில் உனக்குப் பயமும் இருந்தே தீரும்.

பேதபுத்தி துன்றுமனப் பேதைமையா லான்மாவிற்

பீதியுழக் கின்றார் பெருந்தேவர் – நேதியாற்

றன்சொரூப வுண்மையைச் சார்ந்துபர மாத்துவிதத்

தஞ்சலற நிற்ற லறிவு.

(குருவாசகக் கோவை 1078)

நிர்பய நிலை அல்லது அபயம் வேண்டுமாயின் அன்னிய உணர்வு நீங்கி அனன்னிய ஆன்ம சுபாவம் ஆகவேண்டும். இதனால், உனது குரு அங்கு இல்லாமற் போய்விடுவதில்லை. நீ ஆன்மாவில் ஆழ்ந்து உன் உண்மையில் நிலைபெறும்போது உனது ஆன்ம சொரூபமே சற்குருவின் நிஜ சொரூபமாய் அறிவாய். அந்நிலையில்தான் நீ உன் சற்குருவுடன் என்றுமிருப்பவனாவாய். அகந்தையாகிய நீ ஆன்மாவில் ஒன்றிவிடும் ஸ்வாத்ம பக்தியே சரியான குரு பக்தியுமாகும்!

வெளியே குருவொருவன் வேண்டப் படுகை

களிசேருன் மத்தக் கருத்தால் – வெளிப்பாய்ந்து

சச்சித்தா மான்மா சதாவிதயத் தோதுமெய்யை

நச்சித்தாங் கேளாமை யால்.

பொருள்: சத்-சித் சொரூமான ஆன்மா இடைவிடாமல் இதயத்தில் விளக்கிக் கொண்டிருக்கும் உபதேசத்தைப் (‘நான் நான்’ என்று விளங்கும் உணர்வைப்) பிரியத்தோடு அநுசந்தித்துக் கேளாமல், ஒருவன் புறமுகத்தில் உற்சாகமுடைய மனோவிருத்தி மயக்கத்தால் இதயத்தினின்றும் வெளிப்பாய்ந்து வந்து விடுவதால்தான் வெளியில் குரு ஒருவர் அவனுக்கு வேண்டப்படுகிறது.

(குருவாசகக் கோவை 272)

அதுவரை நீ தற்போது இந்தத் தூல நாம ரூபத்திடம் ‘சற்குரு பக்தி’ என்று விடாப்பிடியாய்க் கொண்டு நிற்கும் அன்பெல்லாம் அபூரண பக்தியே; அரைகுறை அன்பே! இது அன்பின் குறைபாடுடைய நிலையே!!

எந்தமுன்னி லைப்பொருளு மீசனல்ல வுள்வெளியிற்

றொந்தவுணர் வுற்றென்முன் றோன்றுபவை – சொந்த

சொரூபத்தி லன்பாலுட் டோய்வதன்றோ வுண்மை

குருபத்தி அஃதே கொடு.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 349)

மனிதன்: அப்படியாயின் நான் தங்களைப் பூரணமாக விசுவாசிக்கவில்லையா?

குரு: அன்னியத்திற் பாயும் அன்பு அபூரணமே. அன்பு பூரணமாகும்போது அதற்கு ஒன்றின் மேற்செல்லுதலாகிய அசைவு என்னும் குற்றம் இராது (பூரணத்தில் அசைவு எப்படி சாத்தியம்?). அகண்டமாக வியாபகமாக உள்ள பூரண அன்பு அனன்னியமானது. ‘அன்னியமில் அன்பு செயும் அன்னோனே’ சம்பூரண பக்திமான்!

மனிதன்: ‘அன்னியமில் அன்பு’ என்பது நான் தங்களிடம் கொள்ளும் அன்பினுஞ் சிறந்ததா? மேலும் அது, தாங்கள் என்னிடம் கொள்ளும் பரம கருணையினுங்கூடச் சிறந்ததா?

குரு: ஆம்; ஸ்வப்ரியமே பெரியது, சிறந்தது! ஸ்வாத்ம பக்தியே சம்பூரண பக்தி! முடிவாகப் பரிசுத்தமாக்கப்பட்ட அன்புணர்ச்சி திடமான ஆத்ம ஸ்திதமாகவே விளங்கும். அதற்குக் குறைந்த எந்நிலையிலும் அன்பு சம்பூரணமல்ல; பரபக்தியல்ல; இந்த சம்பூரண அன்பே ஆன்மா! இவ்வன்பே சிவம்!! மனிதன்: எப்படி? அருள்கூர்ந்து விளக்கி உதவுங்கள்.

குரு: அகண்ட ஏகரசத் தன்மையுணர்வே ஆன்மாவல்லவா? அதுவே நீயல்லவா? ஆன்மானுபவ நிலையில்தான் இதை நீ உணர வேண்டுமென்பதுகூடத் தேவையில்லை. இவ்வகந்தை நிலையிற்கூட, சாமானியமாக, தினந்தினம் இது உன் அனுபவத்தில் விளங்கிக்கொண்டிருக்கும் ஒன்றேயாகும். புதிதல்ல! கவனி. ‘நான் இத்தேகம்’ என்ற அகந்தையுணர்வே உனக்கு இப்போது அனுபவத்திலிருக்கும் தன்மை உணர்வல்லவா? இந்நிலையிலும் பார்; உனக்குப் பிரியமான ஒரு புஷ்பம், அல்லது குழந்தை, அல்லது ஏதேனும் ஒரு பொருளை எடுத்து நீ அதனைக் கொஞ்சி அன்பு காட்டுகிறாய். இந்த முன்னிலைப் பொருள்கள் உனக்கு அன்னியமானவை. அவைகளைவிட உனக்கு உன்மேல்தான் (உன் தேகத்தின் மேல்தான்) உண்மையில் அதிகப் பிரியம் என்பது வெளிப்படை; அல்லவா? அப்படியிருந்தும், அம்முன்னிலைப் பொருள்களினும் பன்மடங்கு அதிகப் பிரியமுள்ள உன் உடலின் கை, கால், விரல்கள் போன்ற எந்த உறுப்புக்களையாவது நீ எடுத்து, ‘ஆ, என் கையே! ஆ, என் விரல்களே! உங்கள் மேல் எனக்கு எவ்வளவு ஆசை!’ என்று கூறிக் கொஞ்சிக் கூத்தாடுகின்றாயா என்ன? இல்லையல்லவா? ஆனால் ஒரு குழந்தை, ஒரு பூ முதலியவற்றை அவ்விதம் சிலாகித்து உன் அன்பைக் காட்டுகிறாய். மற்ற பொருள்களைவிட, தற்போது நீ உணரும் தன்மையுணர்வாகிய உன் சரீர அவயவங்களிடம் உனக்கு அதிகப் பிரியமிருந்துங்கூட, ஏன் இத்தகைய கொஞ்சல் மிஞ்சலாகிய சேஷ்டைகளைக் (அசைவுகளைக்) காணோம்? தன்மையின் மேலுள்ள அன்பு பூரணமாவதால் அன்பை வெளிப்படுத்தும் முறையில் ‘செல்லுதல், செலுத்துதல்’ என்னும் சலனத்திற்கு அங்கு இடமில்லை. அன்பு இருப்புருவம் ஆகும்போது சம்பூரணமாகின்றது. சலன வடிவாகும்போது குறைபடுவதால் மற்றொன்றின்மேல் பாய்ந்து செல்கின்ற ஆசையாகின்றது. அகண்ட நம் இருப்பு வடிவமே (சத்) அன்பு (ஆனந்தம்)! கண்டமாகின்ற, குறைவுற்ற நம் சலனமே ஆசை.105

முன்னிலை-படர்க்கைகள் பின்னம், கண்டம் ஆவதால் அவைகளின் மேல் உள்ள – உனது அத்தியந்தப் பிரியவஸ்துவாக நீ கருதும் உன் குருவினிடமும் உனக்குள்ள – அன்பு குறைபாடுள்ள ‘ஆசை’யாகவேதான் முடியும்! ஆனால், தன்மை உணர்வாகிய நீ ஆன்மாவாய், அகண்டமாய் நிலைபெறும்போது உன் அன்பு பரிபூரணத் தன்மையடைகின்றது. பூரணமாகச் சுத்தீகரிக்கப்பட்ட அன்பாகிய இவ்வான்ம அன்பே ஸ்வாத்ம பக்தி, பராபக்தி, அனன்னிய பக்தி ஆகி, அகண்ட சிவமாய்த் திகழும். இருப்பே பக்தி அல்லது அன்பு எனப்படுவது. எழுச்சியே விபக்தி அல்லது ஆசை எனப்படுவது. உன் சந்மாத்திர (இருப்பு மாத்திர) நிலையே அகண்ட ஆனந்த நிலை. அதுவே அபரிசின்ன பரபக்தி நிலை. இந்த

...சற் பாவத்திருத்தலே உந்தீபற

பரபக்தி தத்துவம் உந்தீபற.

(உபதேச வுந்தியார் 9)

உன்பால் உன் குருவிற்கிருக்கும் கருணை அல்லது அன்பானது ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் செலுத்தப்படும் ஓர் அன்பு என்று நீ நினைத்துக்கொண்டிருக்கும் வரையிலும், அந்த குருவின் அன்பும்கூட உனக்கு ஒரு பரிச்சின்ன அன்பேயாகும்! அதனால், உன்னிடம் (ஆன்மாவிடம்) உனக்குள்ள அன்பைவிட (ஸ்வாத்ம பக்தியைவிட) அது குறையுள்ளதே! குறைவானதே! எனவே, ‘அன்னியமில் அன்பு செய்யும் அன்னோனாய், இன்புருவாம் உன்னில் ஆழ்ந்து’ இரு!!!!

என்று அருளினர் சற்குரு.

நாம் மேலும் ஆழ்ந்து ஆராய்வோமாயின், இதுவரையிலும் ‘உடல்-மனங்களே நான்’ என்று கருதி வந்துள்ள சீடனொருவன் தன்மேல் (அகந்தையின்மேல்) கொண்டிருந்த ஸ்வப்பிரியங்கூட, இப்போது அவனுக்குத் தன் சற்குருவினிடம் செலுத்தப்படும் அன்போடு – குருபக்தியோடு – ஒப்பிடின் சிறிதும் தகுதியற்ற, மிகமிக அற்பமான ஒன்றாய் ஆகிவிடுகின்றதல்லவா? ஆகையால் அச்சீடன் தன்மேல் (இதுவரையில் தானாகக் கருதிக்கொண்டிருந்த உடல்- மனங்களின்மேல்) சிறிதும் பற்றற்று உதாசீனனாய், தன் குருவுக்காக அவற்றையும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றான். ஏனெனில், சற்குருவேதான் உண்மையில் அச்சீடனின் மெய்த்தன்மையான ஆன்ம சொரூபமாகின்றார்! மேலும் ஆராய்வோம்.

ஒருவனுக்கு உலகப் பொருள்களுள் எவ்வொன்றின் மேலுள்ள பிரியத்தையும்விட தன்மீதுதான் அதிகப் பிரியம் இருக்கின்றதென்றாலும் உண்மையான குருபக்தி உதிக்கும்போது அவனுக்கு ‘தான்’ ஆகிய அகந்தையின்மேல் இதுகாறும் இருந்த ஸ்வப்பிரியத்தை விட சற்குருவினிடம் ஏற்படும் அன்பே சிறந்ததாகின்றது. ஆனால், ஆன்மாவின் உண்மையை அனுபவித்துணரும்போது ஒருவனுக்குத் தன் குருவினிடம் தான் கொண்டிருந்த அன்பையும்விட ஸ்வாத்மப் பிரியமே மிகச் சிறந்தது என்பது விளங்கும். இந்த ஸ்வாத்மப் பிரியத்தை முன்னிட்டே இதரப் பொருள்களின் மேலெல்லாம் அவனுக்குப் பிரியம் ஏற்பட்டு வந்ததென்று இதுகாறும் கூறி வந்திருக்கிறோமல்லவா? ஆனால், ஆன்மாவின் பிரதிபிம்பமும் பொய்யானதுமான அகந்தையையே ஒவ்வொருவரும் ‘தான்’ என்று தவறாக நினைத்திருப்பதால், உண்மையான தன்மேல் (ஆன்மாவின்மேல்) உள்ள பிரியத்தை அது இத்தன்மைத்து (தன் சுபாவமே) என்று உணர்வதில்லை. சரியானதும் உண்மையானதுமான குருபக்தியைப் பெறும் பக்குவத்தைச் சீடனொருவன் எய்தி, தன் ஆத்ம சொரூபமேயான சற்குரு தன் கண்முன் கிடைக்கப்பெறும் இப்போது அச்சீடன் தன் ஆன்மாவின் மேலுள்ள நிஜப் பிரியத்தையே தன் சற்குருவினிடம் கொள்ள வல்லவனாகின்றான்; ஆனால், சற்குருவின் மனிதவடிவின் மேல்தான் இவ்வுயர்ந்த அன்பு அவனுக்கு உண்டாகின்றது. அதனால்தான் குரு பக்தியானது அகந்தையாகிய தன் மீதுள்ள ஸ்வப்பிரியத்தை விட உயர்ந்தது என்று மேலே கூறப்பட்டது. அவனது சற்குருவும் அவனது ஆத்ம சொரூபமேயாயினும், அவரிடம் இப்போது அவன் கொள்ளும் அன்பும் ஒரு விதத்தில் ஆத்மப் பிரியமேயாயினும், தன் ஆன்மாவாகிய சற்குருவை ஒரு முன்னிலைப் பொருளாகவே அச்சீடன் கருதியிருக்கும் வரையிலும், அதாவது அவரைத் தன்னுள் தன் ஆன்மாவாக (தானேயாக) அனுபவிக்கப்பெறாத வரையிலும், அவனது குருபக்தியாகிய அன்பு பூரணமாகச் சுத்தீகரிக்கப்பட்ட ஸ்வாத்ம பக்தி ஆகாது. அதனால்தான் குருபக்தியானது ஸ்வாத்ம பக்தியினும் தாழ்ந்தது என்று கூறி சற்குரு நிரூபித்து இப்போது அம்மனிதனை ஒப்புக்கொள்ள வைக்கின்றார்!

சரி, ஆனால், ஏன் சீடனொருவனிடம் சற்குரு கொள்ளும் கருணையுங்கூட ஸ்வாத்ம பக்தியினும் தாழ்ந்ததாக இம்மனிதனுக்குக் காட்டப்படுகின்றது?

குருவின் திருஷ்டியில் ஆன்மாவுக்கு அன்னியமாக யாருமில்லை. எனவே, அவரது அன்பு ‘சீடன்’ என்று எந்த முன்னிலைப் பொருள் மீதும் செல்வதில்லை. சற்குரு யாரையும் சீடனாக – தனக்கு வேறான ஒருவனாக – எக்காலும் காண்பதே இல்லை! ஆனால் சீடனொருவன், தன் சற்குருவைத் தன்னிலும் வேறானதோர் முன்னிலைப் பொருள் என்றே கருதும் வரையிலும் அவன், சற்குருவின் கருணையை – அன்பை – குருவாகிய ஒரு பொருளிலிருந்து சீடனாகிய வேறொரு பொருளுக்கு வந்து சேரும் அன்பாகவே கருத முடியும். ஆனால், உண்மை அப்படியல்ல. அன்பு, செலுத்தப்படுவதொன்றுமில்லை! ஏனெனில், சற்குரு அவனைத் தன்னிலும் வேறான மற்றொரு பொருளாக என்றுமே காண்பதில்லை! ஆதலினால்தான் சற்குருவினிடமிருந்து தன்மேற் பெருகி வருவதாய்ச் சீடனது திருஷ்டியிற் காணப்படும் குருவின் கருணைகூட ஸ்வாத்ம பக்தியினும் தாழ்ந்ததொன்றாகவே அவனுக்குக் கூறப்பட்டது. இதை நம் கருத்தில் நன்கு தரித்துக்கொண்டு, ஒருமுறை ஸ்ரீ ரமண பகவான் கூறிய ‘எனக்குக் குருவுமில்லை; சீடனுமில்லை’ என்ற அரிய வாக்கியத்தை நோக்குவோமாயின், அவர் அவ்வசனங்களாற் குறிப்பிட்ட பேருண்மை என்ன என்பதை நாம் நன்குணர முடியும். ஒருவர் உண்மையான குருவாவாரேல், யாரொருவரையும் அவர் சீடனாகக் காண முடியாது! சீடனின் திருஷ்டியில்தான் அவர் குரு ஆவார்!!

ஸ்வாத்ம சாகரம் சேருமுன் குருபக்தியாகிய பெரியதோர் ஏரியில் தேங்கி நிற்கும் – தன்பால் சொக்கி நிற்கும் – மழைநீராகிய இம்மனிதனை, குருபக்தி என்னும் பரந்த, ஆனால் எல்லையையுடைய, ஏரிக்கரையை உடைத்துக்கொண்டு பரமானந்த ஆன்ம சாகரம் சேரும்படித் தூண்டிவிடுகிறார் உண்மையான சற்குரு!

கோதறுமெய்ஞ் ஞானக் கொழுந்தாங் குருமூர்த்தி

பாதமநு சந்திக்கும் பான்மையோர்க் – கேதமறு

பத்திதரு மந்தப் பரனருளான் மெய்ஞ்ஞான

சித்திவருஞ் சித்தந் தெளிந்து.

(குருவாசகக் கோவை 305)

குருபரன் பாதங் குறிக்கொண் டொழுகுந்

திருவுடையோர்க் கன்பு செழிக்கும் – மருவுசிவ

மெய்யன்பே ஞானமாய் வேற்றுப்பொய் யாசைகளை

நையவே சுட்டெரிக்கு நன்கு.

(குருவாசகக் கோவை 306)

சற்குருவின் அருண்மொழிகளைச் சாவதானச் சித்தத்துடன் சிறிதும் விடாமற் கிரகித்துவந்த மனிதன் தனது அதிதீவிர பக்குவப் பாக்கியத்தால் சிரவண காலமாகிய அதே சமயத்தில் மனன, நிதித்தியாசனம் முற்றுப் பெற்றவனாய்,

கோனென்னு ஞான குருபோதக் கட்டழலால்

யானென்னுஞ் சீடவுணர் வீடழிய – மோன

நிருவா தனையோங்கு நிட்டையே ஞான

குருபூ சனையாக் குறி.

(குருவாசகக் கோவை 311)

ஏன்றநா னாரெனவுள் ளேய்ந்தவுசா வாலெழுந்த

பூன்றவநு போககுரு போதநிலை – ஊன்றலாற்

பொய்சீட போதமறப் பொன்றலே தேசிகர்க்குச்

சச்சீடர் செய்பூ சனை.

(குருவாசகக் கோவை 312)

என்னும் இலக்கணத்திற்கு இலக்கியமாய், ‘என் குருவினிடம் என்னன்பு பூரணமாகி நிலைக்க வேண்டுமாயின், அவருக்கு வேறாக ‘நான்’ ஒருவன் எழுவதும் வியவகரித்திருப்பதும் மிகப்பெரிய அபசாரமேயாகும்’ என்று திடமாய் அறிகின்றான்.

குருசொருப மாகக் குலவுறுமெய்ஞ் ஞானப்

பருதியென வெங்கும் பரந்த – பரவெளிக்கே

சீவமதி தோன்றாச் சிறப்பியல்பே செய்தக்க

தேவகுரு பூசை தெளி.

(குருவாசகக் கோவை 313)

உடலாதி தேசிகனுக் கொப்படைத்த பின்பவ்

வுடலாதி யானெனதென் றுட்கொண் – டிடலாய

தத்தாப காரச் சழக்குத் தவிர்தலே

சுத்தகுரு பூசை துணி.

(குருவாசகக் கோவை 317)

சடலமாச் சஞ்சரித்துஞ் சச்சித்தே போல

நடலஞ்செய் காரகந்தை நாட்டப் – படலம்

படராமை பூசை பரவெளியா நின்று

சுடராசான் பூந்தாட் டுணர்க்கு.

(குருவாசகக் கோவை 320)

எனவே, அவன் ‘நான் இன்னார்’ என்று தனக்கு ஒரு தனிவியக்தி எழுவதையே விரும்பாதவனாய், அவ்வெழுச்சி எதிலிருந்து உண்டாகின்றதோ, தானாகிய அம்மூலத்திலேயே வெகு ஜாக்கிரதையுடனும் ஏகாக்கிரத்துடனும் தன் கவனத்தை – நாட்டத்தை – செலுத்துபவனாகின்றான்

... நானுதிக்குந் தானமதை நாடாமல் நானுதியாத்

தன்னிழப்பைச் சார்வதெவன்?...

(உள்ளது நாற்பது 27)

ஆகையால் பரிபக்குவமுற்ற அவனது நாட்டம் இப்போது இவ்வாறு தன்மையின்மேல் தீவிரமாக ஊன்றப்படவே, அகந்தையெழுச்சித் தினவு நீங்கி, ஆன்மாவில் மூழ்கியடங்குகின்றது.

உன்னை நினைப்பதுநான் றன்னை நினைப்பதுவே;

என்னை நினைப்பதெண் ணாமையே – அன்னதூஉம்

நானென் றெழாதிருக்கு(ம்) நாட்டமே; நாடுவதும்

ஏனென் னிருப்பே அது!

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 990)

இவ்வாறு தன்னாட்டத்தால் தன் (அகந்தை) எழுச்சிக்கு நிரந்தர முடிவிட்ட அவன் வாக்கற்றுப் போக்குவரவற்றுச் சிந்தையுளந் தேக்குற்று மோனான்மத் தெள்ளாழி சேர்ந்து நின்றான்! ஜீவனாகிய நதி தன் மூலமாகிய ஆன்ம சாகரம் அடைந்ததால், கர்ம முயற்சியாகிய ஓட்டம் சலனமெல்லாம் தாமே அற்றுப்போய் அசலானந்த ரமணமாய் நிற்கின்றது!! இவ்வாறு தன் அன்புணர்ச்சி படிப்படியாகப் பரிபூரணப் பரிசுத்தமாக்கப் பெற்றதால் அம்மனிதன் குருபக்தியாகிய நான்காம் வகுப்பினின்றும் தேறி ஸ்வாத்ம பக்தியாகிய ஐந்தாம் வகுப்பை அடைகின்றான். தன்னைத் தானே அன்னியமாய்க் கருதி, ஆசை பய மோகமுற்று, பிறப்பிறப்பில் உழன்ற தடுமாற்றம் நீங்கி, ஸ்வாத்மாநு சந்தானமாகிற பரபக்தியால் தன்னில் தானே நிலை பெறுகின்றான். இவ்வான்ம நிஷ்டையே அன்பின் சிகரம். இவ்வான்ம நிஷ்டையே பக்தியின் எல்லையாகிய பரபக்தி!!.

களந்ததும்பு மாயக் கருத்தழிந்து வான்போல்

உளந்திறந்து பொங்கு மொளியாற் – றெளிந்த

உபசாந்த முற்றவிடத் துட்சுரக்கு மன்பே

சிவமார்ந்த மெய்ப்பத் திமை.

(குருவாசகக் கோவை 1209)

இந்த இரண்டற்ற சிவ மாகிய பேரன்பையே,

அம்புவி லாலிபோ லன்புரு வுனிலெனை

யன்பாக் கரைத்தரு ளருணாசலா.

(ஸ்ரீ அருணாசல அக்ஷரமண மாலை 101)

என்று ஸ்ரீ பகவான் குறிப்பிடுகின்றார். மனம் பரபக்தியுற்று ஆன்மாவில் ஆன்மாவாய்க் கரைந்து, தன் தனியிருப்பை இழந்துவிட்டதால், அது மீண்டும் எழுந்து, தனக்கு அன்னியமாக எதையும் அறியவோ, ஆசைப்படவோ செய்யாது. இந்நிலை அடைந்தபின் ஒருவன் தனக்கு அன்னியமாக எதையும் பார்ப்பதில்லை. எனவே, அன்னியபாவமின்றி, எவ்வொன்றையும் தானேயாக அன்பு செய்ய வல்லவனாகிறான். இந்த அன்னியமில் அன்பே அருணாசல பஞ்சரத்னத்தின் ஐந்தாவது பாடலில் ஸ்ரீ பகவானால்

உன்னிடத்தி லொப்புவித்த வுள்ளத்தா லெப்பொழுதும்

உன்னைக்கண் டெல்லாமும் உன்னுருவாய் – அன்னியமில்

அன்புசெயு மன்னோன் அருணா சலாவெல்கும்

இன்புருவாம் உன்னிலாழ்ந் தே.

என்று குறிப்பிடப்பட்டது.

அன்பே சிவமாய் விளங்கும் இவ் வனன்னிய பக்தி நிலையை நாம் அடையும் வரையில், அதற்குக் கீழ்ப்பட்ட எவ்வித பக்தி நிலையிலும் திருப்தியடைந்து நின்றுவிட இறைவன் நம்மை விடுவதேயில்லை. அதுவரை நாம் அடைந்து வந்த பக்தியின் இன்பம் ஒவ்வொன்றிலும் ஒருவித அதிருப்தியையே நாம் அனுபவிக்குமாறு இறைவனது திருவருள் நமக்கு உணர்த்தி வருவதால், அவ் வதிருப்தி நமக்கு மேலும் சிறந்த பேரின்பத்தையடைய ஓர் ஆவலை எழுப்பி, மேன்மேலும் முயன்று மேலேறத் தூண்டும்! இவ்வாறு நமக்கு எழும் அதிருப்தி உணர்வையே கருவியாகக் கொண்டு, இறைவன் நம் மனத்தை மேன்மேலும் சுத்தம் செய்து, ஸ்வாத்ம பக்தி முற்றிலும் பழுக்கும்வரை உயர்த்துகின்றார்! இந்நிலையே பேரின்ப நிலை! மழைநீர் கடலையடையும் வரையில் ஓட்டம் நில்லாதது போலவும், வானிற் கிளம்பிப் பறந்த பறவை தரைக்கு வரும் வரை வேறெங்கும் நின்றுவிட முடியாதது போலவும், இந்நிலையை நாம் அடையும் வரை நமக்கு அதிருப்தியும் நீங்காது; நம்மை முயற்சியும் விடாது!

மெய்யன்பின் சிகரமாகிய இவ்வான்ம நிஷ்டையோ ஆன்ம விசாரத்தாலேயே எய்தப்படுகின்றது. இவ்விசாரமோ, ஆன்ம உண்மையேயான கடவுள் அல்லது குருவின் அருளால் மட்டுமே ஒருவனால் திறம்பட இயற்ற முடியும்.

இருள்சே ருலகத் திறைவனது சுத்த

வருளொளியா லன்றித்தம் மாலே – மருள்சே

ரிருளின் கணுமொளியா யேய்ந்தமெய்ஞ் ஞானப்

பொருளின்பந் துய்த்த லரிது.

(குருவாசகக் கோவை 634)

ஆர்வமொடு தன்னையடிக் கர்ப்பணஞ்செய் தால்வெளியாம்

தேவனரு ளாலே தெரிவதலாற் – சீவ

மதியூக்கங் கொண்டு மதித்துணர லாகா

அதிசூக் குமம்மெய் யறி.

(குருவாசகக் கோவை 648)

உயிர்க்குயிரா நிற்குந்தன் னுண்மையா மீசன்

பயக்குந் திருவருளின் பாங்கே – நயக்குமெய்ஞ்

ஞான விசார நடைகடைபோ யுள்ளநிலை

யான சமாதி யடைவு.

(குருவாசகக் கோவை 724)

உள்ளே யிருக்கு முடையா னருள்வலத்தால்

உள்ளே யிழுத்தா லொழியத்தம் – கள்ளமனச்

சேட்டைவலத் தாலுளத்துட் சேர்ந்தமைதிச் சால்பெய்த

மாட்டுநரார் போக்கை மறித்து.

(குருவாசகக் கோவை 725)

இத்திருவருளோ பக்தியினாலன்றி வராது. பக்தியால் அருளும் அருளால் விசாரமும் விசாரத்தால் அனன்னிய பரபக்தியாகிய ஸ்வாத்ம பக்தியும் சித்திக்கும்.

...திருவருடான்

வித்தையிலும் வாராது வேறெதிலும் வாராது

பத்தியினாற் றானே வரும்.

(குருவாசகக் கோவை 726)

ஆன்ம விசார நெறியில் வெற்றியடைய அருளே பிரதானம் என்று இங்ஙனம் முடிவாவதைக் கொண்டு விசார சாதனையில் முயலும் சாதகர் யாரும், ‘எனக்கு அருளின் துணையுண்டோ, இல்லையோ?’ என்று ஐயமும் ஏக்கமும் உறவேண்டியதில்லை என்று ஸ்ரீ பகவான் தேற்றமளிப்பதாவது;

களைகணா மீசன் கனவருட்சீர் தன்பால்

விளைவுவிளை யாமையுள்ள வேண்டா – தளையின்

விடுதலைதான் வேண்டி விசாரத்திற் சிந்தை

கடுகியதே சாலுங் கரி.

(குருவாசகக் கோவை 727)

சாதகன் ஒருவன் ஆன்ம விசாரத்தில் உண்மையான முயற்சியுடையவனாக இருந்து வருவானாயின் அருளுக்கு அதுவே அடையாளமாகும்.

இறைவன் றிருவருளும் யானாரென் றாய்ந்துள்

உறையுங் கருவி யுசாவும் – பறையுங்கால்

ஒன்றுக்கொன் றுற்ற வுதவிகளா யான்மபரத்

தொன்றுநிலை யுய்ப்ப வொருங்கு.

(குருவாசகக் கோவை 728)

மெய்ப்பொருளே யுள்ளத்து விண்டாலல் லாதுலகச்

சொப்பனமா மாயை தொலையாது – சொப்பனநோக்

குள்ளதா னாரென் றுசாவு முபாசனையே

விள்ளுமா றாற்றும் விதம்.

(குருவாசகக் கோவை 729)

ஆன்மாநு சந்தான மஃதுபர மீசபத்தி

ஆன்மாவா யீசனுள னால்.

(குருவாசகக் கோவை ப. 13)

ஆன்ம நாட்டமாகிய தன்னாட்டமே பக்தி செய்யும் முறைகளுள் சிறந்தது மட்டுமின்றி, அதுவே சம்பூரண ஆன்ம சமர்ப்பணமாகும் என்ற உண்மையை ஸ்ரீ பகவான், ‘ஆன்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை கிளம்புவதற்குச் சற்றும் இடங்கொடாமல் ஆன்ம நிஷ்டா பரனாயிருப்பதே தன்னை ஈசனுக்களிப்பதாம்’ என்று ‘நானார்?’ என்ற நூலில் அருளியிருக்கின்றார்.

முதல், இரண்டாம், மூன்றாம் வகுப்பு (a) பிரிவைச் சேர்ந்த ஒருவன் தனது இறை வழிபாடாகிய பூஜை-ஹோமாதிகளை இயற்ற பொருட் செலவும், தேகப் பிரயாசையும் நிறையச் செலவு செய்யவேண்டி இருப்பதைக் கொண்டு, இச்செயல்களை இறைவனுக்காகத் தான் செய்யும் தியாகம் என்பதாகத் தவறாக நினைத்துக்கொண்டு, அதனால் அவை யாவும் தான் ஆண்டவனுக்குச் செய்யும் ஆத்ம சமர்ப்பணமாகக் கருதிக் கொள்ளலாம்! ஆனால் உண்மை அப்படியல்ல. தனது சுயநல இகபர ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இவன் கடவுளிடம் பேரம் பண்ணும் வியாபாரமே இதுவாகையால், இது உத்தம பக்தியாகிய ஆத்ம சமர்ப்பணமாகாது. ‘ஸ்ரீ மஹர்ஷி வாய்மொழி’ என்ற நூலில் ‘குருவருள்’ என்னும் அத்தியாயத்தில் (பன்னிரண்டாம் பதிப்பு, 2008,பக்கம் 43-ல்) ஸ்ரீ பகவான், ‘... சிறு ஊன் [மீன்] போட்டுப் பெருமீன் பிடிக்கிற வியாபாரந்தான் இது! தூண்டிற்காரனுக்கு மீன்களுக்கு இரைபோட வேண்டும் என்று வெகு அக்கரையா? மீனைப் பிடித்துச் சாப்பிடுவதிலன்றோ திருஷ்டி!’ என்று இடித்துக் கூறுகின்றார்!

‘சரணாகதி’ என்னும் உண்மையான பக்தி மூன்றாம் வகுப்பின் (b) பிரிவில்தான் ஆரம்பமாகின்றது. ஏனெனில், அதன் பிறகு மனிதன் சுயநலங்கொண்டு, கடவுளிடமிருந்து எந்த இகபர காமியங்களையும் எதிர்பாராதவனாய், சகல வேண்டுதல்களையும் விட்டொழித்துக் கடவுளின் அன்புக்காகவே அன்பு செய்ய ஆரம்பிக்கின்றான். இப்போதுதான் அவன் கடவுளுக்காகவே எல்லாவற்றையுந் துறந்தவனாகின்றான். இவ்வாறு முதல், இரண்டாம், மூன்றாம் வகுப்பு (a) பிரிவு வழியாகவே அவன் ‘சமர்ப்பணம்’ எனப்படும் உத்தமமான தெய்வபக்தி நெறிக்குக் கொண்டுவரப் படுகின்றான். எனவே மூன்றாம் வகுப்பின் (b) பிரிவில்தான் அவன் உண்மையான கடவுள் பக்தி உதிக்கப் பெறுகின்றான். இவ்வகுப்பில் இருக்கும்போது இவன் மெய்யான சரணாகதி மார்க்கத்திற்கு வந்து சேர்ந்து விட்டவனானாலும், தனது ஆன்ம சமர்ப்பணம் சம்பூரணமாகப் போவது எப்படி என்பதை அவன் அறியான்! அதாவது, அவன் மிகுந்த உற்சாகத்தோடு (எனது) தனது என்றிருந்தவைகளையெல்லாம் கடவுளுக்காக அர்ப்பணித்து விட்டாலும் ‘எனது’ என்று உடைமைகளையும் உணர்வுகளையும் உண்டாக்கிக் கொண்டேயிருக்கும் மூலவேராகிய ‘நான்’ என்பதை எப்படிக் கடவுளுக்குச் சமர்ப்பிப்பது என்ற வழியை அவன் இவ்வகுப்பில் அறிவதில்லை. இந்நிலையில்தான் அவனது இஷ்ட தெய்வமாகிய இறைவன் அவனுக்கு, ‘நான்’ என்னும் அகந்தையைச் சமர்ப்பணம்106 பண்ணும் ஒரே வழியாகிய107 ‘நான் யார்?’ என்ற ஆன்ம விசாரத்தைப் போதிக்க, மனிதவுடல் தாங்கி சற்குருவாக வருகின்றான்!

இவ்வாறு குருபக்தியாகிய நான்காம் வகுப்பில்தான் இம்மனிதன் சம்பூரண சரணாகதி செய்யும் சாதனை முறை யாதென்பதையே அறிகின்றான். மெய்யான தெய்வ பக்தி அல்லது குருபக்தி என்பது, ஆன்ம விசாரத்தால் தன் ஆன்மாவையே நேசிப்பதுதான் – ஸ்வாத்ம பக்திதான் – என்று அறிந்து கொண்டதும், ‘நான் யார்?’ என்றறிய, தன் கவனத்தைத் தன்னுள்ளேயே திருப்புகின்றான். தற்கவனம் உண்டாகவே, மனம் ஆன்மாவில் மூழ்கித் தன் தனித் தன்மையை (வியக்தியை) இழந்து உருவழிய, இவ்வாறு அகந்தையற்ற ஸ்வரூபாநுபவத்தை அடையும் போதுதான் ‘ஸ்வாத்ம பக்தி’யாகிய ‘அன்னியமில் அன்பு செய்வோன்’ ஆகின்றான்! இதுவே ஐந்தாம் வகுப்பின் நிலை!.

முதல், இரண்டாம், மூன்றாம் வகுப்பின் (a) பிரிவு இவைகளிலிருந்தபோது இம்மனிதன் பின்பற்றிய வழியைப் ‘பிரவிருத்தி மார்க்கம்’ எனலாம். அதாவது, உள்ளேயுள்ள ஆன்மாநுபவ சுகத்தை நாடாமல் இகபர லாபமாகிய வெளிப் பொருள்களிலிருந்து கிடைக்கும் ஐம்புல சுக நாட்டம். பிறகு அவன் மூன்றாம் வகுப்பின் (b) பிரிவுக்கு வந்ததிலிருந்து அவ்வகுப்பிலும் நான்காம் வகுப்பிலும் அவன் பின்பற்றியது ‘நிவிருத்தி மார்க்கம்’ எனலாம். இதில் மனம் வெளி விஷயங்களை விட்டு, உண்முகமாகத் திரும்பி, தான் உதித்த இடமாகிய ஆன்மாவையடைந்து சுகிக்க முயல்கின்றது. மனிதனைப் பிரவிருத்தி மார்க்கத்தில் இட்டுச்செல்லும் வேத சாஸ்திரப் பகுதியே கர்ம காண்டம் எனப்படும். அதற்கு மாறாக, நிவிருத்தி மார்க்கத்தில் இட்டுச்செல்லும் வேத சாஸ்திரப் பகுதியே ஞான காண்டம் எனப்படும். பிரவிருத்தி மார்க்கத்தில் இட்டுச் செல்லும் வேத சாஸ்திரப் பகுதியை அருளிய வேத ரிஷிகள், ‘மக்கள் இம்மார்க்கத்தால் சாசுவத ஆனந்தத்தைப் பெறுவார்கள்’ என்ற கருத்தில் அருளவில்லை. பிரவிருத்திகளின் பயனின்மையையும், அங்கு கிடைக்கும் சுகங்களின் அற்பத் தன்மையையும் மக்கள் அவ்வழியே சென்று கண்டுவிட்டால் பிறகு நிவிருத்தி மார்க்கத்திற்குத் தாமே திரும்புவர் என்ற உண்மையையறிந்தே அவ்வாறு கர்ம காண்டத்தை முதலில் இடம்பெற அருளினர். கர்ம காண்டத்திற் புதைந்துள்ள இந்நோக்கம் குருவாசகக் கோவை, 681-ஆவது பாடலில் ஸ்ரீ பகவானால் விளக்கப்படுகின்றது:

மாதொருத்தி தன்னை மணக்கெனலப் புன்போக

மீதருத்தி விட்டொழிகை மேற்றன்றோ – வேதம்

சொலான்மகத்தை யேத்துவிதி சொர்க்காதி போகம்

எலாமுவர்த்தற் கன்றோ வியம்பு.108

தாயொருத்தி தன் சிறு குழந்தைக்கு ஒரு மருந்து கொடுக்க விரும்பினால், வெளியில் விளையாடும் அவனை வீட்டினுள் வரவழைக்க முதலில் ஓர் இனிப்புப் பண்டத்தைக் காட்டி உள்ளே கூப்பிடுகிறாள். அவன் உள்ளே வந்ததும் அவனுக்கு ஊட்டுவதோ மருந்து! ஏனெனில், மருந்து உடம்புக்கு நல்லது என்பதை அவன் அறியாதவனாகையால் ‘அது கசக்கும்’ என்று எண்ணி உள்ளே வர மாட்டான். அதனால், அவனை உள்ளே வரவழைக்க முதலில் இனிப்பைக் காட்டி அழைக்கிறாள் தாய்! அது போலவே ‘பெரும்பாலான பாமர மக்கள், சம்பூரணமான ஆன்ம சமர்ப்பணம் என்னும் மருந்து நிரந்தர சுகத்தைத் தருவதானாலும் அதை முதலில் கசப்பானதாகவே கருதுகிறார்கள்’ என்றறிந்தே வேத ரிஷிகள் முதலில் இகபர சுக போகங்களைத் தரும் கர்ம காண்டத்தையருளி மக்களைக் கடவுளிடம் வசீகரிக்கிறார்கள். வீட்டுக்குள் அழைத்து வந்தபிறகுதான் தன் குழந்தைக்கு மருந்தைக் காட்டி ஊட்ட வேண்டும் என்றறிந்துள்ள ஓர் தாயைப் போலவே, வேதரிஷிகளும், கர்மம், தர்மம் என்னும் பிரவிருத்தி மார்க்கங்களின் அநுஷ்டானத்துக்கு மக்கள் வந்த பிறகே ஆத்ம சமர்ப்பணமாகிய உத்தம பக்தி வழியை (நிவிருத்தி மார்க்கத்தை) அவர்களுக்கு உபதேசிக்கலாம் என்று அறிந்தே இருந்தனர்!

இம்மனிதன் பக்திப் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் அதற்கடுத்த மேல் வகுப்பிற்கு உயருவதைக் கூறும்போது, எப்படி திருவருளானது அவனைப் பிரவிருத்தி மார்க்கத்திலிருந்து மெல்ல நிவிருத்தி மார்க்கத்திற்கும், அதன் பிறகு உயர்வற உயர்ந்த முடிவு நிலையாகிய ஆன்ம சாட்சாத்காரத்திற்கும் முன்னேற்றி வருகின்றது என்ற விபரம் இவ்வத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியில் மிகவும் விரிவாகக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரவிருத்தி மார்க்கத்திலிருந்து முடிவுநிலை வரையிலும் முன்னேறும் முறையானது ஸ்ரீ ரமண கீதையில் பதினாறாவது அத்தியாயத்தில் சுருக்கமாக ஸ்ரீ பகவானது கூற்றாகக் குறிக்கப்பட்டுள்ளது:

காமியங் கோரி (கடவுளைப்) பக்தி செய்பவன், அக்காமியம் நிறைவேறிய பின்னும் திருப்தியடையாமல் சாசுவதப் பேரின்பத்தை நாடி இறைவனையே மீண்டும் முடிவில் வேண்டி நிற்பான்.

(சுலோகம் 16-10)

காமியங் கலந்த பக்தியும், அக்காமியம் நிறைவேறினதோடு நின்று விடாமல், பரம புருஷனிடம் நம்பிக்கையை ஓங்குவித்து, மேன்மேலும் (சுத்தமாகி) வளர்ந்து வருகின்றது.

(சுலோகம் 16-11)

அந்த பக்தியும் காலக்கிரமத்தில் வளர்ந்து பூரண பக்தியாகும். அத்தகைய பூரண பரபக்தியால் (பக்தன்) ஞானத்தாற் போலவே பவத்தைக் கடக்கிறான்.

(சுலோகம் 16-12)

(இவ்வாறு) பக்தி பரிபூரணமானவுடன் (சத்திய வஸ்துவின் இயல்பையும் அதையடையும் வழியையும்) ஒரு முறை சிரவணம் செய்ததுமே (மனன நிதித்யாசனம் அப்பொழுதே முற்றுப்பெற்று) அதுவே போதியதாகிப் பரிபூரண ஞானத்தைத் தரும்.

(சுலோகம் 16-8)

பிரவிருத்தி மார்க்கத்தைப் பின்பற்றும்போது ஒருவன் காமியங்களைக் கோரியே கடவுளை ஆராதிக்கிறான். காமியங்கள் நிறைவேறினாலும் உண்மையான பூரண திருப்தியோ கிடைப்பதில்லை. ஆயினும் கடவுளை ஆராதிப்பதை நிறுத்துவதில்லை! அதாவது, முடிவில் ‘தன் சுயநலக் கோரிக்கைகள் கடவுள் ஆராதனையாற் பூர்த்தி செய்யப்பட்டாலும் அதனால் மெய்யான சாந்தியோ, இன்பமோ ஒருக்காலும் கிட்டவே கிட்டாது’ என்ற விவேகத்தைப் பெறுகின்றான். பல பிறவிகள்தோறும் வெகுகாலம் இவ்வாறு பிரவிருத்தி மார்க்கத்தில் அலைந்து அலுத்த பிறகே இவ்விவேகத்தின் மலர்ச்சியுற்று, பிறகு நிவிருத்தி மார்க்கத்திற்கு வருவான். பிறகுதான் கடவுளிடம் எதையும் விரும்பாத, அன்புக்காகவே அன்பு கொள்கின்ற, நிட்காம தெய்வ பக்தியோடு கடவுளை ஆராதிப்பான். இவ்வாறு மூன்றாம் வகுப்பு (b) பிரிவிற்கு வந்து நிவிருத்தி மார்க்கத்தை அனுசரிக்கும் போதுதான் மெய்யான தெய்வபக்தியும், பரிசுத்தமான விவேக சக்தியும் எய்தப் பெறுகின்றான். இத்தகைய சித்த சுத்தியின் உச்ச நிலையில்தான் அவன் தன் நிஜசொரூப இயல்பை அறிய முடிகின்றது.

இங்குக் கூறப்பட்டதிலிருந்து பக்திப் பள்ளியின் வகுப்புகள்தோறும் ஒரு பக்தனின் அன்பு இப்படிக் கிரமமாகச் சுத்தீகரிக்கப்பட்டு வருகையில் மூன்றாம் வகுப்பின் (a) பிரிவிலிருந்து மூன்றாவது வகுப்பின் (b) பிரிவிற்குப் போகும் போதுதான் முக்கியமானதோர் திருப்பம் அடைகிறது என்பதை வாசகர்கள் அறியலாம். அதுவரை அவனது மார்க்கம் பிரவிருத்தி மார்க்கமே! அவனது பக்தியும் விஷய பக்தியே தவிர, தெய்வ பக்தியல்ல! அதுவரை அவன் செய்துவந்த வழிபாடுகள் அனைத்தும் காமிய கர்மங்களே தவிர, நிட்காமிய கர்மங்களல்ல! இந்தத் திருப்ப நிலையாகிய மூன்றாம் வகுப்பின் (b) பிரிவில்தான் அவன் நிவிருத்தி மார்க்கத்தைப் பின்பற்றுபவனாகிறான். அவனது பக்தியும் தெய்வபக்தியாகின்றது; அவனது வழிபாடும் நிட்காமிய கர்மமாகின்றது. ‘உபதேச வுந்தியா’ரின் முதல் மூன்று பாடல்களில் ஸ்ரீ பகவான் கூறிய உபதேசங்கள் இது பற்றியவையே ஆகும். அதாவது, ஸ்ரீ பகவான் முதல் மூன்று பாடல்களால் நம்மைப் பிரவிருத்தி மார்க்கத்திலிருந்து திருப்பி மீட்கின்றார்! மற்ற 27 பாடல்களும் நிவிருத்தி மார்க்கத்தினர்க்கே கூறப்பட்டவையாகும்!

பக்திப் பள்ளியை ஐந்து வகுப்புகளாகப் பிரித்து மேலே விளக்கி வந்தது ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் தற்சமயம் பக்திப் பள்ளியில் எவ்வகுப்பில் இருந்து வருகிறோம் என்பதைக் கண்டுகொள்ளவும் மேலே அடுத்துள்ள வகுப்புகளுக்கு உயர என்னவிதமான முயற்சிகள் நாம் செய்யவேண்டும் என்பதைக் கண்டுகொள்ளவுமே அன்றி, மற்றவர்கள் எவ்வகுப்பிலிருக்கிறார்கள் என்று தீர்மானிப்பதற்கல்ல. அப்படிப் பிறரைப் பற்றித் தீர்மானிக்க நாம் கிளம்பினால் தவறான முடிவுக்கே வருவோம்! ஏனெனில், ஒருவர் வெளிவாழ்வில் பின்பற்றும் ஏதோ ஒருவழிபாட்டின் புறச் சின்னத்தை மட்டும் கண்டு அவரது வகுப்பு இன்னதென்று தீர்மானித்துவிட முடியாது. உதாரணமாக, நாம் முன்பே விளக்கியபடி, ஒருவன் ஞான குரு ஒருவரிடம் தினம் சென்று வணங்கி வருகிறானென்று வைத்துக் கொள்வோம். அதைக் கொண்டு அவன் குரு பக்தியாகிய நான்காம் வகுப்பில் உள்ளவன் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், அவன் அந்த ஞான குருவை, தனது இஷ்டங்களைப் பூர்த்தி செய்து வைக்கும் சகாயிகளாகிய நானா தெய்வங்களுள் ஒன்றாகவே உள்ளத்திற் கருதி, தனது உலகாசைகளையே நிறைவேற்றித் தரும்படி அவரிடம் பிரார்த்தித்து வணங்கியும் வரலாமல்லவா? அது போலவே ஐந்தாம் வகுப்புற்று பரமான்ம சொரூபமாய் விளங்கும் ஞானியொருவர் இரண்டாம் வகுப்பு மாணவனொருவனைப் போல சிலசமயம், நானா தெய்வ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் சில திருக்கோயில்களுக்குப் போய், அத் தெய்வமூர்த்திகளை எல்லாம் பாடித் துதித்து வணங்கி வருவதுமுண்டு (ஞானசம்பந்தர், ஆதிசங்கரர் போன்ற மகான்கள்). அதனால், அவர்கள் இரண்டாம் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறிவிட முடியாது. இறைவனே அத்தகைய ஞானியரின் திருமேனியைக் கருவியாய்க் கொண்டு, இரண்டாம் வகுப்பு மாணவர்கட்கு வழிகாட்டவும், நானா தெய்வ மூர்த்திகளுக்குத் தேவையான சக்தியைப் புதுப்பிக்கவும் உபயோகித்து, அப் பரமபாவனர்களின் திருவாயால் பாடல் பெற்றுக் கொள்வதுமுண்டு!!

மேலும், கர்ம காண்டியாய் முதல் வகுப்பில் உள்ள ஒருவன் செய்துவரும் கர்மத்தையே இரண்டாம் வகுப்பிலுள்ள ஒருவனும் செய்து வருவதாக நமக்குத் தோன்றலாம். உதாரணமாக, முதல் வகுப்பிலுள்ள ஒருவனும், இரண்டாம் வகுப்பிலுள்ள மற்றொருவனும் ‘ம்ருத்யுஞ்ஜய’ ஹோமம் செய்வதுண்டு. ஆனால், அவர்களது உள்ளக் கருத்தில் பேதமுண்டு. முதல் வகுப்பு மனிதன் அந்த ஹோமம் செய்யும்போது, ‘இந்த ஹோமத்தை நான் செய்வதால் ம்ருத்யுவை ஜயித்த சிவன் வழுவாது கட்டாயம் வந்து எனக்கு மரணத்தை அகற்றியே தீரவேண்டும்’ என்றபடி (அதாவது, கடவுள் ஹோமத்துக்குக் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்றபடி) கிடைக்கப்போகும் பலனுக்குத் தன் முயற்சியாகிய கர்த்ருத்வமே பிரதானமாகக் கொள்கிறான். இரண்டாம் வகுப்பிலுள்ளவனோ ‘ம்ருத்யுஞ்ஜயனான சிவபிரான் கருணை கூர்ந்தாலன்றி தனக்கு அப்பலன் கிட்டாது’ என்று கடவுட் சார்பை உள்ளத்திற் கொண்டவனாய், சிவபிரானது பிரீதிக்கு ஆளாகி, அவரருளை எதிர்பார்த்தவனாய், கர்த்ருத்துவ புத்தியற்றவனாய் அந்தக் கருமத்தைச் செய்வான். ஆகவே, முதல் வகுப்பிலுள்ளவனது காரியம், இரண்டாம் வகுப்பிலுள்ளவனது காரியம் வெளிமுகத்தில் ஒன்றுபோலவே காணப்பட்டாலும், அதைச் செய்யும்போது உள்ளத்திலுள்ள அகந்தைக் குறைவு, கடவுட் சார்பு, நம்பிக்கை இவற்றின் வேறுபாட்டுக்கேற்ப வேறுபடுகின்றது. ஆகையால், செய்யுங்காரியத்தின் புறத்தோற்றமல்ல, அக் காரியத்தைச் செய்யுங்கால் உள்ள மனோபாவத்தின் பேதமே பக்திப் பள்ளியின் வகுப்புகளுக்கிடையே உள்ள பேதத்திற்குக் காரணமாகும்.

இனி, நாம் ஒவ்வொருவரும் இப் பக்திப் பள்ளியில் எவ்வகுப்பிற் படித்து வருகிறோம் என்பதை மேற்கூறப்பட்ட பாகுபாடுகளின்படி நாமே தற்சோதனை செய்து கண்டறிந்து கொண்டு, அதற்குமேல் உள்ள அடுத்த வகுப்பிற்குச் செல்ல முயலவேண்டும். இச்சோதனையில், நம் தகுதியை நாமே வீணாகப் பெரிதாய் மதித்து, நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு, தற்காலிகத் திருப்தி அடைந்துவிடாமல், நாம் செய்யும் பக்தி காமிய விஷய பக்தியா, அல்லது நிஷ்காமிய கடவுள் பக்தியா என்று சரியாகவும் உண்மையாகவும் பகுத்துணர வேண்டும். இவ்வாறு பக்தி வகுப்பை ஐவகைப்படுத்தி விளக்கினோமாயினும், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மட்டுமே சரியாகப் பொருந்தி நிற்கிறோம் என்று சொல்லி விடுவதற்கில்லை. ஏனெனில், சிற்சில சமயங்களில் வாழ்க்கையில் நேரும் சங்கடங்களுக்கேற்ப, மனவுறுதி கெட்டுத் தடுமாறி, ஒரு வகுப்பிலிருந்து அதற்குக் கீழேயுள்ள வகுப்புக்கு இறங்குவதோ, சில சமயம் இரு வகுப்புகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருப்பதோவாக வாழ்வின் வெகு காலத்தைக் கழிக்க நேருவதுமுண்டு.

இவ்வுலகில் நாம் அடைய விரும்பும் சுகங்களுக்காகவும், பிதிரர் உலகம் முதல் சுவர்க்கம் வரையிலுமுள்ள மேலுலகங்களில் அடைய விரும்பும் சுகங்களுக்காகவும் கர்மங்களைச் செய்து வருவதில் மிகுந்த விருப்பமுள்ளவர்களாயின், நாம் பக்திப் பள்ளியின் முதல் வகுப்பிற் படித்து வருகிறோம் என்று அறிய வேண்டும். வேதம் விதிக்கும் கர்மானுஷ்டானங்களைக்கூடக் கடைப்பிடிக்க மறுத்து, நாஸ்திகர்களாய் கடவுளை நிந்தித்து,

பரமேது வினைசெயும் பயனேது பதியேது

பசுவேது பாச மேது

பக்தியே தடைகின்ற முக்தியே தருளேது

பாவபுண் ணியங்க ளேது

வரமேது தவமேது விரதமே தொன்றுமிலை

மனம்விரும் புணவுண் டுநல்

வத்திர மணிந்துமட மாதர்தமை நாடிநறு

மலர்சூடி விளையாடி மேற்

கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரோடு

கலந்துமகிழ் கின்ற சுகமே...

கண்கண்ட சுகமிதே கைகண்ட பலன்...

...இது, பிடிக்கவறி யாதுசிலர் தாம்

பேரூரி லாதவொரு வெறுவெளியி லேசுகம்

பெறவே விரும்பி வீணிற்

பண்கொண்ட வுடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்

பசையற்று மேலெழும்பப்

பட்டினி கிடந்துசா கின்றார்க ளீதென்ன

பாவமிவ ருண்மை யறியார்

கண்கொண்ட குருடரே யென்றுவாய்ப் பல்லெலாங்

காட்டிச் சிரித்து நீண்ட

கழுமரக் கட்டைபோல்....

(திருவருட்பா)

நிற்பவர்களாய், நாம் பொன்னணி அலங்காரம், மாட மாளிகை வாசமும், கார் முதலிய வாகன வசதிகளும், சமூகத்தில் உயர் பதவியும், பணியாட்களும் வாய்க்கப் பெறுதல் ஆகியவைகளையே வாழ்க்கைக் குறிக்கோளாய் (புருஷார்த்தமாய்) உடையவர்களாய் இருப்போமாகில், ‘ஆதி மனிதனாய் முதல் வகுப்பிற்கூட சேர விரும்பாமல், பக்திப் பள்ளிக்கு வெளியில் திரிந்து கொண்டிருக்கிறோம்; இனி, முதல் வகுப்பிலாவது நாம் சேர வேண்டும்’ என்று நாம் நம்மைத் தீர்மானிக்க வேண்டும்! நம் இகபர (இவ்வுலகிலும் சுவர்க்கத்திலும் உள்ள) வாழ்வின் சுகங்களை உயர்த்தித் தந்தருளும்படி, கடவுளின் பற்பல நாம ரூபங்களை உபாசித்தோ, பற்பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று ஆங்காங்குள்ள கோவில் மூர்த்திகளை வழிபட்டோ வேண்டி வருவோமாயின், நாம் நம்மை இரண்டாம் வகுப்பில் உள்ளவர்களாகக் கண்டறிய வேண்டும். ஏனெனில், இங்கும் நம் பக்தி விஷய பக்தியே. நானா நாமரூபத் தெய்வங்களை நம் காமியங்களைப் பூர்த்தி செய்விக்கும் நம் கருவிகளாகவே அணுகுகின்றோம். நம் வழிபாட்டைப் பலவித நாமரூபங்களிற் பிரித்துச் செய்யாமல், ‘ஒன்றே கடவுள், ஒருவரே உண்மை’ என்ற அறிவால் ஏக பக்தியுடன் தெய்வோபாசனை செய்யும்போதும் இகபர லோக சுகப் பொருள்களையே நாடி நிற்போமாயின், அப்போதும் நமது பக்தி தெய்வ பக்தியல்ல, விஷய பக்தியே – கடவுள் நம் சகாயியே – என்பதை உணர்ந்து, அதனால் நாம் மூன்றாம் வகுப்பின் (a) பிரிவிலேயே உள்ளோம் என்று முடிவு செய்யவேண்டும்.

ஆனால், பக்திப் பள்ளியில் முதல், இரண்டு, மூன்றாம் வகுப்பு (a) பிரிவு இவைகளில் ஏதேனுமொன்றிற் பயிலும்போது, முன்பு கூறப்பட்டதுபோல், பள்ளியிற் சேராமல் வெளியில், ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ எனத் திரியும் விலங்கின வாழ்விற்குத் திரும்பிவிட ஒருவனுக்கு விருப்பம் உண்டாகி விடுமேல், அவன் யோக ப்ரஷ்டனாகின்றான். ஆனால், மூன்றாம் வகுப்பின் (b) பிரிவை அடைந்தவர்களுக்கு இத்தகைய வீழ்ச்சி ஏற்பட வழியேயில்லை -மூன்றாம் வகுப்பின் (a) பிரிவில் தாம் இருப்பதாகத் தவறாக எண்ணிக் கொள்ளும் சாதகர்கள் சிலர், சிலசமயம் தம் உள்ளத்திலுள்ள பற்பல காமியங்கள் நிறைவேறப்பெறாத குறையால் மனந்தளர்ந்து, அவைகளை அடையும் வழிகளாகிய முதல், இரண்டாம் வகுப்புப் பயிற்சிகளை(யாகாதி கர்மங்கள், நானா தெய்வ உபாசனைகள் இவைகளை)த் தொடங்கக் கிளம்புவதுண்டு! எனின், அது அவர்கள் அவ்வக் கீழ்வகுப்புகளுக்கே தகுதியுடையவர்கள் என்பதையே காட்டும்.

மேலும், நம்மிற் சிலர் தம்மை முக்தி மட்டுமே விரும்பும் முமுக்ஷுக்களாகக் கருதிக்கொண்டு பற்பல குருமார்களிடம் சென்று பக்தி செய்வதுண்டு. ‘என் குறிக்கோள் மோட்சமே தவிர, இகபர காமிய விஷயங்கள் அல்ல; ஆதலால், நான் குருபக்தியாகிய நான்காம் வகுப்பைச் சேர்ந்தவன்’ என்று இவர்கள் கூறிக் கொள்வதுண்டு! இவ்விதமே இன்னுஞ் சிலர், ‘நான் முக்தியடைய இச்சிக்கும் முமூக்ஷுதான்; அதை முன்னிட்டே பற்பல க்ஷேத்திரங்களுக்கும் போய் ஆங்காங்குள்ள பல நாமரூப தெய்வங்களை உபாசித்து வருகிறேன்’ என்றும் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், இது சரியான தீர்மானமல்ல. எப்படி என்று பார்ப்போம்.

மோட்சமே குறிக்கோள் என்பதால், இவர்கள் உலக சுகங்களை எல்லாம் துறந்துவிட்டுக் கடவுளருளை விரும்பும் மூன்றாம் வகுப்பு (b) பிரிவில் இருப்பவர்களாகவும், அல்லது குருமார்களிடம் சென்று வருவதால் குரு பக்தியாகிய நான்காம் வகுப்பிலிருப்பவர்களாகவும் தம்மைக் கருதிக் கொண்டாலும், உண்மை அப்படியல்ல. பற்பல குருமார்களிடம் செல்வது என்பது பற்பல நாம ரூபங்களை நாடி ஓடுவதேயன்றி வேறல்ல. ஆகையால், அவர்களது அன்பு ஏகமுகப்பட்டுக் குவியாமற் பன்முகப்பட்டுப் பிரிந்து சிதறிப் போவதால் பலஹீனமடைந்து விடுகின்றது. அதனால் எந்த ஒரு குருவினிடமும் அன்பு ஆழ்ந்து பதிய முடியாமலும், அதனால் அவர்கள் யாரொருவருடைய உபதேச நெறியையும் செவ்வனே புரிந்துகொண்டு பூரணமாய்ப் பின்பற்ற முடியாமலும் போகின்றது. ஆகவே, அவர்கள் எவ்வொரு குருவினிடமிருந்தும் உண்மையான எந்த லாபமும் பெறமுடியாமற் போகின்றனர். உதாரணமாக, ஒரு நண்பர் ஒரு உணவு விடுதியி(ஹோட்டலி)லிருந்து வெளிவந்து மற்றொரு உணவு விடுதியிற் புகுவதை நாம் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பொருளென்ன? அவர் முதல் விடுதியில் பசியாற ஒன்றும் சாப்பிடவில்லை என்பதையே அது காட்டுகின்றதல்லவா? அவர் அவ்விரண்டாவது உணவு விடுதியில் வெளியேறியதும் முன்போலவே மற்றொரு உணவு விடுதியில் நுழைவாராயின் அவர் இன்னும் பட்டினியாகவே இருக்கின்றார் என்றே பொருள்படும். உண்மையில் ஏதாவதொரு விடுதியிற் சாப்பிட்டிருப்பாராயின் அவர் மறுபடியும் இன்னொன்றிற் புகாமல் தன் இருப்பிடம் நாடிச் செல்ல மாட்டாரா!

‘இந்த விடுதியில் சாதம் நன்றாக வெந்திருக்கும். அதை இங்கு பெற்றுக் கொள்கிறேன். அந்த ஹோட்டலில் சாம்பார் ஜோர்! அதனால் அதை அங்குதான் பெறவேண்டும். கூட்டுக்கறிகள் மூன்றாவது விடுதியில்தான் நிறையப் பரிமாறுகிறார்கள். அதோ அந்த ஹோட்டலில் அனுதினம் அப்பளம் வடை, பாயசம் உண்டு!’ என்று அந்த நண்பர் தன் விநோத நடத்தைக்கு விமரிசனமானதோர் நொண்டிச் சமாதானம் கூறினால் அது எத்தகையதாய் இருக்குமோ அவ்விதமே சாதகர்களாகத் தம்மைக் கருதியுள்ள சிலர், ‘அந்த யோகியிடம் நான் ஹடயோக ஆசனங்களும் பிராணாயாமமும் பயில்கின்றேன்; இந்த குருவிடம் மந்திர தீக்ஷை பெற்றுக்கொள்கிறேன்; அதோ, அந்த மகாத்மாவிடம் நிஷ்காமிய கர்மயோக வழியைக் கற்கிறேன்; இன்னொரு மகானிடம் பக்தி மார்க்கத்தில் முன்னேறும் முறையை அறிந்து வருகின்றேன்; மற்றொரு குருவினிடம் வாசி யோகம் அப்பியசிக்கின்றேன்; அந்த ஸ்வாமிகளிடம் அத்வைத உபதேசம் பெற்றுக்கொண்டிருக்கிறேன்; ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று சிலாக்கியமாக இருப்பதால், இப்பெரியோர்கள் எல்லோரிடமுமே நான் சென்று வருகின்றேன்’ என்று சமாதானங் கூறுவதுண்டு! இதன் பொருள் என்ன? இவர்கள் எந்தப் பெரியோரையும் உண்மையிற் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதே!!

உதித்த விடத்தி லொடுங்கி யிருத்தல்

அதுகன்மம் பத்தியு முந்தீபற

அதுயோக ஞான முந்தீபற.

(உபதேச வுந்தியார் 10)

ஒருவனுக்கு உண்மையாகவே பசியிருக்குமானால் ஏதாவதோர் உணவு விடுதியில் உண்டு பசி தீர்த்துக் கொள்வான். பசியுள்ளவன் பல விடுதிகளுக்கு அலைய மாட்டான். உண்மையான சாதகனின் விஷயம் அப்படிப்பட்டதே. அவ்வாறே ஒருவர் உண்மையில் பரிபூரணரான சற்குருவாய் இருப்பாராயின் தன்னிடம் வரும் பற்பல படித்தரங்களிலுள்ள சாதகர்களுக்கும் அவரவர்க்கு ஏற்ற போதனையைத் தக்க வழியில் தாமே செய்துவிட முடியும். சாதகனும் புகழ் போகாதிகளில் உண்மையாகவே விருப்பமற்றவனாய், மெய்யான முமுக்ஷுவாய் இருப்பானாயின் அவன் பல குருமார்களிடம் ஓடி அலைய வேண்டிய அவசியம் நேரவே நேராது. ‘உருளும் உருளையில் ஒன்றுமே ஒட்டாது’ என்பதையுணர்ந்து அவன் ஒருவனைப்பற்றி ஓரகத்திருந்து உண்மை உணர்வான்.

ஆகையால், நாம் பல குருமார்களிடம் ஓடியலையும் மனநிலை உடையவர்களாய், அதேசமயத்தில் மனத்தின் ஆழத்தில் மறைமுகமாக உலகப் பொருள்களின் மேல் ஆசையுள்ளவர்களாயும் இருப்போமாயின், நாம் நம்மை நானாவற்றில் மனத்தைச் செலுத்தும் இரண்டாம் வகுப்பினராகவே தீர்மானிக்க வேண்டும். ஆனால், விஷய வெறுப்புற்ற முமுக்ஷுவாக நாம் இருப்பது உண்மையாயின், நாம் மூன்றாம் வகுப்பின் (b) பிரிவில் உள்ளவர்களாய், ஆனால், இன்னும் சற்குரு கிடைக்கப்பெறாமல் தேடி அவருக்காக நம்மைத் தயார் செய்து கொண்டிருக்கும் நிலையிலுள்ளவர்களாய்த்தான் தீர்மானிக்க வேண்டும். அப்போதும் நாம் நான்காம் வகுப்பைச் சேர்ந்த குருபக்தி உடையவர்களாகிவிட முடியாது. ஏனெனில், நான்காம் வகுப்பாகிய ‘குருபக்தி’ என்பது கற்பிற் சிறந்ததோர் இல்லாளின் பதிபக்தியைப் போன்றது. அதனால்தான், சற்குருவை ‘குருநாதன்’ என்று அழைக்கிறோம். தன் கணவனின் சகோதரர்கள் பலர் உள்ள ஓர் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட பெண் ஒருத்தி, தன் குடும்பத்திலுள்ள மற்றெல்லாப் பெரியவர்களிடமும் அன்பும் மரியாதையும் கொண்டு ஒழுகி வந்தாலும், கற்புக் கடம் பூண்ட காதலோடு தன் வாழ்வின் பொறுப்பு முழுவதற்கும் தன் கணவன் ஒருவனையே பற்றி நின்று பதிபக்தி செய்வதுபோல, உலகில் இதுவரை தோன்றிய மகான்கள், இப்போதும் வாழும் மகான்கள் அனைவரிடமும் மரியாதையும் அன்பும் கொண்டவர்களாய் நாம் இருந்து வந்தாலும், அதே சமயம், நமக்கு உற்றவராக ஒரு குருநாதனை வரித்துக்கொண்ட பிறகு, அவரிடமன்றிப் பிறரிடம் தன் முக்திக்காகக்கூடச் செல்லும் ‘பிறநாட்டம்’ அற்று, நம் சற்குருநாதனின் உபதேச நெறியைத் தவிர மற்ற எதையும் கடைப்பிடிக்க விரும்பாத கற்புடன் சாதனை செய்து வருவதே உண்மையான குருபக்தியின் லக்ஷணமாகும். ஒருமுறை தரிசித்து, ‘இவரே நம் சற்குரு’ என்று அவரை வரித்துக்கொண்ட பிறகு, அவரது வழியையே பின்பற்றத் தீர்மானித்து, ‘நான் முக்திபெற விரும்பி என் சற்குருவை வந்தடைந்து விட்டேன். அவர் எனக்கு மோக்ஷமளித்தாலும் அளிக்காவிட்டாலும் நான் இனி வேறொரு குருவை நாடிப்போகேன். முக்தியோ பந்தமோ, சுவர்க்கமோ நரகமோ, நன்மையோ தீமையோ - எதை எனக்களிக்க அவர் விரும்பினாலும், அவர் என்னை எங்கே எதில் வைக்க விரும்பினாலும், அதுவே எனக்கு ஆனந்தம்!’

...என்புக லிடநின் னிட்டமென் னிட்டம்

இன்பதெற் கென்னுயி ரிறையே.

(ஸ்ரீ அருணாசலப் பதிகம் 2)

...குறையும் குணமும் நீயல்லால்

எண்ணே னிவற்றை என்னுயிரே

எண்ண மெதுவோ அதுசெய்வாய்...

(ஸ்ரீ அருணாசல நவமணிமாலை 7)

என்றபடி திடமான சம்பூரண சரணாகதியுடன் ஏக பக்தியுடையவனாய் இருப்பதே நான்காம் வகுப்புக்குரிய குருபக்திக்கு அடையாளமாகும்.

ஸ்ரீ விவேகானந்தர் பவாஹாரி பாபாவைச் சந்தித்தபோது அப்பெரியாரது மேன்மையையுணர்ந்து அவரைத் தனது குருநாதராகக் கொள்ளலமா என்று மனச் சலனமடைந்தார். அப்பொழுது முன்பே அவரது சற்குருவாய் அமைந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ விவேகானந்தரின் மனநிலைக்கிரங்கும் முகக் குறிப்புடன் தரிசனம் தந்து உள்ளந் தேற்றவே, சீடர் தெளிவுற்று, ‘அத்தா உனக் காளாயினி யல்லேனென லாமே’ என்று தன் பிழையுணர்ந்து, தனக்குற்ற சற்குருவாகிய ஸ்ரீ இராமகிருஷ்ணரைத் தவிர, இனி பாபாவைக் குருவாகக் கருத விரும்பாதவரானார். அதன்பிறகும் பாபாவிடம் அவர் பெருமதிப்பும் அன்பும் காட்டத் தவறியதில்லை. ஆயினும், பாபா விவேகானந்தரின் குருவல்ல. இதுவே நான்காம் வகுப்பாகிய குருபக்தியையுடைய சீடன் ஒருவன் சரியானபடி மற்ற பெரியோர்களுக்குத் தன்மனதில் தரும் தக்க இடமாகும்.

எனவே, பல குருமார்களிடம் சென்றலைவோர், பொருள் போகம் புகழாதி சுயநலக் கோரிக்கைகளுக்காக நானா தெய்வங்களைச் சகாயமாகக் கொண்டு உபாசிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவர்களாகவோ, அல்லது விஷய இச்சை அறவேயற்று உண்மையில் விரக்தர்களாய் இருப்பவர்களாயின், தனக்கு உற்ற சற்குருவை அடையும்முன் உள்ள மனநிலையுடைய மூன்றாம் வகுப்பு (b) பிரிவு மாணவர்களாகவோ தம்மைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டியதே! பிந்திய பிரிவைச் சேர்ந்த நல்லோராயின் தம் குருவைத் தேடும்போது கருத்திற் கொள்ளவேண்டிய அறிவுரையாக ஸ்ரீ பகவான் அருளுவதாவது:

மெய்ஞ்ஞானி வேறேயம் மெய்ஞ்ஞான நூலுணர்ந்த/p>

விஞ்ஞானி வேறே விளம்புங்கால் – அஞ்ஞானக்/p>

கட்டறக்காண் பார்க்குக் கலைஞரைநீத் தான்மபர/p>

நிட்டர்பாற் சேர்தலே நேர்.

பொருள்: உண்மையைக் கூறுமிடத்து, ஆன்மாவையுணர்ந்த மெய்ஞ்ஞானிகள் வேறு; அந்த ஆன்ம ஞான சாஸ்திரங்களைப் புத்தியாற் கற்றுத் தேறியுள்ள கலைஞர்கள் (விஞ்ஞானிகள்) வேறு ஆவர். அஞ்ஞான பந்தமற்று உய்வு பெற விரும்பும் சாதகர்கள் (மேலே இரண்டாம் வகையினராகக் கூறப்பட்ட) சாஸ்திரப் பண்டிதர்களை ஒதுக்கிவிட்டு, மேலான ஆத்மநிஷ்டர்களிடமே அணுகி உறவு கொள்ளவேண்டும்.

(குருவாசகக் கோவை 1158)

பரத்துவமா மோனப் பதவொளியில் யானற்

றுருத்தபர பத்தியுணர் வூற்றாங் – கருத்தின்

றிரத்துவமா முத்தமசச் சீடத் துவமே

குருத்துவமாக் கொள்க குறித்து.

பொருள்: நான் என்னும் அகந்தையற்று, பரநிலையாகிய மோன வெளியில் ஊன்றிப் பதிந்த பரபக்தியுணர்வில் அறிவு ஸ்திரமடைவதே உத்தம சற்சீடத்துவமாகும். இவ்வுத்தம சற்சீடத்துவம் யாரிடமுள்ளதோ அவரே சரியான சற்குருத்துவமும் உடையவர் எனக் கண்டறிந்து கொள்க.

(குருவாசகக் கோவை 269)

அடைந்தவர்க்குப் பின்னுமொன்றை யாணை யிடுவோன்

அடைந்தகொடுங் கூற்றுவிதி யாவன் – அடைந்தவரைச்

செய்வன செய்து முடித்தோராத் தீர்ப்போனே

தெய்வ வருட்குருவாத் தேர்.

பொருள்: தன்னிடம் வந்தடைவோரை (இன்னின்ன சாதனைகளைச் செய்யுங்கள் என்று) மேலும் எதையாவது செய்யக் கட்டளையிடும் ஒருவன் (உபதேசிக்கும் குரு) அவர்களைக் கொல்லவந்த ஓர் இயமனும் பிறப்பிக்க வந்த ஓர் பிரம்மாவும் ஆவான். (அவ்வாறின்றி) தம்மிடம் வந்தவர்களை ‘நீ கிருதகிருத்தியனான ஆன்மாவே’ என்று எடுத்துக்காட்டி, உணர்த்தி, (அதனால் ‘சும்மா விரு’ என்று) தீர்ப்பளிப்பவனே தெய்வீகத் தன்மை வாய்ந்த உத்தம அருட்குருவாவன் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

(குருவாசகக் கோவை 271)

முற்பிறவிகளிலும் இப்பிறவியில் சற்குருவினிடம் வந்து சேருமுன்னும் தாம் இயற்றிய எண்ணிறந்த கர்மங்களின் பலன்களாகிய சுகதுக்க மூட்டைச் சுமையைத் தாங்க முடியாமல், அச்சுமை நீங்கி ஓய்வு (அமைதி) பெற விரும்பித் தன்னிடம் வரும் சீடர்களுக்கு, மீண்டும் பூஜை, ஜபம், தியானமாதி பலவித கர்மங்களை உபதேசித்து அவற்றை இயற்றத் தூண்டும் குரு ஒருவன், மேலும் புதுவித கர்மங்களால் அச்சீடர்களின் கர்மபலச் சுமையை அதிகரிக்கச் செய்வதால் – சுமை நீக்கத்திற்குப் பதிலாகப் புதுச்சுமையை ஏற்றி அவர்களை நசுக்குவதால் – அச்சீடர்களுக்கு இயமனாக ஆகின்றான்!

பூர்வ கர்மங்களின் பலன்களையெல்லாம் அனுபவித்துத் தீர்ப்பதற்கு எண்ணிறந்த பிறவிகள் எடுக்க வேண்டியிருப்பதைக் கண்டு பயந்து ‘இனிப் பிறவி யான் வேண்டேன் ’ என்று வந்தடையும் சாதகர்களாகிய சீடர்களுக்குப் பூஜை ஜபத் தியானமாதி புதுவிதக் கர்மங்களைச் செய்ய விதிப்பதால் (அவை புண்ணியக் குவியல்களாகி) அவற்றின் பலன்களையும் சேர்த்து அனுபவிக்க அவர்கள் மீண்டும் பல ஜன்மங்களை எடுக்கும்படி ஜனிக்க வைப்பதால், அந்த குரு அச்சீடர்களுக்குப் பிரம்மாவாகின்றான்!

ஆனால், உண்மையான சற்குரு ஒருவரோ ஆன்மா ஒன்றே எக்காலும் இரண்டற்று ஏகமாய் விளங்குகின்றது என்ற உண்மையை உணர்ந்திருப்பதால் தன்னிடம் வரும் சீடன் எவனும் அவ்வான்மாவுக்கு அன்னியனல்ல என்பதை அவன் அறிந்து ஒப்புக் கொள்ளும்படி உபதேசிக்கின்றார். சற்குருவின் மோன வலிவால் இவ்வுண்மையை உணரும் சீடன் தான் இனி சும்மாவிருப்பதைத் தவிர, இயற்ற வேண்டியதாய் ஏதுமேயில்லை என்று விளங்கிக் கொள்கின்றான்! கர்த்ருத்வ வடிவில் எழும் தன் எழுச்சியே (அகந்தையின் உதயமே) கர்மா, அன்றி இருப்பு ஓர் கர்மாவல்ல. ஆகையாலும், கர்மாவே பிறப்பிறப்பைத் தருமாகையாலும் அச்சீடன் யமனிடமிருந்தும் மயனிடமிருந்தும் முழு விடுதலை பெற்றவனாகின்றான்!

பெரியோர் ஒருவரை சற்குருவாகக் கொண்ட பின், சாதகன் ஒருவன் முக்கியமாகக் கருத்திற் கொள்ளவேண்டிய விஷயமாவது: சீடன் ஒருவனது மன மொழி மெய்யின் ருசியும் போக்கும் தனது சற்குருவின் மன மொழி மெய்களின் வழியே வரும் உபதேச நோக்கத்திற்கும் போக்கிற்கும் முற்றும் பொருந்தியதாக இருக்கவேண்டும். அவ்வாறிருந்தால்தான் அது உண்மையான, பொருத்தமான குருசிஷ்ய உறவாக மிளிரும்.

‘என் குரு ஒரு ஞானி; சித்திகளை அறவே கண்டிப்பவர். ஆனால், எனக்கோ சித்திகளின்மேல் மிகுந்த ஆவல். அமானுஷ்ய சக்திகளைப் பெற்றாலன்றி என் மனம் அமைவுறாது. சித்தியோடுதான் எனக்கு ஞானம் வேண்டும். அவ்விதம் சித்தியோடு கூடிய ஞானத்தைப் பெறுவதற்கு நான் இன்னும் பல ஜன்மங்கள் எடுக்கவேண்டி வந்தாலும் சரி; அதற்கும் நான் தயார்; ஆனால், சித்திகள் இல்லாத வெறும் ஞானத்தை நான் விரும்பவில்லை..!’; ‘என் குரு, “உலகைப் பாராதே; உன்னைப் பார்; உள்ளே யடங்கு” என்று உபதேசிப்பவராயிருக்கின்றார். ஆனால் நானோ, என் நாட்டிற்கும் உலகுக்கும் சுயநலமற்ற சேவை செய்யும் கர்ம யோகத்தையே விரும்புபவன். ஓர் மூலையில், குகையில் அமைதியாக உட்கார்ந்திருப்பதைவிட உலக மக்களுக்குச் சேவை புரியும் வாழ்வே சிறந்தது என்று நான் கருதுகின்றேன்...’; ‘என் குரு இறைவனை எண்ணி மனம் உருகும் பக்தி மார்க்கத்தைப் போதிப்பவர்; ஆனால் எனக்கோ, ராஜயோகம் பயில்வதில்தான் விருப்பம்!’ ...‘என் குரு காட்டும் லக்ஷியம் (இதயத்தைச் சுட்டிக்காட்டி) இது; ஆனால் என் லக்ஷியமோ (உச்சந்தலையைச் சுட்டிக்காட்டி) இது’109 – என்றெல்லாம் தம் குருவின் உபதேசங்களைப் பற்றி விபரீத, விரோத, அபிப்பிராயங்களை உடைய மக்கள் அக்குருவிற்குரிய சீடர்களுமல்ல; அந்த குருவும் இவர்களுக்காக அவதரித்து வந்தவருமல்ல.

...என்புகலிட நின்னிட்டமென் னிட்டம்

இன்பதெற்(கு) என்னுயி ரிறையே.

(ஸ்ரீ அருணாசல பதிகம் 2)

என்றபடி, தனக்கென ஒரு தனி இஷ்டமோ, கொள்கையோ, கோரிக்கையோ, நோக்கமோ அற்று, சற்குருவின் உபதேச நெறிக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துவிடும் பரிபூரண சரணாகதியே ‘சற்குரு பக்தி’ எனக் கண்டுகொள்ள வேண்டும்.

ஓர் உதாரணத்துடன் காண்போம்: ஸ்ரீ ரமண பகவான் அண்ணாமலை மீது வசிக்க ஆரம்பித்த ஆதி நாட்களில் மௌனமாகவே இருந்து வந்ததால், ‘நான் யார்?’ என்னும் விசார மார்க்கமே அவரது முக்கிய உபதேச நெறி என்பதை அப்போது யாரும் அறிந்ததில்லை. அச்சமயம் 1902-ஆம் ஆண்டில் ஸ்ரீ சிவப்பிரகாசம் பிள்ளை என்னும் ஓர் உத்தம பக்தர், முதன் முதலாக ஸ்ரீ பகவானைத் தரிசிக்க வந்தார். அப்போது அவர் முதலில் ஸ்ரீ பகவானிடம் விண்ணப்பித்த வேண்டுகோளாவது: ‘ஐயனே, என் கல்லூரிக் கல்விக் காலத்தில் என் மனத்தில் “நான் யார்?” என்றறிய ஓர் ஆவல் உண்டாயிற்று. மனோதத்துவ நூல்களிலும், மற்றும் எவ்வழியிலும் எவ்வளவு முயன்று ஆராய்ந்தும் ஒன்றும் விளங்கவில்லை. தயைகூர்ந்து விளக்கியருள்க; நான் யார்?’ என்று வேண்டி நின்றார். தம்முன் வீற்றிருக்கும் இவ்வற்புத குருநாதர் ‘நான் யார்?’ என்ற விசார நெறியையே தனது முக்கியோபதேசமாகப் போதிக்க அவதரித்தவர் என்பதை அச்சீடர் அப்போது அறியார்! ஸ்ரீ பகவானது அவதார நோக்கமும் ஸ்ரீ சிவப்பிரகாசம் பிள்ளை நாடிநின்ற லக்ஷியமும் இங்கு ஒன்றாயமைந்தது ஓர் பெரும் வியப்பன்றோ! இவ்வாறு சற்குருவின் உபதேச நெறியும் சற்சீடன் அடைய விரும்பும் குறிக்கோளும் ஒன்றாயமைவதுதான் உத்தமமான குருசிஷ்யப் பொருத்தத்தின் லக்ஷணமாகும். உலகிற்குத் தற்போது கிடைத்துள்ள ‘நான் யார்?’ என்ற அரிய உபதேச நூல் இச்சீடர் ஸ்ரீ சிவப்பிரகாசம் பிள்ளையின் மூலமே ஸ்ரீ பகவானால் அருளப் பெற்றதென்பது யாவரும் அறிந்ததே!

இவ்வத்தியாயத்தில் இதற்குமுன் கூறப்பட்டவற்றிலிருந்து ஞானமும் பக்தியும் பிரம்மத்தின் சத்தியாம்சமான சித்தும் ஆனந்தமுமே என்ற உண்மை தெரிய வருகின்றதல்லவா? பிரம்மமே ஸத் ஆவதாலும், ஸத்தே ஸத்தியமாவதாலும், சத்தியாம்சமெனப்பட்ட ஞானமும் பக்தியும் ஸத்தேயாகின்றன. அதாவது, மெய்யான பக்தி என்பதும் மெய்யான ஞானம் என்பதும் பிரம்மமே தவிர வேறன்று; அதாவது, பக்தியும் ஞானமும் ஆன்மாவே என்றறிய வேண்டும். பக்தியும் ஞானமும் ஆன்மாவுக்கு நம்மை அழைத்துச்செல்லும் நேர் மார்க்கங்களாகும். ஆன்மாவில் நிற்றலே ஞானம்; ஆன்மாவை நேசித்தாலல்லாது அதில் நிலைபெறுதல் எங்ஙனம் கூடும்? ஆகவே, ஆன்மாவில் ஒருவனடையும் ஸ்திரநிலை அன்பின் பரிபூரண நிலையே. இவ்வுத்தம பக்தியுள்ள ஒருவன் ஆன்மாவாகவேதான் அமைவான். ஆகவே, பக்தியும் ஞானமும் ஆன்மாவாம் ஒன்றே; இரு வேறல்ல – இரு பக்கங்களுடையதாயினும் ஏடு ஒன்றேயாவதுபோல என்க.

அறிவுநெறி யன்புநெறி யான விரண்டு

முறவுநெறி யாக வுணர்க – பிறிவிலா

வவ்விரண்டு ளொன்றினின் றொன்றை யகற்றாம

லொவ்வவொருங் குள்ளத் தொழுகு.

(குருவாசகக் கோவை 731)

ஏடொன்றின் பக்க மிரண்டேபோல் ஞானபக்தி

வீடொன்று வாழ்வில் மிளிர்வனவால் – ஈடொன்றுக்

கொன்றே; யிரண்டு மிரண்டல்ல; வுள்ளவியல்

பொன்(று); இரண்டு பேரதற்குண் டோர்.

தன்னி லிருப்பதுவே தான்ஞானம்; அவ்விருக்கை

தன்னைநே சிக்காமற் சாத்தியமோ – தன்னிடத்து

நேசமே பக்தி, நிலைப்பேதான் ஞானம்வித்

யாசமே தாய்ந்தறியிவ் வாறு.

ஈர்க்கும்பூ மிக்கவர்ச்சி யின்றே னிலத்திலொன்று

தீர்க்கமா நிற்குந் திறத்ததோ? – பார்க்கில்

இழுப்பேதான் பக்தி; யிருப்பேதான் ஞானம்

இழுப்பிருப்பொன் றின்றொன் றிரா.

வினைகர்த்தா நானல்ல வென்பான் விசாரி;

வினைகர்த்தா வீசனென்பான் பக்தன் – வினைகட்கிவ்

வாறிருவ ருங்கர்த்தா வாகாமை யாலிரண்டும்

வேறிருபோக் கன்றென்றே மேவு.

(சாதனை சாரம் 114-117110 )

ஆன்மநிலை எய்த வைப்பதே வேதங்களின் முடிவான, உண்மையான நோக்கம்.

வேதாந் தத்தே வேறற விளங்கும்

வேதப் பொருளருள் அருணாசலா.

(ஸ்ரீ அருணாசல அக்ஷரமண மாலை 99)

ஸ்ரீ ரமண சற்குருவின் பரமோபதேச நோக்கமும் ஆன்மாவை அடையச் செய்வதேயாகையால், ‘நான் யார்?’ என்று தன்னை விசாரித்து அறிந்தடையும் ஆன்ம நிலையில் ‘தான்’ என்பது ஆன்மாவாகவே விளக்கி வைக்கும் ஞான மார்க்கம் ஸ்ரீ ரமண வழி ஆக முதலில் விளக்கப்பட்டது. தற்போது, அன்பின் பூரண பரிசுத்த நிலையில் அது ஆன்மாவாகவே பிரகாசிப்பதால், அதைப் படிப்படியாகப் பரிசுத்தப்படுத்தி உயர்த்தி ஸ்வாத்ம பக்தியாகிய ஸ்வஸ்வரூபாநு சந்தானம் உறுவதை ஸ்ரீ ரமண வழியின் அனுபந்தம் ஆக விளக்கப்பட்டது. உலக உயிர்களிடம் காணப்படும் அன்புணர்ச்சியானது மிருக மனிதனிலிருந்து ஆன்ம நிஷ்டன் வரை பற்பல படித்தரங்களில் இருந்து வருவதால், மக்கள் ஒவ்வொருவரையும் தத்தம் நிலைக்கு அடுத்த படித்தரத்திற்கு உயர்த்துவதற்காக, கணக்கற்ற வெவ்வேறு வகையான போதனைகளும் சாஸ்திரங்களால் அருளப்பட்டுள்ளன! அதனால் அவ்வந் நிலையில் அவ் வவர்க்கு அவ்வப் போதனைகளைப் போதிக்கும் ஆசிரியர்களும் உலகெங்கும் எல்லாக் காலங்களிலும் அவசியப்படுகின்றனர்! சாஸ்திர வல்லுனர்களும், மந்திர யந்திர தந்திர சாதனங்களைப் புகட்டும் குருமார்களும், புராண இதிகாசப் பிரவசனப் பண்டிதர்களும் – இவர்கள் நம் பக்திப் பள்ளியில் மூன்றாம் வகுப்பின் (a) பிரிவு வரை எட்டியுள்ள மாணவர்களாய், ஆத்ம ஞானம் அற்றவர்களானாலுங்கூட, தத்தம் வகுப்புகளில் தேர்ச்சியடைந்துள்ள பலவகை பக்தர்களாய் – உலகமெங்கும் எக்காலத்திலும் தேவையே! பக்திப் பள்ளியில் தம்மைவிடக் கீழ் வகுப்பிலுள்ள மாணவர்களுக்கு அவர்கள் அடுத்த மேல் வகுப்புகளுக்கு உயரும் வரையில் உதவி செய்ய இம்மாணவ வழிகாட்டிகள் தத்தம் அறிவிற்கும் அனுபவத்திற்கும் எட்டிய அளவு மற்ற மக்களுக்கு நீதி நெறிகளையும், தெய்வபக்தியையும், கர்மானுஷ்டானங்களையும், விஷய வைராக்ய அவசியம் போன்ற ஞான வியாக்யான அறிவுரைகளையும் (அவர்கள் தாம் போதிப்பவற்றைத் தாமே பின்பற்றி நடக்கிறார்களா, பயனடைகிறார்களா என்பதைப் பற்றிக்கூட நாம் பொருட்படுத்த வேண்டாம்!) மக்கள் சமூகத்தின் மேம்பாட்டிற்காகச் செய்துவருவது நல்லதே!

ஆயினும், அப்போதகர்கள் தாம் கூறுவது மட்டுமே முடிவான உண்மை என்று மக்களை நம்பும்படி வற்புறுத்துபவர்களாகவும், சாதகர்கள் மேலே முன்னேறுவதற்கான மற்றும் சில உயர்தர உபதேசங்கள் திருவருளால் அச்சாதகர்களுக்குக் கிட்டும்போது அவ்வுபதேசங்களையும் வெறுக்குமளவிற்குத் தம் கொள்கைவெறி மேலோங்கிக் கிடப்பவர்களாகவும் பலகாலும் காணப்படுவதால், அவர்களால் நம் அறிவு குழப்பமடைந்து விடாதபடி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பக்திப் பள்ளியில் நாம் உண்மையில் எவ்வகுப்பிலிருக்கிறோம் என்பதை மேற்கூறப்பட்ட விளக்கத்தைக் கொண்டு நாமே விவேகித்தறிந்துகொண்டு மேற்செல்ல வேண்டும். அதேசமயம் கடவுளைப் பற்றியும், பிறவிப் பயனைப் பற்றியும், கர்மக் கோட்பாடுகளைப் பற்றியும் விசித்திரமான கருத்துக்களுடன் போதித்துவரும் கீழ்வகுப்பு ஆசிரியர்களிடமோ, அவற்றைப் பயிலும் மாணவர்களாகிய சமூக மக்களிடமோ வெறுப்பொன்றுமின்றி அனுதாபத்தோடு கூடிய அன்பால் அவர்களது கர்மப்பற்றை நாம் குலைக்காமலும் தடுக்காமலும் இருந்துவர வேண்டும். நபுத்தி பேதம் ஜனயேத் அஜ்ஞானாம் கர்மஸங்கினாம்...

கர்மப் பற்றுள்ள அஞ்ஞானியின் புத்தியைக் கலைத்து விடலாகாது.

(ஸ்ரீமத் பகவத் கீதை 3-26)

அவர்களே முடிவில் தத்தம் சாதனைகளில் (கர்மங்களில்) முற்றும் அலுத்துத் தாமாகவே வந்து ‘மேற்செல்லும் கதி யாது?’ என்று வினவினாலொழிய, நாம் குறுக்கிட்டு அவர்களது போக்கைக் கெடுக்காமல் அவர்களது வழியிலேயே அவர்களை ஊக்குவித்து வரவேண்டும். இதுவே ஸ்ரீ ரமண பகவான் தம்மிடம் வந்த பற்பல சாதகர்களின் பல்வேறு சாதனை முறைகளுக்கும் தமது ஒப்புதலை111 அளித்துள்ளதாகத் தோன்றுவதற்குக் காரணம் என்று நாம் கண்டுகொள்ள வேண்டும்!

82 நாம் இவ்விரு பிழைகளையும் எவ்வாறு செய்கிறோம் என்பதற்கு உதாரணம் பிற்பால் 8-ல் வரும் உள்ளது நாற்பதின் 8-ஆவது பாடலில் ‘பேர் உருவில்’ என்ற சொற்றொடர் விளக்கத்திலிருந்து கண்டு கொள்ளலாம்.

83 தாருக வனத்தில் முன்னொரு காலத்தில், இதைப் போன்றே கர்மங்களை இயற்றும் தவத்தைச் செய்துகொண்டு பெயரளவில் ‘ரிஷிகள்’ என்று பெயர் கொண்டிருந்த சில காமிய கர்மகாண்டிகள் மேலே நாம் கூறிவந்த பக்திப் பள்ளியின் முதல் வகுப்பிலில் இருந்தவர்களேயாகும்! காமிய கர்மங்களைப் புரிந்து அவற்றின் சக்தியால் அவர்கள் இறுமாப்புற்றிருந்தனர். அவர்கள் கர்மங்களைத் தவிர வேறு கடவுளேயில்லை என்று நம்பியிருந்தனர். அதனால் சிவபிரான் அவர்களது தவறான நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து, பக்திப் பள்ளியின் மற்ற உயர்ந்த வகுப்புகளுக்கு அவர்களை உயர்த்தி உய்விக்கவும் கருணை கூர்ந்து எழுந்தருள்கின்றார். அவர்களுக்கு சிவபிரான் செய்த உபதேசங்களின் சாரத்தையே ஸ்ரீ ரமண பகவான் ‘உபதேச வுந்தியா’ரிற் கூறியிருக்கின்றனர். அதில் தாருகவனத் தவசிகளின் நம்பிக்கை தவறானது என்று முதற் பாடலாற் கண்டித்தும் கர்மங்கள் தாமாகவே பலன் தரக் கூடியவையல்ல; அவை கடவுளின் ஆக்ஞையால்தான் பலன் தருவன என்றும் உபதேசிக்கின்றார்.

84 சாதகனின் நாட்டம் 180 டிகிரி திரும்புவது என்றால் என்ன என்பதின் விரிவான விளக்கத்தை பிற்பால் 1-ல் காண்க.

85 இந்நூலின் முக்கிய பாகத்தின் இரண்டாம் அத்தியாயம் இங்கு படித்துணரத் தக்கது.

86 ஜட கர்மங்கள்: கர்த்தனாகிய கடவுளின் ஆக்ஞையாலன்றித் தாமே பலன்தர இயலாதனவாகலின் ‘ஜட கர்மம்’ எனப்பட்டது. அடுத்த பக்கத்தில் வரும் கீழ்க்குறிப்பை நோக்குக.

87

கன்மம் பயன்றரல் கர்த்தன தாணையாற்

கன்மங் கடவுளோ வுந்தீபற

கன்மஞ் சடமதா லுந்தீபற.

(உபதேச வுந்தியார் 1)

தாருக வனத்தில் தவம் செய்துகொண்டிருந்த தவசிகள் தம் முயற்சியால் இயற்றும் கர்மங்களாலேயே எண்ணியவை யாவும் எய்திவிடலாம் என்ற தவறான கருத்தைக் கொண்டிருந்தனர். முடிவில் அவர்களது கர்வமடக்கி முக்தி வழியை உபதேசித்த சிவபிரானது உபதேச சாரமே ஸ்ரீ ரமண பகவானருளிய இவ்வுபதேச வுந்தியார் என்னும் நூலாகும்.

88 இராவணனும் அவனையொத்த அசுரர்களும் இம்முறைகளால் மிக்க வலிமை பெற்றுப் பூலோக, சுவர்க்க லோகங்களையும் வென்று ஆளக் கூடியவர்களாய் விளங்கினர்!

89 இதன் விபரம் பிற்பால் 7-ல் காண்க.

90 நாமரூபமற்ற கடவுளை எந்த நாமரூபத்திலும் கண்ணாற் காணமுடியும் என்பதைச் சுட்டிக் காட்டவே இங்கு இம்மகான்களின் பெயர்கள் குறிப்பிடப் படுகின்றனவே தவிர, இங்கு குறித்தது கொண்டு இப்பெரியோர்கள் நம் பக்திப் பள்ளியில் 3-ஆம் வகுப்பின் (a) பிரிவில் உள்ளவர்கள் என்று வாசகர்கள் தவறாக எண்ணிவிடக் கூடாது என்பது முக்கியமான எச்சரிக்கையாகும்!

91 சற் சங்கம்: நல்லவர்கள் என்று நாம் நம்பிக் கொள்ளும் சில மனிதர்கள் ஒன்று கூடுவது ஒரு ‘சத் சங்கம்’ ஆகி விடாது. ‘சத்’தினுடன் (ஆன்மாவுடன்) சங்கம் செய்வதே ‘சத்’ சங்கம் என்றும், ‘சத்’ என்றால், சத் பொருளைச் சாட்சாத்கரித்த பெரியோர்களையும் குறிக்கும் என்றும் ஸ்ரீ பகவான் குறிப்பிட்டுள்ளார். ‘சாதனை சாரம்’ பாடல்கள் 164-லிருந்து 173 வரை வாசித்துணர்க.

92 ஸ்ரீ பகவான் ஒருமுறை கூறிய வெல்லப் பிள்ளையார் கதையாவது: ஒரு காலத்தில், பிள்ளையார் பக்தனொருவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். பிள்ளையார் பூஜை பண்ணாவிட்டால் அவன் அன்று போஜனமே பண்ண மாட்டான்! அவனது பிரயாண வழியில் ஒரு நாள் பிள்ளையார் கோயில் எதுவுமே தென்படவில்லை. அதனால், அன்று தன் கைவசமிருந்த கொஞ்ச அளவு வெல்லத்தை உருட்டி விநாயக வடிவம் செய்து, ஓரிடத்தில் வைத்து வழிபட ஆரம்பித்தான். வழிபாட்டின் முடிவில் கணபதிக்கு நிவேதிக்கக் கையிலொன்றுமே இல்லையே என்று கண்ட அவன், அவ்வெல்லப் பிள்ளையாரின் விரல் ஒன்றையே பிட்டு எடுத்துப் பிள்ளையாருக்கு நிவேதனம் செய்து, பூஜையைப் பூர்த்தி செய்து மகிழ்ந்தான்! இப்பூஜையின் பொருளென்ன? பிள்ளையாருக்குப் பிள்ளையாரே சமர்ப்பிக்கப்பட்டார்! அவ்வளவுதான்! இது போலவே நாம் கடவுளுக்குச் சமர்ப்பிக்கும் பூஜா திரவியங்களில் எதுவொன்றும் (உடல் பொருள் ஆவியை அளித்தாலுங் கூட) நம்முடையதல்ல! ஆண்டவனுடையதே. உண்மையில் அவை அவருக்கு அன்னியமானதோர் உடைமைகூட அல்ல; அவை அவரே!

பிள்ளையார் தன்னையே பிட்டந்த வெல்லத்தீம்

பிள்ளையார்க் கர்ப்பிக்கும் பெட்பேயாம் – தெள்ளிதாம்

ஆவிவடி வாக வமரிறைக்கு நாமுவந்தவ்

வாவியையே நல்கு மது.

(குருவாசகக் கோவை 486)

93 பக்கம் 213-ல் காட்டப்பட்ட குருவாசகக் கோவை, பாடல் 592-ஐ இங்கும் ஒத்து நோக்குக.

94 இப்பாடலை ‘சாதனை சாரம்’ நூலின் 6-வது அத்தியாயத்திற் காண்க.

95 இந்நூலாசிரியர் தமது குருபரனான ஸ்ரீ ரமண பகவானது தேக மறைவால் ஏற்பட்ட பிறிவாற்றாமையால் ‘பகவான் மீண்டும் தரிசனம் தர வேண்டும்’ என்று பாடிய 360 பாடல்களைக் கொண்ட நூலே ‘ஸ்ரீ ரமண வருகை’ எனப்படுவது. இது உரையுடன் வெளியிடப்பட்டுள்ளது.

96 (1) ஒருமுறை சமூகச் சீர்திருத்தவாதி ஒருவர் ஆசிரமத்தில் சாப்பிடுமிடத்தில் சமத்துவம் கடைப்பிடிக்கப்படவில்லையே என்று ஸ்ரீ பகவானிடம் புகார் செய்தார். ‘மன அமைதிக்காக வந்தீர்; வந்தவிடத்தில் வந்த வேலையைப் பாரும்; இந்த வேலை நமக்கெதற்கு?’ என்று குறிப்பிட்டார் ஸ்ரீ பகவான். ‘உலகம் முழுவதும் சமத்துவம் அடைய வேண்டும் என்று பாடுபட விரும்புவோன் நான்’ என்றார் வந்தவர்! ‘அப்படியானால் சரி; உலகம் முழுவதையும் சீர்திருத்தும்; இந்த இடமும் அவ்வுலகுக்குள் ஒன்றேயாவதால் அப்போது இதுவும் தாமாகவே சீர் திருந்திவிடாதா?’ என்றார் ஸ்ரீ பகவான். வந்தவர் பிடிவாதமாக, ‘முதலில் இங்கேதான் என் சீர்திருத்தப் பணியைத் தொடங்க நினைக்கிறேன்’ என்றார்.’ ‘ஐயோ, பாவம்! ஏன் மனத்தை அனாவசியமாக இப்படிப் புண்படுத்திக் கொள்கிறீர்? போய்த் தூங்கும்; அங்கு எல்லாம் சமத்துவமாகவே இருக்கும்!’ என்று ஸ்ரீ பகவான் கருணை ததும்புவதும், ஆழ்ந்த கருத்து அமைந்ததுமான வசனங்களை அருளினார். (2) மற்றொரு முறை ஸ்ரீ பகவான், ‘இங்கு வருபவர்கள் எனக்கு நிறைய போதிக்கிறார்கள்; எல்லோரிடமும் எவ்வளவோ கற்றுக் கொள்கிறேன்! சிலர் முதலில் வரும்போது ஆடிப் பாடி ஆவேச பக்தி காட்டி, “பகவானே, நான் உங்கள் அடிமை” என்று கூறி கைங்கரியம் செய்ய ஆரம்பிப்பார்கள். வெகு விரைவில் பகவானிடம் பக்தி அதிகரித்து, “பகவானுக்கு இந்த ஆகாரம் உடம்புக்கு நல்லது; அது நல்லது” என்று பார்த்துப் பரிந்து உபசரிக்க ஆரம்பிப்பார்கள். இரண்டொரு மாதத்திற்குப் பிறகு இவர்களைப் போலவே புதிதாக வரும் மற்ற சிலர் அன்போடு வேறு எதையாவது கொண்டு வரும்போது அவர்களுடைய திருப்திக்காகவாவது அதில் நான் சிறிது உட்கொண்டால், முன் வந்தவர்கள், “அடடா! இது கூடாது; இது பகவானுக்குக் கெடுதல்; உண்ணாதீர்கள்; வேண்டாம்” என்று தடையுத்தரவு பிறப்பிப்பார்கள்! பின்னும் சில மாதங்கள் சென்றதும், “பகவான் இதைச் சாப்பிடக் கூடாது; இதைச் செய்யக் கூடாது” என்பார்கள்! பிறகு, “ஏன் செய்தீர்கள்?” என்று வினா எழுப்புவார்கள். வந்தபோது “நான் அடிமை” என்று கூறிக்கொண்டவர்கள், இப்போது, வழக்கம் போல எனக்கு உத்தரவு இடுபவர்களாகி விடுவர்; நான் சொன்னதைக் கேட்பவனாகி விடுவேன்! சுவாமி என்றால் வாய் திறக்கவோ, பதில் பேசவோ கூடாது !! சுவாமித்வம் எவ்வளவு சுகம் என்பது, இருந்து பார்த்தாலல்லவோ தெரியும்!!!’ என்று கூறியருளினர். (3) பகவான் ஸ்ரீ ரமணர் மலையிலும் குகையிலும் அழுக்கடைந்த திருமேனியுடன் உடலை மறந்து வாழ்ந்திருந்த ஆதிக்கால நிலைமையை அறியாமல், பிற்காலத்தில் ரமணாசிரமத்தில் ஓர் அழகிய சோபாவின் மேல் அன்பர்களால் அத்திருமேனி அமர்த்தப்பட்டிருந்ததைக் கண்டவர்கள் சிலர், ‘இவரென்ன! திண்டு தலையணையுடன் சௌகரியமாக உட்கார்ந்திருக்கின்றாரே! இவரா ரிஷி! இதுவா ஞானம்?’ என்று குறிப்பட்டது, நாமதேவரின் கூற்றைப் போன்ற அறியாமைக் கூற்றே என்பது அறிதற்குரியது.

97

அடங்க வடங்க வபரிமித மாகத்

தொடங்குபே ரின்பத்திற் றோய்ந்(து)அத் – தடங்கடலின்

ஆழ்ந்தாழ்ந்து மூழ்கி அடிக்குங்கீ ழேயடியேன்

வாழ்ந்தோங்கு மாறருட்கண் வை.

(ஸ்ரீ ரமண ஸஹஸ்ரம் 8)

98 பக்கம் 165-ல் வரும் ‘நோக்கை ஞான நுதற்கண் ணாக்கிப் பார்க்கும் உலகைப் பரமாக் காண்க’ என்ற கருத்து, இங்கு மீண்டும் வாசித்துணரத் தக்கது. பக்கம் 190-ல் வரும் குருவாசகக் கோவை பாடல் 263-ம் இங்கு ஒத்துநோக்கத் தக்கது.

99 குருவாசகக் கோவை பாடல் 1085-ன் கருத்தையும் இங்குக் கண்டுணர்க.

100 ‘ஹோமா’ என்ற பறவையைப் பற்றிய விபரத்தை பிற்பால் 6-ல் காண்க.

101 ‘சுயநலம்’ என்பது பற்றிய முழு விபரமும் இந்நூலின் 14-ஆவது பக்கத்திலிருந்து 17-ஆவது பக்கம் வரை கொடுக்கப்பட்டுள்ளதை இங்கு மீண்டும் வாசித்துணரவும்.

102 பிற்பால் 8-ல் இப்பாடலின் விளக்கத்தைக் காண்க.

103 பக்கம் 199-201-ஐப் பார்க்கவும்.

104 ஸ்ரீ ரமணாசிரமத்தால் வெளியிடப்பட்ட ‘The Vedaparayana in Sri Ramanasramam’ என்ற நூலில் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பைக் காணலாம்.

105 சாதனை சாரம்-பாடல் 88-லிருந்து 101 வரை இங்கு வாசித்துணரத் தக்கது.

106 அகந்தைச் சமர்ப்பணம்: இதுகாறும் நம்மிடை ‘ஆன்ம சமர்ப்பணம்’ என்ற சொற்றொடராற் குறிக்கப்பட்டு வருவது, உண்மையில் ‘அகந்தைச் சமர்ப்பணமே’! பண்டை நூல்கள் சிலவற்றில் ஜீவனாகிய அகந்தையை ‘ஜீவாத்மா’ என்று ‘ஆத்ம’ சப்தம் கொடுத்து அழைக்கப்பட்டிருப்பதைக் கொண்டு, ஜீவசமர்ப்பணம் ‘ஆன்ம சமர்ப்பணம்’ என்றே வழங்கப்பட்டு வருகிறது.

107 ஒரே வழியாவது எப்படி என்பது பற்றி மேலும் விளக்கத்திற்கு இந்நூலின் முகவுரையிலுள்ள ‘ஆன்ம சமர்ப்பணம்’ என்ற கடைசிப் பகுதியை (பக்கங்கள் 6-8) வாசிக்கவும்.

108 ஸ்ரீ சிவப்பிரகாசம் பிள்ளையருளிய ‘ரமண பாதமாலை’யின் 31-ஆவது பாடலும், ‘கைவல்ய நவநீத’த்தின் சந்தேகந்தெளிதற் படலத்தின் 72-லிருந்து 76 வரையுள்ள பாடல்களும் இங்கு ஒத்துநோக்கத் தக்கன.

109 ‘உபதேச வுந்தியார்–விளக்கவுரை’ பக்கங்கள் 40, 41 இங்கு நோக்கத் தக்கது.

110 மேற்கோள்களாகக் காட்டப்படும் சாதனை சாரச் செய்யுட்களுக்குத் தக்க உரையை ‘சாதனை சாரம்’ என்ற நூலில் காண்க.

111 ஸ்ரீ பகவான் ஒப்புதல்கள் அளிப்பதின் உண்மையை விளக்கும் ஒரு நிகழ்ச்சியை இந்நூலின் பக்கம் 52-ல் காண்க.

 

Contents